அச்சைக் கலையாக்கிய ‘அஃக்’ பரந்தாமன்

இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத பதிவுதான் இது; ஆனாலும் இந்த ‘ஷைத்தான்‘ பதிகிறேன் 😉

சில வருடங்களுக்கு முன்பு , நண்பர் ரவி ஸ்ரீனிவாஸ்தான் அந்த புத்தகத்தின் நேர்த்தியான அச்சையும் அதன் அழகையும் குறிப்பிட்டு பதிவெழுதியிருந்தார். சமீபத்தில் எழுத்தாளர் எஸ்.ராவும். என்னிடம் அந்த புத்தகம் உண்டு , கல்லூரிப் பருவத்தில் வாங்கியிருந்தேன் என்று அப்போதே சொல்லத் துடித்தேன். ஆன்மிகம் அடக்கியது; அதுவே இப்போது எழுதவும் சொல்கிறது!

வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ புத்தகம்தான் அது. 1972ல் வெளிவந்த ‘அஃக்’ சிற்றிதழ் மட்டுமல்ல, அச்சு நேர்த்திக்காக இந்த புத்தகமும் அரசின் பரிசு பெற்றது. அட்டை டிசைனை – லினோகட்-ல் (அல்லது பன்வர்கட்-ஆ?) பிரமாதப் படுத்தியிருப்பார் பரந்தாமன். உருண்டை உருண்டையான – மலையாள எழுத்து பாணியில் அமைந்த – ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தலைப்பைக் காப்பியடித்துதான் நான் ‘மானுடம்’ சிற்றிதழுக்கு – நாகூர் ரூமியின் திருச்சி நண்பர் விஜயகுமார்தான் ஆசிரியர் – எழுத்து டிசைன் செய்தேன்  Calligraphy-இல் அப்போது நான் ரொம்ப வீக். Letraset விஷயங்கள் அறியாத வயசு. வரையத் தெரியும் ; ஆனால் ‘Block’ நுணுக்கங்கள் தெரியாது (இதெல்லாம் தெரியாமலே ‘அபிதாஸ் அட்வர்டைஸிங்’ஐ சென்னையில்  ஆரம்பித்து வாங்கிய அபார அடிகள் பிறகு வரும்!) . எனவே சொதப்பி விட்டது. அது இருக்கட்டும், ‘க.மு.ஒ’ தொகுப்பிலுள்ள (முதல்பதிப்பு, 1976) வண்ணதாசனின் கதைகளை விட , தொகுப்பை அச்சிட்ட அஃக் பரந்தாமனின் கடிதம் (பதில்) புகழ் பெற்றது. அந்த புத்தகத்திலேயே – புத்தக அச்சுக்காக – இருவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் கடைசியில் உள்ளன.

நெஞ்சைப் பிளக்கும் பரந்தாமனின் கடிதத்தை இப்போது பதிவிடுகிறேன். தன் வேட்டியின் நுனி கூட எந்த முள்ளிலும் சிக்கியதில்லை என்பாராம் வண்ணதாசன். அவர் வாழ்க்கை அப்படி. கடவுளின் கருணை. ஆனால் அதே கருணைதான் முட்களை மட்டுமே வேட்டியாக பரந்தாமனுக்குக் கொடுத்தது. ஏன்? இதற்கெல்லாம் நமக்கு விடை தெரியாது. ஒன்று செய்யலாம். இங்கே கிடைக்கும் ‘முக்கண் மாத ஏட்டு’ இதழ்கள் நான்கையும் தரவிறக்கம் செய்யலாம். செய்யுங்கள். முக்கியமாக, எனக்குப் பிடித்த ‘உயிர்‘ எழுதிய  கந்தர்வனையே அசரவைத்த ‘ஜீவன்’ சிறுகதை அதில் இருக்கிறது. ‘என் வாழ்நாளில் இதுபோல் ஒரு சிறுகதையை படித்ததில்லை’ என்கிறார் அவர். நம் கி. ராஜநாராயணன் ஐயா எழுதியதுதான். ‘கி.ரா’வை ஒரு நல்ல கதை எழுதவைத்த புண்ணியம் ‘அக்’கம்மாவுக்கு உண்டு என்று – நிமிர்ந்து, குனிந்து- சொல்லும் வண்ணதாசன் கதையும் இதில் உண்டு. அப்புறம்… ‘சோறு முளைக்கப் பயிரிடு போ’ என்று உத்தரவிடும் பெரும் தலைகள்… அனைத்தையும் பாருங்கள்.

பரந்தாமனின் கடிதத்திற்கு கீழே , தீராநதி இதழில் வெளிவந்த அவரது தொகுப்புரையை – மீள்பதிவாக ( ரவிஸ்ரீனிவாஸ் தளத்திலிருந்து எடுத்தது) பதிகிறேன்.

யாரிடமாவது கவிஞர் பரந்தாமனின் புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், அவரது கவிதைகளோடு.

*

பரந்தாமன் கடிதம் :

ப்ரிய வண்ணதாசன் – கடன் வறுமையையும் கூட்டிக்கொண்டு வந்தது. வறுமைக்கு நல்ல பசி. அது எங்களை வாங்கிக்கொண்டது. எங்களுக்குக் குச்சிக் கிழங்குகளை வாங்கினாள் சத்யா. இந்தத் தொகுப்பை நாங்கள் அச்சிட முயன்றபோதெல்லாம் சாப்பிட முடியாமல் போனது. சாப்பிட முயன்றபோதெல்லாம் அச்சிட முயலாமல் போனது. தவிர்க்கவே முடியாத தருணங்களில் தாங்கள் தொகுப்புக்காக அனுப்பி வைத்த பணத்தை யோசித்து யோசித்து வேறுவழியே இன்றி சில நூறுகளை நாங்கள் பண்டமாற்றுச் செய்தோம் – பருக்கைகளாக. திடீரென்று ஒருநாள் வந்த திருப்பத்தூர்காரர்கள் வீட்டாரிடம் விலைபேசி அச்சகத்தைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அன்று மங்கலம் சந்திரசேகரனிடம் பேசிக்கொண்டிருந்த இலக்கியப் பேச்சும் குடித்துக்கொண்டிருந்த கொத்துமல்லிக் காப்பியும் ரொம்ப ருசியாக இருந்தன. இந்தத் தொகுப்பு மிக அழகாகவே வந்திருக்கிறது.  என்றாலும் எனக்கான மன அமைதியற்ற நீட்சியின் சோகத்தில் அவசரமாக நேர்ந்துபோன குறைபாடுகளை இந்நூலின் இரண்டாம் பதிப்பில் நிவர்த்திசெய்து கொடுக்க எங்கிருந்தாலும் வருவேன், ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’தாம் கடைசி. ‘எனக்குப் பசித்துக்கொண்டே இருக்கிறது’ என்று ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். நான் சொன்னது ‘எந்தப் பசியை?’ என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பசியைப் புரிந்துகொள்வது என்பது எல்லாவற்றிலும் மேலான காரியம். கலைஞனை வீடுதான் முதலில் கொல்கிறது. ஓர் உண்மையான சோதனைக்காரனின் யுத்தம் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பார்வைதான் அந்நியமாதலுக்குக் காரணமாகிறது. அப்பாவையும், அம்மாவையும், நண்பர்களையும், ஏன் சமூகத்தையுமே ‘யாரோ’ என்றாக்கி விடுகிறது. மாட்டுத்தொழுவத்துக்குக் கொட்டகை போட என்று, மின்சார பாய்கிற வயரில் மோதுகிறது என்று, சாமி ஊர்வலம் போகும்போது இடிக்கிறது என்று – நான் சின்ன செடியாக வைத்து வளர்த்த என் ப்ரிய வேப்ப மரத்தின் மூன்று பெரிய கிளைகளை வெட்டி விட்டார்கள். பூவும் பிஞ்சுமாய்  மீதம் இரண்டு கிளைகளே இருக்கிற இதன் நிழலில்தான் எங்கள் வீட்டு அடுப்பு இருக்கிறது – இன்னும். நன்றிகளுடன் – பரந்தாமன்.

***

தீராநதியில் பரந்தாமன் :

எனக்குத் தொழில் கவிதை. தாமரை, தீபம், கண்ணதாசன் கவிதை, வானம்பாடி, ஞானரதம் ஆகிய சிறுபத்திரிகைகளில் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், அப்பத்திரிகைகளில் படைப்புகளை வெறும் எழுத்துக்களாக மட்டுமே அச்சிட்டு வந்தார்கள். வடிவமைப்பைக் கோட்டை விட்டுவிட்டார்கள். சாதாரண வியாபார பத்திரிகைகளிடமே வடிவமைப்பில் அவைகள் தோற்றுப்போனது. இது எனக்கு அவமானமாக இருந்தது. எனக்குத் தெரிந்த சில சிறு பத்திரிகையாளர்களிடம் சொல்லிப் பார்த்தேன். யாருமே பொருட்படுத்தவில்லை. தரத்தோடு, வடிவமைப்போடு, ‘நானே பத்திரிகை செய்து காட்டுகிறேன்’ என்றுதான் ‘அஃக்’ சிறுபத்திரிகையைத் தொடங்கினேன்.

‘அஃக்’, பதிப்புக்கும் அச்சுக்கும் தேசிய விருதுகள் பெற்றது. அதற்குப் பிறகு வெளிவந்த சிறுபத்திரிகைகளும், இன்றைய சிறுபத்திரிகைகளும் இதுவரைக்குமே விருதுகள் எதுவும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் நெடுங்கணக்கின் மூலக்கூறுகளான உயிரும் மெய்யும், உயிர்மெய்யாகி ஆய்த எழுத்தை மையமாக வைத்து உச்சரிக்கும்போது ‘அஃக்’ என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. தமிழே ‘அஃக்’ பத்திரிகையின் பெயராக ஆகியிருக்கிறது. ‘அஃக்’கை முதலில் வெளியார் அச்சகங்களில் அச்சிடப் போனேன். கல்யாணப் பத்திரிகைகளை இரவு பகலாக அச்சிட்டுக்கொண்டு, ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்டுத் தர காலதாமதம் செய்தார்கள். சரியான தேதிக்கு ‘அஃக்’கைக் கொண்டுவர முடியவில்லை. எனவே, சரியான தேதிக்கு ‘அஃக்’ பத்திரிகையைக் கொண்டு வர ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’ என்ற பெயரில் என் வீட்டிலேயே ஓர் அச்சகத்தை ‘அஃக்’குக்காகவே நிறுவினேன். பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த என் அம்மா தான் வட்டிக்கு வாங்கிய பணத்தை, அச்சகம் வைக்கவும் ‘அஃக்’ பத்திரிகையை நடத்த ‘பிராவிடண்ட் ஃபண்டு’ பணத்தையும் தந்தார்கள். ‘அஃக்’குக்காகத்தான் ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’. கல்யாணப் பத்திரிகையும் பில் புக்கும் நோட்டீசும் அடித்து, வியாபாரம் செய்ய அல்ல. ஆள்வைத்துக் கூலி கொடுக்க முடியாததால் நானே அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சத்திய பாமாவுக்கும் கற்றுக் கொடுத்தேன். கையால் அச்சுக்கோர்த்து, காலால் ட்ரெடிலை மிதித்து ‘அஃக்’ பத்திரிகையையும், ‘கூட்டுப் புழுக்கள்’, ‘பால் வீதி’, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ஆகிய புத்தகங்களையும் அச்சிட்டேன். தொடர்ந்து நடத்த பணம் இல்லாததால் ‘அஃக்’ பத்திரிகையை நிறுத்திவிட்டேன். அச்சகத்தை விற்றுவிட்டேன்.
கொஞ்சமும் மனம் தளர்ந்து போகாமல் பிடிவாதமாக ‘அஃக்’ பத்திரிகையை அச்சிட்ட சரித்திரம், புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தெரியவேண்டும். பசி, பட்டினி, தீராத தாகம், பொருள் இழப்புகளோடு இரவு பகலாகத் தூக்கமின்றி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னால் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே அச்சிட முடிந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை அச்சிட அக்கறை காட்டிய வைராக்கியத்தைச் சொல்லத்தான் வேண்டும்.

‘அஃக்’ பதிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகையாக, மாத இதழாக மலர்ந்தது. தரமான எழுத்துக்களை வியாபாரப் பத்திரிகைகள் போட மறுத்த காலத்தில்தான், எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத ‘அஃக்’ இடம் கொடுத்தது. வித்தியாசமான எழுத்துக்களுக்கு வாய்ப்பளித்து கௌரவித்தது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வாசகர்களையும் கவர்ந்து இழுக்கிற காந்தசக்தி ஒரு பத்திரிகையின் எழுத்தின் தரத்திலும் வடிவமைப்பின் நேர்த்தியிலும்தான் இருக்கிறது. அட்டை ஓவியம், வடிவமைப்பு, எழுத்து என்று சிறுபத்திரிகையின் சகல அம்சங்களிலும் ஒரு தரமும் தகுதியும் தனித்தன்மையும் இருக்கவேண்டும். இந்த சிறப்புகள் அனைத்தும் ‘அஃக்’இல் இருந்ததால்தான் இன்றும் வாசகர்களால், எழுத்தாளர்களால், ஓவியர்களால் அது பேசப்படுகிறது. சுந்தர ராமசாமியை அவருடைய மௌனத்திற்குப் பின் மீண்டும் எழுத உற்சாகப்படுத்தியது ‘அஃக்’ பத்திரிகைதான். இதை ‘அஃக்’குக்கு எழுதிய கடிதத்தில் அவரே சொல்லியிருக்கிறார். அதைப்போலவே, ‘நான் ‘அஃக்’இல் எழுத விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதி தெரிவித்துவிட்டுத்தான் அரூப் சீவராம், தன்னிச்சையாக ‘அஃக்’இல் எழுத வந்தார். அரூப் சீவராமின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் முப்பத்தெட்டை தனியரு சிறப்பிதழாகவே ‘அஃக்’ வெளியிட்டதன் மூலம், அரூப்சீவராம் இலக்கிய உலகுக்குப் பரவலாகத் தெரிய வந்தார். ‘அஃக்’கைப் பிடிக்காதவர்களும்கூட ‘அஃக்’இல் எழுத விரும்பினார்கள். அந்த அளவுக்கு கலை இலக்கியத் தரத்தோடும் வடிவமைப்போடும் எழுத்தாளர்களைக் காந்த சக்தியாய் கவர்ந்து இழுத்தது ‘அஃக்’. தாமாகவே முன்வந்து இயல்பாக எழுதுகிற உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக்கூடியதாக, ‘அஃக்’, கலை இலக்கியத் தரமும் வடிவமைப்பும் வித்தியாசமான கலைப்பார்வையும் கொண்டு முதல் இடத்தைக் குறிவைத்து பயணித்தது. எனக்கு முன்பின் பழக்கமில்லாத நல்ல எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் நேரிலும் கடிதம் மூலமும் அறிமுகம் செய்து வைத்தார்கள் வெங்கட் சாமிநாதனும், ‘கூத்துப்பட்டறை’ ந. முத்துசாமியும். இவ்வாறுதான் இன்னும் சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் ‘அஃக்’இல் எழுதினார்கள்.

அலியான்ஸ் பிரான்சைஸில், முக்கியமான இலக்கியவாதிகளும், ஓவியர்களும், கலைஞர்களும் கூடியிருந்த கூட்டத்தில், ‘‘பரந்தாமன் மாதிரி கலாபூர்வமாக பத்திரிகை நடத்த மற்றவர்களால் முடியாது’’ என்று ஆத்மாநாம் பகிரங்கமாகச் சொன்னார். அப்போது ‘கசடதபற’ பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர். கலை இலக்கிய வரலாற்றைப் புனர்ஜென்மம் எடுத்துவந்து புனருத்தாரணம் செய்யப்போகிற ‘அஃக்’ நிரந்தரத்தின் அமிர்தம். கூர்ந்த பார்வையும், மறுபரிசீலனையும் கலை இலக்கியத்தின் ஆரோக்கியத்துக்கான ஜீவ தாதுக்கள். புதுமையையும் படைப்பையும் இலட்சியமாக, அளவுகோலாக, தொலைநோக்காக, தூரத்துப் பார்வையாக வைத்துக் கொண்டு யுக சந்தியின் விளிம்பில் நிற்பவனுக்கு கால மாற்றங்கள், கலை இலக்கியப் போக்குகள் தடையாக இருக்க முடியாது. அவன் நேற்றிலிருந்து இன்றைக்கும் இன்றிலிருந்து நாளைக்கும் ஊடுருவிச் சென்றுவிடுவான். அப்படியே ‘அஃக்’ பத்திரிகை இதழ்களை ஃபோட்டோ காப்பி எடுத்து அச்சிட்டுத் தொகுத்துக் கொடுக்கவே நான் விரும்பினேன். ஆனால் என்னிடம் பணவசதி இல்லாததால் அப்படித் தொகுத்துத்தர முடியவில்லை. ஒரு புத்தக வடிவத்துக்குள் பத்திரிகையின் வடிவமைப்பைப் பறிகொடுக்க நேர்ந்துவிட்டது. புத்தகச் சந்தையின் வியாபார நடைமுறைகள் தடைப்படுத்திவிட்டன. அன்று தொடங்கிய அந்த யாகத்தின் தீ நாக்குகள் சடசடவென்ற சப்தத்தோடு இன்றும் எனக்குள் பொறி பறக்க, அதே கதியில் எரிந்து கொண்டிருக்கின்றன. எனக்குள் அணையாமல் எரிகின்ற அந்த நீறுபூக்காத நெருப்பின் ஜுவாலைகள் தகிப்பதை இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போது நீங்களும் உணர்வீர்கள்.

ஒரு சாதாரண ‘ட்ரெடில்’ மிஷின் மூலமே தேசிய விருதுகள் பெற முடிந்தது; என்றால், உலகத்தின் வேகத்துக்கும் தேவைக்கும் ஏற்றபடி எளிமைப்படுத்தப்பட்ட கணினியின் துணைகொண்டு, இந்த உலகையே விருதாகப் பெறமுடியும். இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும் இந்தக் கணினி யுகத்தில் இருந்தும்கூட, கலை இலக்கிய உலகம் தழுவிய ஒரு சிறுபத்திரிகையை, தமிழில் உலக சாதனையாக நாம் படைக்க முன்வராவிட்டால் வேறு எந்த யுகத்தில் முன்வரப் போகிறோம்?

(சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவுள்ள, தேசிய விருதுபெற்ற கலை இலக்கிய சிற்றிதழான ‘அஃக்’ இதழ் தொகுப்புக்கு எழுதப்பட்ட தொகுப்புரை. சுருக்கப்பட்டது)

***

மேலும்…

வண்ணதாசன் நேர்காணல் – தீராநதி

தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே?
வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.
ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்.

***

நன்றி : அஃக் பரந்தாமன், வண்ணதாசன், ரவி ஸ்ரீனிவாஸ், தமிழம்.வலை , தீராநதி

updated on 9th Nov’2017

பரந்தாமனின் புகைப்படத்தை அனுப்பிய ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கு நன்றி :

Download AQ  (pdf) :

AQ – June 1972AQ – July 1972AQ – August 1972AQ – October 1972