கொடுத்த கடன் – அசோகமித்திரன்

என் அப்பா இறந்த போதுதான் அவர் ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. இதுகூட நேரிடையாகத் தெரியவில்லை. என் அப்பாவும் குறிப்பு ஏதும் எழுதி வைக்கவில்லை. ஆனால் குமாரசுவாமி என்பவர் அப்பாவிடம் எண்ணூறு ரூபாய் வாங்கியிருந்தார் என்று அம்மாவுக்குத் தெரியும். நான் குமாரசுவாமியைத் தேடிப்போனேன். அவர் ஐதராபாத்தின் அன்றைய விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். “நீ எப்படி வந்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“சைக்கிளில் வந்தேன்.”

“அப்பா செத்துப் போய்விட்டார் என்று தெரிந்து மிகவும் வருத்தமாயிருந்தது. நான் இந்த வாரம் வரலாமென்று இருந்தேன்.”

“நீங்கள் அப்பாவிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களாம்.”

“ஆமாம். ஆனால் திருப்பிக் கொடுத்து விட்டேனே!”

“எண்ணூறு ரூபாயையுமா?”

“ஆமாம். நான் கணக்கு வைத்திருக்கிறேன்.”

குமாரசுவாமி உள்ளே போய் ஒரு டைரி கொண்டு வந்தார். அதில் கடைசியில் ஒரு பக்கத்தில் என் அப்பா பெயர் எழுதி வரிசையாகத் தேதி போட்டுப் பணம் குறித்திருந்தார்.

“நான் பாக்கி இல்லை. ஆரோக்கியசாமிதான் இன்னும் தர வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.”

“யார் அது அரோக்கியசாமி?”

“எனக்குத் தெரியாது. உங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே இருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

என் அம்மா நம்பவில்லை. நான் கணக்கைப் பார்த்ததாகச் சொன்னேன்.

“அது அப்பா எழுதினதா?”

“இல்லை. அது குமாரசுவாமி டைரி.”

குமாரசுவாமி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் துக்கம் விசாரித்தார். வேறு வீடு பார்த்துத் தருவதாகச் சொன்னார். அதையும் அவர் திறம்பட அவருடைய நண்பர் மூலம் பூர்த்தி செய்தார். புத்தம் புது வீடு. முதல் மழைக்கு ஒழுகினாலும் உடனே சரி செய்யப்பட்டது. கிணற்றில் நன்கு இனிக்கும் தண்ணீர்.

ஆரோக்கியசாமி யார்? அம்மாவுக்கும் தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வருவார். அவரை அம்மாவுக்குப் பிடிக்காது. அவர் வந்தால் ஒரு வேளையாயாவது சாப்பிடாமல் போகமாட்டார். அம்மா ‘சனீசுவரன் வந்துடுத்து, சனீசுவரன் வந்துடுத்து’ என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்பா செத்தது தெரியாமல் அவர் ஒருநாள் வந்தபோது அவருக்கு நம்ப முடியவில்லை. “அவருக்கு இப்போ சாவில்லையே!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

“உங்களுக்கு பணம் ஏதாவது கொடுத்திருந்தாரா?”

“இல்லையேம்மா, அவர்தான் எங்கிட்டே அப்பப்போ பத்து, இருபது வாங்கிப்பார். கொடுத்துடுவார். இன்னியத் தேதிக்கு நானும் அவருக்குத் தர வேண்டாம். அவரும் எனக்குத் தர வேண்டாம்.”

“யார்யாருக்கு கொடுத்திருக்கிறாரோ?”

“ஆமாம்மா…. அவர் மோதிரத்தைக் கொடுத்து ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். அவன் வீட்டு முன்னாலே போலீஸ் கத்திண்டிருந்தது.”

“யார் அரோக்கியசாமி?”

“உங்களுக்குத் தெரியாது. அவர் ஒருத்தர்தான் இந்த ஊரிலே நம்ப பாஷை பேசி, நகை பண்ணுவார்.”

“ஆச்சாரியா?”

“ஆமாம். ஆனால் கிறிஸ்துவர்.”

“இப்படிப் பணம் கொடுத்ததை ஏன் எங்கிட்டே சொல்லலே?”

ஜோசியர் பதில் கூறவில்லை. ஆனால் சிறிது பொறுத்து அவர் பேசினார். “உங்க வீட்டுக்காரர் உபகாரி. எல்லாம் சின்னச் சின்ன தொகைதான். மோதிரம் ஒண்ணரைப் பவுன் போல. அதை உடனே அடகு வைச்சு அரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். மோதிரத்தை அவரா மீட்டுட்டார். ஆனா ஆரோக்கியசாமி பணம் அப்படியே நிக்கறது.”

ஜோசியர் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “நான் ஆரோக்கியசாமியை உங்களை வந்துப் பார்க்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

“நாம எப்போ காலி பண்ணணும்?”

“சனிக்கிழமை வண்டிக்குச் சொல்லியிருக்கு” நான் சொன்னேன்.

“அதுக்குள்ளே ஆரோக்கியசாமி வந்தாத் தேவலை.”

“அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். “அம்மா, நான்தான் ஆரோக்கியசாமி” என்றார்.

“நீங்க அவருக்குப் பணம் தரணுமாமே?”

“அம்பது ரூபாய் தரணும்.”

“இப்போ கொண்டு வந்திருக்கீங்களா?”

“இல்லேம்மா. இரண்டு ஜோடி வளையல் செய்து முடிக்கணும். அதைச் செஞ்சா கூலி கிடைக்கும். உடனே கொடுத்துடுவேன்.”

“எப்ப முடியும்?”

“எப்படியும் பதினைஞ்சு நாளாகும்.”

“நாங்க வீட்டைக் காலி பண்ணிடுவோமே!”

“அதனாலே என்னமா! நான் கொண்டுவந்து கொடுத்துடறேன்.”

ஆரோக்கியசாமி மிகவும் உறுதியாகப் பேசினார். அவர் பணம் தர வேண்டுமென்று ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.

நாங்கள் வேறு வீடு போய் ஒரு மாதமாயிற்று. ஆரோக்கியசாமி வரவில்லை. ஜோசியர் மட்டும் இடம் விசாரித்துக் கொண்டு வந்தார். சிறிது அத்வானமான இடம்தான். இருந்த சாதத்தை  அவருக்கு இலையில் போட்டு இருந்த மோரை அவருக்கு அம்மா ஊற்றினார்.

நாங்கள் வீடு மாறின போதே குமாரசுவாமி சொன்னார்: “நான் வாரம் பத்து நாளைக்கு ஒரு முறை வந்து விசாரிக்கிறேன். இங்கே வீட்டுக்கு யாராவது வந்து போகிற மாதிரிதான் நல்லது. மனிதர்கள் யாருமில்லை என்பது போலத் தோன்றிவிட்டால் அவ்வளவு பத்திரம் இல்லை.”

குமாரசுவாமிக்கு சைக்கிள் உண்டு. அவர் எங்கள் புது ஜாகைக்கு வர ஒரு கால்மணி நேரம் சைக்கிளை மிதிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஜோசியருக்கு சைக்கிள் விடத் தெரியாது. பஸ்ஸில் வந்து போக ஆறணாவாவது ஆகும். மேலும் ஜோதிட நுணுக்கங்களை அப்பாவிடம் விவாதிக்கலாம். அப்பா இல்லாத போது அவர் ஏன் வர வேண்டும்? அவரும் அப்போதைக்கு அப்போது கிடைக்கும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும்.

ஆரோக்கியசாமியிடம் சொல்வதாக வாக்களித்து விட்டு ஜோசியர் போய் விட்டார். ஆரோக்கியசாமி வரவில்லை.

நாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆரோக்கியசாமி வரவில்லை. நான் ஒரு விடுமுறை நாளன்று சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். நாங்கள் முன்பு இருந்த தெருவிலேயே ஒரு வீட்டின் பின்பகுதியில் அவர் இடம் என்று விசாரித்துக் கொண்டு போனேன். வீடு பூட்டியிருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை அவர் கோயிலுக்குப் போயிருக்கலாமல்லவா?

“ஏண்டா, யாரையாவது விசாரிக்கக்கூடாதா?”

“விசாரிச்சுண்டுதாம்மா…. அவர் வீட்டுக்குப் போனேன்…”

அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இரு நாட்கள் கழித்து அதிகாலையிலேயே கிளம்பி ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். இந்த முறை முன் வீட்டுக்காரரிடம் ஆரோக்கியசாமி வீடு பூட்டியே இருப்பது பற்றிக் கேட்டேன்.

“நீ சின்னப் பையன் இதெல்லாம் வேண்டாம்.”

“அவர் எங்க அப்பாகிட்டேந்து பணம் வாங்கியிருக்கார். எங்க அப்பா செத்துப்போயிட்டார்.”

“உங்க பணம் வராது.”

“ஏன்?”

“அந்த மனுஷன் இருந்த தங்கத்தை எல்லாம் சுருட்டிண்டு எங்கேயோ போயிட்டான்.”

“அவர் வீட்டிலே வேறே யாரும் இல்லையா?”

“எல்லாம் உண்டு. அவன் இன்னொரு அம்மாளை இழுத்துண்டு எங்கேயோ ஓடிப் போயிட்டானாம். அவன் வீட்டிலே ஒண்ணுமே இல்லை. இருந்த ஒண்ணு இரண்டு பாத்திரத்தையும் அவனுடைய சம்சாரம் தூக்கிண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இங்கே வாடகை நாலு மாசமா நிக்கறது.”

அவர் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். அவர்தான் வீட்டுக்காரராக இருக்க வேண்டும்.

என் அம்மா கடுமையான சாபங்களை எங்கேயிருக்கிறார் என்று தெரியாத ஆரோக்கியசாமி மீது வீசினார். ஆரோக்கியசாமி அப்பாவுடைய அன்புக்குப் பாத்திரமாக இருந்திருக்க வேண்டும். இல்லாது போனால் கையில் பணமில்லாத போது கை மோதிரத்தை அடகுவைத்து அப்பா பணம் கொடுத்திருப்பாரா?

நாட்கள் போகப் போக எல்லாமே மறந்து போய் விட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குச் சரியான எண்ணோ, அங்கே தெரு ஒன்றும் முறையான பெயர் கொண்டும் இல்லாததால் ‘துர்க்காபாய் வீட்டருகில்’ என்று தபால்காரரே சொல்லி அதைத்தான் எங்கள் முகவரியாக வைத்துக் கொண்டிருந்தோம். துர்காபாய் என்பது ஒரு பெரிய ஜமீந்தாரிணி.

எங்கள் வீட்டுக்கு ஐந்தாறு மைல் தூரத்தில் ஒரு ஜமீந்தாரின் வயலில் ஆளுயரப் புல்வகை ஒன்று வளர்த்து வந்தார்கள். மிகவும் திட்டமாக அறுத்து இருபது கட்டுகள் கட்டி வைத்திருப்பார்கள். சரியான நேரத்துக்குப் போனால் ஒரு கட்டு வாங்கிவரலாம். கட்டு அரைரூபாய்.

நான் அன்று காத்திருந்து அந்தப் புல்கட்டை வாங்கி சைக்கிள் பின்னால் கட்டி வந்தேன். வீட்டுக்கு வந்தவுடனேயே அம்மா, “உன்னைத் தபாலாபீசுல கூப்பிட்டாளாம். உடனே போ.” என்றார்.

அது ஒரு மைல் தள்ளியுள்ள இடம். நான் அங்கு போவதற்குள் இரண்டு மணியாகிவிட்டது. எங்கள் தபால்காரனைக் காணோம்.

நான் காத்திருந்தேன். மூன்று மணிக்கு அவர் வந்தார். “உங்கப்பா பேருக்கு மணியாடர் வந்திருக்கு. நீ அப்பா செத்துட்டார்னியே” என்றார்.

“என்னது?”

அந்த மனிதன் மணியார்டரைக் காட்டினார். அதில் என் அப்பா பெயர் எழுதி, முன்னால் மிஸஸ் என்றிருந்தது. நான் காண்பித்தேன்.

தபால்காரர் மிகவும் வருந்தினார். என்னைத் தமிழில் கையெழுத்திடச் சொன்னார். அறுபது ரூபாய் கொடுத்து ஒரு சிறு சீட்டை அந்தப் படிவத்திலிருந்து கிழித்துக் கொடுத்தார். நான் பணத்தையும் அந்தச் சீட்டையும் வீட்டுக்கு எடுத்து வந்தேன். அந்தச் சீட்டை வைத்துக் கொண்டு, அது என்னதென்று புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

ஒரு மூலையில் ‘ஆ’ என்று எழுத்து தெரிந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் புரிய ஆரம்பித்தது. அது நாக்பூரிலிருந்து வந்திருந்தது. பணத்தை அனுப்பியவர் ஆரோக்கியசாமி.

அவருக்கு எப்படி எங்கள் முகவரி கிடைத்தது என்று எனக்கு இன்னும் தெரியாது. பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே என்றும் தோன்றியது.

***

நன்றி: அசோகமித்திரன், விஜயபாரதம் (தீபாவளி மலர், 2010)

*

அசோகமித்திரன்: மேலும் சில குறிப்புகள் – தாஜ்

திரு. அசோகமித்திரன் என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் ரொம்ப இஷ்டம். அவரது சிறுகதைகளும், நாவல்களும் எங்களை அப்படியோர் ஈர்ப்பிற்கு இலக்காக்கியிருக்கிறது. அவர் எழுத்தின் மீது எனக்காவது கடுகத்தனை விமர்சனம் உண்டு. ஆபிதீனுக்கு அதுவும் கிடையாது. அவருக்கு, அவர் great! அவ்வளவுதான்.

இணையத்தில் மட்டுமே இலக்கியம் தேடும் வாசகர்கள், அனேகமாக இந்தக் கதையினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் வந்த இந்தக் கதையை எவர் ஒருவரும் பதிவேற்றாவிட்டாலும், இணையத்தில் தெரியத் தொடங்கிவிடுகிற காலமாக இருக்கிறது! இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை! கம்யூட்டரை முன்வைத்து காலம் நம்மைப்பார்த்து பரிகசிக்கத் துவங்கிவிட்டது.

அசோகமித்திரனின் சிறுகதை யுக்தி, இலக்கிய மூர்த்திகள் பலரை மலைக்கவைப்பது. ஆனால், புதிதாகத் அவரது கதைகளைத் தேடும் வாசகர்களுக்கு அது எடுபடாது. ஏழாவது படிக்கும் மாணவன், ஆர்வக்கோளாறால் எழுத முயன்றதாகவே தெரியும்! அவரது நடை உப்புசப்பற்று படும். இளம் வாசகர்கள், அவரது கதை சார்ந்த நுட்பத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ள ஜீவிதமான வாசிப்புகளோடு பல படிகளையும் தாண்டி வரவேண்டும்.

ஊசியில் நூல் கோர்ப்பது போல் அசோகமித்திரன் எழுதும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏழாவது படிக்கும் மாணவனின் ஏனோதானோ அல்ல. வித்தகம் அது. அலங்காரமற்ற, தாண்டிக்குதிக்காத அவரது நடை ஆழ்ந்த யோசனைகளுக்குரியது. இந்தக் கதையிலும் அவர் ஊசியில் நூல் கோர்த்திருக்கிறார். அந்த இலக்கிய வித்தைகளை, நீங்கள் கதையை படிக்கும் போது அறியமுடியும். என்றாலும், சூட்சுமம் கொண்டு அவர் புதைத்திருக்கும் தகவல்களை அத்தனை சீக்கிரம் கதையில் கண்டறிந்துவிட இயலாது. கொஞ்சத்திற்கு இடறும்; ஆனாலும் முடியும். முயன்றால் எந்த கதவும் திறக்கும். எட்டாத கனி உண்டா உலகில்?

*

1. அசோகமித்திரனின் எத்தனையோ சிறுகதைகளில் காணும் அவரது இளமைக்கால ஹைதராபாத்தும் அதன் புறச்சூழல்களும் இதிலும் காட்சியாகிறது. தட்டாது அவரது இளமைக் காலமும் பேசப்படுகிறது.

2. அரைரூபாய்க்கும் ஆறணாவுக்கும் மதிப்பிருந்த காலம் குறித்து மீண்டும் இதில் வியக்க சொல்லப்படுகிறது!

3. குடும்பத் தலைவன் இறந்து போன தருணங்கள் என்பது அவரது மனைவியும், பிள்ளைகளும் சஞ்சலம் கொள்ளவேண்டிய நேரம். ஆனால், அவரது குடும்பம் பணத்தை முன் நிறுத்தி, பரிதவிப்பு கொள்கிறது. குடும்பத் தலைவனின் இறப்பு இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சமாக போகிறது இங்கே! அந்த அளவிற்கு  குடும்ப வறுமை பேசப்படுகிறது.

4. சக மனிதர்களின் ஏமாற்றும் புரட்டும் மட்டுமல்ல, வியக்கவைக்கும் மனித நேர்மையும் இந்தக் கதையில் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது.

5. ஜோசியம் மறைமுக கேலிக்கு உள்ளாகிறது.

– இந்தக் கதையின் ஓட்டத்தில் காணும் இத்தனையையும் தடங்கள் இல்லாமல் சராசரி வாசகர்கள் பின்தொடர்ந்து விட முடியும். சூட்சுமக் கட்டுக்குள் இருக்கிற செய்திகளுத்தான்  கொஞ்சம் முயலவேண்டும். அதனையும் கண்டறிந்தால்தான், இந்தக் கதையினை முழுமையாக நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாக ஆகும்!

*

பையனின் அப்பா, இறப்பதற்கு முன்னால் குமாரசுவாமிக்கும் ஆரோக்கியசாமிக்கும் கடன் கொடுத்திருக்கிறார். குமாரசுவாமி இந்து; ஆரோக்கியசாமி கிருஸ்துவர். குமாரசுவாமி கடன் பெற்றதாக அறியப்படுத்தப்படுவது பெரிய தொகை! ஆரோக்கியசாமி பெற்ற கடனோ சிறிய தொகை. கதைவழியே குமாரசுவாமி, ஏர்போர்ட்டில் வேலை. பெரிய வேலையில் அவர் இருந்தாலும், பெற்ற கடனை ஏமாற்றிவிடுவதாகவே உணர்த்தப்படுகிறது ஆரோக்கியசாமி, நடத்தையில் பிசகானவனாக இருந்தாலும் வாங்கியப் பணத்தை காலம் கடந்தேனும் திருப்பித் தந்துவிடுகிறார்!

கதையோட்டத்தில் குமாரசுவாமியை குறிப்பிடும் போதெல்லாம் ‘சுவாமி’ ‘சுவாமி’ என்று உயர்வு பொங்க குறிப்பிடுவதையும், ஆரோக்கியசாமியை கதை முழுமைக்கும் ‘சாமி’ ‘சாமி’ என்று  உயர்ச்சி அற்று விளிப்பதையும் நாம் கவனமேற்பது சரியாக இருக்கும்.

இந்தக் கதையில் இன்னொரு சூட்சும சங்கதியாய் ஜோசியரும் குமாரசுவாமியும் முன் நிறுத்தப்படுகிறார்கள்! அவர்களைக் கொண்டு பையனின் அம்மா கேள்விகுறியாக்கப்படுவதாகவே தோன்றுகிறது. கவன வாசிப்பு கொள்ளும் வாசகர்கள் அதனைக் கண்டறிந்து சொன்னால் தேவலாம். பெண்பித்தனாகப் பேசப்படும் ஆரோக்கியசாமி, ‘பையனின் அம்மா கேள்விக்குறி ஆக்கப்படும்’ வட்டத்திற்குள் வராததையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த படைப்பாளியின் எந்தவொரு படைப்பும், இதனால்தான் மதிப்பு கொள்கிறது. நிஜங்கள் எத்தனைக்கு சுட்டாலும் அதை அவர்கள் மறைப்பது இல்லை. சில நேரங்களில் அவர்களின் பேனா, அவர்களையும் மீறி நிஜங்களை கவனமாய் பதிவுக்குள் பொதித்துவிடும்! பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது! (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன! – ஆபிதீன்)

*

1999-ம் ஆண்டுவாக்கில் ‘இந்தியா டுடே’ இதழில் அசோகமித்திரன் எழுதிய கதையொன்று என்னை மிகவும் கவந்தது. அந்தக் கதை, அவரது ஏராளமான கதைகளைப் போன்று ஹைதராபாத்தை களமாக கொண்டு, அவரது இளமைப் பருவத்தை பேசுகிற கதைதான்! என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது! மொகலாயச் சக்கரவர்த்தியான அக்பரது சபையில், இசை வித்தகராக விளங்கிய ‘தான்சேன்’ பற்றிய இந்தி சினிமா காண, சின்ன வயசு அசோகமித்திரனும் அவரது தமக்கையும் தியேட்டருக்கு சென்று காணுவதும், அந்த சினிமாவையொட்டிய பிற நிகழ்வுகளுமான கதை அது.

அதைப் படித்த சில மாதங்களில் சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து அசோகமித்திரனை சந்தித்தேன். ஓடிச் சென்று அவரது கரத்தை இறுக்கமாகப் பற்றி கொண்டேன். நான் இத்தனை அழுத்தமாக கரத்தைப் பற்றுவதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்த எனக்கும் உடனே காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அவரது கரத்தை அப்படி அழுத்தி இறுகப் பிடித்ததிருந்ததில் நிச்சயம் அவருக்கு வலியெடுத்திருக்கும். இன்னும் சற்று அழுத்தமாக பிடித்திருந்தால், அவரது கரமேகூட முறிவு கண்டிருக்கும்! அத்தனைக்கு ஒல்லியில்தான் இருந்தது அவரது கரமும்!

‘இந்தியா டுடே’ இதழில் நான் வாசித்துத் திளைத்த, அவரது கதையின் பெயரை ஒருவழியாக கூறி, சகஜத்திற்கு வந்து, பேசி முறையான சந்தோஷத்தை திரும்பவும் வெளிப்படுத்தினேன். அவர் திகைத்து நின்றார்! அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெளிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு! அதை வாசித்து முடித்த நாழியில் சிலிர்த்தேன்!

*

‘சக்கரவர்த்தி’ என்கிற அழகியசிங்கர் என் நண்பர். ‘நவீன விருட்சம்’ என்கிற சிற்றிதழின் ஆசிரியரும் கூட. அவர், தனது சிறுகதைகளை அசோகமித்திரனின் பாணியில் எழுதுவதாக நினைத்து எழுதிக் கொண்டிருப்பவர்! நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம்! அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி!. அசோகமித்திரன் பாணியை இன்னும் அவர் விடுவதாக இல்லை. அப்படித்தான் எழுதிக் கொண்டு வருகிறார். சரியாகச் சொன்னால், அவர் அந்தப் பாணியினை விடவேண்டிய அவசியமும் இல்லை. அசோகமித்திரன் மாதிரி எழுதுவதாக, அவர்நினைத்துக் கொண்டு எழுதினால் ஆயிற்றா?

எனக்கும் அசோகமித்திரன் பாணியில் ஒன்றை எழுதிப்பார்க்கணும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அவரது படைப்பின் மந்திரம் பிடிபடுவதே இல்லை. இத்தனைக் காலம் அவரைப் படித்து என்ன செய்ய? நொந்தபடி, மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார்! நேரில் சந்தித்த போதும் என்னைப் பாராட்டினார்! அந்தக் கதையை நன்றாக எழுதியிருப்பதாக நான் நினைத்தது போக, அழகிய சிங்கரின் பாரட்டுதலுக்குப் பிறகு குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.

*

திரு. அசோகமித்திரனைப் பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே போகலாம். ‘கணையாழி’ ஆசிரியராக இருந்து அவர் சாதித்த சாதனைகளை, பல இளம் எழுத்தாளர்களை அதன் வழியே ஆசீர்வதித்ததை, நவ கவிதைகளை பெண் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து பரவலாக்கியதை சொல்லிக் கொண்டே போகலாம். தவிர, கீர்த்திக் கொண்ட ஆங்கில எழுத்தாளர்களை / அவர்களது ஆக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு எத்திவைத்ததையும் சொல்லி வியக்கலாம். எளிமையான மனிதர். கோலமும் அப்படிதான்! ஒத்துழைக்கும் உடம்பு வேறு!

*

‘விஜயபாரதம்’ என்கிற இதழில் இந்தக் கதை வெளிவந்தது. அந்த இதழின் சென்ற தீபாவளி மலரில் விசேசமாக பிரசுரித்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். சார்ந்த… பாரதிய ஜனதா சார்ந்த… இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனா சார்ந்த… இந்துத்துவா புகழ்பாடும் இதழ் அது! இருந்தும்… என்ன செய்ய? அதன் ஆசிரியர் கவனம், போதாததாக இருக்கிறது! ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார்! அவரது, மேலிடப் பார்வையில், இந்திய சிறுபான்மையினர்களில் நேர்மை கொண்டவர்களும் உண்டா என்ன?

சீனாவரை போய் கல்வி கற்கச் சொன்ன ஓர் மதத்தின் வழி வந்த மக்களாகிய நாம், ‘விஜயபாரதம்’ வரை போய் பார்க்கலாம். தப்பில்லை! அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி! தவிர, நம்ம மணவாடு விஞ்ஞான மேதை, அணுகுண்டு வித்தகர், ஜனாப் அப்துல் கலாம் பாய், சூஃபி மனம் பெற்றவராக பாரத ரிஷிகளையும், மஹான்களையும் வியந்து வியாக்கியானம் செய்பவராக, அதனைக் குறித்து எழுதுபவராக விஜயபாரத திண்ணையில்தான் ஜாகை!

விஜபாரதத்திற்கு சந்தா செலுத்த எண்ணம் கொள்பவர்கள் என்னை அணுகலாம். ஆண்டு சந்தா (மலர் உட்பட) 250 ரூபாய். இரண்டாண்டு சந்தா (மலர் உட்பட) 475 ரூபாய். ஐந்தாண்டு சந்தா (மலர் உட்பட) 1000 ரூபாய். கமிஷன் தனி!

தாஜ் | satajdeen@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. 04/01/2011 இல் 18:49

  தாஜ், ஒரு பிரபல எழுத்தாளர்/பிரசுரத்தார் எழுதிய புத்தகத்தைப் பார்த்தால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றிருக்கும். அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கும் தெரியாது படிக்கும் வாசகருக்கும் தெரியாது. அது அவருடைய பாணி.

  அதே பாணியை நீங்க கொஞ்சம் மாத்தி செய்றீங்க, மத்தவங்களை பூஜை செய்றீங்களே ஒழிய உங்க பூஜையெக் காணோம். இன்னும் தொண்டனா இருக்காதீங்க தலைவனாவுங்க. ஒங்க POTENTIALITY ஐ வெளியே கொண்டுவாங்க.

 2. 04/01/2011 இல் 23:35

  அசோகமித்ரனின் இலக்கிய கொளகை எனக்கு மிகவும் உவப்பானது.

  ஆரோக்கியமான இலக்கியம் எது? என்பதை பற்றிய அசோகமித்ரனின் கருத்து இது : மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டு பண்ணக் கூடாது. மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது.மனிதனைப் பற்றி மேலும் அறியத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.வாழ்க்கையில் நம்பிக்கையும், தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். (பக்கம் 164 என் பயணம் என்ற நூலில் அசோகமித்ரன்)

  அசோகமிதரன் என்ற அற்புத எழுத்தாளர் சொன்ன படியே எழுதியிருக்கிறார்.

  நன்றி தாஜ், அபிதீன் நானா

 3. 05/01/2011 இல் 14:28

  நடையோ எளிமை; பொதிந்திருப்பதோ ஏராளம்.
  இது மாதிரிக் கதைகள், கவிதைகள் எனக்கு உயிர்.

  100 கிலோ பொதி தலைமேல் இருந்தாலும், அதை அனாயாசமாய் ஏதோ ஒரு குல்லா வைத்திருப்பது மாதிரி உணர்ந்தால் எப்படி இருக்கும்??

 4. abuhaashima said,

  29/06/2013 இல் 18:57

  அசோகமித்திரன் கதைகள் நானும் வாசித்திருக்கிறேன். தமிழில் பாவனை செய்யாத நல்ல கதாசிரியர்.தாஜ் நானா சொன்னதுபோல் கதையின் உள்ளே பல கதைகள் ஒளிந்து கிடக்கின்றன. அசோகமித்திரனே அவற்றை சாடை மாடையாக சொல்லியிருக்கும்போது நாம் விலாவாரியாக ஆராய வேண்டியதில்லை. இதுபோன்ற கதைகளில் தொலைந்து போன வாழ்கையை காண முடிகிறது. நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s