தோற்றம் – ஹமீது ஜாஃபர்

கிருஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்கே ‘நீங்க எப்படி மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லலாம் – நீங்க காஃபிர் தான்.. இல்ல.. நீங்கள் முஸ்லீம்தான் என்றால்.. நீங்கள் வாழ்த்து சொன்னது ‘ஹராம்’தான்.. அதெல்லாம் கிடையாது..’ என்று தம்பி இஸ்மாயில் மறுமொழிந்திருந்தார் (வேடிக்கையாகத்தான்). இந்தப்பதிவில் என்ன சொல்லப்போகிறாரோ, தெரியவில்லை. முருகனைப் போட்டதற்காக ‘முன்கர்-நக்கீர்’ஐ இழுப்பார்கள் நம்ம முஸ்லிம்கள், பாருங்கள்! பிரச்சினையில்லை. ஹனிபாபாய் பாடியது மாதிரி ‘ஆண்டவன் எந்த மதம்?’ என்று கேட்பவன் ஆபிதீன். அதேமாதிரிதான் ஹமீதுஜாஃபர் நானாவும். என்ன, ‘அவன் பச்சைநிற தலைப்பாகை கட்டியிருப்பான்’ என்பார் கூடுதலாக. அவ்வளவுதான்!

நானா சொல்லும் ‘மகுடிநாடகங்களை’ நான் நம்புவதில்லை. அதுவும் ‘அவர் சொன்னதாக இவர் சொன்னது’ என்பதில் சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் , சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன் – இலக்கியரீதியாக. அவர் குறிப்பிடும் ‘அதிசய’ சம்பவம் அதிராம்பட்டினத்தில் நடந்ததா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நுழையாமல் – ஆதாரம் கேட்காமல் –  நல்லிணக்கத்திற்காக எதையும் சொல்லலாம் என்று எடுத்துக்கொள்வோம். அதுதான் நல்லது. அதிரை புலவர் அண்ணாவியார் அவர்களும் அதையே விரும்பினார்கள் என்றுதான் தோன்றுகிறது.

‘நீயல்லால் தெய்வமில்லை – எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா’

ஆபிதீன்

***

தோற்றம்

ஹமீது ஜாஃபர்

என்னால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம் சாத்தியம்தானா? சாத்தியம் என்றால் எப்படி? இந்த கேள்விகளுக்கு பதில்? அலசி ஆராய்வதற்கு நான் எல்லாம் தெரிந்த ஹீரோ அல்ல. என்னைப் பொருத்தவரை ஒன்றுமே தெரியாத ஜீரோ. எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று பீற்றிகொள்ளும் அறிவுகூட இல்லை. நான் சொல்லப் போவது வேடிக்கையாகவும் இருக்கலாம் ‘கப்சா’வாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். முடிவு செய்துகொள்வது உங்கள் விருப்பம்.

நான் மேஜிக் ஷோக்கள் நேரிலும் பார்த்திருக்கிறேன், டிவியிலும் பார்த்திருக்கிறேன். நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கந்தசாமி வாத்தியார் ஒரு மேஜிக் ஷோ ஸ்கூலில் நடத்திக்காட்டினார் பலவற்றை நிகழ்த்திக் காட்டினார் அதில் ஒன்று , என்கூட படித்த ஜம்புநாதன் என்ற மாணவனை தன் அருகில் அழைத்து அவனைத் தொடாமலே ஆட்காட்டி விரலால் அங்கே இங்கே சுட்டிக் காட்டினார், அவர் காட்டிய இடமெல்லாம் எதோ செய்ய ஆரம்பித்தது நெளிய ஆரம்பித்துவிட்டான். சார் அரிக்கிது என்று கத்திவிட்டான். சரி சரி ஒன்னுமில்லை, போ என்று முதுகில் தட்டி அனுப்பினார். அதன் பிறகு நான் ஆக்கூரில் ஓதிக்கொண்டிருக்கும்போது ஹைஸ்கூலில் ஒரு ஷோ. மேஜிஷியன் தன் மகள் எட்டு ஒன்பது வயது சிறுமியை ஹிப்னாட்டிசம் செய்து ஏர் ரைஃபிள் முனையில்(20 mm dia)  ஒரு மரக்கட்டைப் போல் horizantally படுக்கவைத்து காட்டினார். அடுத்து 66/67 ம் ஆண்டு நாகூர் கந்தூரி சமயம் சின்ன கொத்துபா பள்ளியின் வாசல் அருகில்  தெருவில் ஒரு ஆளைப் படுக்கவைத்து அவன் மீது ஒரு கருப்புத் துணியால் மூடி levitaionஐ காண்பித்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடம்பு அரை அடி மேலே வந்தது. ஆனால் மூடப்பட்டிருந்த போர்வை தரையை தொட்டுக்கொண்டிருந்தது.  இதெல்லாம் எப்படி செய்கிறார்கள் என்று அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாதாரணமாக பூமி எந்த பொருளையும் தன் வசம் இழுக்கும் சக்தி படைத்தது. 50,60 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக எப்படி எந்த ஆதாரமுமில்லாமல்  மேலே உயரமுடிகிறது? இந்த கேள்வி என் மூளையைக் குடைய ஆரம்பித்தது, பதில் சொல்வார் இன்றுவரை யாருமில்லை. இப்படி  இருக்க துபையில் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிக்கை ஆரம்பித்த சமயம் weakend magazine ல் ஒரு  செய்தி, 1908-ல் நியுயார்க் நகரில் பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் ஒருவர் சுய உணர்வோடு நாற்காலியில் அமர்ந்தபடி levitation செய்து காட்டினார். நிருபர்கள் கேட்டதற்கு இதை இந்தியாவில் ஒரு ஃபக்கீரிடத்தில் கற்றுகொண்டேன் என்று சொன்ன செய்தி வந்திருந்தது.

ஒரு நாள் ஹஜ்ரத் அவர்கள் hypnotism பாடம் நடத்தி முடிந்தவுடன் நான் பார்த்த/படித்த levitation ஐப் பற்றி கேட்டேன், இதை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டார்கள். எதோ ஒரு ட்ரிக் இருக்கிறது என்றேன். ஒரு ட்ரிக்குமில்லை மண்ணுமில்லை இதை நீங்களும் செய்யலாம் நான் ஒரு நாளைக்கு செய்து காண்பிக்கிறேன் என்றார்கள். அதற்குள் நான் துபை வந்துவிட்டேன் அதன் பிறகு அந்த பேச்சுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானாவுக்கு செய்து காண்பித்தார்களாம். ஆம், ஒருமுறை டீ வாங்கிவரும்படி நானாவை அனுப்பினார்கள். டீ வாங்கிக்கொண்டு லேட்டா வந்தார். “ஏன் இவ்வளவு லேட்டா வாரே?” என்று கேட்டார்கள். “இல்லை சாபு நானா (ஹஜ்ரத்தை அப்படிதான் அழைப்பார்) அலங்கார வாசல்லெ ஒருத்தன் வித்தை காண்பிச்சிக்கிட்டிருந்தான், ஒருத்தனைப் படுக்கப்போட்டு கையெ இப்டி இப்டின்னு தூக்கினான் பாடி மேலே வருது, அதை பார்த்துக்கிட்டிருந்தேன் அதான் லேட்டாயிடுச்சு.” அப்டீன்னார். உடனே “டேய் சாதிக்கு” என்று கூப்பிட்டார்கள். சாதிக் அவர்களின் தங்கச்சி மகன் அப்போது ஏழெட்டு வயது சிறுவன். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் “என்ன மாமா” என்று ஓடி வந்தான். ‘படு’ என்றார்கள். அங்கேயே அப்படியே படுத்துட்டான். கையை தலையிலிருந்து கால் வரை அசைத்தார்கள், அவன் unconscious stage க்குப் போய்விட்டான். உடனே கையை அவன் மீது படாமல் அருகில் வைத்துக்கொண்டு கொஞ்சங்கொஞ்சமாக மேலே உயர்த்தினார்கள், கையை உயர்த்த உயர்த்த அவனும் மேலே வந்தான். எந்த pre hypnotism மும் கிடையாது, எந்த key word ம் கிடையாது, எந்த key sighn ம் கிடையாது, எல்லாமே அந்த சமயத்தில் நடந்தது.

‘பாத்துக்கிட்டியா levitationஐ ? இதானே அங்கே செஞ்சான்? நல்லா குனிஞ்சு கையை கீழே வுட்டு பாரு எதாவது தட்டுப்படுதான்னு’ என்றார்கள். அந்தரத்தில் இன்னும் ‘பாடி’ மிதந்துக்கொண்டிருந்தது! ‘இது ஒன்னுமில்லை, வெறும் குப்பை, இந்த குப்பையெப்போய் பார்த்துக்கிட்டிருந்தேன்னு சொல்றியே!” என்றார்களாம்.

ஹஜ்ரத் எதை குப்பை என்று சொன்னார்களோ அந்த குப்பை எப்படி நிகழ்கிறது என்பதற்கு பதில் சொல்ல அறிவியல் திணறுகிறது, உளவியல் முழிக்கிறது. இப்படி விடை காணமுடியாத வினாக்களில் ஒன்று ‘தோற்றம்’.

இத்தோற்றம் இன்று நிகழ்ந்தால் காரணம் கற்பிக்க முடியும், இது ப்யூர் மேஜிக், இது வெர்சுவல் ரியாலிட்டி, இது லேசர் ஹோலோகிராம், இல்யூஷன் அப்படி இப்படி என்று எதோ ஒன்று சொல்லமுடியும். ஆனால் இப்போது சொல்லப்போவது எலக்ட்ரிசிட்டியே கண்டுபிடிக்காத காலம், ஆனால் மாந்திரீக மோகம் இருந்த காலம், மாந்திரீகம் என்றால் ஒரு பொருளை மறைத்து வைத்து தானோ அல்லது வேறொரு ஆளைக்கொண்டோ எடுப்பது. மாந்திரீக வித்தையில் போட்டிகள் நடந்தன, இதற்கு ‘மகுடி நாடகம்’ என்று பெயர்  என வரலாற்றுக் குறிப்புக்களில் காண முடிகிறது.
 
ஆம், சற்றேறக்குறைய இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்,  பழனி முருகப் பெருமானை தன் நண்பர் ஒருவருக்கு முன்னால் தோன்றச் செய்தது. கி.பி.1700 ல் அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த செய்யது முஹம்மது அண்ணாவியார் என்ற சூஃபி புலவர் தன் நண்பர் ஒருவருக்கு முருகப் பெருமானை தோன்றச் செய்து காண்பித்தது. அதே ஊரில் வாழ்ந்த கதிர்வேல் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார்.  தமிழில் புலமைப் பெற்ற அவர் மாந்திரீகக் கலையிலும் சிறந்து விளங்கினார். அறிவின் மயக்கத்தால் அண்ணாவியாருக்கு நண்பரானார்.

அதிரை வேலனுக்கு ஆசை வந்தது , பழனி வேலவனைக் காண. தாம் புறப்படும் செய்தியை நண்பரிடம் சொல்ல வந்தார். நண்பரோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். கதிர்வேலருக்குப் புரியவில்லை, நெற்றியை சுளித்தார். அண்ணாவியார் தொடர்ந்தார், ‘இத்தனை தூரம் அல்லல்பட்டு பழனி சென்று முருகனை தரிசிக்க வேண்டுமா? இங்கேயே தரிசிக்கலாம்’ என்றார்.

‘அதெப்படி, எம்பெருமான் பழனிமலையில் இருக்கிறான் நானோ செல்லி நகரில் இருக்கிறேன் எப்படி இங்கே தரிசிக்கமுடியும்? சாத்தியமில்லாததையல்லவா சொல்கிறீர்கள்’ என்றார் கதிர்வேலர். ‘சாத்தியமில்லாததை நான் சொல்லவில்லை நண்பரே, நீங்கள் இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்’ என்றார் அண்ணாவியார்.

காலம் குறிக்கப்பட்டது . தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேலரும் வந்தார், அண்ணாவியாரும் வந்தார். ‘எப்போது எம்பெருமான் வருவான்?’ என கேட்க தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து ‘பாடும் நண்பரே’ என்றார் அண்ணாவியார்.

‘சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயர்தாங்கிய பதிநான்கு பாடல்கள் நிரம்பிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற கதிர்வேலர் பக்தி

மேலிட…. 

“பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற
மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே …. என்ற காப்பில்  தொடங்கி

‘ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா
அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா
மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா
வீரபத்திர னாணை விரைவாகவேவா
கையேந்தினே னாணை கடுகவேவா
கந்த சுவாமிமே லாணையேவா
ஐயுற்ற மேருமே லாணையேவா
அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா’

என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் பழனிமலை முருகப் பெருமான் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர். ‘இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க’ என்று கூறி பழனி எழிலர் மறைந்தார்.

முழுப் பாடலைக் காண இங்கே சொடுக்கவும்.

இந்நிகழ்ச்சியை ‘மகாபாரத அம்மானை’ என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இதை எப்படி எடுத்துக்கொள்வது? உங்களிடம் பதில் இருக்கிறதா? சொல்லுங்களேன் நானும் புரிந்துகொள்கிறேன்.

குறிப்பு: படிக்கும் அன்பர்கள் பக்திப் பரவசத்தில் இப்பாடலைப் பாடி முருகன் காட்சி தரவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. காட்சி கிடைத்தால் அது உங்களுக்குப் பெருமை!

**

நன்றி : ஹமீது ஜாஃபர்
அடிக்கநினைக்கும் (அதிரை) நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com

1 பின்னூட்டம்

  1. மஜீத் said,

    27/12/2010 இல் 18:48

    காட்சி கிடைக்காதவர்கள், பாடல் பாடி முடித்த கையோடு, டக்குனு இந்தக் கட்டுரைத்தலைப்பைப் பார்த்தால் போதும்.
    தரிசனம் கிடைத்துவிடும்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s