முகுந்த் நாகராஜின் ‘நாய் பொம்மை’ கவிதையை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சென்ஷியைப் பார்த்து , ‘நீங்க கவிதை கிவிதை எழுதலையா?’ என்று அண்ணாச்சி தாஜ் கேட்க , அவர் தூக்கிப்போட்டார் பாருங்கள் தன் அட்டகாசமான கவிதையை! ’மிக அழகு… மிக அழகு. உங்கள் கவிதையை படித்து அபிப்ராயத்தை முன் வைக்க நண்பர்கள் பட்டிருக்கும் சிரமம் இன்னொரு கவிதை, அது இன்னொரு அழகு. வாழ்த்துக்கள் சென்ஷி’ என்று கூத்தாடவே ஆரம்பித்து விட்டார் தாஜ். அந்தக் கவிதையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். குறையே சொல்லாமல் வாழும் குரு சென்ஷியிடம் அனுமதி கேட்கும் வழக்கமில்லை. அவரிடமுள்ள புத்தகங்களையும் டி.வி.டிக்களையும் அவருக்குத் தெரியாமலே அள்ளி வருபவர்கள் நாங்கள். சரி, கவிதையின் கீழே சென்ஷியின் ‘அடப்பி’ல் உள்ள சில கதைகளின் இணைப்பும் உண்டு. அவசியம் படியுங்கள். நன்றி. – ஆபிதீன்
***
இலையுதிர் காலம் என்று
என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்
தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்
சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து
வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்
பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன
தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்
ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்
எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது
மிகைப்படுத்தப்பட்ட அன்பு
காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த
அன்பின் வடிகால்கள்
கை முளைத்து கால் விரித்து
வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.
பற்றுதல்களுக்கான தேடலில்
எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்
மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து
சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த
பறவையொன்று
கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது
***
சென்ஷியின் சில கதைகள் :
1. சிருஷ்டி – http://senshe-kathalan.blogspot.com/2008/09/blog-post_22.html
2. வெந்து தணிந்தது காடு – http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_18.html
3. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம் – http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post.html
***
நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com
திண்டுக்கல் தனபாலன் said,
19/07/2012 இல் 09:47
அருமை…
பகிர்வுக்கு நன்றி…
தொடருங்கள்… வாழ்த்துக்கள்…