மண்புழு – மரம் – சுஜாதா – கடவுள்

பொங்கல் வாழ்த்துக்கள். ‘குட்டங்களய் குரைப்பேன்’ என்று சொன்ன கமிஷனர் லத்திகாசரணுக்கு கூடுதல் வாழ்த்துக்கள் – தமிழர்கள் சார்பாக.
 
சுஜாதாவிடம் போவோமா?

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்காத ஒரே கேள்வி , ‘எப்படி ‘சீனித்தொவை’ செய்வது?’ என்பதுதான் என்று நினைக்கிறேன். அவ்வளவு கேள்விகள். அவரும் சளைக்காமல் படித்து சொல்லிவிட்டு , சென்றார் – கார்டூனிஸ்ட் மதனிடம் கம்பை ஒப்படைத்துவிட்டு. என்ன சார், ‘சீனித்தொவை’யா? அதொன்னுமில்லீங்க, சிவந்த இனிப்பு பச்சடியையும், சீர்மேவும் வாழப்பழங்களையும் (வசதியிருந்தால் கூடவே பால்கோவா – குலாப்ஜானையும்) புலாவு சோற்றில் பிசைவதற்கு தோதாக எங்க ஊர்க்காரர்கள் தயாரிக்கும் இனிப்பு ரசம் அது.  நெய்யில் ‘பட்டை’ கிராம்பு போட்டு தாளித்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.இதில் தேவையான அளவு சீனியைக் கொட்டுங்கள், துளி உப்போடு. ‘ச்சமக்கு’ கலருக்காக மிட்டாய் பவுடரும் சேர்க்கலாம். இந்த ‘ரசம்’ ஆறிய பிறகு அதில் ‘கொஞ்சோண்டு’ கெட்டித் தயிரை ஊற்றுங்கள். அவ்ளவுதான். சம-ரசம்.

இனிப்பும் , இலேசான புளிப்பும் – இலக்கியமும் , இஞ்சிமுரபாவும் போல.

எனக்குத் தெரிந்து, தஞ்சைமாவட்ட முஸ்லிம் ஊர்களில்தான் ‘சீனித்தொவை’ கிடைக்கும். மற்ற மாவட்டங்களில் சீனி மட்டும்தான் கிடைக்கும்.

ம்…. அவ்வளவு சொல்லியிருக்கிறார் சுஜாதா – ‘ஏன்?  எதற்கு ? எப்படி?’ போன்ற புத்தகங்களில். எழுத்துப்பேய் பிடித்தாட்டும் நம் எல்லா எழுத்தாளர்களும் இவரிடமிருந்துதான் சக்தியை வரவழைத்துக்கொள்கிறார்கள் – இன்னும். வாழ்க.

சுவாரஸ்யம் என்றால் சுஜாதாதான். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. நானும் அவரிடமிருந்து கற்றிருக்கிறேன், பெற்றிருக்கிறேன். புண்ணாக்கு நான் அதை ஏன் உபயோகப்படுத்தவில்லை? அது அப்புறம். அந்த சுஜாதா மாட்டிக்கொண்ட ஒரு கேள்வி பற்றிதான் இந்தப் பதிவு.

சுஜாதா, மரங்களை வியக்கட்டும்; புழு நான் வியப்பது மண்புழுக்களை.

என்னிடமுள்ள Encarta இப்படிச் சொல்கிறது : Earthworms are hermaphrodites, with each worm having both male and female reproductive organs. Mutual cross-fertilization usually takes place. The eggs, containing a considerable yolk, are buried in the earth in capsules formed from secretions of the clitellum, a thickened portion of the body wall. The capsules protect the young until they hatch as small, fully developed worms. Some species live for ten years or longer.
.
விகடம் பிரசுர புத்தகத்திலிருந்து இரு கேள்விகளை இப்போது பார்க்கலாமா?

மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11

சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் அண்டை அசலில் பிற புழுக்களைத் தேடிச்செல்ல வேண்டாம். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று தனக்கே சொல்லிக்கொண்டால் போதும். என்ன சௌகரியம் பாருங்கள்!

ஓரிருவாரம் கழித்து இன்னொரு வாசகரின் கேள்வி. ‘மண்புழுக்கள் தமக்குத்தாமே கர்ப்பமாக்கி கொள்ளக்கூடியவை என்று நீங்கள் சொன்னது தவறல்லவா? – செந்தில் சுப்ரமணியம், செயிண்ட் லூயிஸ், மிசோரி, அமெரிக்கா :

சுஜாதா : மண்புழுக்கள் ஹெர்மாஃப்ரொடைட் வகையைச் சேர்ந்தவை என்பதை சற்று வேடிக்கையாகக் குறிப்பிடத்தான் அப்படிச் சொன்னேன். உண்மையிலேயே மண்.புழுவில் ஆண் உறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே சரீரத்தில் இருந்தாலும் சுய கர்ப்பம் சாத்தியமில்லை. இரண்டு புழுக்கள் ஜோடி சேரவேண்டியது அவசியம். இதற்கு இரண்டு புழுக்களும் மண்ணைத் தோண்டுவதை விட்டு மேலே வரவேண்டும். ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் பார்ட் எடுத்துக்கொண்டு அருகருகே தலைமாடு கால்மாடாக மாற்றிப் படுத்துக்கொள்ள வேண்டும். சளிபோல ஒரு திரவம் கசிய ஒரு மணி நேரம் ஒட்டிக்கொண்டு சுகிக்கும். பூகம்பமே வந்தாலும் கவலையில்லை. அப்படியே இருக்கும். புழுநம்பர் 1 புழுநம்பர் 2-க்குள் விந்து தானம் செய்ய… பின்னர் முட்டை சப்ளை செய்யும். ஒரு சிறிய கூட்டுக்குள் முட்டையும் விந்துவும் பத்திரப்படுத்தப்படும். அதன்பின்தான் கர்ப்பம். Wov!

அவ்வளவுதான்.

இனி சுஜாதாவின் அதிசய மரம். ‘போனாலும்..‘ கதையில் (கதையா அது?) நான் எழுதியிருந்த ஒரு வரி குழப்பத்தைத் தருவதாக – நண்பன் ரூமி (சுஜாதாவுக்குப் பிரியமான எழுத்தாளர்களுள் ஒருவன்) தெளிவாக சொல்லிவிட்டுப் போனதால் பதிகிறேன்.

மரங்களுக்கு குழப்பமே கிடையாது!

‘பெங்களூரில் ஜாகராண்டா மரங்கள் ஒரே தினத்தில் சொல்லிவைத்தாற்போல் பூப்பதை நான் பார்த்திருக்கிறேன். மரங்களுக்குள், தாவரங்களுக்குள் ரகசிய பாஷை இருப்பதாகவே சிலர் நம்புகிறார்கள். இதைப்பற்றி சிலர் ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் ‘குடு’ என்று ஒரு மிருகம் இருக்கிறது. மான் வகையைச் சேர்ந்தது இது. மரங்களிலும், புதர்களிலிலும் உள்ள இலை தழைகளை ஒடித்துச் சாப்பிடும். ஆனால் ஒரு மரத்தில் இரண்டு நிமிஷத்துக்கு மேல் சாப்பிடாது. அடுத்த மரத்துக்குச் சென்றுவிடும், என்னதான் முதல் மரத்தில் இலைகள் அடர்த்தியாக இருந்தாலும். இது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தபோது மரம் தன் சொந்தப் பாதுகாப்புக்காக ஒரு இலைக்கு மேல் உடைக்கப்பட்டு பறிக்கப்பட்டால் தன் இலைகளில் ‘டானின்’ என்கிற வஸ்துவை அதிகப்படுத்தி மிருகங்கள் சாப்பிட முடியாமல் செய்துவிடுகிறதாம். எப்படிப்பட்ட ஆச்சரியம் இது!. இதைவிட ஆச்சரியம் ஒரு மரத்தைத் துன்புறுத்தினால் அதன் அருகே உள்ள மரங்களின் ‘டானின்’ அளவு அதிகமாவதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தன் சகோதர மரத்தின் துயரத்தை அது எப்படி அறிகிறது? வேர்கள் மூலமாகவோ அல்லது காற்றில் ஏதாவது அனுப்புகிறதா என்று வியப்படைகிறார்கள்.’ – சுஜாதா (கடவுள். பக். 207).

கடைசியாக , கடவுள். கடவுள்தானே கடைசி? ‘உளன் எனில் உளன், உளன் அலன் எனில் அலன்’. 

சுஜாதாவின் இறப்பைக் கேட்டதும் சவுதியிலிருந்து ஓடோடிவந்து மரணச் சடங்கில் கலந்துகொண்ட ஒரு தமிழ் முஸ்லிம் பற்றி அறிந்தேன் – சென்ற மாதம், தமிழன் டி.வியின் ‘மக்கள் மன்றம்’ மூலம். ஒண்ணாயிருக்க கத்தனும், சாரி, கத்துக்கனும் என்கிற இஸ்லாமிய நிகழ்ச்சி அது. மனம் நெகிழ்வானது. ‘அப்போதைய தலைமுறை அப்படியிருக்கலாம், இப்போதை இளைஞர்கள்தான் கவலை தருகிறார்கள்’ என்றார் திரு.ஞாநி அன்று. நெகிழ்ச்சி மாறி கவலை வந்துவிட்டது. அதற்காகத்தான் சொன்னார் போலும்.

நல்லவேளையாக , கவலையை மாற்ற கடவுள்தான் உதவினார். சுஜாதாவின் கடவுள். சுவராஸ்யமானவர். புத்தகத் திருவிழாக் கூட்ட நெரிசலில் அவரைக் காணாதவர்கள் ‘உயிர்மை’ பதிப்பகத்தில் உயிரோடு காணலாம். அல்லது கடவுளின் இன்னொரு வடிவத்தை இங்கே தரிசிக்கலாம். அதிருக்கட்டும், அந்த ‘கடவுள்’ புத்தகத்திலிருந்து ஒரு சின்ன கதை. (Dr. Paul Davies-இன் ‘The Mind of God’ நூலிலுள்ள நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் நடக்கும் விவாதத்தையும் அழகான தமிழில் சுஜாதா தந்திருக்கிறார். அதைப் பிறகு பதிகிறேன், கடவுள் அனுமதித்தால்). ‘கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – ‘இருக்கலாம்’. ஆன்மிகத்தின் பதில் ‘இருக்கிறார்’. என் பதில் it depends!’ என்று சிரிக்கவைக்கும் சுஜாதா சொல்லும் கதை இது. (கடவுள். பக். 60).

டெல்லி சாந்தினி சௌக்கில் – மத்திய சர்க்காரில் பணிபுரியும் ஒரு எழுத்தார், அலுவலகத்திலிருந்து திரும்ப வந்து கொண்டிருந்தார்.

இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார்.

‘கடவுளைக் காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,

‘ஓ முடியுமே, உன் கோட்டைக் கழற்றிவிட்டு பத்தடி முன்னால் சென்று மேலே பார், கடவுள் தெரிவார்’ என்றான்.

அவனும் அவ்வாறே செய்து திரும்ப வந்தான். பிரகாசமான முகத்துடன் ‘தாங்க்ஸ். நீங்கள் என் கண்ணைத் திறந்து விட்டீர்கள்; கடவுளை நன்றாகப் பார்க்க முடிந்தது’ என்றானாம். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிளார்க் அவனை அணுகி எனக்கும் கடவுளைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று தன்னிச்சையாகக் கோட்டை கழற்றி கொடுத்துவிட்டு பத்தடி முன் சென்று வானத்தைப் பார்த்தார்.

காக்காய் கூடு கட்டிய டெலிவிஷன் ஆண்டென்னாக்களைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் இருவரையும் காணோம். கோட்டையும் காணோம். கோட்டில் அந்த மாதச் சம்பளம்…!

***

நன்றி : உயிர்மை பதிப்பகம், விகடன் பிரசுரம்

1 பின்னூட்டம்

  1. 14/01/2010 இல் 15:53

    //மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்காத ஒரே கேள்வி// நிச்சயம் சரபோஜி காலத்து சமையல் குறித்து கேட்டிருக்கிறேன். தஞ்சை லைப்ரரியில் பார்த்து வியந்ததாக சொன்னார்!

    He was (is) a living legend, when other writers quote him – probably even to make a living out of it. Not out of context, but in.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s