முதல் செய்தி , என் சம்பந்தமானது. இன்று என் செல்ல மகளார் அனீகாவின் பிறந்த நாள். வீடு அமர்க்களப்படுகிறது. வாழ்த்து சொல்லிவிட்டு ‘உம்மா என்னா செய்றா’ என்றேன். அனீகாவையும் நான் உம்மா என்றுதான் பிரியம் வழிய அழைப்பேன். அவளுக்கு – நான் சொல்லும் தோரணையை வைத்து – அது தன் உம்மாவைக் குறிக்குமா அல்லது தன்னைக் குறிக்குமா என்று புரியும். வெளியாட்களுக்குத்தான் கொஞ்சம் – கொஞ்சமல்ல , நிறையவே – குழப்பம் வரும்.
‘நெய்சோறு , தாழிச்சா செய்றா வாப்பா’
‘சித்திமா?’
‘கோழி பொறிக்கிறா’
‘பப்புமா?’
‘குப்பத்தா பொறிக்கிறாஹா’
‘நீ என்னா செய்யப்போறா கண்ணு?’
‘சாப்புடுவேன்!’
எப்படி? எம்.எஸ்.ஸி (கணிதம்) இரண்டாம் ஆண்டு படிக்கிற என் செல்ல மகளுக்கு ஒரு பூவை சமர்ப்பிக்கிறேன். இது ரொம்பவும் விசேஷமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் – அலுவலகத்தின் கீழேயுள்ள நடைபாதையில் இருந்தது. என் டப்பா டிஜிடல் கேமராவில் (Exif பார்த்து கேமரா மாடல் என்ன என்று பாருங்கள். புத்திசாலித்தனமாக அலைந்து திரிந்து நான் வாங்கிய ஆறாவது நொடியில் 600 திர்ஹம் குறைந்து விட்டது!) ‘க்ளிக்’ செய்தேன். பக்கத்திலிருந்த ரெஸ்டாரண்ட் சென்று ‘ச்சாய்’ குடித்துவிட்டு – இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தால் அந்தப் பூ இல்லை; காணோம்!
யாரோ கொண்டு போயிருக்க வேண்டும். ஏதோ , எனக்காகவே காத்திருந்தது போல இது…! ( ‘எல்லாவற்றின் தொடக்கமும் அடுத்த வினாடியிலிருந்து அல்ல; அதே வினாடியிலிருந்துதான்’ – ரூமி) அன்றிலிருந்து இந்தப்பூவை பத்திரமாக வைத்திருக்கிறேன் – யாரிடமும் காட்டாமல். இன்று உங்களுக்காக இங்கு தருகிறேன். ஒரிஜினல். அழகுபடுத்த நீங்கள் பிக்னிக்.காம் செல்லலாம் (அட்டகாசமாக புகைப்படமெடுக்கும் சகோதரர் மோகன்தாஸின் சிபாரிசு) அல்லது , நான் எப்போதும் உபயோகிக்கும் மிக எளிமையான Free Digital Enhance என்ற குட்டி ப்ரோக்ராமை உபயோகிக்கலாம். உங்கள் இஷ்டம். அமீரகத்தின் புகழ்பெற்ற புகைப்படக்காரர், மறைந்த நூர்அலிக்கு இம்மாதிரி டிஜிடல் கோப்புகள் பிடிக்காது என்பது ஞாபகம் வருகிறது. ஒரிஜினல் என்றால் ஒன்றுதானே இருக்கவேண்டும் என்பது அவர் கட்சி. சரிதானே?
அந்தப் பூ இந்தப் பூ… (பெரிதாக்க க்ளிக் செய்யுங்கள்)
மகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள். மகளென்ற மலர் இன்று சிரிக்கட்டும்!
இரண்டாவது செய்தி நம் சம்பந்தமானது…
வாய்கொள்ளாத சிரிப்புடன் ஜஃபருல்லா நானா இப்போது தொடர்பு கொண்டார். மகளார் அனீகாவின் பிறந்தநாளுக்காக அவரது ஆசிகளைக் கோரி எஸ்,எம்.எஸ் அனுப்பியிருந்தேனே அதிகாலையில். அதற்காக ஃபோன் செய்கிறாரா? அதற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு? சந்தோஷம் வழிந்து ஓடுகிறதே.. ஏதேனும் அரசுபதவி கிடைத்துவிட்டதோ? இல்லையே, இதற்கெல்லாம் மகிழ்கிற ஆள் அவரல்லவே..
என்ன நானா, ஒரே சந்தோஷம்?
உம்ம மெஸ்ஸேஜ் கெடச்சிச்சி. சாய்ந்தரம் உம்ம வூட்டுக்கு போவேன் சாக்லெட்டோட. ஆனா இப்ப ஃபோன் பண்ணுனது வேற நல்ல செய்தி சொல்ல. ரொம்ப சந்தோஷமான செய்திங்கனி. ரூமிக்கும் இப்ப சொல்லனும்.. ஹமீதுஜாஃபருக்கு ஃபோன் பண்ணி நீம்பரும் உடனே சொல்லும். ஹா..ஹா.. மியாந்தெரு போன லாத்தா கொஞ்சநேரத்துலெ இங்கெ வந்துடுவா.. அவளும் வுழுந்து வுழுந்து சிரிப்பா.. ஹைய்யோ… அல்லாவே… வவுத்துவலி தாங்கலையே..
சொல்லுங்க நானா.
வூடு வுழுந்துடுச்சி…!
… …… …….
நாம பேசிக்கிட்டிருப்பொம்லே – டிவிக்கு எதுத்தாபோல. அந்த எடம். நான் உக்காந்திருக்கிற நாக்காலிக்கு மேல் போர்ஷன். அப்பதான் எந்திரிச்சி பக்கத்து ரூமுக்கு கொஞ்சம் நவந்தேங்ஙகனி.. தடதடன்னு வுழுந்திச்சி பாரும்.. ஹாஹ்ஹா… ரூமும் நாளைக்கி வுழுந்துடும்..
சே, என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நானா இதுக்கு?
ஆமாங்கனி.. இன்னமே வூடுகட்ட அல்லா வழிகாட்டுவான்லெ? மழை முடிஞ்சதும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான், இன்ஷா அல்லாஹ்.
பூவே, என்ன சொல்வது இவரிடம்?
***
ஜஃபருல்லா நானாவின் தொலைபேசி எண் :
0091 9842394119
ஜமாலன் said,
28/11/2010 இல் 12:08
மகளுக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சென்ஷி said,
28/11/2010 இல் 12:21
அனீகாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
ஹமீது ஜாஃபர் said,
28/11/2010 இல் 19:18
ஹமீது ஜாஃபர் துஆ செஞ்சிட்டான் உங்க செல்ல மகளின் நல் வாழ்வுக்காக.
அடுத்த செய்தி எதிர்பார்த்ததுதான் ஆனால் இவ்வளவு சீக்கிரம்னு அல்ல. உடனே ஒரு செய்தி எழுதினேன் ஆனால் நீங்க பதிஞ்சுட்டதால் என்னது வேஸ்ட். இருந்தாலும் கொஞ்சம்: உடனே ‘சந்தோஷமான செய்தியை சந்தோஷமாக சொன்னதுக்கு சந்தோஷமான வாழ்த்துக்கள். பாக்கி எப்பொ விழப்போவுது?’ ன்னு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து வந்த பதில் இது: ‘எனக்கு எப்படி தெரியும்??? அல்லாவுக்குத்தானே தெரியும்….’
எம் அப்துல் காதர் said,
28/11/2010 இல் 20:39
அனீகாவுக்கு அன்பு வாழ்த்துகள்!!
ஒ.நூருல் அமீன் said,
28/11/2010 இல் 21:14
அன்பு மகளாரும் உங்கள் இனிய குடும்பமும் ஈமானுடன் சீமானாக/சீமாட்டியாக வாழ வாழ்த்துகள்.
எம்.எம்.பளுலுல் ஹக் said,
28/11/2010 இல் 21:26
உங்கள் அன்பு மகள் ‘அனீகா உம்மா’ வுக்கு வாழ்த்துக்கள்.
ஆபிதீன் said,
29/11/2010 இல் 09:36
ஜமாலன் சார், சென்ஷி, ஜாஃபர்நானா, காதர், நூருல் அமீன், பளுலுல்ஹக் ஆகியோருக்கு நன்றிகள். வீட்டிற்கு ஃபோன் செய்து பேசிய என் தாஜுக்கும் நன்றி. இங்கே (துபாயில்) காய்ந்த குப்ஸ்-ஐ கட்டித் தயிரில் தோய்த்துத் தின்றேன். பிரமாதம்!
இன்னொரு விஷயம்: ஜஃபருல்லாநானாவிடம் நேற்றிரவு பேசினேன். ‘இப்ப எப்படியிக்கிது நானா?’ ‘நான் சொந்தக்காரங்க வூட்டுக்கு போயிட்டேங்கனி. அத விடும், இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னாலே சாருகேசில ஒரு பையன் ஃப்ளூட் வாசிச்சான் – ரேடியோவுலெ. ஆஹா.. ரொம்ப பிரமாதம்ங்கனி. பத்து நிமிஷத்துலெ எங்கெயோ கூட்டிட்டுப் போயிட்டான். அப்ப மறுபடியும் ‘தடதட’ண்டு மழ வந்து கெடுத்துடிச்சி..சே..’ என்றார்!
Nagore Ismail said,
30/11/2010 இல் 07:46
“”ஏதேனும் அரசுபதவி கிடைத்துவிட்டதோ? இல்லையே, இதற்கெல்லாம் மகிழ்கிற ஆள் அவரல்லவே..”
“..இப்ப கொஞ்சநேரத்துக்கு முன்னாலே சாருகேசில ஒரு பையன் ஃப்ளூட் வாசிச்சான் – ரேடியோவுலெ. ஆஹா.. ரொம்ப பிரமாதம்ங்கனி. பத்து நிமிஷத்துலெ எங்கெயோ கூட்டிட்டுப் போயிட்டான். அப்ப மறுபடியும் ‘தடதட’ண்டு மழ வந்து கெடுத்துடிச்சி..சே..’”
வூடு வுழுந்தா மட்டுமில்ல.. புதுசா ஏழு மாடி வச்சு வூடு கட்டி குடி புகுந்தாலும் ஃப்ளூட் அல்லது புல்லாங்குழலை தான் ரசிச்சிகிட்டு இருப்பாஹா இஜட். நானா.
அனிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!
ஆபிதீன் said,
30/11/2010 இல் 15:42
சந்தோஷம் துரை, அனீகாவிடமே வாழ்த்து சொன்னால் ரொம்பவும் மகிழ்வாள். ‘இஜட்’ பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அபூர்வமான ஆள் நம்ம நானா.
A.Mohamed Ismail said,
30/11/2010 இல் 18:46
அனீகாவை பப்புமா வினித் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவும் போது நான் தான் எப்போதும் வழியனுப்பி வைப்பேன். என்னை பார்க்காமல் அஹ ஸ்கூலுக்கு போவ முடியாது. – இது எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவுக்கு தான் ரொம்ப புடிச்சிந்திச்சு. அஹ சொல்லி கிட்டே இருப்பாஹா. ஜக்காமாமா வூட்ல எனக்கு அடுத்தது இவன் தான் புரியமா இக்கிறான் என்று. அதை தொடர்ந்து நீங்கள் “யாரது தொர பாக்கணுமே..” என்று நீங்க வூட்டுக்கு வந்துட்டு போனதையும் பத்தி சொல்லிகிட்டே இருப்பாஹா..” அனீகா நம்ம வூட்டு புள்ளையாச்சே.. மகிழாம இருப்பாஹலா..? – (தொடரும்..)
A.Mohamed Ismail said,
30/11/2010 இல் 18:53
முஹம்மது இப்னு அரபி (ரஹ்) அவர்கள் எழுதிய புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் காலித் இப்னு ஸனான் அவர்களை பற்றி எழுதியிருக்கிறார்களாம். காலித் அவர்கள் தம்மை உயிரோடு அடக்கம் செய்து 40 நாட்கள் கழித்து தம்முடைய அடக்க விடத்தைத் தோண்டின் மரணத்திற்கு பிறகு நடப்பதை பற்றி சொல்கிறேன் என்று சொன்னார்களாம். அதே மாதிரி அடக்கம் செய்து விட்டு 40 நாள் கழித்து தோண்ட போன போது மக்கள் அதுக்கு அனுமதி தரலையாம். அன்னாரின் மகளார் பெருமானார் (ஸல்) அவர்களை காண வந்த போது “தன் இனத்தார் பயன்படுத்தாது வீணாக்கி விட்ட ஒரு நபியின் திருமகளுக்கு சோபனம்..” என்றார்களாம். இது உண்மையாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னது பற்றி எனக்கு தெரியாது. வஹ்ஹாபிகள் தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால் நான் சொல்ல வருவது நம் சமூகம் சரியாக பயன்படுத்தாமல் போனவர்களின் பட்டியலில் இஜட் நானாவும் ஒருவர் என்பது என் கருத்து.
ஆபிதீன் said,
01/12/2010 இல் 09:43
/நம் சமூகம் சரியாக பயன்படுத்தாமல் போனவர்களின் பட்டியலில் இஜட் நானாவும்../
எப்படி பயன்படுத்தும்? இவர்தான் மனிதர்களாக வாழச் சொல்கிறாரே!
மஜீத் said,
07/12/2010 இல் 17:41
ஒரு வாரம் பின்னாலேயே சென்று படிக்க இந்த மகிழ்ச்சியான பதிவு. மகளார் அனீகா சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்!!