இஸ்மத் அருமையானவள் – மண்ட்டோ

இஸ்மத் பற்றி மண்ட்டோ

’எதிர்’ வெளியிட்ட இஸ்மத் சுக்தாய் கதைகள் என்னும் நூலிலிருந்து, நன்றியுடன்.. (ஆங்கிலத்தில் : அசாருதீன் . தமிழில் : G. விஜயபத்மா)
*

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் பாம்பேயில் இருந்தபோது, யாரோ முகமறியா வாசகனிடருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. அந்த கடிதம் தாங்கி வந்த விசயம் இப்படி ஆரம்பித்தது, “நீங்களும் இஸ்மத் சுக்தாயும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எழுத்துலகில் பலம் வாய்ந்த இரு ஆளுமைகள் மண்ட்டோ, இஸ்மத் இருவரும் வாழ்விலும் இணைந்திருந்தால்? எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்? இஸ்மத், ஷாஹித் லத்திஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை கேட்கவே நாராசமாக இருக்கிறது.” இப்படியாக வாசகங்களுடன் நீண்டது அந்தக் கடிதம். அதே நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநாடு ஹைதராபாத்தில் நடந்தது. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனினும், அங்கு நடந்த சம்பவங்களின் விரிவான கட்டுரையை பல பத்திரிகைகளிலும் படித்தேன். மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்மத்திடம் பல கல்லூரிப் பெண்கள் முற்றுகையிட்டு நீங்கள் மண்ட்டோவை திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்று கேட்டார்களாம். அந்த பத்திரிகைச் செய்தி உண்மையா பொய்யா என்று எனக்குத் தெளிவாகத் தெரியாது.

ஆனால், மாநாட்டில் இருந்து திரும்பி பாம்பே வந்த இஸ்மத் என் மனைவி சஃபியாவிடம், ஹைதராபாத்தில் ஒரு பெண் மண்ட்டோ இன்னமும் திருமணம் ஆகாதவரா என்று கேட்டதாகவும், “நல்ல வேளை உண்மையில் இல்லை” என்று தான் பதில் கூறியதாகவும் கூறினாராம்.

இதைக் கேள்விப்பட்டவுடன் என் மனைவி, மிகவும் அமைதியிழந்து பதில் ஏதும் கூறாமல் மவுனமாகி விட்டார். உண்மை என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஹைதராபாத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் போலவே எனக்கும் இஸ்மத்திற்குமான உறவைப்பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது வியப்புக்குரியது. அந்த நேரத்தில் நான் என் கருத்துகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும் இன்றும் அது எனக்கு வியப்பான ஒன்றாகவே தெரிகிறது.

ஒருவேளை நானும், இஸ்மத்தும் கணவன் மனைவியாக இருந்து இருந்தால்… அதன் பிறகு? யூகம்! யூகங்களுக்கு முடிவே இல்லை. இதேபோல வரலாற்றிலும் ஒரு ‘இருந்திருந்தால்’ என்ற யூகம் என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கும்? ஒருவேளை கிளியோபாட்ராவின் மூக்கு ஒரு அங்குலம் அதிக நீளமாக இருந்திருந்தால்? அதனால் நைல் நதியின் வரலாற்றில் ஏதேனும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்குமா என்ன? எது எப்படியாயினும் இன்றைய விஷயத்தில் இஸ்மத் ஒன்றும் கிளியோபாட்ரா அல்ல. மண்ட்டோவும், மார்க் ஆண்டனி அல்ல. ஆனால், நிச்சயமாக ஒருவேளை, மண்ட்டோவும், இஸ்மத்தும் திருமண பந்தத்தில் இணைந்திருந்தால், சமகால புதின இலக்கியச் சூழலில் அது ஓர் அணுகுண்டின் விளைவை ஏற்படுத்தியிருக்கும். சிறுகதைகள் கடந்த காலத்தின் பதிவுகளாக ஆகியிருக்கும். கதைகள் புதிர்களாக தரமிறங்கி இருக்கும். எழுத்து நடையின் சாரம் அபூர்வத்துகள்களாக காய்ந்து போயிருக்கும். அல்லது சாம்பலாக எரிந்து போயிருக்கும். ஒருவேளை அப்படி நடந்திருக்குமானால்? எங்களது திருமண ஒப்பந்த பத்திரமே நாங்கள் எழுதிய கடைசி எழுத்தாகக் கூட இருந்திருக்குமோ என்னவோ? அது சரி, திருமண ஒப்பந்தம் என்ற ஒன்றே இருந்திருக்குமா என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்?

சோட்டெய்ன் என்ற ஒரு நூலின் முன்னுரையில், கிருஷன் சந்தர் இப்படி எழுதியிருக்கிறார். “இஸ்மத்தும் மண்ட்டோவும், அவரவர் கற்பனைத் திறனில் இதைவிட ஒற்றுமையாக இருக்க முடியாது. வாசகர்களைக் குழப்பிவிட்டு, முடிவை அவர்களின் யூகங்களுக்கே விட்டுவிடும் இவர்களது பாணியில் எழுத ஒரு சில உருது எழுத்தாளர்களால் மட்டுமே இயலும். வாசகர்களுக்கு இவர்கள் முதலில் ஆச்சரியங்களையும், ஆர்வங்களையும் தூண்டிவிட்டு என்ன நடக்குமோ என்ற தீர்மானமின்மையுடன் பயணித்து, முடிவில் எல்லாவற்றையும் மாற்றி நகைச்சுவையாக, கொண்டாட்டத்துடன் கதையை முடித்து விடுவதே இவர்களது எழுத்துத் தந்திரமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தால், மற்றவர்களைக் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கடிப்பதற்கு பதிலாக, நாங்களே அதில் மூழ்கியிருப்போம். மேலும் திருமணத்தின் ஆரம்ப இன்ப அதிர்ச்சிக்குப் பிறகு நாங்கள் யதார்த்த உணர்விற்கு வரும் பொழுது, எங்களது ஆர்வம், வியப்பு, கிளர்ச்சி எல்லாமே மகிழ்ச்சியானதாக இல்லாமல் மீளஇயலாத துக்கமாக மாறியிருக்கும். இஸ்மத்தும் மண்ட்டோவும் தம்பதிகள் என்ற இந்தக் கற்பனை என்ன ஒரு கேலிக்கூத்தான சிந்தனை என்றே கருதுகிறேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதே இந்தச் சமூகத்திற்கு நல்லது.

இஸ்மத் பற்றி நான் எழுதுவது எதுவானாலும், அதில் அவமானம் ஒன்றும் இல்லை. மாறாக, அது நான் அவருக்கு பட்ட கடனை திரும்ப செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. அவர் எழுதியதில் எந்தக் கதையை நான் முதலில் படித்தேன் என்பதை என்னால் இன்று சரியாக நினைவுபடுத்தி குறிப்பிட இயலவில்லை. இங்கு குறிப்பிட்டு சில வரிகளை எழுத வேண்டும் என்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன், முடியவில்லை. என் சிந்தனா சக்தி அத்தனைப் பலவீனமாக இருக்கிறது. அவை எழுதுவதற்கு முன்பே எனக்குத் தெரிந்த கதைகள் என்பதைத்தான் இதிலிருந்து நான் புரிந்து கொள்கிறேன். அதனால்தான் என்னால் நிச்சயமாகக் குறிப்பிட்டு எழுத இயலவில்லை போலும்.

எது எப்படியோ முதன் முதலாக இஸ்மத்தை நான் சந்தித்தபோது, மிகவும் ஏமாற்றமடைந்தேன். பாம்பே கிளேர் சாலையில் உள்ள அடேலி சேம்பரில் இருந்த முசாவிர் அலுவலகத்தில், ஷாஹித் அவர் மனைவியுடன் உள்ளே வந்தார். அது ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். மகாத்மா காந்தியில் இருந்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டிருந்த நேரம். நகரத்தின் எல்லா பக்கங்களும், கலவரமும், துப்பாக்கிசூடுமாக அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு வீசும் காற்றில்கூட அரசியல் மிகவும் அடர்த்தியாக நிறைந்து, நாடே மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. நாங்கள் அனைவரும் சிறிது நேரம் சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் எங்களது பேச்சு திசைமாறி,சிறுகதைகள் பற்றி தொடர்ந்தது. அந்த நாளில் இருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான், அடேப் -இ- லதீப் பத்திரிகையில் இஸ்மத்தின் லிகாஃப் என்ற சிறுகதை பிரசுரம் ஆகியிருந்தது. அப்பொழுது நான் டெல்லி வானொலியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அந்தச் சிறுகதையை வாசித்த பின் நான் கிருஷன் சந்தரிடம் கூறினேன். அந்தச் சிறுகதை மிகவும் அருமையாக இருந்தது.
ஆனால், அதன் கடைசி சில வரிகள் அந்த அழகான சிறுகதையின் தரத்தைச் சிதைத்துவிட்டதாக நான் கருதுகிறேன். அந்த வரிகளில், நுணுக்கமான உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஜீவனற்று இருந்தது. அஹமத் நசீம் ஹாசிமிற்கு பதில் நான் ஆசிரியராக இருந்து இருந்தால், அந்த இரண்டொரு வரிகளை அந்தக் கதையில் இருந்து நீக்கி இருப்பேன். இப்பொழுது நாங்கள் சிறுகதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்ததால், இந்த நிகழ்வை நான் இஸ்மத்திடம் கூறினேன். மேலும் தொடர்ந்து, “இஸ்மத், உன் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உன்னுடைய எழுத்தின் சிறப்பு நீ உன் கதைகளுக்காக தேர்ந்தெடுத்து உபயோகிக்கும் வார்த்தைகளும், உன் புதுமையான உதாரணங்களும்தான். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு இந்தக் கதையில், எனக்கு யாரவது ஒரு லட்சம் கொடுத்தாலும்கூட, நான் அந்தப் போர்வை ஒரு அங்குலம் உயர்ந்தபோது என்ன பார்த்தேன் என்று கூற மாட்டேன் என்ற அர்த்தமில்லாத வரிகளை ஏன் இணைத்தாய்?” என்று கேட்டேன். உடனே தயக்கமே இல்லாமல் இஸ்மத் என்னிடம் திருப்பிக் கேட்டார், “அந்த வரிகளில் என்ன குற்றம் கண்டீர்கள்?” நான் அவருக்குப் பதில் சொல்ல எத்தனித்து அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். அவர் முகத்தில், குடும்பத்தில் இருக்கும் அப்பாவிப் பெண்கள், தாங்கள் ஏதோ குற்றம் செய்துவிட்டோமோ என்று சங்கடப்பட்டு பதிலுக்காகக் காத்திருப்பதைப் போன்ற ஒரு தவிப்பான உணர்வைக் கண்டேன். நான் சிறிது ஏமாற்றமடைந்தேன். ஏனென்றால், நான் அவரிடம் இதைக் குறித்து மிகவும் விவரமாக விவாதிக்க விரும்பினேன். லிகாஃப் கதையை பற்றிய என் கருத்துகளை எல்லாக் கோணங்களிலும் அந்தப் புரட்சிகரமான பெண் எழுத்தாளரிடம் அலசி விவாதிக்க விரும்பினேன். ஆனால், அது எதுவும் நடக்காமல் அவர் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றதும் நான் எனக்குள் சொல்லி கொண்டேன், “இது துயரமாக, பாவம் இஸ்மத் ஓர் அப்பாவிப் பெண் என்றளவில் முடிந்து போனது” என்று.

எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்பொழுது நான் டெல்லியில் இருந்த என் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், “நான் இஸ்மத்தைச் சந்தித்தேன். நீ அவள் போன்ற பெண்ணைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவாய். அவள் அப்படியே சுபாவத்தில் உன்னைப் போலவே இருக்கிறாள். எனக்குதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.ஆனால், நீ அவளை நிச்சயமாக விரும்புவாய். அந்த லிகாஃப் சிறுகதையின் கடைசி வரிகள் பற்றி நான் மறைமுகமாகக் கூறியதற்கே அவள் சங்கடப்பட்டாள்.”

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, மீண்டும் நான் மிகவும் தீவிரமாக என் கருத்துகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தபோது, காலம் கடந்த கலைப்படைப்பை உருவாக்க வேண்டுமானால், ஒருவர் தனது இயல்பான வரம்புக்குள்ளேயே இருப்பது அவசியம் என்பதை பலமாக உணர்ந்தேன்.

நான் சிந்தித்துப் பார்த்தேன். பெண்கள் ஆண்களோடு சேர்ந்து போர்க்களத்தில் போரிடட்டும். மலைகளை குடையட்டும். இஸ்மத் சுக்தாய் போல கதாசிரியர்களாகட்டும். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்கைகளை ஹென்னாவால், அலங்கரித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மணிக்கட்டுகளில் இருந்து வளையல் சத்தம் எழ வேண்டும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது. நான் இஸ்மத் சுக்தாய் பற்றி அந்த சமயத்தில் அப்படிக் கருத்துச் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். அவர் எல்லாவற்றுக்கும் மேல், அப்படி ஒரு சாதாரண பெண்ணாக இல்லாதிருந்தால், புல்புலையான், டில், லிஹாஃப் மற்றும் கைந்தா போன்ற அருமையான, உணர்ச்சிமிகு கதைகளை நாம் அவரிடம் இருந்து பெற்றிருக்க முடியாது. அவருடைய கதைகளும் சரி, அவருடைய கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சரி தூய்மையாக, பாசாங்கற்ற வெளிப்படைத்தன்மையுடன் யதார்த்த வாழ்வின் இயல்பான பெண்ணின் பன்முகங்களில் பிரதிபலித்தது. இவற்றில் எல்லாம் ஆண்களை வெல்ல கையாளும் லீலைகளோ, நளினங்களோ, தந்திரங்களோ இல்லை. உடலின் முரட்டு செய்கைகளுக்கு உள்ளுணர்வுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பெண்ணின் உலகமறியா வெகுளித்தனமும், மென்மையும் உண்மையான ஆத்மார்த்தமான அவளின் ஈடுபாட்டைக் கண்டு அவளை அரவணைத்து கொள்ளும் ஆணின் மனம் என்ற வாழ்வின் உண்மையை நான் இஸ்மத் படைப்புகளில் கண்டேன்.

இஸ்மத் தனது அன்புச் சகோதரனின் நினைவாக தோசாக்கி (நரகத்தை நோக்கி) என்ற கதையை எழுதியிருந்தாள். ஷாஜஹான் தனது காதல் தேவதையின் பூத உடலுக்காக மற்றவர்களை கற்களை சுமக்க வைத்து, ஒரு பெரிய சமாதியைக் கட்டினான். ஆனால், இஸ்மத் தனது சகோதர உணர்ச்சிகளைத் திரட்டி, பாசத்தைக் கொண்டு, ஒரு உயர்ந்த சாரத்தை எழுப்பி, பின்னர் அதன் மேல் தனது சகோதரனின் உடலைக் கவுரவமாக வைத்தார். தாஜ்மஹால் ஷாஜஹானின் அன்பை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டும் பளிங்கு மாளிகைதான். ஆனால், மாறாக, தோசாக்கி இஸ்மத்தின் அன்பின் காரணமாக விளைந்த ஒரு நேர்த்தியான மிக மென்மையான படைப்பு. அதன் தலைப்பு, அதில் பொதிந்து கிடக்கும் உள்ளடக்கத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ள சொர்க்கத்தைப் பற்றி உரக்கப் பறைசாற்றும் விளம்பரமல்ல.

இஸ்மத்துக்கு ஐஸ் கட்டி மெல்லும் பழக்கம் உண்டு. ஒரு கையில் ஒரு துண்டு வைத்துக்கொண்டு, மற்றொன்றை வாயில் வைத்து சத்தமாக மென்று கொண்டிருப்பார். அவர் பல சிறுகதைகளை இப்படித்தான் எழுதினார். ரேடியோ கேட்டுக்கொண்டும், ஐஸ் கட்டிகளை பற்களால் நறநறவென கடித்துக்கொண்டும் பேனாவை கையில் பிடித்து எழுதித்தள்ளுவது அவர் பாணி. இஸ்மத் மாதக்கணக்கில் எழுதவே மாட்டார். ஆனால், எழுத ஆரம்பித்துவிட்டால் சாப்பிட, குளிக்க, குடிக்க என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், பேனாவில் தனது கருத்துகளை மையாக்கி, நூற்றுக்கணக்கான காகிதங்களில் மளமளவென எழுத்துப் பிழை பற்றியும் அக்கறையில்லாமல் எழுதித் தள்ளுவார். எனக்குத் தெரிந்தவரை, ஒரு ஏழெட்டு அமர்வுகளிலேயே, ஒரு நீண்ட நாவலான டெர்ஹி லகீர்யை அவர் எழுதி முடித்துவிட்டார்.

கிருஷன் சந்தர் அவர் கதை சொல்லும் வேகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இஸ்மத்தின் கதைகள் குதிரைப் பந்தயங்கள் போல வேகமாக நகரும். அவர் கதைகள் மட்டுமல்ல, அவற்றில் வரும் வாக்கியங்கள், உருவங்கள், உருவகங்கள், கதாபாத்திரங்களின் உணர்வுகள், ஒலிகள்கூட புயல் வேகத்தில் நகரும். இஸ்மத்தின் பேனா, நாக்கு, இரண்டுமே வேகமாக ஓடும்” என்று கூறுவார். இஸ்மத்தின் இயல்பிலேயே வேகம் இருப்பதால், சப்பாத்திக்கு மாவு பிசையும்போதே, சப்பாத்தி செய்து முடித்துவிட்டதாக கற்பனை செய்து கொள்வார். உருளைக்கிழங்கு தோலுரிக்கும் போதே, அதை வைத்துக் குழம்பு சமைத்துவிட்டதாக நினைத்துக் கொள்வார். சமையலறைக்கு உள்ளே போய் வெளியே வந்து, தனது கற்பனையில் சாப்பிட்டுவிட்டதாக திருப்திபட்டுக் கொள்வார் என்று கூட தாம் நினைப்பதுண்டு என்று கிருஷன் சந்தர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட இஸ்மத் தன் பெண் குழந்தைக்கு துணிகள் தைக்கும்போது மட்டும், பொறுமையாக, ஊசி இப்படி அப்படி நகராமல் அதன் வேலையை அது நேர்த்தியாக செய்யும் வண்ணம், அவ்வளவு அழகாக தைத்து முடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்மத் பிடிவாத குணம் கொண்டவர். அது அவரது இரண்டாம் இயல்பு. இந்த விஷயத்தில் அவர் குழந்தை போன்றவர். அவர் எந்த கருத்தையும் ஏன் இயற்கை விதியைக்கூட ஒரு சின்ன மறுப்புகூட இல்லாமல் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். முதலில் திருமணமே மறுத்தவர், பின்னர் மணமானதும் குழந்தை பெற்று கொள்ள மறுத்தார். துன்பப்பட்டாலும், எதிர்ப்பை சந்தித்தாலும் அதற்காக பிடிவாதத்தை விடவே மாட்டார். அதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதுதான் வாழ்க்கையின் உண்மைகளை அவற்றுடன் தர்க்கம் செய்து சோதித்துப்பார்க்க அவர் கையாண்ட உத்தி என்று நினைக்கிறேன். அவர் பாணியே தனி. வித்தியாசமானதும்கூட. அவருடைய ஆண், பெண் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே இதே போன்ற பிடிவாதம், மறுப்புக் குணங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

இஸ்மத் மீது சக எழுத்தாளரான ஒரு வயதான மனிதருக்குக் காதல் வந்தது. அவர் அதனை இஸ்மத்திடம் கடிதங்கள் மூலம் தெரிவித்தார். முதலில் அதனை ஏற்றுக்கொண்டவர் போலிருந்த இஸ்மத் பின்னர் அந்த நபருக்கு சரியான பாடம் புகட்டினார். இந்தத் தகராறு எல்லாம் வேண்டாம் என்றுதான், நானும் இஸ்மத்தும் மிகக் குறைவாகவே பேசிக்கொள்வோம்.

எனது கதை எப்போது வெளிவந்தாலும், அதனை அவர் பாராட்டுவார். நிலம் பிரசுரமான போதும், அவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை பாராட்டினார். அவர் என்னை ‘மண்ட்டோ பாய்’ என்று தான் அழைப்பார். நான் அவரை ‘இஸ்மத் பெஹென்’ என்றுதான் அழைப்பேன். கடவுள் சித்தம். எங்கள் ஐந்தாறு வருட நட்பில் எந்த அசாதாரண சம்பவமும் நிகழவில்லை. ஒரு முறை, நாங்கள் இருவரும் ஆபாச எழுத்துகளை எழுதினோம் என்று கூறி கைது செய்யப்பட்டோம். இதுபோன்ற குற்றச்சாட்டு என்மீது ஏற்கனவே இரு முறை வந்திருந்தாலும் இஸ்மத்துக்கு அதுவே முதல் முறை. அவர் மிகவும் மனம் வருந்தினார். அதிர்ஷ்டவசமாக பஞ்சாப் போலீஸ் வாரண்ட் இல்லாமல் எங்களை கைது செய்து விட்டதால், அந்தக் கைது நடவடிக்கை சட்ட விரோதமாகி விட்டது. இஸ்மத்துக்கு மகிழ்ச்சி.

தொல்லையே வாழ்க்கையாய் இருப்பவர்கள் எவ்வளவு நாள் தான் பாதுகாப்பாய் இருக்க முடியும்? இறுதியாக லாஹூர் நீதிமன்றத்தில் இஸ்மத் ஆஜர் ஆக வேண்டியிருந்தது. பம்பாயிலிருந்து லாஹூருக்கு ஒரு நீண்ட பயணம். ஷாஹிதும் என் மனைவியும் கூட வந்தார்கள். நாங்கள் உற்சாகமாக இருந்தோம். சபியாவும் ஷாஹிதும் சேர்ந்துகொண்டு, கைதானால் ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசி எங்களைப் பயமுறுத்தினர். இறுதியாக இஸ்மத் கொதித்தெழுந்து, “எங்களுக்குத் தூக்கு தண்டனை கூட கொடுக்கட்டும். நாங்கள் உண்மையின் பக்கமே நிற்போம்” நாங்கள் இந்த வழக்கு சம்பந்தமாக இரு முறை லாஹூர் செல்ல வேண்டியிருந்தது. இருமுறையும், எங்களைப் பார்க்க ஏராளமான மாணவர்கள் அருகாமையிலுள்ள கல்லூரிகளிலிருந்து வந்து கூடி விட்டனர். இதைக் கவனித்த இஸ்மத், “மண்ட்டோ பாய்… சவுதரி நஸிர்கிட்டே சொல்லி நம்மை பார்க்க விரும்புவர்களிடம் இருந்து பணம் வாங்கச் சொல்லுங்க… கைச்செலவுக்காவது உதவும்” என்றார். இரு முறை லாஹூர் சென்றபோதும், கர்னல் பூட் ஷாப்பில் நாங்கள் பத்துப் பன்னிரண்டு செருப்பு, ஷூக்கள் வாங்கினோம். இஸ்மத்திடம் யாரோ ஒருவர் பம்பாயில் கேட்டார்கள்:

“கேஸ் விஷயமாகவா லாஹூர் சென்றீர்கள்?” அதற்கு இஸ்மத் சொன்ன பதில்: “இல்லை. ஷூ வாங்கப் போனோம்.”

இஸ்மத்தின் பெண்ணென்ற அடையாளம், அவருடைய எல்லா எழுத்துகளிலும் பிரதிபலித்தது. அவருடைய படைப்புகளின் மீதான நமது ஆய்வுகளிலும், விமர்சனங்களிலும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அது வழிநடத்தியது. ஓர் எழுத்தாளராய், அவருடைய பலம், பலவீனம் இரண்டையும் அவருடைய பாலினத்திலிருந்து நம்மால் பிரித்துப்பார்க்க முடியாது. அஜிஸ் அஹ்மத் என்பவர், இஸ்மத்தைப் பற்றிக் கருத்துக் கூறும்போது, “உடலை அனுபவித்து அறிவதற்கு இஸ்மத்துக்கு ஒரு வழி இருக்கிறது. அது தழுவுதல் மூலம்தான். அவருடைய புதினங்களில் வரும் எல்லா ஆண்களுமே- ரஷீதிலிருந்து டெய்லர் வரை -அவர்களுடைய உடல் ரீதியான, மன ரீதியான, பாலியல் செயல்களின் மூலமே கணிக்கப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.

இஸ்மத் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். மென்மையான தொடுதலே அவருக்குப் போதும். அவருக்குள் மேலும் பல உணர்வுகள் அதே அளவுக்கு உள்ளன. உதாரணமாக அவருடைய கேட்புத் திறன் மற்றும் நுகர்தல் திறன். அதிலும் அவருடைய படைப்புகளில் கேட்புத் திறனின் பங்கு எனக்குத் தெரிந்தவரை மிகவும் அதிகம். கர்ர்ர்ர். பாட்… ஷூன்… பாஷ்… கார் கார்போர்டுக்கு வெளியே உறுமிக் கொண்டிருந்தது. அவன் ரேடியோவினை திருகிக்கொண்டே இருந்தான். – காரர்… கான்… சவுத்… ஷாஷி…காரும்… எனது கண்கள் கண்ணீர் குளமானது. தனன்… தனன்… – சைக்கிள் பெல் அடித்தது… என்றெல்லாம் ஒலிகளை எழுதி சூழலை நமக்குச் சரியாகப் புரிய வைப்பார்.

அவருடைய எல்லாப் புலன்களும் சரியான இடத்தில் வேலை செய்யும். காமம் அவருடைய எழுத்துகளில் ஒரு நோய் போல நீக்கமற நிறைந்திருக்கும் என்ற அஜிஸ் சாஹேபின் கருத்து அவருடைய பார்வையின்படி சரியாக இருக்கலாம். ஆனால், அந்த நோய்க்கான மருந்தை அஜிஸ் பரிந்துரைக்க அஜீஸ் அஹ்மத், ‘இஸ்மத்தின்’ கதாநாயகிகள் யாரையுமே ஆண்கள் ஆழமாகக் காதலிப்பதில்லை. அல்லது அவர்கள் எந்த ஆணையும் காதலிப்பதில்லை என்று கூறுவார். இதுபோல இஸ்மத்தைப் பற்றி ஏராளமானோர் ஏராளமான கருத்துகளைச் சொல்வர்.

இஸ்மத்தின் நாடகங்கள் வலுவற்றவை. அவருடைய கதைகள் சரியாகப் புனையப்படுவதில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாமல் ஒட்டுப் போட்டதைப்போல உள்ளன. அவருக்குக் காமம் தான் எல்லாம். அது அவருக்கு ஒரு நோய் போல… அவர் விருந்து நிகழ்ச்சிகளில் விசித்திரமாக நடந்துகொள்வார். அவருக்குத் திரைக்குப் பின்னால் நடப்பதை விவரிப்பதில் அபாரத் திறமை. அவருக்குச் சமூகத்தின் மீது அக்கறை இல்லை. மக்களின் மீதுதான். மக்களின் மீது என்றுகூடச் சொல்ல முடியாது. தனிப்பட்ட மனிதர்கள் மீதுதான். அவருடைய கதைகளுக்குத் திசையோ திக்கோ கிடையாது. அவருடைய ஆழ்ந்து நோக்கும் திறனும் அபாரமானது. அவர் ஓர் ஆபாச எழுத்தாளர். அவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர். கத்தி முனையில் நடக்கக் கூடியவர். இப்படி பல ஹேஷ்யங்கள் இஸ்மத் பற்றி செய்திகளாக உலா வந்தன. இவை எதுவும் இஸ்மத் என்ற ஆளுமையை எள்ளளவும் பாதிக்கவில்லை. அவர் பாட்டுக்கு இயங்கிக்கொண்டே இருந்தார்.

ஒருமுறை டெல்லியைச் சேர்ந்த தேஷ் என்பவர் எங்கள் அனுமதியின்றி எங்கள் இருவர் கதைகளையும் பிரசுரித்து விட்டார். இஸ்மத் வெகுண்டெழுந்து விட்டார். “நாம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நான் அவரிடம், “லாஹூரில் சவுதரி முஹம்மது உசைன் இருக்கிறார். அவரிடம் சொன்னால், அவர் தேஷ் மீது வழக்குப் போட்டுவிடுவார்” என்று சொன்னேன். அதற்கு இஸ்மத் சிரித்தபடி, “யோசனை நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்னவென்றால், அவரோடு சேர்த்து நம்மையும் வளைத்துக் கொள்வார்களே” என்றார்.

நான் சொன்னேன். “அதனால் என்ன? நீதிமன்றம் வேண்டுமானால் சுவாரசியமான இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கர்னல் பூட் ஷாப் அப்படி இல்லையே… அவரை நாம் அங்கு கூட்டிச் சென்று…”

நான் சொல்லி முடிப்பதற்குள், இஸ்மத்தின் கன்னத்தில் இருந்த குழிகள் மேலும் ஆழமாகின. இஸ்மத் என்ற தோழி அருமையானவள்

*
நன்றி : எதிர் வெளியீடு

*

தொடர்புடைய பதிவு :

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்