நகுதா (சிறுகதை) – முஹம்மது ரியாஸ்

சிராங்கூன்டைம்ஸ்-ல் வெளியான சிறுகதை இது. பயணத்தின் (சஃபர்) கொடுமையோடு ’எஜமானும்’ பொட்டிசோறும் வருவதால் இந்தக்கதை எனக்குப் பிடித்தது. ஹலீமாவாக மாறியிருந்த அஸ்மாவையும் ரசித்தேன். நாகூர் நாயகனைக் காட்டுகிறார், பிரமாதமாக இப்போது எழுதும் இந்த ராமநாதபுரத்துக்காரர் – அங்கிட்டு, இரிக்கி என்றெல்லாம் சொல்லி. ஆனால் நாங்கள் பேசுவதோ சுத்தமான தமிழ். இருக்கே / இரிக்கி அல்ல, இக்கிது அல்லது இரிக்கிது! நன்றி ரியாஸ். – AB


anisha fb3

நகுதா – முஹம்மது ரியாஸ்

‘இருநூறு வெள்ளி கட்டாது, வேணும்னா நூற்றிஐம்பது தாரேன் ஆனா தண்ணி கரண்டுக்கு சேவா நான் ஏதும் தரமாட்டேன் ‘ என்றார் வந்தவர். அவர் பணிபுரியும் கம்போங் க்ளாம் துணிக்கடையில் துணி உருளைகளை அவர் உருட்டியபோது நூல் பிசிறுகள் அவரது வழுக்கை தலையில் ஆங்காங்கே கம்பிகள் போல் ஒட்டியிருந்திருக்கலாம்.

‘நான் யோசிச்சிட்டு சொல்றேனே.. இருநூற்றி ஐம்பது வெள்ளி சேவா முன்ன இருந்தவர் தந்தாரு ! சிலுவார் சட்டையெல்லாம் உலர்த்த வெளி மெசின் அவசியமில்ல ! நம்ம வீட்ல இருக்கு ! பக்கத்து ப்ளாக்ல ஆந்திராகாரன், வந்த ஒரே வருசத்துல கார்டு வெட்டினதுல வீட்டு சாமான் போட்டது போட்டபடி போயிட்டான் ! கீழ அல்லூர் அள்ளுற பங்களாகாரன் எல்லாத்தையும் நம்ம வீட்டுக்கு அள்ளிவந்துட்டான் ‘ என்று நான் கூறியதும்,

தனது வழுக்கை தலையை கைக்குட்டையால் துடைத்துவிட்டு , என்னையே பார்த்தார். மனுஷர் அசருவதாய் தெரியவில்லை. எனக்கு குதிகால் சதைபிடிப்புக்குள் ஏதோ குத்துவதாய் உணர்ந்தேன்.

எட்டுமணிநேரத்திற்கு மேலாக நின்றுக்கொண்டே தண்ணீர் ஆற்றிவதில் பாத வலி ! உள்ளங்கால் மரத்துப்போய் வைரம் பாய்ந்த கரிக்கட்டை மாதிரி இருக்கி ! எந்த உணர்வுமில்லாமல் ! கள்ளதனமாக அரசாங்க குடியிருப்பை உள்வாடகைக்கு விடுவது குற்றம் தான் ! ஹாக்கர் சென்டர் தண்ணீர் போடும் வேலையிலிருந்து நின்று பதினைந்து நாட்களுக்கு மேலே ஆகுதே ! புவாவுக்கும் ஹலிமாவுக்கும் அனுப்ப வெள்ளி வேணுமே என்று யோசனையுடனே நான்,

‘பக்கத்து ப்ளாக் 9 ல விசாரிச்சி பாருங்க ! 250 வெள்ளி போகுது ! ‘ என இருநூறுக்கு சம்மதம் வாங்குவதிலேயே மனம் குறியாக இருந்தது. இருநூறுக்கு வாங்கி மாற்றினால் தான் ஊருக்கு பத்தாயிரமாவது ஹலிமாவிற்கு அனுப்ப முடியும். ஹலிமாவுக்கு கண்ணில் காசு பார்த்து விடணும்.

‘வீட்டு திண்ணையிலேயே உக்காந்திருக்குவன் என்ன ஆம்பள ! போய் நாலு காசு சம்பாதிக்கணும் ! எனக்கெல்லாம் அந்தாலுங்க மேல சுடுதண்ணி ஊத்திவிடணும் போல இருக்கு மைமுனா ! ‘ என பக்கத்து வீட்டு மைமுனாவோடு சுவர் வழியாக பேசும் போதெல்லாம் இந்த விடுப்பை முடித்துக்கொண்டு உடனே சிங்கப்பூர் திரும்பிவிடலாம்  என்று எண்ணம் வந்துவிடும். சபுராளிக்கு சுடுதண்ணீர் குளியலும், இறைச்சி அவியலும், 60க்கு 60 கிப்ஸ் மடமட வெள்ளை கஞ்சி கைலியும் ஒரே வாரம் தான் போல.

‘வெள்ளிகிழம சரி ! தினத்துக்கு ஆட்டுக்கறின்னா. விக்கிற விலையிலே’ என்று அவள் பெருமூச்சு விடும்போதெல்லாம், ‘எனக்கு வயிறு இங்கன பொருமலாக கெடக்கு ! ஏதாவது பருப்புகறி செய் ஹலிமா’ என்று கூறிவிடுவேன். வாயை கட்டி வயிற்றை கட்டி தண்ணீர் பட்டறையில் கால்கடுக்க சம்பாதித்து அனுப்பும் எல்லா பணத்திலும் வகை வகையாக நகை செய்து பொட்டிக்குள் அடுக்கி வைத்திருக்கிறாள் ஹலிமா. எல்லாவற்றையும் மிச்சம் செய்து அதை நகையாக்கிவிடுவாள். ஹலிமா புத்திசாலி மட்டுமல்ல ! பிரச்சனைகளை ‘ஜஸ்ட் லைக் தட்டாக’ டீல் செய்வதில் கில்லாடி ! சாதுர்யமாக ஒரு கோட்டை பெரிதாக்கி இன்னொரு கோட்டை சின்னதாக்கிவிடுவாள்.

‘ எனக்கு ஏனோ போல இருக்கு.. உடம்பு முழங்கால் பிடிப்பா இருக்கு புள்ள !’ என்று போனில் கூறினாலும்,

‘ஊருக்கு ஏதும் வந்துடாதீங்க மச்சான் ! சபுர்(பயணம்) போய் நாலு மாசம் தானே ஆகுது. பதினஞ்சாம் தேதி சிங்கப்பூர் வார மாலிமாரிடம் வாய்வு மருந்து வாங்கி அனுப்பிவிடுறேன்’.

‘நீயாவுது இங்கின வந்து என்கூட இருந்திடேன் புள்ள !’

‘அசதிக்கு கால் நீட்டிகூட படுக்க முடியாத இடத்தில என்னைய கூட்டிபோயி வச்சி அங்கின வந்து என்ன செய்றதாம்? சிங்கப்பூர்ல தரை வீடு வாங்குங்க மச்சான் ! ஒடனே பொட்டியோட ஏறிடுறேன்’

இரண்டு முறை இங்கே கூட்டிவந்தும், ‘நாகூர் தண்ணி தான் நமக்கு செட்டாகும் மச்சான்’ என்று பத்தாவது நாளே கம்பி நீட்டிவிட்டாள்.

இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை என்றாலும் ஒருமாதமோ அல்லது இரண்டு மாதமோ அவளோடு இருக்கும் விடுப்பு காலம் தாண்டிவிட்டால் வார்த்தைகளில் ‘இங்கின சில்லடிக்கும் காரைக்காலுக்காம அலஞ்சி என்னாகபோகுது.. அங்கிட்டு பிளைட் ஏறுனா தான் நாலு காசு பார்க்கமுடியும்’ என்று ‘அலாரம்’ அடிக்க ஆரம்பித்துவிடுவாள்.

‘என் புள்ள பயந்த சுபாவம் ! ஹலிமாவிடம் மாட்டி என்ன பாடுபடப்போறானோ ‘ என்று என் திருமணத்தன்று வாப்பா தன் அக்கா மகளை பற்றி பெருமையாக அக்காவிடம் சொன்னதையே அவ்வப்போது சொல்லிக்காட்டி சிரிப்பாள்.

‘ நகுதா மரைக்கா ! ஒனக்கு இந்த துன்யாவுல அல்லாஹ் புள்ளைஹல தரல! ஆகிரத்துல நிச்சயம் கலஞ்சுபோன கட்டியெல்லாம் சீனத்தான குழந்தைகளா மாறி உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துபோகும் ‘ என்று பால்கிதாபு கணக்கு பார்த்து கூறிய குஞ்சி தாடி சாபு வார்த்தைகள் நெருப்பு கங்கங்களாக வந்துவிழுந்த போது, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இருவரும் வீட்டுக்கு செல்ல கால்மாட்டு தெருவை தாண்டிக்கொண்டிருந்த போது,

‘இந்தா புள்ள யஹ சொன்னதுல ஒனக்கு எந்த வருத்தமும் இல்லையா !’

‘படச்சவன் நாட்டம் ஏதோ ! அதானே சித்தம் மச்சான் , வயித்துலயும் அதான் தங்கும் ! அதைவிடுங்க ! யஹ சாபு குஞ்சி தாடிய பாத்தீங்ளா! சேமியா குச்சி மாதிரி அங்கென ஒண்ணு இங்கென ஒண்ணு ! ஹா ஹா! ‘ என சிரித்தாள்.

குஞ்சிதாடி சாபு வார்த்தைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், இறக்கை பொருந்திய குழந்தைகள் என்னையும் ஹலிமாவையும் மேகபஞ்சுகளுக்கு மத்தியில் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் சித்திரங்கள், நான் இங்கே தனியாக தங்கியிருக்கும் அரசாங்க முதியோர் மானிய வீட்டு சுவர்களில் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும்.

‘ட’பிளாக் முதியோர்களின் அடுக்குமாடி அரசாங்க மானிய குடியிருப்புகளில் நள்ளிரவு உறக்கத்தை கலைத்துப்போடும் குழாய்களில் சொட்டுக்கொண்டிருக்கும் நீர், யாரோ என்னை ‘ வாப்பா…’ என்று அழைப்பது போலே இருக்கும். விழித்து பார்த்து இந்நள்ளிரவில் எழும்பொதெல்லாம் முதியோர் குடியிருப்பில் நான் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பயத்தை எனக்கு ஊட்டுபவை. நள்ளிரவு நேரத்தில் அவசர ஊர்தி சிவப்பு விளக்கு ஒளிர தளத்திற்கு கீழே படுக்கை கட்டிலில் யாரை அழைத்து செல்கிறார்கள். தண்ணுனர்வு அற்று தான் அமர்ந்திருக்கும் சக்கர நாற்காலியிலேயே சிறுநீர் கழித்துக்கொள்ளும் பக்கத்துவீட்டு மலாய் பெரியவருக்கு யாரேனும் உறவினர் என்று இருக்கிறார்களா. மனம் பேதலித்து ஆங்காங்கே தெருவில் கிடக்கும் தினசரிகளை சேகரித்து சுருட்டி வீட்டில் வைத்துக்கொண்டு உலாவும் சீனப்பாட்டிக்கு, உண்மையிலேயே அவள் மனதில் இருப்பதென்ன. முதியோர் குடியிருப்பு பூங்கா இரும்பு இருக்கைகளில் இருந்துக்கொண்டு தன்னந்தனியாக பேசும் முதியவர்களின் உரையாடலுக்கு பதிலளிப்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா. வாரமிருமுறை தளத்தில் அலங்கரிக்கப்படும் நீத்தார் சடங்குகளில் வட்டமேசைகளில் அமர்ந்து மெல்லிய ஒலியில் எழும் சீன மந்திரங்களுக்கு நடுவே எழும் மரணம் எனும் சர்ப்பம் இந்த முதியோர் பேட்டையிலேயே ஏன் நிரந்தரமாக தங்கிவிட்டது.

ஒருமுறை பக்கத்து குடியிருப்பில் இறந்து இரண்டுநாட்களாகியும் கவனிக்கப்படாத அழுகிய சடலத்தை மூன்றாவது நாளில் உறவினர்கள் தூக்கி செல்லும் போது மனம் ஏனோ விக்கித்துப்போய் விட்டது.

‘ஹலிமா ஊரோடே வந்துவிடுகிறேனே ! ஊர் வந்தும் நான் சும்மா இருக்க போவதில்லை. இஞ்சி தேத்தண்ணி, கரும்பு தண்ணி, பார்லி தண்ணி னு பெரிய எஜமான் தர்பாரிலே கடையை போட்டுவிடலாம். புயகாத்துல கப்பலுக்கு வழிகாட்டின பெரிய எஜமான் நமக்கும் ஏதாவது வழிகாட்டமலா போய்டுவாங்க !’

‘ இந்த ஊர்ல என்ன இருக்கே! ஒழுங்கா கரண்டு இருக்கி ! காத்து இருக்கா ! கால்ல மிதிச்சா காரைக்கால் நிலக்கரி கருப்பும் புகையுமா மனுஷஹ மேல அப்புது ! . மனுசனே காய்ஞ்சி கிடக்குறான். இதுல தண்ணிகடை ! கோலா கடைனு ! .. கைகால் சுகம் இருக்குறதோட சம்பாதிச்சா தான் காசு. காரூவா காசுனாலும் கப்பலேறி சும்பாதிக்கிற சிங்கப்பூர் காசு மாதிரி வருமா மச்சான் !’

‘…நின்னுக்கிட்ட தண்ணி போட சிரம்மா இருக்கு புள்ள காலுல சங்குசக்கரம் மாதிரி நரம்புகள் சுருளு சுரிளா புடச்சி கெடக்கு ! . வெரிகோஸ் வியாதிங்றானுங்க ! ஊருக்கு வந்துடவா புள்ள.. பாதம் எல்லாம் நோவுது’

‘..இந்தமாசத்துலேர்ந்து சீட்டு காசு வேற கட்டனும் ! மாலிமார்ட்ட எம் சி ஆர் செருப்பு வாங்கி அனுப்புறேன் ! குதிகால் வலிக்கி நல்லதாம்னு யூடியுப் வீடீயோவுல பார்த்தேன்இன்னும் ஆறுமாசம் கழிச்சி எஜமான் பொறக்கி வாங்க மச்சான் ! ‘

ஹலிமாவுக்கு குழந்தை இல்லையே என்ற பிரக்ஞை இல்லை! அவளுடைய இவ்வளவு இறுக்கங்களின் அடியாழத்தில் புத்திரபாக்கியமே சோகபாக்கியமாக புதைத்துவிட்டாள் போல். பொண்டுக பெருசுக ‘மலடி’ அவப்பெயருக்கு பதிலடியாக இப்படியொரு வாழ்வை அமைத்துக்கொண்டாள். எவ்வளவு நகைகளை போடமுடியுமோ அவ்வளவு நகைகளையும் போட்டு வாழ்ந்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணமோ தெரியவில்லை. ஹலிமாவிற்கு திருவாருர் தஞ்சாவூர் நகைகடைகளில் கிடைக்கும் வரவேற்பை கேட்கவேண்டுமே ! கவர்னர் வரவேற்பு !

‘ ஏ குட்டி பையா.. ஆச்சிக்கு பெரிய நாற்காலி எடுத்துபோடு ! டீ குடிக்கிறீங்ளா ஆச்சி! ‘ என்றால் – ‘டீ எதுக்குனி்! இந்த பொட்ட வெயில்ல ! சாத்துக்குடி ஜூஸ் சொல்’ என்று பெரிய துப்பட்டி கொசுவத்தை மடித்து தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டே கூறுவாள்.

எந்த நாளில் அவளிடம் இவ்வளவு கறார்தன்மையை உரு ஏற்றிக்கொண்டாள் எனக்கு தெரியவில்லை ? மூன்று முறை கருத்தரித்தும் கருப்பும் சிவப்புமாக இரத்த கட்டிகள் வெளியாகி விட்ட ஏதோ ஒருநாளில், ஏப்புக்காட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்ற நாளிலா ? யாரையோ எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக தன் அண்ணன் மகனையே எடுத்து வளர்த்தாள். ஆசையசையாய் அவனுக்கு புதிய துணிமணிகள் வாங்கிப்போட்டு ‘செல்லான் ! செல்லான்’ என்றழைத்தவளை, அவன் பெரியவனானதும் ‘ இங்கிரு மாமி ! என்ன அங்கின உக்காரதே இதை செய்யாதேனு பெரிய சட்டம் போடுற ! நீ ஒண்ணும் என்னய பெத்த உம்மா கிடையாது ! ‘ என்று கேட்டதும் அழுகையும் விம்மலுமாக ஹலிமா மனம் உடைந்து சுக்குநூறாக உடைந்துப்போன நாளிலேயா.

வாழ்வதற்கும், நகர்வதற்கும் ஏதாவது ஒன்றை பற்றிபிடித்தே ஆகவேண்டுமே. ஹலிமா ஆபரணங்களை பற்றிப்பிடித்துக்கொண்டாளோ. அதுவும் பலமாக. இவ்வளவு இறுக்கத்தை ஹலிமாவிடம் நான் முன்பு கண்டதில்லை ! அதுவும் திருமணத்திற்கு முன்பு அவளை கள்ளத்தனமாக சில்லடி கடற்கரையில் சந்தித்த நாள் இன்றும் ஜிலீரென்று ! வாப்பாவும் நானும் அவசரமாக ஊர் திரும்பிய அந்த சபுர் மறக்ககூடியதா !

‘ஏங்னி ! சேந்த மரைக்கா ! உண்மையில கோழி மரைக்கான் சிங்கப்பூர்லேர்ந்து கொடுத்து ரெண்டு பவுனு காசு என்ன தான் ஆனது ?’ என்று ஏழுலெவ்வை ஜமாத் பஞ்சாயத்தில் ஆளுங்க வாப்பாவை நான்கு புறமும் நின்று கேட்ட போது வாப்பா வாயை திறக்கவே இல்லை. ‘கோழி மரைக்கான் என்னட்ட தந்ததுக்கு என்ன முகாந்திரம்?’ என்று கூட்டத்தில் வாப்பா கேட்ட ஒரே கேள்வியில் மொத்த பஞ்சாயத்தும் அமைதியானது. அவரது குடும்பத்தினர் கையை பிசைந்துக்கொண்டு நின்றனர். எத்தனையோ முறை கோழி மரைக்கான் வீட்டு ஆளுங்க வீட்டுக்கு வந்து வந்துப்போனார்கள். ‘கோழி மரைக்கான் குமர் காரியம் இது.. அதை வச்சி தான் இதுகள கரை சேர்க்கணும்’ அவர்கள் தங்களது பிள்ளைகளை காண்பித்தார்கள். வாப்பாவிடம் கொடுத்ததாக கூறும் பிரிட்டிஷ் ராணி தலை பொறித்த இரண்டு தங்கநாணயங்களுக்கு யாருமே சாட்சி இல்லை. குர்ஆனை வைத்து இரண்டு குடும்பமும் ஜமாத்தார் முன்பு சத்தியம் செய்துக்கொண்டது.

‘படச்சவன் பார்த்துட்டு இருக்கான் சேந்த மரைக்கா..’ என்று வீட்டு வாசலில் கோழி மரைக்கான் குடும்பத்தார்கள் தூற்றிய மணலும் புளுதியும், ஒரு புகையை போல அன்றைய நாள் கப்பராஜா வீட்டு மேலே பறந்துப்போனது.

‘என்னைய உனக்கு ரொம்ப புடிக்குமா புள்ள’ என்று பூனைமீசையுடன் மாமி மகள் ஹலிமாவை கள்ளத்தனமாக கடற்கரை இருளில் கேட்டபோது சில்லடி கடல் அலையின் ஈரம் போல் ஜிலிரென்று இருக்கிறது.

‘கப்பராஜா வீட்டுக்கு மேலே எப்போதும் பயண வண்ணாத்தி பறந்துட்டே இருக்கும்’ என்பது நாகூரார் வழக்கு. ‘கப்பராஜா வீட்டுக்கு சரக்கு வந்திருக்கு..’ என பொட்டுவண்டியில் சரக்குவரும் அல்லது வாப்பாவே சரக்கோடு பொட்டுவண்டியில் வந்திறங்குவார்கள். திரும்புன பக்கம் நாகப்பட்டிணம்,வாஞ்சூர்,திட்டச்சேரினு நில பொலங்கள வாங்கிப்போட்டாரு. பெரிய வீட்டை கட்டி அதன் மேலே மரத்தில் கப்பலை செய்து அலங்காரமாக வைத்தார். ‘எனக்கு ஒரே ஆசை தான் மச்சான்! உங்க வீட்டு கப்பல்ல நின்னு நாகூர் எஜமான் உரூஸ்ல வார அலங்கார கப்பல பாக்கணும்’ என்பாள் ஹலிமா.

அந்த சபுரிலேயே ஹலிமாவின் மருதாணி கைகளோடு எனது காய்த்துப்போன கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து எனது மாமி, ‘புள்ள ஹலிமா! நகுதா அப்புராணி ! யஹல பத்திரமா பார்த்துக்க புள்ள ! ‘ என்று ஒரு நன்னாளில் குடும்பத்தார்கள் எல்லோருமாய் வாயில் இருவருக்கும் சீனி போட்டார்கள்.

எனது கல்யாணத்திற்கு பிறகு தடலாடியாக சின்னவாப்பா சுல்தான், யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தன் அண்ணன் மீது, ‘இதெல்லாம் பரம்பரை சொத்து’ என்று வாப்பா சொத்துக்கள் மீது வழக்குகளை போட்டார். வாப்பா படுக்கையில் சரிந்தார். ஆசையாசையாக அக்காவை கட்டிக்கொடுத்த இடத்தில் அவளுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் போனது. அக்காவின் கணவர் காதர் மச்சான் ஊரைவிட்டே ஓடிப்போய் அஜ்மீரில் இருந்துக்கொண்டார். எல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக சரிந்து விழுந்த பலகைகள் போல் விழுந்தது.

‘எல்லாம் கோழி மரைக்கான் சத்தியத்தோட குத்ரத்து(சக்தி)’ என படுக்கையில் கிடந்த வாப்பா கூறினார்.

‘..நாலு தலைமுறைக்கும் கப்பராஜா வீடு எழுந்திருக்காத மாதிரி கோழி மரைக்கான் காசு வெட்டி போட்டான்’ என ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

சின்னவாப்பா சுல்தான் மஞ்சபையுக்குள் எப்போதுமே ஒரு கேஸ் கட்டு இருக்கும். வழக்கு,வாய்தா என நாகப்பட்டிணம் கோர்ட் ஏறி அதன் படிகள், கோர்ட் வளாக புளியமரத்து காக்கைகள் எல்லாம் சின்னவாப்பாவுக்கு அத்துப்படி.

‘ஒங்க சின்ன மாமனார் சுல்தான் யஹளுக்கு ஞாயித்து கிழம கூட கோர்ட் கேண்டீன்ல டீ குடிச்சா தான் தூக்கவரும் ‘ என குஞ்சிதாடி சாபு, கிழம ராவு எஜமானுக்கு பாத்திஹா ஓதப்போன ஹலிமாவிடம் கூறியதாக போனில் என்னிடம் அவள் கூறும்போது அவளுக்கு அப்படியொரு சிரிப்பு.

கடைசியாக வாப்பா மெளத்துக்கு பிறகு கம்போங் பழைய வங்சா கடை மட்டுமே எஞ்சி நின்றது. சுவரில் உள்பகுதியை வெட்டி கடையாக்கி தந்திருந்தான் அந்த கோப்பி கடை வீட்டின் உரிமையாளன் சீனன். கடை முழுதும் சாமான்கள் நிறைந்திருக்கும். கடைக்கு வெளியே நின்று தான் வியாபாரம் செய்யமுடியும். உடும்பு பொந்து போல் கடைக்குள் நுழைந்து நானும் வாப்பாவும் சாமான்களை அடுக்க வேண்டும். வியாபாரம் நடக்கும் வெள்ளியை போடுவதற்கு ஒரு கயிற்றில் தொங்கிய அலுமினிய பிஸ்கட் பொட்டி, கடைக்கு நடுநாயகமாக தொங்கி கொண்டிருந்தது. ஆளில்லாத நேரம் களவு போய்விடும் என்று சீனனே ஒரு மணியை அலுமினிய டின்க்கு மேலே கட்டிவிட்டான்.

யார் கைவத்தாலும் சரி அல்லது அடிக்கிற காற்றுக்கும் மழைக்கும் அந்த மணி அசைந்துக்கொண்டே இருக்கும். சீனனும் வாப்பாவும் ரொம்ப நெருக்கம். சீனன் யாருக்கும் தெரியாமல் மேல்மாடியில் ஒரு மலைப்பாம்பு வளர்த்து வந்தான். ஈரசந்தையில் வெட்டப்படும் கோழி இறைச்சிகளை அள்ளிவந்து பாம்புக்கு இரையாகப் போடுவான். தீர்க்காயுசாக நீண்டநாள் வாழ்வதற்கு ஒரு ஆமையும் அவன் தோளில் போட்டுக்கொண்டு திரிந்தான்.

‘ஆமை புகுந்தா கடைக்கு தரித்திரியம்’ என்று வாப்பா அவனை சேவா கொடுப்பதைக் கூட வெளியில் வைத்தே அனுப்பிவிடுவார். வாப்பாவின் மரணத்திற்கு பிறகு கடைக்கு வந்த பார்த்த போது கடையில் நடுநாயகமாக தொங்கிக்கொண்டிருந்த அலுமினிய டின் மீது மலைப்பாம்பும் ஆமையும் ஊர்ந்துக்கொண்டிருந்தது.

நான் ஊரிலிருந்து திரும்பிய நேரத்தில் வங்சா கடையை உடைத்து மொட்டை சீனன் எங்களது கடையை அவன் நடத்திக்கொண்டிருந்தான். ஆவணங்கள் சரியாக இல்லை ! கடையெல்லாம் தரமுடியாது என அங்கிருந்த இன்னுமிரண்டு தடியனுங்களை சேர்த்துக்கொண்டு வாப்பாவுடைய பையையும் துருக்கி தொப்பியோடு என்னை கடையிலிருந்து தூர எறிந்தான்.

அன்று கம்போங் க்ளாமே திருவிழா போல் ! வண்ணவிளக்குகளும் தோரண பச்சை பிறை கொடிகள் ! நாகூர் பெரிய எஜமானுக்கு பினாங்கு இலங்கை போல் தெலோக் ஆயரில் இருந்த தர்காவும் இருக்கிறது ! அதுக்காக கம்போங் க்ளாமில் கந்தூரி நாட்களில் ஹமீத் கடை புலவு சோறும் ! சீனகோப்பிகடை ‘ஹைனானீஸ் கோழி சோறுமாக’ பெரிய சட்டிகளில் ‘பாத்திஹா’ ஓதி தயாராகி கொண்டிருந்தது. கந்தஹார் தெருவில் பெரிய கழி ஊண்டி எஜமானின் கொடி ஏற்றி சிறுவர்களுக்கு சீரணி தந்து க்கொண்டிருந்தார்கள். அரபு தெருமுழுதும் முஸ்லீம்கள்,இந்துக்கள், குஜராத்தி, பஞ்சாபி தலைகள் நிறைந்திருந்தது. சீன சலவைக்காரர்கள் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி முன்பாக கூடியிருந்தது. இந்தியாவிலிருந்து பெரிய எஜமான் விஷேசத்திற்காக அழைத்து வரப்பட்ட இந்துஸ்தானி சூஃபி இசை கவ்வாலியும், நாதஸ்வர மேள இசையும் இணைந்து ஒலித்த அற்புதமான இசை, ஏனோ அந்நாளில் கசந்துப்போய் பீச் ரோட்டில் பிஞ்ச செருப்புமாக நடந்துக்கொண்டிருந்தேன்.

எப்போதும் என் மாமி கூறுவதுபோல் ‘நகுதா அப்புராணி’ ஏமாந்துபோனான். பையும் அவன் கொடுத்த கொஞ்ச வெள்ளியையும் எடுத்துக்கொண்டு , வாப்பா குடியிருந்த அரசாங்க மானிய குடியிருப்புக்கு வந்து சேர்ந்தேன். ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. பையுக்குள் வாப்பாவின் பச்சைப்பட்டியும் , தொப்பியும் இருந்தது. வாப்பாவின்
நல்ல பாம்பு அத்தர் போத்தல் இருந்தது. மூடியை திறந்து முகர்ந்து பார்த்தேன். வாப்பாவின் நினைவு போட்டு வதைத்தது. மஞ்சள் பையை அணைத்துக்கொண்டே அப்படியே உறங்கிப்போனேன்.

எத்தனையோ வருடங்கள் வாப்பாவின் மஞ்சள்பை பரணுக்குள் உறங்கி கொண்டிருந்தது. ஒருமுறை ஊருக்கு செல்வதற்காக சாமான்கள் பையில் அடுக்கிக்கொண்டிருக்கும் வேளையில் பழைய சாமான்களை பரணில் இருந்து எடுத்து அடுக்கும்போது, பச்சைப்பட்டியில் இருந்து இரண்டு தங்கநாணயங்கள் குதித்து ஓடின. அதன் தரையில் விழுந்த தெறிப்பில் வாப்பா மீதிருந்த எல்லா நல்லெண்ணங்களும் சுக்குநுறாய் விழுந்தது. இத்தனை இன்னல்களும் சிக்கல்களும் வாப்பாவின் பேராசையினால் தானா ? ஏன் இதை செய்தும் தைரியமாக குர்ஆன் மீது சத்தியம் செய்தார் ? நானும் அக்காவும் வாழ்க்கையை தொலைத்து கோழி மரைக்கானின் சத்தியம் மெய்பித்து விட்டதே வாப்பா ? இதை வெளியில் கூறினால் உண்மையில் இதுவரை இருந்த யூகம் உண்மையாகி அவப்பெயராகிவிடுமே.

இத்தனை மன உளைச்சல்களுக்கும் மத்தியில் முற்றுப்புள்ளியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த பவுன் காசுகளை பெரிய எஜமான் உண்டியலில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிடவேண்டும். நமக்கு சொந்தமில்லாத ஒன்று சொந்தமில்லாமலே நம்மைவிட்டும் சென்றுவிடும். ஹலிமாவின் கண்களுக்கு தெரிந்தால் கூட இதையும் அழித்து வளையல்களாக மாற்றிக்கொள்வாள். அவளுக்கு இதை தெரிவிப்பது வேலிக்குள் போற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொள்வது போல்.

கிழமையிரவு யாருக்கும் தெரியாமல் சின்ன எஜமானுக்கும் பெரிய எஜமானுக்கும் நடுவில் இருக்கும் உண்டியலில் போட்டுவிட்டு, ‘மர்ஹூம்களாகிவிட்ட கோழி மரைக்கானிடம்… மர்ஹூம் சேந்த மரைக்காயரையும் , மேற்படி குடும்பத்தார் நகுதா மரைக்காயரையும் லாத்தா பொன்னாச்சி குடும்பத்தாரையும் இந்த சாபவலையில்
விமோசனத்திற்கு மன்னித்தருளவும் ‘ என்று மானசீகமாக கேட்டுவிடலாம் என்று எனக்கு நானே பேசிக்கொண்டு நடந்தேன். ஹலிமா மோப்பம் பிடித்து விட்டாள். எத்தனை வெள்ளைத்துணி போட்டு மூடினாலும் பொட்டிசோற்றை மோப்பம் பிடிப்பாள், இதை விடுவாளா !

‘என்ன மச்சான்! குட்டி போட்ட பூனை மாதிரி இங்கினயும் அங்கினயும் லாத்துறீங்க’

‘ஒண்ணுமில்ல .. ‘ என்றதும் மூடியிருந்த உள்ளங்கையை பார்த்துவிட்டாள். தாமரை போல் மலர்ந்ததும் உள்ளுக்குள் இருந்த இரண்டு ராணிகளும் நாணயத்திலிருந்து ஹலிமாவை பார்த்து சிரித்தார்கள்.

‘சுத்த தங்கமா இருக்கே மச்சான்..’ என்று முகம் மலர்ந்தாள். எங்களது லெளகீக சூத்திரமே நான் எதையாவது செய்யணும்.. ஹலிமாவிடம் கையும் களவுமாக பிடிபடணும் நசீபு போல.

‘போச்சுடா ‘ என்று மனதுக்குள் நினைத்திருந்தேன். விஷயத்தை திருஷ்டி பூசணியை உடைப்பதுபோல் அவளிடம் உடைத்தேன். கைகளில் இரண்டு நாணயங்களையும் கையில் வாங்கிகொண்டு துப்பட்டியை சுற்றிக்கொண்டு என்னையும் இழுத்துச் சென்றாள். அவளது இழுவை ஏழுலெவ்வை பள்ளிவாசலை தாண்டிக்கொண்டிருந்தது.

ஹலிமாவின் பிடி உடும்பு பிடியாக இருந்தது

‘ஐயோ ! சங்குவெட்டி தெருக்கு இழுத்துபோறாளே ! கோழி மரைக்கான் வீடு ! மையிருட்டு ! என்ன செய்கிறாய் ஹலிமா ! மானத்தை வாங்கிடாதே ஹலிமா ! ‘

துப்பட்டியில் ஒருதுண்டை கிழித்து இரண்டு பவுனு காசையும் அதில் சுற்றி கோழி மரைக்கான் வீட்டுக்குள் எறிந்தாள். பொடு பொடுவென்று மீண்டும் வீட்டுக்கு இழுத்து வந்தாள். அவளது செயல் வினோதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பவுன் காசுகளை அவள் சுவீகரித்து தனது நகைப்பொட்டியில் அடுக்கி கொள்ளாமல் விட்டது
ஒருவகையில் சந்தோசம் தான்.

வேகமாக அவள் நடந்து வந்ததில் அவளது மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கனத்த சதுரம் ஆடிக்கொண்டிருந்தது.தொண்டைக் குழாயில் வேர்த்து கொட்டிய வேர்வையோடு இடுப்பில் கைகொடுத்து நின்றாள்.

‘தண்ணி குடி புள்ள !’ என்று சொம்பில் தண்ணீர் மோந்து கொடுத்தேன்.

‘நீ செஞ்சதுலாம் சரியா புள்ள ! இதுனால பிறவி சாபம் தான் போய்டுமா ? இல்லை நமக்கு புத்திர பாக்கியம் தான் திரும்ப கிடச்சிடுமா !’

‘நிம்மதி கிடச்சிடும் மச்சான்.. நிம்மதி ‘

‘என்ன சொல்லுற புள்ள’

‘குறுக்கு கோழி மாதிரி அங்கேயும் இங்கேயும் அதை வச்சிட்டு அலைஞ்சுட்டு இருந்திஹ. இந்த கயித்தோட முடிச்சி எங்கே தொடங்குனதோ அங்கெனயே முடிச்சி வச்சிட்டேன் மச்சான். அதான் ஹலிமா ! இந்த பவுனு காசு போய் சேரவேண்டிய இடம் பெரிய எஜமான் தர்பாருக்கோ, யஹ சாபுமார்களுக்கோ இல்ல ! கோழி மரைக்கான் குடல் வழி புள்ளங்களுக்கு’

என்று சமையல் கட்டுக்குள் நுழைந்துக்கொண்டிருந்தாள். சுவர் வழியாக மைமுனாவிடம், தஞ்சாவூருக்கு மைமுனா அம்பாசிடர் காரில் நகைவாங்க போன விபரங்களை, செய்கூலி சேதாரம் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் சிங்கப்பூருக்கு திரும்புவதற்கு அவள் வாங்கி வைத்திருந்த அலிதரம் தம்மடை பலகாரத்தை பையில் அடுக்கிக் கொண்டிருந்தேன்.

இதையெல்லாம் இப்போது இங்கின தனியாகக் கிடந்து நினைத்து என்னாகப் போகிறது ? புறாக்கள் எங்கே குஞ்சு பொரிக்கிறது தெரியாத இந்த ஊரில், தனது சாவு தெரிந்துவிட்டால் இரவில் தரையிலே பூனைக்கு அருகில் வந்து உட்கார்ந்து உறங்கும் அல்லது மரணத்திற்கு காத்திருக்கும் புறாக்களை, மறுநாள் சடலமாகத் தான் பார்க்கிறேன். போனில் ஹலிமாவிடம் பேசும்போது,

‘மெளத் சீக்கிரம் வந்திடும்போல புள்ள ! ‘

‘அதெல்லாம் இப்ப போய்டமாட்டீங்க தகிரியமா இருங்க மச்சான் ! எனக்கு இஸ்ராயில் டிக்கெட் எடுத்துட்டு தான் ஒங்களுக்கு டிக்கட் எடுக்கணும்னு துஆ செஞ்சிருக்கேன் மச்சான் !’

தனியாக இருக்கும் வயதானவர்களுக்கு திடீர் ஆபத்து என்றால் ‘அவசர அழைப்பான்’ சிவப்பு கலர் லிவரை வீட்டுக்குள் ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளார்கள். என்றேனும் நெஞ்சுவலி வந்து முதியோர் குடியிருப்பில்,

‘அங்கின இங்கின தொங்குற லிவரை இழுக்காமல் மெளத்தாகிவிட்டால் என்ன செய்றது புள்ள ! மூணுநாள் கழிச்சி தான் நீ இத்தாவுக்கு உட்காரணும்..இதையும் ஊராட்கள் கோழி மரைக்கான் கணக்குலயே எழுதிடுவாஹலே புள்ள !’

‘அதெல்லாம் தகிரியமா இருங்க மச்சான் ! ஒடம்புக்கு ஒண்ணும் ஆகாது ! ஆயத்து குர்சியை தலைமாட்டுல வச்சிட்டு தூங்குங்க’ என்று போனை அணைத்தாள்.

‘பொத்.. பொத்’தென்று பதினான்காவது மாடியிலிருந்தும் , பனிரெண்டாவது மாடியிலிருந்து மன அழுத்தத்தாலும், தவறுதலாகவும் மனிதர்கள் தரைதளத்தில் விழுந்து மரணிக்கும் போதெல்லாம் சிவப்பு இரத்தம் கண்டு புறாக்கள் அதிர்ந்து பறக்கின்றன . இஸ்ராயீல் பயம் வந்துவிடுகிறது ! ஆனால் ஹலிமாவை நினைத்தால் அதைவிட பயமாக இருக்கிறதே. .
*


அருஞ்சொற்பொருள்
—-
சிலுவார் (துணி)
அல்லூர் (குப்பை)
சீனத்தான (அழகான)
பெரிய எஜமான் தர்பார் (நாகூர் தர்ஹா)
குத்ரத்து(சக்தி)
பால்கிதாபு (செய்வினை கோளாறு பார்க்கும் முறை)
துன்யா (உலகம்)
கிழம ராவு (வெள்ளி இரவு)
சீரணி (படைச்ச பலகாரங்கள்)
நசீபு (விதி)
இத்தா (விதவை சடங்கு)
இஸ்ராயில் (மரணதேவன்)
லாத்தா (அக்கா)
மர்ஹூம் (அமரர்)


ரியாஸ் எழுதிய ‘அத்தர்’ நூலிலிருந்து ஒரு மேற்கோள் :

“மனிதர்களை இறைவன் மலர்களை போல கசக்கும் போதெல்லாம், பொறுமையாளர்கள் அதன் வாசனையை திரவியமாக்கும் வித்தையை கற்றுக்கொள்கிறார்கள்“
*

3 பின்னூட்டங்கள்

  1. soman said,

    26/03/2022 இல் 17:59

    நல்லா இக்கிது….
    கார்டு வெட்றது, அல்லூர் அள்றது பிரில.
    அப்றம் ரியாஸுக்கும் ஆபிதீனுக்கும்
    வளர…..

    • முகம்மது ரியாஸ் said,

      28/03/2022 இல் 10:43

      கார்டு வெட்டுறது = விசாவை வெட்டிவிடுவது
      அல்லூர் அள்ளுறது = குப்பை அள்ளுறது

  2. soman said,

    30/03/2022 இல் 12:49

    நன்னி!


பின்னூட்டமொன்றை இடுக