நிலாவைக் காட்டிய விரல் – ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான்

‘பறவையின் பாதை’ நூலிலிருந்து…

***

நிலாவைச் சுட்ட
நீண்டது விரல்

‘நகம்
முத்துச் சிப்பியைப் போல்
இருக்கிறது’
என்றான் ஒருவன்

‘ஒன்றுக்குப் போகனும்போல’
என்றான் மற்றொருவன்

‘இல்லை, அது நம்மை
அதட்டுகிறது’
என்றான் இன்னொருவன்

அதன் ரேகையை
ஆராய்ந்த ஒருவன்
‘ஏதோ தீமை
நடக்கப் போகிறது’
என்றான்

ஒருவன் நகத்தில்
மருதாணி பூசினான்

மற்றொருவன்
ஒரு தங்க மோதிரம்
கொண்டு வந்து போட்டான்

பிறகு
விரல் வெட்டியெடுக்கப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்டது

வழிபாடுகள்
தொடங்கின

ஆனால்
யாரும் பார்க்கவில்லை
நிலாவை

***

நன்றி :  ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான்

16 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  28/04/2011 இல் 21:12

  எப்படிப் பார்ப்பான்
  நிலாவை?
  அவர்களுக்கு கண்கள்
  இருந்தால்தானே பார்ப்பதற்கு?

  சமூதாய மக்களின் கண்களில்
  ஒளியேற்ற வேண்டிய நேரத்தில்
  கவிகோ என்ன செய்துக் கொண்டிருந்தார்?

  தனது உத்தியோக நேரம் போக
  ஓர் அரசியல் தலைவருக்கு
  பின்னால் போய்
  வாரம் தவராமல்
  மேடையேறி
  அர்த்தமில்லாமல்
  அவரை
  இந்திரன்/ சந்திரன்/
  சோழன்/ சேரன்/ பாண்டியன்…
  இன்னும் இத்தியாதி காடத்துப்
  புகழெல்லாம் அவருக்கு இட்டுக்கட்டி
  எதுகை மோனையில்
  புகழ்ந்து பாடித் திரிந்துவிட்டு
  இன்றைக்குப் பார்த்து
  (தன் சார்ந்த) மக்களுக்கு
  நிலவை பார்க்கத் தெரியவில்லை என்பது
  வெடிக்கையாகவும்,
  வேதனையாகவும் இருக்கிறது,

  ஆயுலில்
  இரத்தம் சுண்டும்வரை
  பாடியப் பாட்டிற்கு
  பலன் கிடைத்துவிட்டது என்று
  நிம்மதி கொள்வதைவிட்டு
  மக்களுக்கு
  நிலவைப் பார்க்கத் தெரியவில்லை என்று…
  என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கிறது?
  -தாஜ்

  • 29/04/2011 இல் 11:56

   தாஜ் கருத்து சரியே
   தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை
   – முஸ்லிம்களுக்கு அபூர்வமாகக் கிடைப்பது-
   இவர்
   சமூகம் பயனுற ஏதும் செய்ததாக
   நான் நினைக்கவில்லை

   • 29/04/2011 இல் 12:04

    இந்தக் கவிதையும்(?) தன் சமூக மக்களைப் பற்றிய அங்கலாய்ப்பாகத் தெரியவில்லை

 2. 30/04/2011 இல் 11:00

  ரெண்டுபேரும் ஆரம்பிச்சாச்சா? கவிதையா கழுதையா என்பதல்ல முக்கியம். நல்ல செய்தி. அவ்ளோதான். கலைஞரைக் கட்டியணைப்பவர் நல்ல செய்திகளை சொல்லக்கூடாதா என்ன? என்னப்பா நீங்க… ! ’கவிக்கோ’வின் ’குணங்குடியார் பாடற்கோவை’ முக்கியமான நூல் என்று சொன்னால் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார் மஸ்தான் என்று மறு கேள்வி கேட்பீர்கள். இப்படியே போனால் மு. மேத்தா கவிதைகளை இங்கே பதிவிடவேண்டி வரும் என்று சீரியஸாக எச்சரிக்கிறேன்!

  கடைசியாக ஒரு தமாஷ். எழுதியவர் பெயரைச் சொல்லாமல் ‘கவிக்கோ’வின் பாடல் ஒன்றை ஹஜ்ரத்திடம் ஒருவர் படித்துக்காட்டினார் உணர்ச்சியோடு. அசந்துபோன ஹஜ்ரத் உடனே பாராட்டினார்கள் : ‘ஆஹா.. மௌலானா ரூமின்னா ரூமிதான்!”

  • தாஜ் said,

   30/04/2011 இல் 15:25

   நம்ம ஆபிதீன்
   சொன்னதற்காகவாவது
   நல்லச் செய்திகள் சொல்ற
   கவிக்கோவின்
   கவிதை விளைப்பார்ப்போம்.

   கவிகோவின்
   கவிதைகளை வெளியிடும்
   பதிப்பகத்தாரின்
   சென்னையில் உள்ள தலைமை
   புத்தக விற்ப்பனை நிலையத்திற்குப்
   போக நேர்ந்தபோது போனேன்.

   அவர்கள் அடுக்கிவைத்திருந்த
   கவிதைச் ‘செல்ஃபில்’
   எண்ணிலடங்கா
   கவிக்கோவின் கவிதைத் தொகுப்புகள்!!
   அத்தனையிலும் அவர் என்னென்ன
   நல்லக் கருத்துக்களை
   சொல்லி இருக்கிறாரோ தெரியாது.
   நிச்சயம்
   நமக்கு அவர்
   கருத்துக்களையும் புத்திமதிகளையும்
   நிறையவே சொல்லி இருக்கலாம்.

   தவிர,
   கவிதைக்காக அவர்
   சாகித்திய அகடமி விருது வாங்கியும்
   ஆண்டுகள் பல ஆகிறது!

   இன்றுவரை
   கவிதை வெளியில்
   அவர் பெயரை குறிப்பிடுவோரோ
   அவரது கவிதை நயத்தை எடுத்தாள்வோரோ
   தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்!

   அவர் ஒரேயொரு
   சிறந்த கவிதையாவது எழுதியிருந்தால்
   நானே தலையில் தூக்கி வைத்து
   கொண்டாடியிப்பேன்.
   ஆனால்…
   நிச்சயம் அவருக்கு
   நல்லக் கவிதைத் தெரியும்.
   என்றாலும் எழுதவில்லை.
   மக்கள் கவிதை எழுகிறேன் என்று
   காலத்திற்கும்
   மண்ணாங்கட்டி கவிதைகளையே
   சலிக்கச் சலிக்க
   எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

   அவர் கவிதைகள் குறித்த
   நிஜத்தின் நிலை இதுதான்
   யாரும் முன்வந்து
   தங்களது
   கருத்துகளைப் பதியவில்லை.
   வாய்ப்பு கிடைத்ததால்
   நான் தட்டாது பதிந்துவிட்டேன்.
   தவறா ஆபிதீன்?

   -தாஜ்

 3. 30/04/2011 இல் 16:08

  தாஜ்,

  அப்துல்ரகுமான் அவர்கள் கவிதையில் உங்களுக்கு விமர்சனம் இருப்பது சரி! ஆனால் அவர் உச்சமாய் எழுதிய பால்வீதி, ஜனரஞ்சகமாய் எழுதிய நேயர் விருப்பம் என எதிலுமே ஒரு கவிதை கூட தேறாது என்றால்….

  கவிதை என்றால் எது என கவிக்கோவுக்கு சொல்லிக் காட்டுங்கள். அப்படியே நாங்களும் கொஞ்சம் புரிந்து கொள்கின்றோம்.

  “விரலாகி வர வேண்டும் நீ1
  என் மீட்டாத மவுனத்தை
  விதமான ராகத்தில்
  வெளியாக்கித் தர வேண்டும் நீ!” எனும் கவிக்கோவின் நேயர் விருப்பம் தாஜின் முன்பு அவர் நேயர்கள் சார்பாக!

  • தாஜ் said,

   01/05/2011 இல் 14:38

   அன்பு
   நூருல்..

   நான், ‘ஒரு கவிதை’யென குறிப்பிட்டது
   மிகைச் சொல்லே.

   மூத்த சகோதரன் மீது
   இளையவன் கொள்ளும்
   ஆத்திரத்தின் வெளிப்பாடு அது.

   தமிழில்
   புதுக் கவிதை….
   உலகக் கவிதைகளுக்கு
   சவால் விடும் எழுச்சியில்
   தலையை
   உயர்த்திக் காமிக்கும் விதமாய்
   இன்று வளர்ந்திருக்கிறது
   அதாவது…
   ஒரு இருபது வருடங்களாகவே
   இதே நிலைதான்!
   அத்தனை செழிப்பு
   தமிழின் புதுக் கவிதை உலகம்!.

   நம்ம கவிக்கோவுக்கு
   அதெல்லாம் பொருட்டேயல்ல.
   அவர் இன்னும்
   கவிதையரங்க
   கவிதையில் இருந்து
   ஒரு பத்து அடிக்கூட
   முன்னெடுத்து நடந்து வரவில்லை.
   வேண்டுமானால்…
   வைரமுத்தோடு
   போட்டிப்போட்டு
   அவரை மிஞ்சும்
   கவிதைகளை எழுதுகிறார்
   என்று வேண்டுமானால்
   சொல்லலாம்!
   ஓரளவில் அதில் நிஜமும் உண்டு.

   வைரமுத்துவும்
   வெறும் சினிமாவுக்கு பாடல் எழுதும்
   கவிஞர் மட்டுமல்ல…
   இவரை மாதிரியே
   இலக்கியத்திற்காக
   சாகித்திய அகடமி வென்றவரே!

   நல்ல நவீனக் கவிதைகளைப்பற்றி
   இதே…
   ஆபிதீனின் பக்கத்தில்
   எனக்குத் தெரிந்த வரையில் நான்
   அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.
   தவிர…
   நூருல் குறிப்பிடுவது மாதிரி
   ஒரு கட்டுரையை எழுதினால் ஆச்சு.
   அதற்கு முன்
   தமிழில் வெளிவந்திருக்கும்
   பலதரப்பட்ட கலைஞர்களின்
   புதுக் கவிதைகளை
   நூருல் வாசித்து அறியவேண்டும்.
   உங்களுக்குத் தெரியுமா…
   நம்ம பெண்கள் என்னமாக
   புதுக் கவிதைகள்
   எழுதுகிறார்கள் என்று?

   கவிக்கோ என்கிற உயர்ந்தப்பட்ச
   பட்டம் தாங்கியவரை
   நான் வலுவாகவே சீண்டுகிறேன்
   என்பது வாஸ்த்தவம் என்றாலும்
   நான் ஏன்
   சாதாரணமான கவிஞரான
   நம்ம மனுஷியப்புத்திரனின்
   கவிதைகளை
   இப்படி சீண்டுவதில்லை என்பதை
   நூருல் யோசிக்க வேண்டும்!

   சந்தோஷம்
   -தாஜ்

   • 01/05/2011 இல் 16:11

    அப்படியே தாஜுக்கு பிடித்த கவிஞர் தாஜ்தான் என்பதையும் அமீன் தெரிந்து கொல்லனும்!

 4. 01/05/2011 இல் 16:17

  கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு வெகு தெளிவான உங்கள் பதில். எனக்கு முற்றிலும் உடன்பாடு, மகிழ்சி, நன்றி.

  //நூருல் குறிப்பிடுவது மாதிரி
  ஒரு கட்டுரையை எழுதினால் ஆச்சு.// மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன் தாஜ்!.

  இருபது வருடங்களுக்கு முன்பு,அப்போது சி.இ.மறைமலை “புது கவிதையின் தேக்க நிலை” பற்றி எழுதி இருந்தார். “சற்றே இரும் பிள்ளாய்” என்னும் மு. மேத்தாவின் விமர்சன வரிகள் ஆனந்த விகடனில் வந்து சர்ச்சை ஏற்படுத்திய நேரம்.அர்த்தமற்ற புதுக்கவிதைகள் புற்றீசலாய் மலியத் தொடங்கி அந்த காலத்தில் நான் கவிதை படிப்பதை சலித்து போய் சன்னம் சன்னமாய் நிறுத்தி விட்டேன்.

  சொல்லி கொடுங்கள் – அள்ளிக் கொடுங்கள் “களா” செஞ்சுடுறேன்.

  அன்புடன்,

  அமீன்

 5. தாஜ் said,

  01/05/2011 இல் 19:09

  அன்புடன்
  ஆபிதீன்

  என்னை
  எந்த வார்த்தைகளில் வேண்டுமாலும்
  திட்டுங்கள்….
  ஆசையெனில்
  என்னைக் //கொல்லுங்கள்//
  சம்மதம்!
  என்னை ‘கவிஞர்’ என்று மட்டும் குறிப்பிடாதீர்கள்.

  இங்கே
  நான் தலைவணங்கும்
  கவிதைக் கலைஞர்கள் ஆயிரம்!
  நான் ஆக கடைசி.
  தேரமாட்டேன்.

  ஆபிதீன்
  அடையாளம் இல்லாமல் வாழ்வது
  எத்தனைச் சுகம் தெரியும்?

  பெயர் பற்றி/
  புனைப் பெயர் பற்றி/
  என் இரண்டு கவிதைகள் இங்கே.
  ஏதேணும்
  செய்திகளை சொல்லலாம்:

  என் பெயரை நான் மறந்து.
  ————————–

  ஏகத்திற்கும் இருள்
  காலம் தவறி
  இடம் பெயர்ந்து
  மாட்டிக் கொண்டேன்.
  வந்தவழியும் மறைய
  போகும் வழியுமற்று
  குன்று குழிகளின்
  இடிபாடுகளில்
  விழுந்தெழுந்து
  குறுக்கும்
  நெடுக்குமாய்
  ரணம் கொண்டு விரைய
  சாலை வெளிச்சத்தில்
  அந்நொடிவரை
  மறந்துபோயிருந்த
  என் பெயர்
  நினைவுக்கு வந்தது.

  *****

  பெயர் அழகு.
  ————-

  எனக்கான பெயர்களை
  மறைத்து
  கண் விழித்தபோது
  சுற்றம் கொண்டாடிய
  செல்லப் பெயரையும்
  தொலைத்து
  பெற்றோரும் உற்றோரும்
  திருவாய் சூட்டிய சொந்தப்
  பெயரையும் விடுத்து
  பாட்டன் வழிவந்த பட்டப்
  பெயரிலும் முகம் சுழிக்க
  தலையெடுத்த நாளாய்
  புனைப் பெயரில்தான்
  பேருலாப் புறப்பாடு நடக்கிறது.

  *****

  • 02/05/2011 இல் 10:27

   ‘அழகு’கூட அழகாய்த்தான் இருக்கும்போல, சமயத்தில்.

   புனைப்பெயர் தரும் போதை, யாராவது நிஜப்பெயரைச் சொன்னாலே கோபத்தை வரவழைக்க வல்லது.

   தாஜ் பாவம்.

  • 02/05/2011 இல் 15:02

   //என்னைக் கொல்லுங்கள்// சரி, கதை எழுதுகிறேன்! கமெண்ட்டுகளில் மட்டும் கலக்கும் நீர் கவிஞர்தான். சந்தேகமில்லை. ஆனா, போறபோக்கிலே மனுஷ்யபுத்திரனையும் ஏன்யா சீண்டுறீர்? அவரது ‘நல்வாழ்த்துகள்’ கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

 6. 02/05/2011 இல் 10:21

  சும்மாதான் மிரட்டுனோம், மு. மேத்தா கவிதை போடலைன்னு ஆபிதீன் ஆசுவாசப்படவேணாம்.

  அவர் சத்தமில்லாம வந்து உக்காந்துக்கிறார்; அங்கங்கே!

 7. முத்துக்குமரன் said,

  13/09/2011 இல் 03:31

  கவிக்கோவின் கவிதைகளை தேடிக்கொண்டிருந்த போது இன்று தான் இதை பார்த்தேன்.
  நண்பர் தாஜுக்கு,
  //அவர் ஒரேயொரு
  சிறந்த கவிதையாவது எழுதியிருந்தால்
  நானே தலையில் தூக்கி வைத்து
  கொண்டாடியிப்பேன்.//
  உண்மையில் எத்தனை படித்தீர்கள்.
  பால்வீதிகூட நேரம் பிடிக்கும்
  “பித்தனை”யாவது பாருங்கள்
  அவர் சொந்த அரசியல் தள்ளிவைத்து பார்த்தால்
  கண்டிப்பாக பித்தன் மோகிக்க வைப்பான்.

 8. முத்துக்குமரன் said,

  13/09/2011 இல் 03:35

  ஆபிதீன்,
  உங்கள் தளத்தில் படிக்க நிறைய உள்ளது. வெகு தாமதமாய் பார்த்திருக்கிறேன். சவகாசமாய் பின்னொரு நாள் வருகிறேன்.

 9. அனாமதேய said,

  20/06/2014 இல் 15:08

  AYUT KALAM MULUVATHUM KAVIYANIN REKAI KAVITHAI


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s