இந்த ஹந்திரி இருக்கே… – ’நாகூரி’

‘நாயனின் அருள்கொடி நாகூரில் பறக்குது’ என்ற ஏ.டி ஷரீப் பாடலுடன் பதிவிடலாம் என்று நினைத்தேன். ஜனங்கள் பயந்து விடுவார்கள்! ’அது அருள்கொடியா ? இருள்கொடியா?’ என்றும் அடிக்க வந்துவிடுவார்கள் –  ஒஸாமாவை விட்டுவிட்டு. வம்பு எதற்கு? பாருங்கள், ’வாப்பா.. கலாட்டா நடந்தாலும் நடக்கும். சுத்தாதே’ என்று மகனார் நதீமிடம் நேற்றிரவு சொன்னேன். ‘அம்மை’யின் கோரம் முடிவுற்று இப்பதானே தேறியிருக்கிறான் செல்லப்பிள்ளை?  ‘சரி வாப்பா..சுத்துறேன்’ என்று அமைதியாகச்  சொல்லி  தன் அம்மையிடம் கொடுத்துவிட்டான்! கோபிக்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் , ‘சின்னபுள்ள , சுத்தாம என்ன செய்வான்? சும்மா இருங்க’ என்று ஒரு அதட்டல் போட்டாள் அவள். அசந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஊர்க்கலவரங்களை விட வூட்டுக் கலவரங்கள்தான் அதிகம் பயமுறுத்துகின்றன. ஹைர், ஷாஹூல் ஹமீது பாதுஷா பற்றி மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது பாடிய பாடலை (’தீன் இசை மாலை’ தொகுப்பில் உள்ளது. இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்று அசனா சொன்னார்.) பதிவிட்டுவிட்டு அப்படியே எனது அருமை நண்பர் கய்யூமின் கந்தூரி கலாட்டக்களையும் மீள்பதிவு செய்கிறேன். எனக்கு ரொம்பவும் சிரிப்பை ஏற்படுத்தும் எழுத்து அவருடையது. அவர் திரும்பவும் எழுத அவுலியாதான் உதவி செய்ய வேண்டும்! – ஆபிதீன்

***

முதலில் மர்ஹூம் ஷாஹுல் ஹமீதின் பாட்டு :

Download

***

அந்த 14 நாட்கள் –  அப்துல் கையூம்
(இந்தப் பதிவை, கதை, கட்டுரை, டயரிக் குறிப்பு, ஆட்டோகிராப் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான்)

நாகூர் கந்தூரி விசேஷத்தை கண்குளிர கண்டு எத்தனையோ மாமாங்கம் ஆகி விட்டது. ‘இந்த வருஷமாவது போய்ப் பார்க்க வேண்டும்’ என்று மனதில் உதித்த ஆசையை இங்கிருக்கும் என் பக்கத்து ஊர் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்டபோது “எத்தனை PJ வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது” என்று பொரிந்து தள்ளி விட்டார். காரணம் அவர் ‘உஜாலா’வுக்கு மாறிவிட்டிருந்தார்.

“நான் கந்தூரி சமயத்தில் ஊர் போக நினைக்கும் காரணமே வேற .. “ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் முன்பே “நீங்க இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? உங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியல்லியே..?” என்று தீர்ப்பும் வழங்கி விட்டார்.

*      *     *

அந்த 14 நாட்கள் – நினைத்தாலே இனிக்கும். மனதுக்குள் மத்தாப்பு மலரும். சங்கு சக்கரமாய் என் இளமைக்கால அனுபவங்கள் எனக்குள்ளே சுழன்றது. நிகழ்வுகள் சரவெடியாய் ஒவ்வொன்றாய் கண்முன் வந்து நின்றது. அந்த ‘எட்டாம் இரவு’ வாணவேடிக்கையை என் மனதுக்குள் நானே நிகழ்த்திப் பார்த்தேன்.

பள்ளிப் பருவத்தில் கந்தூரி கொண்டாட்டத்தை ரசிக்க அளவுக்கு இப்போது ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது கவலை அறியாத வயசு.

கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி சாப்பிடச் சொல்லும் மனசு. கால் போன போக்கில் சுற்றித் திரிந்த காலம்.

இப்போது, நண்பர்களோடு ஊர் சுற்றலாம் என்று நினைத்தால், நாம் விடுமுறையில் போகும் சமயத்தில் அவர்கள் ஊரில் இருக்க மாட்டார்கள். துபாயிலோ, சவுதியிலோ, சிங்கப்பூரிலோ அந்த ஊர் கரன்ஸியை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் கந்தூரி வந்தால் ‘இது அனாச்சாரம். மார்க்கத்திற்கு புறம்பானது’ என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம். போஸ்டர் ஒட்டுகிறார்களாம்; நோட்டீஸ் வினியோகிக்கிறார்களாம். ஆனால் கூட்டம் மட்டும் முன்பு வந்ததை விட கூடுதலாகவே வருகிறதாம். சொல்கிறார்கள். கந்தூரியில் கூடு வருகிறதோ இல்லையோ ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக வந்து விடுகிறாராம்.

“கடைத் தெருவில் நடந்தால் எரிச்சல்தான் வருகிறது. கூட்ட நெரிசலிலாவது சென்று விடலாம். இந்த இசையின் இரைச்சலில்.. .. அப்பாடா காது சவ்வு கிழிந்து விடுகிறது” என்று அலுத்துக் கொண்டார் சென்ற ஆண்டு கந்தூரிக்குப் போய்வந்த வேறொரு நண்பர்.

ஒரே சமயத்தில் நாகூர் ஹனிபா, உவைஸ் ரிஸா காதிரி, சாப்ரி பிரதர்ஸ் 8,7, 6 கட்டையில் மாறி மாறி பாடிக் கொண்டிருந்தால் கொடுமையைக் கேட்கவா வேண்டும்? வேறு எங்கே.. ? கேசட் கடையில்தான்.

கால்மாட்டுத்தெருவிலும். தெருப்பள்ளித் தெருவிலும் பிளாஸ்டிக் சாமான் கடைகளின் எண்ணிக்கை குறைந்துப் போய்விட்டதாம். பிறகு கந்தூரியில் என்ன சுவராஸ்யம் இருக்கப் போகிறது? பாவம் தாய்க்குலங்கள். வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்கள். அவர்களுக்கு அதுதானே ‘ஹந்திரி’!

அரும்பு மீசை துளிர் விட்ட வயதில் கந்தூரியின் போது நண்பர்களுடன் அடித்த லூட்டி; சேரனுக்கு ஆட்டோகிராப்பில் ஞாபகம் வந்ததுபோல; என் கண்முன் வந்து நிழலாடியது. அந்த குதூகலம், உல்லாசம், இப்போது போனால் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அது மட்டும் 100% கியாரண்டி.

சாப்பீஸ் விற்கும் ஹேட்டுபாய், ஆட்டுக்கால் சூப்பு / பொறிச்ச மூளை விற்கும் மாமு, வாடா விற்கும் சுல்தான் இவர்களெல்லாம் உயிரோடு இருந்த காலத்தில், விதவிதமாக  நாக்குக்கு ருசியாக சாப்பிட்டதைப் போல; இப்போது சாப்பிட முடியாது. கொலஸ்ட்ரால் வந்து விடுமாம்.

ஆந்தைகள் வெளியே வரும் நேரத்தில்தான் நண்பர்கள் ஒன்று கூடி வந்து “வா கச்சேரிக்குப் போலாம்” என்பார்கள். திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்)

தர்கா முற்றத்தில் கச்சேரி களை கட்டியிருக்கும். “லாலு முரீத்.. லாலு முரீத்” என்று கவ்வாலி பாடகி பியாரி பாடிக் கொண்டிருப்பார். கூடவே அவரது மகள் சாதனா. இளவட்டங்கள் அங்கேதான்  குழுமியிருப்பார்கள். இளங்காளைகள் இசையை இந்த அளவுக்கு ரசிக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் தாங்காது. அடுத்த நாள் செளத்ரி சாபு வீட்டில் வி.ஐ.பி.களுக்காக தனியே கச்சேரி நடக்கும்.

கலிங்கத்துப்போரில் காயம்பட்டுக் கிடந்த போர் வீரர்களைப்போல பக்தகோடிகள் இடது கோடியில், தலை வேறு, கால் வேறாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். “தமா தம் மஸ்த் கலந்தர்” என்ற பாடல் வரி வரும் சமயத்தில் டோலக்குகாரர் பலமாக தட்டுவார். ‘கும்..கும்’ என்ற சப்தம் தர்கா குளம் வரை எதிரொலிக்கும். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் ‘போர்வீரர்கள்’ அலறியடித்துக் கொண்டு பாதித்தூக்கத்திலிருந்து எழுந்து பயபக்தியாக உட்கார்ந்துக் கொள்வார்கள். (வேறு வழி?)

எதிர் மண்டபத்தில் பெங்களுர் பாஷா பாடிக் கொண்டிருப்பார். அல்லது கலிபுல்லா பாய் ஹார்மோனியத்தில் காற்றை நிரப்பி, தர்கா உள்ளேயே உட்கார்ந்துக் கொண்டு, “நீர் எங்கே? எங்கே? எங்கே? சாஹிப் மீரானே!” என்று வலைவீசி தேடிக் கொண்டிருப்பார். (“எழுந்து சற்று தூரம் போனால் சாஹிப் மீரானை தரிசித்து விடலாமே!” என்று நண்பர்கள் கமெண்ட் அடிப்பார்கள்)

வேறொரு முற்றத்தில் பாவாமார்கள் தாயிரா சப்தம் முழங்க நாக்கிலே கூர்மையான ஆயுதத்தை சொருகிக் கொண்டிருப்பார்கள். வளைகுடா நாடுகளில், ‘சிக்கன் டிக்கா’ கம்பியில் சொருகி வைத்திருப்பதைப் பார்க்கையில் இந்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும்.

பக்கத்திலிருக்கும் குளுந்த (குளிர்ந்த) மண்டபத்தில்தான் நாங்கள் உட்கார்ந்து சூடான விவாதம் செய்வோம். அருகாமையில் உப்புக்கிணறு இருக்கும். தைரியமாக கிணற்றுக்குள் குதிக்கலாம். வேண்டுமானால் ‘டைவ்’ கூட அடிக்கலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது.

உ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்.

*     *     *

“ஹலோ.. ஹலோ.. உங்களைத்தானே…என்ன யோசனையிலே மூழ்கிட்டீங்க?”

கூப்பிட்டது சக நண்பர்தான். “எப்ப போறதா உத்தேசம்?. சாந்து பூசுறதுக்கு போறீங்களா இல்லாட்டி பாம்பரம் ஏத்துறதுக்கு போறீங்களா?” (இப்பொழுது ஏது சாந்து? ஆயில் பெயிண்ட்தான் யாரோ அடித்துக் கொடுக்கிறார்களாம்)

நண்பரின் கிண்டல் புரிந்தது. இவருக்கு பதில் கொடுத்து அந்த பவித்ரமான கனவுகளை பாதியில் கலைக்க நான் தயாராக இல்லை. அவரைக் கண்டு கொள்ளாமல், மறுபடியும் அந்த வண்ணமயமான பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

*     *     *

கந்தூரியைக் களைகட்ட வைப்பதே இந்த கைலி கடைக்காரர்கள்தான். ரிக்சாக்காரன் படத்தில் கனவுக்காட்சியில் போடும் செட் போல கட்-அவுட் சகிதம் ‘தோட்டாதரணி’கள் வந்து இறங்கி விடுவார்கள்.
 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாஜ்மகால் பீடி வேன், கூம்பு போன்ற நீண்ட ஒலிபெருக்கி பொருந்திய சொக்கலால் ராம்சேட் பீடி வேன் எல்லாமே வந்து சேர்ந்துவிடும். ஹாட்டின் பீடி வேனில் பயில்வான் பொம்மையொன்றை இருக்கும். அந்த பொம்மையின் கைவிரல்களில் பீடி. வாயருகே அது கொண்டுச் சென்றதும் புகை வரும். கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாமா, மாமா, மாமா, ஏமா, ஏமா, ஏமா” என்று குறவன் குறத்தி வேடத்தில் ஜோடிகள் டான்ஸ் ஆடி மகிழ்விப்பார்கள்.

சீரியல் லைட் போட்டு “பீம புஷ்டி அல்வா” விற்பனை சூடு பிடிக்கும். எனக்கு அதைச் சாப்பிட பயம். அந்த விளம்பரப் பலகையில் உள்ள பீமாவைப்போல நாமும் தடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான், (அதைச் சாப்பிடாமலே இப்போது நான் தடித்து விட்டேன் என்பது வேறு விஷயம்)

சாலையோரத்தில் ‘தவில்’ வாத்தியத்தை செங்குத்தாக நிறுத்தி வைத்ததைப்போல பூமிக்கிழங்கை வைத்துக் கொண்டு மெல்லிய வட்டமாக அறுத்து விற்பார் ஒருவர். இனிப்பென்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு.

உள்ளுர்க் கலைஞர் ஹாஜா பாஷா நகத்தாலேயே படம் வரைந்துக் கொண்டிருப்பார். விளம்பரப்பலகை ஒன்று வைத்திருப்பார். சினிமா பிரபலங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

எடை பார்க்கும் எந்திரத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஒருவர். கட்டணம் பத்து பைசாதான். எல்லு மிட்டாய் வில்லைகளை குவித்து வைத்து கொண்டு தராசில் எடை பார்த்து கிலோ கணக்கில் விற்றுக் கொண்டிருப்பார் இன்னொருவர். பம்பாய் மிட்டாய்காரன் சோன்பப்டி விற்றுக் கொண்டிருப்பான்.  பக்கத்திலேயே நம் திறமைக்கு சவால் விடும் வேறொரு நபரை நாம் பார்க்கலாம். இரண்டடி கம்பிக்குள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும்

வளையத்தை கை நடுங்காமல் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அக்கறையாய் போய்ச் சேர்த்துவிட வேண்டும். உரசி விட்டால் ‘கீக்.. கீக்’ என்ற சத்தம் வந்துவிடும்.

இடையிடையே முஸ்லிம் சங்கம் தொண்டர்படை காரியாலயத்திலிருந்து காணமல் போன குழந்தையைப் பற்றிய அறிவிப்பு ஏதாவது ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டே இருக்கும். ரயில்வே புக்கிங் செய்வதற்காக கிளை திறந்திருப்பதையும் அறிவிப்பார்கள்.

கையில் பில்புக் வைத்துக் கொண்டு நடைபாதை வணிகர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருப்பார் ஒருவர். அவர் வசூல் செய்வதற்கு அடிக்கடை கான்ட்ராக்ட் எடுத்திருப்பவராம்.

“எங்கேயோ கேட்ட குரல்” காற்றில் மிதந்து வருகிறதே என்று திரும்பிப் பார்த்தால், கண் தெரியாத இரண்டு பேர்கள் “காதர் ஒலி பாபா! அல்லாஹி தியேகா” என்று இரட்டைப் புலவர்களைப் போல கோரஸ் பாடிக் கொண்டு யாசகம் கேட்பார்கள். வீதியில் கப்பல் வலம் வருகிறதோ இல்லையோ இவர்கள் கட்டாயம் வலம் வந்து விடுவார்கள்.

“தீன் கொடி நாட்டிய தேவா! – எங்கள்; தூதரே யா முஸ்தபா!” என்ற பாடல் கேட்கும். நாகூர் ஹனிபாவின் பாடல்களை ராகத்தோடு பாடிக்கொண்டு ஆபிதீன் காக்காவுடைய பாட்டு புத்தகத்தை விற்றுக் கொண்டே செல்வார் அவரது ஆத்மார்த்த ரசிகர் ஒருவர்.

காலுக்கு அடியில் ஏதோ ஒரு உருவம் தென்படும். கைகளுமின்றி, கால்களுமின்றி வயிற்றில் ஒரு நசுங்கிய அலுமினிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஊர்ந்து சென்றுகொண்டிருப்பார் ஒரு பிச்சைக்காரர்.

விதவிதமான வால் பேப்பர் பின்னணியில் ‘திடீர்’ கலர்போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்.

ஆண்டிகுளத்து முனையில் கைராட்டினம் நிறுத்தப்பட்டிருக்கும். அதனருகில் ஒரு கூடாரம். பேசும் கடற்கன்னியை கொண்டு வந்திருப்பார்கள். ஆச்சரியத்துடன் அந்த அதிசயப் பிறவியைப் போய் பார்ப்பேன். தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடல். இடுப்புக்குக் கீழ் மீன் உருவம். கதையில் படித்த “Mermaid”-யை நேரில் பார்க்கும்போது பரவசம் ஏற்படும்.

மறுநாள் அந்த பெண் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தாளாம். நண்பன் சாய் மரைக்கான் சொன்னான். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற எம்.ஜி.ஆர்.பாடும் பாடல் என் காதுகளில் அசரீரியாய் ஒலிக்கும். (சாய் மரைக்கானே ஒரு நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட்தான். எம்.ஜி.ஆர். மாதிரியே அட்டகாசமாக பேசிக் காண்பிப்பான்)

தெற்குத்தெரு முனையில் சிறுவர்கள் கலர் கலராய் தண்ணீரை வைத்துக் கொண்டு சர்பத் என்ற பெயரில் விற்றுக் கொண்டிருப்பார்கள்.  ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ‘டபுள் டெக்கர்’ லாரி பக்கத்திலேயே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.

ரயிலடி அருகேதான் எங்களுக்கு நன்றாக பொழுது போகும். மிருகக் கண்காட்சி என்ற பெயரில் வத்தலும் சொத்தலுமான மிருகங்களை கொண்டு வந்திருப்பார்கள். மரணக்கிணற்றில் இரண்டு பேர் ‘டுர்.. டுர்..’ என்று மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். வெளியே ஒரு சிறிய மேடை போட்டு ஒரு சிறிய வளையத்திற்குள் ஆணும் பெண்ணும் உடலை நுழைத்து சர்க்கஸ் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். வேறொரு பக்கம் “Puppet Show” எனப்படும் பொம்மலாட்டம் நடக்கும். இந்த பாரம்பரியக் கலைகள் எல்லாம் இப்போது எங்கே ஒழிந்துப் போனது என்றே தெரியவில்லை.

கடற்கரை வழி நெடுக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலைப் போல பிச்சைக்காரர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் இந்த கூடாரங்கள்தான் சரணாலயம்.

*     *     *

“என்ன பேச்சு மூச்சையே காணோம்? ரொம்பத்தான் சிந்தனை போலிருக்கு?”

என்னை விடுவதாக இல்லை நண்பர். என்னதான் இருந்தாலும், உற்சாகம் பொங்கும் அந்த பழைய குதுகூலம் நிச்சயமாக நமக்கு கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் ஊர்ஜிதமாகத் தெரிந்தது.

“கந்தூரிக்கு இந்த தடவை நான் ஊர் போறதா இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன்.”

நான் சொன்னதைக் கேட்டு நண்பரின் முகத்தில் பிரகாசம்.

“நீங்க யோசிக்கும்போதே நெனச்சேன். நீங்க படிச்சவரு. நல்லது கெட்டது புரிஞ்சவரு. அல்லாதான் உங்களுக்கு நல்ல வழியை காண்பிச்சிருக்கான். கைர்”. என் கையை பிடித்து குலுக்கு குலுக்கோ என்று குலுக்கினார்.

“இந்த கூடு, கொடியேத்தம், ஹத்தம், ஹந்திரி இதெல்லாம் இருக்கிறதே.. ..”
நண்பர் பிரசங்கத்தை தொடங்க அங்கிருந்து நான் மெதுவாக நழுவி விட்டேன்.

***

நன்றி : அப்துல் கையூம்

***

மேலும் பார்க்க : கந்தூரி – 2008

13 பின்னூட்டங்கள்

 1. ஹமீது said,

  04/05/2011 இல் 14:16

  திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்.
  நன்றி நம் பக்கத்து ஊர் திட்டச்சேரிகாரர்களை நினைவுபடுத்தியதுக்கு.

 2. 04/05/2011 இல் 15:21

  நிரவி, திட்டச்சேரி, புறாக்கிராமம் இல்லாமல் நாகூர் ஏது? சிக்கல், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்; அவர்களும் நாகூர்க்காரர்கள்தான்!

 3. ஒ.நூருல் அமீன் said,

  04/05/2011 இல் 15:42

  வனவேடிக்கையில் ஆரம்பித்து எல்லா வேடிக்கைகளையும் நகைசுவையுடன் அற்புதமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் கையும் பாய்.

  ஹந்திரி நேரத்தில் இறைநெருக்க உணர்வை பெருக்கி கொள்ள வேண்டி நாகூர் வரும் அன்பர் கூட்டமும் உண்டு. இறைஞான போதங்கள், கீதங்கள் கொண்டு மனதில் ஞானவேட்கைக்கு விருந்தான அந்த நாட்கள்…..

  • 04/05/2011 இல் 16:11

   //அந்த நாட்கள்….. // இந்த நாட்களிலும்தான்…!

   எனக்கும் ஜபருல்லாநானாவுக்கும் மிகவும் பிடித்த , கவிஞர் சலீம்மாமாவின் பழைய பாடல் ஒன்றிலிருந்து.. (இது ’சின்ன எஜமான்’ பற்றியது) :

   ’வந்தோர்க்கெல்லாம் வாழ்வு தந்தீர்
   வாழ்வினை வழங்கிட நீர் இங்கு வந்தீர்
   நொந்தே சலீம் தினம் போராடலாமா?
   சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா?
   கண்பாரும் கண்பாரும்…’

 4. 04/05/2011 இல் 18:20

  ஹந்திரி நேரத்தில் இறைநெருக்க உணர்வை பெருக்கி கொள்ள வேண்டி நாகூர் வரும் அன்பர் கூட்டமும் உண்டு. என்று நூருல் அமீன் எழுதியிருந்தார்கள்.

  எஜமான் எங்கே அங்கே இருக்கப் போறாஹ, அங்கே நடக்கிற கூத்தை காண சகிக்காமல் பதிநாலு நாளைக்கு வாஞ்சூருக்கு போயிடுவாஹ. அங்கேயும் கூத்தடிச்சா பேசாமெ மேலநாவூருக்கு போயிடுவாஹ. கொடி இறக்கின பிறகுதான் வருவாஹ.

 5. 04/05/2011 இல் 18:22

  // திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்.//

  ((தம்பி காது பக்கம் சிலுசிலுன்னு காத்தாடிக்குது என்று சொல்லி, கழுத்தில் மஃப்ளரை சுற்றிக் கொண்டு வருவார்கள். ஹி..ஹி..!! )) இப்பவும் நாகூரில் இருக்கும் பெரும்பாலான கடைகளுக்கு வியாபாரம், இந்த சுற்றுப்பட்டு ஊர்களை கொண்டு தான். இருந்தாலும் இன்றைக்கு நான் வாழப்போன ஊரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தல!!

  உ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்: மனதை பின்னோக்கி கொண்டு போனதென்னவோ நிஜம்!

 6. 04/05/2011 இல் 18:30

  தம்பி…, “வாடாவை” சூடா சாப்பிட்டா தான் டேஸ்ட், என்று ‘வாடா சுல்தான்’ சொன்னது இன்னமும் ஞாபகமிருக்கு!! :-))) (இதில் ‘உள்ளடம்’ ச்சே ‘உள்குத்து’ ஏதும் கிடையாது)

 7. maleek said,

  04/05/2011 இல் 18:46

  “நம்ம ஹந்த்ரி மாரி வரமாங்கனி ,அந்த நாள்ள ஊர்ல இருக்கிற குதூகலத்த
  எத்தன உஜாலா வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாதுங்கனி!”

 8. 04/05/2011 இல் 18:57

  “சரணா…. கதி, ஷாகுல் ஹமீதொலி நாயகமே….!” ன்னு பாடிக்கொண்டே போகும் “பருப்பானம்” நானாவை விட்டுட்டீங்களே கையூம்!! “சுதி (போட்டு) பெட்டி கையருகே இருப்பதாக நினைத்து, கை நீட்டிக்கொண்டே போக, சைக்கிளின் பின்னிருக்கும் ஆர்மோனியப் பெட்டி பத்தடி தூரத்தில் போய்க் கொண்டிருக்கும். :-)))

  • 05/05/2011 இல் 11:53

   கந்தூரியின் ஜெதபு கடைசியில் வரும் ’பருப்பானம்’தான்! நன்றி காதர்.

 9. 04/05/2011 இல் 19:41

  // ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்//

  நான் நாகூருக்கே போகாமல் ‘ஹந்திரி’ பாத்துட்டேன்ல? ஹிஹி
  நன்றி நாகூரி ஸாப்!

 10. 05/05/2011 இல் 01:11

  நாங்கள்ளாம் உஜாலாவுக்கு எப்பவோ மாறியாச்சு அப்ப நீங்க?

  நீங்களும் தானே அப்துல் கையூம்

 11. 05/05/2011 இல் 08:53

  இந்த பதிவை கண்டதும், ஒரு பதில் எழுத ஆரம்பித்தேன். அதுவே ஒரு சின்ன கட்டுரை போல தோணவே அதை என் வலைப் பக்கத்தில் பதிவு செய்து விட்டேன். தலைப்பு : நாகூர் கந்தூரி என்னும் ஏகத்துவ கொடி ஏற்றம். சுட்டி இதோ

  http://onameen.blogspot.com/2011/05/blog-post.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s