அதிர்ச்சியில் இருக்கிறேன்…

தப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது , தம்பி சென்ஷி ஆசைப்பட்டபடி சென்ற வியாழன் இரவு (12/4/2012)  மேடையில் ஏறினேன். ஒட்டாமல் ஒதுங்கி இருந்தவனை ஒருவழியாக – 22 வருடம் கழித்து கண்டுபிடித்து – உட்கார வைத்த அமீரகத் தமிழ் மன்றத்துக்கு என் அதிர்ச்சி உரித்தாகுக!

குத்தாட்டம் கோலாட்டம் இல்லாமல் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். சகோதரர் ஆசிப்மீரானின் திறமையால் ’இலக்கியக்கூடல்’ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆபிதீன் எதுவும் பேசாததுதான் நிகழ்ச்சி சிறக்க உண்மையான காரணம் என்று எல்லாரும் உண்மை பேசினார்கள். மணிமேகலை பற்றிய உரையில் தமிழின் மிக முக்கிய ஆளுமையான ப்ரேமை குறிப்பிட்டுப் பேசிய நண்பர் ஜெயமோகன் கவர்ந்தார். அழுத்தமாகப் பேசுகிறார் மனுசன்.  மூத்த அண்ணன் போல என்னிடம் பேசிய நாஞ்சில்நாடன் அன்பும் நெகிழ வைத்தது. அவரிடம் கொடுப்பதற்காக வாங்கிய உஸ்தாத் ரஷீத்கானின் லேட்டஸ்ட் சி.டியை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்திருந்தேன்! 

நேரமாகிவிட்ட காரணத்தால் டிரெயின்/ பஸ் பிடித்து என் இடத்திற்கு போக எத்தனித்தேன், (‘இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது). ஹமீதுஜாஃபர் நானாவும் நண்பர் மஜீதும்  ஊர் போயிருப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமம். எங்கே நின்று கூப்பிட்டாலும் உடனே வரும் சாதிக்கின் இப்போதைய டூட்டி டைமும் ஒத்துவராது. கம்பெனி டிரைவர்களை கண்டநேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்வதோ கட்டோடு எனக்குப் பிடிக்காது. நான்தான் நல்லவனாக ரொம்பநாளாக நடித்துக் கொண்டிருக்கிறேனே..

சென்ஷி , ‘நான் அரேஞ்ச் பண்றேன்னே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; நாளைக்கே பொய்டலாம்’ என்றார்!

உலக சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தும் உத்தமர் (1000 டிவிடிக்களை காப்பி பண்ணி தருவதாக சொல்லியிருப்பதால் இந்த அடைமொழி ) அய்யனார் தன் காரில் உடனே கொண்டுபோய் விடுவதாகச் சொய்யனார்.

’ஒரு அழுத்துல பொய்டலாம் அண்ணே’

‘எங்கே, மேலேயா? அதெல்லாம் வாணாம்’

அழுத்தினால் போகாமலா இருக்கும்?! அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் அல்கூஸ் போய்விடலாம் – காரில். ஆனால் , குடும்பஸ்தர்களை நான் சிரமப்படுத்துவதில்லை (அதற்குத்தான் மனைவி இருக்கிறார்களே!).  வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா? என்று வேடிக்கையாவும் சொன்னேன். கராமா மெட்ரோ வரையாவது விடுகிறேன் என்று அன்போடு உதவினார் – காரைத் தள்ளிக்கொண்டே.

பத்து ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையானது துபாய் மெட்ரோ. பயமெதற்கு?

மெட்ரோ /  பஸ் என்று என் வழியில் இருப்பிடம் போக ஒன்றரை மணி நேரம் ஆகும். அதனால் என்ன, இசை கேட்கலாம். அபுதாபி கிளாஸிக் எஃப்.எம் (87.90 MHz) 24 மணிநேரமும் இருக்கிறது. சூர்யானா மஹ்மூத் வருவாள் சுந்தரக் குரலோடு. இடம் நெருங்க நள்ளிரவு ஆகிவிட்டது. என்ன இழவு யோசனையோ , F25 feeder பஸ்ஸை விட்டு அல் அஹ்லி டிரைவிங் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கி – அடுத்தநாள் சமைப்பதற்கு சாமான்கள் வேண்டுமே என்ற நினைவு வர திரும்பவும் அருகே இருந்த அல்கூஸ் மால் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, பசி வயிற்றைக் கிள்ளியதால் பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு (இலக்கியக்கூடல் முடிந்தபிறகு அருமையான ஓசி டிஃபன் இருந்தது. பதிவர்கள் வந்திருந்ததால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதாலும் மேலும் தாமதமாகிவிடும் என்றும் சாப்பிடவில்லை.) தனியாக நடக்க ஆரம்பித்தேன். காடு நாவலில் எனக்குப் பிடித்த ஓரிரு பக்கத்தை நாளை பதிவிடலாம் என்று யோசனை. இல்லை, வெள்ளிக்கிழமை (13/4/2012) என் சீதேவி வாப்பாவின் நினைவு நாள். என் பிள்ளைகளோடு அவர்கள் இருக்கும் அபூர்வமான ஒரே ஒரு புகைப்படம் இருக்கிறது. அதை முகநூலில் பதிவிடவேண்டும். அதுதான் முக்கியம். வாப்பா ஹயாத்தோடு (உயிரோடு) இருந்திருந்தால் இன்று  நடந்த விசயத்திற்கு மகிழ்ந்திருப்பார்கள். பிரபல எழுத்தாளர்களோடு சேர்ந்து உட்காரும் அளவுக்கு மகன் வளர்ந்து விட்டானே… நம் பிள்ளை மக்கு இல்லை.

எமிரேட்ஸ் கிளாஸை கடக்கும்போது ஒரு போலீஸ் வேன் ரோந்து போனது. பாதுகாப்புக்கு துபாய்தான். ஆள் நடமாட்டமில்லை. இன்னும் ஒரு சந்து திரும்பினால் உம்-அல்-ஸுகீம் ரோடுக்கு வந்து என் இருப்பிடத்திற்கு போய்விடலாம். சந்திலிருந்த RGB அலுவலகம் அருகே ஓரமாக வந்தபோது மடேரென்று என் பின் தலையிலும் சூத்தாமட்டையிலும் (பேண்ட்டில்) என்னவோ வேகமாக அடிக்கப்பட்டது. மரக்கிளை ஏதும் விழுந்ததோ? அதிர்ச்சியில் கிறுகிறுவென்று மயக்கம் வந்தாற்போல இருந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன்.

நாயையோ பன்றியையோ அடிப்பதுபோல் இன்னும் நாலைந்து வருடத்தில் ரிடையராகப் போகிற கிழவன் ஆபிதீன் மேல் அடித்துவிட்டு ’ஹிந்தி ஹிந்தி..’ என்று கேலிச்சிரிப்போடு கத்தியபடி கருப்புநிற வேனில் பறந்தார்கள் மண்ணின் மைந்தர்கள். அல்-பர்ஷா ஏரியா பயல்களாக இருக்க வேண்டும். கார் நம்பரைக் கவனிக்க இயலவில்லை.  கவனித்தால் மட்டும் – அல் அமீன் சர்வீஸை கூப்பிட்டு – புடுங்கவா முடியும்? அரபி முதலாளியை ’அந்த’நேரத்தில் கூப்பிடுவதும் ஆபத்து.

ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று தடவினால் கொழகொழவென்று… சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து தொடையில் ஒட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது பார்த்தால் நான் கழிந்திருப்பதாகத்தான் சொல்வார்கள். அல்லது வழக்கம்போலவே இருப்பதாகச் சொல்வார்கள்.

அவமானப்படும் சுதந்திரத்தை ஆபிதீனுக்கு மேலும் அளித்த அரபி கூழ் முட்டைகளே , அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லவேளையாக , முணேமுக்கா திர்ஹம் மதிப்புள்ள என் மொபைலையும், பத்தேகால் திர்ஹம் உள்ள பர்ஸையும் விட்டு விட்டீர்கள். சுக்ரன்.

சவுதியில் இருந்தபோது பலமுறை பட்டிருக்கிறேன். துபாயில் இதுதான் முதன்முறை. ’உள்ளூர்லேயே பொழைச்சி புள்ளகுட்டியோட இருக்கனும் வாப்பா.’ என்று என் வாப்பா அடிக்கடி சொல்வார்கள்.  அவர்களை உதாசீனப்படுத்தி அரபுநாடு வந்ததற்கு எனக்கு இன்னும் வேண்டும்.

மனம் கசங்கும்போதெல்லாம் யூசுப்தாதா பற்றி சலீம்மாமா எழுதிய பாடல் வரிகளை எனக்குள் சொல்லிக்கொள்வது வழக்கம்.

‘சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா..
கண் பாரும் கண் பாரும்…’

மேலும் கசங்கியதுதான் மிச்சம். இரண்டுநாளாக மனதே சரியில்லை. அலுவலகம் போய்வரும்போது போகிற வருகிற கார்களின் எண்களையெல்லாம் தன்னிச்சையாக பரபரவென்று மனம் பதிவு செய்கிறது. ‘கண்கள் முழுக்க எண்கள் ; எண்கள் ’ என்பார்கள் கவிஞர்கள். (தாஜைச் சொல்லவில்லை; கவிஞர்களைச் சொன்னேன்!).

முந்தாநாள் , மனைவி அஸ்மாவிடம் லேசாக விசயத்தைச் சொன்னபோது,  ‘பைத்தியம் புடிச்சிக்கிது போலக்கிது. முட்டையாலயா அடிப்பானுவ , ஹராமிளுவ?’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே! நொந்தபடி நேற்று இரவு  ஜபருல்லா நானாவை தொடர்புகொண்டு என் மனப்புழுக்கத்தைச் சொன்னேன். குரு போன்றவர் அவர். ஊஹூம், குருவேதான்.

’ம், எழுதிக்கும்ங்கனி…

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

எப்படி? ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான், ஹா..ஹா..’ என்றார்.

இந்த அதிர்ச்சிதான் இன்னும் நீங்கவில்லை!

***

நன்றி : ஆசிப்மீரான், சென்ஷி, அமீரகத் தமிழ் மன்றம், இஜட். ஜபருல்லா

***

பார்க்க : ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)

24 பின்னூட்டங்கள்

  1. sureshkannan said,

    16/04/2012 இல் 12:05

    //வேண்டுமென்றே மறந்துவிட்டு//

    🙂

    உங்களின் ‘அதிர்ச்சியை’ புலம்பலாக எழுதியிருந்தால் கூட இத்தனை அழுத்தம் கிடைத்திருக்காது. பகடியாக எழுதியிருப்பதுதான் இன்னும் மனதை கனக்கச் செய்கிறது. சரி விடுங்கள். துபாயில் முட்டை விலை குறைவுதான் போலிருக்கிறது. 🙂

    (உங்கள் பழக்க தோஷம்)

  2. 16/04/2012 இல் 12:12

    அடடா.. துபாயில் இப்படிப்பட்ட விஷயம் கேள்விப்படுவதே இதுதான் முதல்முறை.

    வருத்தங்களும், அந்த கூழ்முட்டைகள் மீது கோபங்களும்.

  3. senshe said,

    16/04/2012 இல் 12:29

    :-(((

  4. 16/04/2012 இல் 14:38

    தனியாக காரில் போனால் காரின் கண்ணாடியில் அடிப்பார்கள். வைப்பரை போடாமலும் நிற்காமலும் தொடர்ந்து செல்லங்கள் என யாரோ சொல்லி இருந்தார்கள். வைப்பரை போட்டு விட்டால் கண்ணாடி முழுதும் வெண்மையாகி உங்களால் பாதையைப் பார்க்க முடியாமல் நிறுத்த நேரும் என்ற சொன்னார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அனுபவப் பட்டதில்லை.

    ஆனால் இது மாதிரி நிகழ்வு துபையில் இதுதான் முதல் முறையாக கேள்விப் படுகிறேன். உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ குரோதமோ இல்லை. இந்தியர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அவர்களின் வெறும் விளையாட்டுக்கு நீங்கள் பலியாகி இருக்கின்றீர்கள். வேலைவெட்டி ஏதுமின்றி சும்மா ஊருக்கு நேர்ந்து விடப்பட்ட பிள்ளைகள். உங்கள் மனைவி சரியாய்த்தான் சொல்லி இருப்பார்களோ!

    மிகவும் வருந்துகிறேன் ஆபிதீன் பாய்!.

  5. எஸ்.எல்.எம். ஹனீபா said,

    16/04/2012 இல் 15:51

    துபாய் இலக்கியச் சந்திப்பு படங்கள் பார்த்தோம். 12 வருடங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடனை நேரில் பார்ப்பது போலிருந்தது. 2000ம் ஆண்டு சென்னையில் அவருடன் அவர் தீபத்தில் எழுதிய மாமிசப் படைப்பு பற்றி நிறையப் பேசினேன். அவர் கண்கள் குளமாகின. எழுத்தாளன் என்றால் நாஞ்சில் நாடனாகவோ ஜெயமோகனாகவோ இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் துபாயை நினைத்துப் பார்க்கலாம். ஆபிதீன் பேசியிருந்தால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்வது! நாங்கள் கொடுத்து வைக்கவில்லை.
    அன்புடன் ஹனீபா காக்கா

  6. krupha4321 said,

    16/04/2012 இல் 18:46

    ஆபிதீன் அண்ணே.,

    சாருவுடனான சர்ச்சைகளிலிருந்து உங்களின் பெயர் எனக்கு பரிச்சையம்…

    சென்ஷியிடம் கேட்டு உறுத்திப்படுத்திக்கொண்டேன்..

    என்றாலும், உங்களின் புகைப்படங்களை பார்ப்பதென்பது இதுதான் முதல் தடவை…

    இருக்கட்டும்.

    அங்கிருக்கும் சூழல் புரிபடவில்லை…நிகழ்வுகள் அதிர்ச்சியாகவும், மிகுந்த அநாகரீகமாகவும் நடந்தேரியிருப்பது குறித்து ஆழ்ந்த வருத்தங்களுடன், என் நண்பர்கள் அங்கிருந்து உதவாமல் இருந்ததற்கான மன்னிப்பும் கோருகிறேன்…

  7. சிபூ said,

    16/04/2012 இல் 18:47

    இங்கு வளர்க்கப்படும் அரபிச்சிறுவர்கள் தாந்தோன்றியாகத் தான் தெரிகிறார்கள். என் நண்பர் ஒருவருக்குத் தினமும் ஒருசிறுவனால் தொல்லை. மேற்கணடவகையினது தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் ஒருநாள் லிப்டில் வைத்து பெல்டைக் கழட்டி வெளுத்து வாங்கிவிட்டார் கூடவே அன்றே பேச்சலர் அகாமெடேசனைக் காலி செய்து விட்டு வேறிடம் புகுந்தார். அந்த அரபிச் சிறுவனும் அவனது நண்பர்களும் அல்லது பதின்பருவத்தான் தினமும் கம்பெனி பஸ்ஸை வெறித்துப் பார்ப்பதை மற்ற நண்பர்கள் சந்தோசத்தோடு பார்ப்பார்கள். நண்பர் தான் வேறு பஸ்ஸுக்கும் மாறிவிட்டாரே !

  8. Abdul Qaiyum said,

    16/04/2012 இல் 18:50

    பார்க்க : http://nagoori.wordpress.com

  9. 16/04/2012 இல் 21:36

    அன்பு ஆபிதீன். என்ன இது? எனக்கும் அதிர்ச்சியாகவும் கோபமாகவும்கூட இருந்தது. இன்னும் எத்தனை காலம் முட்டைகளைப் பொறுத்துக்கொள்ளப் போகிறீர்? தனிமையில் அமர்ந்து யோசிக்கவும். கூடிய விரைவில்
    முட்டைகளைவிட்டு வெளியில் வர.
    பின்குறிப்பு: ஜெயமோகன், நா நா — ஆகியோரோடு உம்மைப் பார்க்க ரொம்ப அழகாக உள்ளது.எழுத்தாளர் மாதிரியே இருக்கிறீர்!

    • 18/04/2012 இல் 17:02

      ரூமிசார், அவர் முட்டைகளைவிட்டுக்கூட வந்துவிடுவார். ஆனால் கூழ்முட்டைகளை விட்டு? ( :-)) … கஷ்டம்தான்.

  10. 17/04/2012 இல் 01:08

    என்மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது. விழா முடிந்தபின் நான் பயணப்பட்டிருக்கலாம்; என்ன பிறவிகள் இவர்கள்? என்ன செய்ய? எல்லாம் வல்ல இறைவனின் புனிதபூமி இந்த அரபு தேசம். சகித்துக் கொள்ள மட்டுமே நமக்கு முழு உரிமை உள்ளது

  11. soman said,

    17/04/2012 இல் 06:40

    என் இனிய ஆபிதீன், அடாடா, என்ன ஒரு அயோக்யத்தனம்னு பதறிப்போச்சு ஒரு
    நிமிஷம்.

    பூ மாதிரி பாத்துக்கிட்டு இருக்கற அப்பாவோ, தாத்தாவோ, ஒரு சின்ன கல்லில்
    இடிச்சுட்டு ரத்தம் வரும்போது வீடே ரெண்டு ஆய்டும். “உங்களை யாரு அங்கெல்லாம்
    போயி இடிச்சுட்டு வரசொன்னது? ” என்று அம்மா குதிப்பாள். நானாடி போய் இடிச்சேன்?
    என்று ஒரு புதுச்சண்டை வரும். சுஜாதா கூட ஒரு கதையில், குதிரையிடம் ஒருத்தர்
    கடிவாங்கிட்டு வந்திருப்பார். அந்தம்மா டாக்டரிடம் “இங்க பாருங்கோ, இவருக்கு
    மட்டும் முழங்கால் தண்ணி இருந்தா போரும்! முங்கிடுவார்” என்று சொல்லும்.

    கோச்சுக்காட்டி ஒண்ணு சொல்றேன்.
    பதிவே காணோம்னு வயத்தெரிச்சல்ல யாராச்சும் பண்ணிட்டாய்ங்களா.!
    (தப்பா எடுத்துக்காதீரும், நல்லா வேணும்னு குரூரமாகக்கூட ஒரு குரங்கு உள்ளே
    குதிக்கும் நிறைய வாசகப்பயகளுக்கு. ) பின்னே என்னைய்யா? ஒரு நல்ல பதிவு
    போட்டு எவ்ளோ நாளாச்சுன்னு யோசிச்சுப்பாரும். இஸ்லாத்துக்கு நேந்து விட்ட
    மாதிரி எழுதிட்டே… இருக்கீர்.

  12. 17/04/2012 இல் 10:10

    ஆபிதீன்,
    பேசாம என் ரூமில் படுத்திருக்கலாமில்லையா? ரூம் சாவி கையில் இருக்கு, எல்லோரும் தெரிஞ்சவங்க, என் பெட் காலி, யாருக்கும் தொந்திரவு இருக்காது, அப்புறம் எதுக்கு யோசனைண்ணேன்? அர்த்த ராத்திரியில் அல்கோஸ் போகணும்னு எதாவது நேத்திக்கடனா?
    அது சரி அடிச்சது முட்டைதானா? இல்லை வேறே எதாவதா? இந்த அரபிப் பயலுவளை நம்ப முடியாது; இருவது வருஷமா அவனுவ என்னிடம் மாட்டிக்கிட்டு படாதப் பாடுபட்டவனுவ. சரி சரி., இனிமே இப்படி நேரங்கெட்ட நேரத்துலெ போர்ட்டொகேபினுக்குப் போக ஆசைப் படாமெ நம்ம ரூமுக்கு வந்துடுங்க

  13. அ.சேஷகிரி. said,

    17/04/2012 இல் 10:55

    மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களின் துபாய் பதிவை படித்துவிட்டு தங்களின் மோசமான அனுபவத்தை எண்ணி சீ சீ இவ்வளவுதானா துபாய் என்ற அருவெருப்பே ஏற்பட்டது.

  14. mohamedsadiq said,

    17/04/2012 இல் 19:41

    ஹக்க சொன்னதுக்கு அதிர்ச்சி ஏன்? சின்ன சந்தேகம் ஜபருல்லா நாநாவ,தாங்களா? நான் சோமன் பக்கம்.எழுதுங்க தாங்களின் எழுத்தை நேசிக்கும்,

    • batcha said,

      19/04/2012 இல் 10:47

      என்ன சொல்ல வர்றிங்க?
      ஆபிதீன் தன்னோட ‘து’ வுல இருந்து ‘எத்திசலாத்’துக்கு அடிச்சிட்டு அவரே ஜபருல்லாநாநா குரல்ல ‘ஹக்’க சொல்லிட்டாருன்னு தானே?

      இருக்கும் இருக்கும்

  15. Manjoor Rasa said,

    18/04/2012 இல் 11:26

    ரொம்ப வருத்தமாக இருந்தது நண்பரே. கூடவே நம் இயலாமையின் மீதான கசப்பும்.

  16. ஒ.நூருல் அமீன் said,

    18/04/2012 இல் 15:51

    அன்புள்ள நானா!,

    துபாயில் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எல்லாம் வந்திருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு வார்த்தை சொன்னால் நானும் வந்திருப்பேனே நானா!

    துபாயிலும் இப்படி நடக்கிறதா? அதுவும் உங்களுக்கா என மனது வருந்துகிறது.

    போட்டோவில் நீங்கள் மிகவும் அழகாய் இருக்கின்றீர்கள். அதனால் திருஷ்டி கழித்திருப்பார்களோ அந்த மடையர்கள்.

    எத்தனை அழகாக எழுதுகின்றீர்கள். அதிகமதிகம் எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன்…

  17. ஆச்சி said,

    18/04/2012 இல் 17:09

    நல்லா வேணும்கிறேன்.
    டிரைவிங் லைசென்ஸ் ஏன் எடுக்கலைங்கிறேன்?
    (நல்ல மனுசளா இருந்தாலுமே எல்லாத்துக்கும் எல்லா நேரத்துலயும் சப்போர்ட் பண்ணிப்பேசப்படாது)
    இப்படிக்கு
    ஆச்சி
    (சொல்லக்கேட்டவர் செட்டியார் – காரைக்குடி)

  18. maleek said,

    18/04/2012 இல் 18:55

    அவர்கள் சொல்வதையே திருப்பி சொல்வோம்
    “முக் மாஃபி “

  19. 19/04/2012 இல் 17:55

    அவ்வளவு நடந்து போச்சா?? 😦

  20. மனு said,

    20/04/2012 இல் 20:25

    நல்லவர் கெட்டவர் என இல்லை.
    எல்லோரும் ஒண்ணேதான்.
    இறைவனும்…!

    கீழிருந்தும் மேல பார்க்கலாம், மேலயிருந்தும் கீழ பார்க்கலாம். நல்ல வரிகள்.

  21. Manivannan said,

    21/04/2012 இல் 00:11

    Dear Abudeen Bhai

    I am really very sad when i hear this.

    Manivannan

  22. ரஷீத் said,

    10/03/2013 இல் 21:12

    சவூதியில்தான் இதுப்போன்ற 7.5 இருக்கும்..இப்போ துபாய்க்கும் வந்துடுச்சுவோ..பொறுத்துக் கொள்ளுங்கள் நானா!!!


பின்னூட்டமொன்றை இடுக