உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு? – தாஜ்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு?

தாஜ்

இலக்கிய உலகத்தை
அறிவார்ந்த உலகமெனச் சொல்லலாம்.
அப்படிச் சொல்வதில்
பெரிய தவறேதுமில்லை. 
பல ‘படிமங்கள்’ கொண்ட
இந்த மாய உலகத்தை
எவ்வளவுக்கு
மெச்சினாலும் தகும்!
தவறேயில்லை.

உலகக் கலைஞர்களால்
காலத்திற்கேற்ப தொடர்ந்து
வடிவமைக்கப்பட்டபடியே இருக்கும்
இதன் பக்கங்களில்
வாசகர்கள் நாளும் கொள்ளும்
தரிசனங்கள் கொஞ்சமல்ல!
இன்னொரு புறம்
அசலாய் விளையும்
வேடிக்கை வினோத
அழிச்சாட்டியங்களுக்கும்
இங்கே பஞ்சமே இல்லை!

காலத்தையொட்டி
நவீனங்கள்
நவீனப் பட்டுக்கொண்டே இருப்பினும்,
அதுவே யதார்த்தமெனினும்
அதைப் பற்றிய முழுத் தெளிவற்றவர்கள்
இங்கே ஒருபாடு உண்டு.

பழமை கொண்ட
படைப்பாக்கங்களில் கிறங்கி
அதுதான்…
அதுமட்டுமேதான்…
இலக்கியமென சாதிக்கிற
விந்தைப் பேர்வழிகளின்
விசேச கூத்தினை
நேற்று மட்டுமல்ல
இன்றும் காண முடியும் இங்கே.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்,
தமிழ் இலக்கிய வட்டத்தில்
நவீன இலக்கியத்தை
தலைகீழாகப் புரிந்துகொண்ட
பேர்வழிகள் எல்லாம் ஒன்று கூடி
‘வானம்பாடிகள்’ என்ற பெயரில்
ஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி
அடித்த கூத்தும்
அதில் தெறித்த வேடிக்கைகளும்
சாதாரனமானதமல்ல.

அது மாதிரியான
இங்கத்திய
இன்னொரு வேடிக்கைதான்
இலக்கியத்தை நிறம் பிரித்து,
பாகுபடுத்தி படுத்திப் பார்ப்பதென்பதும்!

பக்தி இலக்கியம்
இடதுசாரி இலக்கியம்
மார்க்ஸிய இலக்கியம்
முற்போக்கு இலக்கியம்
திராவிட இலக்கியம்
தலித் இலக்கியம் என்றெல்லாம்….
இலக்கியம் இன்றைக்கு பல்வேறு
உள்நிறம் கொண்டுவிட்டது.

கடவுளர்களிடம் பணியும்
பக்திக்காகவும்
அரசியல் சித்தாந்த கொள்கைகளுக்காகவும்
இன்னும் சில கோட்பாடுகளுக்காகவும்
யுகயுகமாய் உதாசீனப்படுத்தப்பட்ட
பூமிப்புத்திரர்கள்
சிவந்த சினத்திற்காகவும்
இலக்கியம் நிறம் பிரிக்கப்பட்டதில்
அது கலக்கம் கொண்டிருக்கிறது.
இதனால்,
இலக்கியம் அறியமுனையும் வாசகன் கொள்ளும்
குழப்பங்கள் கொஞ்சமல்ல!

இதன் தொடர்ச்சியாக
இந்த வேடிக்கைக் கூத்தின்
உச்சபட்ச நிகழ்வாக
தமிழ் பேசும் இஸ்லாமியர்களின்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’
தோற்றம்கொள்ள இருக்கிறது.
அதற்கான ஆயத்தங்கள் படுவீச்சில்
துரிதப்பட்டு கொண்டு இருப்பதையும்
செய்திகளின் வழியே
சில வருடங்களாக அறிய முடிகிறது.

இன்றைக்குப் பேசப்படும்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ தவிர்த்து,
பிற இலக்கிய வகையறாக்கள் எல்லாம்
தங்களுக்கான ‘இலக்கிய அடையாளமாக’ மட்டுமே
தங்களின் கோட்பாட்டைச் சுட்டும்
குறியீட்டுச் சொல்லாக மட்டுமே
புழங்கினார்கள்.
புழங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

மற்றபடிக்கு
இந்தக் கோட்பாட்டாளர்கள் அனைவரும்
உலக இலக்கிய சிந்தை கொண்டர்வர்கள் என்பது
அப்பட்டமான உண்மை.
அதன் பேர் இலக்கியங்களோடு
போட்டி போடுபவர்கள்!
சாதிப்பவர்கள்.
அதனையும் மறுப்பதற்கும் இல்லை.

*
இவ்வாண்டு
‘மே’ 20,21,22 தேதிகளில்
மலேசியாவில் நடந்தேறிய 
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்’
ஸ்ரீலங்காவை சேர்ந்த
இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க்
ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள்
‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ என்கிற
கருப்பொருளில்
நீண்ட வியாக்கியானம் செய்திருந்ததை
வலைத்தளப் பக்கங்களில் வாசித்தேன்.
இந்தச் சுட்டியில் முயன்றால்…
நீங்களும் விரும்பினால் வாசிக்கலாம்.
 
உலக இலக்கியத்தின் பகுதியாக
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
இயங்கும் என்பதற்கான
எந்தவொரு ஒப்புதலும்
அந்த மஹாவனுபஸ்தரது
பேச்சில் எதிரொலிக்கவில்லை.

அது மாதிரியே,
நவீன இலக்கியத்தின் போக்கையோ
அல்லது நவீன இலக்கியத்தையோ
அவர் ஒப்புக் கொள்கிறாரா என்றால்…
அதைக் குறித்தும் தீர்மானமான பேச்சில்லை.

பல தலைமுறைகளுக்குப்
பிந்திய காலக்கட்ட
இலக்கியங்களுல் சிலவற்றை
அவர் உயர்த்திப் பிடித்திருக்கிறார்
அதையொட்டி பேசியிருக்கிறார் என்றாலும்
மத ஒழுங்கு சார்ந்த/ மத நெறி சார்ந்த
அளவுகோளை அதில் தவறாது காண்கிறார்!

இஸ்லாமியர்களின் வேதமான
திருக் குரானை முன்வைத்து
இலக்கியத்தில் காய் நகர்த்துவதை
அவர் பிரதானப்படுத்துகிறார்.

நீதி நேர்மைகளை வலியுறுத்தி/
சீரிய கண்ணியமுடனான
இஸ்லாமிய வாழ்வினை மாற்றுக் குறையாமல் எழுதி/
இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை
மாசுபடாமல் எழுத்தில் கையாண்டு/
படைப்பாக்கம் செய்ய வேண்டுமென
அறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்
தனது பேச்சில் தீர வலியுறுத்துகிறார்.

இன்னுமான
அவரது செவ்விய பேச்சினூடே
உணர்ந்த வகையில்,
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ யென
பெரிய வட்டப் பேச்சாகப் பேசி
தனி இலக்கிய வரம்பாகவே
காண நினைக்கிறார்!

‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை’
தனி இலக்கிய வரம்பாகக் காண்பது கிடக்கட்டும்.
அவர் முன் வைக்கும்
பிற கருத்துக்களை யோசிப்போமேயானால்
அவைகள்
இன்றைய படைப்பின் நடைமுறைக்கு
ஏற்புடையதாக இருக்குமென்று தோன்றவில்லை.
தோன்றவில்லை என்ன…
இயலாது, முடியாது.

எழுத்தில் சுதந்திரமில்லாமல்
உலக விமர்சனப் பார்வையில்லாமல்
அந்தக் கொதி நீரின் ஆவியில்லாமல்
எதுவும் வேகாது.
வேகவே வேகாது.

நீதி நேர்மைகளை
படைப்பின் வழியே எடுத்துரைப்பது என்பதும்,
புத்திமதிகள் சொல்வதென்பதும்
படைப்புலகில் மங்கிப் போன சங்கதிகள்.
நான் அறிந்த வகையில்
பேராசிரியர். மு.வரதராஜனாரின்
‘கரித்துண்டு’ காலத்தோடு
அவ்வகைப் படைப்புகள்
தமிழில் அத்து, இத்து புதைக்கப்பட்டும் விட்டது.
மீறி அப்படி எழுதப்படுமானால்
அந்த வகை இலக்கியங்களை
அச்சிட்டு மட்டும் மகிழலாம்.
பரந்த அளவில் வாசிப்பவன் கிடைக்க மாட்டான்.

ஒரு நேரத்தில்
பெருமளவில் படிக்கப்பட்ட
பக்தி இலக்கியம்
இடதுசாரி இலக்கியம்
மார்க்ஸிய இலக்கியம்
முற்போக்கு இலக்கியம்
திராவிட இலக்கியம்…
இவையெல்லாம் கூட
இன்றைய வாசகர்களின்
தூர விசயமாகப் போய்விட்டது.

அந்த இலக்கியவாதிகள்
படைப்பின் வழியே போதித்த
கொள்கை வழி கோட்பாட்டுகளாலும்,
வெளிப்படையான
புத்திமதி, நேர்மை போதிப்புகளாலும்
அவைகள் இன்றைக்கு வாசகப் பார்வையிலிருந்து
பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

குறிப்பாய்
அந்த இலக்கியங்கள் வலியுறுத்திய
மார்க்ஸியமும்,
அது வழியிலான அரசுகளும்
உலக அரங்கில் தோல்விகளை தழுவி
ஓய்ந்தும் கிடக்கிறது!

இதனையெல்லாம் தாண்டி
உறுத்தும் இன்னொரு சங்கதியை
தட்டாமல் இங்கே சொல்ல வேண்டும்.
உலகில்…
‘மதத்தின் பெயரால்’
இது நாள்வரை
எந்தவொரு மொழியிலும்
இலக்கியம்
தனி அடையாளம் கொண்டதே இல்லை!
‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ பேசும்
ஸ்ரீலங்கா தமிழ் முஸ்லீம்கள்தான்
அப்படியொரு
முன் உதாரணப் புருஷர்களாக ஆகியிருக்கிறார்கள்!
எங்கே போய் சொல்ல இந்தக் கூத்தை?
நான், தமிழகம் சார்ந்த
தமிழ் பேசும் முஸ்லீமாக இருப்பதினால்…
கொள்ளும் உறுத்தலுக்காக
காணும் சுவர்களில் எல்லாம்
முட்டி மோதிக் கொண்டால்
தேவலாம் போல் இருக்கிறது.

அரபு நாடுகளில் கூட
‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர
இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை.
இஸ்லாமிய தாக்கமும்
முசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட
பாகிஸ்தானிலேயே கூட
உருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர
இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. 

ஸ்ரீலங்காவை சேர்ந்த
தமிழ் பேசும் முஸ்லீம்கள்
இப்படி
‘உலக இஸ்லாமிய
தமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில்
மலேசியாவிலும்/ தமிழகத்திலும்
தமிழ் பேசும் இஸ்லாமியர்களை
ஒருங்கிணைப்பதில்
உள்ளார்ந்ததோர்
அரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தமிழீழப் பரப்பில்
‘விடுதலை புலிகளால்’
தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்
பெரும் அளவில் பாதிப்பிற்குள்ளானபோது
இவர்களின் துயரத்தில் பங்கெடுக்கவோ
பின்னர், அவர்களின் துயரைத் துடைக்கவோ
பிற நாடுகளில் வாழும்
தமிழ் பேசும் முஸ்லீம்கள்
அக்கறை காட்டவில்லை.
இன்றும் கூட
அவர்கள், தங்களது சொந்த மண்ணிற்கு
காலெடுத்து வைக்க
முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
இதுவோர் அளவிட முடியாத சோகம்தான்.

இச் சோகம் பொருட்டு,
வெளிநாடுகளில் வாழும்
தமிழ் பேசும் முஸ்லீம்களிடம்
அவர்களுக்கான ஆதரவைத் தேட
இலக்கியத்தை முன்வைத்து
முயன்று கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

அவர்களது சோகத்தை
புரிந்துகொள்ள முடிவது மாதிரி
அவர்கள் கையில் எடுத்திருக்கும்
‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ குறித்த
அளவீடுகளை
முற்றாய் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
 
*

இன்றைய இலக்கியத்தின்
நீள/அகல
விஸ்தீரணங்கள் அதிகம்.
அது வானம் தொடும் சமாச்சாரம்!
தவிர, பூரண சுதந்திரம் கொண்டு
இயங்கக் கூடியதாக அது வளர்ந்தும் இருக்கிறது.
இந்த வளர்ச்சியினை
இஸ்லாமிய கர்த்தாக்கள் அங்கீகரிப்பார்களா?
மாட்டவே மாட்டார்கள்.
சரி, ஒத்தாவது போவார்களா?
ம்ஹும், அதுவும் மாட்டார்கள்.

நான்கு பக்கமும் சட்டமடித்து
அதற்குள் எழுத முடியுமானால்
போகட்டுமென சுதந்திரம் தருவார்கள்!
பொதுவில் சுதந்திரச் சிந்தனை என்பதே
இஸ்லாத்திற்கு உதவாத ஒன்று.
ஆயிரத்து நானூறு வருசத்திற்கு முன்
எழுதப்பட்ட நெறிமுறை வரம்புகளுக்குள்தான்
ஒரு முஸ்லீமானவன்
யோசிக்கணும்/செயல்படணும்/
எழுதவும் எழுதணும்!

அரபு நாடுகளில்
படைப்பாளிக்குரிய சுதந்திரத்தோடு
எழுத முயன்ற படைப்பாளிகள் பலர்
தொடர்ந்து அப்படி
இயங்க முடியாமல் போயிருக்கிறது.
காரணம்…
ஒன்று, அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்.
அல்லது,
வாழ்நாள் முழுக்க அடைப்படும்
தேசத்துரோகிகளுக்கான ‘கேம்(ப்)’களில்
அந்த ரீதியான தண்டனையோடு
மிச்ச வாழ்நாட்களைக் கழிக்க
நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்.

தவிர,
உலகளாவிய
முஸ்லீம் அறிஞர்களின் இன்றைய
தலையாய பணிகளில் ஒன்று
தங்களது இன எழுத்தாளர்கள் எழுதும்
சுதந்திரமான நவீனங்களைப் படித்து
கோபம் கொள்வதும்
’ஃபத்வா’ வழங்குவதாகவுமே இருக்கிறது.
இல்லையெனில்….
சல்மான் ருஷ்டியையும்
தஸ்லீமா நஸ்றீனையும்
இன்னும் பிற
இஸ்லாமிய நவீன கர்த்தாக்களையும்
ஓட ஓட விரட்டி அடித்திருப்பார்களா?

சமீபத்தில் கூட
தமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் வாழும்
முற்போக்கான முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர்
தான் எழுதியதோர் கட்டுரைக்காக…
(மது அருந்துவது ‘மக்ரூஹு’ மட்டும்தான்,
ஹராமல்ல என்கிற தொனியில்
மத நூல்களை ஆய்ந்து எழுதியிருந்தார்)
சொந்த ஊர் பஞ்சாயத்தில்
ஃபத்வா பெற்றார்!
பின்னர், கோர்ட் படியேறி,
தான் கொண்ட பழியை துடைத்து கொண்டவராக
சமீபத்தில் நியாயம் பெற்றிருக்கிறார்!

இப்படி…
இஸ்லாமிய நவீனக் கர்த்தாக்களின்
விமர்சனம் சார்ந்த கவிதைகளால்,கட்டுரைகளால்,
அல்லது அவர்களின் வளமான
சுதந்திரப் படைப்புகளால்
இஸ்லாத்தின் பவித்திரம் கெட்டுவிடுகிறது என
நினைப்பவர்கள்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்கிற
மகுடத்தின் கீழ் இயங்குவதால் மட்டும்
எப்படி…
நல்ல இலக்கியத்தையும்
உலகத் தரமான இலக்கியத்தையும் தரமுடியும்?

*

நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்
இஸ்லாம் சார்ந்த
மிகச் சிறந்த படைப்பாளியாக
அடையாளம் காணப்பட்டு
பேசப் படுபவர்களாகத் திகழ்வது…
தோப்பில் முகம்மது மீரான்/
அபி/
ஆபிதீன்/ (நாந்தான் அடிச்சேன்! – ஆபிதீன்)
நாகூர் ரூமி/
ஜமாலன்/
மீரான்மைதீன்/
மனுஷ்ய புத்திரன்/
களந்தை பீர் முகம்மது/
எச். பீர் முகம்மது/
ஹெச்.ஜி..ரசூல்/
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி/
கீரனூர் ஜாகிர்ராஜா/
கவிஞர் சல்மா/
ஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா 
அங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த
இஸ்லாமியப் படைப்பாளிகள் என்றால்….
கவிஞர்.அனார்
என்பதான இந்த சிலர் மட்டுமே – என் வாசிப்பில்.

கிட்டத்தட்ட
இவர்களுக்கு மட்டும்தான்…
இந்த இஸ்லாமியர்கள் மட்டும்தான்…
தமிழின் நவீன படைப்பிலக்கியம் குறித்து
தீர்க்கமான அபிப்ராயம் கூற
துறை சார்ந்த அனுபவமும்
செறிவான சிந்தையும் கொண்டவர்கள்.
நம்புகிறேன்.

மேற்கூறிய
இவர்களில் எவரொருவரும்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ குறித்து
வரவேற்று அபிப்ராயம் கூறவில்லை.
வெட்டியும் ஒட்டியும் கூட
இன்றுவரை பேசவில்லை.
தேடிப் போய் அவர்களிடம்
‘உலக இஸ்லாமிய
தமிழ் இலக்கியம்’ குறித்து கேட்டால்…
அந்தக் கேள்வியையே
புறங்கையால்
ஒதுக்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

சரியாக யோசிக்கக் கூடுமெனில்…
இஸ்லாம்
இவர்களுக்கு இலக்கியம் கற்றுத் தரவில்லை.
இவர்களும்
இஸ்லாத்தை முன்நிறுத்தி
இலக்கியம் செய்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.
இன்றுவரை அப்படி ஏதும்
அவர்கள் இருந்ததில்லை என்பதும் உண்மை.
வாழும் யதார்த்தம் இப்படி இருக்க
பிறகு எப்படி
இந்த தமிழ் மண்ணில்
’உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’?

மந்திரத்தால்
இன்னொரு இஸ்லாமியன்
திடுமென
சாதனைக் கொம்புகளோடு
தமிழ் இலக்கியத்திற்குள்
படைப்பாளியாக வந்தால்தான் உண்டு!

***

நன்றி :  தாஜ்  | satajdeen@gmail.com

1:17 AM 26/07/2011

7 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    26/07/2011 இல் 13:15

    //நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்
    இஸ்லாம் சார்ந்த
    மிகச் சிறந்த படைப்பாளியாக
    அடையாளம் காணப்பட்டு
    பேசப் படுபவர்களாகத் திகழ்வது…
    தோப்பில் முகம்மது மீரான்/
    அபி/
    ஆபிதீன்/ (நாந்தான் அடிச்சேன்! – ஆபிதீன்)
    நாகூர் ரூமி/
    ஜமாலன்/
    மீரான்மைதீன்
    மனுஷ்ய புத்திரன்/
    களந்தை பீர் முகம்மது/
    எச். பீர் முகம்மது/
    ஹெச்.ஜி..ரசூல்/
    ஏ.ஏ.ஹெச்.கே.கோரி/
    கீரனூர் ஜாகிர்ராஜா/
    கவிஞர் சல்மா/
    ஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா
    அங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த
    இஸ்லாமியப் படைப்பாளிகள் என்றால்….
    கவிஞர்.அனார்//

    – எனது பட்டியலில்
    ஆபிதீனை
    மனமறிய மகிழ்ச்சியோடு
    தோப்பில் முகம்மது மீரானுக்கு அடுத்து
    குறிப்பிட்டிருந்தேன்.

    என் விமர்சனப் பார்வை
    துல்லியமாக இருக்குமென்றால்…
    தோப்பில் முகம்மது மீரானுக்கு
    மேலே இருந்திருக்க வேண்டியவர்.
    இந்தப் பட்டியலில் மட்டுமல்ல
    தமிழ் சார்ந்த
    நவீன இலக்கியப் பட்டியலிலும்
    நட்சத்திர இடத்தில்
    இருந்திருக்கக் கூடியவர்.
    அது போகட்டும்.
    நான் தீர்க்கமாய் சுட்டிய
    அவரது பெயரை
    அவர் அழித்திருக்கக் கூடாது.
    -தாஜ்

  2. 26/07/2011 இல் 15:44

    அன்பின் தாஜ், ‘Why cut your name? Its too much’ என்ற உங்களின் கோபமான SMS-க்கும் சேர்த்த பதில் : உங்களுக்கு – மதிப்புக்குரிய ஹனீபாக்கா போலவே என்மேல் – அன்புக்கண் என்பதுதான். ’தோப்பில்’ போன்ற மலையுடன் நான் ஒப்பிடத் தகுந்தவனல்ல. தவிர, என்னைவிட சிறப்பாக எழுதும் பலரையும் பார்க்கிறேன். உதாரணங்கள் சொன்னால் நீளும். இதில், ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது மிகமிகச் சிறிய வட்டம்.

  3. 26/07/2011 இல் 19:09

    தாஜ் உங்க கவிதை(வடிவு கட்டுரை)களை ஆபிதீன் தன் பக்கத்தில் போடுகிறார் என்பதற்காக இப்படியெல்லாம் மஸ்கா(ஐஸ்) வைக்கக்கூடாது.

    ஆபிதீன் ஒன்னும் அறியாத சின்னப்பிள்ளை.மொகத்துலெ பால் வடிஞ்சிக்கிட்டிருக்கு, அவரையெல்லாம் உங்க லிஸ்டில் சேர்த்து இலக்கியத்தை அசிங்கப் படுத்தாதீங்க. நல்லவேளை நான் தப்பிச்சிக்கிட்டேன்.

    எல்லாத்துக்கும் இஸ்லாமிய சாயம் பூசுறதுதான் நம்ம ஆலிம்சாக்களின் வேலை. விட்டுத்தள்ளுங்க. தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியப் பங்கு என்பதற்கு பதிலா பேனா சறுக்கி இஸ்லாமிய தமிழ் இலக்கியம்னு எழுதிடுச்சு. வேறே ஒன்னுமில்லெ…!

    • தாஜ் said,

      26/07/2011 இல் 19:40

      நாநா////
      உங்களுக்கு
      நான் என்னத்தெ
      எழுதுறதுன்னே தெரியில.
      -தாஜ்

  4. 27/07/2011 இல் 10:12

    எழுதுங்க தாஜ் எழுதுங்க. நுணுக்கத்தோடு எழுதுறீங்கள்ல அதான் ப்யூட்டி. ரொம்ப பேரு என்னெ மாதிரி இருக்காங்க தூங்கிக்கிட்டு…………. உங்களை மாதிரி உள்ளவங்க எழுப்பிவுட்டாத்தான் எங்களுக்கு முழிப்பே வருது.

    வாழ்த்துக்கள்…!

  5. kulachal yoosuf said,

    31/03/2013 இல் 17:11

    தோப்பிலின் களமும் எழுத்தும் வேறு. ஆபீதீனின் (அடிப்பாரா?) களமும் எழுத்தும் வேறு. முன்பின் என்று வரிசைப்படுத்துவதாக இருந்தால் வயதைக் கருதியும் தோப்பிலை முதலில் சொல்லலாம். அரசியல்வயப்பட்ட நீரோட்டம், காட்டாறாகப் பிரவாகிக்கும் நிலையில் இஸ்லாமிய இலக்கியம் என்ற பெயரில் தனித்துவப்படுத்திக் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாளை (மஃஷரில் அல்ல) தமிழுக்கு இஸ்லாமியனின் கொடை களைப் பற்றி அறிந்துகொள்ள மட்டுமல்ல, எடுத்துச் சொல்ல வும் இதுதான் உதவியாக இருக்கும். அண்மையில் நடந்த ஏதோ ஒரு இஸ்லாமிய இலக்கிய மாநாடு நிகழ்ச்சி குறித்து வழக்கம்போல் ஒரு நண்பர் தகவல் சொல்லி விட்டு, உங்க ளுக்கு அழைப்பு வராதா என்று கேட்டார். ”அது முக்கிய மல்ல, வேறு யார் யார் வந்திருந்தார்கள்” என்று கேட்டேன். பிரபலமான துணிக்கடை முதலாளி முதல் நகைக்கடை முதலாளிவரை பெயர்களைச் சொன்னார். இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றவில்லை என்று சொல்லி விட முடியா தல்லவா? எந்த இலக்கியவாதியாக இருந்தாலும் உடையணி யாமல் இருக்கமுடியாதல்லவா? ஆக, மறைமுகமாகவேனும் இலக்கியத்திற்கு இவர்கள் பணியாற்றியவர்கள்தானே? என்ன நான் சொல்றது?


பின்னூட்டமொன்றை இடுக