குவர்னிக்கா – போரின் கொடுமை பற்றிய அனைத்துலகத் தோற்றம் – ஜோஸப் பலாவ் இ ஃபேபர்
(யுனெஸ்கோ கூரியரின் (பிப்ரவரி 1981) பிக்காஸோ சிறப்பிதழிலிருந்து…)
***
பாரிஸில் 1937 இளவேனில் இறுதியில் தொடங்கவிருந்த பன்னாட்டுக் கண்காட்சியில், ஸ்பானிய அரங்கிற்காக பெருந் திரையோவியம் அல்லது சுவரோவியம் ஒன்றைத் தீட்டுவதற்காக ஸ்பானிய அரசு அவ்வாண்டு ஜனவரியில் பிக்காஸோவை நியமித்தது.
ஜனவரி 8இல், 9 செவ்வகக் கட்டங்கள் கொண்ட பன்முகச் செதுக்குச் சித்திரத்தட்டம் ஒன்றை இவர் தயாரித்தார். ஒவ்வொரு கட்டமும் ஒரு நீதிக் கதையைச் சித்திரித்தது. இது ஒரு கேலிச் சித்திரம் என்பதைக் குறிக்கும் வகையில் இதற்குப் ‘ஃபிராங்கோவின் கனவும் பொய்யும்’ எனப் பெயரிட்டிருந்தார். இதில் நாட்டுப்படம், எருது, பறக்கும் குதிரை ஆகியவை மட்டுமே கேலிச்சித்திரமாக செதுக்கப்படவில்லை.
அன்றே இரண்டாம் தட்டம் ஒன்றைச் செய்யலானார். இதனையும் ஒன்பது செவ்வகங்களாகப் பகுத்தார். ஒரு கட்டத்தை அன்றே நிரப்பினார். மறுநாள் மேலும் இரண்டைப் பூர்த்தி செய்தார். மற்ற ஆறு கட்டங்களையும், ‘குவர்னிக்கா’ ஓவியம் முடிவுறும்போதோ அல்லது அதன் பின்போ நிறைவு செய்தார். முதல் தட்டத்தில் போலவேம் இதிலும் பிரதான உருவமாக எருது விளங்கியது. இவ்வுருவத்தை இவர் ஜனவரி 9இல் வரைந்தார்.
நாட்கள் சென்றன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கடந்தன. ஏப்ரலிலும் பெரும் பகுதி சென்று விட்டது. பிக்காஸோ தாம் ஏற்ற பணியைத் தொடவில்லை. இதற்குத்த் தேவையான அகத்தூண்டல் ஏற்படவில்லையோ அல்லது ஏற்ற கருப்பொருள் கிடைக்கவில்லையோ எனத் தோன்றியது. திடீரென, 1937 ஏப்ரல் 26இல், ஃபிராங்கோவின் இசைவுடன் நாஜி விமானப் படை குவர்னிக்கா நகர் மீது குண்டுவீசித் தாக்கியது. உலக வரலாற்றிலேயே, முதலாவது சர்வாதிகாரக் குண்டுவீச்சு இதுவேயாகும். இக்கொடுந்தாக்குதல் பற்றிய தமது புனையா ஓவியங்களை மே 1 அன்று பிக்காஸோ வரைந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஏற்கனவே ஒன்பது மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. ஆராகோன் முனையில் கடும்போர் நடந்தது, மாட்ரிட் முற்றுகை பயங்கரமாக நிகழ்ந்தது. பிப்ரவர் 13இல் பிக்காஸோ பிறந்த ஊராகிய மாலகாவினுள் ஃபிராங்கோவின் படைகள் புகுந்தன. அப்போதெல்லாம் வாளாவிருந்த பிக்காஸோ, குவர்னிக்கா குண்டு வீச்சால் மட்டும் ஏன் அகத் தூண்டல் பெற்றார்?
ஒரேயொரு காரணம்தாம் எனக்குப் புலனாகின்றது. ஆரோகான் சண்டையும் மாட்ரிட் முற்றுகையும் மாலகா வீழ்ச்சியும் பல உயிர்களை பலிகொண்டது உண்மைதான். எனினும்,. அவையெல்லாம் சகோதரச் சண்டைகள்தாம். ஆனால், குவர்னிக்காவில், பாதுகாப்பாற்ற அப்பாவிக் குடிமக்கள் மீது இராட்சத பலம் வாய்ந்த இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இக்கொடுமை கண்டு, பிக்காஸோவின் தார்மீக உணர்வு ஆர்த்தெழுந்தது. அவருள் வெகுண்டெழுந்த ஆவேசம், ‘குவர்னிக்கா’ ஓவியத்தை தீட்டத் தூண்டியது.
… … (குறியீடுகள் பற்றிய விளக்கம் ) … …
***
பிக்காஸோவின் இந்த ஓவியத்தை முழுமையாகக் காணும்பொழுது, இதனை இருபதாம் நூற்றாண்டு மனிதனின் உருவமாகவே நான் காண்கின்றேன். ஏனென்றால், இது மனித குலத்தின் பல்வேறு பாணிகளையும் பருவங்களையும் தழுவி நிற்கின்றது. தங்களது சமயம், வாழ்க்கை முறை, சடங்குகள், சம்பிராதயங்கள், பழக்க வழக்கங்கள், மொழி, நிறம், பண்பியல்கள் அனைத்தாலும் முற்றிலும் மாறுபட்டுள்ள வேறு மக்களும் உலகில் வாழ்கின்றார்கள் என்பதை இன்றைய உலக மக்கள் நண்குணர்ந்திருக்கிறார்கள். இத்தகைய வேற்றுமையிலிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிகள்தாம் உண்டு. ‘நான் செய்வதுதான் சரி; மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு’ என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்தால், தீராத பூசல்கள்தாம் மிஞ்சும். ‘மற்றவர்களின் வாழ்க்கை முறையும் நம்முடையதைப் போல் சிறந்ததுதான்; நாமும் வேறிடத்தில் வேறு சூழ்நிலைகளில் பிறந்திருந்தால், நாம் பகைவர்களாகக் கருதுகின்ற அப்பகுதி மக்களின் மனப்பான்மைதான் நம்மிடமும் குடிகொண்டிருக்கும்’ என்ற உண்மையினை உணர்ந்தும் சகிப்புணர்வையும், நல்லெண்ணத்தையும் வளர்ந்து கொள்வதுதான் இதற்கு மாற்றுவழி. வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டும் மனித வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் இயன்ற வரையில் பிக்காஸோ இந்த ஓவியத்தில் சித்திரித்திப்பதாக நம்புகிறேன்.
ஓவியர் என்ற முறையில் பிக்காஸோவின் கடந்த காலக் கலைத் திறனுக்கு ஒரு தொகுப்புரையாக ‘குவர்னிக்கா’; திகழ்கின்றது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள மாறுபட்ட பாணிகளும் பருவங்களும், மிகவும் எதிரிடையான நுட்பங்களுங்கூட சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே, ‘குவர்னிக்கா’ ஒரு போர் ஓவியம் மட்டுமன்று; அது மானுட சகவாழ்வைப் போதிக்கும் நீதியோவிமுமாகும். பிக்காஸோ கொண்டிருந்த அதே மானோதிடமும், உணர்ச்சியும் கொண்டிருந்தால்தான், இதைப்போன்ற ஒத்திசைவான ஓவியத்தில் இத்தைகைய சுமுக உணர்வினைக் கொடுத்திட இயலும் என்பதையும் இது அறிவுறுத்துகின்றது. இந்த உணர்ச்சிக்குப் பெயர்தான் அன்பு. அவதியுற்றவர்கள் மீதான – கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் மீதான – அபரிமிதமான அன்பு காரணமாகவே , இவர் சாகாவரம் பெற்ற இந்த அற்புதப் படைப்பினைத் தீட்டினார்.
*
தமிழில் : இரா. நடராசன்
*
’பிக்காஸோவின் படைப்புகளைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் அதன் புதுமை என்னைக் கவர்கின்றது. அவரிடமுள்ள திறமைக்கும் ஈடில்லா ஆற்றலுக்கும் அவர் அப்பாற்பட்டு நிற்கின்றார். “நான் பொதுவாக மோசமாக வரைகின்றேன்; அதனால் நான் பிழைத்தேன்” என்று கூறிய அவர், அதே உறுதிப்பாட்டுடன் தம்மையும் மற்றவர்களையும் எதிர்க்கின்றார். இதுவே, அவரது சிறப்புக்கு உண்மையான அளவுகோல்’ – குவர்னிக்கா ஓவியத்தை – 1962 உலகக் கண்காட்சியில் – பார்த்து பிரமித்த ஜப்பானிய ஓவியர் டாரோ ஒக்கமோட்டோ (’குலை நடுங்கும் கொடுங்கனவு’ கட்டுரையில்).
***
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:PicassoGuernica.jpg
மறுமொழியொன்றை இடுங்கள்