ஓரான் பாமுக்கின் குதிரை

வரிவரியாக ‘என் பெயர் சிவப்பு’ நாவலைப் படித்த தம்பி சென்ஷி என்னிடம் அதைத் தருவதற்குள்  வருடம் ஓடிவிட்டது. நானும் அவர்போல படிக்க ஆரம்பித்து அவ்வப்போது ப்ளஸ் விட்டுக் கொண்டிருந்தேன். இப்படியே போனால் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் எழுத வேண்டிவருமேண்ணே என்றார். உண்மைதான். உதாரணமாக , ‘ஒவ்வொரு நுண்ணோவியன் வரைகின்ற முகம் ஒரு சுல்தானோ, ஒரு குழந்தையோ, ஒரு போர்வீரனோ அல்லது – இறைவன் மன்னிக்கட்டும் – நமது மேன்மைதங்கிய இறைத்தூதர் அவர்களின் பாதி திரையிட்ட முகமோ அல்லது – இறைவன் மீண்டும் மன்னிக்கட்டும் – பிசாசின் முகமோ, எதுவாக இருந்தாலும் அந்த ஒவ்வொரு நுண்ணோவியனும் அந்த ஒவ்வொரு சித்திரத்திலும் காதுகளை ஒரேவிதமாகத்தான் எப்போதும் வரைகிறான்’ என்று அத்தியாயம் 41-ல் ஓரான்பாமுக் கிண்டலடித்திருப்பதை விவரிக்க ஆரம்பித்தால் என் மவுத்தைப் பற்றித்தான் யாராவது சொல்லவேண்டி வரும். நல்லது, குறுகிய நேரத்தில் மிகச் சிறந்த குதிரையை வரைய மாண்புமிகு சுல்தான் அவர்கள் போட்டிவைத்திருப்பதால் ‘ஆலிவ்’, ‘வண்ணத்துப்பூச்சி’, ‘நாரை’ போன்ற சீடர்கள்  வரையும் அற்புதமான பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதி சுவாரஸ்யமான ‘நான் ஒரு குதிரை’யிலிருந்து (அத். 35) சில பகுதிகளை பதிவிடுகிறேன். (இதன் கடைசி பத்தியை வாசிக்க நீங்கள் புத்தகம்தான் வாங்க வேண்டும்; நோ பிடிஎஃப்!). இனியாவது குதிரைகளை கவனமாகப் பாருங்கள். தமிழாக்கம் செய்த நண்பர் ஜி.  குப்புசாமிக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி. – ஆபிதீன்
***

orhan-pamuk1

…. சமீபத்தில் எனது நுண்ணோவிய நண்பர்கள் ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தனர். அதிலிருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான். பிராங்கிய மிலேச்சர்களின் அரசன் ஒருவன் வெனிஸ் நகர நீதியரசரின் மகளை மணம் செய்ய உத்தேசித்திருந்தான். இருந்தாலும் “இந்த வெனிஸ் நகரவாசி ஏழையாக இருந்தால் ? இவனது மகளும் அவலட்சணமாக இருந்தால்?” என்ற சந்தேகங்கள் அவனை அரித்துக்கொண்டிருந்தது. இதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவனது ஓவியர்களில் தலைசிறந்த ஒருவனை அந்த வெனீசிய நீதியரசரின் மகளையும் அவர்களது உடமைகளை, சொத்துக்கள் போன்றவற்றை தத்ரூபமாக வரைந்துவரச்சொல்லி ஆணையிட்டான். வெனீஸியர்களுக்கு கூச்சமோ தயக்கமோ கிடையாது. ஓவியனின் உரித்துப்பார்க்கும் கண்களுக்கு தமது புதல்விகளை மட்டுமல்ல அவர்களது குதிரைகளையும் இதர மாளிகைச் செல்வங்களையும் கடை பரப்பி பொருட்காட்சியாக்கி விடுவார்கள். அந்த அற்புதமான மிலேச்ச ஓவியன் ஒரு யுவதியையோ அல்லது ஒரு புரவியையோ வரைந்தால், ஒரு கூட்டத்திலிருந்து அவளையோ அல்லது அதனையோ நீங்கள் சுலபமாக பொறுக்கியெடுத்துவிடலாம். பிராங்கிய அரசன் தனது ராஜசபையில் வெனீஸிலிருந்து வந்த ஓவியங்களைத் தீவிரமாக கவனித்து அந்த யுவதியை தனது மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாவென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது அவனது பொலிகுதிரை திடீரென்று சிலிர்த்தெழுந்து , அந்த ஓவியத்திலிருந்த கவர்ச்சியான பெண்குதிரையின் மேல் ஏற முயற்சித்திருக்கிறது. குதிரையோட்டிகள் வெகுவாக சிரமப்பட்டு அந்த வெறியேறிய குதிரையை அடக்குவதற்குள் அந்த ஓவியத்தையும் அதன் சட்டத்தையும் தனது விறைத்த குறியால் குத்திச் சீரழித்துவிட்டிருக்கிறது.

அந்த நுண்ணோவியர்கள் இதைப்பற்றி குறிப்பிடும்போது சொன்னதென்னவென்றால், அந்த பிராங்கிய பொலிகுதிரையை அந்தளவுக்கு வெறியூட்டி எழுப்பியதற்கு காரணம் அந்த வெனீஸிய பெண்குதிரையின் அழகு அல்ல, உண்மையில் அது மிக அழகான புரவியாக இருந்தாலும் ஓர் உண்மையான குதிரையை அது எவ்வாறு தோற்றமளிக்குமோ அப்படியே தத்ரூபமாக ஓவியத்தில் தீட்டியிருந்ததுதான் அந்த பொலிகுதிரையை உன்மத்தம் கொள்ளச் செய்திருக்கிறது என்றனர். இப்போது எழுகிற கேள்வி அந்த பெண்குதிரையைப் போலவே வரைவது பாவகரமான செயலா? என் விசயத்தில் நீங்களே பார்ப்பது போல , என் பிம்பத்திற்கும் இதர குதிரைகளின் சித்திரங்களுக்கும் மிகக்குறைந்த அளவுக்கே வித்தியாசம் இருக்கிறது.

உண்மையில் என் வயிற்றுப்பகுதியின் நேர்த்தியையும், என் கால்களின் நீளத்தையும் எனது கம்பீரத் தோற்றத்தையும் குறிப்பாக கவனிப்பவர்களுக்கு நான் தனித்துவம் கொண்டிருப்பதை உணர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்த அபாரமான உருவம், என்னைச் சித்தரித்த நுண்ணோவியனின் தனித்துவத்தைத்த்தான் காட்டுகிறதே தவிர, ஒரு குதிரையாக எனது தனித்துவத்தைக் காட்டவில்லை. துல்லியமாக என்னைப்போல் எந்தக் குதிரையும் கிடையாது என்பதை எல்லோரும் அறிவர். ஒரு நுண்ணோவியனின் கற்பனையில் இருக்கின்ற ஒரு குதிரைதான் நான்.

என்னைப் பார்ப்பவர்கள் அடிக்க சொல்வது: “கடவுளே, எவ்வளவு பகட்டான குதிரை!” ஆனால் உண்மையில் அவர்கள் அந்த ஓவியனைத்தான் புகழ்கின்றனர், என்னையல்ல. வாஸ்தவத்தில் எல்லாக் குதிரைகளும் ஒவ்வொரு விதமாக வேறுபட்டவை. மற்ற எல்லோரையும் விட நுண்ணோவியனுக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.

உற்றுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட பொலிகுதிரையின் குறி, வேறொரு குதிரையினுடையதை ஒத்திருக்காது. பயப்படாதீர்கள். அருகில் சென்று கவனியுங்கள். கையில்கூட எடுத்துக்கூட பாருங்கள். கடவுள் எனக்கு வழங்கியிருக்கும் அற்புதமான அங்கம், அதற்கென்று ஒரு வடிவத்தையும் வளைவையும் கொண்டிருக்கிறது.

படைப்பவர்களில் மகத்தானவரான அல்லாஹ், எங்கள் ஒவ்வொருவரையும் தனிவேறுபாடாக படைத்திருந்தாலும் இப்போது எல்லா நுன்ணோவியர்களும் எல்லா குதிரைகளையும் தமது நினைவிலிருந்து ஒரே விதமாகத்தான் வரைகின்றனர்.

nizami_-_khusraw_discovers_shirin_bathing_in_a_poolஉண்மையில் நாங்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறோம் என்பதைப் பார்க்கவே பார்க்காமல் ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில் குதிரைகளை ஒன்றுபோலவே வரைவதில் ஏன் அவர்கள் பெருமைபட்டுக்கொள்கிறார்கள்? ஏன் என்று நான் சொல்கிறேன்: ஏனென்றால் கண்ணால் காண்கின்ற உலகத்தையல்ல, கடவுள் உத்தேசித்திருக்கும் உலகத்தை அவர்கள் சித்தரிக்க முயல்கின்றனர். இது கடவுளின் மகத்துவத்தை போட்டிக்கழைப்பது ஆகாதா? அதாவது – அல்லாஹ் மன்னிக்கட்டும் – கடவுளின் வேலையை என்னால் செய்யமுடியும் என்று சொல்வதாகாதா? தமது கண்களால் காண்பவற்றில் திருப்திகொள்ளாதிருக்கும் ஓவியர்கள் , தமது கற்பனையில் பதிந்திருப்பதுதான் கடவுளின் குதிரை என்று வலியுறுத்திக்கொண்டு , ஒரே குதிரையை ஓராயிரம் முறை வரைகின்ற ஓவியர்கள், இருப்பதிலேயே உன்னதமான குதிரை என்பது குருட்டு நுண்ணோவியர்கள் நினைவிலிருந்து வரைகிற குதிரைதான் என்று வாதிடுகின்ற ஓவியர்கள், இவர்களெல்லோரும் அல்லாஹூவோடு போட்டி போடுகின்ற பாவத்தை புரிகிறார்கள், இல்லையா?

பிராங்கிய மேதைகளின் புதிய பாணிகள் ஒன்றும் மதத்துவேஷமானவையல்ல. உண்மையில் அதற்கெதிரானவை. நமது நம்பிக்கைக்கு பெரிதும் உடன்பட்டிருப்பவை. என் எர்ஸூரூமி சகோதரர்கள் என்னைத் தவறாக புரிந்துகொள்ளக்கூடாதென்று வேண்டுகிறேன். பிராங்கிய மிலேச்சர்கள் தமது பெண்களை அரை நிர்வாணமாக அலையவிடுவதும் தன்னடக்கமோ கூச்சமோ இல்லாமல் திரிவதும் காபி அருந்துவதின் சுகத்தையோ அழகிய இளம்
சிறுவர்களின் இன்பத்தையோ புரிந்துகொள்ளாதிருப்பதும் என்னை வெறுக்கச் செய்கிறது. மேலும் அவர்கள் சுத்தமாக சவரம் செய்துகொண்டு , ஆனால் பெண்களைப்போல் தலைமயிரை மட்டும் வளர்த்துக்கொண்டு , ஏசுநாதர் கூட ஒரு பெருங்கடவுள்தான் – அல்லாஹ் எங்களைக் காப்பாற்றட்டும் – என்று நம்புகிறார்கள். இந்த பிராங்கியர்கள் என்னை மிகவும் வெறுப்பேற்றுபவர்களாக இருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவரை என்னருகில் பார்த்தால் வலுவாக எட்டி ஓர் உதை கொடுப்பேன்.

இப்போதுகூட, பெண்களைப்போல் போருக்குச்செல்லாமல் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு என்னை தப்புத்தப்பாக சித்தரிக்கின்ற நுண்ணோவியர்களை நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது. அவர்கள் என் முன்னங்கால்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் நீட்டிக்கொண்டு பாய்வதைப்போல என்னை வரைகின்றனர். முயல் தாவுவதைப்போல ஓடும் குதிரை இந்த உலகத்திலேயே கிடையாது. என் முன்னங்கால்களில் ஒன்று முன்னே இருந்தால் மற்றது பின்னேதான் இருக்கும். போர்க்காட்சியைக்காட்டும் சித்திரங்களில் இருப்பதைப் போல ஒரேயொரு முன்னங்காலை மட்டும் நாய் நீட்டுவதைப்போல நீட்டிக்கொண்டு மற்றாதை நிலத்தில் ஊன்றிக் கொண்டிருக்கும் குதிரை இந்த உலகத்திலேயே கிடையாது. இருபது குதிரைகள் ஒரே அச்சில் நகலெடுக்கப்பட்டு ஒன்றுபோலவே திரிந்துகொண்டிருக்கிற ஸ்பாஹி குதிரைப்படையைத் தேடினாலும் கிடைக்காது. எங்களைப் பார்க்காதபோது குதிரைகளாக நாங்கள் எங்கள் காலடியிலிருக்கும் புற்களை மேய்வோம்.

ஓவியங்களில் நாங்கள் காட்டப்படுவதுபோல சிலைபோல நின்று, நளினமாக காத்திருக்கும் தோரணையை நாங்கள் எப்போதும் வரித்துக்கொள்வதில்லை. நாங்கள் உண்பதையும் நீரருந்துவதையும் கழிப்பதையும் தூங்குவதையும் காட்டுவதற்கு ஏன் எல்லோரும் சங்கடப்படுகிறார்கள்? இறைவன் எனக்கு வழங்கியிருக்கும் இந்த அற்புதமான, தனித்துவமான சாதனத்தை வரைய ஏன் அவர்கள் பயப்படுகின்றார்கள்? ரகசியமாக பெண்களும் குறிப்பாக சிறியவர்களும் அதை ஆர்வத்துடன் உற்றுப்பார்க்க விரும்பலாம். இதில் என்ன தீங்கு இருக்கிறது? எர்ஸூரூம்மின் ஹோஜா இதற்குக் கூட எதிரானவரா என்ன?’

***

benim-adim-kirmizi_orhan-pamuk
நன்றி : ஓரான் பாமுக் ,  ஜி. குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம் , சென்ஷி
***
தொடர்புடைய சுட்டி :

மரணத்தின் நிறம் சிவப்பு – சுகுமாரன்

பின்னூட்டமொன்றை இடுக