எச்சில் படாத நோன்பு (சிறுகதை) – நாகூர் ரூமி

நைஜீரிய முதுமொழிகள்

அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய தீக்கொன்றை மலரும் பருவம்’ (Season of Crimson Blossoms) நாவலில் , ஹாஜியா பிந்த்தாவை அடிக்கடி ஈரமாக்கும் போக்கிரி ரெஸா சொல்கிறான்: “நாம் எல்லோரும் ஆடையைப் போன்றவர்கள். கசக்கப்படுகிறோம், சுருங்கி விடுகிறோம், கிழிக்கப்படுகிறோம். சில வேளைகளில் அவை சரி செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றன. சிலர் மீண்டும் தைக்கப்படுகிறார்கள், ஒட்டுப் போடப்படுகிறார்கள், சிலரோ தூக்கி வீசப்படுகிறார்கள். சில ஆடைகள் பாக்கியம் பெற்றவை. மற்றவை அப்படி இல்லை. துரதிர்ஷடத்தோடும், மைக்கறையோடும் இன்னும் என்னென்னவெல்லாமோடோமோ பிறப்பவை.” (P.243) .

தமிழில் : லதா அருணாச்சலம்

சுவாரஸ்யமான நாவல். போடாத சமயங்களில் நாயகி பிந்த்தாவும் ரவுடி ரெஸாவும் ஒருவருக்கொருவர் , நீ தொழுதாயா, துவா கேட்டாயா என்று விசாரித்துக்கொள்கிறார்கள்! சரி, எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வரும் பிரமாதமான முதுமொழிகளை நன்றியுடன் பகிர்கிறேன்.

***

 • ”உயரே வீசி எறியப்பட்ட கல், நிச்சயம் நிலம் வீழ்ந்தே தீரும்”
 • “பறக்க இயலாததால் வண்ணத்துப்பூச்சி தன்னை ஒரு பறவையாகப் பாவித்துக் கொள்கிறது”
 • “சலவை சோப்பைக் கண்டுபிடிக்கும் முன்னரே கொக்கின் நிறம் தூய வெண்மைதான்
 • ”விழுந்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாதே; சறுக்கிய இடத்தை அடையாளம் கண்டுகொள்”
 • “முதியவரை உண்டபின், வாயில் நரைமுடி வருகிறதென்று முறையிடுதல் கூடாது”
 • “சட்டையை உரித்தபின்னும் பாம்பின் இயல்பு மாறுவதில்லை”
 • ”சிறு துரும்பென உள்நுழையும் தீமை, பின் விருட்சமெனப் படர்ந்து விடுகிறது”
 • “எத்தனை கனமாக இருந்த போதிலும் யானைக்குத் தந்தங்கள் சுமையல்ல”
 • “நிலத்திலிருந்து பறந்து எறும்புக்குழியின் மீது அமரும் பறவைக்குத் தெரிவதில்லை தான் இன்னும் நிலத்தில்தான் இருக்கிறோமென்று..”
 • “கருப்பு ஆட்டை இருள் கவியும் முன்பே தேடத் துவங்குதல் நலம்”
 • “கழுதைப் புலியால் தன் உடல் வீச்சத்தை ஒருபோதும் நுகர இயலாது”
 • “பாம்பு பெற்றெடுப்பதும் நீண்டதாகவே இருக்கும்”
 • “அடுப்படியில் தாய் இருக்கையில், மகனின் கிண்ணங்கிளில் உணவுக்கு எப்போதும் குறைவில்லை”
 • “கொம்புகளுள்ள எதையும் கோணிப்பையில் மறைத்து வைக்கக்கூடாது”
 • ”விவேகமான பறவையை வார்த்தைகளால் மட்டுமே வளைத்துப் பிடிக்கலாம்”
 • “கருமையான நீரில் கண்ணுக்குத் தெரியாமல் நீர் யானையை மறைய வைக்க முடியும்”
 • “நலிந்த எலும்பென்ற சொல் கேட்கையில் முதிர்பெண்டிர் மனதில் சஞ்சலம் எழும்பும்”
 • “கடல் வண்ணத்தை மாற்ற ஒரு வாளி சாய நீர் போதுமானதல்ல”
 • “நொண்டிக் கழுதைகளுக்கு ஏற்றதல்ல பந்தயக் குதிரைகளின் மைதானம்”
 • “பத்துத் தவளைகளைக் காட்டிலும் உடல் மெலிந்த யானை உயர்வானது”
 • “எதுவும் தீண்டாதவரை தென்னை ஓலைகள் சலசலப்பதில்லை”
 • “புத்தியுள்ளவன் கண்களுக்குத் தென்பட்டுவிடும் செம்மறி ஆட்டின் நரைத்த ரோமம்”
 • “மேகம் கறுப்பதைக் கண்டவுடன் பானைத் தண்ணீரை வீசியெறிதல் கூடாது”
  24 “விவேகமில்லாத குருடன்தான் வழிகாட்டியிடம் வாதம் செய்வான்”
  25 “பருந்தின் ஆதிநிலம் அறியாமல் இருந்திருந்தால் தான் மெதீனாவிலிருந்து வந்ததாக நம்ப வைத்துவிடும்”
 • “ஆட்டுக் கிடாய்கள் கூடியிருக்கும் இடத்தில், தனக்கும் கொம்புகள் இருப்பதாக ஒருபோதும் நத்தை சொல்லாது”
  27 “உணவுப்பண்டத்தை வாளால் வெட்டி உண்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது”
 • “பாலைப் போன்றது நல் மதிப்பு, திரிந்துவிட்டால் மீண்டு வராது”
 • “கழுகுகளின் நீதிமன்றத்தில் கோழிகளுக்கு நியாயம் கிடைக்காது”
 • “கழுதைப் புலியும், காட்டுக் கோழியும் உலவுமிடத்தில் என்றாவது ஒருநாள் மோதல் நிகழும்”
 • “ஒப்பாரிப் பாடலின் இனிமை இழப்பை ஈடு செய்யாது”
 • “வல்லூறுகளால் சூழப்பட்டிருக்கையில், இறக்காமலிருக்க முயற்சி செய்”

படிப்பினைகள் சொல்லும் காணொளி

Mothers… A lesson from Eagle… Mother’s love is incomparable to anything…
Thanks to : Alex Varma & Slm Hanifa
https://www.facebook.com/alex.varma.399/posts/3887640341256074

வாங்கு (மலையாளத் திரையோரம் – 2)

தம்பி ஆசிப் மீரான் எழுதிய அருமையான விமர்சனம் – நன்றியுடன்…

***

“ஆயிரக்கணக்கான நபிமார்களை உலகிற்கு அனுப்பியிருந்தும் ஏன் ஒரே ஒரு நபி கூட பெண்ணாக இல்லை?” என்ற கேள்வியைக் கவிதையில் கேட்டு விட்டு தக்கலை ஹெச்.ஜி.ரசூல் பட்டபாடு நாமறிந்தது.

இவ்வளவு இறுக்கமான மதவாதிகள் நிறைந்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் ஒரு பெண் பாங்கு ( தொழுகைக்கான அழைப்பு) சொல்ல ஆசைப்பட்டால் என்னாகும்?

அதையும் திரைப்படமாக்கிப் பார்க்கும் ஆசை வந்தால் அதுவும் மாற்று மதம் சார்ந்த ஒரு‌பெண் அந்தப் படத்தை இயக்கியிருந்தால் என்னாகியிருக்கும் இங்கு?

ஆனால் கேரள தேசத்தில் அது நிகழும். இத்தனைக்கும் வடகேரளத்தின் பெரும்பகுதி இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. இசுலாமிய இயக்கங்களும் கட்சிகளும் வலுவாக இயங்கும் ஒரு மாநிலத்தில் இது நிகழ்வதிலிருந்து ஒன்று தெளிவாகிறது.

ஒன்று இசுலாமிய இயக்கங்கள் திரைப்பட உருவாக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அதிகம் கவலைப் படுவதில்லை

அல்லது

இப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு அக்கறையேயில்லை

அநேகமாக முதலாவதுதான் சரியாக இருக்கக் கூடும். சமீபத்திய உதாரணம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதற்கு முன்பே ‘அலிஃப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. 3% வாக்குகள் வைத்துக்கொண்டு முந்நூறு பிரிவாக இயங்கும் நம்மூர் ‘முல்லா’க்களுக்கு ஒட்டு மொத்தமாகவே திரைப்படமென்பது ‘ஹராம்’ என்பதால்நாம் மல்லு தேசத்தைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படித்தான் நான் நம்புகிறேன்.

கல்லூரியில் படிக்கும் ரஸியாவுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பான பாங்கொலியைக் கேட்டு அதைப் போலவே தனக்கும் பாங்கு சொல்லத் தோன்றும் ஆசையைத் தன்‌ தோழிகளிடம் வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை இயல்பாகவே இருக்கிறது.

கல்லூரிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து “கல்லூரி‌ முடியும் முன்னர் உங்களுக்கென தனிப்பட்ட ஏதேனும் ஆசைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். கல்லூரியை விட்டு வெளியேறி விட்டால் வாழ்க்கையில் அவற்றை நிறைவேற்ற இயலாமல் போகலாம்” என்று சொல்வதன் அடிப்படையில் மற்ற மூன்று தோழிகளும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற எண்ணுகையில் ரஸியாவின் ஆசை மட்டும் பாங்கு சொல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது.

அதைச் சொன்னதுமே உடனிருக்கும் இசுலாமியத் தோழி பதற்றமடைந்து, ” உனக்கென்ன பைத்தியமா? இது தீவிளையாட்டு” என்கிறாள்.

ஆனால் ரஸியாவின் இந்த இரகசிய ஆசையை ஃபேஸ்புக்கில் மற்றொரு தோழி வெளிப்படுத்தி விட வீட்டில், கல்லூரியில் மட்டும் என்றில்லாமல் போகிற இடங்களில் எல்லாம் இம்சை தொடங்குகிறது ரஸியாவுக்கு. வாழ்க்கை நரகமாகி விடுகிறது அவர் குடும்பத்தினருக்கும்.

“பெண்ணை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா?” என்று நாத்தனார் குத்திக் காட்டுவது, உறவுகள் புடை சூழ பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் சொல்வது, ஜமா அத்தார் ஒன்று கூடி ரஸியாவின் தந்தையை எச்சரித்து பள்ளிவாசல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் ரத்து செய்வது, ‘பேய் பிடித்திருக்கலாம்’ என்று முஸலியாரிடம் ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதி ஊதிய நீரை வாங்கிக் குடிக்க வைப்பது என்று ஒட்டுமொத்தமாக மாறி விடுகிறது ரஸியாவின் அன்றாட வாழ்க்கை. “ஜேஎன்யூ”வில் படிப்பைத் தொடர நினைக்கும் நல்ல படிப்பாளியுமான ரஸியாவுக்கு எல்லா இடங்களிலிருந்து ம் ஏற்படுத்தப்படும் அழுத்தம் தாங்கவொணாததாகி விடுகிறது. ரஸியாவின் கனவுகளுக்கு எப்போதும் துணையிருக்கும் ரஸியாவின் தாயாருக்கும் ஏன் குடும்பத்தினருக்குமே கூட..

ரஸியாவால் பாங்கு சொல்ல முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.

“மதத்தைத் தொட்டு விளையாடாதே” என்று ரஸியாவுக்கு விடப்படும் எச்சரிக்கையைத்தான் இன்று எல்லா மதத் தீவிரவாதிகளும் நம்பிக்கையாளர்களுக்கும் சேர்த்தே விடுகிறார்கள்.

பல்லியை அடித்துக் கொல்ல முனையும் தம்பியைத் தடுக்கும் அக்காவிடம் “பல்லியைக் கொன்றால் நன்மை கிடைக்கும்” என்று ‘உஸ்தாத்’ கூறியதாகச் சொல்கிறான் தம்பி

“ஓர் உயிரைக் கொன்று மனிதர்கள் நன்மையைப் பெறுவதற்காக எதையாவது இறைவன் படைப்பானா?” என்கிறாள் அக்கா”உஸ்தாதுகளுக்குத் தெரியாத விசயமா உனக்குத் தெரியும்?” என்று மகளை அடக்கி வைத்து விட்டு “பல்லி குறைஷிகளிடம் நபிகளாரைக் காட்டிக் கொடுத்ததால் அதைக் கொன்றால் புண்ணியமென்றும் ஆனால் சிலந்தி நபிகளாரைக் காப்பாற்றியதால் அதைக் கொல்லக் கூடாதென்றும்” பாடம் நடத்துகிறார் வாப்பா.

“அப்படியென்றால் வீட்டில் ஒட்டடை அடிக்காமல் சிலந்திப்பண்ணை வைக்கலாமா வாப்பா?” என்றொரு வசனம் வைத்திருந்திருக்கலாம். (ஆபிதீன்‌ அண்ணன் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்கும்)

நபிகளாரைக் காப்பாற்றியது இறைவன்தானே தவிர சிலந்தியோ பிறவோ இல்லை என்பதை நம்புவதை விடவும் ‘உஸ்தாத்கள்’ உருவாக்கிச் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை நம்புவதையே இச்சமூகம் விரும்புகிறது என்பதே சோகம் 🙁

‘லீலா’ என்ற படத்தின் கதை திரைக்கதை எழுதிய அதே உன்னியின் கதையை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘கேரளா கஃபே” ‘சார்லி’ திரைப்படங்களின் கதை வசனகர்த்தா என்றால் ‘சட்’டென்று புரியலாம். “ஒழிவு திவஸத்தெ களி”யும் இவரது சிறுகதைதான் என்பது இன்னொரு கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலருகில் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய இந்தச் சிறுகதை 25 ஆண்டுகளுக்குப் பின் பொன்னானி என்கிற இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியின் பின்னணியில் திரைக்கதையாகியிருக்கிறது.

நாயகியின் தாயாகவும் வேடமேற்றிருக்கும் ஷப்னா முஹம்மதுதான் படத்தின் திரைக்கதையாசிரியருமே கூட. அறிமுகம் என்பதால் படத்தில் பெண்ணியத்தைப் பேசுவதா நம்பிக்கைகளின் அடிப்படையில் நழுவுவதா என்ற குழப்பத்தோடேயே காட்சிகளை உருவாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாயகியின் குழப்பங்களுக்கு திரைக்கதையும் காரணமாக இருக்கலாம் என்பது சறுக்கல்தான். ஆனால் முழுதுமாக ஒரு நம்பிக்கையைச் சிதைக்கும் விதத்தில் பெண்ணியம் பேசும் சூழலை மட்டுமே வைத்துப் படமெடுத்து விட முடியாது என்ற யதார்த்தத்திற்கான சமாதானமாகவும் அதனை வைத்துக் கொள்ளலாம்

படத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான். இந்த இசுலாமியப் பின்னணி கொண்ட திரைப்படத்தை இயக்கியவர் காவ்யா பிரகாஷ் என்பதும் அவரும் அறிமுக இயக்குநர்தான் என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கதையைச் சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம்.

அனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார் 🙂 அழகாகச் சிரிக்கிறார். சில நேரங்களில் யாருக்கு வந்த விதியோ என்றிருந்தாலும் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கிக் காப்பாற்றி விடுகிறார். வினீத் வழக்கம்போல சிறப்பாகத் தன் வேலையைச் செய்திருக்கிறார். “சுடானி ஃப்ரம் நைஜீரியா” புகழ் சரசா பாலுஸ்ஸேரியை இசுலாமியக் கதாபாத்திரங்களுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. நாயகியின் பாட்டியாக சில காட்சிகளே எனினும் அசத்தியிருக்கிறார்.

வீட்டிற்கு மருமகளும் பேத்தியும் புர்கா அணிந்து வரும் காட்சியைக் கண்டு விட்டு ” இதெந்து கோலம்?” என்று கேட்கும்போது அவரது உடல் மொழி அபாரம். ‘தட்டம்’ அணிந்த இசுலாமியப் பெண்கள் ‘புர்கா’வுக்குள் மாறிப்போனதை இந்தக் காட்சியின் மூலமாக உணர்த்த முனைந்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். பாடல்களில் கூடுதல் சிறப்புற இயங்கியிருக்கிறார். ஔசேப்பச்சன் நெடுநாட்களுக்குப் பின் இசை அமைத்திருக்கிறார். அவரது மேதமை முற்றாக வெளிப்படவில்லையெனினும் அவரது இசை ஓர் ஆறுதல்.

ஆனால் தேவையற்ற பாடல்களை வெட்டி நீக்கியிருந்தால் படத்தோடு இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக் கலாம்.

பி.எஸ். ரஃபீக்கின் வரிகளில்

“யாரோ நீ, நான்தானே நீநீயல்லவோ நான்மண்ணல்லவா நான்மழையும் அல்லவா நான்” என்ற பொருள் கொண்ட “மலயுடெ முகலில்” பாடல் ஈர்க்கிறது.

ஒரு வித்தியாசமான முயற்சி என்ற அளவில் தவிர்க்க முடியாத படமென்ற போதிலும் மத நம்பிக்கைகளுக்கெதிரான விசயங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வோடேயே படம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு முழுமையான படமாக இது உருவாகிவிடவில்லை என்பது ஒரு குறைதானென்றாலும்….

நல்ல படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரைக்கத் தயங்க மாட்டேன்

**

தொடர்புடைய பதிவு :

ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை

« Older entries Newer entries »