தொலைக்காமலேயே தேடலாம்! – (பசியோடு) இஜட். ஜபருல்லாஹ்

பசித்திரு…

இஜட். ஜபருல்லாஹ்

***

’பசித்திரு’ – இந்த சொல்லுக்கான உண்மைப்பொருள் ‘பசி’ என்ற சொல்லில் இல்லை. இதன் உட்பொருள் என்ன என்பதை கொஞ்சம் சிந்தித்தீர்களானால் உங்களுக்கு உடனே தெரிந்துவிடும். ‘பசி’ எதோடு தொடர்புடையது என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.. உடனே தெரியும் – பசி உணவோடு தொடர்புடையது என்று. உணவு இருக்கிறது; நல்ல சுவையான உணவு. எந்த விலையும் கொடுக்க வேண்டிய கட்டாயமும் உங்களுக்கு இல்லை; இந்த உணவு உங்களுக்காகவே தயாரித்ததுதான். நீங்கள் உண்ணவேண்டியதுதான் பாக்கி. என்றாலும் நீங்கள் அதை உண்ண விரும்பவில்லை. ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உங்களின் வியாதியின் அடிப்படையில் இருக்கும் மருத்துவத் தடைகள். இரண்டாவது, உங்களுக்கே வயிற்றில் பசியில்லை. முதல் காரணத்துக்கு விதிவிலக்கே கிடையாது. இரண்டாவது காரணத்துக்கு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். பசி வருகிறவரை அந்த உணவை பாதுகாக்கலாம். ஆனால் உணவின் சுவை கொஞ்சம் மாறிபட்டுப் போகும். சுடச்சுட உண்பதில்தான் சுகம். இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. ‘பசி’ என்பதும் சூடு, உணவும் சூடு. இரண்டும் சேரும்போது சுயம் மாறாது. நல்லதே நடக்கும்! சரி, இது வேறு பாட்டையில் போவது. இதை விடுவோம். இதெல்லாம் தேவையில்லாத சிந்தனை. எதிரே நல்ல உணவு இருக்கும்போது அதை விட்டுவிடக்கூடாது! பசியாவது..ஒண்ணாவது..இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சாப்பிட்டு விடுவதுதான் சாலச் சிறந்தது என்று முடிவெடுத்து சாப்பிட்டு விடுவதும் சாத்தியம்தான்! ஆனால் பசியோடு சாப்பிடும்போது கிடைக்கிற சுவை, பசி இல்லாமல் உண்ணும்போது கிடைக்காது. சில நேரத்தில் அஜீரண உபாதைகளும் வரக்கூடும்.

** இதுவரை நாம் பேசிக்கொண்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்து வயிற்றுப் பசியைப் பற்றிதான்..!

இதை கொஞ்சம் நிறுத்திவிட்டு வேறு ஒரு சிந்தனைக்குப் போவோம். ‘பசித்திரு’ என்று சொல்கிறார்கள். நாமே பசியைக் கொண்டுவர முடியுமா? காசு இருந்தால் உணவை எப்போது வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அதுபோல் பசியை வாங்க முடியுமா? அல்லது வரவழைக்க முடியுமா? சாப்பிடவே முடியவில்லை… ’டாக்டர், வயிற்றில் பசியே இல்லை டாக்டர்’ என்று எத்தனைபேர்கள் டாக்டர்களிடம் நிற்கிறார்கள்! எனவே பசியை கொண்டுவருவது நம் கையில் இல்லை எனப்புரிகிறது! அப்ப்டியெனில் ‘பசித்திரு’ என்கிறார்களே.. எப்படி பசியைக் கொண்டுவருவது?

பொதுவாக ’பசி’ என்றாலே வயிற்றுப் பசி மட்டும்தான் எல்லோர் கவனத்துக்கும் முதலில் வரும். உடல்பசி, காமப்பசி என்ரெல்லாம் சொல்கிறோம் இல்லையா? அப்படியானால் ‘பசித்திரு’ என்று சொல்கிறார்களே.. அதற்கு என்ன பொருள்..?

மேலே சொன்ன பசியையே எடுத்துக்கொள்வோமே.. வயிற்றுப்பசி வந்தால் உணவைத் தேடுவார்கள். காமப்பசி வந்தால் அவரவர்கள் அவரவர்களுக்கான ஜோடியைத் தேடுவார்கள். இவைகள் உடல் சார்ந்த தேடல் எனத் தெரிகிறதல்லவா?

தேடலில் வெற்றிபெற்றுவிட்டால் பசி தற்காலிகமாக மறைந்து போகும்.

பசி மட்டும் அல்ல, தேடலின் வெற்றிகூட தற்காலிகமானதுதான்!

அதாவது, பசியும் தேடலும் இரண்டறக் கலந்தவை. பசிக்கு தீர்வு தேடல் அல்ல; தேடல் என்பது பசியின் இயக்கம். தேடலில் கிடைக்கிற ஒன்றுதான் பசியைத் தீர்க்கும்.

பசி ஒரு நிலை. அந்த நிலைக்கு நாம் வந்துவிட்டால் பசியின் இயக்கம் ஆரம்பிக்கும். அடுத்த இயக்கம் ‘தேடல்’.

‘பசித்திரு’ என்று சொன்ன அறிவார்ந்த நம் முன்னோர், அந்த சொல்லின் ஆழமாக நமக்கு எதை அறிவுறுத்த நினைக்கிறார்கள்..?

‘பசித்திரு’ என்ற சொல் உன் மனவெளிப் பயணத்தின் மகத்தான் சொல்.  ‘பசித்திரு’ என்ற சொல்லை மனம் சார்ந்த சொல்லாகத்தான் நாம் சொல்லவேண்டும். ‘பசித்திரு’ என்ற சொல் ஒரு குறியீடு. மனசை எப்போதும் திறந்தே வைத்து இருக்கவேண்டும் என்பதுதான் ‘பசித்திரு’ என்பது. மனம் திறந்தவுடனேயே தேடலை ஆரம்பித்துவிடும். இப்போது மனப்பசியின் இயக்கம் உருவாகிவிட்டது.

இங்கே ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். ஒரு கிருஸ்துவ பாடல் ஒன்று உள்ளது:

‘தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்
என்றார்..’ என்று பாடுவார்கள்.

இதை வைத்து நான் ஒரு சின்ன கவிதை செய்தேன் ,

‘தட்டுவதற்கு பிரியம்தான்
கதவுகளை காண முடியவில்லையே!

கேட்பதற்கு ஆசைதான்
கண்முன்னால் எவரும் இல்லையே!

தேடுவதற்கு தயார்தான்
எதைத் தொலைத்தேன் என
தெரியவில்லையே!’

-என்று.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய இந்தக் கவிதை தவறானது என்று இப்போது எனக்கு தெரிகிறது.

அன்று, தட்டுவதற்கு கதவு வேண்டும் என்று சொன்ன அறிவு இப்போது கதவு தேவையில்லை எனக் கூறுகிறது. ஆமாம்! கைகளைக் கூடத்தான் தட்டலாம். பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காதவர்கள் கைகளைத் தட்டினால் திரும்பிப் பார்க்கிறார்கள். அவர்களின் காதுகள் உடனே திறக்கப்படுகின்றன. கேட்பதற்கு என் முன்னால் ஆள் வேண்டும் என்ற வரிகள் இப்போது பொய்யாகப் போய்விட்டன. பேச்சைக் கேட்பதற்கு ஆள் இல்லாமலேயே இப்போது கைகளை ஆட்டி அபிநயம் செய்து சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டு இருக்கலாம். முன்பெல்லாம் தனியே பேசிக்கொண்டு நடந்தால் பைத்தியம் என்பார்கள்! ’தேடுவதற்கு, தொலைந்தது தெரியவேண்டும்’ என்பதும் தவறுதான். ஒருவன் தன் பிறந்த நாளிலிருந்து பிரச்சனைகளின் நடுவே வாழ்கிறான். அவன் நிம்மதியை, காசு-பணத்தை தேடுகிறான். இவைகள் எல்லாவற்றையும் அவன் தொலைக்கவில்லை. இதுவரை அவனிடம் அவைகள் எல்லாம் இருந்தால்தானே தொலைக்க முடியும்?

எதையும் தொலைக்காமலேயே தேடலாம் என்று இப்போது புரிகிறது..!

பசித்திருப்பது மனசை திறந்து வைப்பது. திறந்தவுடனே இயக்கம் உயிர்பெற்றவிடும். தேடல் ஆரம்பிக்கும். எதைத் தேடவேண்டும் என்று மனசு சொல்லும். மனம் நிறைய பட்டியல் வைத்திருக்கும். ‘மனப்பசி’ அது. அறிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிற சாதாரண அந்த மனம், பணம்-காசு, புகழ்-வீடு-சொத்து என்று தேடச் சொல்லும்.

பெரும்பாலானோரின் மனம் இதுதான்.

இன்னொரு மனமும் உண்டு. அதில் எல்லாவற்றுக்கும் மூலகர்த்தாவாக இருக்கும் இறைஞானம் மட்டும் இருக்கும். இறையொளி மனசின் உள்ளொளியாக இருக்கும். காரணம் இந்த மனம் அறிவைத் தேடாது. அது ஞானவெளியிலும் ஒளியிலும் பரவசப்பட்டுக்கொண்டு இருக்கும்.

அதுசரி, இந்த இன்னொரு மனசுக்கு ஞானம் எப்படி சித்தித்தது? இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமெனில் உங்கள் மனசு ‘ஹீரா’ குகை இருட்டில் மானசீகமாக சஞ்சரிக்க வேண்டும்! ரசூலுல்லாவின் நினைவு வரவேண்டும். ‘இறைவா, எனக்கு எந்த அறிவும் தெரியாது..!’ என்ற அறிவு மட்டும் எனக்குத் தெரியும்..’ என்று கூறி மண்டியிட வேண்டும். நம் பெருமானார் (ஸல்-ம்) அவர்களுக்கு குளிர்தானே தெரிந்தது. இறைவன் அருளிய ‘நுபுவத்து’ தெரியவில்லையே..!

இப்போது ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘பசித்திரு’ என்ற வார்த்தை மனம் சார்ந்தது. அந்த மனம் அறிவை ஆராதிப்பது..! தேடலில் இன்பம் காண்பது. ‘சீனா சென்றேனும் கல்வியைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்று சொன்ன  – ’உம்மிநபி’யாக அறிமுகமான – அண்ணல் எம்பெருமானார் அவர்கள் மக்காவிலேயே நபித்துவத்தைப் பெற்றார்கள். சீனாவுக்கெல்லாம் போகவில்லை. இது எப்படி?

நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான்.

அறிவு அறியப்படுவது; ஞானம் அருளப்படுவது!

பெருமானார் அவர்கள் என்ன செய்தார்கள்?

தெரியவில்லை?

‘பசித்திரு’ என்ற சொல்லுக்கு அடுத்தது எது?

‘தனித்திரு’ இல்லையா?

இன்ஷா அல்லாஹ் – இதைப்பற்றி இன்னொரு தருணத்தில் பேசுவோம்.

வல்லநாயன் நல்லருள் புரிவான்!

ஆமீன்.

***

ஜபருல்லாஹ்நானா  8/9/2008ல் எழுதியது. அரபியுடன் ஆபிதீன் ‘தனித்திருப்பதால்’ இன்றுதான் பதிவிட இயன்றது! நானாவின் செல்லுக்கு (Cell :  0091 9842394119) சொல்லிவிடவும். நன்றி.

3 பின்னூட்டங்கள்

  1. 05/12/2011 இல் 19:09

    நானா,

    ஹஜ்ரத் அவர்கள் அருளிய வார்த்தைகளுக்கு விரிவுரை எழுதிவிட்டீர்கள்.

    எத்தனை பேர் பசியோடு இருக்கிறார்கள் என்பதில்தான் கேள்விக்குறி….

  2. எஸ்.எல்.எம். ஹனீபா said,

    07/12/2011 இல் 15:46

    ஜாபர் நானா, நாகூர் ஆண்டகை ஸ்தலத்தில் சந்தித்தோம். இப்பொழுது பசியில் பார்க்கிறோம். எந்த வகையான பசிகள் வயது போகப்போக மனிதனுக்கு ஏராளம் பசிகள். எனக்குத் தமிழ் கற்பித்துத் தந்த செல்லத்துரை ஆசான் சொல்லுவார், பசித்திரு, தனித்திரு, விழித்திரு உன்னை பதவி வந்தடையுமென்று சொன்னார். 66 வயது முடிந்து போனது. அப்படியொன்றும் வரவில்லை. இனிமேல் மையத்து பதவிதான் நிரந்தரமான பதவி. எப்படியும் எல்லோரையும் வந்தடைந்து விடும். உங்களின் மீதி எழுத்தைப் பார்த்திருக்கிறேன்.

  3. தாஜ் said,

    08/12/2011 இல் 09:23

    ஆபிதீன்…
    தப்பா நெனச்சிக்காதிங்க.
    என் மெயிலில் எர்ரர் வருது.
    அதனால
    இதையே மெயிலா உபயோஹிச்சிக்கிறேன்.
    அந்த அஸ்சரப் ஸிஹாப் தீன் பக்கத்தைப் பார்த்தேன்.
    அவரது உணர்ந்தடைந்த விதமும் அதன் நுட்பமும்
    என்னை சிலிர்க்க வைத்துவிட்டது.
    மனிதன் எனக்குப் போட்டியாக வந்துவிட்டார்.
    ஊர் உலகமும் சிலிர்த்து என்ன செய்வது?.
    நீங்கள் கண் விழித்துக் கொண்டே அல்லவா
    உறக்கம் காட்டுகின்றீர்கள்.
    வீறுக் கொண்டு எழவேண்டாமா?

    அந்தப்பதிவுக்கு…

    http://ashroffshihabdeen.blogspot.com/2011/12/blog-post.html

    (நம் வாசக நண்பர்கள் அனைவரும்
    மேற்குறிப்பிட்ட தளத்தை திறந்து-
    வாசித்து மகிழ வேண்டுகிறேன்.)

    – இரண்டு வரி எழுதலாம்…
    அவரது தீவிர உழைப்புக்கு
    நன்றி சொல்லும் முகமாக….

    //தாமதமே என்றாலும்…
    ஆபிதீனின்
    எழுத்துலகை
    மிக நுட்பமாக
    கண்டடைந்து இருக்கின்றீர்கள்.
    சந்தோஷமாக இருக்கிறது.
    நன்றி நண்பரே.
    -தாஜ்

    பின்குறிப்பு:

    ஆபிதீனின்
    உயிர்த் தலத்திற்கு
    நான் எழுதிய
    விமர்சன வரிகள்
    கீழ்கண்ட முகவரியில்-
    உங்களின் பார்வைக்கு-

    http://tamilpukkal.blogspot.com/2011/11/blog-post_22.html

    மீண்டும் நன்றி…
    -தாஜ்//

    -என்று
    எழுத
    நினைத்த போதும்
    அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டது எர்ரர்!

    உங்களது திட்டல்களை
    ஆவலுடன் எதிர் பார்க்கும்…
    -தாஜ்


பின்னூட்டமொன்றை இடுக