மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்

நூறாவது பதிவு.  இதுவரை 15000 ஹிட். அதில் 14999 தடவை நானே ‘க்ளிக்’கியிருக்கிறேன். அந்த ஒரே ஒரு ஆள் யார் என்று தேடிக் கொண்டும் இருக்கிறேன். கண்டிப்பாக என் மகள் அனீகா நிலோஃபராக இருக்காது. சரி,  ‘கடவுளின் மடி’யைக் காட்டிவிட்டு – ஒரேயடியாக வலையுலகிலிருந்து – ஒதுங்கி விடலாம் என்ற நினைப்பு.  நுஸ்ரத் ஃபதே அலி கானின் ‘மன் குன்த்து மௌலா’வின் youtube ஐ தேர்வு செய்தேன் (மேலேயுள்ள,  SamiYusuf பாடிய அற்புதமான ‘சலவாத்’ஐ கூட யாரும் கேட்டதாகத் தெரியவில்லையே… எனவே தேடுங்கள், கண்டடைவீர்கள்). ஆனால் அதுவும் ஆன்மீகம். இந்த அப்துல் கையும் ஏற்கனெவே கிண்டல் செய்து கொண்டிருக்கிறார் என்னை ‘தோழே.. நீங்க பார்ஸி பாவா, ·பக்கீர் பாவான்னு போறதைப் பாத்தா ‘பகீர்’ங்குது, எங்கே ஜிப்லி பாவா கணக்கா போய்விடுவீங்களேன்னு…ஹூம்..அல்லா வச்சு காப்பாத்த’ என்று. மன்னர்களை தலைகுனியவைத்த மௌலானா ரூமியும் நிஜாமியும் வெறும் ·பக்கீர்களா?   நாகூர்க்காரரா இப்படிச் சொல்வது? அல்லா வச்சு காப்பாத்த… (ஷிப்லிபாவா பற்றி விபரம் அறிய விரும்பும் நண்பர்கள் , ஹமீது ஜா·பர் நானா எழுதிய புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.  இங்கே அழுத்தவும்.  இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பஹ்ரைனிலிருந்து கையுமின் ஃபோன்.  யா ஷிப்லி…!

அந்த என் ஒரே ஒரு வாசகருக்காகத்தான் இந்தப் பதிவு. ‘நிழல்’ இதழில் (இதழ் 13, ஆகஸ்ட் 2004) வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகளைப் பதிகிறேன். மொழிபெயர்ப்பு : திரு. ராமானுஜம் அவர்கள். படிப்பதற்கு முன் நண்பர் ஜமாலனின் ‘பனிப்போருக்கு பணிய மறுத்த போர் வாள் / மாண்ட்டோவின் கடித இலக்கியம்’ என்ற கட்டுரையை வாசிப்பது நல்லது.  சுக்தாய் மற்றும் மாண்ட்டோவின் கதைகளின் சுட்டிகளை கீழே தந்திருக்கிறேன். முறிந்தால் நான் பொறுப்பல்ல , அவர்களின் எழுத்து அப்படி.

***

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்
தமிழில் : ராமானுஜம் 

ismat_chughtai_a_fearless_voiceஇஸ்மத் சுக்தாய் ((1915 – 1991) . இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார்.  1941-ல் ‘லிகாப்’ என்ற சிறுகதை மூலம் உருது இலக்கியத்தில் அறிமுகமானவர். அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு நவாபின் மனைவிக்கும் அவளின் பணிப்பெண்ணிற்கும் (வயதானவர்) உள்ள உடல் ரீதியான தொடர்பு பற்றியது கதை. 9 வயது சிறுமி பார்வையில் இந்தக் கதை சித்தரிக்கப்படுகிறது.

இந்தக் கதை ஆபாசமானது என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரண்டாண்டுகள் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு , ‘நான்கு சொல்’ ஆங்கில வார்த்தை ஏதும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர் திரைப்பட இயக்குநர் ஷாகித் லத்தீபை தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி 1942-ல் திருமணம் செய்து கொண்டார். அவரோடு இணைந்து ஆறு திரைப்படங்களையும் அவரின் மறைவிற்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். இன்றளவும் இவர் எழுதிய ‘Crooked Line’ என்ற நாவல் இந்திய துணைக் கண்டத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நவீன உருது இலக்கியத்தில் மண்ட்டோ, கிஷன் சந்தர் , பேடி, இஸ்மத் சுக்தாய் நால்வரும் பிரதான நூல்களாகக் கருதப்படுகிறார்கள்.

**

saadathasanmanto1

Saadat Hassan Manto (Urdu: ‏‏سعادت حسن منٹو) (May 11, 1912 – January 18, 1955)

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி

இஸ்மத் சுக்தாய்

.. நான் ஓரக் கண்ணால் அவரைப் பார்த்தேன். தடித்த கண்ணாடிகளுக்குப் பின்னே பிரகாசித்த அந்தக் கருவிழிகள் திடீரென்று எனக்கு மயிலின் தோகையை நினைவூட்டியது. இந்தக் கண்களுக்கும் மயிற் தோகைக்குக் என்ன சம்மந்தம்? எனக்குத் தெரியவில்லை என்றாலும் நான் எப்போது அந்தக் கண்களைப் பார்த்தாலும் எனக்கு மயிற்தோகைதான் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அகங்காரமும், அடங்காத தன்மையும் இணைந்து இயல்பாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பிரகாசம்தானா அது? அவரின் கண்களை நான் பார்த்தபோது என் இதயம் ஒரு துடிப்பை மறந்தது.

அந்தக் கண்களை இதற்கு முன்னரே பார்த்திருக்கிறேன். மிக நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். இதயம் நிரம்பிச் சிரிப்பதை, தீவிரமாய்ச் சிரிப்பதை, வடுச்சொல் தாங்கிய அம்பை விட்டெறிவதை, உயிரற்ற கல்லாய் மாறுவதைப் பார்த்திருக்கிறேன்.

……

சாப்பிடும்போதும் அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் ‘லிகாப்’க்கு (ரஜாய்) திரும்பி – அது அப்போது எனக்கு சங்கடமான விஷயமாக இருந்தது – அதை வைத்துக் குத்தத் தொடங்கினார். நான் அதிலிருந்து நழுவ முயற்சித்தாலும் அவர் தீர்மானமாய் தன் நிலையிலிருந்து  மாறாமல் அந்தக் கதையில் ஒவ்வொரு இழையையும் பிடுங்கிப் போட்டார். நான் அதை எழுதியதற்காக மன்னிப்பு கேட்டவுடன் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். என்னைக் கோழை என்றும் வெத்து என்றும் திட்டித் தீர்த்தார். ‘லிகாப்’ சிறுகதையை நான் என் மிகச் சிறந்த படைப்பாகக் கருதவில்லையென்றாலும் மண்ட்டோ அது என் மிகச் சிறந்த படைப்ப்த்தான் என்று அழுத்தமாய்ச் சொன்னார். சுருங்கச் சொன்னால், ‘லிகாப்’-ஐப் பற்றி நாங்கள் அக்குவேறு ஆணிவேறாய் விவாதித்த போது மண்ட்டோவால் ஆபாசமான, அசிங்கமான விஷங்களைக் கொஞ்சமும் தயக்கம் இல்லாமலும் போலி உணர்வு இல்லாமலும் மிக அழகாக வெளிப்படுத்த முடிந்ததைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். அல்லது அதைக் கவனிக்க எனக்கு வாய்ப்பு கொடுக்க அவர் மறுத்திருக்கலாம். அவரின் விமர்சனங்கள் எனக்குக் கோபத்தையும் எரிச்சலையும் தருவதற்குப் பதில் சிரிப்பையே வரவழைத்தது.

—-
எப்போதும்  நானும் மண்ட்டோவும் ஐந்து நிமிடம் சந்திக்கலாம் என்று நினைத்தால் அது ஐந்து மணி நேரச் சந்திப்பாக மாறியது. அவரோடு விவாதம் செய்வதென்பது ஒருவரின் புத்தியைக் கூர்ப்படுத்துவது போலிருக்கும். விளக்குமாற்றைக் கொண்டு மூளையில் படிந்துள்ள ஒட்டடைகளையெல்லாம் அகற்றி சுத்தம் செய்வது போலிருக்கும். சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்து மிக நீளமான நூல் சிக்குண்டது போலவும், சிந்திப்பதற்கும், புரிந்து கொள்வதற்குமான திறமை முழுக்க அழிக்கப்பட்டது போலவும் அமையும். சில சமயங்களில் எங்களின் விவாதங்கள் சண்டைகளாக உருமாரி, சங்கடமான விளைவை ஏற்படுத்தும் முடிவுக்குக் கொண்டு வரும். தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றத்தை நான் மூடி மறைக்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஆனால் மண்ட்டோ அழத் தொடங்குவார். அவரின் கண்கள் மயில் தன் தோகையை விரிப்பது போல் விரிந்து, மூச்சின் சுவாசக் குழாய் பெரிதாகி, வாய் கோணலாகி, அவரின் முகம் சுருங்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். தனக்கு உதவியாய் ஷாகித்துக்கு அழைப்பு விடுவார். அத்தகைய சமயங்களில் எங்களின் விவாதங்க்ள் இலக்கியம் தத்துவம் என்பதிலிருந்து விலகி குடும்ப விஷயங்கள் பக்கம் திரும்பும். மண்ட்டோ அறையை விட்டுச் சீறி வெளியேறி விடுவார்.

…..

ஆனால் நாங்கள் காலையில் சண்டை போட்டுக் கொண்டாலும் மறுபடியும் மாலையில் சந்திக்க்க வேண்டி வந்தால் ஏதும் நடக்காதது போல் அன்போடு வரவேற்பார். நாங்கள் வழக்கம்போல் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டாலும் முதல் சில நிமிடங்களுக்கு நாங்கள் நாங்கள் எங்களை மிக மென்மையாக வெளிப்படுத்திக்கொண்டு , மற்றொருவரின் சிந்தனையை முழுமனதோடு ஏற்றுக் கொள்வதுபோல் பாவனை செய்வோம். ஆனால் இந்த பாவனைகள் எல்லாம் சீக்கிரத்தில் காற்றில் மறைந்து வழக்கம்போல் பட்டாசு வெடிக்கத் தொடங்கும். எங்களின் வார்த்தைகள் ஒரு தோட்டாவுக்கான வேகத்தைக் கொண்டது. பல சமயங்களில் மற்றவர்கள் வேண்டுமென்றே வேடிக்கைக்காக எங்களை முட்டி மோதிக் கொள்ள வைக்க , நாங்கள் எரிச்சலடைந்து எங்களுக்குள்ளான கருத்து வேறுபாட்டை அச்சமயத்திற்கு ஒதுக்கி வைத்துக் கொள்வோம். நாங்கள் எங்களின் சந்தோஷத்திற்காகத்தான் விவாதித்தோமே தவிர கோழிச்சண்டை போட்டு மற்றவர்களை சந்தோஷப்படுத்த அல்ல. நாங்கள் எவ்வளவு விவாதங்களில் ஈடுபட்டாலும் நாங்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பலமான ஒரு ‘அணி’யாய் இருந்து மற்றவர்களை வியர்க்க வைக்க வேண்டும் என்பது மண்ட்டோவின் கருத்து. ஆனால் பல சமயங்களில் நான் அதை மறந்து என் ‘அணி’க்கு உண்மையாக இருக்க வேண்டி இருப்பதால், கலைக்கப்பட்ட சீற்றத்துடன் வெளியேறும் குளவி போல் கொட்டத் துவங்கி விடுவேன்.
—–

மண்ட்டோ தற்புகழ்ச்சிக்குப் பழக்கப்பட்டவர். ஆனாலும் நான் அவருடன் இருக்கும்பொழுது என்னையும் அதனுள் இணைத்துக் கொள்வார். அவரைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு எழுத்தாளர்கள்தான் உருப்படியானவர்கள். ஒன்று அவர். மற்றொன்று அவர்.

—-

மண்ட்டோவின் அகால மரணத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று என் இதயம் ஏன் இப்படிக் கதறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முன் சட்டையில் அவரின் இரத்தம் சிதறிக் கிடக்கிறது. அதை என் இதயம் மட்டுமே பார்க்க முடியும். அவரை மரணம் கொள்ளவைத்த இந்த உலகம்தான் என்னுடைய உலகமும். இன்று அவரை மரணங்கொள்ள வைத்தது – நாளை என்னையும் அதைப்போல மரணம் கொள்ள அனுமதிக்கும். பிறகு மக்கள் துக்கம் கொண்டாடுவார்கள். என் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் நெஞ்சில் பாரமாய்க் கனக்கும். கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும். ஆனால் நேரமின்மை காரணமாக ஒருவரால் கூட அந்தக் கூட்டத்திற்கு வர முடியாமல் போகும். காலம் நகர, அவர்கள் நெஞ்சில் உள்ள பாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். பிறகு மக்கள் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.

***

நன்றி : ‘நிழல்’

முகவரி :

நிழல்
31/48 இராணி அன்ணா நகர்,
கே.கே.நகர், சென்னை – 78
Ph : 2472 8326
nizhal_2001@yahoo.co.in

***

சில சுட்டிகள் :

ராகவன் தம்பியின் மொழிபெயர்ப்பில் :  இஸ்மத் சுக்தாய் – ‘ரஜாய்‘ சிறுகதை | ஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘போர் நாய்‘ சிறுகதை

ஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘மூன்று எளிய வாக்கு மூலங்கள் – ‘ சிறுகதை (‘ஸ்நேகா’ பதிப்பக தொகுப்பிலிருந்து)

ஸதத் ஹஸன் மாண்ட்டோ – விக்கிபீடியா

இஸ்மத் சுக்தாய் – விக்கிபீடியா | Ismat Chughtai (1915-1991)

3 பின்னூட்டங்கள்

 1. 28/03/2009 இல் 10:56

  அன்புள்ள ஆபிதின், அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம்.. நானும் ஒரு நூறு முறையாவது உங்களது வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன். ரீடரிலும் சேமித்து வைத்துள்ளேன். எனக்குப் பிடித்த பிளாக்கர்களில் ( வலைப்பதிவு வைத்திருப்பவர்களைச் சொன்னேன்) நீங்களும் ஒருவர். நல்ல தரமான பதிவுகளை மட்டுமே இடுவதால் வந்த வினை இது. 🙂 மொக்கை, எசப்பாட்டுப் பதிவு போன்ற வலைக்குப்பைகளில் இல்லாமல் 15000 பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பது ஒரு நல்ல சாதனைதான். தரத்துடனே இருங்கள். இல்லையெனில் இந்நேரம் லட்சம் ஹிட்டுகளைப் பெற்றிருப்பீர்கள். ஆனால் அந்த மொக்கைக் கூட்டங்களில் சேர்ந்திருப்பீர்கள். அதுவா வேண்டும்??

  என்றும் இதே போல நல்ல பதிவுகளை மட்டுமே தர வாழ்த்துக்கள்.

  அன்புடன்,

  ஜெயக்குமார்.

 2. 07/04/2009 இல் 09:03

  நண்பரே ஹிட்டுக்கள் நமக்கு எதற்கு? அது நடிகைகளுக்கும் அவர்களை பார்த்து தொங்கப்போட்டுக்கொண்டு (நாக்கைத்தான்) அலைபவர்களுக்கும்தான் லட்சம் ஹிட்டுகள் எல்லாம். பின்னோட்டம் போடப்படுவது மட்டுமே எண்ணிக்கை. போடாமல் இருப்பது எண்ணிலி (infinite) தொடர்ந்து எழுதுங்கள். தமிழின் ஒரு முக்கிய படைப்பாளி நீங்கள் என்பதை காலம் கண்டிப்பாக ஒருநாள் திரும்பி பார்த்து சொல்லும்.

 3. 08/04/2009 இல் 05:41

  நன்றி ஜெயக்குமார், ஜமாலன். இனி எனக்கு தொங்காது (நாக்குதான்!).


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s