சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (17)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 |

அத்தியாயம் 17

ஆபிதீன்

*

‘Direct Access’ என்கிற மெயில் ஆர்டர் கம்பெனியின் புதிய கேட்லாக்-ல் Incredible Image Pack என்று ஒரு ஸாஃப்ட்வேர் பற்றிய தகவல். 25000 Click art images+ 1000 True Fonts. 230 திர்ஹம்தான். Incredible! வாங்கினால் நன்றாகத்தான் இருக்கும். ஆசைப்பட்டதை நாமாகக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா என்ன? புதிதாக பிரிண்டிங் கம்பெனி திறந்திருக்கிற பொதக்குடி இர்ஃபானிடம் சொன்னேன். அவர் உடனே ஆர்டர் கொடுத்துவிட்டார். Incredible! அப்படியே ‘அண்ணே.. நம்ம கஸ்டமர் ஒருத்தன் சேலத்துக்காரன். சூப்பர் கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கான், லேட்டஸ்டா எல்லாத்தையும் போட்டு. ஆனால் யூஸ் பண்ணத்தான் தெரியாது. கேணையன். இவனுக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்க – தமிழ்லெ சொல்லிக்கொடுக்க – ஆளு வேணுமாம். சரியான காசு பார்ட்டி வேற. உன்னைப் பத்தி சொல்லியிருக்கேன். போட்டு மாட்டு!’ என்று வேறு. Part Time Job+ கேணையன் = Incredibel Image Pack!

*

இளையதங்கை ஹலீமாவுக்கு பிரசவநேரம். டாக்டர் , 16ஆம் தேதிக்குள் என்று சொல்லியிருந்தாள். இங்கேயுள்ள ஃபாத்திமாவிடம் கேட்கலாம் – ‘பாசமலர்’ புதிய பிரிண்ட் போட . (‘அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் கூட போனமாதம் அவளிடமிருந்து பிரிண்ட் எடுக்கத்தான் வாங்கியது. 1800 பக்கமிருக்கும். ‘புழுதி அடங்கிய பின்தான் ஏறி இருந்தது குதிரையா கழுதையா என்று தெரியும்’ என அரபிப்பாடலின் கருத்து அதில் எனக்கு பிடித்திருந்தது!) 19 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ·போன் செய்தேன். ‘ஹலீமா பிரசவம் என்னாச்சி புள்ளே?’ ‘தெரியலையே நானா.. 22ஆம்தேதிக்கு மேலேண்டு சொல்லிட்டாளாம் டாக்டர். நேத்து ஃபோன் போட்டேன்’ என்றாள். அடுத்த 3 மணி நேரத்தில் ஹலீமா ஒரு ஆண்பிள்ளைக்குத் தாயானாள்!

என் மருமகனே.. உன் மாமாவுக்குள் என்னமோ ஒன்று இருக்கிறது. அல்லது யாரோ இருக்கிறார்கள். கண்டுபிடி. நீ வளர்ந்து யாராவாய்? 8ஆ 20ஆ? எதுவோ 1+1=2 என்றுமட்டும் உணர்ந்து கொள். போதும்.

*

ஊரில் அடித்த திடீர்ப் புயல் சுத்தமாக நின்றுவிட்டது. பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் உலகத்தின் மற்ற பகுதிகளுக்கு அதை அனுப்பி , அதை வேறொரு பேரழிவாக மாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் , வழக்கம்போல. மீடியாக்களால் வாழ்கிற கோடிக்கணக்கான ஜனங்களின் ஆசைகளுக்காவது அவ்வப்போது பூகம்பமும் வெள்ளப்பெருக்கும் மதக்கலவரமும் ஏற்படத்தான் வேண்டும்! புயல் யாரின் ஆசையோ , நிஜ சூறாவளி என்பது துபாயில் விசா பிரச்சனைகள்தான். ஊரின் அத்தனை மக்களையும் சூறாவளி சுழற்றி வீசி எறிந்தாலும் பரவாயில்லை. இங்கே வரக்கூடாது. ஆனால் வருகிறதே.. வந்தால் வரத்தான் செய்யும். ஃபரீதுக்கு வந்துவிட்டது. எடுத்த டிரான்ஸிட் விசா முடியப்போகிறது. விசிட்விசா துபாயில் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. டிரான்ஸிட்-ஐ ஷார்ஜாவில் எடுத்ததால் அங்கேயும் எடுக்க முடியாத சூழ்நிலை. எங்கே எடுக்க முடியவில்லையென்றாலும் துபாயில் எடுக்கலாம்தான். ஆனால் காசுதான் கூடவாகும். துபாயில் அரசாங்கம் இல்லையா என்ன? மாட்சிமை தாங்கிய மன்னர் ஷேக் மக்தூம் ஹம்தான், லண்டனிலுள்ள புல்வெளியில் தன் குதிரைக்குட்டிகளுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டு அரைக்கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். மன்னருக்கு அடையாள அட்டை எல்லாம் இருக்குமா? தலைவெட்டப்பட்டு ஒட்டப்பட்ட ‘அட்டை’யா, எப்படி? பண்ணுகிறவர்கள் என்னமோ இதை ‘கொலாஜ்’ என்றுதான் படைக்கிறார்கள்! என்ன நடக்க வேண்டும் மானிடரே? ஃப்ளூஸ்! ஆனாலும் சரியான ஆள் கிடைக்க வேண்டுமே.. இந்த மாதிரி வில்லங்கங்களுக்கு குலாம்காக்காதான் லாயக்கு. ஆனால் அவர் ஊருக்குப்போய் விட்டார். அவருக்கு ஃபோன் செய்து கேட்டால் இங்குள்ள தலைவெட்டி தம்பிரான்களின் முகவரிகள் கிடைக்கும். ஃபரீது மிகவும் டென்சனில் முந்தாநாள் ஃபோன் செய்து , ‘என்னா செய்வது?’ என்று குரலைப் பிசைந்தபோது நான் குலாம்காக்காவைத்தான் சொன்னேன். ஆனால் அவருடைய வீட்டு ஃபோன் நம்பர் எனக்குத் தெரியாதே என்றார் ஃபரீது. ‘நான் யார்ட்டெயாச்சும் கேட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லிய அந்தநொடியில் , குடவுன் போயிருந்த கப்பமரைக்கார் ஆஃபீஸுக்குள் நுழைந்தார். அவரிடம் குலாம்காக்காவின் ஃபோன் நம்பர் இருந்தது. வழக்கத்தைவிட ஒருமணிநேரம் முன்னதாக கப்பமரைக்கார் வந்ததன் காரணம் ஜோல்பேட்டா, நாக்கூரா?!

*

ஒரு நல்ல தையல் மெஷின் அஸ்மாவுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆசை. ஊரில் ஒரு ‘லொடலொட’ மெஷின் இருக்கிறதுதான். பழையது. அது ஓடும்போது வீடே தைக்கப்படுவது போன்ற பிரமை. அல்லது அஸ்மா தன் திறமையைக் காட்டுகிறாளா? முற்றிலும் மின்சாரத்தில் இயங்குகிற – பலவகை டிசைன்களும் போட முடிகிற – ஒன்று வேண்டும் அவளுக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன் , தான் செகண்ட்ஹேண்ட்டில் வாங்கிய ஒரு மெஷினை பழுதுபார்க்க கப்பமரைக்கார் காட்டியபோது பார்த்த எனக்கு ஆசை கூடியது. ஆனால் அதற்கு காசுக்கு எங்கே போக? முந்தாநாள் அபுதாபி மிலிட்டரியிலிருந்து பெரியமுதலாளியின் ஸ்க்ரேப் கம்பெனிக்கு ஒரு பெரிய ‘லாட்’ வந்திருக்கிறது, அதில் கம்ப்யூட்டர்களும் அடக்கம் என்று செய்தி. மொயீன்சாஹிப் தன் மகனுக்கு ஒரு கம்ப்யூட்டரை எடுக்கலாம் என்று செக் பண்ண என்னையும் அல்கூஸூக்கு கூட்டிக்கொண்டு போனார். நியாயமாக சார்லஸ்பாபேஜைக் கூட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும். அவன் கண்டுபிடித்ததுதான் அது! 200 திர்ஹத்திற்கெல்லாம் கார்கள் வாங்கக்கூடிய இந்தத் தொழில் வினோதமானதுதான். திருடர்களை கூட்டாளி பிடித்துக்கொண்டால் பணம் பார்க்கலாம். அதனால் பார்க்கிறார்கள். எவ்வளவு விதவிதமான சாமான்கள்..பழைய ஃபோட்டோகாப்பி மெஷினெல்லாம் புத்தம்புதிதாக இருந்தது. பத்து வாங்கவேண்டிய இடத்தில் நூறுவாங்கி கும்மாளம் போட்டிருக்கிறார்கள். அரசாங்கம் எல்லா இடத்திலும் ஒன்றுதான். என் அறை பெருசுக்கு இருக்கிற மெஷின்களை கொண்டுவந்து என்ன செய்ய? சுற்றிப்பார்க்கும்போது அந்த தையல் மெஷின்! புத்தம் புதிதாக. பஜாரில் வாங்கினால் 700 திர்ஹத்திற்கு குறையாது. ‘ஆபிதீனுக்கு இது வேண்டுமாம்’ என்றார் மொயீன்சாஹிப். குறைந்தது நூறு ரூபாயாவது கேட்பார் அர்பாப் என்று யோசனை பண்ணிக்கொண்டிருந்தபோது நான் அவரைப்பார்த்த பார்வையில் ஒண்ணுமே சொல்லாமல் ‘டீக்ஹை’ என்று சந்தோஷமாகச் சொன்னார் முஹம்மது முக்தார். பணத்தால் கிடைக்க வேண்டிய பொருள் தானாக கிடைக்கிறபோது பணம் எதற்கு? பரக்கத், பரம்பைசா இல்லாமலும் வரும்!

*

24.06.1996

‘SS’ எனக்கு தனியாக கொடுத்தபடியால் , மற்ற சீடர்களுடன் கலந்துபேசும்போது மிகுந்த குழப்பம். புதிதாக கொடுக்கும் ரியாலத்துகளோ மற்றவர்கள் செய்துவருவதின் தொடர்ச்சிதான். ரவூஃப், EB, IB என்று என் ‘BP’யை கூட்டியதற்கு சர்க்காரும் சரி சொல்லிவிட்டார்கள். எனவே ஜெப்பார் நானாவிடம் கலந்துபேசி , சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொண்டு, அனைவரும் செய்வதையே செய்வது என்று அவருடன் கலந்தேன். அவர் குறிப்புகளைப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.. ஸ்டெப் பை ஸ்டெப்-ஆகக் குறித்து, ‘படம் வரைந்து பாகங்களைக் குறி’யில் அவர் தெளிவாக எழுதிவரும் நோட்ஸ் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த டைரியின் மண்வாசனைதான் அதில் இல்லை. சுத்தமான வானம். ஆனால் வசப்படுமா?

*

Bodyஐ ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். 11 தடவை ஆழ்ந்த மூச்சு. (1 to 4 – 1 , 2 – 1 to 4). கண்மூடி அன்றைய வண்ண ஜட்டி அணிந்து scene பார்க்கிறோம். புல்வெளி, ஆறு, பசுமையான மலை…பிறகு உட்கார்ந்து ஓத ஆரம்பிக்கிறோம். ‘யா தர்தாயில் ,யா கல்காயில் , யா அஹ்ஜமாயில், யா தன்காயில், யா மீக்காயில், பி குத்ரத்திக, வபி ஜலாலத்திக, யா வாஜிபல் உலூது, யா ஹாலிக்கல் காயினால் அ இஜ்ஜனி வரஹம்னி யாஹக் யாமுபீன்’ – 14 தடவை. பிறகு படுத்துகொள்கிறோம். `Astral Body, 2 அடி மல்லாந்தவாறு மேலே வருகிறது. பிறகு புரண்டு குப்புறப்படுத்து 6 அடி உயரம் வருகிறது. அரை வட்டவளையமாகத் திரும்பி வலப்புறமாக இறங்கி 6 அடி தூரத்தில் நிற்கிறது. இப்பொது Physical Bodyஐ 3 முறை சுற்றி வருகிறது. (Clockwise->Anti Clockwise). இப்படி 3 முறை. பிறகு தன் எதிரே 12 அடிக்கு அப்பால் மேலேயுள்ள மாவு போன்ற உருண்டையை நின்ற இடத்திலிருந்து கைநீட்டி எடுத்து அதைத் தட்டிப் பிசைந்து , 3க்கு 3 1/2 அளவில் சிறிய போர்டு மாதிரி ஆக்கி , ‘அல்லா’ என்று அரபியில் எழுதி, அதில் வைரம், ரூபி ஆகியவற்றைப் பதித்து , தங்கநூலால் கோர்க்கிறது (ஊசி எழுத்தில் படாமல்). எழுத்து முழுக்க தங்கமாகிறது. இதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு தன் கண்ணிலிருந்து வரும் வெண்ணொளியும் Physical Bodyயின் இதயத்திலிருந்து வரும் நீலஒளியும் கலந்த கோட்டால் ‘சீக்ரெட் சிம்பலை’ வரைய ஆரம்பிக்கிறது. இதை 3 முறை வரையும்வரை அதே ‘கல்காயில்’ இஸ்முதான். ஆனால் இத்தனைமுறைகள் என்று எண்ணிக்கையில்லை. இப்போது வானில் ஒளி வருகிறது. தான் நின்ற இடத்திலிருந்து 5 அடி கீழே நகர்ந்து பிறகு மேலே 11 அடி போகிறது. Physical Bodyயைச் சுற்றிலும் 3 அடி இடைவெளி இருப்பதுபோல் ‘கில்லா’ உருவாகிறது. இதன் நிறம் இளநீலம். மேலே இருக்கும் AstralBody, இந்த கில்லாவை அங்கு நின்றவாறே 7 தடவை சுற்றுகிறது. பிறகு கீழிறங்கி கலக்கிறது. கலந்த உடன் எழுந்து உட்கார்ந்து , மறுபடியும் ‘கல்காயில்; 14 தடவை ஓதுகிறது. பிறகு படுத்து counting numbers.. (1 to 25, 25 to 1 = மூன்றுமுறை. பிறகு 25 to 10, 25 to 9 ,8,7,6,5 வரை). ‘Everyday and in Everyway I am growing better and better’ என்று சொல்லிக்கொள்ளாவேண்டும் மனதிற்குள். (ரியாலத்தின் ஆரம்பத்தில் ‘I am greater than anything else’ என்று நினைக்க வேண்டும்) கடைசியாக மூச்சுப் பயிற்சி 11 முறை (1 to 4- 1,2 – 1 to 4). ரியாலத் முடிகிறது.

*

‘ஏன் நானா, திரும்பி வந்து கலக்கும்போது EB, IB என்று சேர்ந்துதானே அப்புறம் கலக்குது?’

‘அடுத்த ஸ்டெப் அது. முதல்லெ இதைச் செய்யுங்க’

‘அந மர்கஜ் உல் வஹி’லாம் இப்ப கிடையாது?’

‘ம்ஹூம்..அது எப்பவோ முடிஞ்சிபோச்சு. உங்களுக்கு சர்க்கார் வித்யாஸமா கொடுத்திருக்காஹா. இப்ப இதைச் செய்யுங்க!’

haz1996diary - img10 - sep12-16-b-diary-c

28.06.1996 வெள்ளி செஷன் முடிந்து..

‘Visit Visa சம்பந்தமாக ·போன் பண்ணுனீங்கலாம்லெ? பண்ணலாம்தான். ஆனா இப்ப சரியான ‘மந்துக்’ (PRO) நம்ம கையிலெ இல்லெ.. நஸ்ருதீன் இந்தாரு முதல்லெ. அவர் நான் பண்ணுன உதவியையெல்லாம் மறந்துட்டு மூக்கை வெடைச்சிக்கிட்டு பொய்ட்டாரு. அதனாலெ பிரச்சனை. வேணும்டா டிரான்ஸிட் ஏற்பாடு பன்றேனே..’

‘பரவாயில்லே காக்கா. நான் வேற ஆள்ட்டெ சொல்லிட்டேன், கிடைச்சிடும். அத சொல்லத்தான் வந்தேன்’

‘நல்லதாப் போச்சி.. ஆமா, ஆபிதீனைப் பாத்தீங்களா? துபாயில்தானே இக்கிறாரு?’

‘ஏன் காக்கா”

‘இல்லே.. எங்க மாமாட்டே விசாரிச்சேன். நீங்க அவருக்கு பெரிய கூட்டாளிண்டு சொன்னாஹா..உங்கள்ட்டெ கேட்டா தெரியும்லெ? அதனாலதான் கேட்டேன். அவரு இப்படி மாறுவாருண்டு நெனைக்கவே இல்லை. என் விசாதான். ஆனா உடம்பு சரியில்லாம நான் இந்திக்கிறேன், இத்தனை பேரு வந்திக்கிறான் பார்க்க, இவரு வரவே இல்லை’

ஃபரீதுக்கும் தௌலத்காக்காவுக்கும் இடையே நடந்த பேச்சு. தௌலத்காக்கா இதை, நான் சலாம்சொல்லி அவர் அதற்கு சூத்தைக் காட்டிய பின்பு சொல்லியிருக்கிறார். சூத்தால் பார்த்தால் ஆபிதீன் தெரியமாட்டான்தான். இவர்களுக்குத்தான் எவ்வளவு எதிர்பார்ப்பு! அவரவர்கள் இந்த இறைச்சி முள்ளை தூக்கிப்போட்டுவிட்டு கடன் வாங்கிக்கொள்கிறார்கள். கூடவே நல்ல பெயரையும். நானும் முன்பு அவர் கம்பெனியில் வேலைபார்த்தபோது முள்ளைப் போட்டிருக்கிறேன்தான். ஆனால் இப்போதெல்லாம் எத்தனை கஷ்டம் வந்தாலும் அதற்குத் தீர்வு இதுவல்ல என்று தீர்மானமாக தோன்றிவிட்டது. நான் இப்போது வேறு வகையில் செல்வந்தன். இருந்தாலும் ஃபரீது இதைச் சொன்னபோது நமக்கு எதிராக உள்ள பலமான எதிரியை வளரவிடக்கூடாது என்று, அந்த நெகடிவ் ஃபோர்ஸை அழிக்க, நேரில் பார்த்து கோபத்தைத் தணிக்கலாம் என்று தோன்றியது. வியாழன் இரவு ‘தேரா’ போயிருந்தபோது அடுத்தநாள் காலை அவரைப்போய்ப் பார்க்க வேண்டும் என்று ப்ரோக்ராம் இருந்தது. இறைச்சி முள் என்று நினைக்க வேண்டாம்; ஒரு கமர்கட் முட்டாய்! ஆனால் நேற்று இரவு ஃபரீதுடன் அவர் ஆரம்பிக்கப்போகும் வியாபாரம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது , வியாபாரம் தெரிந்தாலும் பணம் குவிந்தாலும் அந்த வியாபாரியின் மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்று சர்க்காரின் வார்த்தைகளை என்னையறியாமல் சொன்னேன். அப்போது ஃபரீது சொன்னார், ‘நான் சொல்லக்கூடாதுண்டுதான் நெனைச்சேன் உண்மையை. இப்ப சொல்லிடுறேன். அன்னக்கி தௌலத்காக்கா என்னா சொன்னாரு தெரியுமா? இன்னமே ஆபிதீன் உதவிண்டு வரட்டும், பண்ணவே மாட்டேண்’டாரு. அப்ப அவரு ஒவ்வொரு ஆளையும் எதிர்பார்த்திக்கிட்டிக்கிறாரு!’

‘கொடுக்கவும் , கொடுத்துட்டு ஆயிரம்பேருட்ட சொல்லவும்?’

‘ஆமாங்கனி’

‘ஹூம்..ஆக்சுவலா.. நாளைக்கி காலையிலே அவரைப் போய் பார்க்கலாம்டு இருந்தேன். இன்னமே போவமாட்டேன்’

‘சரிதான்.. போனியும்டாலும் தான் ‘பிஸி’ண்டு உம்மை நாலுநாளு இழுத்தடிப்பாரு’

அவமானம்தான். பிள்ளைகளுக்காக படலாம் என்பதற்கு எல்லையே இல்லையா என்ன? ஒரு லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும். ஆனால் அது ஒருகோடிப் பேரிடம் பறையடிக்கப்படும். தேவைதானா இது? தௌலத் என்று ஒருவர் இல்லையென்றால் ஆபிதீன் வாழ்வு அஸ்தமாகிவிடும்! இந்த தௌலத்தை உருவாக்கியவர் ‘எவர்பிரைட்’ காக்கா. அவரை உருவாக்கியது? இந்த உருவாக்கங்களின் ஆரம்பம் எது? இதனைப் புரியாமல் , எல்லாம் தன்னால்தான் என்று நினைக்கவைப்பது எது? சுற்றியுள்ள ‘ஜிங்சக்க்’ கூட்டங்கள் ஏற்றிவிட்ட போதையா? ஊற்ற ஊற்றக் குடித்துக்கொண்டே இருந்தால் உமது ‘இஸ்மாயில் தம்பி ராவுத்தர்’ இறந்துவிடுவார் தௌலத்.. நூறு குடும்பங்களை வாழ வைப்பதாகச் சொல்கிறீர். நூறு குடும்பங்களால்தான் நீர் வாழ்கிறீர் என்று நினைக்க வேண்டும். அதுதான் நிஜ செல்வம். இந்தச் செல்வம் கிடைத்தால் நீர் பணக்காரர். அப்போது ஆயிரம் குடும்பங்கள் வளரும். ஆனால் அந்தச் செல்வம் அடைய ஒரு குரு வேண்டும். உம்மால்தான் குரு இருப்பதாக சொல்லாதிருப்பீராக!

இன்று பகல் ஊரிலிருந்து வந்தவரிடம் பிரிட்டிஸ் கன்ஸலேட் – தில்லியிலிருந்து செல்லாப்பாவிற்கு வந்த கடிதம். இரண்டு C1 ஃபார்முகளும் திருப்பியனுப்பப்பட்டு இருந்தன. பிரித்துப்பார்த்தும் சேத்தப்பா பதறிவிட்டான். நான் ரிலாக்ஸாக பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று நாளைக்கு முன் அதிகாலை கண்ட கனவில் பிரிட்டிஷ் பாஸ்பார்ட் மாதிரி ஏதோ ஒரு பொருள் கையில் அழகாக வந்து விழுந்ததைக் கண்ட தைரியம்! பயப்பட ஒன்றுமில்லதான். I would like to inform you that the names mentioned in your birth certificate differ with the application forms you have completed. I am therefore returning your application forms and advise you to go strictly according to the birth certificates and rectify your names…’ – K. Kumar / Consulate Section / 17th Jun’1996. எங்களிருவரின் ஒரிஜினல் சர்டிஃபிகேட்டுகள் கேட்டிருந்தார் குமார். அவைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன. அதைப் பார்த்த பிறகும் அப்படிக்கேட்டால் என்ன அர்த்தம்? இறப்பு சர்டிஃபிகேட் அனுப்பச் சொல்கிறாரோ?. செல்லாப்பா சுறுசுறுப்பானான். ஊருக்கு ஃபோன் செய்தான். என்னை தகுந்த பதில் எழுதச் சொன்னான். இதற்கான பழைய டைப்ரைட்டருக்கு (ஊரில் இருந்து அனுப்புவதுபோல செய்வதற்கு) அவீர் வந்தான். போனால் போகிறது , நானாவையும் கூட்டிக்கொள்ளலாம்! அடித்துவிட்டு , இன்று ஊர்போகும் ஆளிடம் கொடுத்தனுப்ப ஓடினான். நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை. காரியம் அதுவாக நடக்கும். ஏனெனில் அவனுக்கும் என்னுடைய ரெஃபரென்ஸ் நம்பரையே கான்ஸலேட் கொடுத்துவிட்டது! CON/JAIN – ஓடு!

முதலில் E. Cross என்ற பெண்மணி. இப்போது K. Kumar. இவர்களால் எத்தனையோ இந்தியர்கள் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெற்றிருக்கக்கூடும். ஆனால் E.Cross-உம், K.Kumar-உம் தன்னால்தான் அவர்கள் வாழ்வதாக சொல்லாதிருப்பாருப்பார்களா? தௌலத்காக்காவைத்தான் கேட்க வேண்டும்!

*

29.06.1996

இன்று சர்க்காரின் 17-24.11.95 கேஸட்டை மறுபடியும் முழுதாகக் கேட்டு எழுதுவது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஷேக் கலிஃபா பின் ஸயீத் அல் மக்தும் தன் 80ஆம் வயதில் மௌத். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன். நேற்று எல்லா சேனல்களிலும் ‘கிராஅத்’ திடீரென ஓத ஆரம்பித்தவுடன் பெரிய தலைதான் என்று தெரிந்துவிட்டது. நியூஸ் தவிர மற்ற நேரங்களில் கிராஅத்…GulFax செய்திகள். முன்னாள் மன்னரான ஷேக் ரஸீதின் தம்பி. 10 நாட்கள் அரசு துக்கம், அரைக்கம்பத்தில் கொடி, மூன்று நாட்கள் அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பார்த்ததும், பிரைவேட் கம்பெனிக்கு நாளைய பத்திரிக்கையில் தெரியலாம் என்ற ஆவலுடன் அவரவர்கள் எதிர்பார்த்தால் அதெல்லாம் இல்லை. ‘கல்ஃப் நியூஸ்’ வாங்கிவந்த கப்பமரைக்கார் ஓங்கி மேஜையில் அடித்தார்! ‘அப்பவே நெனைச்சேன்.. ‘பையன்வேலை’ (Sodomy) யிலே இவன் முண்டனாச்சே.. இவனுக்கு வுடமாட்டானுவளே’ண்டு.. என்றார்! அநேகமாக 200 பையன்கள் இருக்கும் என்றான் பலுச்சி டிரைவர் ரஜப். பாவம்தான் , இனி தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த கார்களை விற்றுப் பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான் அவர்கள்! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன்.. இந்த மௌத்தைவிட முக்கியமாக நாலைந்து நாட்களுக்கு முன்பு சௌதியின் அல்-கோபாரில் அமெரிக்க துருப்புகள் தங்கியிருந்த இடத்தில் குண்டுவெடித்து , 19 பேர்கள் படுகொலையுண்டதையும் நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததையும் சேனல்33 காட்டுகிறது..இப்போது ஓதப்படும் கிராஅத் அவர்களுக்கும் சேர்த்துகூட இருக்கலாம். கிராஅத் ஓதுபவர் கூட சற்று சிரிப்பதுபோலத்தான் தெரிகிறது.. பிரமையா? சதாம் ஹூசைன் இருக்கும்வரை சிரிக்கலாம்தான். ஆயில் இருக்கும்வரை அவரும் இருப்பார்தான்!
*

17-24.11.95 கேஸட்

‘Something for Nothing’ண்டு எதுவும் கிடையாது. எல்லாத்தையும் விட பெரிய பியூட்டி – ஆண்டவன்ற Principleலெ, கேட்காம கொடுக்கவே மாட்டான் – கேட்டவுடனே ‘துஆ’ பலிக்கும் பட்சத்தில்! ஆண்டவன் ஒரு லெவல் வச்சிக்கிறான். ‘இந்த லெவலுக்கு மேலே கேளு , அப்பதான் தருவேன்!’டு. அந்த லெவலை நாம் எட்டுறதில்லே. இதுக்குத்தான் ‘ரியாலத்’. திரும்பத் திரும்பக் கேட்டுக் கேட்டு உரு ஏறுன உடனே , நெனச்சதுலாம் பலிக்க ஆரம்பிக்கும்’

*

‘Searcing in a Dark Night in a Dark Room for a Black Cat which is not there… தேடுன உடனே கெடைக்கும்ங்குற மாதிரியும் , தேடிப் பிரயோசனமில்லைண்டு யோசனை பண்ணிட்டு வந்தாலே இல்லாம பொய்டிச்சிங்குற மாதிரியும், தனக்கு கிடைக்காததாலே மத்தவனாலே அடைய முடியாதுங்குறமாதிரியும்.. என்னா கால்குலேசனோ! இதுக்குமேலே லாஜிக் வச்சிப் பேசுனா ‘லைஃப் ஈஸ் நாட் லாஜிகல்’! உண்மைதான்… வித்துக்குள் மரம் இருப்பதையும், மரத்துக்குள் வித்து இருப்பதையும் யாராலேயும் ப்ரூஃப் பண்ண முடியாது. எந்த லாஜிக் இது? உண்மை! மண்ணுல கண்ணாடி இக்கிதுங்குறது தெரியுதா? எப்படி தெரியும்? நிலக்கரியும் வைரமும் எங்கெங்கே இருக்கு? உண்மை! சரிதான். இதுக்குப் பொருந்துது, எல்லாத்துக்கும் பொருந்தாதே! உதாரணம் என்பது ஒரு செய்தியை நிரூபிக்க அல்ல, தெளிவுபடுத்த. what is whatண்டு ப்ரூஃப் பண்றதுதான் ஆதாரம். எதை வச்சி ப்ரூஃப் பண்றமோ அது உதாரணம். எதை வச்சி விளக்குறோமோ அது உதாரணம்’

*

‘கோபம்ங்கிறது ஆண்டவன் தெரியாத்தனமா படைச்சிண்டு ‘பெப்பே’ண்டு முழிச்சிக்கிட்டிற பொருளா? இல்லே, கோபத்துக்கு ஆக்கபூர்வமான பாதை இக்கிதா? செக்ஸுங்குறது கெட்டதா? ஏன்? வேலி ஏறி குதிச்சதுனாலே கொட்டையிலே குத்திடிச்சி, அதனாலே கெட்டது. படிமேலே ஏறிப்போயி லவ் பண்ணுனா கொட்டையிலே குத்தாது, கொட்டையாலெதான் குத்தலாம்! ஒரு பெண்ணைப்பார்த்து ஆசைவருதே.. இது பாசிடிவ்வா, நெகடிவ்வா?.. இப்படி(லாம்) யாரும் பாக்கமாட்டேங்குறாங்க. நீங்களுவ பாருங்களேங்குறேன். ஆண்டவன் படைச்ச எல்லா உணர்ச்சியும் ஆக்கபூர்வமானதுதான். எதை எதை யூஸ் பண்ணனுமோ அப்படி யூஸ் பண்ணுனா ஆண்டவன் எல்லா நிஃயமத்தும் கொடுப்பான். கையை வெட்டிப்போட கல்லை வெட்டிப்போட சட்டமில்லை. உணர்ச்சியை அழிக்க இடமேயில்லை இஸ்லாத்திலே. செக்ஸை அழிக்கிறது, கோபத்தை இல்லாம ஆக்கிடுறது…கூடவே கூடாது. Total எல்லா உணர்ச்சியும் மூளையோட கண்ட்ரோல்லெ இக்கினும். மூளை, உணர்ச்சி, Body மூணும் Astral forceட கண்ட்ரோல்லெ இக்கினும்’

*

02.07.1996

‘MetaPhysicsகூட வேதாந்தம் அல்ல. அங்கே சந்திரன் ஓடுது, அது இவ்வளவு பெருசா இக்கிது, பூமி இவ்வளவு தூரம்.. இந்த செய்திகள்லாம் தெரியனும்டு அவசியம் கிடையாது. சும்மா இன்ஃபர்மேசனுக்காக தெரிஞ்சிவச்சிக்கலாம். தப்பில்லே. இதை directஆகவோ indirectஆகவோ லைஃபுக்கு உபயோகப்படுத்த முடியாது. நீங்க என்னா பண்ணுனாலும் சரி, சூரியன் கிட்டே வரப்போறதில்லே..தூரமாப் போறதும் இல்லை. கிட்டே வரும்போது நீங்க பொரிஞ்சிப் போப்போறீங்க. அதுலேர்ந்து தப்ப முடியாது. லைஃபுக்கு direct impact உள்ள காரியம் எவ்வளவோ இருக்கு. என்னைக்கி இந்த புஸ்தகம் தேவையில்லை, இந்த புஸ்தகத்தை எப்படி எழுதியிருக்காண்டு பார்க்கலாம்டு பார்க்க ஆரம்பிக்கிறீங்களோ அப்ப நீங்க வளர்றீங்கண்டு அர்த்தம். அட்டை அளஹா இக்கிதுண்டு படிக்க ஆரம்பிச்சா தப்பு. இப்படி இருந்தா உங்களுக்கு என்னா புஸ்தகம் வேணுமோ அது தானா கிடைக்கும். என்னெட்டெ உள்ள புஸ்தகத்தைப் பார்த்துட்டு எப்படி இதுலாம் கிடைச்சிச்சிண்டு கேக்குறாங்க. எனக்கிருந்த ஆசை! ஆசைதான் துஆண்டு சொல்லியிக்கிறேனே..கேட்டது கிடைக்கும். தட்டுனா திறக்கப்படும். சமயத்துலே தட்டு ரொம்ப மெல்லிசாகூட இருக்கும். கதவு திறக்கும்! அப்பதான் தெரியும், கேக்குற வலிமை, அடையிற வலிமை வந்துடுச்சி..! அப்ப அடையப்படும்பொருள் அது தேடிக்கிட்டு வரும். நல்லா கவனிச்சா தெரியும். தெரிய ஆரம்பிச்சபிறகு அது தானா கவனத்தைத் திருப்பும். ‘இங்கெதான்ப்பா இருக்கேன்’டு காட்டும். இதிலுள்ள கெடுதி, மத்தவங்கள்ட்டெ சொல்றது. ‘நெனச்சா அடைவேன்’டு சொல்றது. ஒரு வார்த்தை சொல்லி கெடுத்துப்புடுவான்! இல்லே வேறமாதிரி பேசுவான். மத்தவங்களை ஏன் பேச வுடுறீங்க? அவங்களுக்கும் நமக்கும் சம்பந்தம் என்னா இருக்கு? மத்தவனுக்கு நன்மை செய்யலாம். ஆனா நமக்கே போதிய நன்மையை தேடிக்கலே, நன்மை செய்யவேண்டிய அவசியமே இல்லை. துஆ கேட்கலாம். அது ரொம்ப ஈஸி. அதைவிட ஈஸி அட்வைஸ் பன்னுறது. அது வேணாம்! யார்ட்டெயும் சொல்லாதீங்க’

*

Dependable Memory :

‘இதுதான் கரெக்டா இக்கிம்டு நம்ப முடியனும், நம்பி செயல்படுறமாதிரி இருக்கனும். அதுதான் Dependable Memory. இப்படி Dependable மெமரி உள்ளவங்களுக்கு ஃபோட்டோகிராஃபிக் மெமரி உள்ளவங்கண்டு சொல்லலாம். அப்படி உள்ளவங்க பேசும்போது ‘அந்த வீட்டு நம்பர் 17, ஹபீர் நூர்தீன்..’ண்டு சொல்வாங்களே தவிர ‘அப்படிண்டு நெனைக்கிறோம்’டு சொல்லமாட்டாங்க. நெனைச்சாவே டவுட் இக்கிதுண்டு அர்த்தம்.. நாம ஒரு காரியத்தை நெனைக்கிம்போது ‘நாம நெனைக்கிறோம்’டு தோணுதா மனசுலெ? நம்பிக்கை இல்லெண்டு அர்த்தம். ஒரு நிமிடம் அமைதியா இருந்து, ‘இதா? இதுதான்!’ண்டு முடிவெடுக்கனும். இப்படி அடிக்கடி முடிவெடுத்தா , மனசுலே வர்றதுலாம் கரெக்டா வரும். நினைவாற்றல் ஒரு ‘நிஃயமத்’. Recalling Force வேணும், நெனைவுலெ பதிக்கிறது, எந்த பொருளை பதிக்கத் தவறிவிட்டோமோ அதை recall பண்ண முடியாது. அடிமனசுலெ இருக்கும். அங்கே இருந்து என்னா பண்ணுறது? நைட்; இருட்டு; கண்ணாடி இல்லே; கண்ணும் தெரியாது; லைட் இல்லெ. புக்-ஐ தேடி என்னா பிரயோசனம்?’

‘எதை கவனிக்கிறீங்களோ அது மனசுலெ பதியும். அதனாலெ Dependable Memory வேணும்டா எதையும் கவனிச்சி செய்யனும். நல்லா முழுமனசோட கவனிச்சி செஞ்சா மறக்கவே மறக்காது’

*

‘ஒரு சப்ஜெக்டை நெனைச்சிட்டா – அதுக்கு எத்தனை இடையூறு வந்தாலும் சரி- இடையூறு முடிஞ்சபிறகு, அதை கண்டினியூ பண்ணனும். ஒரு செய்தியைப்பத்தி பேச ஆரம்பிச்சாலும் அப்படித்தான். ஒரு செய்தியை பேசிக்கிட்டிருந்தா , அதை கேக்கவிடாம எத்தனை இடையூறு வந்தாலும் சரி, அந்த இடையூறுக்கு பதில் சொல்லிட்டு நீங்க கண்டினியூ பண்ணனும். எண்ணம், அப்புறம் பேச்சு, அப்புறம் கேள்வி’ – ‘S’

*

இத்தனைநாளாக தான் சொல்லிவந்ததின் சாரம் என்னவென்று ஒவ்வொரு சீடரையும் உலுப்ப – அத்தனை கிளைகளும் ஒடிந்து விழ – தாஹா மாட்டும் தைரியமாகச் சொன்னார் : ‘பேச்சை குறைண்டீங்க!’

‘பேச்சைக் குறைண்டு சொன்னாக்கா ‘மாலி’ண்டு சொன்னானே ஒ(ரு)த்தன், அது மாதிரியா? தெரியுமா ‘மாலி’ கதை? குளிக்கப் போய்க்கிட்டிக்கிறேன். எனக்கு முன்னாலே ஒத்தவன் போய்க்கிட்டிக்கிறான். அவனுக்குப் பின்னாலே இன்னொத்தவன் போய்க்கிட்டிக்கிறான்.அவனுக்கு இவன் கூஜா. ‘ழே..மாலியைப் பாத்தியா?’றான் அவன். இதே சவுண்ட், expression..! ‘ழே…மாலியைப் பாத்தியாடா?’

‘எந்த மாலிங்க?’ -இவன்.

‘அவந்தான் மாலிமாரு. சொல்ல அலுப்பா இக்கிது!’

‘மாலி..மார்’ண்டு சொல்ல அலுப்பா இக்கிதாம்! உலகத்திலேயே அவனை மாதிரி ஆளைப் பாத்ததில்லே.. குளிக்கும்போதே கொட்டாவி விட்டான்! தண்ணிலே முக்குளி வுட்டுக்கிட்டிக்கிம்போதே கொட்டாவி விட்டான். நிச்சயமா அவன் பொண்டாட்டி மேலே ஏறி உக்காரும்போதும் கொட்டாவிதான் வுட்டிருப்பான். தெளிவா சொல்லுங்க!’ – ‘S’

கொட்டாவியை ரவூஃப்தான் மாற்றினான். ‘First Golden Time’ பத்தி சொல்லியிக்கிறீங்க’

‘புடிச்சான், ‘கப்’ப்புண்டு புடிச்சான்! அப்படிப் புடி!’ –

*

‘நம்ம சமுதாயத்தைப் பொருத்தவரைக்கிம் பணம் ஒண்ணு இருந்தா போதும், எல்லாத்தையும் அடைஞ்சிடலாம் அப்படீங்குற மாதிரி ஒரு நெனைப்பு இக்கிது. பணம் வந்தவுடனேதான் தெரியும், அதனாலே ஒரு மயிரும் புடுங்க முடியாதுண்டு. ஏதோ கொஞ்சம் செய்யலாம். பாதாளம் வரைக்கிம் பாயும்; உண்மைதான். அந்தப் பாதாளம்ங்குறது உண்மையிலேயே பாதாளத்துக்கு போறவனை விட ரொம்ப ரொம்ப மேலே. பணத்தாலே வாங்கமுடியாத எவ்வளவோ அரிய பொருள்கள் இருக்குது’

*

‘எந்த செல்வத்துக்கும் 3 ரேங்க் இக்கிது. 1. தேடி அடையிறது. 2. பாதுகாக்குறது. 3. யூஸ் பண்ணுறது. இந்த மூணுலெ பிந்திய ரெண்டோ, கடைசி ஒண்ணோ கிடைச்சிக்கிட்டா then you are fortunate. ரொம்ப பேருக்கு ஃபர்ஸ்ட் கிடைக்கிது. செகண்ட்லெ கோட்டை வுட்டுடுறாங்க. சில பேருக்கு, last & most important part, மூணாவது கிடைக்காம பொய்டுது!’

*

‘Financial Securityண்டு எதுக்குப் பேரு?’ – ‘S’.

ஊமை நீர்வீழ்ச்சி ஓவென்று கொட்டியது சர்க்காரின் கேள்விக்கு.

‘இதுலேர்ந்து புரியுது, நீங்க சரியான பொண்டாட்டி மாதிரி இக்கிறீங்கண்டு. மாப்பிள்ளைட்டேர்ந்து நெறையா வரணும், நெறையா வரணும்டு சொல்லுவா. ‘நெறையா’ண்டா என்னாண்டுதான் புரியாது!’ – ‘S’

*

06.07.1996

unable to reset hard drive controller error
floppy disk controller error or no controller preset
floppy disk type is set incorrectly or drive error

என்று சொல்லிவிட்டு ‘ஙே’ என்று முழித்து நின்றது என் கம்ப்யூட்டர். நான் என் கண்ட்ரோலை இழந்தேன். திரும்பத்திரும்ப இதே மெஸ்ஸேஜ்தான் வந்து ‘ஙே’யில் நின்றது. என் தவறுதான். நான் புரோக்ராம்கள் எழுதுவதோடு நின்று கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பர முதலியார் மாதிரி ஹார்ட்வேரில் விளையாடியது தவறு. ‘SS’க்கான Scenerary இந்த கம்ப்யூட்டரில் சரியாக வராததற்கு VGA கார்டுதான் காரணம் என்று GWSன் ஒரு ஃபைல் சொல்லியது. I am greater than anything else ஆயிற்றே நான். இயலும் என்று கம்பெனி கம்ப்யூட்டர் ஒன்றைப்பிரித்து அதிலிருந்து Trident9000 Cardஐ பிரித்து எனது கம்ப்யூட்டரில் போட்டேன். பூட்டிங் கூட நடக்கவில்லை. மறுபடியும் உனது கார்ட்-ஐ நீயே வைத்துக்கொள் என்று பழைய cardஐ திருப்பிப்போட்ட பிறகுதான் அந்த ‘ஙே’க்கள். SVGA card 1MB உள்ளது போட 200 திர்ஹம் ஆகும் என்று SMB கம்ப்யூட்டர்காரர்கள் சொல்லியதில் நான் அதை தவிர்க்கப்போய் இப்போது புது கம்ப்யூட்டர் வாங்குவதுபோல வந்துவிடுமோ? ஹலால்தீனும் இப்போது திருப்பி எடுத்துக்கொள்வானா? வியாழனன்று பகல் ‘தேரா’ போகவில்லை. இதே டென்சன். டென்சனை மாற்றிப்பார்க்க பார்க்க டென்சன் கூடியது. அன்று இரவு ‘தேரா’ புறப்படுவதற்கு அரைமணிக்கு முன்னால் பளிச்சென்று ஏதோ புகுந்தது. நான் அறைக்கு வந்து வெகு நிதானமாக மினி டவர் Caseன் பின்புற ஸ்க்ரூக்களை தளர்த்தினேன். VGA கார்ட் சொருகும் பின்_ஐயும் இலேசாக தளர்த்தி ‘ஆன்’ பண்ணினேன். மளமளவென்று அழகாக promptக்கு வந்து நின்றது. அட, அதற்கும் ரிலாக்சேஷன் தேவைப்பட்டிருக்கிறது!

சர்க்காரின் ஓவியம் புன்னகைத்த மாதிரி இருந்தது.

*

நேற்று செஷன் முடிந்து ஏதும் எழுதவில்லை. அஸ்ராகுட்டியின் டான்ஸ் பார்த்து அழுகையும் சிரிப்பும் கலந்து வந்த ஒன்றில் கவிழ்ந்திருந்தேன். சேத்தபொண்ணின் கல்யாண கேஸட்டில் ஆடுகிறாள் என் மகள். என்ன சூப்பராக ஆடுகிறாள்! மூன்றுவருடமாக அவளது நாட்டியம் பள்ளி ஆண்டுவிழாவில் நடக்கத்தான் செய்கிறது. நான் இங்கே வந்து அரபிக்கு நட்டுவாங்கம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், போக இயலாமல். அடுத்தவருடம் இதற்காவது எமர்ஜென்ஸி விடுமுறையில் போக வேண்டும். கம்பெனி உள்ள நிலையில் நீயும் அங்கேபோய் டான்ஸ் ஆடு என்று ஒரேயடியாக அனுப்பிவிடுவான்கள். போனவருடம் ‘குச்சி குச்சி ராக்கம்மா’ ஆடினாளாம். இந்த வருடம் ஒரு ஹிந்திப்பாட்டு. ரங்கீலாவாம். அஸ்ராவைவிட , கூட ஆடிய ஒரு பெண்குட்டிக்கு நளினம் கூட. அதுதான் ரங்கீலா படத்திற்கே டான்ஸ் மாஸ்டரோ என்னவோ. அத்தனை நளினம். யே..அப்பா! சித்ராவிஸ்வேஸ்வரன்தான் எப்பவோ குறைப்பட்டாள், முஸ்லீம் பெண் பிள்ளைகள் நாட்டியம் கற்றுக்கொள்ள வரமாட்டேன் என்கிறார்கள், வந்தால் இலவசமாக நான் கற்றுத் தருகிறேன் என்று. இப்போதுள்ள முஸ்லீம் பெண் பிள்ளைகளை அனுப்பினால் சித்ராவுக்கே சொல்லித் தருவார்கள். நாட்டியம் மட்டுமல்ல..

*

71186. அஸ்மா ஆசைப்பட்ட போட்ட ஃபோன் வந்தேவிட்டது! நேற்று காலை பேசினேன். பக்கத்துவீட்டில் கூப்பிடவிட்டு. லைன் கிடைக்காத தொந்தரவுகள் இனி இல்லை. ஆனால் ஃபோன் பேசவேண்டும்! சர்க்காரிடம் நம்பர்-ஐ சொன்னாயா என்று கேட்டேன் அவளிடம்.

‘ம்..சொன்னேன். கால்குலேட்டர்-ஐ தட்டிப்பாத்துட்டு ‘ம்..சரி’ண்டு தலையாட்டிக்கிட்டாஹா!’ என்றாள்

சர்க்காரின் ·போன் நம்பர் 70088. கூட்டுஎண்=23=5. என் வீட்டு போன் நம்பர் கூட்டு எண்= 23=5!. நானும் தலையாட்டிக்கொண்டேன்!

அனீஸ் ஸ்கூல் போக பயங்கர அடம் பிடிக்கிறானாம். அஸ்ரா பண்ணிய கலாட்டாவை விடவா? ஓ, நினைத்தாலே நடுங்குகிறது!

‘ஏன், நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தான்?’

‘ஒரு வாரம்தான் அப்படிப்போனான் மச்சான், அதுக்குப்பிறகு ஒரே அழுகை’

‘ஏனாம்?’

‘ஸ்கூல்லெ புள்ளையிலுவ போடுற சத்தம் காதை அடைக்குதாம் அவனுக்கு!’

‘சிந்தனை செய்ய இடைஞ்சலா இக்கிம் போலக்கிது!’

‘ம்ம்ம்’ – 71186 முறைத்தது. தனக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் அப்ளை பண்ணியிருப்பவர்களைத் தாண்டிக் குதித்து வந்துவிட்ட கர்வம் போலும்..

*

09.07.1996

இடையில் ஒரு கனவு தெளிவாக ஞாபகம் இருக்கிறது. கம்ப்யூட்டர் கனவு! சின்னம்மா சேச்சி ஒரு பெரிய சூப்பர் மார்கெட் வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனக்கு ஏதோ ஸ்டேஷனரி சாமான் வேண்டும். அங்கே போகிறேன். யாரும் இல்லை. கண்ணாடிப் பெட்டிகள் துடைத்துவிட்டாற்போல் இருக்கிறது. எல்லா சாமான்களும் விற்றுவிட்டன. நான் அங்கிருந்த கம்ப்யூட்டரில் undelete அல்லது unerase கட்டளை கொடுக்கிறேன். ஷோகேஸ்கள் மறுபடியும் நிரம்பி விட்டன. சேல்ஸ் ரிடர்னோ அல்லது புதியவைகளாகவோ. எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது! இன்று இதுபற்றி யோசனை செய்தபோது memory recallingஐ சொல்வதாகத்தான் தெரிகிறது. ஆனால் அந்தக் கனவின் முடிவில் எனக்கு மிகப்பெரும் சக்தி வந்ததாக குதித்துக்கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி துதிபாடிகள் வேறு. unformat!

*

இரண்டு நாட்களாக ‘ஜம்’ சரியாக செய்ய இயலாமல் போகிறது. ‘தேரா’ போய் வந்தாலே – முக்கியமாக வியாழன் இரவிலிருந்து வெள்ளி பகலுக்குள் – எனக்குள் ஏகப்பட்ட அழுக்குகள் சேர்ந்திருக்கும். அதைக் களைய போராடவேண்டிவரும். ஜம்-மிலும் ரியாலத்திலும் நூதனமாக ஒன்று சேர்ப்பேன், அல்லது குறைப்பேன். எல்லா வாரங்களிலும் இந்த வியாழன் வெள்ளி வரவும் செய்கிறது. வெள்ளி செஷனில் உட்காரும்போது யானைபலம் வந்தமாதிரி இருக்கும். பிறகு நேற்றைய தொடர்ச்சியாய் சனி கஷ்டப்படுத்தும். இந்த வாரத்தில் ஞாயிறும் திங்களும் சேர்ந்து கொண்டது மொயீன்சாஹிபால். பள்ளிக்கூட விடுமுறை. அவர் மனைவி அபுதாபியிலுள்ள அவர் சகோதரர் வீட்டுக்குப் போய்விட்டார் , பிள்ளைகளோடு. இங்கோ ‘எலி’க்கு கொண்டாட்டம். ஊரெல்லாம் ஒரு ரெஸ்டாரண்ட் விடாமல் சுற்றியது. போரடிக்கிறதாம். இரண்டுநாளும் என்னைவேறு மாரடித்தார். ஞாயிறு முற்றிலும் வீணாகிவிடவே நேற்று மறுத்தேன்.

‘இல்லை ஆபிதீன்..நீ வந்துதான் ஆகவேண்டும். ஷார்ஜாவிலுள்ள அந்த அல்-ஹலால் ஸ்வீட்ஸ்-ல் கிடைக்கிற குல்ஃபி போட்ட ஃபாலுதா உலகத்தில் எங்கும் கிடைக்காது. அங்கே கீமா புறாட்டாவும் ஃபேமஸ் பக்கத்து கடையில். தொணதொணப்பு தாங்கவில்லை. அதற்கு முதல்நாள்தான் அவீர் இரண்டாவது கிடங்கில் பெரிய விருந்து வேறு நடந்தது , ‘பங்கரா’ டான்ஸூடன்.

ஜம்-ஐ பொதுவாக மாலை 6 மணிக்கு தொடங்குவேன். ஆஃபீஸில் 1 1/2 மணி நேரம் கழியும். பிறகு ரூமுக்கு வந்து 1 1/2 மணி நேரம். சர்க்கார் எனக்காக கொடுத்த பயிற்சிகளையெல்லாம் ரூமில் செய்வது. எனவே ஜம்மின் பிற்பகுதி எனக்கு ரொம்ப முக்கியம். இவரோ.. ‘நான் தொழுதுவிட்டு வருகிறேன், நீ ரூமில் தயாராக இரு’ என்று போனார். பக்கத்து ஒமன் டிரான்ஸ்போர்ட் கம்பெனி பள்ளிக்கு. அங்கேதான் அல்லா இருக்கிறான். ‘அல்லாவே.. இன்று போகலாம் அவருடன். ஆனால் அது 9 மணிக்கு மேலேதான். இன்று எப்படியாவது பயிற்சி பண்ணியே ஆகவேண்டும்’ என்று ஒரு நொடி நினைத்தேன். ரூமுக்கு வந்ததும் பயிற்சியைத் தொடர்ந்தேன். கதவு தட்டப்பட்டது. வந்துவிட்டாரா தீனி மன்னன்? பலுச்சி டிரைவர் ரஜப். ‘அரபாப் ஃபோன் செய்தார், இங்கே நாலைந்து இங்கிலீஸ்காரர்களுடன் ‘ஸ்க்ரேப்’ பார்க்க வருகிறாராம்’

‘அதனால் என்ன?’

‘மொயீன்சாஹிப் உன்னை ரூமிலேயே இருக்கச் சொன்னார். அந்த கூட்டம் போவதற்கு 9 மணியாகும்’

நன்றி சர்க்கார்! நேற்று இரவு 10 மணியானது , ஷார்ஜாவில் சாப்பிடும்போது. மொயீன்சாஹிப் மிகவும் கோபமாக இருந்தார். கண்டநேரத்தில் வந்து கழுத்தை அறுக்கிறான்கள் என்று முதலாளிகளை திட்டிக்கொண்டிருந்தார். பசி அதிகமாவதற்காக அவ்வப்போது கோபப்படுபவர்தான்! கீமா போட்ட தந்துரொட்டி சுமார்தான் எனக்கு. ஊரில் உம்மாபோடும் இறைச்சிப் பறாட்டாவுக்கோ அஸ்மா போடும் பொட்டிபறாட்டாவுக்கோ இணையாகுமா இதெல்லாம்? ஆனால் ‘ஜம்’ தொந்தரவில்லாமல் முடிந்ததால் – பசி அதிகம் வந்ததில் – மொயீன்சாபுக்கு இணையாக சாப்பிட முடிந்தது.

Incredible!

(தொடரும்)

குறிப்புகள் :

‘SS’ – Secret Symbol
ஃப்ளூஸ் – பணம்
பரக்கத் – வளம்
ரியாலத் – (SS) பயிற்சி
EB, IB – Emotional Body , Intellectual Body
கில்லா – கோட்டை
இஸ்மாயில் தம்பி ராவுத்தர் – அல்லாஹ்வை செல்லமாகச் சொல்வது
நானா – அண்ணன்
மௌத் – இறப்பு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் – இறப்பு செய்தி கேட்கும்போது சொல்வது
கிராஅத் – குர்-ஆன் வசனங்களை ராகத்துடன் ஓதும் முறை/கலை
துஆ – பிரார்த்தனை
நிஃயமத் அருட்கொடை
ஜம் – ஒரு பயிற்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s