ரியாத்-இல் வெந்து கொண்டிருந்த நேரத்தில் உள் மனதில் “நாம் ரொம்ப புத்திசாலியாக்கும்”னு ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னே? ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கோம்ல? எம்புட்டு வாத்தியார்ங்கெல்லாம் ‘அப்பப்ப’ இவன் ரொம்ப புத்திசாலின்னு சொல்லக்கேட்டு அப்புடியே வானத்துல பறந்துருக்கோம்? ஏதோ நம்ம கெட்ட நேரம், இந்த பாலைவனத்துல வந்து மட்டையடிக்கிறோம்னு ரொம்ப நல்லாத்தான் நம்பிக்கிட்ருந்தேன்….நண்பர் தாஜ்கிட்ட வந்து சேர்ற(மாட்ற)வரைக்கும்.
ரெண்டாவது வருஷம் chemistry படிக்கும்போது எல்லார்மாதிரியும் ‘நார்மலா’த்தான் இருந்தேன், பாத்ரூம்ல தன்னால பாடிகிட்டு. என்னமோ யூத் ஃபெஸ்டிவல்னு சொல்லிட்டு, யுனிவெர்ஸிடில இருந்த 20 காலேஜும் வந்து இறங்கிருச்சு, கலர் கலரா. பலவிதமான நுண்கலைப்போட்டிகள். ரெண்டு வருஷத்துக்கப்புறம் காயடிச்சு விரட்டப்போறாங்கன்னு தெரியாம ரொம்ப சந்தோஷமா சுத்தித்திரிஞ்ச நேரம்.
மிமிக்ரி போட்டில அவனவன் ஆடு மாடு மாதிரி கத்திகிட்டுருந்தானுங்க. (ஒருத்தன், சிலோன் ரேடியோ கே. எஸ். ராஜா மாதிரி குரல்ல ஒரு சினிமா விளம்பரம் படிச்சான்) திடீர்னு ஒரு பையன், திருநெல்வேலி காலேஜாம், மேடைல ஏறி, பல பாடகர் குரல்ல பாடுறேன்னு சொல்லிட்டு, ஃப்ளாட்டா ஒரே குரல்ல, ஒவ்வொரு சினிமா பாட்டுல ஒரு ‘பாரா’ பாடிகிட்டு இருந்தான். இதுக்கு நாம பலமடங்கு தேவலையேன்னு, நம்ம கோணபுத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு.
ஸ்டேஜுக்கு பின்னால போய் விசாரணை:
1. இன்னும் எத்தனை போட்டியாளர்கள் பாக்கி? 15 பேர்
2. போட்டி incharge யாரு? Commerce Asst.Prof. திரு. ராமசாமி
இவர் எனக்கு கொஞ்சம் பழக்கம். பஸ் ஸ்டாப்ல ஒருநாள் பக்கத்துல வந்து நின்னார். ஸ்கூட்டர் என்னாச்சு சார்னு கேட்டேன். ஒர்க் ஷாப்ல விட்ருக்கேன்னார். அப்போதுல இருந்து என்னய பாத்தா சிரிப்பார், ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவார். அன்னைக்கு மாட்னார். போய், சார் ஒரு போட்டில கலந்துக்கணும்னேன். அப்டியா? பரவால்லயே, உனக்கு என்னய்யா தெரியும்? எந்த போட்டில கலந்துக்கிறே? இல்ல சார், இந்த மிமிக்ரி போட்டில..தா..ன்…..னு இழுத்தேன். வள்ளுனு விழுந்தார். (ஏற்கனவே அவரை காட்டுராமசாமின்னு பசங்க செல்லமா, செல்லமாத்தான், சொல்லுவாங்க) விளையாட்ரியா? என்ட்ரி எல்லாம் க்லோஸ் ஆயி ஒரு வாரம் ஆயிருச்சு. போய்யா அந்த பக்கம். ஸார், இன்னும் 15 பேர் பாக்கி இருக்காங்க, லிஸ்ட் உங்ககிட்டதான் இருக்கு,சேத்துக்கிங்க சார், நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க சார்னு, கெஞ்சுனேன். அழுதிருவனோன்னு அவர் பயந்துருக்கணும், மூணு ரூபாய் வாங்கிட்டு, ரசீது போட்டுட்டு, அடுத்த நாலாவது ஆளா, மேடையில ஏத்தி விட்டுட்டார்.
அந்த திருநெல்வேலி பையன் செஞ்சதை நான் பண்ணேன். அன்னைக்கு முழுநாளும் தெரிஞ்சவன், தெரியாதவன், தெரிஞ்ச,தெரியாத பேராசிரியர்கள்னு ஒரே பாராட்டு மழை. அதுக்கப்புறம் காலேஜ் ஃபங்ஷன்ல எல்லாம் ஒண்ணு ரெண்டு பாட்டு. மூணாவது வருஷம் முடிஞ்சதும் ஒரு லோக்கல் ஆர்க்கெஸ்ட்ரால சேந்து லூசு மாதிரி சுத்துனேன். சுதி, தாளம், டைமிங், ஓபன் பண்ணாம பாடணும், தொண்டையில இருந்து பாடக்கூடாது, அடி வயித்துல இருந்து பாடணும்னு ஆளாளுக்கு அட்வைஸ். அதுக்கப்புறம் “எல்லாம்” முடிஞ்சு, சவூதில போய் பொத்துன்னு விழுந்து, தாஜ் முன்னால எந்திருச்சா, மனுஷன் கொஞ்சம்கூட அலட்டிக்கிராம பேசிப்பேசி, என்னய ஒரு அரை லூசு லெவலுக்கு கொண்டுவந்துட்டார். பின்ன? என்னோட இன்டல்லிஜென்ஸ் என்ன, ஜென்ரல் நாலட்ஜ் என்ன, எல்லாத்தயும் தூக்கிப்போட்டுட்டு, எலிமென்ட்ரி ஸ்கூல்ல சேத்துவிட்டுட்டாருல்ல? (கணையாழி படிய்யா..)
அதுதான் போகுது, என்னோட ‘இசைஞான’த்தையாவது ஏத்துகிட்டு இருக்கலாம். இல்ல, ஏத்துக்கிறாமயாவது இருந்திருக்கலாம். மறுபடி அதுலயுமா என்னை அரை லூசாக்கணும்? ஒருநாள் சாயிந்தரம் ‘பத்தா’வுக்கு போகும்போது, (வேற எதுக்கு மலையாள சினிமா காஸெட் வாங்கத்தான்), யோவ், மத்தியானம் ஒரு பாட்டு கேட்டேன்யா, இதுக்கு பேரு “கஸல்”, ஒரு பாகிஸ்தானி பாடகர் பாடிருக்கார். கேட்டுப்பாரு, அருமையா இருக்குய்யான்னு தூபத்தை போட்டுட்டு, காஸெட்ட அவர் வண்டிலயே போட்டு கேக்க சொன்னார்.
அன்னிக்கு கலங்குன மூளை இன்னும் தெளியல. அந்த ஒரு கஸல் படுத்துன பாடு கொஞ்சநஞ்சமில்ல. ‘அந்த பாடகர்’ மட்டுமில்லாம, தலத்அஸீஸ், அன்னிக்கு யாருக்கும் தெரியாம இருந்த ஹரிஹரன், ரூப்குமார் ரத்தோட், வினோத் ரத்தோட், பங்கஜ் உதாஸ், ஜக்ஜித்(சித்ரா)சிங், பூபிந்தர்(மிட்டாலி)சிங், இதுபோக மெஹ்தி ஹஸன், ஆபிதா பர்வீன், அனூப் ஜலோட்டா அது இதுன்னு வெறி புடிச்சு அலைஞ்சு, பாதி புடிச்சு பாதி புடிக்காம, கடைசில, ஜக்ஜித்சிங்&சித்ரா அப்புறம் புபிந்தர்சிங்&மிடாலி, குலாம் அலின்னு, செட்டில் ஆயிட்டேன். இன்னிக்கு 20 வருஷமா, இவுங்க பாட்டைப் பத்தி யாராவது பேசுனா அவுங்க எனக்கு நெருங்கின சொந்தக்காரங்க மாதிரி. எங்க இவுங்க கஸல் கேட்டாலும் ஏற்கனவே அதை 1008 தடவை கேட்டுருந்தாலும், நின்னு கேட்டுட்டு,சேந்து பாடிட்டுப்போவேன்.
இதுல என்ன விசேஷம்னா, ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் உருது/ஹிந்தி ல ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது. (இப்போ எப்டியும் 25% தெரியும்ல?)ஏதாவது காஸெட் வாங்கனும்னாகூட நல்லா சொல்லி கேக்க தெரியாது. இப்போ மாதிரி அப்போல்லாம் புடிச்ச கஸல இன்டெர்நெட்ல தேடி, கேக்க முடியாது. ஒரு புபிந்தர்சிங் கஸல். 10 வருஷமா தேடுனேன். ரெண்டு வரிதான் தெரியும். கடைசில, ரெண்டு வருஷத்துக்கு முன்னால வியட்னாம் ஹனோய்ல இருக்கிற ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரென்ட்ல கேட்டேன். அங்கேயே அரைமணி நேரம் இருந்து ஓனர் வந்தவுடனே, ஆல்பம் பேரு கேட்டு, கண்டுபுடிச்சேன். அதையும் இங்க இணைச்சுருக்கேன். கேட்டுப்பாருங்க. (ரமளான் கழிச்சு கேக்குறது உசிதம்!!!!)
Download
சிங்கப்பூர் முஸ்தஃபா சென்டருக்கு பக்கத்துல ஒரு ஹோட்டல்ல கஸல் பாடுற ஒரு நேபாளி ஜோடி, என்னோட request ஒண்ணு கூட பாட முடியாம, அந்த ஆளு எந்திரிச்சு எங்கிட்ட வந்து, சாரி சொன்னார், பாவம்.
என்னய இந்த நிலமைக்கு ஆளாக்குனது:குலாம் அலி (ஆல்பம்:ஆவார்கி. கஸல்: ஹங்காமா ஹை க்யூங்)
இணைச்சுருக்கேன். கேளுங்க, பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
ஆனா பாருங்க, என்னய அரைலூஸா ஆக்கிட்டு, தாஜ் தப்பிச்சுக்கிட்டார். பயங்கரமான ஆள். என்னோட பழைய “இசைப்பயண”த்தப்பத்தி அவர்ட்ட சொல்லிருந்தும், எங்க ஒரு பாட்டு பாடிக்காட்டுய்யான்னு சொல்லலைன்னா பாத்துக்கங்களேன்?
ஒரு குரல்: தாஜ் அரைலூஸாக்கிட்டாருன்னே சொல்றீரே, அதுக்கு முந்தி நிம்பரு என்னவா இருந்தீரு?
பதில்: முழு லூஸு!
*
நன்றி : ‘லூஸு’ மஜீத்! | amjeed6167@yahoo.com
*
Enjoy : Ghulam Ali’s Hangama Hai kyon barpa (Youtube)
மேலும் பார்க்க : பாகிஸ்தானிய இசைத் தூதர்கள் – விக்கி
ஜமாலன் said,
30/08/2010 இல் 12:27
நீங்க பாடுவீங்களா? கஸல் அது இதுன்னு ஏதெதேப சொல்றீங்க. எனக்கு “என்பெரு மீனாகுமாரி என் ஊரு கன்யாகுமாரி“தான் பிடிக்கும். அந்த கன்யாகுமாரி இல்ல. இதையாவது ரமதானில் கேட்கலாமா?
abedheen said,
31/08/2010 இல் 12:44
வன்மையாக கண்டிக்கிறேன். கோரிப்பாளையம் குத்துப்பாட்டு கேட்கவும்!
மஜீத் said,
30/08/2010 இல் 17:40
நன்றி ஜமாலன்! உங்களோட மீனாகுமாரிக்கு உள்ளாற இருக்குற,”பம்பரக்கண்ணால” நம்ம சரக்குத்தான். அப்போதைய master piece !! நல்லா கேக்கலாம், ரமதான்லகூட (அதான் சொல்லிட்டன்ல, பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லன்னு?)
ஒ.நூருல் அமீன் said,
30/08/2010 இல் 21:53
தன்னுடைய லூஸ் தனங்களை தான் விளங்கி இருப்பது தான் தெளிவானவர்களின் அடையாளம். அந்த வகையில் நீங்கள் மிகவும் தெளிவான மனிதர் (நாகூர், நாகப்பட்டனத்துக்குள்ளே உட்டு கொடுக்க முடியுமா?.)
மஜீத் said,
30/08/2010 இல் 23:15
நன்றி. நாகூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் எங்க ஊர்ல இருந்து த்ரூ பஸ் போகுது. அதுதான் எனக்கும் உங்க ஊருக்கும் உள்ள சம்பந்தம். வேணும்னா, என்னையும் சேத்துக்குங்க, தாராளமா. ஏற்கனவே எனக்கு காதுல இருந்து புகையா வருது (எவ்வளவு பேரு ‘தெளிவா’ இருக்காங்க இந்த ஊர்ல இருந்து?)அதுவாவது நிக்கட்டும்
நாகூர் ரூமி said,
30/08/2010 இல் 22:09
நான் ஆபிதீன் தான் இதை எழுதினது என்று முதலில் நினைத்தேன். எங்கள் அனுபவம் மாதிரியே இருக்கேன்னு…நானும் ஆபிதீனும் ஹரிஹரனின் கஜல் கா மவ்சம் (மோசமல்ல, மோஸம்னா உர்துல வசந்தம்னு அர்த்தம்) எல் பி ரிகார்டை எக்மோரில் வாங்கி, அவன் குரலைக் கேட்டுவிட்டு அதோடு இன்னொரு குரலை இணைக்கக் கூடாதுன்னு முடிவெடுத்து, சீசன் நிஜாம் நானாவிடம் கொடுத்து ஒரே கேசட்டில் இரண்டு பக்கங்களும் அவனுடைய அந்த ஆறு பாடல்களை மட்டுமே ரிகார்ட் செய்யச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தோம், மகிழ்கிறோம்.
புபிந்தரின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த இணைப்பில் இருக்கும் இந்த போத்தல் ஷராபு கீ என்ற பாடல் ரொம்ப சுமாராக உள்ளது. இதற்கு பதிலாக,நண்டு படத்தில் — இளையராஜா இசை — கேஸே கஹூம் என்ற அவரது பாடலைக் கேட்டுப் பாருங்கள்
மஜீத் said,
31/08/2010 இல் 18:27
பகிர்வுக்கு நன்றி. It itself is a great compliment indeed.
கேஸே கஹூம் கேட்டேன். ரொம்ப நாளைக்கப்புறம். பெரிய வித்தியாசம். அப்போது எனக்கு அது எங்க ஊர்க்கலைஞன் மகேந்திரன் அவர்களின் படத்தில் வரும் just ஒரு ஹிந்திப்பாட்டு. புபிந்தர்சிங் யாருன்னும் தெரியாது. இளையராஜா மட்டுமே தெரிந்தார். இந்த பாடலில் இவர் குரலில் கொஞ்சம் கூட ‘கனம்’ கிடையாது; ஆச்சரியம்! இவர் பாடும் கஸல்களாகட்டும் (க்யா சீஸ் ஹை ஷராப்(பு)ஸரா, நஹீ ஹை ஃபிக்ர் முஜே), சினிமா உருப்படிகளாகட்டும் (சூரஜ் முகி, கினாரா) இல்லை இரண்டுக்கும் நடுவிலுள்ள ‘நக்ஹ்மா’ வாகட்டும் (நஸர் நே நஸர்சே, தில் நே கியா த யாத்(து)அபி) குரல்ல நல்ல வெய்ட் இருக்கும். இவ்வளவு லைட்டான குரலில் அதுவும் ஒரு தமிழ்ப்படத்துக்கு பாடியதைச் சுட்டியமைக்கும் நன்றி
vanjoor said,
31/08/2010 இல் 01:22
கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.
சுட்டி:-
உண்மையானது குர்ஆனா? பைபிளா?
…………….
தாஜ் said,
03/09/2010 இல் 13:08
நண்பர் மஜீதை
பாராட்ட வார்த்திகளே இல்லை.
இசைக் குறித்த அவரது ஆவல் மிகுந்த ஆர்வத்தை
மிக வசீகரமாக எழுதி இருக்கிறார்.
இடையிடையே நான், அவருவது
அவரது அன்பின் அடையாளம் மட்டுமே.
அவரை சந்தித்த வேளையிலேயே அவரது,
திறமை/ அறிவின் தெறிப்பு இரண்டுமே
விசேசம் கூடி இருந்ததைக் கண்டவன் நான்!
அவரது திறமை தொடர்ந்து எழுத்தில்
பிரதிப்பலிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.
– தாஜ்
chandru /RVC said,
24/12/2010 இல் 16:48
மஜீத் அண்ணா,உங்கள் இசை அறிவு ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். எனக்கு பெரிதாக இசையறிவு இல்லை எனினும் நல்ல இசை என்னை நிறுத்திவிடும். தில்லி 6 – ரஹ்மானின் கைவண்ணத்தில் நான் பெரிதும் ரசித்த ஆல்பம். மேலும் கசல் நோக்கி நகர்கிறேன்.
மஜீத் said,
01/01/2011 இல் 17:34
Thanks Chandru!