மவுலானா ரூமி (ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை, “ரகசிய ரோஜா” என்ற பெயரில் பேரா. ரமீஸ் பிலாலி தமிழில் தந்திருப்பதாக சகோதரர் நூருல்அமீனின் வலைப்பதிவிலிருந்து அறிந்தேன். ஆசை வந்துவிட்டது, ஆசை பற்றி எழுத!
உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துவருகிறார் கவிஞர் ‘ஆசை’. ருபாய் என்பதன் பன்மை ருபாயியாத் (நமக்கு ரூபாய்தான் தெரியும்! – தாஜ்). ‘தமிழில் வெண்பா, விருத்தம், சிந்து என்று இருப்பதுபோல ருபாயும் பாரஸீகப் பாவினங்களுள் ஒன்று. பல பாரஸீகக் கவிஞர்களும், உர்து கவிஞர்களும் ருபாயியாத்துப் பாடியிருக்கின்றனர். நாலடிகளான ருபாயில் முதல் இரண்டடிகளினுடையவும் கடைசி அடியினுடையவுமான கடை எதுகை ஒன்றுபோல் இணையவேண்டும். மூன்றாம் அடி சாதாரணமாகவும் இருக்கலாம்; மற்ற அடிகளின் கடை எதுகைபோலவும் இருக்கலாம்’ – ஆர்.பி.எம். கனி ( நூல் : பாரஸீகப் பெருங்கவிஞர்கள்).
இந்த ‘ஆசை’க்கு ஒரு ஆசை. இதென்ன ‘மேகத்துக்கு தாகம்’ என்பதுபோல என்கிறீர்களா? நான் என்ன செய்வது, ஆசைத்தம்பி என்கிற அழகான பெயரை ‘ஆசை’ என்று சுருக்கியிருக்கிறார் மனுசன். ஆசையை சுருக்கலாமோ? அரபியும் பார்ஸியும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இப்போது பேராசை வந்துவிட்டது. ஆள் மன்னார்குடிக்காரர் (உமர்கய்யாம் அல்ல!). தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் ‘மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்’ என்று ஆசையோடு என்னைக் கேட்கிறார். அலாதியான பெயர்கள் தாங்கிய அரபி மத்றஸாக்களை பரிந்துரைக்கலாம். ஆனால், சகோதர மதத்தவரை அங்கே சேர்த்துக்கொள்வார்களா? அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று ஹதீஸே இருக்கிறதாம். எண் தெரியவில்லை, ஆனால் நல்ல விஷயங்களை நம் ரசூல் (ஸல்) சொல்லாமலிருந்ததில்லை.
ஒரு கவிதை :
‘நம் தலைவர்கள்
தொண்டர்களுக்கு ‘ரசூல்’ஐ காட்டுகிறார்கள்
தான் மட்டும்
வசூலில் வாழ்கிறார்கள்!’
வேறு யார் , நம் ஜபருல்லா நானா எழுதியதுதான். அது இருக்கட்டும், விஷயத்திற்கு வருகிறேன். ‘ஆசை’யை மதறஸாக்களில் சேர்த்துக் கொள்வார்களோ? சந்தேகம்தான். அரபிமொழியை பாடமாக சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளில் சேரச்சொல்லலாமா?ஆசைக்கோ வயசு அதிகமாயிற்றே… என்ன செய்யலாம்? தெரியவில்லை. விபரமறிந்தவர்கள் ஆசையை தொடர்புகொள்ளுங்கள். ‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ ஆசையின் மின்னஞ்சல் முகவரி : asaidp@gmail.com
உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ மொழிபெயர்ப்பு பற்றி நான் முன்பு எழுதியதை எப்படியோ கண்டுபிடித்து, அந்த நேரடியான மொழிபெயர்ப்பு கிடைக்குமா என்று ஆவலுடன் விசாரித்து , ‘அது கிடைக்க வாய்ப்பில்லையே..’ என்று நான் சொன்னதும் ‘எவ்வளவு பெரிய இழப்பு!’ என்று ஆசை அதிர்ந்தது என்னையும் அதிரவைத்துவிட்டது. நண்பர் நாகூர்ரூமியை தொடர்புகொள்ளச் சொன்னேன். ”உங்களுக்குத் தெரிந்த விபரங்கள்கூட எனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை!’ என்று சொல்லிவிட்டாராம் பேராசிரியர்.
எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம்!
ஒரு விஷயம், தஞ்சை பெரியகோயில் சம்பந்தமான நண்பர் ஜாகீர்ராஜாவின் கட்டுரையில் (நன்றி : கீற்று) ஒரு பறவையைப் பற்றி இப்படி வருகிறது : ‘பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது’
இஸ்லாமிய இலக்கியங்கள் அத்தனையும் பெற்று நாம் பரவசப்பட இன்னொரு பறவை வரவேண்டும்! எங்கே இருக்கிறாய் சிட்டே?
‘தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்
அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல’ – ஆசை
**
கவிஞர் ‘ஆசை’யின் மின்மடல்களிலிருந்து…
அன்புள்ள ஆபிதீன் அவர்களுக்கு,
வணக்கம். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். என் பெயர் ஆசை (ஆசைத்தம்பி). ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற எனது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றன. நான் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பில் (2008) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என்னுடைய பேராசிரியருடன் சேர்ந்து நான் உமர்கய்யாமின் ருபயியத்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துவருகிறேன் . இந்த மொழிபெயர்ப்பு க்ரியா வெளியீடாக வரவுள்ளது. ருபாயியத் குறித்து இணையத்தில் தமிழில் தேடிப்பார்த்தபோது உங்களுடைய வலைப்பூவையும் காண நேரிட்டது. அதில் உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள் என்ற குறிப்பைக் கண்டேன். இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது. பாரசீக மொழியிலிருந்து தமிழில் ருபாயியத்தை யாரும் மொழிபெயர்க்கவில்லை என்றே நான் எண்ணியிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்ற தகவலை நீங்கள் தெரிவித்தால் எனக்கு இந்த மொழிபெயர்ப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். பாரசீக மொழி எனக்குத் தெரியாவிட்டாலும் மூலத்துக்கு அருகில் இந்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்ற பேராசையில் நம்பகமான ஆறேழு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டே இந்த மொழிபெயர்ப்பை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் தமிழில் வந்துள்ள மொழிபெயர்ப்புகளை குறித்த தகவல்களையோ அல்லது இந்தத் தகவல்கள் யாரிடம் கிடைக்கும் என்ற தகவலையோ நீங்கள் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.கூடவே, பாரசீகமும் தமிழும் இலக்கியமும் நன்றாகத் தெரிந்த யாராவது ஒருவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…
அதுமட்டுமல்லாமல் எனக்கு அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தாலும் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்.
அன்புடன்
*
ஆசைக்கு உதவுங்கள் தயவுசெய்து , வேறு மாவட்டக்காரர்களாக இருந்தாலும் . ஆள் ஓடிவந்துவிடுவார். (சேர்ந்ததும் ஓடிவிடுவார், அதுவேறு!) – ஆபிதீன்
***
மேலும் பார்க்க :
நானும் என் கொண்டலாத்தியும் – ஆசை |
கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் – ஆசை
விசிறிக்கொண்டை ஒய்யாரி – ஆபிதீன் பக்கங்கள்
உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் – அப்துல் கய்யூம்
**
ஒ.நூருல் அமீன் said,
28/12/2010 இல் 13:29
ஆசையின் ஆசை கனவாய் போய்விடாமல் நனவாக இறைவனை இறைஞ்சுகின்றேன்.
அறபாத் said,
28/12/2010 இல் 13:49
ஆசையின் கொண்டலாத்தியை கையில் வைத்துக்கொண்டு நாங்கள் பட்டபாடு.என் குரு நாதரைத்தான் சொல்கிறேன் (எஸ்எல்எம்.ஹனீபா) அந்தத்தொகுதியைப்படித்தபிறகு என் அயல் கிராமத்தில் ஒரு மஞ்சக்குருவி இருக்கிறதென்று இந்த வயதிலும் மனுசன் கமெராவுடன் பயணித்து படம் எடுத்து குறிப்பும் எடுத்து வைத்திருக்கின்றார். அது ஆப்தீன் பக்கங்களில் விரைவில் வந்து சேரும். அல்லது அவர் எழுத மறந்த நாவலைப்போல்….
ஆசைக்கு அறபு படிக்க உர்து படிக்க ஆசையா மகிழ்ச்சி. எங்கள் தேசத்தில் கல்லூரிகளும் தனியார் நிறுவனங்களும் உண்டு. அறபு மொழியை படித்துத்தர. இங்கு அரசாங்க பாடவிதானத்தில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி. பல்கலைக்கழகத்திலும் அறபுபீடம் தனியே உண்டு. ஆசை ஆசையாய் வந்தால் ஒரிடத்தில் சேர்த்துவிடலாம்..
அறபாத்.
ஆபிதீன் said,
28/12/2010 இல் 13:53
அமீன்பாய், உங்களின் ‘துஆ’ நிச்சயம் பலிக்கும். அறபாத், அந்த அறபுபீடத்தில் ‘ஜின்’ ஏதும் இல்லைதானே?!
அறபாத் said,
31/12/2010 இல் 19:42
ஜின் இல்லாத ஒர் அறபு பீடத்தை முடிந்தால் காட்டுங்கள் காக்கா. எனது மகனையும் அறபு படிக்க விட ஆசை. காக்க காக்க ஜின்னிலிருந்து ஆசையையும் காக்க..
அறபாத்
மஜீத் said,
28/12/2010 இல் 15:37
சேத்துவிடுறதுக்கு முன்னாடி நல்லா விசாரிச்சுக்குங்க நானா! யாராவது தப்பா புரிஞ்சுக்கிட்டு, நைஸா உள்ள கூட்டிட்டுப் போய், ‘மாலி’ யை வரச்சொல்லி தகவல் அனுப்பப் போறாங்க . சூதானமா இருக்கணும்.
ஆபிதீன் said,
28/12/2010 இல் 15:44
‘மாலி’ பரவாயில்லை, ‘சூலி’யாகாமல் இருக்கனும்! தவிர, ஆசையின் ஆசை அரபுமொழி மட்டுமல்ல. ஃபார்ஸியும்தான். ஷார்ஜாவுக்கு வரச்சொல்லவா?
ஆபிதீன் said,
29/12/2010 இல் 09:44
நேற்றிரவு வந்த ‘ஆசை’யின் மெயில் (அவதூறு வழக்குடன்!) :
அன்புள்ள ஆபிதீன் அவர்களுக்கு,
எப்படி இருக்கிறீர்கள்? இன்று மதியம் ருபாயியத் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அச்சுக்கு அனுப்பிய பின் எனது மின்னஞ்சலைப் பார்த்தால் உங்களிடமிருந்து ஒரு செய்தி, ருபாயியத்தைப் பற்றி.
பரவாயில்லை கிடைக்கும் எந்தத் தகவலும் அடுத்த பதிப்புக்குப் பயன்படும் (அடுத்த பதிப்பையாவது பாரசீகத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க வேண்டும் என்பது எனது பேராசை.) உங்கள் வலைப்பூவில் அமர்க்களப்படுத்திவிட்டீர்கள், எனக்கே கொஞ்சம் சங்கோஜமாக இருக்கிறது. ரொம்பவும் நன்றி.
ருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய தேடலில் பல விஷயங்கள் தெரியவந்தன. தமிழில் குறைந்தபட்சம் 15 ருபாயியத் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன (எங்களுடைய மொழிபெயர்ப்பையும் சேர்த்தால் 16 , தொலைந்துபோயிருக்கக்கூடும் என்று நீங்கள் கருதும் அந்த மொழிபெயர்ப்பையும் சேர்த்தால் 17). ஆனால் நாங்கள் கண்ணால் கண்டு உறுதிசெய்துகொண்ட எட்டு மொழிபெயர்ப்புகளைப் பற்றிய விவரங்களை மட்டுமே கொடுத்திருக்கிறோம். அதே வேளையில் மற்ற மொழிபெயர்ப்புகளைப் பற்றிய தேடலையும் பதிவு செய்திருக்கிறோம்.அப்படிப் பதிவு செய்த பகுதியில் ‘நாகூர் மண்வாசனை’ வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த தகவலையும் நெய்னா அவர்களின் மொழிபெயர்ப்பைப் பற்றி நமக்குள் நிகழ்ந்த மின்னஞ்சல் பரிமாற்றத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆமாம், ‘மாலி’, ‘சூலி’ என்றால் என்ன?
உங்கள் மீது அவதூறு வழக்கு போடலாம் என்று இருக்கிறேன். ‘ஆசைக்கோ வயசு அதிகமாயிற்றே…’ என்று எழுதியிருக்கிறீர்கள். எனக்கு வருங்கால மனைவியாகவோ காதலியாகவோ வரப்போகிறவர்கள் இதைப் படித்தால் என்ன நினைப்பார்கள்! எனக்கு நிஜ வயது 31, மனதுக்குள் 10. என் பாப்பாவை (அம்மாவை) பொறுத்தவரை எனக்கு வயது 3. எனக்கு மட்டும் பெரிய மீசை இருந்திருந்தால் நீங்கள் திட்டமிட்டு செய்யும் சதியைக் கண்டு துடித்திருக்கும். என்ன செய்வது எனக்கு இன்னும் அரும்பு மீசைதான்.
அன்புடன்
ஆசை
asaidp@gmail.com
kiruthigan said,
30/12/2010 இல் 09:49
தரமான பதிவு…
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
kiruthigan
http://tamilpp.blogspot.com