ஜாஃபர்நானாவின் கோணப் புளியாங்கா!

உண்மையில் , நானாவுடையது கோணலாக இருக்காது. (அதெப்படி தெரியும் என்று வதைக்காதீர்கள். அவர் சொன்னதுதான். நம்புகிறேன். ’ப்ரூஃப்’ கேட்டால் காட்டியே விடுவார் அந்த மனுசன்.) எழுத்தைச் சொல்கிறேன். ‘கோணப்புளியாங்கா’ என்பது மஞ்சக்கொல்லையிலுள்ள அவர் நண்பரின் பட்டப் பெயராம். இன்னொரு ஆன்மீகப் பதிவு எழுதுகிறேன் என்று துடித்தவரை அடக்கியது நான்தான். தர்மம், மெஹ்ராஜ்னு ஜனங்கள புல்லரிக்க வச்சது போதும். வேறமாதிரி எழுதுங்க என்றதும் எழுதியேவிட்டார். கூடவே ‘டோலக்’கும் வாசிக்கிறார். கேளுங்கள். எழுதுவதற்கு முன்பு ‘டோலக்னா என்னா?’ என்று ஒரு கேள்வி. ‘இடுப்பு நானா’ என்றதும் கடுப்பானார். ’கல்யாண சடங்குல வைப்பாஹலே, அத சொல்றேன்’ என்றார். உண்மைதான். ‘வைப்பது’ சம்பந்தமான எல்லா சடங்கிலும் வைப்பார்கள் – அந்த காலத்தில். இப்போது அதெல்லாம் மறைந்து விட்டது (’வைப்பது’ அல்ல!) என்ற அவர் ஆதங்கம் இந்தப் பதிவில் இருக்கிறது.  – ஆபிதீன்

***

ஹமீது ஜாஃபர்‘கோணப் புளியாங்கா’ என்கிறது ஒருத்தனுடைய பட்டப் பேர். அவன் கால் லேசா வளைஞ்சிருக்கும் அதனால்தான் அந்த பேருன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன், ஆனால் அதுக்கில்லையாம் அவண்டெ  குடைக்காம்பு மாதிரி இருக்குமாம். அதுக்குத்தானாம். ஆமா எல்லாத்துக்குமா உருண்டையா வாழைத் தண்டுமாதிரி இருக்கும்? செலருக்கு கொஞ்சம் சப்பையா, செலருக்கு பனங்கிழங்கு மாதிரி, செலருக்கு கெளுத்தி மீன் மாதிரி மண்டை பெருத்து உடம்பு சிறுத்து இருக்கும். இதுக்கெல்லாம் பேரு வச்சா..?  எங்க பயலுவ இருக்கான்களே ரொம்ப மோசம். இப்படித்தான் எங்க ஊர்லெ குடியிருந்த புலவர் ஒருத்தர் தன் மகனை ‘வீர மகன், வீர மகன்’டு சொல்லிக்கிட்டிருந்தார். அதை அப்படியே மாத்தி ‘அசதி’ ன்னு பேர் வச்சுட்டானுவ. அதுலேந்து அவனோட உண்மையான பெயர் மறைஞ்சு போயி ’அசதி’ நிலைச்சிடுச்சு. இன்னொருத்தருக்குப் பேரு ‘பச்ச மட்டை’ எப்படி பேரு வந்துச்சுன்னெல்லாம் தெரியாது. எங்களைவிட இருவது வயசு கூட. கோணப்புளியாங்காவையும் பச்சமட்டையையும்  பட்டப் பெயரை சொல்லிக் கூப்பிட்டா கையிலெ கெடைக்கிறதை எடுத்து அடிக்க வந்துடுவாங்க.  அதனாலெ நாங்க டெக்னிக்கலாத்தான் கூப்பிடுவோம்.

ஒருத்தனுக்குப் பேரு ‘அல்வாப்பீ.’ வாப்பா அல்வா வியாபாரி அதனாலெ அவனுக்கு அந்த பெயர். இப்படித்தான் ‘அல்வாப்பீ’ ஒருதடவை ரயில்வே போலிஸ் கிட்டே மாட்டிக்கிட்டான். உண்மையான பேரையும் அட்ரஸையும் கொடுத்துட்டு வந்துட்டான். இது யாருக்கும் தெரியாது. மறு நாள் போலிஸ் சம்மனுடன் வந்து ’அத்துல் கரீம் யாருங்க’ என்று கேட்க அந்த மாதிரி பேர்லெ இந்த தெருவுலெ யாரும் இல்லீங்க, அடுத்த தெருவுலேயும் இல்லை இன்னும் இரண்டு தெரு தள்ளின்னா விசாரிச்சுப் பாருங்க என்று சொல்லி அனுப்பினோம்.

போலிஸ் போய் கொஞ்ச நேரத்துலெ அல்வாப்பீ வந்து ’டேய் போலிஸ் போயிட்டானா?’ என்று கேட்டான். ’ஆமா போயிட்டான்’ என்றோம்.
’அத்துல் கரீம் எங்கே?’ன்னு கேட்டிருப்பானே?’ என்றான். ’ஆமா, அது யாரு?’ என்றோம். ’அது நாந்தாண்டா, இந்த ஊர்லெ எவனுக்குமே என்னோட  பேரு தெரியாது. அதனாலெத்தான் என் உண்மையான பேரை கொடுத்துட்டு வந்தேன்’ அப்டீன்னான். உம்மா வாப்பா வச்ச பேரு மறஞ்சுப்போயி நாங்க வச்சப் பேருதான் நெலச்சு நிக்கிது. இப்பவும் அவன் பேரு ‘அல்வாப்பீ’தான்.

’ஆடிப்பட்டம் தேடி விதை’ன்னு சொல்லுண்டு.  சாதாரணமா ஆடி மாசம் வந்தால் விவசாயம் ஆரம்பமாயிடும். எல்லா விவசாயிகளும் பிஸி ஆயிடுவாங்க. இந்த பிஸி தை, மாசி வரை இருக்கும். நெல் வித்த காசு, அறுப்பறுத்த காசு என்று விவசாயிகள் கையிலெ காசு இருக்கும்.  மாரியம்மன் கோயில் திருவிழா, முருகன் கோயில் காவடித் திருவிழா, திரௌபதி அம்மன் திருவிழா; இதல்லாமல் கோயிலுக்கு கஞ்சி காச்சி ஊத்துற விழா அப்டீன்னெல்லாம் நெறைய நடக்குற திருவிழாவுலெ கையிலெ இருக்கிற காசெல்லாம் கரைஞ்சுப் போயிடும்.

இந்த திருவிழாக்கள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவல்லதாக இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கிராமங்களிலே திரௌபதி அம்மன் கதை, மதுரை வீரன் கதை என்று தெருக்கூத்துக்கள் நிறைய நடக்கும். அதில் ஒன்று காத்தவராயன் கதை . எனக்கு கருத்து தெரிஞ்சு இந்த காத்தவராயன் கதை குடியானவங்க தெருக்களில் நடக்கும். அல்லது அதை ஒட்டியுள்ள வயல் வெளியில் அல்லது திடலில் அல்லது அங்குள்ள சின்ன பிள்ளையார் கோயில் வாசலில் நடக்கும். வயல் வேலை செய்யும் ஏழை விவசாயிகளுக்கு  இதான் பொழுது போக்கு. சின்னதா மேடைப் போட்டு மைக் செட்டெல்லாம் கட்டி, ட்யூப் லைட் போட்டு ஏக தடபுடலா நடக்கும். ராத்திரி பத்து பத்தரைக்கு ஆரம்பிச்சா விடியக்காலை மூணு மூணரை வரை நடக்கும். இது நாட்டிய நாடக வகையை சேர்ந்ததுன்னு சொல்லலாம்.

தேர் திருவிழாவுலெ அறுப்பறுத்த காசையெல்லாம் செலவழிச்சிட்டு வழியில்லாமெ இருக்கும்போதுதான் திருட்டு பயம் தொடங்கும். அதனாலெ நாங்க சின்ன செட்டா சேர்ந்து ராத்திரி மூணு மணிவரை காவலுக்கு ஊரை சுத்துவோம். எங்களுக்குத் தெரியும் , யார் யார் திருட வருவானுங்க என்று. அதனாலெ அவங்களை கண்காணிக்கிறதுக்காக காத்தவராயன் கதை கேட்கப் போவோம். அங்கே போனா சும்மா இருக்காமெ அங்கே கதை சொல்பவர்களுக்கு காசு கொடுப்போம். அஞ்சு காசோ பத்துக் காசோ கொடுத்தா மைக்குலெ அனவுன்ஸ் பண்ணுவாங்க. கதை நடந்துக்கொண்டிருக்கும்போதே நாடகக்காரங்க கூட்டத்துலெ வசூல் பண்ணுவாங்க. அப்பொ காசைக் கொடுத்து பேரையும் சொல்லிவிடுவோம். உடனே அங்கே அனவுன்ஸாகும்.  ’கோணப்புளியாங்கா அண்ணனால் கொடுக்கப்பட்ட காசு அஞ்சு…….’, ’அல்வாப்பீ அண்ணனால் கொடுக்கப்பட்டக் காசு பத்து….’ அப்டீன்னு நீட்டி சொல்லுவாங்க. கூட்டம் ‘கொல்’லென்னு சிரிக்கும், எங்களுக்கு வேடிக்கை, அவங்க கடுப்பாவாங்க.

கோணப்புளியாங்காவின் அசல் பெயர் சுல்தான். அசல் பேரு எங்கே நிக்கிது , நாங்க வக்கிற பேருதானே நெலைக்கிது? அவன் கோபப்படுறதுனாலெ  சுருங்கி , ’கோணா பூனா’ ஆயி, அதையும் சுருக்கி  ’கே. பி. எஸ்’-லெ வந்து நாகரீகமா நின்னுடுச்சு. அதாவது ’கோணப் புளியாங்கா சுல்தான்’ சுருக்கம். அவனுக்கு பூர்வீகம் மலபார். எப்பவோ அவனோட வாப்பா இங்கே வந்து குடியேறி இருக்கார், இவர் மட்டுமல்ல , மலபார்லேந்து எத்தனையோ குடும்பம் நம்ம பக்கம் வந்து செட்டில் ஆயிருக்காங்க, ஆனா இவனுக்கு தமிழைத் தவிர வேறே ஒன்னும் தெரியாது. நல்ல உழைப்பாளி. ஒரு வீட்டுலெ தேவைன்னா  இவனிடம் சொன்னால் போதும் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவான். நாம கவலையேப் படத்தேவையில்லை.  ’டோலக்’ உள்பட அவனே ஏற்பாடு பண்ணிடுவான். அவனுக்கும் கல்யாணம் ஆச்சு. யாரோ சொந்தமாம், நல்ல வசதியா இருக்காங்கலாம். எப்படியோ கேள்விப் பட்டு மலபார்லேந்து வந்து இவனை அழைச்சிக்கிட்டுப் போய் அங்கேயே கல்யாணத்தை முடிச்சு வச்சு இருக்க வச்சுட்டாங்க. இவனுக்கு மலயாளம் தெரியாது பொண்ணுக்கு தமிழ் தெரியாது. இதுக்கு மொழி எதுக்கு? ஆனால் மத்தவங்களோட பேச..? அதனாலெ அங்கே சரிப்பட்டு வராதுன்னுட்டு பொண்டாட்டியெ கூட்டிக்கிட்டு நம்மவூருதான் சரி அப்டீன்னுட்டு இங்கேயே வந்துட்டான்.

முன்னே எல்லாம் எங்க பக்கம் கல்யாணத்துலேந்து காதுகுத்து வரைக்கும் நடக்குற தேவைகளில் பொம்பளைங்களுக்காக ‘டோல்/டோலக்கு’ன்னு ஒரு அயிட்டம் இருக்கும். டோலக்கு இருந்தா , அந்த வூடு களைகட்டும். டோலக்கு அடிக்கிறவங்க கொஞ்சம் வயசான பொம்பளையா இருப்பாங்க. கல்யாணத்துக்கு முந்தி மருதாணி இடும் இரவும், கல்யாணத்துலெ நிக்காஹ் முடிஞ்சு மத்த மத்த சில்லறை சடங்கெல்லாம் முடிஞ்சபிறகு இந்த சங்கதி ஆரம்பமாகும்.  மொதல்லெ ’பிஸ்மி’ சொல்லி பெருமானார் பேராலே ஒரு பாமாலை பாடிவிட்டு இஸ்லாத்தைப் பத்தி கொஞ்சம் பாடுவாங்க அப்புறமா ட்ரெண்டு மாறும். ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்து பொண்ணு மாப்பிள்ளைப் பேரை சொன்னால் போதும், அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து பச்சை பச்சையா பாடி புரட்டி எடுப்பாங்க. இதெ கேட்டுக்கிட்டு இருக்கிற மத்த மத்தப் பொம்பளைங்க சிரிப்பொலியும் குலவை சத்தமுமாக ஏக தடபுடலா இருக்கும். எது வரைக்கும்னா பாடப்படுபவர் காசு கொடுக்குற வரைக்கும். அப்படி காசு கொடுக்கும்போது வேறு ரெண்டு பேரு பெயரை சொல்லிடுவாங்க, புதுசா சொல்லப்பட்ட பெயருடன் பாட்டு தொடரும். எழுத்துக்கு அப்பாற்பட்ட வரிகளைச் சொல்லித்தான் பாடுவாங்க. இது ராத்திரி மூணு மூணரை வரை நடக்கும். அதாகப்பட்டது என்னவென்றால் சாந்தி முகூர்த்தத்தோடு இது இரண்டரக் கலக்கும். கையிலெ சலங்கையைக் கட்டிக்கிட்டு டோலக்கை அடிச்சு சூப்புரா வார்த்தைகளோட பாடுறதைக் கேட்கும்போது… ஆஹா.. சக்கரைப் பந்தல்லெ தேன் மாரிப்பொழிஞ்சது மாதிரி அமோகமா இருக்கும். ச்ச்ச்ச்ச்சு……. கேட்க காது வேணும். இவ்வளவு கூத்துக்கும் யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க.

அவங்களுக்கு காத்தவராயன் கதைன்னா நமக்கு நூறு மசலா இருந்துச்சு. ’ரவணா’ அடிச்சுப் பாடுறவங்க இருந்தாங்க. யாரு வீட்டு வாசல் திண்ணையிலாவது , இல்லேன்னா சின்னதா ஒரு மேடை போட்டு இந்த கச்சேரி நடக்கும். பதம் பாடப் போறாகண்டு ஒரு நாளைக்கு முந்தியே அனவுன்ஸாயிடும். எல்லோரும் வந்துடுவாங்க. தப்ஸ் அல்லது பறை மாதிரி இருக்கும் ஆனால் தப்ஸைவிட  இரு பங்கு பெரியது ரவணா என்ற கொட்டு. இது ஒன்று மட்டும் தான் இசைக் கருவி. பதப்பாட்டு என்றால் பொதுவா எல்லோரும் கேட்பாங்க. பெரும்பாலும் ஒருத்தர் அல்லது இரண்டு பேர் மாறி மாறி அடிச்சுப் பாடுவாங்க. இதிலும் பெருமானார் பேரால் திருப்புகழ், பாமாலை பாடுவாங்க.  அலி பாத்திமா கதை, நூறு மசலா, லைலா மஜ்னு போன்ற காப்பியங்களையும், சமூகவியலைப் பத்தியும் பாடலாப் பாடுவாங்க. சமூகவியலைப் பத்திப் பாடும்போது…

’ஆத்து மீனு சேத்து நாத்தம் சோத்துக் காகாது – பெண்களே
 சோத்துக் காகாது…
கொடுவா மீனு திண்ட ருசி குடிகெட்டுப் போச்சு – ஆயிஷா
 குடிகெட்டுப் போச்சு…’

இது மாதிரி பல வரிகள் வரும். எனக்கு ஞாபகத்திலில்லை. நேத்து உண்ட சோத்துக்கு கறி என்னாண்டு ஞாபகமில்லை , எட்டு பத்து வயசுலெ கேட்டது எப்படி ஞாபகத்துக்கு வரும்? அந்த காலத்துலெ அப்பாஸ் நாடகமெல்லாம் நடக்குமாம். நாடகத்துலெ பெண் வேசத்துலெ ஆண்கள்தான் நடிப்பாங்களாம். அப்படி நடக்கும்போது ஒரு காதல் காட்சி. கதாநாயகனும் கதாநாயகியும் பூங்காவனத்தில் இருக்கிறார்கள், மதி மயக்கும் மாலை நேரம். காதலன் தன் காதலியை அணைத்தவாறே தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி . நடிச்சதோ கூட்டாளிகள், பழக்கதோஷத்தில் வந்த வசனம் இதோ….

’ஓய் அங்கே பாருங்கனி! ஹூதாண்டும், ஹேந்திண்டும், சேப்புண்டும் கலர் கலரா பூ பூத்திக்கிது, கலர் லைட்டெல்லாம் போட்டு வச்சிருக்காஹ, நீம்பரு இதெ வுட்டுட்டு கடக்கரைக்கு கூப்பிட்டியுமே..! வாங்கனி அங்கே குத்தவச்சுப் பேசலாம்’ அப்டீன்னதும் ‘ஹோ….’ண்டு ஒரே சிரிப்பு. அப்பத்தான் மாப்ளைக்கு தெரிஞ்சுதாம் வசனத்தை மாத்திப் பேசிட்டோம்னு.

இப்படி எல்லாம் அந்த காலத்து மனுசர்கள் அனுபவிச்சிருக்கிறார்கள். இப்பவுள்ள நவீனத்தில் அதெல்லாம் மறைந்து விட்டது. ரவணாவும் இல்லை டோலக்கும் இல்லை, பாடுபவர்களும் இல்லை. எங்கேயாவது விட்ட குறை தொட்ட குறையாக இருந்தால் அங்கே இஸ்லாத்தோட ஏஜண்டுகளின் தொல்லை. இப்ப எப்படி கல்யாணம் நடக்குது? ஒரு மேடை . அதுலெ மாப்பிள்ளை உட்கார்ந்திருப்பார். தோழன்மாரும் ஒரே மாதிரி ட்ரஸ் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. யார் மாப்பிள்ளை என்று கண்டுபிடிக்கறது கஷ்டம். மாலை எல்லாம் கிடையாது.  ஒரு ‘ஆல்+இம்(சை)சா’ பயான் பண்ணிக்கிட்டிருப்பார். என்ன சொல்றார் என்கிறது அவருக்கும் தெரியாது கேட்கிறவங்களுக்கும் புரியாது. கேட்டால் நபி வழி கல்யாணமாம்.

இவங்கத்தான் நபியை பார்த்துட்டு வந்திருக்காங்க… அந்த காலத்துலெ அரபு நாட்டுலெ பேரீச்சை மரத்தைத் தவிர வேறே எதுவும் கிடையாது. பேரீச்சைப் பழமும் ஒட்டகப் பாலும்தான் அங்கே  கிடைக்கும். இங்கே பூவிலிருந்து கனி வர்க்கம் வரை எல்லாமே கிடைக்கிறது, எல்லா செல்வங்களையும் நமக்குத் தந்திருக்கிறான் இறைவன். நல்ல மணமுள்ள மல்லிகை முல்லைப் பூவில் மாலை இட்டு மணக்கோலம் பூண்டால் என்ன? அல்லா கோவிச்சக்கப் போறானா இல்லை கல்யாணம்தான் ஹராமாயிடுமா ? இது மட்டும் நபி வழி கிடையாது, உங்கப் பொண்ணுக்குத்தானே கொடுக்குறீங்கண்டு பின்னாலெ நகைநட்டை கறக்கிறது நபிவழியாக்கும்.

நம்மிடம் அந்த பழைய கலாச்சாரம் பண்பாடெல்லாம் இருந்தப்ப மக்கள் சுபிட்சமா இருந்தாங்க, நோய் நொடி குறைவாக இருந்துச்சு, செழுமை இருந்தது. ஆனால் இப்பொ அவைகள் மறைய மறைய அந்த சந்தோஷம் இல்லை, செழுமை இல்லை. மாறாக நோயும் கவலையும் நிற்கிறது. மொத்தத்தில்,  உணர்ச்சி இல்லா சிரிப்பும், ’பரக்கத்’ இல்லாத செல்வமும்தான் நம்மிடம் இருக்கிறது.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும்

இந்தப் பதிவு முஸ்லிம்களுக்கு மட்டும். ஆமாம், அவர்களுக்கு மட்டும்தான். படிக்கும் சகோதர சமயத்து நண்பர்கள் குழம்பிவிடுவார்கள் என்பதால் அவர்களை மீராஜ்-ஏ-கஜல்  கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குலாம்அலியும் ஆஷாபான்ஷ்லேயும் இணைந்து பாடியது. அப்படியாவது இந்தியாவும் பாகிஸ்தானும் இணையட்டுமே.  உண்மையில் , இம்மாதிரி ’ப்யூர்’ இஸ்லாமிய கட்டுரைகளை நான் பதிவிட விரும்பவில்லை. இது இலக்கியத்திற்கான பக்கம். ஜாஃபர்நானாவின் வற்புறுத்தல் காரணமாக பதிவிடுகிறேன். கதைசொல்லி கி.ரா ஐயா சொல்வதுபோல ‘தட்ட முடியாமல் தாட்சண்யம் கருதித்தான் ஒப்புக் கொள்கிறது’. தவிர,  நானா அவ்வப்போது வில்லங்கமான ஹஜ்ரத் கதைகளும் எழுதுபவராயிற்றே. தினம் ஆறுபேர் ஆவலோடு படிக்கும் ஆபிதீன் பக்கங்களில் பதிவிடவேண்டியதுதான். இந்தப் பதிவு சம்பந்தமான வினாக்களை எழுப்புவோர் அவரது மின்னஞ்சலை ( manjaijaffer@gmail.com ) தொடர்புகொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள். நான் பெரிய சோதா. சோதனையாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன் :

இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கலவரம் வெடித்தபோது அதிதீவிரத்தோடு இயங்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இளைஞர்களைக் கைது செய்த போலீஸ் , அடுத்த பிரிவினரை (இதுக்கும் பெயர் வேண்டாம்) அப்படியே விட்டுவிட்டதாம். காரணம் கேட்டதற்கு, ‘பாவம்ங்க அவங்க. பூமிலெ உள்ளதெயே பேசமாட்டாங்க ; ஏன் , நெனைக்ககூட மாட்டாங்க..எல்லாம் வானத்துக்கு மேலேதான்’ என்று பரிதாபப்பட்டதாம்! நண்பர் தாஜ் சொன்ன உண்மை சம்பவம் இது. சிந்திப்பவர்களுக்கு இதில் சில செய்திகள் இருக்கின்றன.  மேலும் செய்திகள் வேண்டுவோர் புனித ’மெஹ்ராஜ்’ பற்றி தம்பி இஸ்மாயில் எழுதிய பதிவை வாசிக்கவும். அதிலிருக்கும் – எங்கள் ஹஜ்ரத் சொல்லும்-  செய்தியும் ஜாஃபர்நானா அனுப்பியதுதான். இங்கே,  ஹஜ்ரத்தின் பிரதான சீடரான ஜபருல்லா பேசியதை அனுப்பியிருக்கிறார். பாவம், நானா ரொம்பவும் மெனக்கெடுகிறார். இறைவன் அவருடைய பிழைகளைப் பொறுப்பானாக, ஆமீன்.

ஜாஃபர்நானா தொகுத்த ஜபருல்லாநானாவின் உரையைத் தொடர்வதற்கு முன் , எனது மதிப்பிற்குரிய , நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்மாமா அவர்கள் தனது சீடர் இசைமணி யூசுப் அவர்களுடன் இணைந்து பாடிய அருமையான பாடலைக் கேளுங்கள்.  அசனாமரைக்கார் அனுப்பினார் , மெஹ்ராஜ் ஸ்பெஷல் என்று. நன்றி! – ஆபிதீன்

Download: இறைவன் அழைத்தான் திருநபிஐய்…
 

***

ஹமீது ஜாஃபர்ஹமீது ஜாஃபர்  : நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு. Bukari Vol 1. no 345  &   Bukari Vol 4. no 429  ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப்  படிக்கிறவர்கள் கண்களில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் மிஃராஜ்  பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம், படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனேயொழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள்.

நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்தத் தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநள்ளாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியது. அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் அந்த ஊர் நாட்டாண்மை, விஷயம் தெரிந்தவர் ; மார்க்கப் பற்று அதிகம் உள்ளவர், நானா மீது தனி பிரியம் வைத்திருந்தார். இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் ஒன்று நானா மற்றொன்று c.v. அபுபக்கர் ஷா பாக்கவி, இவர் கோயம்புத்தூர் இம்தாதுல் உலமா மதரஸா பிரின்சிபால். ஹஜ்ரத் அவர்கள், மிக விஷேசமானவர்கள் தமிழ் நாட்டில் மதிக்கப்படுபவர்கள். மிகச் சிறந்த பேச்சாளர். அவர்கள் எந்த கூட்டத்திற்கு பேசப்போனாலும் ஜஃபருல்லாஹ்வும் கண்டிப்பாகப் பேசியாகவேண்டும். இது அவர்கள் இடும் நிபந்தனை. அந்த அளவுக்கு நானாமீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர்கள். அன்றைய தினம் நடந்த அந்த கூட்டத்தில் முதல் சிறப்பு சொற்பொழிவாற்ற நானா தொடங்கியவுடன் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, ”வெட்டுவேன், குத்துவேன்” என்றெல்லாம் அமளிதுமளியாகியது. அதே மாதிரி நீங்களும் ஆகாமல் ஜபருல்லாநானாவின் பேச்சைக் கேளுங்கள்.

***

“அல் இஸ்ரா வல் மிஃராஜ்”

தொகுப்பு: ஹமீது ஜாஃபர்

***

ஜபருல்லா ஆரம்பித்தார் :

அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கு தெரிஞ்சு ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…!

(“ஆய்…….. ஊய்ய்………., அடக்கு….., நிறுத்து… எறங்கு….., ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..உய்ய்ய்ய்ய்ய்ய்…”  –  கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் கத்த ஆரம்பித்துவிட்டனர்.)

சத்தம்போடாதீங்க, நான் உண்மையெ தான் சொல்றேன். ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகலை!

(”உட்காருயா, பேசாதே, காஃபிரு” –  மீண்டும் கத்திக்கொண்டு மேடையை நோக்கி வந்தனர் சிலர்.)

உடனே கூட்டத்தின் தலைவர் எழுந்து, ‘உட்காருங்கப்பா, ஒரு வார்த்தைக்கு எந்திரிச்சிட்டீங்க, உட்காரு, அவர் ஒரு சேதி சொல்லுவாரு உங்க கோவம் அடங்கிடும்; கடைசியிலெ பாரு; ரசூலுல்லா சொன்னாஹ என் பின்னாலெ வாங்கன்னு, எங்கே போறேன்னு சொன்னாஹலா? அந்த மாதிரி சொல்லிருக்காஹ, உட்காருங்க  …’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹஜ்ரத் c.v. அபுபக்கர் ஷா பாக்கவி எழுந்து ‘ஜஃபருல்லாஹ் அருமையான சிந்தனைவாதி அதுமாத்திரமல்ல அந்த சிந்தனை சரியானத் தடத்திலெ போகுதாங்கிறதை சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான குருவை வச்சிருக்கிறவங்க, அவர்கள் இப்படி சொல்வதென்றால் அருமையான ஒரு செய்தியை உங்களுக்கு கொடுப்பதற்காக. உங்களுடைய உள்ளங்களெல்லாம் கோபத்தாலெ இருந்தாலும் சரிதான் பாசத்தாலெ இருந்தாலும் சரிதான், உங்களுடைய மனத்தைத் திறக்கவேண்டும். திடீரென்று சொன்னால்தான் மனம் திறக்கும் உட்காருங்க’ என்று சொன்னதும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.

ஜபருல்லா தொடர்ந்தார் :

இதைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, ’என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்’டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல; அதுக்குப் ’இஸ்ரா’ன்னு பேரு. அங்கேர்ந்து ரசூலுல்லாஹ் மேலே போனாங்கன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு பேரு ’மெஹ்ராஜு’. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து ’இஸ்ரா’ போனாஹ, ’மெஹ்ராஜு’க்குப் போனாஹாங்குறதுலெ நமக்கு என்ன முன்மாதிரி இருக்கு? நாம போக முடியாதே !

என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ, கடுகடுன்னு பேசும்போதுகூட ’யா முஜம்மில்’ அப்டீன்னு அழைக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; ’சிராஜுல் முனீர்’ அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து…. அது மாத்திரமல்ல , ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.

நாம் ’அவாம்’. ரசூலுல்லாஹ் யாரு ?  நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ்,  என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய ’அப்தை’ (அப்து – அடிமை) என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ’ரசூல்’ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய ’அப்து’ என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும்  சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ’ஹக்’ வேறே ’ஹல்க்’ வேறே ; அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே  நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும்  ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத , அல்லாவை மட்டும் தெரிஞ்ச , அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டான். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.

அடுத்தது ’திர்மிதி’யிலெ இருந்தது ’புஹாரி’லெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாங்க,  அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாங்க, இருபதா கொறச்சாங்க,  மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாங்க, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாங்க அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ  உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை! இஹலுக்கு (ரசூலுக்கு)  சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால்? அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை, நுபுவத்தை முடிச்சுட்டான், குர்ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார்  என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ ஹதீஸிலெ. இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ , ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.

நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா….? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாங்க. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ’ஷட்டிங்’ பஸ்ஸா – போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தான் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாங்க, அலுப்பு பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னாருண்டு!

(சிரிப்பொலி)

இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நம்ம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இது இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அவங்க இப்படி பேசினாங்க, இவங்க இப்படி பேசினாங்க அப்டீன்னு.. ’இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்’ என்று மூசா(அலை) துஆ செஞ்சாங்க. அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களா?ன்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல? ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன்  சொல்லலை, காரணம் என்ன? ’சிந்தியுங்கள்’ என்கிறான் அல்லாஹ்.

நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை (இது) . ஹஜ்ஜுலே நடக்கிறது பூரா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம் ‘அலை’ஹிஸ்ஸலாத்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்… அங்கே நடக்கிறது பூரா…அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம்! அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ்.  சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான்?’ என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது , முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தா பண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ ’சஜ்தா’ என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.

இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன…? சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம் / பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா ? இல்லை ,  அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும்?  மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப்  பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா? தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or  for him?  அதைச் சொல்லுங்க. அல்லாவைத் தொழுவுறீங்களா, அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்… ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு – அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு – அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் – உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; ’லாயிலாஹ இல்லல்லாஹ்’ / கலிமா – உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான். இல்லாட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு..? தொழுகை.  அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வந்தா அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்?

இந்த செய்தி  பூரா அல்லாடதான்னு நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்க முடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.

அதனாலெ ’ஆதம்’ என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது..

**

’ஹும்….. இதுக்கு மேலே நான் பேசணுமா? பாருங்க, ஒரு அருமையான தத்துவத்தை கொடுத்திருக்கிறார். அல்லாஹ் சொல்றான் . சிந்தியுங்கள் என்று.  யோசனை பண்ணிப் பாருங்கப்பா ‘ –   (முடிவுரையில்) c v அபுபக்கர் பாக்கவி.

**

 நன்றி : இஜட். ஜபருல்லா, ஹமீது ஜாஃபர்

***

அருஞ்சொற்கள்:

இஸ்ரா –  வேகமாகப் பயணித்தல்
மெஹ்ராஜ்  – தூல உலகத்திலிருந்து சூக்கும உலகத்துக்கு உயருதல்
சிதரத்துல் முந்தஹா – சுவனத்தில் ஓர் இடம்
ஃபர்ளு  –  கட்டாயம் செய்யவேண்டிய கடமை
ஹதீஸ்  – நபிகளாரின் சொல், செயல்
நிய்யத்து  – செயலுக்குமுன் உண்டாகும் எண்ணம்
கபுரு  – அடக்கஸ்தலம்
காஃபிர்  – இறைவனை நிராகாரிப்பவன்
சஜ்தா  – அடிபணிதல், சிரம் தாழ்த்துதல்
வக்து  – நேரம்
ஷைத்தான் – இறைவனுக்கு எதிரானவன்
ஆலிம்  – (மார்க்க)அறிஞர்

18++ : அசரத்தின் சுபுஹானல்லாஹ்! – ஹமீது ஜாஃபர்

அஸ்தஃபிருல்லா,  நானாவின் அழிச்சாட்டியத்திற்கு அளவே இல்லையா? ஜெஜக்கல், சே, ஜெகஜாலகுல்லாவில் தயிர்! கண்டிப்பா இன்னக்கி நானாவுக்கு வீங்கிடும் , கன்னம். நான் ஓடிவிடுகிறேன்….   – ஆபிதீன்

***

ஹமீது ஜாஃபர்சுமார் நாற்பது வருஷத்துக்கு முந்திவரை ஹஜ்ரத்மார்கள் சினிமாவுக்குப் போகமுடியாது. குமுதம் ஆனந்தவிகடன் படிக்க முடியாது. சினிமாப் பாட்டு வூட்டுலெ ரேடியோவுலெ கேட்கமுடியாது. அப்படி மீறி எதாவது நடந்தால் உடனே நாட்டாக்காரர்கள் ஊர் கூட்டத்தைக் கூட்டி அவர் மேலே நடவடிக்கை எடுப்பாங்க. சில சமயம் வேலையெ விட்டே தூக்கிடுவாங்க. மதரஸாவுலெ ஓதிட்டு வர்ற ஹஜரத்துமார்களுக்கு தொழுவிச்சு கொடுப்பது, பிள்ளைங்களுக்கு ஓதி கொடுப்பது இந்த தொழிலைத் தவிர வேறே தெரியாது. அதனாலெ அவங்க பயந்து பயந்து வாழ்க்கை நடத்துவாங்க; அவங்களுக்கு பொழுதுபோக்கு கிடையாது. அவங்களுக்குள்ள பொழுது போக்கு ஒன்னே ஒன்னுத்தான். அந்த பொழுது போக்குனாலெ புள்ளைக்குட்டிகள் நெறைய இருக்கும். பாவம் அப்பவெல்லாம் அவங்க வாயில்லா பூச்சி. இப்ப அந்த ட்ரெண்டு மாறிப்போச்சு; ரொம்ப விவரமா இருக்காங்க. வாழ்க வளமுடன்.

1969 – லெ எங்க ஊருக்கு ஒரு ஹஜரத்து வந்தாரு. வயசு என்னைவிட மூணு நாலு கூட. கல்யாணம் ஆன புதுசு அவருடைய வாப்பா பார்த்துக்கிட்டிருந்த வேலையை ஒப்புக்கொண்டு செய்துவந்தார். ஒத்த வயசா இருந்ததாலெ அவர் கூட கூட்டாளி மாதிரி பழகிவந்தேன் இல்லை வந்தோம். ‘(b)பாய்’ என்றுதான் கூப்பிடுவோம். அவருக்குப் பிடிச்சது சொக்கலால் ராம்சேட் பீடி. அவர் தலைமாட்டிலேயே இருக்கும். அவர்கிட்டே தான் நல்லா தம் அடிக்க கத்துக்கிட்டேன். உஸ்தாதுன்னா எதாவது கத்துகொடுக்கனும்ல..

படிச்சுப்புட்டு வேலை இல்லாம இருக்கும்போது சில நேரங்களில் அவர்கூடத்தான் பொழுது போக்குவேன். மனசு கவலையா இருக்கும்போது “புண் பட்ட மனசை புகையெ விட்டு ஆத்துங்க ஹமீது ஜாபர்”ன்னு ரெண்டு பீடியெ எடுத்துக் கொடுத்து “ஒன்னுக்குப் பின்னாலெ ஒன்னு அடிங்க” எல்லாம் சரியாபோயிடும் அப்டீம்பார். சின்னதா இருத்ததாலெ ரெண்டு இழுப்புக்கு சொக்கலால் சோக்கா இருப்பார். நல்ல படம் வந்தால் அவரை இழுத்துக்கிட்டு செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போவேன். ஒரு முறை அவருக்கு உஷ்ணம் ஜாஸ்தி ஆயி கண்ணெல்லாம் பொகைய ஆரம்பிச்சப்ப அசர் தொழுதுட்டு ‘சாயந்திர கள்’ இறக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போய் ஃப்ரஷ்ஷா தென்னை மரக் கள் ஒரு லிட்டர் வாங்கி ஊத்திவிட்டேன். ஆளுக்கு பாதி அடிச்சோம். சும்மா சொல்லக்கூடாது மார்க்கத்தை மதிச்சு தலையிலெ தொப்பியோட ’பிஸ்மி’ சொல்லி சங்கையா குடிச்சார்.  மறு நாளே வியாதி அவுட். அப்புறம் வரவே இல்லை.  எப்படி… நம்ம மருந்து?

ஒரு நாள் நல்ல மூடுலெ இருக்கும்போது அவர் சொன்ன கதையை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ள ஆசை. அது இங்கே….

நூறு நூத்தம்பது வருஷத்துக்கு முந்தி எலக்ட்ரிசிட்டி வராத காலம். ஒரு அசரத்துக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு. அவருக்கு பலமாதிரியான கற்பனை. பொண்ணு அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும். வெள்ளையா இருக்கணும், செவளையா இருக்கணும், புஷ்டியா இருக்கணும், பெரிசா இருக்கணும் இப்படி பெரியப்  பெரிய ஆசை.

அவரு ஆசைப் பட்டமாதிரி பொண்ணு கெடைக்குமா உடனே? மவனுக்காக உம்மாக்காரங்க அலையா அலைஞ்சாங்க. மவனோட அரிப்பு தாங்காம  கொஞ்சம் தூரத்து ஊர்லெ ஏழைப்பட்ட குடும்பத்துலெ பொண்ணு கெடச்சுது. நல்ல நாள் பார்த்து கல்யாணமும் நடந்துச்சு. மாப்பிள்ளைக்கு ஒரே தவிப்பு நேரம் சீக்கரமா போ மாட்டேங்குதேன்னு. தோழன்மார்லாம் அட்வைஸ் பண்ணினாங்க, “தம்பி நீ அசரத்து, அந்த பொண்ணு நாட்டுபுறத்து பொண்ணு, அவசரப்பட்டு பாஞ்சிடாதே! நீ அசரத்துங்கிறதுக்காக அங்கே போயி ஓதிக்கிட்டு ஹதீஸெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே, நிண்டு நிதானமா நடந்துக்க” ன்னு சொல்லியனுப்பினாங்க.

அங்கே பெண்ணுக்கு அலங்காரமெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கும்போது இந்த டிரஸ்ஸைப் போடுறதா அந்த டிரஸ்ஸைப் போடுறதாங்கிற தோழிகளோட  லூட்டியிலெ கொடியிலெ கிடந்த ஒரு டிரஸ்ஸை எடுத்து போட்டுட்டாங்க. ரவிக்கை உள்ளக்க கட்டெறும்பு இருந்துச்சோ வெறே என்ன எழவு இருந்துச்சோ தெரியலை, அது போட்டப் போடுலெ பொசப் பொசப் பொசப் பொசன்னு ஒரு மார்பு வீங்கிப்போச்சு. கடி வாயிலெ சுண்ணாம்பைத் தடவுனா கடுப்பு நிக்கும் வீக்கம் வடியாதுல்ல.  அதனாலெ மாப்பிள்ளைக்கு காண்பிக்காம ஒரு நாளைக்கு சமாளிச்சுக்கோ மறு நாள் வடிஞ்சிடும்னு தோழிமார்கள் அட்வைஸ் பண்ணி அனுப்புனாங்க.

நிக்காஹுக்குப் பிறகு சடங்கு சம்பிராதயம்லாம் முடிஞ்ச பிறகு மாப்பிள்ளையையும் பெண்ணையும் கையழைத்து அறைக்குள் விட்டு கதவை சாத்திட்டாங்க. வீங்கி இருக்கிறது அவருக்கு தெரிஞ்சிடக்கூடாதேன்னு முதல் காரியமா எரிஞ்சிக்கிட்டிருந்த முட்டைவிளக்கை சின்னதா வைக்கிற மாதிரி அணைச்சிடுச்சு.

வெட்கப்படுதுன்னு நெனச்சுக்கிட்டு, மாப்பிள்ளை அந்த பெண்ணின் கையை பிடிச்சு மெதுவா கட்டில்லெ உட்கார வச்சு, “வெட்கப்படாதே, நா வேணும்னா மறுபடியும் விளக்கை கொளுத்துறேன் தீ பெட்டி கொடு”ன்னார்.

“ம்……., இப்ப வாணாம் கூறையிலெ இருக்கிற கண்ணாடியிலேந்து வர்ற நிலா வெளிச்சம் போதும், பெட்டி தாரேன் அப்புறமா உங்க குச்சியாலெ கொளுத்துங்க”ன்னு  சிக்கென்ற குரல்லெ கிசு கிசுத்துச்சு.

பொண்ணோட ஸ்பரிசம் கெடச்சவுடன் அசரத்துக்கு சந்தோசம் தாங்கமுடியலெ பொங்கி வழிஞ்சுச்சு. மெதுவா தன் பக்கம் இழுத்து அணைச்சிக்கிட்டே படுக்கையிலெ சாஞ்சாரு. அவருக்கு ஒரு வருத்தம் வெளிச்சம் இல்லாததாலெ முகம் தெரியலையேன்னு. “உன் மொகம் தெரியமாட்டேங்குதே! ன்னார்.

“அவசரப்படாதீங்க, நான் உங்களுக்குத்தான், நீங்க எனக்குத்தான் எல்லாத்தையும் பாத்துக்கலாம்” அப்டீன்னு அசரத்து காதுலெ ஊதுனிச்சு. அசரத்து உச்சத்துக்குப் போயிட்டார்.

கூட்டாளிமார்கள் சொல்லியனுப்பியது அசரத்து மனசுலேயே இருந்துச்சு. அதனாலெ மெதுமெதுவா, மெதுமெதுவா கலைஞ்சிக்கிட்டிருந்தார். பூச்சி கடிச்சு வீங்கிப்போயிருக்கிறது அவருக்கு தெரிஞ்சிடப்போவுதேங்கிற  கவலையிலேயே தண்ணி காமிச்சது. அடக்கமுடியாத ஆசையிலெ இருக்கிற அசரத்து மெதுவா கையை நெஞ்சு பக்கம் கொண்டுவந்தார். அந்த பொண்ணும் வீங்கி இருக்கிற மார்பகத்தை ஒரு கையால் மறைச்சிக்கிட்டு ஈடு கொடுத்துச்சு. பொத்தானை கழட்டி கோழிக்குஞ்சை புடிக்கிற மாதிரி கையை வச்சார்.

எலந்தப் பழம் சைஸிலெ கைக்கு அடக்கமா இருந்ததைப் பார்த்தவுடன் அசரத்துக்கு என்னமோ போலாகிவிட்டது. இவர் எதிர்பார்த்த சைஸ் இல்லையேன்னு. ஹஜரத்தாச்சே அதனாலெ அல்லாவை நெனச்சு ’அல்ஹம்து லில்லாஹ்.. உன்னுடைய கருணையே கருணை’ அப்டீன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டார்.

பொண்ணுக்கு ஒரு திருப்தி, ஒரு சந்தோசம். புன்முறுவலோடு அந்த ஒரு வினாடி தன்னை மறந்தது. கையை அடுத்ததுக்கு கொண்டுபோனவுடன் வீங்கி இருந்தது கையை விட்டு பிதுங்கியதை கண்டவுடன்  தன்னையறியாமல் “சுபஹானல்லாஹ்……………..” என்று உறக்க கத்திட்டார். பயந்துபோன பொண்ணு “என்னயென்ன” ண்டதும். “ஒன்னுமில்லே… காலையிலெ பேசிக்கலாம்” அப்டீன்னுட்டு இரண்டர சங்கமித்து விட்டார்.

முட்டை விளக்கை கொளுத்தாமலே விடிஞ்சிடுச்சு ஹமீது ஜாபர் அப்டீன்னார் பாய்.

எப்படி எங்க பாய் ஹஜரத்து?

***

வீங்க வைக்க : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

தர்மம் என்றால் என்ன? – ஹமீது ஜாஃபர்

தர்மம்தான்!   இந்த வார்ப்புரு (theme ) பச்சை வண்ணத்தில் இருப்பதாலோ என்னவோ ஒரே இஸ்லாமிய கட்டுரைகளாக வந்து குவிகிறது – போடுங்க நானா போடுங்க நானா என்று. மாறுதலாகச் சொல்பவர் நம்ம ஜாஃபர் நானாதான். ‘போடுங்க தம்பி’ என்பார். போடுறது தம்பிக்கு ரொம்பப் புடிக்கும் என்று புரிந்தவர். போடுகிறேன். பெரிய ஆலிம்ஷா மாதிரி எழுதும் இந்த ஜாஃபர்நானா அநியாயமாக கலாட்டாவும் செய்வார் – வயது வித்யாசம் பார்க்காமல். அவர் எழுதிய அஸ்ரத் கதை அடுத்து வெளிவரும், இன்ஷா அல்லாஹ். ’ஹாரிபிள் ஹஜ்ரத்’ மாதிரி இன்னொரு ஹாஷ்யம். ஆமாம், ஹாஷ்யம்தான். சீரியஸாக எடுத்துக்கொண்டு சித்திரவதை செய்யவேண்டாம்.  படித்துவிட்டு,  தர்ம அடி போடுவதோடு தாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், நாளை.  சரியா? இன்று – நல்லபிள்ளையாக – அவர் கொடுத்த தர்மத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.  தர்மம் தலை போக்கும்,சாரி, காக்கும். – ஆபிதீன்

***

 ஹமீது ஜாஃபர் :

ஹமீது ஜாஃபர்த.மு.மு.க வுடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்றை எனது நண்பர் சிலாகித்து சொன்னார். அவர் த.மு.மு.க-வில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவர் சொன்ன அந்த கட்டுரை ‘தர்மம்’ பற்றியது, படித்துப் பார்த்தேன் அது கட்டுரை அல்ல. மாறாக பெருமானார் சொன்ன ஹதீஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு.

இஸ்லாமியப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அது தினசரியாக இருந்தாலும் சரி மாதப் பத்திரிக்கையாக இருந்தாலும் சரி சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் அதை சார்ந்த ஹதீஸ்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் எழுதி பக்கத்தை நிரப்பி வைக்கிறார்கள். இவை மக்களை சென்றடையும்போது வெறும் ஆயத்துக்களும் ஹதீஸ்களுமாக இருக்கின்றனவே ஒழிய அவற்றால் உண்டாகும் விளக்கம், பெறும் பயன், சமூக சீர்திருத்தம் இவைகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விடுகிறார்கள். இதை செய்தால் நன்மை உண்டு, அல்லா சந்தோசப்படுவான், சொர்க்கம் கிடைக்கும். அதை செய்தால் தீமை, அதனால் அல்லாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும், நாளை மறுமையில் நரகம், வேதனை என்று பயமுறுத்தல்கள் காணப்படுகின்றன. நாளை வரப்போவதைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் காணப்படுகிறதே தவிர இன்று ஆகவேண்டிய நடைமுறை இல்லை. நாளை மலரும் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இன்றைய எண்ணம், செயல்தான் காரணம் என்ற உண்மையை உணருவதில்லை.

பத்திரிக்கையில் வந்த கட்டுரையுடன் அல்லாஹ், ரசூல் தர்மத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது முழுமையானதல்ல, ஒரு சிறு நோட்டம். என்றாலும் பத்திரிக்கையைக் கொடுத்து இக்கட்டுரை எழுதப் பணிந்த அதிரை நண்பர் அஷ்ரஃப் அண்ணாவியாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

***

தர்மம் / ஜக்காத்

தர்மத்தின் முக்கிய நோக்கமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதே, ஏழைக்கும் செல்வந்தனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கக் கூடாது; ஒரு கூட்டம் சுகபோகமாக வாழவும் வேறொரு கூட்டம் அடுத்தவேளை சோற்றுக்கு ஏங்கவும் கூடாது, குறைந்த பட்சம் யாசிக்காது வாழவேண்டும் என்பதே அதன் அடிப்படை சித்தாந்தம். இதை கருத்தில் கொண்டுதான் எல்லா மதங்களும், மதங்களற்ற சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்துகின்றன.

இந்த வகையில் இஸ்லாம் மற்ற எல்லாவற்றையும்விட சற்று மாறுபட்டு நிற்கிறது. தர்மம் என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? யார் யாருக்கு கடமை ஆகிறது? எப்போது கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்?  இப்படி பல கோணங்களில் வரையறுத்து வைத்திருக்கிறது. இந்த வரையறை கொடுப்பவருக்கும் கொடுக்கப்படுபவருக்கும் பாதுகாப்பாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி: 08 இதழ்: 05 ஜூன் 17 to 23 இதழில் மூன்றாம் பக்கத்தில் ‘இறைமொழியும் தூதர் வழியும்’ என்ற பகுதியில் ‘தர்மம்’ என்ற தலைப்பில் புகாரி ஷரீஃபிலிருந்து எடுக்கப்பட்ட  ஆறு ஹதீஸ்கள் இருக்கின்றன. “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என தர்மத்தை வலியுறுத்தும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற ஹதீஸ்களே இருக்கின்றன. ஒரு ஹதீஸுக்குக்கூட விளக்கம் இல்லை. இப்போதெல்லாம் தினசரி நாள்காட்டி தாள்களில் இறை வசனங்களும், நபி மொழிகளும் இருக்கின்றன.  அரசியல், சமூக நிலை, மசோதா, இட ஒதுக்கீடு, கமிஷன் ரிப்போர்ட் என பல துறைகளை அலசுகிற அளவுக்கு பத்திரிக்கைகள் குர்ஆனையும். ஹதீஸையும் விளக்குவதில்லை.

இறைவன் ஜக்காத்தைப் பற்றி  சொல்லும்போது தொழுகையோடு சேர்த்தே சொல்லுகிறான். “வ அக்கீமுஸ்ஸலாத்த வ ஆத்துஜக்காத்த…” அப்படி என்றால் எந்த அளவுக்கு தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் கடமையாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் ஜக்காத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? ரமலான் மாதம் வந்துவிட்டால் ஜக்காத் கொடுக்கிறோம். அதாவது ஜக்காத்தை நோன்புடன்  இணைத்துவிட்டோம்.

அது ஷிர்க் இது குஃப்ரு, அல்லா ரசூல் சொல்லாததை செய்து இணை வைக்கிறார்கள் என்று கத்தும் மாட(ல்)ர்ன் ஆலிம்கள்கூட இதை பற்றி சிந்திப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹதீஸை அடிப்படையாக வைத்து 40 க்கு 1 என்ற அடிப்படையில் நூத்துக்கு இரண்டரை ஜக்காத்தாக கொடுக்கவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.

இது கணக்குபடி சரிதான், ஆனால் நூத்துக்கு இரண்டரை என்ற அடிப்படையில் பார்த்தால் 99 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. நூறு ரூபாய் வந்தால்தான் ஜக்காத் கடமை ஆகிறது. இது முற்றிலும் தவறு. நாற்பதுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தால் 39 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. எப்போது நாற்பது ரூபாய் வந்துவிட்டதோ ஒரு ரூபாய் ஜக்காத் கொடுத்தாகவேண்டும். எண்பது ரூபாயானால் இரண்டு ரூபாய், பின் நூத்தி இருபதுக்கு மூன்று ரூபாய் ஆகும். நூறு ரூபாய் இருக்கும்போது ஜக்காத் கடமை ஆகாது. இதை எப்போது கொடுக்க வேண்டும்?

இறைவன், ஜக்காத்தை நோன்புடனோ அல்லது ஹஜ்ஜுடனோ சேர்த்து சொல்லாமல் தொழுகையுடன் சேர்த்து, சேர்த்து ஜக்காத்தை வலியுறுத்துகிறான். அப்படி வலியுறுத்துவதின் நோக்கமே  தினமும் கொடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. தினம் கொடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் ஒரு வாரமோ பத்து நாட்களோ சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் ஒரு வருடம் வரை சேர்த்து வைத்தால் அங்கு இவ்வளவா…? என்ற மலைப்பு ஏற்பட்டு நற்செயலை மனம் தடுக்கும். 

ஒரு மனிதனுக்கு உணவு, உடை , இருப்பிடம் இம்மூன்றும் அவசியம் என்றாலும் இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; இருக்கும் உடையை உபயோகித்து நாட்களைக் கழிக்கலாம்; ஆனால் உணவு…..? எனவே அவ்வுணவைப் பெறுவதற்கான வழி வகை செய்யவேண்டும். அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருளாகவும் இருக்கலாம், உணவாகவும் இருக்கலாம். வறுமை ஒழியவேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் இறைவன் தொழுகையுடன் ஜக்காத்தை இணைத்திருக்கிறான் என்று தெளிவாகிறது.

முடியாதவனுக்கு நோன்பு கடமை ஆகாது, வசதியும் தெம்பும் இல்லாதவனுக்கு ஹஜ்ஜு கடமையாகாது. ஆனால் ஏழையாயிருந்தும் நாற்பதுக்குமேல் வருமானம் வந்தால் அங்கே ஜக்காத்து கடமையாகிவிடுகிறது. தொழுகை எந்த அளவுக்கு ஒருவனுக்கு முக்கியமோ அதே முக்கியம்தான் ஜக்காத்தும். நான்தான் ஏழையாயிற்றே எனக்கு ஜக்காத்து கடமை இல்லை என்று சொல்லமுடியாது. யாசிப்பையே தொழிலாக வைத்திருப்பவனுக்கும் இது பொருந்தும்.

ஒருவன் வறுமையில் இருக்கிறான் அல்லது உழைத்து சம்பாதிக்க முடியாத நிலை அல்லது ஆதரவற்ற வயோதிகம் அல்லது பிணி; கேள்விக்குறியாக இருக்கும் இத்தகையவர்களின் அன்றாட வாழ்வு; அவர்களிடம் போய் இதோ ரமலான் நெருங்கிக்கொண்டிருக்கிறது, உனக்குத்தான் தெரியுமே ரமலான் மாதம் முழுவதும் நான் வாரி வழங்குவேன் என்று சொன்னால்…?

அதற்காக ரமலானில் கொடுப்பது தவறு என்றோ அல்லது கொடுக்கக் கூடாது என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ரமலானில் மட்டும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த தவறை காலங்காலமாக ஒவ்வொரு நாட்டிலும் செய்துகொண்டிருப்பதால் ரமலானில் கொடுத்தால் அதிக நன்மை தரும் என்ற கருத்து ஒவ்வோர் மனதிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

“ஒரு பேரிச்சை பழத்தையேனும் தர்மம் செய்யுங்கள்” என்று பெருமானார் கூறுவது, அது வறுமையை நீக்காவிட்டாலும் பசியை தணிக்கும் என்ற நோக்கம் அங்கே காணப்படுகிறது. “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது தான் மட்டும் உண்பவர் என்னை சேர்ந்தவர் அல்ல” என்கிறார்கள். அப்படியென்றால் நீ முஸ்லிமே அல்ல என்ற பொருள் அங்கே தொனிக்கிறது.  “எந்த விருந்து ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்கிறார்கள். விருந்தில்கூட தர்மத்தை பெருமானார் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்.

எப்படிச் செய்யவேண்டும்? அதையும் அழகாகச் சொல்கிறது இஸ்லாம். ’வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ அந்த அளவுக்கு ரகசியமாக செய் என்கிறார்கள் பெருமானார் அவர்கள். சுருங்கச் சொன்னால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே தெரியவேண்டிய ஒன்று விழாவாக இருக்கக்கூடாது.

இஸ்லாம் சொல்லும் வழியில் தர்மம் செய்து வந்தால் ’வறுமைக்கோட்டுக்கு கீழே…’ என்ற நிலை வருவது எங்ஙனம்…?

***

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

***

பார்க்க :

உ.வே.சாமிநாதய்யரிடமிருந்து ஒரு வரலாறு –  தமிழ் மரபு அறக்கட்டளைக்கு நன்றியுடன்:  தர்மம் தலைகாக்கும்

« Older entries Newer entries »