யார் இந்த பர்வீன்?

‘அங்கே…!’ , ‘அன்று வெள்ளிக் கிழமை…!’ என்று அளவுக்கதிகமாக ஆச்சரியக் குறிகளை அள்ளிவீசும் எழுத்து. வெள்ளிக்கிழமையில் என்னய்யா ஆச்சரியம்,  ஒருவேளை பயமோ? இந்த எழுத்தைப் பார்த்தால் , ‘கண்ணுக்கு கீழே… ஓ, மூக்கு!’ என்று சிவசங்கரியை கிண்டல் செய்தாரே வண்ணநிலவன், துர்வாசனாக. அதுதான் ஞாபகம் வருகிறது. 35 வருடங்களுக்கு முன் இப்படி எழுதிய இந்த பர்வீன் யார்?  பர்வீனா , ப்ரவீணா?  குழம்புகிறதே… தெரிந்தவர்கள் சொல்லுங்கள். கண்டிப்பாக நானில்லை. இவ்வளவு மோசமாகவா எழுதுவேன்? இதைவிட மோசமாக எழுதுவேன்!

**
எழுத்தாளன்

பர்வீன்

“ஏய் ரஜியா! இங்க வந்து பாரு; இவன் என்ன செஞ்சு வச்சிருக்கான்னு..!”

– என்ற சித்தீக்கின் குரல் கேட்டு அடுப்பங்கரையிலிருந்து அலறித் துடித்துக்கொண்டு ஒடி வந்தாள் ரஜியா.

“இப்ப என்ன செஞ்சிட்டாண்ணு இப்படிக் கத்துறீங்க..?”

– என்ற அவளின் பார்வை சித்தீக்கின் மேஜை மேல் சென்றது. ‘களுக்’கென்று சிரித்து விட்டாள் . அங்கே…! அவளின் அருமந்த புத்திரன் ரபீக் கையெல்லாம் ‘இங்க்’ வழிய மேஜைமேல் அமர்ந்திருந்தான். மேஜை பூராவும் ஒரே சாயம்.

“சரிதான்..! நீங்க எழுதி வச்சிருந்த அந்தக் கதை நல்லா இல்லேங்கிறது அவனுக்குக் கூட தெரிஞ்சு போச்சு போல இருக்கு. அதுதான் சாயத்தை ஊத்தி அழிச்சிருக்கான்..!”

– என்றவாறே ரபீக்கை தூக்கிய ரஜியாவின் கையைக் கெட்டியாகப் பிடித்தான் சித்தீக்.

“ஏம்புள்ளே! நீ என்னதான் நெனச்சிக்கிட்டிருக்கே..? நீ வேணும்னா பாரு..! ஒரு நாளைக்கு என் கதையும் பிரசுரமாகி அதைப் பாராட்டி நூத்துக் கணக்கா கடிதம் வருதா இல்லையாண்ணு?”

“அப்படி வரும்போது அதிலே என்னோட கடிதம்தான் முதல்லே இருக்கும். இப்ப கையை விடுக்க..!”

என்றவாறே அவன் கையைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள் ரஜியா..!

சித்தீக்..!

பி.ஏ. பட்டதாரியான அவன் ‘லோகல் பண்ட் ஆடிட் டிபார்ட்மெண்டில்’ ஒரு ஆடிட் அஸிஸ்டெண்ட். அவன் ஆபீஸில் அவனோடு வேலை பார்க்கும் கேசவனின் சில கதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. அதுதான் அவனின் ஆசைகளுக்கு அடித்தளம் அமைத்தது. அவனும் ஏறத்தாழ இருபதுக்கும் அதிகமான கதைகள் எழுதி அனுப்பி இருப்பான். ஒரு பத்திரிக்கைகாரருக்காவது இரக்கம் இருக்க வேண்டுமே..! ஊஹூம்..! எல்லாம் சுவரில் அடித்த பந்து போல் திரும்பி வந்து விட்டன. இருப்பினும் அவன் இந்த பத்திரிகைக்காரர்களை விடுவதாக இல்லை. நாள் ஆக ஆக கதை எழுதுவதில் அவனுக்கிருந்த ஆர்வம் அதிகப்பட்டதே தவிர குறையவே இல்லை.

ஒரு நாள் ரஜியா கேட்டாள்:

“ஏங்க, நீங்களும்தான் இத்தனை நாளா கதை எழுதுறீங்க..! எல்லாக் கதையும் திருப்பித்தான் வருதே தவிர ஒண்ணுகூட பிரசுரமாறதில்லே..! ஒண்ணு செய்யுங்களென்! என் பெயரிலே எழுதிப்பாருங்களேன்..! அப்பவாவது வருதாண்ணு..”

– அவளின் யோசனை நல்லதாகப்பட்டது அவனுக்கு. அன்றையிலிருந்து அவன் ‘ரஜியா மணாளன்’ ஆனான். பெயர்தான் மாறியதே தவிர அவன் கதையின் கதை எப்போதும் போல் சுவரில் அடித்த பந்துதான். அதுவும் அவன் கையோடு ‘ஸ்டாம்ப்’ வைத்து அனுப்புவதால்..!

***

அன்று வெள்ளிக் கிழமை…!

‘பர்மிஷன்’ போட்டு விட்டு ஆபீஸிலிருந்து கிளம்பி ‘ஜூம்ஆ’வுக்குப் போய்விட்டு வீட்டினுள் நுழைந்த சித்தீக்குக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

“என்னங்க! சலீம் அண்ணனும் சல்மாவும் வந்திருக்காங்களே பார்த்தீங்களா..?”

– என்ற ரஜியாவ்வன் குரலைத் தொடர்ந்து சல்மாவின் குரல் – “என்னண்ணே ஒரேயடியா இளைச்சுப் போய்ட்டே..? வீட்டிலேதானே சாப்பிடறே…? ஏன் அண்ணி.. நீ அண்ணனுக்கு ஒழுங்கா சாப்பாடு போடுறதில்லையா..?” – என்றாள் சல்மா.

” நீ ஒண்ணு புள்ளே! ஒங்க அண்ணனுக்கு சாப்பிட நேரம் இருந்தாத்தானே..? எப்பப்பாரு ஒரே கதை எழுதுற அமர்க்களம்தான்…!”

“கதையா..?” – என்றாள் சல்மா.

போச்சு…! போச்சு..! அவகிட்டே போய் சொல்லிட்டேல்லே நீ..! இனி ஊருக்கே டமாரம் அடிச்ச மாதிரிதான். வேற வெனையே தேவையில்லே! அது சரி…ஏன் சல்மா.. சலீம் எங்கே ..? என்றவாறு சுற்று முற்றும் பார்த்தான் சித்தீக்.

– அவன் அவ்வாறு கேட்பதற்கும் சலீம் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர். சித்தீக்கின் தங்கை சல்மாதான் சலீமின் மனைவி. சலீமுக்கு ரஜியா தங்கை. இப்படி அவர்களுக்கிடையில் நெருங்கிய உறவுமுறை இருந்தாலும் கூட பால்ய நட்பே அவர்களிடம் மிகைத்து இருந்தது.

இருவரும் சாப்பிட அமர்ந்தபோதுதான் சலீம் கேட்டான். “ஏம்ப்பா…சித்தீக்..! நீ “சித்தீக்கா”ங்கிற பேரிலே ஏதும் கதை, கிதை எழுதி அனுப்பி இருந்தியா? இம்மாத ‘பொன்னிலவு’ ஏட்டில் ஒரு கதை படிச்சேன். முழுக்க முழுக்க அது நம்ம கதைதான். நீ என் தங்கச்சியைத்தான் கட்டிக்குவேண்ணு அடம் பிடிச்சது- உன் தந்தை இருபதினாயிரம் ரூபாய் கைக்கூலி கேட்டது – நீ உன் அம்மாவின் வைர நெக்லஸை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, அதை வித்து கைக்கூலி கொடுக்கச் சொன்னது – இது உன் தந்தைக்கு தெரிஞ்சு போனது – பிறகு உன் தந்தை, சல்மாவை நான் கட்டிக் கிட்டாதான் – ரஜியாவுக்கு உன்னைக் கட்டி வைப்பேன்னு சொன்னது – நம்ம திருமணமும் ஒண்ணா நடந்தது- அடேயப்பா…! பெயர்கள் மட்டும்தான் வேறே..! எனக்கு ஒரே சந்தேகமாப் போச்சு..! வந்தவுடனே ரஜியாவிடம் கேட்டேன். “எனக்குத் தெரியலேண்ணா..! அவங்களையே கேளுங்கணுட்டா…! “ஆயிஷாவின் திருமணம்”னு தலைப்பு! அற்புதமான கதைப்பா..! நீ தான் எழுதினியா…! நான் ஒரு மடையன்.. இவ்வளவு விஷயத்தையும் உன்னைத் தவிர வேறு யார் எழுதி இருக்க முடியும்..”

சித்தீக் அப்படியே அமர்ந்திருந்தான். “சே..! எவ்வளவு நல்ல ‘பிளாட்..”! இவ்வளவு நாள் நமக்கு தோணாமெ போச்சே..! ம்..ம்.. யார் எழுதியிருப்பா..? நம்ம கதைதான் ஊரெல்லாம் தெரியுமே..! நம்ம ஊர்க்காரன்தான் யாராவது எழுதியிருக்கணும்..”

– யோசித்தவாறே சாப்பிட்டு எழுந்தான் சித்தீக்.

***
சித்தீக் ஆபீஸிலிருந்து வரும்போதே மணி ஆறாகி விட்டது.

“என்னங்க.. இன்னிக்கு லேட்..?” – என்றவாறே டீயைக் கொடுத்தாள் ரஜியா.

“என்ன ரஜியா.. இன்று வீட்டில் சத்தத்தையே காணோம்..! ரபீக் எங்கே..?”

“அடேயப்பா! அவன் அடிக்கிற லூட்டியை நம்மாலே தாங்க முடியாதுங்க..! அடுத்த வீட்டு ஹலீமா மாமி தூக்கிட்டுப் போய் இருக்காங்க. அவுங்கதான் அவனுக்கு லாயக்கு..!” – என்றவாறே உள்ளே சென்றாள் ரஜியா.!

சட்டையையும் பேண்ட்டையும் கழற்றி ‘ஹேங்கரில்’ மாட்டுவிட்டு கைலியைக் கட்டிக்கொண்ட சித்தீக் ‘அப்பாடா’ என்றவாறு ஈஸிச் சேரில் சாய்ந்தான். நண்பர் கேசவன் கூறியது நினைவு வந்தது. காலையில் வாங்கி வைத்துவிட்டுப் போன ‘இளைஞர் முரசை’ இன்னும் படிக்கக்கூட இல்லை. மேஜையின் மேல் கிடந்த பத்திரிக்கையை கையில் எடுர்த்து பிரித்த அவன் விடுவிடுவெனப் புரட்டினான். ‘பிரிவு நெஞ்சம்’ – சித்தீக்காவின்  அந்தக் கதை. சும்மா சொல்லக்கூடாது- நன்றாகவே இருந்தது. தலைப் பெருநாளைக்குத் தன் கணவன் வருவானோ மாட்டானோ என ஏங்கி நிற்கும்  கதாநாயகியின் மனநிலை நன்கு சித்தரிக்கப்பட்டிருந்தது. தான்கூட வேலை நிமித்தம் வெளியூர் சென்றவன் பெருநாள் காலையில் திரும்பியது நினைவுக்கு வந்தது. ம்… யார் யாருடைய கதையெல்லாமோ வருகிறது..! பத்திரிக்கையை விசிறி எறிந்தான் சித்தீக். அப்போதுதான் அதிலிருந்து கீழே விழுந்தது அந்தக் கடிதம். கையில் எடுத்துப் படித்தவனின் கண்கள் அகல விரிந்தன.

“ரஜியா..! ஏய் ரஜியா..! இங்கெ கொஞ்சம் வா..!”

“என்னங்க..!” – என்றவாறு வந்தவளின் கையைப் பிடித்துக் கொண்டான் சித்தீக்!

“ஏய்..! உண்மையைச் சொல்லு…! யார் அந்த ‘சித்தீக்கா’..?”

“அட ஆண்டவனே..! எனக்கு என்னங்க தெரியும்? என்ன திடீர்னு.. என்ன வந்தது உங்களுக்கு..?”

“என்ன வந்ததா..? இந்த லெட்டர் வந்தது..!”

என்றவாறு கையில் இருந்த கடிதத்தைக் காட்டினான் சித்தீக்.

“இந்த லெட்ட எப்படிங்க உங்க கையில்..?”

நாக்கைக் கடித்துக் கொண்டாள் ரஜியா.

“பல நாள் கள்ளி ஒருநாள் அகப்பட்டுத் தானே ஆகணும்!  பெருநாள் மலருக்குக் கதைகேட்டு வந்திருக்கிற இந்தக் கடிதம் மட்டும் என் கையிலே கிடைக்கலேன்னா நான் இன்னும் குழம்பிக் கொண்டேதான் இருப்பேன்..! உண்மையைச் சொல்லு..நீ தானே அந்த சித்தீக்கா?”

“ஆமாங்க..! என்னை மன்னிச்சிடுங்க..!”

“அடிப் பைத்தியமே..! எதுக்கு மன்னிக்கனும்..? நீ எழுதின கதையெல்லாம் உனக்கே சொந்தமாயிருந்தாலும் அவைகளிலே வந்த ‘ஹீரோ’ யாரு? நான்தானே! அதோடு மட்டுமா ? இந்தக் கதாசிரியையே முழுக்க முழுக்க எனக்குத்தானே சொந்தம்..! உண்டா இல்லையா..? சொல்லு…!”

என்று அவளை அருகில் இழுத்தான் சித்தீக். “அது சரி..! அது என்ன ‘சித்தீக்கா!’ வேடிக்கையான பெயாரா இருக்கே..!”

“ஐயே…! கதாசிரியர் ‘ரஜியா மணாளனுக்கு’ இதுகூட தெரியலையா…? சித்தீக்கின் மனைவி சித்தீக்கா…!”

“ஓஹோ..! அப்படியா..”

அவனின் கைகள் அவளைச் சுற்றி வளைத்தன.  “சரி..! சரி..! விடுங்க ஹலீமா மாமி ரபீக்கோடு வர்றாங்க பாருங்க..!” என்றவாறு அவனைவிட்டு விலகினாள் ரஜியா.

“இந்தா பாரு ரஜியா, உன் மகனோட விஷமத்துக்கு நம்மாலே ஈடு கொடுக்க முடியாதடியம்மா! இங்க பாரு..! வீட்டிலே இருந்த சாயப் புட்டியை கொட்டிக் கவிழ்த்து.. என்ன பண்ணியிருக்கான் பாரு…!”

புகார் பண்ணிக் கொண்டிருந்த ஹலீமா மாமியின் இடுப்பில் சாயம் கொட்டிய கைகளோடு சிரித்துக் கொண்டிருந்தான் ரபீக், அந்த எழுத்தாளத் தம்பதிகளுடைய மகன். ஒருவேளை அவன் ஒரு வருங்கால எழுத்தாளனோ என்னவோ!

***

நன்றி : ‘பர்வீன்’

கண்டுபிடிச்சாச்சா?!

3 பின்னூட்டங்கள்

 1. maleek said,

  30/01/2011 இல் 02:24

  சாயப்புட்டியை கொட்டிக்கவிழ்த்து விளையாடுவது இப்போது ஆம்பூரிலா?

  • abedheen said,

   30/01/2011 இல் 11:53

   என்ன மாலிக் இது, சாண்டில்யனுடன் தாஜை ஒப்பிட்ட மாதிரியல்லவா இருக்கு! இது வேறு ஆள்.

 2. 05/02/2011 இல் 15:36

  ஆம்பூரியும் இல்ல, அல்கூஸியும் இல்ல,
  ஆனா நிச்சயமா யாரோ ஒரு நாகூரியாத்தான் இருக்கணும்.

  கொஞ்ச வருஷத்துக்கப்புறம் கண்டுபிடிசுற மாட்டோம்??


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s