அன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு…

16.10.89 /JohoreBahru

அன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்வும் தந்தருளப் பிரார்த்திக்கும் தந்தையின் நல்லாசி. வாழ்க.

அவிடம் அனீகா முதல் எல்லோருடைய நலத்திற்கும் தேவைக்கும் எழுதவும்.

உமது 3-ஆம் தேதி கடிதம் கிடைத்தது. இங்கு வந்து திரும்புவது பற்றி கேட்டிருக்கிறீர். இங்கு தாம் வந்து திரும்புவது ஆதாயமாக அமையாது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை இழக்க நேரிடலாம். காரணம் அனீகாவிற்கு – ஆயிஷாவிற்கு பிறகு தம்பி – தங்கைமார்களுக்கு – உமது தாயாருக்கு – பிறகு உமக்கு – உமது மைத்துனர் சேத்தாப்பாவுக்கு – இப்படிப் பட்டியலிட்டு எல்லோருக்கும் சாமான் வாங்கி ஆக வேண்டும். இது தவிர்க்க முடியாதது. சிங்கை – மலேசிய சந்தைகளில் பார்க்கும் சாமான்களெல்லாம் உமது கண்களைக் கவர்வன. மலேசியாவில் குறிப்பாக பினாங்கு – கோலாலம்பூர் – ஜொகூர் – குவந்தான் பிறகு சிங்கப்பூர் இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்க்காது தாயகம் திரும்புவதில் அர்த்தம் கிடையாது. மலேசியாவில் இரண்டுமாதமும் சிங்கையில் ஒரு மாதமும் சுற்றிப்பார்க்க தாராளமாக அனுமதி கிடைக்கும். ஆனால் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது – கூடாது. வேலை செய்பவருக்கு – வேலை கொடுப்பவருக்கும் பிரம்படி தண்டனை என்பது சிங்கை குடி நுழைவுத் துறையின் சட்டம். வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு – கொடுக்கும் கால அளவிற்குள் – திரும்பிவிட வேண்டும். சிங்கையும் மலேசியாவும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சக்திமிக்கவை என்பதில் சந்தேகம் இல்லை. இயற்கை அழகை ரசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தீணி கிடைக்கவே செய்யும். சேமிப்பில் ஐந்து பத்து ரூபாயை இழக்கும் துணிவு இருப்பவர்கள் தாராளமாக வந்து திரும்பலாம். மற்றபடி லாபம் கிடைக்கும் என்ற நினைப்பையே விட்டுவிட வேண்டும். அங்கு கஸ்டம்ஸில் முன்ஏற்பாடு செய்து நடப்பவர்களின் நிலை வேறுமாதிரியானது. நமது சூழ்நிலைக்கு அது ஒத்துவராது. அப்படி ஏதும் சென்னையில் உமக்கு வாய்ப்பு இருப்பின் தெரியப்படுத்தும். மற்ற விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன். இங்கு வந்து திரும்புவதானால் அவிடம் டிக்கெட் எடுத்தது போக – அமெரிக்கன் டாலர் வாங்கியது போக – பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் அவிடம் நான் குறிப்பிடும் இடத்தில் கொடுக்க நேரிடும்.

அனீகாவுக்கு தரமான சாமான்கள் நான் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். ஆனால் அவள் பிறந்தவேளை மூச்சுமுட்டும் அளவு சிரமத்தில் மூழ்கியிருந்தேன். 2 மாதங்களாகத்தான் சற்று தாரளமாக மூச்சு விட முடிகிறது. இது தொடர துஆ செய்யவும். ஆயிஷாவிற்கு என் சலாம் சொல்லவும். அடிக்கடி நம் வீட்டிற்கு அழைத்து வந்து அனுப்பி வைக்கவும். உம் தங்கைமார்களுடன் socialஆக பழகும்படி செய்யவும். நான் ஊரில் இருந்த சமயம் வந்த புதிதில் reserved டைப்பாக இருந்ததைப் பார்த்தேன். தற்போது கூச்சம் தெளிந்திருக்கும். சகஜமாக – கலகலப்பாக பழகும் என நம்புகிறேன்.

உமது பெரியமாமா ஜஸ்டிஸ் M.M.I அவர்கள் என்னை விசாரித்து சலாம் சொல்லியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். வரும்போது மரியாதைக்காக நானும் சென்று – கண்டு – பயணம் சொல்லிக்கொண்டுதான் வந்தேன்.

உமது தாயாருடைய 9-ஆம் தேதி கடிதம் இவிடம் 14ஆம் தேதி கிடைத்தது. நாளை மறுநாள் பதில் போடுவதாக சொல்லவும்.

ரி·பாய் பெயருக்கு 3 ஜட்டிகள் கொண்ட பார்சல் ஒன்று அனுப்பியிருக்கிறேன். உம் தாயாரிடம் தெரிவிக்கவும்

மற்றவை பின்பு

ஜே.எம்.ஹூசைன்

*

இன்று என் சீதேவி வாப்பாவின் நினைவு தினம். (13-4-1995ல் மவுத்தானார்கள். ஹார்ட் அட்டாக்). மனசு சரியில்லை. வேலை ஓடவில்லை. ஒரே வாப்பாவின் நினைவு. பொக்கிஷம் போல எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் வாப்பாவின் கடிதத்தை (பெரும்பாலும் ‘டைப்’ செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அவர்கள் கைப்பட எழுதியது. நான் சவுதியிலிருந்து one-wayல் திரும்பியிருந்த சமயம் அது) பதியவேண்டுமென்று தோன்றியதால் பதிகிறேன். ‘நம்ம புள்ளைங்க நம்மள கவனிச்சுக்குமா?’ என்று நண்பர் இஸ்மாயிலிடம் முந்தாநாள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டதற்கு , ‘நம்ம வாப்பாவ நாம கவனிச்சோமா? அதுமாதிரிதான்’ என்றார். ‘சொரக்’ என்றது. ‘என்னய்யா சொல்றே?’ ‘உண்மையைத்தான் சொல்றேன்’. நான் என் வாப்பாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இயலவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தன் பிள்ளைகளுக்கு எந்த சிரமத்தையும் கடைசிவரை கொடுக்காத சீதேவி வாப்பா… என் வாப்பாவின் ஆரோக்கியம், சம்பாதிக்கும் திறமை, கலை ரசனை மற்றும் தமிழறிவு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். பிற மதத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் , அவர்களை நம் சகோதர மக்களாகப் பார்க்க வேண்டும் என்று சொன்ன அவர்களின் எண்ணத்திற்கு , ஆசைக்கு மாறுசெய்யக்கூடாது, அதையே என் பிள்ளைகளுக்கும் கடத்தவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கிறது. இறைவன் உதவுவானாக, ஆமீன்.

குறிப்பு : மேலேயுள்ளது நான் வரைந்த வாப்பாவின் கோட்டோவியம். முதல் சிறுகதைத் தொகுப்பின் சமர்ப்பணத்திற்காக அவசரமாக கிறுக்கியது.

8 பின்னூட்டங்கள்

 1. nagoorumi said,

  13/04/2010 இல் 10:53

  அன்பு ஆபிதீன், உம் வாப்பாவின் கடிதத்தைப் படித்தேன். படிக்கப் படிக்க எனக்கும் அவர்கள் உருவம் வந்து வந்து போனது. நீர் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர். எனக்கு அப்படி ஒரு வாப்பா கிடைக்கவில்லை. ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். அல்லது உமக்கு மிகவும் பிடித்த ஏதாவது பொருளை அதை விரும்பும் யாருக்காவது கொடுத்து விடலாம். (உதாரணமாக எனக்குக் கொடுக்கலாம்).

  அந்த நன்மை உம் வாப்பாவைப் போய்ச் சேரட்டுமே.

  அன்புடன்
  ரஃபி

 2. 13/04/2010 இல் 12:05

  பிரியாமனவர்களின் மரணம் தாங்கிக் கொள்ளவே முடியாத துயர்.
  லட்டரை படிக்க படிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது

  வாப்பா ஜொஹர்ல தான் வேலை பார்த்தாஹலா?
  உங்களை தம்பிவாப்பான்னு தான் கூப்பிடுவாஹலா?

  வாப்பாவுக்காக என் பிரார்த்தனைகள்

 3. 13/04/2010 இல் 15:08

  **//ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். அல்லது உமக்கு மிகவும் பிடித்த ஏதாவது பொருளை அதை விரும்பும் யாருக்காவது கொடுத்து விடலாம். (உதாரணமாக எனக்குக் கொடுக்கலாம்).//**

  இல்லையில்லை, தம்பிவாப்பா என்ற உங்கள் பெயருல்ல ஒரு நபருக்கே கொடுக்கும்படி கணம் கோர்ட்டார் அவர்களை
  மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். அது அடியேன் என் பெயர் தான் ஹி..ஹி..

  இப்ப வாப்பாவை நினைத்து பார்த்து சீதேவி என்று உருகும் நீங்கள், அவர்கள் நாகூரிலிருந்து புறப்பட்டு, புகை வண்டி மூலமாக சென்னை வந்தடைந்து, பிறகு வானூர்தி மூலமாக சிங்கை அடைந்ததாக ஒரு கடிதம் எழுதி வந்து கிடைத்த அன்று, அதை வைத்துக்கொண்டு- புகை வண்டி, வானூர்தி- என்று அவர்கள் எழுதிய எழுத்து நடையை, மாய்ந்து மாய்ந்து கிண்டல் அடித்தது ஞாபகமிருக்கா ஆபிதீன். நானும் ஹமீதும் அப்பா ரூமில் இருந்தோம். உமக்கு ஞாபகமிருக்கோ இல்லையோ தெரியலை.

  பிரியமானவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் வரும் எல்லையில்லா பாசத்தின் வெளிப்பாடு தான் இது இல்லையா. நாம் சம்பாதித்த காசை நம் பிள்ளைகள் கரியாக்கும் போது கூட இந்த தந்தை பாசம் வெளிப்படுமோ என்னமோ தெரியலை. உங்களை பொறுத்த வரை உங்கள் மகனுக்கு நீங்கள் அறிவுறுத்தும் செய்கையாக கூட இருக்க லாமோ. தெரியலை சீதேவி.

  அன்புடன்
  அப்துல் காதர்

 4. 13/04/2010 இல் 15:51

  கோட்டோவியம் ரொம்ப நல்லா இருக்கு. முன்பொரு முறை எங்கள் வாப்பாவின் போடோவையும் நீங்கள் வரைந்து கொடுத்தீர்கள் இல்லையா. அது இப்ப எங்கே கிடக்கு என்று எங்களுக்கே தெரிய வில்லை. அதை எப்படி பாது காத்து வைப்பது என்ற வகையும் எங்களுக்கு அப்ப தெரியல. இப்ப நீங்கள் ரொம்ப பொறுப்போடு தந்தைக்காற்றும் உதவி, திரும்பவும் எழுத வைத்து விட்டது. நன்றி

  இன்ன பிற பின்பு
  அப்துல் காதர்

 5. 13/04/2010 இல் 16:21

  ஆபிதீன், உங்கள் பதிவுகளை உடனே பார்க்க முடியாதவன். சில நேரங்களில் இரண்டு நாள் கழித்துப் பார்ப்பவன். இரவு ரூமிற்கு வந்து பார்க்கும்போது சில நேரங்களில் சங்கடமாகக்கூட இருக்கிறது. என்னப் பொருத்தம் பார்த்தீர்களா நீங்கள் பிறந்தது நான் பிறந்தது உங்கள் வாப்பா இறந்தது எல்லாம் 13. இந்த ராசியான நம்பரை ஒதுக்குகிறார்கள்.

  அப்போதெல்லாம் வாப்பாவுக்குக் கட்டுப்பட்டப் பிள்ளளகளாக இருந்தோம். ஆனால் இன்றோ பிள்ளைகளுக்குக் கட்டுப்பட்ட வாப்பாவாக இருக்கிறோம். ANYWAY கட்டுப்பாடு நம்மை விட்டுப் போகவில்லை.

  ஊரில் மிஸ்கினுக்கு(ஏழைகள்) சாப்பாடு “வாங்கி” வீட்டில் நமக்காக செய்கிறோமே அதையல்ல ‘வாங்கி’க் கொடுக்கனுமாம்? இது என்ன நியாயம்?

 6. 14/04/2010 இல் 05:39

  இன்னும் ‘மூடு’ சரியாகவில்லை. இருந்தாலும் அக்கறையுள்ளவர்களுக்கு கொஞ்சம்:

  ரஃபி, நீர் சொன்னதுபோல் நான் கொடுத்துவைத்தவன்தான். உம்முடைய இளமைக்கால கஷ்டங்கள் கண்ணீர் வரவழைப்பவை. உம்மை என் வாப்பா ரொம்பவும் புகழ்ந்து பேசுவார்கள். ‘நல்ல புள்ளை’ என்றுகூட சொல்வார்கள். ‘உண்மை தெரியவில்லை’ என்று நினைத்துக்கொள்வேன்! நீர் சொன்னதுபோல ஊரிலுள்ள மிஷ்கினுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டு விட்டது. ‘மவுத்தான தினம்தான் என்றில்லை, எப்பப்ப நினைப்பு வருதோ அப்பவுலாம் கொடுக்கலாம்’ என்று நேற்று ஜஃபருல்லா நானா சொன்னார். என் அரபி முதலாளிக்கு வாங்கிக்கொடுக்கலாம் என்றிருக்கிறேன்! ரஃபி, எனக்கு ரொம்பவும் பிடித்தது நுஸ்ரத்தின் கச்சேரிதான். டிவிடி இருக்கிறது. காப்பி செய்து தருகிறேன்.

  இஸ்மாயில், என் வாப்பாவின் தகப்பனார் பெயர்தான் எனக்கு. அதனால்தான் மரியாதையும், பிரியம் கலந்தும் ‘தம்பிவாப்பா’. இப்படிக் கூப்பிடப்படுவதை கிண்டலடித்துக்கொண்டிருந்த காரைக்கால் நண்பர் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தபோது ‘அப்பாமரைக்யான்….’ என்று அவரை அவர் பாட்டியா கட்டியணைத்துக்கொண்டார்கள்!

  காதர், எல்லோரையும் கிண்டல் செய்வது என் சுபாவம். இந்த குணமே என் பெற்றொர்களிடமிருந்து வந்ததுதான். நிறைய பதிவு செய்யலாம்.
  செய்வேன்.

  ஜாஃபர் நானா, பின்னூட்டமிட்டவர்கள் யாரும் – உங்களையும் சேர்த்து – சபராளியின் கஷ்டத்தை குறிப்பிடவில்லை. அவன் மவுத்தாகும்வரை சொந்தங்களுக்கு செய்துகொண்டிருக்க விதிக்கப்பட்டவன். வாப்பா ஊரில் காலூன்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். சொந்தங்களின் சூழ்ச்சியால் தோற்றுப்போனார்கள்.

  நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 7. nagoorumi said,

  14/04/2010 இல் 14:01

  அன்பு ஆபிதீன், நுஸ்ரத்தின் கேஸட்டுகள் பெற காத்திருக்கிறேன்.

  அன்புடன்
  ரஃபி

 8. அனாமதேய said,

  09/01/2019 இல் 21:36

  எல்லோரையும் கிண்டல் செய்வது என் சுபாவம். இந்த குணமே என் பெற்றொர்களிடமிருந்து வந்ததுதான். நிறைய பதிவு செய்யலாம்.
  செய்வேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s