அ ன் பு ள் ள அ ம் மா ! – டாக்டர். அப்துல் கலாம் (கம்பவுண்டர் தாஜுடன்)

அ ன் பு ள் ள  அ ம் மா !

கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!

சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றன
வாழ்க்கை ஒரு அறைகூவலாய் அமைந்த
கொந்தளிப்பான காலம் அது.

கதிரவன் உதிப்பதற்குப் பல மணி நேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்லவேண்டும்.
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்

மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு வினியோகிக்க
வேண்டும்
அப்புறம்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
இரவு படிக்கச் செல்லும் முன்
மாலையில் அப்பாவுடன் வியாபாரம்

இந்தச் சிறுவனின் வேதனைகளையெல்லாம்
அன்னையே, நீ அடக்கமான வலிமையால் மாற்றினாய்

எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து மட்டுமே
தினசரி ஐந்துமுறை தொழுது
நீ உன் பிள்ளைகளுக்கு வலிமை சேர்த்தாய்

தேவைப்பட்டவர்களுடன் உன்னிடமிருந்த
சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய்
நீ எப்போதும் கொடுப்பவளாகவே இருந்தாய்
இறைவன் மீது வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே எதையும் நீ கொடுத்தாய்
எனக்குப் பத்து வயதாக இருந்தபோது
நிகழ்ந்தது நன்றாக நினைவில் நிற்கிறது.

ஒரு பவுர்ணமி நாள் இரவு அது
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள
நான் உன் மடியில் படுத்திருந்தேன்.
என் உலகம் உனக்கு மட்டுமே
தெரியும் என் அன்னையே.

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு…
உன் பிள்ளையின் வேதனை
உனக்குத் தானே தெரியும், தாயே?
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாய் அகற்றின.
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்

என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!

***
நன்றி:  டாக்டர். அப்துல் கலாம் (அக்னிச் சிறகுகள்)’
***

தாஜின் பின்குறிப்புகள் :

மேதமை கொண்ட,
முன்னாள் ஜனாதிபதி
டாக்டர். அப்துல் கலாம் அவர்களின்
80-வது பிறந்த தினம்
சென்ற சனிக்கிழமை(15-10-2011)
கொண்டாடப்பட்டது.
அவரை நாம் வாழ்த்துவோம்.
அதனைவிட
அவரிடம் சிரம் தாழ்த்தி
நாம் ஆசி பெறுவதே சிறப்பு.

டாக்டர். அப்துல் கலாம் அவர்களால்
தமிழ் பேசும் முஸ்லீம்கள்
ஒட்டுமொத்தமாய் அனைவரும்
பெருமை கொண்டதை மறக்க முடியாது.
இன்றைக்கு நினைத்தாலும்
அந்தச் சரித்திர நிகழ்வு
ஓர் இனிமை கொண்டதே.

இந்தியத் துணைக் கண்டத்தில்
ராஷ்டிரபதியாக பதவி வகித்து
தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவருக்கும்
அவர் சேர்த்து தந்த பெருமைகளைவிட…
தொழில்சார்ந்த தனது தொடர் முயற்சியினால்
அணு ஆயுத சோதனையில்
அவர் கண்ட மகத்தான வெற்றியினாலேயே
அதிகத்திற்கு அதிகமும்
அவர்கள்….
பெருமை கொண்டார்கள் என்றால் மிகையல்ல.

நம் ‘அருட்கொடையாளரின்’
தீர்க்கமான இக் கண்டுபிடிப்பென்பது
மனிதகுலத்தின்
ஆக்கத்திற்கு உபயோகப்படுவதைவிட
அழிவுக்கே அதிகமும் உபயோகப்படும் என்பதில்
என்னையொத்தவர்களுக்கு மகிழ்வில்லை.
மாறாய், குறையுண்டு.

டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்
ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும்
அதற்கு அடுத்த காலக்கட்டத்திலும்
நம் அரசியல்வாதிகளால் அவர்
அலைக்கழிக்கப்பட்ட விதம்
கேள்விக்குறியானது.
என்றாலும்…
அத்தனைக்குப் பிறகும்
ஓர் மாமனிதராக அவர் தன்னை
உலகுக்கு நிறுவி கொண்டிருக்கிற விதம்
கவனிக்க தக்கதாகவே இருக்கிறது.
 
ராஷ்டிரபதியாக பதவி வகுத்து
அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்
மாணவ மாணவிகளின் மேம்பாட்டைக் குறிவைத்து
தொடர்ந்து இயங்கி வருபவராகவே
டாக்டர். அப்துல் கலாமை
நம்மால் பார்க்க முடிகிறது.

அதற்கு நன்றி கூறும் முகமாக
இன்றைக்கு
பல கிராமங்களில்
மாணவ மாணவிகள்
அவரது பெயரில்
தொண்டு அமைப்புகளை ஏற்படுத்தி
இயங்கி வருவதையும் காணமுடிகிறது.

*
டாக்டர். அப்துல் காலாம் அவர்களுக்கு
இலக்கிய நாட்டம் உண்டென்பதும்
பொழுதுபோக்காக
அவ்வப்போது அவர்
கவிதைகள் எழுதுபவர் என்பதும்
பிற்காலத்து செய்தி.

2003-வாக்கில்
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்
இண்டர்நெட்டில்
தனக்கான வலைத் தளத்தை திறந்து
ஆங்கிலத்திலும் தமிழிலும்
இந்திய மாணவ மாணவிகளிடம்
அவர் பேசிப் புழங்கிய விதம் சிறப்பானது.
அது, அவர்களின்
தன்னம்பிக்கையை வளர்ப்பதாக இருந்தது.

அந்த வலைத் தளத்திற்கு
ஏக கிராக்கி!
திறந்தால்…
அது அத்தனைச் சீக்கிரம் திறக்காது.
பொழுதன்னைக்கும்
மாணவர்கள் கூட்டம் முந்திக் கொண்டு வந்து
அங்கே மொய்க்கும்.
இந்தியாவிலேயே அதிகம் பேர் வாசிக்கும்
வலைத் தளமாக அது அன்றைக்கு இருந்தது.

என்றாலும்…
சில நேரங்களில்
நான் அந்த வலைத்தளத்திற்கு
விஜயம் செய்திருக்கிறேன்.
மாணவ மாணவிகளிடம்
அவர் பேசும்…
கனவுகள் காண்/ எல்லாவற்றிற்கும் ஆசைப்படு/
நம்பிக்கை வை/ முடியுமென்று நினை/
தொடர் முயற்சிகளை செய்..
என்பனவைகளைக் கண்டும்,
அவரது கவிதைப் பக்கங்களை திறந்து பார்த்தும்
சட்டென சத்தம் காட்டாமல் திரும்பிவிடுவேன்.

டாக்டர். அப்துல் கலாம்
கவிதைகள் மாதிரியே
முன்னாள் பிரதமர்
வாஜ்பேயின் கவிதைகளும்
என்னை வலுவாக ஏமாற்றி இருக்கிறது.

வாஜ்பேயின் கவிதைகளை
வாசிப்பதற்கு முன்னாள்
அவரது கவிதைகள் குறித்த கீர்த்திகளை
பலரும் பேசி/எழுதி… 
அறிய வந்திருக்கிறேன்.
இந்த அறிதலை முன்வைத்து
கிட்டத்தட்ட அவரை கவிஞராகவே
மனதில் இருத்திக் கொண்டும் வந்திருக்கிறேன்.
எல்லாம்…
அவரது கவிதைப் புத்தகத்தை படிக்காதவரை.

பின்னொரு காலக்கட்டத்தில்
திரு. வாஜ்பேயின்
ஆகச் சிறந்த கவிதைகளின் தொகுப்பொன்றை
தமிழ் மொழிப்பெயர்ப்பில் 
வாசிக்க வாசிக்க அதிர்ந்து போனேன்.
திரு.வாஜ்பேய் என் மனதில்
தனது விசேச இடத்தை விட்டும்
அகன்ற தருணம் அது!

கஷ்டப்படுத்திய
அம் மொழிப் பெயர்ப்பை…  நான்
வாசிக்காமலேயே இருந்திருக்கலாம்.
திரு.வாஜிபேய் மிக நல்ல மனிதர்.

இது மாதிரியான
அதிர்ச்சி அலைகளை
தமிழக முன்னாள் முதல்வர்
டாக்டர். கலைஞர் அவர்களின்
கவிதைகள் பலவும்கூட
என்னில் நிகழ்த்தி இருக்கிறது.   

பொதுவில்…
கவிதை எழுதுவதென்பது
நேரத்தைப் பிடுங்கும் சங்கதி.
பல நேரங்களில்
கவிதை எழுதுபவர்
’அய்யோ பாவமாக’ ஆகிப் போகும்
நிகழ்வுகளும் இத்துறையில் சாதாரணம்.
அப்பவும் கவிதை…
அவன் படைக்கும் படைப்பிற்குள் வந்துவிடாது.
இன்னும் காததூரமொன்றுக்குப் பயணித்தாலும்
அவனிடம் அது படியும் என்பதற்கு
எந்த முகாந்திரமுமில்லை.
யதார்த்தம் இப்படி இருக்க
உயர்ந்த பதவிகள் எப்படி
உத்திரவாதமான தகுதிகளாக முடியும்?

ஆனால் பாருங்கள்,
‘அன்புள்ள அம்மா!’ என்கிற
இக் கவிதையில்…..

//என் உலகம் உனக்கு மட்டுமே
தெரியும் என் அன்னையே.
நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு….

உன் பிள்ளையின் வேதனை
உனக்குத் தானே தெரியும், தாயே?//

– என்று
பூடகமாக சில செய்திகளை
தீர்க்கமாக அவர்
சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.
இதை முன் வைத்தே
இக்கவிதை இன்னொரு திக்கில்
உயர்ந்த அர்த்தம் கொண்டுவிடுகிறது.

-தாஜ் | satajdeen@gmail.com

நன்றி : ’தட்டச்சு செய்து வடிவமைத்த’ தாஜ்

1 பின்னூட்டம்

 1. 17/10/2011 இல் 13:05

  சலாம் கலாம் பாய்!
  சழியா உழைப்பு
  இளமையிலும், முதுமையிலும்
  தேசத்திற்காக
  அக்னி புத்ரனை பெற்றெடுத்ததில்
  தொழைந்து போனது உங்கள் வாலிபம்.
  உங்கள் அம்மா அழுத கண்ணீரின் ஈரம்
  இன்றும் உப்பு கரிக்கிறது
  மகிழ்வும், சோகமுமாய்.
  ஜெய்ஹிந்த்.
  சலாம் கலாம் பாய்!
  நன்றி தாஜ்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s