இப்படியும் ஒரு மனிதர்!

இப்படியும் ஒரு மனிதர்!

தர்ஹா சங்கீத வித்வான் S.M.A .காதர் அவர்களைப் பற்றி கவிஞர் இஜட். ஜபருல்லா…

***

வாழ்க்கையை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுத்துவிட்டு
இசையை மட்டுமே –
சொத்தாய் வைத்துக் கொண்ட
இவர் – மனிதனுக்கும் மேலே..!
இதனால்தான் என்னவோ?
இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு
கிராமபோஃன் பெட்டியை
பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?

இவர் வீட்டில்
வெள்ளித் தட்டுகள்
உணவு மேசையில்
சாதாரணமாய் கிடக்கும்..!
இசைத்தட்டுகள் மட்டும்
பூட்டிய அல்மாரிக்குள்
பத்திரமாக இருக்கும்..!

அட இப்படியும் ஒரு மனிதரா..?
“மனைவிக்கு மரியாதை”
இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..
“வாங்க.. போங்க.. என்னங்க..
சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”
இவைகள் எல்லாம் – இவரின்
இல்லற அகராதியில் –
மனைவியுடன் பேசும்
அன்பில் தோய்ந்த சொற்கள்..!

இவர் –
நல்ல குடும்பத் தலைவர்
நல்ல கணவர் ..
நல்ல தந்தை .. மட்டும் அல்ல..
நல்ல நடத்தைகளை
சொல்லிக் கொடுத்த ஆசான்..!

இவர் தங்கம்..
அதனால்தான் இவர் பிள்ளைகள்
வைரமாக ஜொலிக்கிறார்கள்..!

அட.. இப்படியும் ஒரு மனிதரா..?
இவர் – சட்டக் கல்லூரிக்குப் போகாத
நீதிபதி..!
இவரின் “நடுக்கட்டு சபை”
நாகூரில் பிரபலம்.
இது – கோர்ட்டு அல்ல ..
சான்றோர் சபை..!
இதில் – சட்டம் பேசாது..!
நீதி – சொல்லும்..!
தர்மம் – தீர்ப்பு வழங்கும்..!
“மேல் முறையீடு”
இன்றுவரை இல்லை..!

சம்பந்திகள் சச்சரவு
சொத்துப் பிரச்சனைகள்
முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்
என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு
அணைத்துக் கொண்டு –
சிரிப்போடும் – சிறப்போடும் போகும் காட்சி
மந்திரம் அல்ல..
இந்த மனிதரின் சாதனை..!

“உங்களாலேத்தான்
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!
ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் –
நம்மகிட்ட என்னா இருக்குது..
பேசவைத்தவனும் அவன்தான்..!
எல்லாம் அவன் கையிலே..!
செய்ய வைத்தவனும் அவன்தான்..!
நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!
– என்றுச்சொல்லி கலகலவென சிரிப்பார்..!

இந்த சபையில் ஜூரிகளும் உண்டு…
B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா
இமாம் கஜ்ஜாலி காக்கா
M.G.K. மாலிமார் காக்கா
நாகை தமீம் மாமா ..

இந்த சரித்திர சபையில்
ஒருமுறை நான்
சாட்சியாய்ப் போனேன்
என் மதிப்பு கூடியது..!

நிதிபதிகள் –
அபராதம் போடுவார்கள்…
இவரோ – சிற்றுண்டி தருவார்
வடையும்/ தேநீரும்..!

இவர் சபையில் –
மனிதர்கள் வருவார்கள்…
மதங்கள் வந்ததில்லை..!

அட… இப்படியும் ஒரு மனிதரா..?
கற்பனையால் கயிறு திரித்து
மற்றவர்கள் எழுதிவைத்த
சரித்திரத்தால் –
வரலாற்று நாயகர்களாய்
வலம் வருவோர் நிறைய உண்டு..!

இவர் வாழ்க்கை வரலாற்றை
நேரில் சென்று கேட்டோம்..
இரண்டு மணி நேரம் சொன்னவர்
அவர் வரலாற்றை அல்ல..
அவர் குருவின் சரித்திரத்தை..!

அவர் உஸ்தாத் தாவூது மியான்
பிறந்த தேதி/ இறந்த நாள்
இவர் நினைவில் நிற்கிறது..!
இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக
நியமனம் பெற்ற நாள் அல்ல..!
வருடமே நினைவில்லை..!
அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

“உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”
இவரின் – உன்னதமான பாடல்..!
இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!
இன்றுவரை –
கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!
பாட்டு காதில் விழுகிறது..!
காட்சி கண்ணில் விரிகிறது..!

இவர் சுருதி –
இன்றுவரை மாறியதில்லை
இசையில் மட்டுமல்ல..!
வாழ்க்கையிலும்..!
ஏற்றம்/ இறக்கம் என்பதை
இசையில் ஆரோகணம்/ அவரோகணம்
என்பார்கள் – இசையில்
இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!
வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!

இவர் தாளம் –
எப்போதும் தப்பாது…
பாட்டில் மட்டுமல்ல..
வீட்டிலும்..!

86 வயது ஆயினும்
இதுவரை – அவரின் கைத்தடி
தம்பூராதான்..!

பாட்டால் நமக்கு அவர்
சொக்குப்பொடி போடுவார்..!
அவரோ – பட்டணம் பொடி போடுவார்..!

பாடிக்கொண்டு இருக்கும்போதே
அவர் வெள்ளை கைக்குட்டை
சமாதான கொடியைப் போல
மூக்கு வரை ஏறும்
உடன் இறங்கும்..!
பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!
தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம்
இவருக்கு மட்டுமே/ தெரியும்..!

புனித மாதங்களின் முதல் பிறையில்
எல்லோரும் ஒதுவார்..!
இவர் பாடுவார்..!
இறைவனைத் துதித்து..!
அவன் –
தூதரை நினைத்து..!

மனிதர்கள் போல –
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
நாகூர் தமிழ்ச் சங்கம்
ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து
“வாழ்நாள் சாதனையாளர் விருது”
கொடுக்கிறது..
விருது அவர்களுக்கு என்றாலும்
எங்களுக்கு அல்லவா
புகழ் வருகிறது..!

மாறி மாறி வேஷங்கள்
போடுகின்ற மனிதரிடை
தேறிவந்த மனிதர் இவர்
தெளிவான மனதுடையார்..!
கூறுகின்ற இவர் சொற்கள்
ஆறுதலை பிறக்க வைக்கும்..!
சேருகின்ற இடமெல்லாம்
வரவேற்பு சிறந்திருக்கும்..!

இசையாத பேர்களையும்
இசையவைக்கும் அன்பாளர்..!
இசையாலே மனம் தொட்டு
இன்பம் தரும் இசை ஆளர்..!
இறைநெறியில் நபிவழியில்
இணைந்திருக்கும் பண்பாளர்..!
இம்மைக்கும் மறுமைக்கும்
நலம் சேர்க்கும் நல்லடியார்..!

எப்போதும் சிரித்திருக்கும்
குழந்தை உள்ளம்..!
இவர் இசையை கேட்போரின்
இதயம் துள்ளும்..!
ஒப்பில்லா இவர்வாழ்க்கை
அன்பின் வெள்ளம்..!
உள்ளபடி இவர் நிறைவை
நாளை சொல்லும்..!

வல்லவனே..! யா அல்லாஹ்
யாசிக்கின்றேன்..! இவர்
வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!

– இஜட் ஜபருல்லாஹ்

*

சுட்டிகள் :

பவுனு பவுனுதான் – அப்துல் கையும்  & நாகூரின் பொக்கிஷம் – நாகூர் ரூமி

இஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ்

10 பின்னூட்டங்கள்

 1. 20/08/2009 இல் 13:59

  வாப்பாட்ட சொல்லிகிட்டே இருக்கிறேன், ஜபருல்லாஹ் நானாட கவிதைகளை எல்லாம் புத்தகமாக வெளியிடுங்கள் என்று..

 2. 20/08/2009 இல் 14:00

  சமி யூசுப் அவர்களின் மெடிடேசன் உருக்குகிறது, கேட்டு விட்டு அழுது விட்டேன்

 3. 20/08/2009 இல் 14:07

  ஏ.ஆர்.ரஹ்மான் தெஹ்ஜீப் (சபனா ஆஸ்மி, ஊர்மிளா, அர்ஜூன் ரம்பல் நடித்தது) என்ற இந்தி படத்தில் குரான் கிராத்தை ஒரு கட்டத்தில் பின்னணி இசையாக பதிவு செய்திருப்பார். அது யாருடைய குரல் என்று தெரிந்தால் தயவுசெய்து சொல்லவும்

  • abedheen said,

   22/08/2009 இல் 06:44

   ‘தெஹ்ஜீப்’ பார்க்கவில்லை இஸ்மாயில். பார்த்துவிட்டு குரல் கொடுக்கிறேன். கிரா-அத் என்றால் எனக்கு அப்துல் பாஸித்’துதான் இன்னமும். அவரை விடவா? பார்க்கலாம்.

   • abedheen said,

    26/08/2009 இல் 06:26

    அன்பு இஸ்மாயில், ‘அப்துல் பாஸித்’தின் கிரா-அத் உங்கள் சிங்கப்பூர் மஜீத் பிரத்ர்ஸில் (ரிகார்டிங் செண்டர்) கிடைக்கும். கேட்டுப் பாருங்கள், ‘வெள்ளிக் கணக்கு’ பார்க்காமல்!

 4. jeyakumar said,

  21/08/2009 இல் 08:17

  என்ன பதிவு இது?? யார் அந்த நல்லவர் என்பதைச் சொல்லாமல்…இவர் யாருன்னு பேரைச் சொல்லுங்கையா…

  • abedheen said,

   22/08/2009 இல் 06:38

   அன்பு ஜெயக்குமார்… மன்னிக்க வேண்டும். அந்த நல்ல மனிதர் ‘தர்ஹா சங்கீத வித்வான்’ S.M.A. காதர் அவர்கள்தான். பதிவையும் திருத்தி விட்டேன். நன்றி. இனி கவனமாக இருப்பேன்.

 5. jeyakumar said,

  22/08/2009 இல் 08:28

  //மன்னிக்க வேண்டும்.//

  இதெல்லாம் பெரிய வார்த்தை. இவ்வளவு நல்ல மனுஷனைப் பற்றிய கட்டுரையில் அவர் பெயர் இல்லாமல் இருந்தவுடன் கொஞ்சம் ஜாஸ்தி சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இருப்பினும் இப்போது உங்களுக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கும்.. உங்கள் பதிவுகளை நிசமாகவே ஊன்றிப்படிக்கிறார்கள் என்பதே அது…

  🙂

  ஜெயக்குமார்

 6. 22/08/2009 இல் 15:02

  “தெஹ்ஜீப்” படத்தில் சபனா ஆஸ்மி மருத்துவமனையில் இருக்கும் ஊர்மிளா தொழுது துவா கேட்பது போல் ஒரு காட்சி. “அலம் நஷ்ரஹ்..” என்று தொடங்கும் குரான் ஷரீஃபின் சூராவில் வரும் ஃப இன்னமஅல் உஸ்ரி யுஸ்ரா இன்னமஅல் உஸ்ரி யுஸ்ரா” (ஆகவே.. நிச்சயமாக கஷ்டங்களுக்கு பிறகு மகிழ்ச்சி இருக்கிறது நிச்சயமாக கஷ்டங்களுக்கு பிறகு மகிழ்ச்சி இருக்கிறது) என்ற வசனம் தான் வரும்.

  அப்துல் பாசித்தா? தேட வேண்டுமே!

 7. Rashid said,

  30/10/2010 இல் 23:19

  இவர்களைப் பற்றி என்னது மாமா சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்,சிறுவயதில் பார்த்தும் இருக்கிறேன்.அணைத்து குண நலன்களையும் கடலை கூஜாவில் அடைத்ததுபோல் கவிதையில் சொல்லிவிட்டார்கள்!இவர்கள் நமது சமுதாயத்திற்கு கிடைத்த அறிய சொத்து போன்றவர்கள்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s