ஒன்றென்றிரு : ஜின்னாவும் கந்தசாமியும்

முதலில் கூவுவது முகம்மது அலி ஜின்னா. ’முட்டைக்குள்ளே கூவும் மூமின் குயில்’ என்கிறது அகில-உலக-இஸ்லாமியத்-தமிழ் இலக்கிய (அப்பாடா…!) ஆறாம் மாநாட்டின் சிறப்பு மலர். ஆண்டு 1999. அப்போது ’குயில்’ , ஜமால் முஹம்மது கல்லூரியில் இளம் கணிப்பொறி  அறிவியியல் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்திருக்கிறது. இரண்டாம் பரிசாக ரூ.2000/= பெற்றிருக்கிறது இந்தக் கவிதைக்கு :

ஒன்றென்று இருப்போம் – முகம்மது அலி ஜின்னா

ஆதியிலே சாதிக்கு ஆதாம் ஏவாள்
அடிபணிந்து சென்றிருந்தால் இந்த நேரம்
பீதியிலே நாமெல்லாம் செத்துச் செத்துப்
பிணமேடாய் குவிந்திருப்போம் எண்ணிப் பாரீர்
பாதியிலே உயிர்பெற்ற சாதிப் பேய்கள்
பாழ்படுத்தும் கொடுமைகளால் நம்மை எல்லாம்
வீதியிலே கத்தியோடு ஓட வைத்த
வெறித்தனங்கள் இனியும் தொடரலாமா?

இந்தியரே பொல்லாத வேறு பாட்டை
ஏனின்னும் ஏமாந்து வைத்துள்ளீர்கள்
கந்தைகளாய்க் கிழிசல்களாய் உதறித் தள்ளி
கடுகென்னும் உள்ளத்தை மாற்றிக் கொள்வீர்
இந்துக்கள் முஸ்லீம்கள் கிறித்துவர்கள்
எல்லோரும் இந்தியராய் ஒன்று பட்டால்
சிந்துகின்ற ரத்தத்தின் ஒவ்வோர் சொட்டும்
தேசத்தைச் சுமக்கின்ற அடிக்கல்லாகும்!

விளக்கினையும் திரியினையும் பிரிக்கப் பார்த்தால்
வெளிச்சத்தை நாமதிலே பெறுவ துண்டோ?
இளமையினால் முதுமையினைப் பிரிக்கப் பார்த்தால்
இறக்கும்வரை மனிதவாழ்வு நீள்வ துண்டோ?
வளர்ந்துவரும் பகல்இரவைப் பிரிக்கப் பார்த்தால்
வாழ்நாளில் முழுநாளாய்க் கிடைப்ப துண்டோ?
உளம்திறந்து ஒன்றானால் உலகின் காற்றை
ஒருமூச்சில் இழுத்துடவும் முடியும் நம்மால்!

எத்தனையோ பிரிவினைகள் வளர்த்துக்கொண்டு
எதிரிகளாய் வாழ்வதிலே அர்த்தம் இல்லை
புத்தனாக மாறுவதில் ஆசை கொண்டு
போதிமரம் தேடுவதில் அர்த்தம் இல்லை
பித்தனாக இருந்தாலும் ஒருமைப் பாட்டைப்
பாதுகாக்கும் மனிதன்முன் புத்தன் எங்கே?
சத்தியாமாய் சொல்கின்றேன் ஒன்றுபட்டால்
சாகாமல் வாழ்ந்திடவும் முடியும் நம்மால்!

ஒற்றுமையாய் வாழ்கின்ற உயிர்கள் தன்னில்
ஓரறிவு குறையிருந்தும் சிறப்பாய் வாழும்
சிற்றெறும்பின் ஒற்றுமையும் காக்கைக் கூட்டம்
செய்கின்ற ஒற்றுமையும் நம்மில் வேண்டும்
பற்றியதீ எரிமலையாய் இருக்கும் போதும்
பயங்கரமாய் வான்தொட்டு எரியும் போதும்
ஒற்றுமையாய் நாமிருந்தால் இந்தத் தீயை
உமிழ்நீரால் அணைத்திடவும் முடியும் நம்மால்.

விண்வெளியில் வாழ்வதற்கு வீடு கட்டி
விண்மீனை விளக்குகளாய் ஏற்றிப் பார்ப்போம்
வெண்ணிலவைக் கண்முன்னே கொண்டு வந்து
வேடிக்கைப் பொருளாக்கி வியந்து கொள்வோம்
எண்ணத்தின் வலிமையினால் கடலின் நீரை
எடுத்துவந்து சகாராவைச் சலவை செய்வோம்
உண்மையுடன் நாமெல்லாம் ஒன்று பட்டால்
உலகத்தை தூக்கிடவும் முடியும் நம்மால்.

இருமுனைகள் ஒற்றுமையாய் இருந்தால் மட்டும்
எப்பொருளும் நிலைத்திருக்க முடியும்; என்றும்
இருள்வெளிச்சம் ஒற்றுமையாய் இருந்தால் மட்டும்
இரவுபகல் நிலைத்திருக்க முடியும்; அன்று
சிறுதுகள்கள் ஒற்றுமையாய்ச் சேர்ந்த தால்தான்
சுற்றிவரும் பூமியையே பெற்றோம்; அன்பைப்
பெறுவதிலே மனிதரெலாம் ஒன்று பட்டால்
புதுஉலகைப் படைத்திடவும் முடியும் நம்மால்!

இமயத்தை ஒருமூச்சில் தாண்டு கின்ற
இந்தியரே ஏனின்னும் தயங்கு கின்றீர்
இமயத்தில் ஒருமனிதன் இறப்பா னென்றால்
குமரியிலே அழவேண்டும் அவனுக் காக
சமயத்தின் பெயர்சொல்லி வெட்டுக் குத்தால்
சண்டையிட்டுச் சாகின்ற நிலையை மாற்றிக்
குமரிமுதல் இமயம்வரை ஒன்றே என்று
குரல்கொடுத்து ஒற்றுமையாய் வாழ்வோம் என்றும்!

*

அடுத்து வருவது சகோதரர் ந. கந்தசாமி. இவரையும் ’முட்டைக்குள்ளே கூவும் மூமின் குயில்’ என்றே அழகாக அழைக்கிறது அ.உ.இ.த.இலக்கிய மலர். இந்த சகோதரக் குயிலின் அப்போதைய இடம் திருநேல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி. மூன்றாம் பரிசாக ரூ.1000 பரிசு வாங்கியிருக்கிறது. புதுக்கவிதை என்பதால் 1000 ரூபாய் குறைத்தது சரிதான் என்று நினைக்கிறேன்.  சீர்காழிக் கவிஞர் கவனிக்கவும்!

ஒன்றென்று இருப்போம் – ந. கந்தசாமி

மனிதர்களே
ஏன் உங்களுக்கு
ஒன்றென்று இருப்பது
ஒவ்வாமையாயிற்று?

நீங்கள் ஏன்
தனித்தனி நட்சத்திரங்களாய்த்
தலையெடுக்கிறீர்கள்?
முழுச் சூரியனாய்
முகம் காட்டினால்
விடியலின் விலாசம்
தெரிந்துவிடுமல்லவா!

மனிதர்களே
நீங்கள் ஏன்
சுயநலத்தை மட்டுமே
சுவாசிக்கிறீர்கள்?
பிறர்நலம் என்னும்
நறுமணத்தையும் கொஞ்சம்
நுகர்ந்து பாருங்களேன்…!

தோழர்களே
சமூகத்தின் பிரச்சனைகளுக்கு
நாம் அனைவரும்
தீவுகளாய் தனித்திருந்தால்
தீர்வு காண்பதெப்படி?
காலில் குத்திய முள்ளை
ஒற்றை விரலால்
உருவ முடியாது.

சுற்றிச் சூழ்ந்த இருளை
ஒற்றைக் கிரணத்தால்
ஒழிக்க முடியாது

பிறகும் ஏன்
பிரிவின் மொழியையே
பிதற்றிக் கொண்டிருக்கிறோம்?
இனியாவது
ஒற்றுமை மொழியை
ஒருமனதாக ஏற்போம்!

ஒன்றென்று இருப்பது
எண்ணிக்கையில் கூடுவதல்ல
எண்ணங்களால் கூடுவது!
மேலும்
ஒன்றென்று இருப்பது
தனித்தன்மையை இழப்பதன்று!

பூக்கள்
மாலையாக மாறியவுடன்
மணம் இழப்பதில்லை

நதி
கடலில் கலந்தவுடன்
குளிர்மையை இழப்பதில்லை!

ஒன்றென்று இருப்பதால்
மனிதர்களின் தனித்தன்மை
பூரணமாய் மிளிர்கிறது!

ஆதலால் நாம்
ஒன்றென்று இருப்போம்
ஒற்றுமையை வளர்ப்போம்
சாதனை மாளிகைக்கு
அடித்தளம் அமைப்போம்
சாகும் வரைக்கும்
சமத்துவம் படைப்போம்
மனிதம் வெல்க.

***

 சகாராவைச் சலவை செய்வது சற்றே சிரமமாக இருந்தாலும், விடியலின் விலாசம் இதுவரை விடியாவிட்டாலும் இவர்கள் இருவரின் ஒற்றுமை என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன். தெய்வம் உண்டென்றிரு! ஆபிதீன்

நன்றி : முகம்மது அலி ஜின்னா , ந. கந்தசாமி. இஸ்லாமிய இலக்கியக் கழகம்.

1 பின்னூட்டம்

  1. 05/05/2011 இல் 16:53

    என்ன செய்வது
    உங்களுக்கு தெரிகிறது
    எனக்கு தெரிகிறது
    சமத்துவமும் சகோதரத்துவமும்.
    தலமை பீடத்தை குறி வைக்கும்
    அரசியல்வாதிகளுக்குத் தெரியவில்லையே..!
    அதுதானே அவர்களுக்கு மூல ஆயுதம்,
    நாம் அவர்களுக்கல்லவா அடிமையாயிருக்கிறோம்.
    ஓ மனிதா.. நீ
    உனக்கு அடிமையாய் இரு.


ஹமீது ஜாஃபர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி