முத்தங்கள் – கவிதைகள் – சுகிர்தராணி

முதல் முத்தம்

கனிந்த வேப்பம்பழத்திலிருந்து
வெளியேறும் விதையென
என்னிலிருந்து நீங்குகிறது வெட்கம்
நீயும் அறங்களனைத்தும் அழிய
சாய்ந்த மரத்தின் வேராகி நிற்கிறாய்
உன்மத்தம் வடியுமுன் வேர்கள்
என் நிலம் நோக்கி நகர
ஆழத்தில் புதைந்திருக்கும் நாளங்களில்
ஊமத்தைகள் தளும்புகின்றன
கள்ளியின் முட்கள் உள்ளிறங்கப்
பீறிடும் இரத்தத் துளிகளாய்
என் உடல் முழுவதும்
உருள்கின்றன காமத்தின் முத்துக்கள்
உன் சுடுமூச்சுகளின் நூல்கொண்டு
ஒவ்வொன்றையும் கோக்கிறாய்
தொங்கும் தோட்டமாகி மிதக்கிறேன்
பறவைகளற்ற வானம் பிரகாசமடைய
நாம் கலவிக்கால விகாரமுறுகிறோம்
என் மென்முலைகள் அழுந்த
முதல் முத்தமொன்றைத் தருகிறேன்
எவரும் விழித்திராத கருக்கலில்
சாதியின் கொடூர ஓடையில் மிதக்கின்றன
அரிந்து வீசப்பட்ட நான்கு உதடுகள்.

***

தீண்டப்படாத முத்தம்

எம் வாய்களில் திணிக்கப்பட்ட
மலத்தையெல்லாம் திணித்தவர்கள்மீதே
துப்பத் தெரிந்துகொண்டோம்
எம் வயிறுகளுக்குச்
சாணிப்பால் புகட்டிய கரங்களை
நரம்பறுக்கவும் கற்றுக்கொண்டோம்
மறுக்கப்பட்ட தெருக்களில்கூடச்
செருப்பணிந்து செல்லும்
செருக்கினைப் பெற்றுவிட்டோம்
ஆண்டைகள் முன் அடிபணிந்தே
வளைந்துபோன முதுகெலும்புகளை
நிமிர்த்திப் போடவும் அறிந்துகொண்டோம்
நீரற்ற ஓடைகளில் நிகழும்
கௌரவக் கொலைகளிலிருந்து
உயிர்த்தெழவும் உணர்ந்துகொண்டோம்
கைநாட்டுகளைத் தடமழித்து
ஏடெடுக்கவும் எழுந்துநின்றோம்
ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து
விடுதலையின் மாஇசையை
மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்
என்றாலும்
என் கருத்த உடல்களிலிருந்து
சிந்தப்படுகின்ற இரத்தமெல்லாம்
இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன
தீண்டப்படாத முத்தங்களாக.

***

சாம்பல் பூக்காத முத்தங்கள்

நதிகள் பாய்கின்ற ஈரநிலத்தில்
பரிவாரங்களோடு காத்திருக்கிறாய்
வனாந்தரத்தில் வழிதவறிய பெண்ணை
நீளவாக்கில் உரித்த தோலாலானது
உன் கூடாரம்
தொங்கும் அவள் முலைகள்
சரவிளக்குகளைப் போல
வெளிச்சத்தை வீசுகின்றன
அறுக்கப்பட்ட தொப்புள்கொடியை
மதுவருந்தும் குவளையாக்கி
என்னை வீழ்த்திடத் துடிக்கிறாய்
நிலவு சயனிக்கின்ற சாமத்தில்
கீழேவிழும் நட்சத்திரங்கள்
மீண்டும் வானமேகா என்பதையும்
குளிச்சி பொருந்திய அரும்பினை
அவிழ்த்துவிட்டுச் செல்வது
தென்றலாக இராது என்பதையும்
நீ கண்டடைந்திருக்கலாம்
என் மார்பிலிருந்து பெருகிய
காதல் நீரோட்டங்கள்
உன்னிலிருந்து விலகும் பொழுதில்
வெம்மை படர்ந்த விருட்சத்தின்
உரிகின்ற பட்டையைப் போல்
என் உதட்டிலிருந்து சுழன்றுவிழுகின்றன
சில சாம்பல் பூக்காத முத்தங்கள்.

***

சபிக்கப்பட்ட முத்தம்

தோள்களின் மீது வந்தமரும்
செம்பறவைகளின் இலாவகத்தோடு
உன் கண்களை வாசிக்கிறேன்
மழைப் பொழுதின் சிலிர்ப்புகளும்
வேனிற்காலத்து வியர்வைத் துளிகளும்
பிரித்தறியா நிறத்தொடு
கூடிக்கிடக்கின்றன உன் கண்களுக்குள்
அவற்றில் நுழையும் வழியற்று
நுரை ததும்பும் கடற்கரை மேடுகளில்
விரிக்கப்பட்ட வலையென
உலர்கின்றது நமக்கிடையேயான அன்பு
மணலில் அழுந்திய சங்குகள்
எப்போதும் உன் சுவடுகளை
அடையாளப்படுத்தியபடியே இருக்கின்றன
மடலேறும் சாத்தியமும் முறிவுற்று
சுருண்டு படுத்திருக்கிறேன் உன் தொடுதலுக்காக
முன்பு ஒருமுறை எனக்கு
முத்தமொன்றைத் தருவதாய்ச் சொல்லியது
நனவிலி மனமாக இருக்கலாம்
கரையொதுங்கிய அலையாத்திப் பூவாய்
ஈரத்தால் கிழித்த என் கன்னங்களைக்
கடற்கரை மணலில் பதித்துவைத்திருக்கிறேன்
கண்டறியப்படாத ஒரு பாலைவனத்தில்
உலர்ந்த இரு உதடுகள்
சருகெனப் பறப்பதாய்ப் பேசிக்கொண்டார்கள்.

***

விலக்கப்பட்ட முத்தம்

களிப்பின் சுனை வறண்ட
என் சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே
நூலறுந்த பட்டத்தைப் போல
கண்டதையக் கூடாதிருந்தது அது
சபிக்கப்பட்ட தேவதையெனக்
கண்ணீரை மென்று விழுங்கிப்
பள்ளத்தாக்குகளிலும்
விளைவிக்கப்பட்ட வன்நிலங்களிலும்
அதன் நிழலைத் தேடி அலைகின்றேன்
முளைக்காத விதையாய் உருமாறித் திரியுமதன்
நிராகரிப்பின் வலி
என் உடல்முழுவதும் ஒழுகுகின்றது
அதன் உப்புச்சுவைக்காக
வீழ்ந்த பேரரசுகளையும்
புதைந்துபோன காதல்களையும்
உயிர் வழிய வாசிக்கின்றேன்
அதன் பிம்பம் உதிர்ந்த இலையாகித்
துயரின் ஓடையில் மிதக்கின்றது
எனக்கு மட்டுமென்று
அதை நெய்யத் தொடங்குகிறேன்
நஞ்சோடு மெல்ல உருப்பெறுகிறது
படர்காமம் மிகுந்த பொழுதொன்றில்
அதன் மேலோட்டை உடைக்கிறேன்
வெடித்துக் கிளம்பும் அது
விலக்கப்பட்ட முத்தமாயிருந்தது.

***

உறையிலிடாத முத்தம்

எனது அறையில்
குவிந்திருக்கும்
ஓராயிரம் முத்தங்களில்
வெடித்திருக்கும்
உன் உதடுகளிலிருந்து பெற்ற
போர்க்கள முத்தத்தைத்
தேடிக் கண்டடையும் வேளை
அது
தடயமற்றுக் கரைந்திருக்கிறது
உறையிலிடாத உப்பாய்.

***

கடைசி முத்தம்

அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தோட்டம்
ஏதேனின் சாயலாய் இருந்தது
கூடியபின் தளரும் உடலைப் போல
அவ்விடத்தின் நறுமணம்
மென்மையுற்றிருக்க
விலக்கப்பட்ட கனியைப் புசித்த பிறகும்
நிர்வாணிகளாகவே திரிகின்றனர்
அவர்களிடமிருந்து வழிந்த காதல்
நதியென ஓடிக்கொண்டிருந்தது
அதன் ஆழத்தில் நீந்தியபொழுது
காமம் துண்டங்களாகி மிதந்தன
துண்டங்களைக் குவித்து
அவள் அடைகாக்க
அவன் முத்தங்களைப்
பொரிக்கத் தொடங்கினான்
இருவரின் மூச்சுகளும்
உடைந்துகொண்டிருந்தன
முத்தத்தின் எண்ணிக்கை கூடக்கூட
அவளுடலின் இடம் தீர ஆரம்பித்தது
இறுதி முத்தத்திற்கு
அவன் இடம்தேடி அலைந்தபோது
அவள் மெல்லப் புன்னகைத்தாள்
கடைசியில் முத்தமிட்டு முடிந்தபோது
பூமி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

***

’பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களின் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது இந்த நான்காவது தொகுப்பு’ – காலச்சுவடு பதிப்பகம்

***

சுகிர்தராணியின் மின்னஞ்சல் முகவரி : sukiertharani@yahoo.co.in

***

தட்டச்சும் தேர்வும் : தாஜ் | satajdeen@gmail.com 

***

தொடர்புடைய முத்தங்கள் 😉  :

கவிஞர் சுகிர்தராணி : நேர்காணல் (ஒலிவடிவில் / அதிகாலை.காம்)

தீண்டப்படாத முத்தம் :  உடலைக் கடந்த இயக்கம் – கட்டுரை : சுகுமாரன்

***

நன்றி : சுகிர்தராணி, காலச்சுவடு, தாஜ்

1 பின்னூட்டம்

  1. 07/11/2018 இல் 10:55

    அருமை. ஒற்றை வார்த்தையில் அடங்காத வெட்டவெளி


பின்னூட்டமொன்றை இடுக