கள்ளன் (?)

புலவர் ஆபிதீனின் ’தேன்கூடு’ கொடுத்த ஜபருல்லாநானாவிடம் அனுமதி கேட்காமல் பதிவிடும் நானே கள்வன்! நானே கள்வன்!

ஓவியருமான புலவர் ஆபிதீன் காக்கா,  ’ஓரளவு எழுதிவிட்டாரென்று’ தன்னை வரைந்த ஹனிபாவைச் சொல்வது சிரிக்க வைத்தது. அத்தனை வறுமையிலும் தன் நகையுணர்வைக் கைவிடவில்லை எங்கள் காக்கா.  இந்தக் ‘கள்ளன் (?) ’ , 1949-ல் வெளியான அவருடைய ’தேன்கூடு’ நூலிலுள்ள ஒரு பாடல் –  ’வேலையிலே கருத்தூன்றி வேண்டியர்க் குதவிபுரி’வதற்காக.

‘ஆசானும் அகராதியும் அருகே வைத்து அறியத்தக்க வகையில்  கவிதை இயற்ற விரும்பாதவன் நான்; மக்கள் விருப்பையே இலக்கணமாக மதித்து கவிதைகள் எழுதுகிறேன்’ என்பார் அவர்.

***

கள்ளன் (?)

புலவர் ஆபிதீன்

காடு,மலை கடலோரம் கண்விழித்து பசித்தாங்கி
தேடுகிறார் சந்யாசி தெய்வமதைத் தினந்தோறும்
வீடுவெளி கோயிலிலும் விதவிதமாய் பூசித்தே
பீடுபெற சம்சாரி பிரியமுடன் தேடுகிறான்.

கண்டுகளி கொண்டதுவாய் கவலுகிறார் முனிபுதரில்
காண்குவனோ என்றுருகிக் கடாவுகிறான் கவிவாணன்!
கண்டுவிடில் கடன்கேட்டுக் கழுத்துநெரி படுமெனவே
பண்டுஇதை அறிந்தொளியப் போனானோ நாமறியோம்!

கள்ளனவன் வாயலிலே காவல்புரி வோனுமவன்
குள்ளனவன் வதைச்செய்து கூலியையும் வாங்கிடுவான்
கிள்ளிவிட்டு அழச்செய்து கிருபையுடன் தாலாட்டி
துள்ளிமெல்ல வேமறைந்து தொலைதூரம் போய்விடுவான்.

இன்பத்திலே வாழுகின்ற இறையவனைத் தேடுவதேன்?
துன்பத்தில் தள்ளிவிட்டு துடுக்காக நகைத்திடவோ!
கண்பொத்தி விளையாடி, கசடாக்கி உலகிற்குள்
எண்பித்துக் காட்டிவிட எண்ணுகிறாய் முடியாதே.

அங்கென்று ஒருகூட்டம் அடையாளம் கூறியது!
இங்கென்று மறுசாரார் இழுத்தலையச் செய்தார்கள்!!
தங்கென்று புலனடுக்குந் தகையின்றி வீணாய்நீ
எங்கென்று ஓடுகின்றாய் ஏனிந்தத் தொல்லையடா?

மூலையிலே குந்திநிதம் முணுமுணுத்து வாடாதே
வேலையிலே கருத்தூன்றி வேண்டியவர்க் குதவிபுரி
காலையிலே மாலையிலே களிப்பூட்டுந் தென்றலின்பம்
சோலையிலே அனுபவித்து சுகமாக வாழ்ந்திடுக.

***

17.4.1949 ‘தினகர’னில் பிரசுரிக்கப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s