பானக்காடு சிஹாப் தங்கள் – ஆசிப் மீரானின் (பழைய) அஞ்சலி

இப்படியோர் தலைவன் இன்று யாரும் இல்லையே என்ற கவலையில் பதிவிடுகிறேன் – ஆபிதீன்

***

02 August 2009
கேரளத்தின் கறுப்பு தினம்
மூன்று பதிற்றாண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின கேரளத் தலைவராக மட்டுமல்லாமல், கேரள அரசியலில் பெரும் பங்காற்றிய பானக்காடு சிஹாபு தங்களின் மறைவு கேரளத்தில் வாழும் இசுலாமியர்களை மட்டுமில்லாமல் மாற்று சமூகத்தில் சகோதரத்துவத்தை விரும்பியவர்களையும் உலுக்கியிருக்கிறது.

பல நூறு மேடைகளில், பல நூறு கரத்தரங்குகளில் தனது கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்த இந்த மனிதரிடமிருந்து அரசியல்வாதிகளும் என் போன்ற பதிவர்களும் கற்றுக்கொள்ள நிறைய இருந்தாலும் அடிப்படையான விசயம் ஒன்று இருக்கிறது – அடுத்தவர்களைக் கொஞ்சமும் புண்படுத்தாமல் கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்வதுதான் அது.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கடைசிவரை கட்சிக்காகவும் இசுலாமிய சமுதாய முன்னேற்றத்துக்காவும் மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்துக்காகவும் உழைத்த சிஹாப் தங்களை அவரது அரசியல் எதிரிகளான கம்யூனிஸ்டுகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் கூட ஒருபோதும் விரல் நீட்டிக் குறை சொன்னதில்லை – சொல்ல வழியும் அவர் ஏற்படுத்தவில்லையென்பதுதான் அவரது ஆளுமையின் ஒரு பக்கம்

எகிப்து பல்கலைக்கழகத்தில்அரேபிய இலக்கியத்திலும் தத்துவத்திலும் முதுகலைப் பட்டம்  பெற்ற சிஹாப் தங்கள் ஒரு மிகப் பெரும் கலாரசிகர். கஸல்கள், கவிதைகளென்றால் உயிர்.நிறைய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.  கேரளம் மற்றும் அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவராக இருந்த சயீத் அப்துல் ரஹ்மான் பாஃபகி தங்களின் மகளான சரீஃபா பாத்திமா பீவிதான் சிஹாப் தங்களின் துணைவியார். சிஹாப் தங்கள் எழுதிய கட்டுரையை மகளிடம் வாசிக்கக் கொடுத்து அவரது விமர்சனம் அறிந்த பின்னரே சிஹாப் தங்களுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார் என்பது இன்னொரு கிளைக்கதை

தீப்பொறி பறக்கும் அரசியல் மேடைப் பேச்சுகளுக்கிடயே அதிர்வேதும் இல்லாத மென்மையான பேச்சு அவருடையது. எத்தனையோ இன்னல்களுக்கிடையிலும் அழுத்தங்களுக்கிடையிலும் முகம் கோணாத மென்சிரிப்பைத் தவிர வேறேந்த முகபாவத்தையும் அவர் பத்திரிகையாளர்களுக்கு வழங்கியதில்லை என்று கேரளத்தின் ஊடகத் துறையில் பங்குபெற்றவர்கள் அனைவருமே ஒரே குரலில் சாட்சி பகிர்கிறார்கள்

அதிகாரம் மிக்க தலைவராக இருந்தபோதும் தேர்தல்களில் போட்டியிடவோ அரசு பதவிகள் வகிக்கவோ பானக்காடு தங்கள் ஒருபோதும் முயன்றதில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிப்பின்போது இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவ்வட்டம் தீப்பற்றி எரிந்திருக்க வேண்டும். அத்தகைய சூழலும் கொந்தளிப்பும் நிலவவும் செய்தது.ஆனால் ஓரிரண்டு உணர்ச்சிவசப்பட்ட சிறு சம்பவங்களோடு ஒரு சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சிஹாப் தங்களின் அதீதமான ஆளுமையின் மறுபக்கம் மட்டுமல்ல – மதநல்லிணக்கத்தின் மீது அவர் கொண்டிருந்த அபாரமான நம்பிக்கையின் வெளிப்பாடும் கூட

முஸ்லீம் லீக்கில் பிளவு, நாடாளுமன்றத்தில் தோல்வி, குஞ்ஞாலிக் குட்டி மீதான விமர்சனங்கள் எனக் கேரள அரசியலை உலுக்கிய சம்பவங்களின் போதும் பானக்காடு சிஹாபு தங்களின் அறிக்கைகளும் அவர் காட்டிய நிதானமும் ஒரு கட்சியை வழிநடத்துவதில் ஒரு தலைவனுக்கிருக்க வேண்டிய பக்குவத்தை வெளிப்படுத்தியது – அதோடு அரசியல் நாகரிகமென்றால் என்ன என்பதையும்

கேரளத்தின் ‘மாப்பிள்ள’ முஸ்லிம்களால் மிக உன்னதமான இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது பானக்காடு குடும்பம். பானக்காடு குடும்பத்தின் வேர்கள் முகமது நபி(ஸல்) அவர்களின் குடும்ப வழித்தோன்றலெனக் கருதப்படுவதே காரணம்.

பானக்காடு தரவாட்டின்’ கதவுகள் அடைக்கப்படுவதே இல்லை. அங்கு செல்பவர்கள் பசியுடன் திரும்புவதில்லை. தங்கள் மனக்குறைகளை ஒரு குடும்ப உறுப்பினரின் அக்கறையோடு கேட்டு தீர்ப்பளிக்கும் ஒரு ‘காரணவரை’ இனி கேரள மக்கள் பெறப் போவதுமில்லை.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
(இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே திரும்ப மீள்வோம்)

பானக்காடு சிஹாப் தங்களுக்கு நம் அஞ்சலிகள்!

***

நன்றி : ஆசிப் மீரான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s