அனாருக்குக் கவிதை முகம்!

 

அணாவுக்கு அறுநூறு கவிதைகள் கிடைக்கிற சூழலில் அனாரின் கவிதைகளுக்கு ஆறுலட்சம் பொற்காசுகள் கொடுக்கலாம் (அட, ஒரு சந்தோஷத்தில் சொல்வதுதான்!) ‘என்ட செல்லம் எஸ்.எல்.எம். ஹனீபா‘ உங்களுக்கு  கவிதைகளை அனுப்பச் சொல்லியிருந்தார் என்று ‘பஞ்சவர்ணக்கிளி’  அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மத் அஸீம். அரச சாஹித்திய விருது பெற்ற முதல் முஸ்லீம் பெண்) அனுப்பிய சில கவிதைகளைப் பதிவிடுகிறேன்.  புதிய கவிதைகளை அல்லவா அனுப்பச் சொல்லியிருந்தேன் அனார்? படிக்கப் படிக்கப் புதிதாக இருக்கும் கவிதையென்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டுமோ? அதுவும் சரிதான். முக்கியமாக , அந்த ‘ஊஞ்சல்’ கவிதையின் கடைசிவரி அப்படியே ஊஞ்சலிலிருந்து எழும்பி வானத்திற்கு போக வைத்துவிடுகிறது. நாம் எவ்வளவு தவறவிட்டிருக்கிறோம்!

அன்பின் அனார்,   ‘உமா குருவி‘யின் போட்டிக் கவிதைகளை விரைவில் எதிர்பாருங்கள். அது வராவிட்டால் எங்கள் ஊர் குழந்தை சுகைனா சாதிக்-ன் முதல் கவிதையை (வைரமுத்தண்ணா வாழ்த்தினாராக்கும்!) அடுத்து வெளியிடுவேன்.

குறிப்பு : காலச்சுவடு வெளியீடான , அனாரின் ”எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை இங்கேயும் ,’மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதையை இங்கேயும் , அனாரின் கவிதைகள் பற்றிய நண்பர் முஜீப் ரஹ்மானின் விமர்சனம் மற்றும் அனாரின் நேர்காணலை இங்கேயும்  நண்பர்கள் வாசியுங்கள். நன்றி.

 **

புள்ளக்கூடு *

கலெண்டரில் இலக்கங்கள்…
வித விதமான அசைவுடன் சுற்றுகின்றன
மேல் கீழாக…  வட்டமாக…

கறுப்பு வண்டுகள் வரிசையாகத் திரும்பி
மடியில்…  கையில்…
தலைமுடியில்… காதுகளில்…
தோழில் ஒன்று… வயிற்றில் ஒன்றாக… இறங்குகின்றன
உடம்பு சிலிர்த்து உதறிக் கொள்கிறது

நினைவின் கொடுக்கினால்
புண்ணைத் துளைத்து வண்டுகள் ஏறுகின்றன
இரைச்சல்… அருவருப்பு… தொந்தரவு…

பப்பாசிக்காய்… முருங்கைக்காய்…
பலா… அன்னாசி… எள்ளு எனத் தின்றதும்
பலமுறை மாடிப்படிகளில் ஏறியதும்
இறங்கித் துள்ளியதும் போக…
கடைசியாக ஆறு மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு

எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக

கதவு மூலைக்குள் உள்ளது… அப்படியே  குளவிக்கூடு

குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை
நீளமாக பூரானின் வடிவில்
அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை
  
  

( மாற்றுப்பிரதி ) ஜுன் 2010  
 
 
* புள்ளக்கூடு : (பிள்ளைக்கூடு ) கிழக்கிலங்கையின் கல்முனை பிரதேச முஸ்லீம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால்… அதே வீட்டில் அல்லது அயலில்… பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்புவது வழக்கமாக இருக்கிறது. 

***

காட்சி அறையிலிருந்து தப்பிவந்த நீர்ச்சிலை
 
மகத்தான நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது
 
என்னுடைய களஞ்சியங்களிலிருந்து
முதலில் எனக்கே எல்லாம்
 
மலைப்பொந்திலிருந்து கசியும் ஈரம்
திமிறும் குமிழிகள்
என் மீது நிரம்பி ஓடியது
 
நீர் வீழ்ச்சிகளின் ஆர்ப்பரிப்பை நிகழ்த்தும் ஓவியத்தில்
மீன்கள் இரைகளை உண்கின்றன
 
பூவரசம் பூக்கள் மிதந்து மிதந்து செல்கின்றன
 
ஒவ்வொரு புதிய கணங்களை
ஒவ்வொரு புதிய புன்னகைகளை
ஒவ்வொரு புது வானத்திலும்
ஒவ்வொரு பறவைகளாக்கி பறக்கவிடுகின்றேன்
 
என்னுடைய ஆனந்தத்தை
ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகின்றேன்
எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறேன்
 
எனது ருசியின் முழுமையை
முழுமையின் ருசிக்கு பரிமாறுகின்றேன்
 
எனக்கு மேலும் பசித்தது
 
என்னைக் கலைத்துப் போட்டு உண்ணத் தொடங்கினேன் 
  
( மணற்கேணி) ஜனவரி 2010 

***

சுவர் ஓவியம்
 
 
மரமே வரைந்தது தனக்கென கூடும், பறவையும்
 
நிறங்களை எதிரொலித்துக் கொண்டிருந்த சுவர் ஓவியத்தில்
இரண்டாகப் பிளந்த தாரகை ஒன்றுக்கொன்று
கதைசொல்லிக் கொண்டிருந்தது
 
கூட்டைக் கண்காணிக்கும் கழுகின் கண்கள் பற்றி
 
கூட்டினை தூக்கிக் கொண்டு கனவெல்லாம் அலைகிறேன்
 
நல்ல வெளிச்சம் இருக்கின்றது
 
குகையிலிருந்து பேரழுகை அதிர்வுகள் வந்து விழுகின்றன
 
நதிக்கரை அமைதியாக இருக்கிறது
 
கூட்டை மறந்து வைத்துவிட்டேன்
பறவை கதறுகின்றது
 
கனவுக்குள்ளே
முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்
 
உன் செல் அழைப்பு …..
 
மாலை நடையாக ஊர்கின்ற வார்த்தைகளைப் பிடித்துப் பிடித்து
செவிகளுக்குள் நத்தைகள் ஏறுகின்றன
 
சந்திரனின் குறுக்காக
நாம் பயணிக்கும் மந்திரப் பாய்கள்
மரத்தை விட்டும் தொலைவிலே தெரிகின்றது
இப்போது சுவர் ஓவியத்தில் 
  
 
( அம்ருதா )  ஏப்ரல் 2010 

***

ஊஞ்சல்
 
 
சாய்ந்து எழுந்த விருட்சம் வந்து செல்கின்ற மலைக்குன்று
தள்ளாடுகிற ஆகாயம்
இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
ஊஞ்சலில்…
தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை
 
காற்றுக் குழிகளுக்குள் போய்விழும் மாதுழம் பூவிதழ்கள்
 
ஊஞ்சலாடும் சிறுமிக்கு சிரிக்க மட்டுமே தெரியும்
 
பறவையொன்றின் தன்மைகளை கற்றுத்தருகிறது ஊஞ்சல்
 
வானகத்தின் ஏழு வாசல்களையும் எட்டித் தொடுகிறது
 
அவளுக்கு பாலூட்டுகையில்
மௌனத்தை உறுஞ்சி… அசைந்தது கயிற்றூஞ்சல்
 
சிறுசுகள் கூடி
குதிப்பும்… கூச்சலுமாய் ஆடிய
கொய்யாமரக் கிறுக்கூஞ்சல்
 
தண்ணீர் கரையைத் தொட்டாட
பழுத்துக் காய்ந்து தொங்கிடும்… தென்னோலை ஊஞ்சல்
 
ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த தும்பிகளின்… கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ மோதிச் சிதைந்தது
 
ஆண்களென்றும்…
பெண்களென்றும்… பிரிந்தோம்
வயது வந்தவர்களாகி…
 
எங்கள் ஊஞ்சலைத் தவறவிட்டோம் 
  
( வியூகம்) ஆகஸ்ட் 2010 

***

அனாரின் மேலும் சில கவிதைகள் : வெளியேற்றம் & பாறைஇயல்

***

நன்றி : அனார்  & ‘என்ட செல்லம்’!

***

அனாரின் மின்னஞ்சல் : anar_srilanka@yahoo.com

8 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  25/09/2010 இல் 16:04

  யோவ் ஆபிதீன்…
  என் கவிதைக்கெல்லாம்
  இப்படி நாலுவரி எழுதமாட்டீரே!
  ‘பெண்னென்றால் பேயும் இறங்கும்’பாங்களே…
  அப்படியா?
  இன்னும் அனாரின் கவிதைகளைப் படிக்கவில்லை.
  படித்து பின்னொரு தரம் அபிப்ராயம்.
  – தாஜ்

  • மஜீத் said,

   25/09/2010 இல் 16:08

   ஆம், இதை நான் ஆமோதிக்கிறேன்!!!!

 2. மஜீத் said,

  25/09/2010 இல் 16:06

  உறவின் பிரிவையும் பிரிவின் உருக்கத்தையும் களைப்பேயில்லாமல் சொல்லாடுகிறார் அனார்.
  அனைத்திலும் ஏதொவொரு சோகம் இழையொடுவதும் தெரிகிறது, அநாயாசமான அழகியலோடு.

  //காற்றின் கிழிந்த ஓரங்களைத்
  தைத்து முடிப்பதில்
  அவசரம் காட்டுகின்றன
  ஒரு சோடித் தும்பிகள்//

  வியக்கவைக்கும் உருவகம். ஏன் இத்தனைக்காலம் படிக்காமலிருந்தோம் என்ற கேள்வி தவிர்க்கமுடியாத‌து,
  முதன்முதலாய் அனார் கவிதைகள் தாக்கும்போது.

 3. 26/09/2010 இல் 09:35

  தாஜ், அப்போ நான் என்ன பேயா? இந்த மஜீத் வேறு அதை ஆமோதிக்கிறார். இரண்டு ஷைத்தான்களும் சேர்ந்து என்னை கூடுவிடுறீங்களோ? (கூடுவிடுதல் : கிண்டல் செய்தல். நாகூர் பாஷை)
  நிற்க : இரண்டு மூட்டை பொற்காசுகளை எனக்குத் திருப்பித் தந்துவிட்டு , தனது 3வது கவிதைத் தொகுதி (”உடல் பச்சை வானம்”), காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பதை தெரியப்படுத்தியிருக்கிறார் அனார். வாங்கிப் படித்துவிட்டு இங்கே விமர்சனம் எழுதுங்கள்.

 4. 26/09/2010 இல் 10:40

  புள்ளக்கூடு – என்ற கவிதை எனது வலைத்தளமான மாற்றுப்பிரதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  அதற்கு எனது நன்றிகள். ஆயினும், அந்தக் கவிதையின் வரிவடிவத்தை மாற்றியமைத்து உங்கள் வலைத்தளத்தில் இடுகையிட்டிருப்பதை பார்த்தேன்.
  அதை என்னால் ஏற்க முடியாது. எனவே அதை சரிசெய்வீர்கள் என நம்புகிறேன்.

 5. 26/09/2010 இல் 12:01

  அன்பு றியாஸ் குரானா, அனார் அனுப்பிவைத்ததை அப்படியே ‘பேஸ்ட்’ செய்தேன். வேர்ட்பிரஸ் செய்யும் தகராறுகளுக்கு நான் என்ன செய்வேன்? பார்த்த அனாரும் ஒன்றும் சொல்லவில்லை. உங்கள் வலைத்தளத்தில் உள்ள புள்ளக்கூடை இப்போதுதான் பார்த்தேன். அதன்படி வரிவடிவத்தை உடனே மாற்றியமைக்கிறேன். சரிதானே? நன்றி!

 6. தாஜ் said,

  28/09/2010 இல் 08:52

  வாழ்த்துக்கள்
  ————-

  ஆபிதீன் பக்கத்து
  அனார் கவிதைகளை
  படித்தாகி விட்டது.
  எழுதலாம்.

  *
  அனார் கவிதைகளது
  வரவு…
  தமிழுக்கு கிடைத்த
  சமீப காலக் கொடை!

  *
  தாய்மைக் கொள்ளும்
  கால குறுகுறுப்புகளை உறுதலாகப் பார்ப்பதும்/
  அதனூடான சம்பிரதாயக் கட்டுகளை சகஜமாக மீறுவதும்/
  தொடரும் பழமையின் இருப்பை
  கேலிக்குள்ளாக்குவதுமான…
  இன்றைய நவீனப் பெண்களின்
  யதார்த்த மனப்போக்கை
  பதிவாக கொண்டிருக்கும் ‘புள்ளக் கூடு’
  வெறும் தகவலின் வரிகள் மட்டும்.

  இந்தக் கவிதையில்
  முகம் காட்டும் கவிதை வரிகள்
  இல்லாமலும் இல்லை..

  //நினைவின் கொடுக்கினால்
  புண்ணைத் துளைத்து வண்டுகள் ஏறுகின்றன
  இரைச்சல் அருவருப்பு தொந்தரவு//

  *
  ‘எனக்குக் கவிதை முகம்’

  கவிஞரின் உச்சபட்ச ஆளுமை…
  வியப்பை தருகிறது!
  தன்னில் விளையும்
  நளினங்களை/அதிர்வுகளை
  கவிதைகளாக எழுதித் தீர்க்கிறேன்
  என சொல்ல வரும் இந்தக் கவிதை…
  ஊடே…
  இன்னொரு தளத்தில்
  உடல் சார்ந்த
  ‘பால்’ தெறிப்புகளைப் பற்றி பேசுவது
  அழகு!

  //காட்சி அறையிலிருந்து தப்பி வந்த நீர்ச்சிலை//
  கவிதையின் இந்த வரி
  கவிஞரின் திறனுக்கு சான்று.
  தன்னைக் காண மட்டுமே..
  காட்சிப் பொருளாக மட்டுமே
  வைக்கப் பட்டிருந்த அறையில் இருந்து
  தப்பி வந்ததாக கூறிக் கொள்ளும் கவிஞர்
  தன்னை நீர்ச்சிலை என்று சொல்லிக் கொள்கிறார்!
  நீர்ச்சிலை= நீரில் தெரியும் சிலை!
  நீரில் எப்பொருழும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும்.
  பேசா சிலையாக/ சலனப்பட்ட தனது நிலையினையும்
  கவிதை ஆக்கி இருக்கிறார்.
  யோசிக்க…. வியப்பே மேலோங்குகிறது.

  *
  ‘சுவர் ஓவியம்’

  வர்ணிக்க முடியாத வர்த்தை ஜாலம் கொண்டிருக்கிறது.
  நம் புருவதை உயர்த்துகிறது!
  தனக்கான கூட்டையும், பறவையையும்
  தானே வரைந்ததில் ஏதோ சிக்கல் கொள்கிறார்.

  கவிஞரே பெருமைக் கொள்ளும்
  தனது அவையங்களான
  ‘நிறங்களை எதிரொலித்துக் கொண்டிருந்த
  சுவர் ஓவியமும்’
  (இப்படி ஓர் குறியீட்டை உபயோகிக்க
  ஓர் கவிஞனுக்கு அநியாயத்துக்கு அறிவு வேண்டும்!)
  ‘இரண்டாகப் பிளந்த தாரகை’யும்
  கழுகின் கண்களுக்கு அஞ்சுகிறது.

  ஆதரவான இணைக்காக
  கனவுக்குள்ளே
  முழு ஏமாற்றத்துடனும்
  முட்டி மோதிக் கொண்டிருக்கிற
  கவிஞரின் வாழ்வில்
  எதிர்பார்ப்பு நடந்தேறுகிறது.

  //சந்திரனின் குறுக்காக
  நாம் பயணிக்கும் மந்திரப் பாய்கள்
  மரத்தை விட்டும் தொலைவிலே தெரிகின்றது
  இப்போது சுவர் ஓவியத்தில்// யென
  கவிதையின் முத்தாய்ப்பாக
  கவிதைப் பேசுகிற போது…
  அவரது குதுகளிப்பு வார்தைகள்
  நமக்கும் ஓர் ஆறுதல்.

  சுவர் ஓவியம் என்பது…
  வேண்டாம்.
  வாசக நிலையில் புரிய வருகிற போதுதான்
  கூடுதல் அழகு.

  *
  ‘ஊஞ்சல்’

  அவரது விசேசமான கவிதைகளில்
  இதுவும் ஒன்றாக இருக்கக் கூடும்.
  இது முழுக்க முழுக்க
  அமைப்பியல் சார்ந்தக் கவிதை!
  அது காட்டும் ஆரம்ப
  நிலக் காட்சிகள்
  வேறு எவர் கவிதைகளிலும்
  அத்தனை எளிதில் காணக் கிடைக்காத ஒன்று.

  ஊஞ்சலில் ஆடுகிறபோது…
  அதுவும் சிறார் பருவத்தில் ஊஞ்சல் ஆடுகிற போது…
  நிலக் காட்சிகள்
  கோணம் மாறுவது
  யதார்தமானது என்றாலும்
  அந்த வயதுக்கு அது விந்தை!
  அதனை மிக நுட்பமாக
  கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார் கவிஞர்!
  எத்தனைக்குப் பாராட்டினாலும் தகும்.

  //சாய்ந்து எழுந்த விருட்சம் வந்து செல்கின்ற மலைக்குன்று
  தள்ளாடுகிற ஆகாயம்
  இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
  ஊஞ்சலில்
  தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை//
  வாசிப்பவனை வியக்க வைக்கும் வரிகள்.

  அந்தக் கவிதையின் இன்னுமான வரிகளும் கூட
  இப்படியான ரசனைக் கொண்டதுவே!
  //ஊஞ்சலாடும் சிறுமிக்கு சிரிக்க மட்டுமே தெரியும்
  பறவையொன்றின் தன்மைகளை கற்றுத்தருகிறது ஊஞ்சல்//

  சிறுமிகள்
  காலத்தின் பக்கங்களில்
  வேறு வேறு நிலையெய்தியப்படிக்கு
  ஊஞ்சல் ஆட்டம் கொள்ளக் கூடியவர்களே!
  இந்த ஆட்டம் அவர்களுக்கு
  பறப்பை ஒத்தப் பறப்பை கற்றுத் தரவும் செய்கிறது
  என்பதும் உண்மையே!

  *
  அரச சாஹித்திய விருதை
  அனார் வென்றிருப்பது சரியே!
  சந்தோஷமாக இருக்கிறது.

  //ஒரு காட்டாறு
  ஒரு பேரருவி
  ஓர் ஆழக் கடல்
  ஓர் அடை மழை
  நீர் நான்
  கரும் பாறை மலை
  பசும் வயல் வெளி
  ஒரு விதை
  ஒரு காடு
  நிலம் நான்
  உடல் காலம்
  உள்ளம் காற்று
  கண்கள் நெருப்பு
  நானே ஆகாயம்
  நானே அண்டம்
  எனக்கென்ன எல்லைகள்
  நான் இயற்கை
  நான் பெண்//

  ஆபிதீன் சுட்டிய…
  நெட்டின் வேறு பக்கங்களில்
  காணக் கிடைத்த
  அனாரின் இந்தக் கவிதையின் வழியே
  கவிஞரின் உள்ளார்ந்த திறனையும்
  உறுதியையும் கணிக்கும் வகையில்
  இன்னுமான பல உயரிய விருதுகளும்
  அவருக்கு நிச்சயம்!

  வாழ்த்துகள்…
  Mrs. இஸ்ஸத் ரீஹானா முஹம்மத் அஸீம்….
  வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்.

  – தாஜ்
  satajdeen@gmail.com

 7. f.nihaza said,

  26/08/2011 இல் 01:16

  அனாரின் கவிதை என்னையும் வெகுவாகத் தாக்கிவிட்டது


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s