அது ஒரு அமானுஷ்ய பயம்… – மஹாஸ்வேதா தேவி

mahasweta-devi2

மஹாஸ்வேதா தேவி எழுதிய புகழ்பெற்ற ‘திரௌபதி’ சிறுகதையின் இறுதிப் பகுதி… (தமிழாக்கம் : என்.எஸ்.ஜெகந்நாதன்)

….

மாலை ஆறுமணிக்கு தோப்தி அப்ரிஹெண்ட் ஆனாள். அவளை காம்ப்புக்கு அழைத்துச்செல்ல ஒருமணிநேரம் பிடித்தது. கேள்விகள் சரியாக ஒருமணிநேரம் பிடித்தன. ஒருவரும் அவள் மேல் கை வைக்கவில்லை. ஒரு கான்வாஸ் ஸ்டூலில் உட்கார வைக்கப்பட்டாள். எட்டு ஐம்பத்தேழுக்கு அதிகாரியின் டின்னர் டைம். “அவளைக் கவனித்துக்கொள். டூ தி நீட்·புல்” என்று சொல்லிவிட்டு அதிகாரி அந்தர்தியானமானார்.

பிறகு பத்து லட்சம் சந்திரர்கள் தோன்றி மறைந்தனர்.. பத்துலட்ச சந்திர வருடங்கள் கடந்தன. ஒரு லட்சம் ஒளி வருடங்களுக்குப் பிறகு திரௌபதி கண்ணைத் திறக்கிறாள். என்ன அதிசயம்! வானையும் சந்திரனையும்தான் முதலில் பார்க்கிறாள். பிறகு அவளுடைய மனதிலிருந்து ரத்தம் தோய்ந்த நகநுனிகள் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து செல்கின்றன, தான் அசைய முயன்றபோது கால்களும் கைகளும் கட்டில் கால்களில் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஆசனத்திலும், இடுப்பிலும் இது என்ன ‘பிசுக், பிசுக்’ என்று..? அவளுடைய ரத்தம். வாயில் சுருட்டி அடைக்கப்பட்ட துணி மட்டும் இப்போது அங்கில்லை. தாங்க முடியாத தாகம். ‘தண்ணீர்’ என்று கேட்க வாயை அசைக்க முயன்ற கணத்திலேயே பற்களால் கீழ் உதட்டைக்கடித்து வார்த்தையை விழுங்குகிறாள். தனது அல்குலில் ரத்தப் பெருக்கை உணர்கிறாள். எத்தனை பேர் தன்னைப் புணர்ந்திருக்கிறார்கள்…

கண்களின் ஓரத்தில் நீர் சுரந்தபோது வெட்கமடைந்தாள். கலங்கிய நிலவொளியில் பார்வையற்ற தன் கண்களைத் திருப்பி தன் முலைகளைப் பார்க்கிறாள். நன்றாக ‘கவனிக்கப்பட்டிருப்பதை’ உணர்கிறாள். இந்தமுறை ராணுவ அதிகாரிக்கு பூரண திருப்தி கிடைத்திருக்கும். அவளுடைய முலைக்காம்புகள் கடித்துக் குதறப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன. எத்தனை பேர்? நான்கு? ஐந்து? ஆறு? ஏழு?

திரௌபதி மூர்ச்சையடைகிறாள்.

கண்களைத் திறந்து பார்க்கும்போது, பக்கத்தில் வெண்ணிறமான ஒன்றைப் பார்க்கிறாள். அவளுடைய உடை . வேறொன்றும் கண்ணில் படவில்லை.

திடீரென ஆண்டவன் அருள் மேல் நம்பிக்கை சுரக்கிறது. ஒருவேளை அவளை விட்டெறிந்திருக்கிறார்கள் – நரிக்கு உணவாக.. ஆனால் காலடிகளின் ஒலி கேட்கிறது. தலையைத் திருப்பிப் பார்க்கும்போது பயனெட் ஏந்திய கார்ட் ஒருவன் சுற்றி வருவது தெரிகிறது. அவன் கண்களில் காமம் புகைந்து கொண்டிருக்கிறது. உதட்டில் வெறிச் சிரிப்பு.

திரௌபதி கண்களை மூடிக்கொள்கிறாள். வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. மறுபடியும் அவளைக் ‘கவனித்துக் கொள்ளும்’ பணி தொடங்குகிறது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு துண்டு வெளிச்சத்தைக் கக்கிவிட்டு நிலவு தூங்கப்போய்விட்டது. இருள் மட்டுமே மிஞ்சியது.

கைகளும் கால்களும் கட்டப்பட்டு, படுக்க வைக்கப்பட்ட அசையாத பெண் தேகம். அதன்மேல் சுறுசுறுப்பாக இயங்கும் தசைகளால் செய்யப்பட்ட பிஸ்டன்கள் ஏறுகின்றன, இறங்குகின்றன, ஏறுகின்றன, இறங்குகின்றன..

மறுபடியும் காலை வருகிறது.

தோப்தி மேஜேன் கூடாரத்திற்குக் கொண்டுவரப்பட்டு வைக்கோல் போரின்மேல் தூக்கி எறியப்படுகிறாள். அவள் உடல்மேல் அவளுடைய ஆடை வீசப்படுகிறது.

பிரேக்ஃபாஸ்ட், தினசரி பத்திரிகைகள் படிப்பது எல்லாம் முடிந்து, ‘திரௌபதி மேஜேன் அப்ரெஹெண்டட்’ என்ற ரேடியோ மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு, அந்த ராணுவ அதிகாரி திரௌபதி மேஜேனை தன்முன் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.

திடீரென ஒரு விபரீதம் நிகழ்கிறது. “உம். கிளம்பு” என்ற உத்தரவு வந்தவுடனே, திரௌபதி எழுந்து உட்காருகிறாள். “எங்கே போகச் சொல்கிறாய்?” என்று கேட்கிறாள்.

“பெரிய தொரை கூடாரத்துக்கு”

“எங்கே இருக்குது?”

“அதோ அங்கே”

திரௌபதி தன் சிவந்த கண்களை அருகிலேயே இருந்த அந்தக் கூடாரத்தின் மேல் திருப்புகிறாள். “சரி, நீ போ. நான் வருகிறேன்.” என்கிறாள்.

சென்ட்ரி ஒரு தண்ணீர்க் குவளையை அவள் முன்னால் தள்ளுகிறான்.

திரௌபதி எழுந்து நிற்கிறாள். குவளையை உதைத்து தண்ணீரைத் தரையில் கொட்டுகிறாள். தன் துணியை பல்லால் கடித்துக் குதறுகிறாள். இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட சென்ட்ரி “பைத்தியமாயிட்டா! பைத்தியமாயிட்டா!” என்று கூச்சலிட்டுக்கொண்டே மேலிட ஆணைக்காக ஓடுகிறான்.

சாதாரணக் கைதிகளை அவனால் சமாளிக்க முடியும். ஆனால் புரியாதபடி இப்படி நடந்து கொள்ளும் கைதியை சமாளிப்பது அவனால் இயலாத காரியம். ஆகவேதான் அவன் மேலதிகாரியின் உத்தரவிற்காக ஓடுகிறான். ஜெயிலில் ‘பைத்தியக்கார மணி’ அடிக்கும்போது இப்படித்தான் அங்குமிங்கும் ஓடுவார்கள்.

கூச்சல் குழப்பத்தைக் கேட்டு ராணுவ அதிகாரி கூடாரத்திலிருந்து வெளியே வருகிறார். கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியில் நிமிர்ந்த தலையுடன் முழுநிர்வாணமான திரௌபதி தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்க்கிறார். ஆயுதம் தரித்த ஸெண்ட்ரிகள் நடுங்கிக் கொண்டே அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்.

“இதெல்லாம் என்ன?” என்று கேட்கத் தொடங்கிய அவர் மௌனமாகி விடுகிறார். திரௌபதி அவர் முன்னால் வந்து நிற்கிறாள். நிர்வாணமான தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்து போன ரத்தம். இரண்டு முலைகளிலும் ரணங்கள்.

“இதெல்லாம் என்ன..?” அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார்.

திரௌபதி மேலும் அருகில் நெருங்குகிறாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். “நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்..! ‘கவனிச்சுக்க’ன்னு சொன்னேயில்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா..?”

“இவ துணியெல்லாம் எங்கே..?”

“உடுத்த மாட்டேங்குறா சார்! கிழிச்சுப் போட்டுட்டா..”

திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள்:

“துணி என்ன துணி..? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ.. நீ ஒரு ஆம்பிளையா..?”

நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூயவெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலை ‘தூ..’ என்று துப்புகிறாள்.

“நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிள இங்க யாருமில்ல. என்மேல் துணியைப்போட எவனையும் விட மாட்டேன். அப்போ என்ன செய்வே? வா.. கௌண்டர் பண்ணு.. வா.. கௌண்ட்டர் பண்ணு..”

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.

***

நன்றி : மஹாஸ்வேதா தேவி, என்.எஸ்.ஜெகந்நாதன், நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி

6 பின்னூட்டங்கள்

 1. Nagore Rumi said,

  16/07/2013 இல் 20:45

  ரொம்ப துணிச்சலான அதே சமயம் அன்பொழுகும் எழுத்து

 2. தாஜ் said,

  17/07/2013 இல் 20:04

  நான் சாதாரணமாகத்தான் இக்கதையை வாசிக்க முனைந்தேன். ஒவ்வொரு வரிகளையும் கடக்கும் போது….
  என்னால் சொல்ல இயலாத மனத்துடிப்பு. நிஜத்தை இப்படியும் சொல்லாம் என்பதை சொல்லித் தந்த படைப்பாளி
  மஹாஸ்வேதா தேவியை வியப்பாக பார்க்கிறேன். நான் வசிந்த இந்தக் கதை நிகழ்வு, கடைசி அத்தியாயமென்றால்… பாக்கி எங்கே? வாசித்தே ஆகனும்.

  • 18/07/2013 இல் 09:34

   // பாக்கி எங்கே?// டைப் செய்ய நேரமில்லை தாஜ். மஹாஸ்வேதாதேவியின் சிறுகதைத் தொகுப்பை pdfஆக வைத்திருக்கிற வேறு ‘யாராவது’ (சென்ஷி என்று சொல்லி ஏன் தொந்தரவு கொடுக்கனும், அதுவும் ரமலான்லெ?!) முயற்சித்தால் நல்லது.

 3. 18/07/2013 இல் 16:26

  //தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.//

  அமானுஷ்ய பயம் என்றால் என்ன என்று அறியாத என்னைப்போன்றவர்களுக்கும் அதைப் புரிய/உணர வைத்துவிட்டார் இந்த தேவி! தாஜ் சொல்வதுபோல வார்த்தைக்கு வார்த்தை சிலிர்க்கிறது! (PDF… PDF PLEASE…)

  ஏதோ பதினெட்டாம்/பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏதோ சில கொடுமைக்கார ஜமீந்தார்களை எதிர்த்து எழுதியவரில்லையாம் இவர்! இப்போதும், 87 வயதிலும், நந்திகிராம், சிங்கூர் போராட்டங்களில் துடிப்போடு ஈடுபடும் வீரமங்கை! பன்முகப்படைப்பாளி!!

  நம்மால் பிரமிக்க மட்டுமே முடிகிறதென்ற சுயபச்சாதாபம் மிஞ்சிநிற்கிறது.

 4. 13/08/2013 இல் 09:29

  மஹாஸ்வேதா தேவி சிறுகதைகள் இங்கே. சுட்டி வேலைசெய்யாவிட்டால் சென்ஷியை தொடர்புகொள்க.

  https://docs.google.com/file/d/0BzHgnRDPyT0maWlQTjJiSXRGZG8/edit?pli=1


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s