வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன் – முபாரக் கவிதை

mubarak-abed-wp1
வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன்
கவிஞர் முபாரக்
————————
எல்லோருக்கும் என ஓர் இறைவன்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
எல்லாருக்கும் உண்மையாக
மனப்பூர்வமாக ஏதாவது இருக்குமா
எனத்தெரியவில்லை
ஆனால்
எனது உம்மம்மாவுக்கு என
ஓர் இறைவன் இருக்கிறான்
அவன் நிச்சயமாக இருக்கிறான்
யாருக்காகவும் அவன் இருக்கிறானோ இல்லையோ
அவளுக்காக அவன் இருக்கிறான்
அவளுக்கான வெற்றிலைகள்
பயிரிடப்படும் இடங்களில் தேவையான
மிதமான மழையை அவனே பொழிவிக்கிறான்
மிதமான வெப்பத்தையும் அவன் பார்த்துக் கொள்கிறான்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
அவளிடம் எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும்
அவளது சொற்களில்
அவன் நமக்கு அருகில் வருவது போலவே இருக்கும்
அவளது இறைவனைப் பற்றிய நினைவுகள் இல்லாது
அவளது ஒரு நாளும் தொடங்குவதுமில்லை முடிவதுமில்லை
*
எப்போதும்
நடுவீட்டில் நடுநாயகமாக அமர்ந்திருப்பாள்
அது
அர்ஷில் அமர்ந்திருப்பதைப் போலவே இருக்கும்
எப்போதும்
அவளது இதயத்தில் அரியணையிட்டு
அவளது இறைவன் அமர்ந்திருப்பான்
கால்நீட்டி அமர்ந்து
பேரக்குழந்தைகளுக்கு கதைகள்
சொல்லத்தொடங்கினால்
பெரும்பாலும் இறைத்தூதர்களைப் பற்றிய
கதைகளாகவே இருக்கும்
அப்போது அவர்கள் உயிர்பெற்று நமக்குள் நடமாடத்தொடங்குவார்கள்
அப்போது அவளது கதைகளைக் கேட்பதற்கு
வாசலுக்கு வானவர்கள் வரத்தொடங்குவார்கள்
*
அவளை நோக்கி ஏவப்படும்
கோபங்களையும் அவமதிப்புகளையும்
ஏச்சுக்களை எல்லாம் தனது
தஸ்பீஹ் மணியை இடைவிடாது
எண்ணுவதன் மூலம் கடந்து செல்வாள்
*
பயணம் செல்லும் முன்
விடைபெறுவதற்காகச் சந்திக்கையில்
வெற்றிலை வாசத்தோடு
நெற்றியிலொரு முத்தமும்
கைப்பைக்குள்ளிருந்து எடுத்த
கசங்கிய வெற்றிலையில்
நூறு ரூபாய்த்தாளைச் சுற்றித்தருவாள்
நீண்ட ஆயுளையும் நிலையான செல்வத்தையும்
நமக்குத் தரச்சொல்லி
அவளது இறைவனுக்கு உத்தரவிடுவாள்
நம் வாழ்வு மாறும் வசதிகள் மாறும்
ஊர் மாறும் உறவுகள் மாறும் உலகம் மாறும்
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும்
அவளது ஆசீர்வாதமும் பிரார்த்தனைகளும்
நூறு ரூபாய் அருளும்
வெற்றிலை வாசமும் மாறவே இல்லை
தடைபட்டதும் இல்லை
*
தன் நினைவு முழுதும் தனது இறைவன் மட்டுமே இருந்தால் போதும் என நினைத்துவிட்டாள் போலும்
கொஞ்சம் கொஞ்சமாக
தனது கதைகளை மறக்கிறாள்
மனிதர்களை மறக்கிறாள்
உறவுகளை மறக்கிறாள்
உலகத்தோடு அவளைப் பிணைக்கும்
கண்ணிகளை அறுக்கிறாள்
இறைவைனின் நினைவோடு மட்டுமே
மிஞ்ச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்
*
ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்
சோலைவனமான சொர்க்கத்தில்
கஸ்தூரியின் வாசமடிக்கும் என
யாரோ சொல்லியிருக்கிறார்கள்
*
உம்மம்மாவின் சொர்க்கச் சோலைகளில்
பேரீச்சை மரங்களைச் சுற்றிலும்
அவளுக்குப் பிடித்த வெற்றிலைக் கொடிகள் படரவிட்டு
அவளது இறைவன் காத்திருப்பான் என்றே நினைக்கிறேன்
என்னிடம் கேட்டால்
நானும் வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்கும்
சொர்க்கத்திற்கே செல்லவே விரும்புவேன்
அங்கேதான்
அவளிடம் பயணம் சொல்லிவிட்டு
விடைபெற வேண்டிய அவசியம் இருக்காது.
**
நன்றி : முபாரக்
*
Read also :
உப்பூறிய நெல்லிக்காய் – முபாரக்

1 பின்னூட்டம்

  1. அனாமதேய said,

    13/02/2023 இல் 11:05

    ரொம்ப நல்லா இருக்குதுண்ணே! கவிஞருக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s