ஊதுகொம்பன் – ஜான் சுந்தர்

‘பப்பாரப் பாரம் பப்பம் பரபம்’! – ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ நூலில் இருந்து ஒரு கலகலப்பான பகுதி. சிரிப்பை அடக்காமல் பகிர்கிறேன் 🙂


nagalisai1பள்ளியொன்றில் பேண்டு வாத்தியக்குழு பயிற்றுனராகப் பணிபுரியும் திருவாளர் அற்புதத்தை ஒரு நிகழ்ச்சிக்கு ட்ரம்பெட்’ வாத்தியத்தை வாசிக்க வரச்சொல்ல வேண்டும்.செல்போன் வசதியெல்லாம் இல்லாத காலம். நேரில் சந்தித்துச் சொல்ல நண்பர் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினார் ராமச்சந்திரன். அற்புதம் வேலை செய்து கொண்டிருந்த பள்ளி, கிறிஸ்தவ கன்னிகாஸ்த்ரீகளால் நடத்தப்படும் பெண்கள் பள்ளி. நீண்ட விசாரிப்புக்குப்பின் மைதானத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார் வாயிற்காவலர். சுதந்திர தின விழா அணிவகுப்புக்கான ஒத்திகைக்காக மாணவியரை மிரட்டிக்கொண்டிருந்தார் அற்புதம்.

வினுசக்கரவர்த்தி சாயலில் இருந்த அற்புதம் தனது தடித்த மீசையை மூக்கை விடவும் பெரியதாக வளர்த்துக்கொண்டு பயங்கரமாக இருப்பார். கச்சேரிகளில் பயங்கரமாகச் சொதப்புவார். பொதுவாக ட்ரம்பெட்டைச் சரியாக வாசித்தால் யானைகள் ஊர்வலத்தையோ அவை பிளிறுவதையோ கற்பனை செய்துகொள்ள முடியும். ஆனால் நமது அற்புதம் வாசிக்கும்போது யானைகள் கும்பலாகச் சரிந்து விழுவதையும் தொண்டை கட்டிய குரலில் அவை கதறுவதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

சில பாடல்களில் ட்ரம்பெட் கம்பீரமாக முழங்குமிடம் இருக்குமல்லவா? பாடலைப் பேருந்தாக்கி மொத்த இசைக்கலைஞர்களும் ஏறிப் பயணிக்கையில் ட்ரம்பெட் வந்து தொற்றிக்கொள்ள வேண்டிய நிறுத்தத்தில் அது வரவில்லை. பட்டெனப் புல்லாங்குழல் வாசிப்பவரோ கீ போர்டு கலைஞரோ யானையை வைக்க வேண்டிய இடத்தில் பூனையை வைத்து சமாளித்தபின் குனிந்திருந்த அற்புதம் நிமிர்வார் அசடு வழிய . இசைக்குறிப்புகள் கீழே விழுந்துவிட்டதெனச் சொல்லும் அவரை அதெப்படி வாசிக்க வேண்டிய நேரத்துலத்தில் சரியா விழுந்துடுது, அடுத்த கச்சேரில ரெண்டு பாருக்கு முன்னாடியே ஸ்டேஜ்லர்ந்து கீழ குதிச்சுடு’ என்பார் ராமேட்டன்.

என்னதான் திறமையானதொரு கலைஞர் கீ போர்டில் வகைவகையான வாத்தியச் சத்தங்களை மாற்றி மாற்றி வாசித்தாலும் விதவிதமான வாத்தியங்களோடு நிறைய கலைஞர்கள் மேடையை ஆக்கிரமித்துக்கொண்டு ஓர் இசைக்கோவையை வாசிக்கும்போது பார்வையாளனின் பரவசம் இன்னும் கொஞ்சம் நீட்சியடைகிறது. தனித்த கருவியொன்றைத் தேர்ந்தெடுக்கும் வளர்கலைஞன் கொஞ்சம் இலக்கணப் பிழைகளோடு வாசிக்கிறான் என்றாலும் மேடையையும் ரசிகனின் விழிகளையும் நிரப்பிவிடுகிறான்.

‘பப்பாரப் பாரம் பப்பம் பரபம்’ – குழுவாக வாசித்த மாணவியரைத் தள்ளி நின்று கவனித்துப் பிழைகளைச் சரி செய்து கொண்டிருந்த அற்புதம் ஒத்திகையை மேற்பார்வையிட வந்த மதர் சுப்பீரியரைக் கண்டதும் கடமையில் இரண்டு கைப்பிடி மிடுக்கைக் கலந்தார். போதாக்குறைக்கு இலவசமாக இரண்டு பார்வையாளர்கள் வேறு. மாணவியொருத்தி வாசித்த ட்ரம்பெட் இசையில் பிசிறு தட்டியது கேட்கும்போது சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தது. மற்றெல்லோரையும் நிறுத்தச் சொல்லிவிட்டு அவளை மட்டும் தனியாக வாசிக்கச் சொல்லவும், அவள் தயங்கினாள். அற்புதம் அவளிடம்

‘… ம்ம்ம் … பப்பாரப் பாரம் பப்பம் பரபம், வாசி’ என்றதும் அவள் ட்ரம்பெட்டில்’ முயன்றதில் நாய்க்குட்டியை மிதித்த உடன் அது எழுப்பும் சப்தம் மாதிரி ‘பப்பாரப் பாவுங் எனப் பிசிறு தட்டியதும் நிறுத்திவிட்டு மன்னிப்புக் கோரும் விதமாகப் பார்த்தாள். அற்புதம் அவளிடமிருந்து வாத்தியத்தை வாங்கினார். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்.

மதர் சுப்பீரியரை ஒருமுறை பார்த்துக் கொண்டார். மாணவியர் அற்புதம் எழுப்பப் போகும் கம்பீரத் தொனிக்காகக் காத்திருந்தனர். அமைதியைக் கிழித்து எழுந்தது ஒலி.

‘பப்பஹாங்ங்ங்ங்க் பவுங் பஹாங்க்’

இந்த முறை நாய்க்குட்டி இருந்த இடத்தில் இருந்தது கழுதை! காலை மிதித்திருந்தாலும் பரவாயில்லை. மேலேயே விழுந்துவிட்டது போல இருந்தது சப்தம். சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை மாணவியரால். மதர் சுப்பீரியர் எப்போது நகர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. மைதானம் முழுவதும் சிரிப்பொலி. அற்புதம் கொஞ்சமும் நிலைகுலையாமல் வாத்தியத்தை அந்தப் பெண்ணிடம் தந்துவிட்டுச் சொன்னார்

‘இப்படித்தான் நீ வாசிச்சே, இனிமேல் சரியா வாசி’
*
(P. 23-24)
*
நன்றி : ஜான் சுந்தர், காலச்சுவடு, ஆசிப்மீரான்
*
தொடர்புடைய பதிவு :
அசலிசைக் கலைஞன் – சுகா

பின்னூட்டமொன்றை இடுக