குஸ்தி : கிங்காங் Vs தாராசிங்

சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சிறுவயதில் படித்து ரொம்ப சிரித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தின் கதை மாதிரி இருக்கும். முழுக்க ஞாபகம் இல்லை. சும்மா அவர் பெயரை இன்று கூகிளிட்டபோது கீழ்க்கண்ட சுவாரஸ்யமான தகவல் வந்தது. எழுத்தாளர் சாவி  பற்றி ராணி மைந்தன் எழுதிய புத்தகத்தின் பகுதிகள் – அப்புசாமி டாட் காமிலிருந்து. பதிகிறேன். நீங்கள் பாட்டுக்கு எதையாவது தொடர்புபடுத்திக்கொண்டு சிரிக்காதீர்கள். சீரியஸான விஷயங்களுக்கும் சிரித்தவர்கள் நீங்கள். இன்னொரு சீரியஸான விஷயம் : நாளை கவிஞர் தாஜ் கதை ஒன்று  வெளியாகும்!

*

சாவி நடத்திய மல்யுத்தம்


ஒருநாள் கிங்காங்கை சாவியும் சின்ன அண்ணாமலையும் சென்னை மவுண்ட் ரோட் அம்பாஸிடர் ஹோட்டலில் – இப்போது இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி உள்ள இடம் – சந்தித்தார்கள். அன்று மாலை சென்னையில் நடக்க இருந்த நிகழ்ச்சி பற்றி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.

அதன்படி, ஐந்தாவது ரவுண்டில் தாராசிங்கை கிங்காங் வலுச்சண்டைக்கு இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். தாராசிங் ஆவேசமாக மீண்டும் மேடை ஏறி மாமிச மலை போன்ற கிங்காங்கைத் தன் இரு கைகளாலும் தலைக்கு மேலே தூக்கி மூன்று முறை தட்டாமாலை சுற்றிக் கீழே போட வேண்டும். கிங்காங் ஒன்றும் இயலாதவராக மல்லாந்து கிடப்பார். அவர் மீது தாராசிங், கம்சன் மீது கிருஷ்ணன் போலப் பாய்ந்து அமர்ந்து அவர் நெற்றில் ரத்தம் கசியும் அளவுக்கு ஓங்கி அடிக்க வேண்டும்.

கிங்காங் நெற்றியில் இயற்கையிலேயே மூன்று மடிப்புகள் உண்டு. அந்த மடிப்புகளுக்கிடையே வரிவரியாக ஆழமான மூன்று கோடுகள். அந்தக் கோடுகளை முன்கூட்டியே ரேஸர் பிளேடால் லேசாக ரத்தம் கசியும் அளவுக்குக் கீறி, பவுடர் போட்டுத் துணியால் ஒற்றி விட்டுவிடுவார் கிங்காங். சண்டை நடக்கும்போது தாராசிங், கிங்காங் நெற்றியில் பட்பட் என்று ஓங்கி அடிக்க, அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியாகும்.

அந்த ரத்தத்தை தாராசிங் தன் வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்து குறுக்கே வரும் ரெ·பரியின் – அவர் பெயர் வாங்பக்லி – பனியன் மீது அப்பிவிடுவார். ரெ·பரியின் அந்த வெள்ளை வெளேர் பனியன் மீது படிகின்ற ரத்தம் சூரிய ஒளி போன்ற இரவைப் பகலாக்கும் ‘·ப்ளட் லைட்’ வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிய, இரண்டு பேரும் உண்மையிலேயே கடும் ஆவேசத்தில் சண்டை போட்டுக் கொள்வதாகவே ரசிகப் பெருமக்கள் நம்பி விடுவார்கள்.

திட்டமிட்டபடியே அன்று மாலை ரெ·பரி பனியனில் ரத்தம் அப்பப்பட்டபோது ரசிகர்கள் நரம்புகள் முறுக்கேற கூச்சலிட்டார்கள். கிங்காங் தன் பங்கிற்கு ரெ·பரி மீது பாய்ந்து அவரது பனியனைப் பிடித்திழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அவ்வளவுதான். ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது. ”கிங்காங், பனியனையே கிழித்து விட்டார். உண்மையாகவே இது அசல் சண்டைதான்’ என்று ரசிகர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.

பனியன் விலை வெறும் எட்டு ரூபாய்தான். ஆனால் அன்று ஆன வசூலோ முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! கிங்காங் அத்துடன் விட்டுவிடவில்லை. தாராசிங்கைப் பார்த்து ‘நாளை உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சவால் சண்டைக்கு அழைத்தார். தாராசிங்கும் சவாலுக்கு ஒப்புக் கொள்ள மறுநாள் வசூல் இரண்டு மடங்கு!

இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு தினுசுமாய் ‘புதுப் புது உத்தி’களைக் கையாண்டு மக்களைப் பைத்தியமாய் அலைய வைத்தார்கள். நாளடைவில் ‘கிங்காங் – தாராசிங் சண்டை பொய்யானது; போலியானது; என்று தெரிந்தும்கூட மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அசல் சண்டை போல் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு மேலும் மேலும் குஸ்தி பார்க்கக் குவிந்தார்கள்.

தமிழ்நாட்டில் முதல் ரவுண்ட் சண்டை முடிந்தது.  பின்னர் சின்ன அண்ணாமலையும் சாவியும் கிங்காங்குடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டு மீண்டும் சென்னையிலும், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் இரண்டாவது ரவுண்ட் போட்டிகளை நடத்தினார்கள். திருச்சியில் மழை வந்து வசூலைக் கெடுத்த போதிலும் மொத்தத்தில் நல்ல லாபம் கிடைத்தது.

*

நன்றி : அப்புசாமி டாட் காம்

8 பின்னூட்டங்கள்

  1. soman said,

    20/04/2010 இல் 11:30

    அன்பு ஆபிதீன்,

    நன்றாயிருந்தது, நன்றி.
    அப்புசாமியின் ஆயிரத்தொரு இரவுகளில், அந்த ஷேக்கின் தர்பார்
    படித்து சிரித்திருக்கிறீர்கள் தானே, சின்ன வயதில்.?…..

    ரொம்ப காலம் அந்த அம்மாவின் எழுத்துகளில் மகிழ்ந்திருக்கிறேன்.
    அந்த இடிலீ மீது கொஞ்சம் காதல் கூட.
    ஒரு தடவை ஒரு மீட்டிங்குக்கு வந்த போது, என்னம்மா
    ஆம்பிளை வேஷத்தில் வந்துவிட்டீர்கள் என்று சொல்லி மகிழ்ந்தது
    நினைவுக்கு வருகிறது. மனுஷன் நிஜத்திலும் ரொம்ப சந்தோஷமான பேர்வழி.

    ஒரு கதை சொன்னார். கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பையனை
    அழைத்துவருவதற்காக போயிருப்பார். முன்பின் பார்த்ததில்லை.
    பஸ்ஸில் திடீரென்று பார்த்து விட்டு ‘உட்காருங்க சார்’ என்று தான்
    இருந்த இடத்தை கொடுத்து மாப்பிள்ளையையே பார்த்துக்கொண்டு
    ‘பரவாயில்லையே நல்லா புளியன்கொம்பா தான் நம்மாள் பிடித்திருக்கிறார்’ என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு நின்று கொண்டே வருவார். உபசாரமாக.

    ஸ்டாப்பிங் வந்ததும் சரேலென்று மாப்பிள்ளை எழுந்து போய்விட,
    இவர் என்னங்க என்று துரத்த, பக்கத்திலிருந்த உறவுக்காரர், அட, நம்ம மாப்பிள்ளை இங்கயில்ல இருக்காரு என்று கை வசமுள்ள ஒருவரைக்காட்ட ஒரே வழிசல்.

    ரொம்ப நன்றாக பேசினார். இயல்பான நகைச்சுவை.

    • abedheen said,

      20/04/2010 இல் 11:51

      நன்றி சோமன், அப்புசாமி இல்லாமல் ஆபிதீனா?அஸ்மா யாரென்று நினைக்கிறீர்கள்? சீதாப்பாட்டிதான்!

  2. soman said,

    20/04/2010 இல் 11:52

    ஆபிதீன், இன்னொண்ணு…

    நம்ம சுஜாத்தாவின் ஒரு நகைச்சுவைக்கதை ஒன்றுண்டு,

    ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கு, பெரியவர் ஒரு குழந்தையை

    வைத்துக்கொண்டு வந்து அடிக்கும் கூத்து. குமுதம் நகைச்சுவை

    சிறப்பிதழில் கிரேசி மோகன் செலக்ட் செய்து போட்டிருப்பார்.

    நான் கூட அதை குறும்படமாக பண்ணினேன். கொஞ்சம்..

    முடிந்தால் தேடிப்பிடித்து படித்துப்பாருங்கள் பிடிக்காவிட்டாலும்.

    சரியா…

    • abedheen said,

      20/04/2010 இல் 11:55

      அல்லாவே! குறும்படம் செய்தீர்களா?! முதலில் யூடியூபில் அதை வலையேற்றுங்கள் சாமி.

  3. soman said,

    20/04/2010 இல் 11:59

    ஐயோ ரொம்ப சந்தோஷம் . இவ்வளவு சூடாக பதிலா.

    இன்னொண்ணு. என் அன்பு நண்பர் சஞ்சயிடம் (அவரே தான்)

    இடம் புத்தகத்தை தந்து, இந்த ஆசாமியை கொஞ்சம் படித்து பாருங்கள்

    என்று சொன்ன அடுத்த நிமிடம் என்னை நடந்தது என்று நினைக்கிறீர்கள்.?

    அதே தான். பெரிய உடம்பு குலுங்க அந்த மனிதன் சிரித்ததை நினைத்தால்

    ‘இன்றிலிருந்து நூறாண்டு இரும்’ என்று ஆசி தராத குறை தான் உமக்கு…

    ஒழியும்…

    • abedheen said,

      21/04/2010 இல் 05:31

      புத்தகம் ஏகப்பட்ட பிழைகளைக் கொண்டதாயிற்றே சோமன் சார். ‘இடம்’கதையின் முடிவிலுள்ள ஓரிரண்டு பத்திகள் ‘புகை’ குறுநாவலில் உள்ளவை! ‘நீ சீக்கிரம் இடம் மாறிடுவே’ என்பதோடு ‘இடம்’ முடிந்தது. எப்படியோ, சஞ்சய்க்கு தெரிந்ததில் சந்தோசம். ஒழிந்தேன்!

  4. soman said,

    20/04/2010 இல் 12:22

    உமக்கு தருவதற்கு ஒரு மூட்டை இருக்கிறது, பாட்டும், படமும், எழுத்தும் ஏகமாய்.

    அப்புறம் தருகிறேன்….

    கோபால் மொழி. நம் காலகட்டத்தில், நான் எழுதிய கோபால்
    ப்ரோக்ராம். அந்த காலத்தில், 246 kb டிரைவ்-இல் இரண்டு டிரைவ்
    வைத்துக்கொண்டு, virtual டிரைவ் C யில் ‘compiler வைத்துக்கொண்டு
    ஒரு டிரைவ்-இல் ப்ரோக்ராம் மற்றதில் டேட்டா
    எல்லாம் நினைத்தால் சிரிப்பாக வரும்.

    இந்த விண்டோஸ் படுபாவி வரும் முன்பு, நாங்கள் ராஜாவாக இருந்தோம். எங்க முதலாளிக்குகூட A C இருக்காது. எனக்கு தனி ரூம். A C . மெஷின் கெட்டு விடும் என்று. ஆஹா அந்த நாளும் வருமோன்னு இருக்கிறது. நம் பொற்காலம் அந்த இருபதாண்டு. நீங்க கிளிப்பர், நாங்க அதையும் தாண்டி புனிதமான கோபால். எங்களுக்கு கிளிப்பர்காரன் என்றால் எப்பவுமே ஒரு இளக்காரம். அவனுக்கு exe file அண்டா சைசுக்கு இருக்கும்.

    இதில் எவ்வளவோ நகைச்சுவை இருக்கிறது. அந்த காலத்து கண் கொண்டு பாருங்கள். இப்போதைய அவலம் புரியும். ரூபாய்க்கு மூணு படி அரிசி காலம் தான்.

    • abedheen said,

      21/04/2010 இல் 06:54

      தாருங்கள். இங்கேயே பதிந்துவிடலாம். அந்த ப்ரோக்ராமிங் வேலையெல்லாம் முடிஞ்சி போச். இப்போ நான் அக்கவுண்டண்ட். ஏனெனில் எனக்கு அக்கவுண்ட்ஸ் தெரியாது!


soman -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி