நாடகமே உலகம்… – தேஜஸுடன்!

முதல் பகுதி 

நாடகமே உலகம் : காட்சி 6 – தாஜ்

கான் குனிந்து சிரித்தபடி ‘கர்சிப்’பால் முகத்தை துடைத்துக் கொண்டே சொன்னான், “ஓர் உதவி வேண்டும். தேச விடுதலைக்கான உதவி அது! உன்னை நாடி வந்திருக்கிறேன்!”

“வேறு ஏதாவது கேளுங்களேன்… கான்! இப்பொழுதே என் உயிரை கேளுங்கள்… ஒரு நிமிடம்… ஒரே ஒரு நிமிடம் போதும்  தந்து விடுகிறேன்! தேச விடுதலை என்கிற பெயரில் வேண்டாம். அதற்காக உங்களை இழந்த சோகம் இன்னும் என்னை அறுத்துக் கொண்டிருக்கிறது!”

“இல்லை சுகுணா….”

“விடுதலை எதற்காக வேண்டுமென்கிறோம்? சுகந்திரத்துடன் வாழ்வதற்காகத்தானே! இன்றைக்கே நான் அப்படித்தானே  வாழ்கிறேன்! இன்றைய தேதியில், சுதந்திரத்தோடும் பரிபூரணம் கொண்டும் வாழ்பவர்களின் உலகப்பட்டியல் ஒன்று இருக்குமானால் அதில்  நான் நிச்சயம் இருப்பேன்! பின் எதற்காக நான் என் பூரணத்தை சிதைத்துக்கொண்டு, சுதந்திரம் என்கிற பெயரில் சின்னாபின்னமாகவேண்டும்? ‘உன்னை மட்டும் பார்க்காதே… உன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்…. உன் உதவி என்பது அந்தச் சமூகத்திற்காகத்தான்’ என்பீர்கள்! என்னையொத்த வேசிகுலப் பெண்களை நாலுபேர்கள் மாதிரி வாழ அனுமதிக்காத, கடையேற்ற இன்றுவரை வழிகாணாத, திரும்பியும்கூடப் பார்க்காத இந்த முரண்பாடான சமூகத்திற்கு நான் ஏன் உதவ வேண்டும்?” 

“எல்லோருடைய வேதனைகளையும் கலையத்தானே விடுதலை!”

“அப்படியா.. சரி, ஆங்கிலேயனை விரட்டி விடுவோம். பின்னர் இந்நாட்டில் நம் எல்லோருக்கும் முழு சுதந்திரம் கிடைக்கும் என்பதற்கும், சமூகத்தால் சபிக்கப்பட்ட எங்களைப் போன்றோருக்கு விடிவு நிச்சயம் என்பதற்கும் என்ன உத்திரவாதம்?”

“நம்முடைய காந்திதான் நமக்கு உத்திரவாதம்! அவரை நான் தயக்கமற நம்புகிறேன்.”

“காந்தியை இன்றைக்கே உங்களில் பலர் எதிர்க்கிறார்கள்! அவர்களில் யாரேனும் அவரது உயிருக்கு பங்கம் செய்துவிட்டால்! அல்லது…. அவரே மரணித்து விட்டால்..!  பின் நம்புவதற்கு யார் இருக்கிறார்கள்? சொல்லுங்கள்? நம்பத்தகுந்தவர்களென இன்னும் கூட சிலர் இருக்கிறார்கள் என்றாலும்… கேள்விகளற்று நம்பத் தகுந்தவர்களா அவர்கள்?”

“சரியான கோணத்தில்தான் கேட்கிறாய்! பதில் சொல்ல சிரமமான கேள்விதான்! அப்படி எதுவும் ஆகாது என்று நம்பித்தான் ஈடுபாடு கொள்ளவேண்டும்… நம்பிக்கைதானே வாழ்க்கை!”

“நான் கூடத்தான் உங்கள் மடியிலேயே வாழ்வை கழித்து விடலாம் என்று நம்பினேன்…. நடந்ததா?”

“சுகுணா என்னை புரிந்துகொள். நீ மீண்டும் மீண்டும் என்னைச் சாடிக்கொண்டே இருக்கிறாய். உன்னை மட்டுமல்ல, என் மனைவி, மக்கள், உற்றோர், பெற்றோர், பந்துக்கள் என்று எல்லோரையும் துறந்துதான் நாடுநாடு என்று அலைகிறேன். என் ரத்தத்திலேயே ஆங்கில எதிர்ப்புணர்வு இருக்கிறதோ என்னவோ!  உனக்கு துரோகம் செய்து விட்டு ஓடணும் என்று  கனவிலும் நினைத்தவனல்ல! உன்னைப் பிரிந்த அன்றைக்கே சந்தேகத்தின் பேரில் ராணுவத்தினர் என்னையும், நண்பர்கள் சிலரையும் கைது செய்து மராட்டிய மாநிலத்தில் உள்ள ஏர்வாட சிறையில் அடைத்துவிட, யாரிடமும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இரண்டு வருட சித்ரவதை அது! காந்தி எங்களுக்காக ‘யங் இந்தியா’வில் குரல் கொடுக்கவும்தான் விடுதலை கிடைத்து!  வெளிவந்த நாள்தொட்டு இன்னும் முடுக்கி விட்டவனாக இந்தப் பணியில் நான் அலைகிறேன்!”

“உங்களின் சிறைவாசம் குறித்து ஒன்னறை வருடம் கழித்துதான்… சரியான தகவலை நான் அறிந்தேன்.”

“உனக்குத் தெரியுமா? என் மனவானில் கிளர்ச்சியூட்டிய ஒளிக்கீற்று நீ!  இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை மாதிரி ஓர் அழகி எனக்கு மனைவியாக கிடைக்கமாட்டாள்! உன்னைப் பிரிந்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை!” அவன் சொல்லச் சொல்ல அவள் கண்கள் கசிந்தது.

“அடப் பாவி மனுஷா! இத்தனை ஆசை வைத்துக்கொண்டா… என்னைவிட்டுப் பிரிந்தாய்?”  கண்களில் வடிந்த கண்ணீரை  துடைத்துக் கொண்டவளாய் “என்னை மன்னிக்கணும்… கான், ஏதேதோ  பேசிவிட்டேன்… பிரிவின் ஆற்றாமையில்தான் இத்தனை நாளும் இருந்தேன், இன்றைக்கு உங்களது அன்பு மேலும் என்னை வதைத்துவிட்டது!” என்றபடி திரும்பவும் கண்களை துடைத்து கொண்டே, “சொல்லுங்கள்… தேச விடுதலைக்கான உதவி என்றீர்களே…. என்ன மாதிரியான உதவி?”

“காந்தியின் செய்திகளும், விடுதலைக் குறித்த தாக்கங்களும், படிக்காத நம் கிராம மக்களிடம் இன்னும் போய் சேரவில்லை. அதற்காக ஊர்கள் தோறும் நாடகம் நடத்தி அவர்களை எழுச் சியூட்ட என் நண்பர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதில் பங்கேற்க பெண் நடிகைகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால்தான் உன்னைத் தேடி வந்தேன். அதில் நீ பங்கேற்று நடிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் விரும்புகிறார்கள். உனக்கும் சக நடிகர்களுக்கும் பெரிய தொகையாக ரூபாய் எண்பது தர முன்வந்திருக்கிறார்கள்! இனி நீதான் உன் சம்மதம் குறித்து சொல்லணும்!” அவன் சொல்லச் சொல்ல சுகுணா, விழுந்து விழுந்து சிரித்தாள்.

“எனக்கு என்ன நடிப்பு வரும்? அல்லது… பாடத்தான் வருமா? நான் நடித்தால் எவன் பார்ப்பான்?  என்னால் முடியவே  முடியாது. பணத்திற்காகவே என்றாலும், அதற்காக… நான் ஏன் அரிதாரம் பூசணுமாம்? மேடை ஏறணுமாம்? ஆடையை அவிழ்த்து  மஞ்சணை ஏறினால் போதுமே! கான் மன்னிக்கணும்… ‘நான் நடிப்பது இந்த சமூகத்திற்கான சேவை’ என நீ  சொல்லலாம்! அப்படிப் பார்த்தால்…. என் மஞ்சணைக்கு வருபவர்களை, மகிழ்விப்பதும் கூட சமூகத்திற்கானச் சேவைதான்! நீங்கள் சொன்னமாதிரி, என்னுடைய இந்த நிலையேகூட அந்த இறைவனின்  சித்தமாக ஏன் இருக்கக்கூடாது? என்னை என் வழியிலேயே விடுங்கள். நான் வேசியாகவே இருந்து விட்டுப் போகிறேன்! புரிந்து கொள்ளுங்கள் கான்… நிஜத்தில் வாழ்பவள் நான்! எனக்கு நடிப்பு வராது”

“சந்தோஷம்! நான் புறப்படுகிறேன் சுகுணா.”

“கான்… இருங்கள்! இன்னும் நம் சந்திப்பு முடியவில்லை.”

“சிறையில் வேதனையான முறையில் துன்புறுத்தப்படும்  தேசிய கைதிகளுக்கு பாதுகாப்பு வேண்டி,  நாளை மறுநாள் வேலூருக்கு வரும் சென்னை மாகாண கவர்னரிடம் மகஜர் கொடுக்க இருக்கிறோம். அதற்கு கவர்னர் சரியான பதில் சொல்லாது போனால், அவரை எதிர்த்து சத்தியாகிரகம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்! நிறைய பணி கிடக்கிறது… புறப்படுகிறேன்.”

“நான் போக வேண்டாம் என்றால் நீங்கள் இருந்துவிடப் போவது கிடையாது! போகலாம் சற்றுப் பொறுங்கள். நீங்கள் தப்பாக நினைக்கவில்லை என்றால்.. ஒரு சின்ன சந்தேகம்! கிரகம் என்றால்.. புரிகிறது. அது என்ன சத்தியாகிரகம்?” அவள் கேட்ட கேள்வியில் கிண்டல் இழைந்திருப்பதை அறிய சிரித்தவனாக…

“புறப்படுகிறேன்! வேறு ஏதேனும் என்னிடம் சொல்லணுமா?”

“ஆமாம்!”

“சரி சொல்”

“சென்னை பல்கலைக்கழக கோகேலே மண்டபத்தில், சென்ற மாதம் நடந்த என் சதிராட்டத்தை ‘ராயலசீமா கவர்னர்’ ஜார்ஜ் வெலிங்டன் பார்க்க நேர்ந்ததில் மனதைப் பறிகொடுத்து  விட் டாராம்! அவருக்கு ஓர் இந்திய மனைவி வேண்டுமென்றும், அது நானாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம்! நான் சம்மதித்தால்.. என்னை  இங்கிலாந்துக்கு அழைத்து  போய், ராணி அந்தஸ்தோடு, அரண்மனையிலேயே வைத்துக்கொள்கிறேன் என வேண்டியவரிடம் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார்!”

“நீ என்ன பதில் சொன்னாய்!?”

“சம்மதம் சொல்லி விட்டேன்!”

“ஓ..!!”

“இதில் உனக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்குமென்றால் சொல்! உன் காலடி போதும். இங்கிலாந்தும் வேண்டாம், அரண்மனை, ராணி அந்தஸ்து என எதுவும் வேண்டாம். உன்னுடன் கூப்பிட்ட இடத்திற்கு இப்பொழுதே வந்து விடுகிறேன்.”

“என் மீது கொண்ட பிரியத்திற்கு நன்றி சுகுணா…! உனக்கு என் வாழ்த்துக்கள். போய் வா…! நான் புறப்படுகிறேன்.”

“இன்னும்.. நம் சந்திப்பு முடியவில்லை.. கான்! சொல்ல வேண்டிய செய்திகள் இன்னும் உண்டு!”

அவன் புன்னகை பூத்தபடி.. “சொல்” என்றான்.

“நீ தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்றை சொல்லணும்”

“நினைக்க மாட்டேன் சொல்”

“நான் இங்கிலாந்து போய்விட்டால்…. நீ எனக்கு  கொடுத்ததையும் சேர்த்து  இங்கே குவிந்து இருக்கும்  சொத்துகளை  நான் என்ன செய்யப் போகிறேன்… மறுக்காமல்… தயவு செய்து, எல்லாவற்றையும் கான் வைத்துக்கொள்ள வேண்டும்!”

“என்னிடம் உன் அன்பு, கடலை விட பெரியதாக இருக்கிறது! நீ வைக்கும் சோதனையில் நான் தோற்று விடுவேனோ என்று பயமாகவும் இருக்கிறது. சொத்து சுகம் என்று  எல்லாவற்றையும் தாண்டி வந்துவிட்டேன் என்று சற்று முன்னாடி கூட உன்னிடம் சொன்னேனே சுகுணா…!”

“மன்னிக்கணும் கான், சத்தியமாக.. உன்னை சோதனை செய்ய வேண்டி சொல்லவில்லை! உன் இருப்பை கண் கொண்டுப் பார்க்க.. கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்தவன் நீ!  மோட்டார் காரில், சலவைப் புரள, பட்டாடை கோலமாய்  என் வீட்டிற்கு வருகிறபோதெல்லாம்  இந்த ஊரே உன்னைக் கண்கொட்டாமல் பார்த்ததை நீ மறந்திருக்கலாம்! நான்  மறக்கவில்லை. போகட்டும்… எல்லாமும் வேண்டாம்… மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கத்தில் கணக்கில்லாது நீ பட்டயம் பண்ணிக் கொடுத்த அத்தனை ஏலக்காய்  பரப்புகளை மட்டுமாவது திரும்ப எடுத்துக்கொள்! தயக்கம் ஏன்? அது உன்னுடையதுதானே! நீ நன்றாக இருந்தால்தான், நான் உயிரோடு இருக்க முடியும் கான்!

“என்னால் தாங்க முடியவில்லை…. அழுதுவிடுவேன் என்று தோன்றுகிறது. உன்னை விட்டு சொல்லாமல் போனவன் மீது இத்தனை அன்பா?”

“ஒன்னறை வருடம் உன்னோடு இரத்தமும் சதையுமாய் ஒட்டிக்கிடந்தேனே அந்த அன்பு மங்கியா விடும்?  யாரங்கே….. இன்னுமா பையனை அலங்கரிக்கிறீர்கள்….! போதும்…. அழைத்து வாருங்கள்!”

மூன்று  வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் ஷெர்வானி அடை அலங்காரத்தோடு,  கம்பீரமானதோர்  நடையில்  அவர்கள் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் இடம் நோக்கி வந்தான்.

“யார் உன் மகனா?”

“ஆமாம்!”

மகிழ்ச்சியில் கானின் முகம் மலர்ந்தது. எழுந்து யோசித்தவனாக, தனது இடுப்பை தொட்டுத் தடவினான். வெள்ளியினாலான அரணைகயிறு தட்டுப்பட்டது. அதைக்கழட்டி இரு முனைகளையும் முனைந்தான். அதை அந்தச் சிறுவனின் கழுத்தில் அணிவித்து, தூக்கி உச்சி முகர்ந்தான். பையனை இறக்கி விட்டதும், அவன் சிரித்துக்கொண்டே அம்மாவிடம் ஓடினான்.  அவளும் அவனை வாரி அணைத்துக் கொண்டு…

“என்னடா என் செல்லமே? ஏன் இப்படி சிரிக்கிறாய்?”  

“என்னமா இது?” என்று, கான் கழுத்தில் போட்ட மங்கலான வெள்ளிச் செயினை காட்டினான்!

“வைரத்தையும் வைடூரியத்தையும் இழைத்து, நான் உனக்கு செய்து போட்டு, பார்த்து ரசித்த, அந்த ஆபரண மாலைகளைவிட உயர்வானது இது! என் கண்ணே! கழுத்தைவிட்டு கழட்டாதே.”

“சரிம்மா….” என்றுவிட்டு அந்தச் செயினை புன்னகைப் பூக்க பார்த்து கொண்டே இருந்தான்.

“உன் பையன் ரொம்பவும் சூட்டிகையாக இருக்கிறானே…! அவனின் நடை, சிரிப்பு, ஜாடை எல்லாம் என் சின்ன வயசை எனக்கு ஞாபகப் படுத்துகிறது சுகுணா!”

“நிச்சயமாக ஞாபகப் படுத்தத்தான் செய்யும்…. ராஜவம்சத்தின் எச்சமல்லவா…. இவன்….!”

“நீ என்ன சொல்ல வருகிறாய்….? அப்படி என்றால்…..!”

“ஆம்…. அவன் நம் மகன்…..!”

“பிள்ளை தரித்ததை நீ சொல்லவே இல்லையே?”

“பிள்ளைத் தரித்திருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்யும் முன்னமேயே நீங்கள் என்னை பரிதவிக்க விட்டுப் போய்விட்டீர்களே! எங்கே தேடி.. எங்கே கிடைத்தீர்கள்? தூரதேச சிறை வாசத்தில் அல்லவா இருந்தீர்கள்!”

மகனை வாஞ்சையாய் பார்த்தபடி மகிழ்ச்சி கொப்பளிக்க…., “என் மகனின் பெயரென்ன?” என்றான்

தான் சொன்ன மாத்திரத்தில் எந்த ஐயமும் கொள்ளாமல், மகனை ஏற்றுக் கொண்டதில்… சுகுணாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “அவனது முப்பாட்டன் பெயரைதான் வைத்திருக்கிறேன்…!”      

“திப்பு?”

“சர்கார் சையத் அலி முகம்மது கான் திப்பு!”

கானின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! ‘திப்பு…!’ என்று தழதழத்த குரலில் கூப்பிடவும், சிறுவன் ஓடிவந்து அவனிடம் ஒண்டிக் கொண்டான். திரும்பத் திரும்ப  தன் மகனின் கன்னத்தில் முத்தங்களைப் பொழிந்தான். அதை கண்கொள்ளாக் காட்சியாய் பார்த்தபடி  ஆனந்தக் கண்ணீரோடு விக்கித்து நின்ற சுகுணா, கானிடம் ஜாடைகாட்டியபடி  “இப்படி  முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றீர்களே… மகனின் தேஜஸ்-ஐ பார்க்க மாட்டீர்களா?” என்றாள்

கான் சிரித்துக் கொண்டே… பையனை பக்கத்தில் கிடந்த மேஜை மீது நிற்க வைத்து கால்சராயோடு ஆண்குறியில் முத்தமிட்டு, நாடாவின் முடிச்சை அவிழ்த்துப் பார்க்கவும்… அவனது விழிகள் அகண்டது!

” ‘கத்னா’ செய்து மூன்று மாதமாகிறது. பார்த்தீர்களா… அதன் தேஜஸை? நீங்களும் தோற்றுப் போவீர்கள்!” என்று  பெருமிதம் கொண்ட சுகுணா.. “நம் மகனை அடையப்போகும் பெண்.. நிச்சயம் பாக்கியசாலி!” என்றாள்.

கான் தொடர்ந்து சிரித்தவனாக பையனை இறுக அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டு… “பத்திரமாகப் பார்த்துக் கொள்!” என்றான்.

“அந்த கவனர் இங்கிலாந்துக்கு அழைத்தபோது ரொம்பவும் யோசித்த நான்,  திப்புவின் நல்வாழ்வு பொருட்டே ஒப்புக்  கொண்டேன். இந்த சமூகத்தால்  எந்த ஒரு அவதூறும் தீண்டாத தூரத்திற்கு  அவனை அழைத்துப் போவதே சரியெனப் பட, சம்மதித்தேன். அங்கே கீர்த்தி பெற்ற எஜிப்ஸியன் மதரஸாக்கள் இருக்கிறதாம்…. அதில் திப்புவை சேர்த்து விடலாம் என்று அந்த கவர்னர்தான் சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய ஆயத்தப்பணிகளையும் செய்கிறார்! சொன்னால்… நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவர்தான்  ஹைதரா பாத்திலிருந்து முல்லாக்களையும், கத்னா  செய்பவரையும் இங்கே வரவழைத்துத் தந்தார்! திப்புவின் கத்னா வைபவம்தான் எத்தனை சிறப்பாக நடந்தது!”

“என் வாழ்வில் மறக்க முடியாத கணம் இது! இறைவன் என்னை ரொம்பவும் ஆசீர்வதித்திருக்கிறான்! ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளும்தான் இனியென்னை என்ன செய்யும்? மீண்டும் பையனை தூக்கி ஆசை தீர முத்தமிட்டுவிட்டு, சுகுணா…நான் புறப்படுகிறேன்” என்றான்.

“இருங்கள்… இன்னும் நம் சந்திப்பு முடியவில்லை!  நீங்கள் கேட்டு வந்த  உதவியை  ஒப்புக்கொள்ள என்னாமல் இயலாமல் போனாலும், நன்றாகப் பாட, ஆட, நடிக்கவும் தெரிந்த என் சினேகிதிகள் சிலர் உண்டு… அனுப்பித் தரட்டுமா?”

“அப்படியா… மிகுந்த சந்தோசம்!”

“ஒன்றுக்கு நான்கு பேர்களை அனுப்பித் தருகிறேன் போதும்தானே!”

“ரொம்ப நன்றி…. எப்பொழுது அனுப்பி வைக்கிறாய் சுகுணா?”

“நாளைக்கே அனுப்பி உங்களை சந்திக்கச் சொல்கிறேன்! இன்னொன்றை சொல்ல மறந்து போனேன், அவர்களும் ‘காந்திபைத்தியம்’தான்! யாரோ.. சுப்ரமணிய பாரதியாமே…! பாடல்கள் எல்லாம் புனைபவராமே…! அவரது பாடல்களைதான்  சதா காலமும் இவர்கள் பாடிக் கொண்டு திரிகிறார்கள்!”

“உன் தோட்டத்தில்தான்  எத்தனை வாசனை மலர்கள்!!  இதை நான் எதிர்பார்க்கவே இல்லை… விடை கொடு சுகுணா,  நான் வருகிறேன்…”

‘உன் தோட்டத்தில்தான் எத்தனை வாசனை மலர்கள்!’ என்று அவன் சொன்ன போது அடக்க முடியாமல் சிரித்தாள். சந்தோசம் கொள்கிற அளவில் அவனுக்கு உதவ முடிந்ததில், அவள் மனம் கொண்ட நிறைவை அவளது உடல்மொழி வெளிப்படுத்தியது. தான் பெருமிதம் கொண்டு நிற்கும் அக் கணத்தை உணர்ந்தவளாய் தலைநிமிர மலர்ந்தாள்.

“இருங்கள்…. ஒரே ஒரு நிமிடம்! உங்களிடம் நான் இரண்டு கோரிக்கைகள் வைக்கணும்! பயப்பட வேண்டாம்! உங்கள்  கொள்கையில் குறுக்கிடுபவை அல்ல! சரியா?”

“சம்மதம்!”

“திப்புவிற்கான மதரஸா படிவங்களில், தந்தைக்குரிய இடத்தில் உங்களது பெயரை இட்டு நிரப்பிக் கொள்ளட்டுமா…..?”

“சுகுணா நீ என்னைக் கொன்று விட்டாய்… என்ன கேள்வி இது? நான்தானே… அவன் தந்தை!”

“மன்னியுங்கள் கான்…. சிலநேரம் இப்படி பைத்தியக்காரி ஆகிவிடுகிறேன்….! அடுத்ததையும் கேட்டு விடட்டுமா?” அவள் கண்களில் இப்பொழுது அதிகத்திற்கு அதிகமாக கண்ணீர் கசிந்தது.

கான் சிரித்துக் கொண்டே, “முதலில் அழுவதை நிறுத்து… கேள் சுகுணா…?”

“உங்களை இப்பொழுது…. இங்கேயே… கட்டித் தழுவி நான் முத்தமிடலாமா?”

அந்த நட்ட நடு ஹாலில், எல்லோரும் பார்க்க.. கான் அவளை அருகில்  அழைத்து இறுகத் தழுவி அவளது நெற்றியிலும்,  கன்னத்திலும் முத்தமிட்டான்! அவளோ.. தன்னிலை  மறந்து, அவனது நெற்றி, கன்னம், உதடு தொடங்கி கானின் மேனியெங்கும் முடிவற்ற முத்தத்தால் ஈரமாக்கிக்கொண்டிருந்தாள்! பணியாட்கள் அத்தனைபேர்களும் அதைப் பார்த்து விக்கித்து சிலையானார்கள்! தூண் மறைவில் நின்ற கனகாபாயின் கண்களில் தாரைதாரையாய் ஆனந்தக் கண்ணீர்!  அரங்கின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்தபடி இருளாகிக்  கொண்டிருந்தது. சதிரின் இசை அமர்க்களப் படுத்தியது.  பார்வையாளர்களின் கைத்தட்டல் இசையோடு கூடிக்கொண்ட நிலையில் அந்தக் காட்சி முடிந்தது. 

இந்த முத்தக் காட்சியில்  மட்டுமல்லாது, சுகுணா வந்தது முதலே…அவளது ஒவ்வொரு வசன வெளிப்பாட்டிற்கும் பார்வையாளர்களின் அபரிமிதமான வரவேற்பும், கைத்தட்டல்களுமாக எழுந்து கொண்டே இருந்தது.

எனக்கென்னவோ இந்தக் காட்சி நவீன நாடகத்திற்கு பொருந்துவதாக தோன்றவில்லை. குறியீடாகவும், பூடகமாகவும் போய் கொண்டிருந்த நாடகத்தின் இடையே இப்படியொரு தெளிவான புரிதலோடு ஒரு காட்சி என்பது நெருடியது. அது, அதீத யதார்த்தம் சார்ந்த காட்சி என்றாலும், அதன் உள்ளே பேசப்படும் சங்கதிகள் ஏராளம்தான்! காட்சியின் பெரும்பகுதி   கவிதையாகவே இருந்ததையும் மறுக்க முடியாது. என்னதான் அந்தக் காட்சி நிஜத்தின்மேல் நின்றாலும் கூட, வாழ்வின் யதார்த்தம் சார்ந்ததாக இல்லை. காலம் தோறும்,தொட்டுத் தாலி  கட்டும் மனைவியின் அன்பே கேள்விக்குறியாகித் தொங்குகிறபோது, தன்னை ஒரு கட்டத்தில் தொட்டுவிட்டவனிடம் அல்லது ஆண்டு அனுபவித்தவனிடம் ஒரு வேசி காட்டும் இத்தனை அன்பு என்பது யதார்த்தம் மீறியதுதான்! தன் சார்ந்த பெண்களிடமிருந்து அன்புக்காக ஏங்கும் பார்வையாளர்களை குளிரச்செய்யும் நாடகத்தனமான காட்சியாக இதைக் கணிக்கலாம்! 

‘பார்ப்பதே நாடகம் தானே..!’ மண்டைக்குள்ளே என்… பட்க்ஷி! எங்கே போய் சொல்ல! 

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

7 பின்னூட்டங்கள்

 1. 22/01/2011 இல் 20:01

  தாஜ்….! Buetiful, marvellous. உங்களை யாருடனும் ஒப்பிடத் தாயாராக இல்லை.

  You are UNIQUE

 2. 22/01/2011 இல் 23:01

  நிறைவான எழுத்து.அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் தாஜ்.

 3. maleek said,

  23/01/2011 இல் 01:23

  தாஜ் அழகு—ஆக்ராவுக்கு சீர்காழிக்கும்!

 4. 23/01/2011 இல் 10:31

  Buetiful, marvellous – Repeat

 5. 23/01/2011 இல் 11:01

  அழகும் எளிமையுமான எழுத்தும் கருத்தின் ஆழமும் வாசிப்பின் உச்சசுகம். ஒரு பகுதியே படித்தாலும் நிறைவான உணர்வு

  கரெக்ட் மாலிக்! தாஜ் அழகுதான்
  (யமுனை) நதியோரம் இருந்தாலும்
  (சீர்காழி-விளந்திர) சமுத்திரத்தில் இருந்தாலும்

  (திருச்சியில் ஒரு டூப்ளிகேட் தாஜ் வேறு இருக்காம், இப்ப! பாத்துக்குங்க)

 6. 24/01/2011 இல் 09:32

  பிரியத்திற்குறிய…
  ஹமீத் ஜாஃபர்/
  நூருல் அமீன்/
  மாலிக்/
  அரபுத் தமிழன்/
  மஜீத்
  தவிர,
  என் ஆபிதீனுக்குமாக
  என் அன்பும் நன்றியும்.
  வேறென்னச் சொல்ல…
  – தாஜ்.

 7. 20/03/2013 இல் 04:40

  முதல் ஐந்து பகுதிகளைப் படிக்க வேண்டும். ஆரம்பகால வாசிப்பின் அகிலன், நா.பா. தாக்கமோ… கடைசிப் பத்திகள் எழுதியவருடையதா, ஆபிதீனுடையதா என்று தெளிவுதரவில்லை என்றாலும், இந்தப் பகுதி மட்டும் முழு நாடகமெனப் படித்தால், நாடக ஆசிரியனே இப்படியொரு உத்தியைப் படைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s