18++ கூகி தெரியுமா கூகி?!

கிழவி கத்தினாளாம், அடியே மருமவளே… பட்டாளத்திலிருந்து என் மகன் நாளைக்கு இங்கே வருவதாக கடிதம் போட்டிருக்கிறான், ‘கூகி’கா காம்ப் நிக்கால்கே ரக்கோ’ என்று. கூகி என்றால் சிறு பறவை. ‘ச்சிடியா’வா (சிட்டுக்குருவி) என்றால் இல்லையென்றான் கதை சொன்ன பாகிஸ்தானி ஹலீம்பாய். கபுத்தர் (புறா) ? அதுவும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட சைஸ்-ல் இருக்கும் ஏதோ ஒரு குருவி. கல்குருவியாக இருக்கலாமோ. எதற்கும் இங்கே போய் ‘செக்’ செய்து கொள்ளுங்கள். ஆக, ‘கூகி’யின் ‘காம்ப்’-ஐ (Khamb – இறகுகளைப்) பிய்த்து தயாராக வைக்கச் சொல்கிறாள்.

ஏன் மவன்காரன் டைரக்டா அவன் பீவிக்கு எழுதமாட்டானா? என்று கேட்டேன்.

நீ ஒண்ணு பாய், அந்தக்காலத்தில் மாமியார் முன்னால் மருமகள் வரமாட்டாள். மாமியார் இருக்கும்போது சத்தமே காட்டக்கூடாது. ஏன், இப்போதுகூட என் கிராமத்தில் சில இடங்களில் அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னவன் , அதை விடு என்று கதையைத் தொடர்ந்தான்.  அற்புதமானவன் இந்த ஹலீம்பாய்.  ஏதாச்சும் எனக்கு கிடைக்கலேண்ணா அதுவும் நல்லதுக்குத்தான்னு எடுத்துக்குவேன் ஆப்தீன்ஜீ, ஹோ சக்தே யே டீக்ஹை.. என்று சொல்பவன் . கூகிள் +ல் அவன் பெயரைத் தேடிப் பாருங்களேன்.

நாம் கூகி விசயத்துக்கு வருவோம். திண்ணையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த கிழவனுக்கு குஷி தாங்கவில்லையாம். ஆகா, நாளை பகல் ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள ‘கூகி’ கறிதான்!

ஆனால்…, அடுத்தநாள் அவனுக்கு கிழவி வைத்ததோ ‘தால்’. (பருப்புக் குழம்பு).

அறுத்துக் கிழித்திருக்கிறான் கிழவன் – அடித் தே….. நீதானே நேற்று சொன்னாய் ‘கூகி’யை சுத்தப்படுத்திவை என்று. எவ்வளவு ஆவலாக இருந்தேன் சாப்பிட என்று.

அடத்தூ.. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். ‘கூகி’ என்று நாங்கள் ‘அதை’த்தான் ரகசியமாகக் குறிப்பிடுவோம். ரொம்பநாள் கழித்து மவன் வரும்போது ‘அது’ தயாராக இருக்க வேண்டாமா , பாவம் எத்தனை நாள் இங்கே இருக்கப் போகிறானோ… என்று காதோடு காதாக கிழவி போட்டு உடைத்தாளாம்.

அது கல்குருவியோ கள்ளப் பருந்தோ எனக்கு கொஞ்சம் புரிந்தமாதிரிதான் இருந்தது. சிரித்தேன்.

புரிந்தால் நீங்களும் சிரிக்கலாம்.

இந்தப் பக்கத்தில் இதைப் பகிரலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ‘சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்‘ என்ற அபூர்வமான ஆன்மீக விசயத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்கிற உங்களின் தரத்திற்கு இதுதான் சரி!

பின்னூட்டமொன்றை இடுக