வலை (2000 ) – முன் குறிப்புகள் : ஆபிதீன்

’பாலம் இடிஞ்சப்ப ’பாலம்’ண்டு ஒரு கதை எழுதுனீங்க. இப்ப பாலம் கட்டியாச்சே.. இதுக்கும் ஒரு கதை எழுதுவீங்களா?!’ என்று கிண்டல் செய்த ’சொல்லரசு’ ஜாபர் முஹ்யித்தீன் மாமாவின் கடிதமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் எழுதிய கடிதம். மாமா இப்போது இல்லை; மவுத்தாகிவிட்டார்கள். இருதய ஆபரேஷனுக்காக அவர்கள் சென்னை சென்றபோது நான்தான் வழியனுப்பினேன். இதை நண்பன் பாஸ்கரனிடம் சொல்லி கண்ணீர் விட்டபோது டேபிளை ஓங்கி அடித்துச் சிரித்தான். ’வழியனுப்ப நீ போனீலே? எப்படி திரும்புவாங்க உசுரோட!’ என்றான். ’மவுத்’துக்கும் வாய்திறந்து சிரிக்கும் ஊர். நானும் நண்பர் நாகூர் ரூமியும் சேர்ந்து இந்த ஊர் எழுத்தாளர்களுக்காக ஒரு இணையதளம் – இலவசமாக கிடைக்கும் இடத்தில் – நடத்தத் தீர்மானித்தபோது , விபரங்கள் கேட்க ’சொல்லரசு’ மாமாவையும் மற்ற படைப்பாளிகளையும் சந்தித்தது , இதைவைத்து ’வலை’ என்ற கதையை நான் எழுதி அதையும் அந்த தளத்திலேயே வெளியிட்டது ஆகியவற்றை இப்போது சொல்லத் தோன்றுகிறது. இந்த ’வலை’ எனது முதல் சிறுகதைத் தொகுதியில் இடம்பெறவில்லை. காரணம் நாகூர் ரூமிதான். ‘இது வாணாம்.. டாகுமெண்ட்ரி மாதிரி இக்கிது’ என்றார். ‘நான் எழுதுறது எல்லாமே அப்படித்தானே இக்கிம்ங்கனி’ ‘இல்லே.. இது ரொம்ப மோசமா இக்கிது’.

இந்த ’டாகுமெண்ட்ரி’யில் ஒரு பிரபலமான எழுத்தாளரை மட்டும் நீக்கிவிட்டேன் – பிரச்சினையைத் தொடர விருப்பமில்லாததால். மற்றபடி என் எல்லா கதைகளையும் போல இதுவும் மோசமாகவே இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். என்னை நம்பலாம்.

முதலில் ’சொல்லரசு’ மாமாவின் கடிதத்தைப் படியுங்கள்.

***

23.5.2000

கண்ணியத்திற்குரிய இளவல்களான பேராசிரியர், முனைவர், முஹம்மது ரஃபி, நாவலாசிரியர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சென்னைக்குச் செல்லும்போது மறவாமல் முயற்சித்து நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதியரசர் M.M.I அவர்களை சந்திக்க வேண்டும். அதை அடுத்து, நாகை தந்த நல்லறிஞர், மதிப்பிற்குரிய ஸையிதுனா, M. செய்யது முஹம்மது ஹஸன் சாஹிபு அவர்களை சந்தித்து பேசிட மறவாதீர்கள். வாழும் காலெமெல்லாம் உறவாடி – உரையாடி பயன் பெறுங்கள்.

நமதூரில் வித்துவான் ஜனாப் S.M.A. காதிர் , கவிஞர் ஜனாப் EM. அலி மரைக்காயர், சகோதரர் கவிமணி M.S. தாலிப் சலீம் செய்க், இளவல் கவிமுகில் இஜட். ஜபருல்லாஹ் ஆகியோரை அணுகி, இலக்கிய வட்டத்தை விரிவுபடுத்துங்கள். விளைச்சல் நிறைந்த பயன் தரும்; நம்புங்கள்.

நம் பணி சிறக்க நல்லருள் துணை நிற்க, நாம் துஆ இறைஞ்சுவோம். பிற பின்னர், நேரில் –

நிறைந்த அன்புடன்

மு. ஜாபர் முஹ்யித்தீன்

*

கவனிக்கவும்!

முன்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மக்களில் ஒருவர் விடப்பட்டுள்ளார். தவறாக நேரிட்டது அது. இப்போது நம்மிடையே வாழுவும் முதிர்ந்த வயதினரான – நமதூர் நூல்கடைத் தெருவில் வாழும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜனாப் (லாயர்) முஹம்மது காஸிம் ஆன்மீகத்துறையில் ஈடுபாடு கொண்டவர். மௌளானா ரூமி அவர்களின் மஸ்னவியை மூல மொழியில் பாடக்கூடியவர். நாகை அந்தாதியை நீண்ட காலத்திற்கு முன்பு சிறிய அளவில் பதிப்பித்து தந்தவர் ஆவார். நேரத்தை ஒதுக்கி அந்த பெரியவரையும் கண்டு வந்தால் நிரம்ப செய்தி தெரியவரும்.

முயற்சி முழுமை பெற்று, வெற்றியாளர்களாக நீங்கள் இருவரும் வலம்வர, வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.

நமக்கு – எளியவன் என்னையும் உள்ளடக்கிய – நமக்கு நல்லருள் பொழியுமாறு நாயனிடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் அருள்வானாக!

அன்புடன், துஆவுடன்,

மு. ஜாபர் முஹ்யித்தீன்
அருளகம் , 13 , மிய்யாத்தெரு
நாகூர் – 611002 , நாகப்பட்டினம் மாவட்டம்

***

’வலை’ நாளை ‘திண்ணை‘யில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ். நாளைக்கு என் பிறந்தநாள் + கல்யாண நாள். அதனால் இந்தப் பரிசு. பல சமயங்களில் பரிசே தண்டனையாகப் போவதுமுண்டு! 

நன்றி.

ஆபிதீன்

11 பின்னூட்டங்கள்

  1. 12/03/2011 இல் 18:16

    எல்லாங்கிடக்கட்டும், விடுங்க நானா!
    ரெண்டு விஷேசங்களையும் கொண்டாடுங்க, “கிராண்டா’.
    எல்லாருக்குமா ரெண்டும் இப்படி “இணக்கமா” அமையும்?

    பிடியுங்கள் என் முதல் வாழ்த்துக்களை!
    “WISH YOU A GREAT, FESTIVE SUNDAY TOMORROW”

  2. 12/03/2011 இல் 19:46

    ஆபிதீன் வாழ்த்துக்கள்….! (பிரார்த்தனையுடன்)

    எடுத்த எடுப்பிலேயே சுருட்டிட்டார் உங்களை, மஜீது காக்கா

  3. 13/03/2011 இல் 02:35

    பிறந்த நாள், கல்யாண நாள், வலை வெளியீடு நாள் வாழ்த்துகள்

    சொல்லரசு மாமாவின் கையெழுத்து படிக்க மிகவும் கஷ்டமாகவே இருக்கும். எங்க ஜட்ஜப்பாவின் கையெழுத்தும் தான் மிகவும் மோசமாகவே இருக்கும். எப்போது அவர்கள் எழுதவே மாட்டார்கள். எழுதுவதற்கு கூட உதவியாளரை வைத்து எழுதி அதை நன்றாக படித்து பார்த்து தான் கையெழுத்து போடுவார்கள்..

  4. maleek said,

    13/03/2011 இல் 05:09

    ஓ! இததான் சண்டேன்னா ரெண்டுங்றாங்களா!

  5. Ahmed Mohideen said,

    13/03/2011 இல் 08:38

    பிற‌ந்த நாள் மற்றும் கல்யாண‌ நாள் வாழ்த்துக்கள். நாநா ரெண்டு லட்டு திங்க ஆசையா.

    அன்புடன் – அஹ்மத் மொஹிதின் மற்றும் ரியாஸ்

  6. 13/03/2011 இல் 10:09

    உங்க ‘ரெண்டுக்கும்’ வாழ்த்துகளை இன்று சொல்லிக்கிறேன்.

    // நாகை தந்த நல்லறிஞர், மதிப்பிற்குரிய ஸையிதுனா, M. செய்யது முஹம்மது ஹஸன் சாஹிபு அவர்களை சந்தித்து பேசிட மறவாதீர்கள். // அவர்கள் எனக்கு பெரிய வாப்பா என்பது உமக்கு நான் சொல்லாத விஷயம். அதையும் இப்ப சொல்லிக்கிறேன்.

  7. 13/03/2011 இல் 13:39

    அஸ்மா சார்பாக அனைவருக்கும் நன்றி. ’ரெண்டும்’ இங்கே :

    வலை (2000) – 1
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=11103131&format=html

    வலை (2000) – 2
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=11103132&format=html

  8. 15/03/2011 இல் 05:12

    வலையை படித்து வலையிலேயே விழுந்தும் விட்டேன்… பரக்கத்தா இக்கிது.. சிரிச்சு மாய முடியலை…!

  9. 16/03/2011 இல் 09:16

    வலையில் ‘மாட்டி’க்கொண்டாகிவிட்டது! சிரித்து சிரித்துத்தான் வெளிவரவேண்டும். வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும்போது (நான்), சாலையில் யாராவது ஓடினால், இறைதாசனையோ மறைதாசனையோ பார்ப்பது போல் உள்ளது. இப்பல்லாம் தன்னால சிரிச்சுக்கிறதுல பிரச்சினையே இல்ல தெரியுமோ? ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டால் போதும்!

  10. maleek said,

    16/03/2011 இல் 17:12

    இந்த மாயவலையில் மாட்டிக்கிட்டு வெளியவரவே ரெண்டு நாளாயிடுச்சி!


பின்னூட்டமொன்றை இடுக