23 காதல் கதைகள் – யுவன் சந்திரசேகர்

‘ஒளி விலகல்’ தொகுப்பிலிருந்து…

***

கதைகளைப் பற்றி…

நண்பரே, இத்துடன் இருபத்து மூன்று காதல் கதைகளை இணைத்திருக்கிறேன். நிதானமாகப் படியுங்கள். உங்கள் அபிப்ராயங்களை, முடிந்தால், எனக்கு எழுதி உதவுங்கள். என் முதல் கவிதைத் தொகுப்புக்கு நீங்கள் முன்வைத்த விமர்சனங்கள் அதற்குப் பிறகான என் கவிதைகள் எழுதப்படுவதற்கு உதவிகரமாய் இருந்தன. உண்மையில் என் எழுத்து பற்றி எனக்குத் தீர்மானமான கோட்பாடு எதுவும் கிடையாது. எழுத்து பற்றியே தீர்மானமான முடிவுகள் என்னிடம் இருப்பதாக நான் நம்பவில்லை. நாள்தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றன என் நம்பிக்கைகளும் விழைவுகளும். ஆதரிசமான கதைகள் வெளிறிப் போவதும் புரியாமல் இருந்தவை புரிந்து அகண்டாகாரமான அனுபவத்தைத் தருவதும் நடந்தவண்ணமிருக்கிறது.

உரைநடை எழுதுவது எனக்கு முதல் அனுபவம். தினசரியின் தேய்ந்த பாட்டையைப் புதுப்பிக்கும் விதமாக நபர்களும் நிகழ்வுகளும் இடங்களும் அனைத்துக்குமான என் எதிர்வினைகளும் தர்க்கங்களும் அ-தர்க்கங்களும் சூழ்ந்து தகவல்களைக் கவனமாய் களைந்து கவிதை எழுதுவது எனக்கு உவப்பான விஷயம். மேல் தளங்களில் தெரியக் கிடக்கும் முரண் நிலைகளுக்கு அடியில் இயங்கும் ஒத்திசைவை, சம நிலையைக் கேலிக்குரியதாக்கும் வகையில் உள்ளோடும் ஆதாரமான முரண்களைக் கவிதையில் நிகழ்த்திக் காட்டுவது எந்த அளவுக்குச் சவாலோ அதே அளவு சுவாரஸ்யமாகவும் இருந்தது. உடனடித் தகவல்களத் தொடர்ந்து நிராகரிப்பதன் மூலம் கவிதையின் சுயத்தன்மை செறிவு பெறுவதையும் அறிய முடிந்தது.

கதை எழுத முனையும் போது தகவல்கள் பாய்ந்து குவிகின்றன. என்னையும்  எழுது என்று விண்ணப்பித்தபடி வரிசையில் வந்து நின்று மன்றாடுகின்றன. எழுதக் கூடாதது, எழுத்தின் ஒட்டு மொத்த மைதியைக் குலைக்கக்கூடியது என்று ஒரு அம்சத்தையும் சுட்டிக் காட்ட முடிவதில்லை. எல்லாமே எழுதப்படுவதற்கான பெறுமானத்துடன் இருக்கின்றன.

ஒரு அர்த்தத்தில், இக் கதைகளை நான் எழுத நேர்ந்ததும் இவற்றைச் சுற்றுக்கு விடுவதும் அவர்களுக்கு நான் செய்யும் நம்பிக்கைத் துரோகம். அனுபவ நெருக்கம் கருதி நான் உபயோகித்த அவர்களின் அசல் பெயர்களைத் திருத்திய பிரதியில் கவனமாக மாற்றிவிடுவேன், என்றபோது. ஒருநாளும் வெளிவரமாட்டா என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் என்ன்னை முத்தமிட்டனர், காறியுமிழ்ந்தனர். தன் உடல்களின் கன பரிமானங்களை என் ஆளுகைக்கு உட்படுத்தி, என் அந்தரங்களைத் தாம் உணர்ந்து கொண்டனர்.

ஆனால், எனக்கு வேறு வழியில்லை. என்னுள் சதா கனன்று முதிர்வின் பாதையில் நகர்வதற்கான என் சுதந்திரத்தைக் கேலி செய்யும் இந்த ஞாபகங்களைப் பொதுவாக்குவதன் மூலம் நான் தப்பிக்கும் வழி ஒன்று திறக்கக்கூடும் . எனினும், உங்கள் வாலிபப் பிராயத்தின் பொருக்குத் தட்டிய ஓரிரு ரத்தக் காயங்களை இவற்றில் ஏதேனும் திறக்கக்கூடுமானால் என்னை மன்னித்துவிடுங்கள். அவ்வாறு மன்னித்த, மன்னிக்க மறுத்த நண்பர்களில் இரு பட்டியல்கள் என்னிடம் இருக்கின்றன. எந்தப் பட்டியலில் இடம் பெறுவது என்பது உங்கள் தேர்வு. படித்து முடித்தபின் பிரதியை ஞாபகமாகத் திருப்பி அனுப்புங்கள் தயவு செய்து. ஏனெனில் இவை என் கதைகள்.

மற்றபடி, நீங்களும் இன்னும் மற்ற நண்பர்களும் சொல்லும் அபிப்ராயங்களைத் தொகுத்தே இவற்றைப் பிரசுரிப்பது/பிரசுரிக்காமல் அழிப்பது பற்றி நான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டில் அனைவரும் நலம்தானே?

உங்கள்

கிருஷ்ணன்.

*

நன்றி : யுவன் சந்திரசேகர், காலச்சுவடு, ஆரண்யம்

*

தொடர்புடைய சுட்டி :

தற்காலத் தமிழ்ப் புனைகதையின் இன்றைய நிலை – பிரம்மராஜன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s