குலாம் காதிறு நாவலர்

gulamkader.jpg 

குலாம் காதிறு நாவலர்

(முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் – அப்துற் றஹீம்)

*

1896ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வண்ணைமா நகரில் ஆறுமுகநாவலர்தம் மருகர் பொன்னம்பலம் பிள்ளையின் கலைவலக் குழுவிடை ஒரு முஸ்லிம் புலவர் தாம் இயற்றிய புராணத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளார். அவரைச் சூழ புலவர் பெருமக்கள் வீற்றிருந்து அவருடைய புராணச் சொற்பொழிவைச் செவி சாய்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அக்குழுவின் ஒரு மூலையிலிருந்து அப்புலவரைத் தோற்கடிக்க வேண்டுமெனும் கெடுமதி கொண்ட பண்டிதக் குறும்பர் ஒருவரின் வாயிலிருந்தும் “நிறுத்துமையா!” என்ற சொல் முழங்குகிறது. அதைக் கேட்டு அப்புலவர் திடுக்குறவோ, துணுக்குறவோ செய்யாது, “நாவல நாட்டீர்! செய்யுள் வழக்கிலே நிறுத்தப் புள்ளியும் உண்டென்பது உமது சொந்த இலக்கணமோ? பொத்துமையா வாயினை!” என்று வாயாப்பு அறைந்தார். அப்பண்டிதக் குறும்பரின் வாய் அத்துடன் தானாகவே இறுகப் பொத்திக் கொண்டது.

அதன்பின் தம் புராணத்தைத் தங்கு தடையின்றி விரிவுரை நிகழ்த்தி வரும்பொழுது’மாதுவளை வனங்கள் சூழ்ந்த மதினாவின் ரௌலா வந்தார்’

என்று புலவர் பாடியதும், ஒருவர் எழுந்து ,”நாகூர்ப் புலவரே! மன்னிக்க வேண்டும். மாதுவளை என்றால் மாதர்களின் யோனித்துளையோ?” என்று கடாவினார். மாதளை என்பதனை மாதுவளை என்று தாம் பயன்படுத்தி இருப்பதை அல்லவா அப்புலவர் இடித்துரைக்கின்றார் என்பதை நன்கு விளங்கிக் கொண்ட புராணப் புலவர் அவரை நோக்கி புன்முறுவல் பூத்த வண்ணம், “புலவீர்! அமரும்! கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற உற்றகலை மடந்தை உரையினும் பெரியீரோ நீர்! உமது இலக்கணம் இதற்கு விளக்கம் சொல்லவில்லையோ ? கேளுமையா நாவல நாட்டுப் புலவரே! மாதுளங்கம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகும். அது தமிழில் வரும்பொழுது திரிந்து மாதுவளை ஆயிற்று. செய்யுள் இடம் நோக்கி மாதுளங்கம், மாதுவளை, மாதளை என நிற்கும். மாதுவளை என்றால் நீர் கூறுவது போன்று ஆபாசப் பொருளன்று. அவ்விதம் நான் என் வாயெடுத்தும் கூற மாட்டேன். அப்படியெனில் அதன் பொருள்தான் என்னவென்று வினவுகின்றீரா?கூறுகின்றேன் கேளும் !

மா-பெருமை தங்கிய, துவளும் – நாவொடு துவண்டு ரசனை தரும், அங்கம் – உள் அமைப்பை உடையது. இது பூ, பிஞ்சு, காய், பழம், சுளை ஆகியவற்றோடு சேரும்பொழுது மா, துவள், அம், பூ என்பது மாதுவளம்பூ என்றும் மா, துவள், அம், பிஞ்சு என்பது மாதுவளும் பிஞ்சு என்றும், மா, துவள், அம், காய் என்பது மாதுவளம் காய் என்றும், மா, துவள், அம், சுளை என்பது மாதுவளஞ்சுளை என்றும் புணர்ந்து நிற்கும். இத்துணை சிறு புணர்தல் இலக்கணமேனும் நீர் அறியீரோ?” என்ரு விளக்கம் பகர்ந்து இடித்துரைத்தார். வினவிய புலவர் மீண்டும் வாயைத் திறக்கவில்லை.

அதன்பின் புலவர்,

‘விடிவெள்ளி மதினாபுக்கார் வியன்குயில் கூவிற்றன்றே’ என்று ஈற்றடியாக உள்ள செய்யுளைப் பாடி விரிவுரை நிகழ்த்தியதும் ஒரு பெண் எழுந்து, “நாகூர்ப் புலவீர்! சற்று நிற்க!” என்றாள். “என்னை அம்மணீ?” என்று வினவினார் புலவர். “புலவீர்! நீர் வியன்குயில் என்று கூறியிருப்பதின் காரணம்தான் என்ன? குயில் என்பது மெல்லிய பறவை ஆயிற்றே. அதனை வீறுள்ள பறவை யென்றோ, வியப்பிற்குரிய பறவை யென்றோ நீர் கூறக் காரணம்தான் என்ன?” என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளை விடுத்தாள் அவள். உடனே புலவர், “அம்மணீ! சற்றுப் பொறும்! கூறுகின்றேன். குயிலுக்கு முட்டையிடத் தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. எனவேதான் அதனை வியப்பிற்குரிய பறவை என்ற பொருளில் வியன்குயில் என்று கூறினேன். “அப்படியானால் அது எவ்வாறு குஞ்சு பொரிக்கும்?” என்று நீர் வினவலாம். அது காக்கையின் கூட்டிற்குச் சென்று முட்டையிட்டு விட்டுப் பறந்து விடும். காக்கை தன் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றும்பொழுது குயில் குஞ்சையும் தன் குஞ்சென நினைத்துக் கொண்டு தீனி தீற்றும். அப்பொழுது காக்கைக் குஞ்சுகள் கா, கா என்று கத்தும்பொழுது, குயில் குஞ்சு கீ,கீ என்று கத்துவதைக் கேட்டதும் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்து, காக்கை அக்குயில் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றாது அவற்றை தன் சொண்டால் கொத்தும். எனினும் அக்குயில் குஞ்சு சற்றேனும் அஞ்சாது கீ, கீ என்று கத்திக் கொண்டு அக்காக்கையை வீறுடன் எதிர்த்துச் சண்டையிடும். எனவேதான் அதனை வீறுள்ள பறவை என்னும் பொருளில் வியன்குயில் என்று குறிப்பிட்டேன் ” என்றார். அவருடைய இவ்விளக்கத்தைக் கேட்டதும் அப்பெண்மணிக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. “துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து யாழ்ப்பாணக்கரை வந்தீர்” என்று கூறி அவரை வாயாரப் பாராட்டினாள்.

இறுதியாக புராண அரங்கேற்றமும் முடிவுற்றது. புலவர், கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தகுந்த வாயாப்புக் கொடுத்துப் புராண விரிவுரையை முடித்து வாகை சூடினார். ஆறுமுக நாவலரைத் தவிர்த்து வேறெவரையும் ‘நாவலர்’ என்று அழைக்க விரும்பாத யாழ்ப்பாணர்கள், அப்புலவருக்கு ‘நாவலர்’ என்று சூட்டப் பெற்ற சிறப்புப் பெயரை எடுத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கட்டிப் பற்பல இடக்குகளும், இடையூறுகளும் விளைவித்தனர். இறுதியில் அவருடைய கல்வி மேதமையின் முன் தலை சாய்த்தனர். வளஞ் சுளைகளால் மாலை கோத்து அவருக்கு அணிவித்து, பரிசில் பல நல்கி இரண்டாயிரம் ரூபாயுள்ள பொன்முடிப்பும் அருளி, “நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் , நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் , நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர் ” என்று மும்முறை முழங்கி அவரின் ‘நாவலர்’ பட்டத்தை உறுதிப்படுத்தி , உலகிற்கு பறை அறைந்தனர்.

அவர் பாடிய ‘ஆரிபு நாயகம்’ என்னும் சீரிய நூலுக்கும் பின்வருமாறு பாயிரம் நல்கி , அவரைப் பொன்னம்பலம் பிள்ளை கௌரவித்தார்:

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறச் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
மாசு மதுரமாய் அமைத்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டோன்.

இதைக் கண்டு பெருமிதமுற்ற யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம்களும் ‘முஸ்லிம் நேசன்’ ஆசிரியர் சுலைமான் லெப்பையின் தலைமையில் பாராட்டு விழா நடத்தி அவருக்குப் பரிசில் பல நல்கி, அவரைப் பெருமைப் படுத்தினர். அவ்விதப் பெருமை வாய்ந்த பெரும்புலவர் யார் ? அவர்தாம் நாகூர் தந்த மேதகு புலவர் குலாம்காதிறு நாவலராவார்.

குலாம்காதிறு நாவலர் புலவர் கோட்டை என்று புகழ்ப் பெயர் பெற்றிருந்த நாகூரில் கி.பி. 1833ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தையார் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். அவரின் முன்னோர் சேது மண்டலத்திலிருந்து அங்கு வந்தவர் என்று கூறுவர். ஆனால் அம் மண்டலத்தில் எவ்வூரில் அவர்தம் மூதாதையர் வாழ்ந்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடைத்தில. ஏறக்குறைய நூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் அவரின் மூதாதையர் நாகூரில் குடியேறி இருக்கலாமென்று உய்த்துணர இடமுள்ளது.

அவரின் தந்தையார் மருத்துவத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பெரும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். அவருக்கு நாகூரில் காசுக்கடை ஒன்றும் இருந்தது. நாவலரின் பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிபுக்கு இரங்கூன் சோலியா தெருவில் பெரும் மாளிகை வாணிபம் இருந்தது. எனவே அவரின் குடும்பம் வளவாழ்வு பெற்றே வாழ்ந்தது என்று கூறலாம்.

பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தருக்கு இரண்டு ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். அவர்களில் ஒருவருக்கு குலாம்காதிறு என்னும் அழகுசால் திருப்பெயரிட்டு வளர்த்த தாய் தந்தையர், அவருக்கு ஏழு வயது நிறைவுற்றதும் ‘கலை பயிற்றாது காதலர்க்கு மாநிதி…கொலை வாளீவதும்…மலையினோரத்தில் வைப்பதும் மானுமே’ என்ற நெறிமுறைக் குற்றம் வராது காக்க அவரைப் பள்ளிக்கு அனுப்பி திருக்குர்ஆனையும் மற்றும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்ததும் ‘ஆலவிருஷ அடிபாரமும்,’ ‘மனைத்திண்ணை உறைவிட’முமே கல்வி பயிற்றும் பள்ளிகளாக விளங்கிய தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்றிற்கு தமிழ்க் கல்வி பயில அனுப்பி வைத்தனர். அங்கே குலாம்காதிறு எழுத்துச் சுவடி, எண் சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு முதலான நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது பன்னிரண்டு.

அவரின் தந்தையார் தம்முடைய தொண்ணூறாவது வயதில் இறந்ததும் அவரை கவனிப்பார் யாருமில்லாது போய்விட்டது. எனவே அவர் கலை பயிலாது வீணே அலையலுற்றார். காசுக்கடை நிலையும் குலையலாயிற்று. அதைக் கண்டு பெரிதும் வருந்திய அவருடைய பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிபு ‘கைம்பெண்சாதி பிள்ளை கழிசடை’ என்ற பழமொழிக்கேற்ப குலாம்காதிறின் வாழ்க்கை ஆகிவிடாமல் காத்தார். அவரைத் தம் கைப்பிடியில் கொண்டு அவரை அங்கிங்கலையவிடாமல் தொழிலொன்று நியமித்திருத்தி அங்குக் காலை மாலை சென்று கல்வி பயிற்றினார். நன்னூல் முதல் மற்ற இலக்கண இலக்கிய நூல்களையும் அவருக்குப் போதித்தார். ஆனால் விதி செய்த சதி குலாம்காதிறு இருபதாட்டைப் பருவத்தை எய்தப் பெறுவதற்கு முன் இறைவன் பக்கீர் தம்பி சாகிபைத் தன்பால் அழைத்துக் கொண்டான். தம் பெரிய தந்தையார் தமக்குச் செய்த நன்றியினை குலாம்காதிறு மறக்கவே இல்லை. அவர் பிற்காலத்தில் பெரும் நாவலராகித் தம்முடைய அறுபதாவது வயதில் ‘நாகூர்ப் புராணம்’ என்னும் ஒரு காவியம் இயற்றி அச்சிட்டபொழுது அதில் ஒரு செய்யுளில் தம் பெரிய தந்தையின் அரும் உதவியையும் நினைவு கூர்ந்து அவரின் பதத்துணையையும் நாடுகின்றார். அச்செய்யுள் வருமாறு:

முந்தை வழியின் முறைசேர்வழி என்னை காட்டிச்
சிந்தை பொலிய அருந்தெண்டமிழ் தேக்கியிட்டார்
தந்தை முன் தோன்றல் தகைசால் பக்கீர்த் தம்பி
யென்பார்
எந்தையவர்தம் பதமினை யீர்ங்கழல் ஏத்துவாமால்

பின்னர் குலாம்காதிறுக்கு கலையார்வம் அதிகரித்தது. பன்னூல்களை விலைகொடுத்து வாங்கியும் தம் தந்தைமார் இருவரும் சேமித்து வைத்திருந்த பெருநூல்கள் பலவற்றையும் கவனித்துக் கற்று வந்தார். அப்பொழுது நாகூரில் பெரும் புகழ்பெற்ற தமிழ்வல்ல பண்டிதராயிருந்த நாராயணசுவாமி என்பார் ஒரு புத்தகத் தொழில் நிலையம் வைத்திருந்தார். அந்நிலையத்தி/ர்கு குலாம்காதிறும் அடிக்கடிச் சென்று வருவார். குலாம்காதிரின் தந்தையாருக்கு நாராயணசுவாமி தோழராகையால் அவர் குலாம் காதிறைத் தம் மகனேபோற் கருதி கல்வி பயிற்றினார். அவரிடம் பலரும் பாடம் கேட்டு வந்தனர் என்னினும் அவர்களிலெல்லாம் குலாம்காதிறா சிறந்து விளங்கினார். எனவே, ‘குலாம் காதிறு பிற்காலத்தில் தமிழுக்கோர் சரஸ்வதியாம்’ என்று தம் மாணவர்களிடம் அடிக்கடி வியந்து கூறுவார் நாராயண சுவாமிப் பண்டிதர்.

நாராயண சுவாமிப் பண்டிதர் இறந்தபொழுது குலாம் காதிறுக்கு வயது இருபத்தெட்டு இருக்கும். தம் ஆசானின் இறப்பு அவருக்கு அளவற்ற மனவேதனையை அளித்தது.

ஆராய்ந்த சகலகலை அகத்திருத்தி யார் மாட்டும்
போராமற் பொருள் கொடுக்கும் சிலைபோன்ற கலை
நாவாய்!
நாராயணப் பெரியோய் ! நற்றமிழ் வாழ் நாவுடை
யோய்!
ஆராயின் உன்போன்ற, அருந்தமிழோன் யாண்டுளனோ

என்பதுபோன்ற பல சரமகவிகள் பாடிப் புலம்பினார்.

அக்காலத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பேரும் புகழும் எட்டுத்திக்கினும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அவரை அணுகி அவரிடம் சைவசித்தாந்தம், இதிகாசங்கள், இலக்கண இலக்கிய சங்கிரியைகள் ஆகியவற்றையெல்லாம் பயின்று தேறினார். இதனையே மகாமகோபாத்யாய உ.வெ.சாமிநாதையர் தாம் எழுதிய மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் வரலாற்றில், ‘நாகூரில் புகழ் பெற்று விளங்கிய குலாம் காதிறு நாவலர் என்ற முகமதியப் புலவர் ஒருவரும் நமது மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குலாம் காதிறு இவ்வாறு பல பெரும் புலவர்களிடமும் சென்று கல்வி பயின்று வந்தது இலைமறை காய்போல் இருந்தாலும் அவர் விரைவில் பெரும் புலமை பெற்று விட்டதாலும் அவர்மீது அழுக்காறுற்ற பலர், ‘மருவில்லா மலரைப் போலும் மதியில்லான் வாழ்க்கை போலும் திருவில்லா மனையைப் போலும் தெளிவில்லாக கண்ணைப் போலும் தருவில்லா நிலங்கள் போலும் தனமில்லா மங்கை போலும் குருவில்லான் கற்ற கல்வி குறையன்றி நிறைபாடுண்டோ?’ என்ற கருத்தை மனதிற்கொண்டு அவரை ‘தானாப் புலவர்’ என்று எண்ணி இருந்தனர். வேற்றூர்ப் புலவர் ஒருவர் அவரைக் காண வந்தபொழுது அவரை நோக்கி, ‘ தங்களைப் பலர் தானாப் புலவர் என்று அழைக்கின்றனரே. அதன் காரணம் என்ன்?’ என்று வினவியக்கால், ‘தமிழ் மொழியில் த என்ற எழுத்து ஆயிரம் என்று பொருள்படும். எனவே அவர்கள் என்னை ஆயிரம் புலவர்களுக்குத் தலைமைப் புலவன்’ என்று அழைக்கின்றனர் என்று பதிலிறுத்தார் குலாம் காதிறு.

அவர் துவக்கத்தில் சில்லரையாகப் பல தனிக்கவிதைகள், கீர்த்தனைகளைப் பாடிவந்தார். அதன் பின் 109 செய்யுட்களடங்கிய பிரபந்தத் திரட்டு என்னும் நூலைப் பாடினார். அதனைப் பலர் குறை கூறினர். அவருடைய அப் பிரபந்தத் திரட்டை பிரபந்தத் திருட்டு என்றும், பிரபந்தக் குருட்டு என்றும் பிரபந்த இருட்டு என்றும், பிரபந்த மருட்டு என்றும் இழித்துரைத்தனர். எனினும் குலாம்காதிறு என்னும் அப்புலவர் பெருமான் அதனைச் சிறிதேனும் பொருட்படுத்தாது சமூகசேவையையே தம்முடைய தலையாய பணியாகக் கொண்டு செயலாற்றி வந்தார்.

இதன் நடுவே அவர் பினாங்கு சென்று, ‘வித்தியா விசாரிணி’ என்ற பெயருடன் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தார். அது முழுவதிலும் இலக்கண இலக்கியங்களும் மார்க்க வினாவிடைகளும், உலக நிகழ்ச்சி பற்றிய விவரங்களும் அடங்கி இருந்தன. அங்கும் அவருடைய விரோதிகள் விட்டார்களில்லை. இலங்கையில் நடந்து வந்த ‘முஸ்லீம் நேசன்’ என்ற பத்திரிக்கைக்கும் ‘வித்தியா விசாரிணிக்கும் பலத்த வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இறுதியில் குலாம்காதிறே வாகை சூடினார்.

இதன்பின்னர் குலாம்காதிறு முகம்மதெங்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் மீது ‘மும்மணிக் கோவையும், நாகூரில் அடங்கப்பெற்றிருக்கும் ஆண்டகையாம் ஷாகுல் ஹமீது நாயகத்தின் மீது ‘நாகூர்கலம்பக’மும் பாடினார்.

இக்காலை, இரங்கூனில் பெருந்திருவும், பெரும்புகழும் பெற்று வாழ்ந்து வந்த மதுரைப் பிள்ளை என்பாருக்கு அரசாங்கத்தாரால் ‘ராய பஹதூர்’ பட்டம் நல்கப் பெற்றதும் அவரை வாழ்த்தி ‘மதுரைக் கோவை’ என்ற பெயருடன் ஒரு கோவை இயற்றி அவருக்கு அன்பளிப்பு செய்தார். அதைப் பெற்றுப் படித்துப் பெரிதும் பரவசமுற்ற மதுரைப் பிள்ளை, குலாம்காதிறை இரங்கூனுக்கு வரவழைத்து, பெரும் சபைகூட்டி, அவர் பாடிய அக்கோவையினை அவர் வாயாலேயே அரங்கேற்றக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். அவருக்கு பொற்பதக்கமும், பொற்கடிகாரமும், ரூபாய் ஆயிரம் கொண்ட பணமுடிப்பும், உடைகளும் பரிசிலாக நல்கினார். அதன்பின் அவரைத் தம் தாயகமான சென்னை வேப்பேரிக்கு அழைத்துவந்து அவருக்கு நாவலர்பட்டமும் பொற்றகட்டில் பொறித்து வழங்கி கௌரவித்தார். இது முதல் குலாம்காதிறு நாவலர், குலாம் காதிறு நாவலர் என்று அவரின் பெயர் குவலயத்தின் எட்டுக் கோணங்களிலும் எதிரொலிக்கத் துவங்கி விட்டது. வெறும் குலாம்காதிறாய் இருந்தவர், குலாம்காதிறு நாவலராய் ஆகிவிட்டதைக்கண்டு அவருடைய எதிரிகள் பெரிதும் புழுக்கமுற்றனர். முஸ்லிமாகிய அவர் முஸ்லிமல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடியிருப்பது இஸ்லாத்த்ற்குப் பொருந்துமா?’ என்று கூக்குரலிட்டனர். ‘அவர் முன்னர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேரில் பாடிய மும்மணிக் கோவையில் நபிகள் நாயகம் அவர்களைப் பெருமான் (பெருமையிற் சிறந்தோர்) என்றும், நாகூர் கலம்பகத்தில் ஷாகுல் ஹமீது ஆண்டகையைப் பெருமான் என்றும், மதுரைக் கோவையில் பாட்டுடைத் தலைவராம் மதுரைப் பிள்ளையைப் பெருமான் என்றும் கூறியுள்ளாரே. இம் மும் பெருமான்களுள் எப்பெருமான் சிறந்தவர் என்று எங்களுக்கு விளங்கவில்லையே’ என்று எகத்தாளமாய் பேசினர்.

நாவலர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஆரிபு நாயகம், நாகூர்ப்புராணம் ஆகிய பெரும் புராணங்களை இயற்றினார். ‘நூருல் அஹ்மதியா’ என்ற அரபு நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆரிபுநாயகப் புராணத்தில் அக்காவியத் தலைவராம் சையிது அகுமதுல் கபீர் ரிபாரி ஆண்டகையின் பதத்துணை வேண்டி அவர் இறைஞ்சும் பாவானது அவரின் கவிதா மேதையை நன்கு பரிமளிக்கச் செய்கின்றது. அதனை கீழே தருகிறேன். படித்துப் பரவசமடைவீர்களாக!

கருமை பயக்கும் ஒருமேகக்
கவிகை நிழற்கீழ் வரும் இறைவர்
பெருமை பயக்கும் பேரர்எனப்
பிறங்கும் அவுலி யாமருள்
அருமை பயக்கும் ஸூல்தானுல்
ஆரிபீன் எம்பெரு மானார்
இருமை பயக்கும் மலர்த்தாட்கள்
இரண்டும் இரண்டு கண்மணியே!

இதுமட்டுமல்லாது அவ்வாண்டகைமீது ‘பதாயிகுக் கலம்பகம்’ என்னும் ஒரு நூலும் அவர் இயற்றி மகிழ்ந்தார்.

நாகூரில் பிரபல மிராசுதாராய் விளன்கிய சிக்கந்தர் ராவுத்தரின் வேண்டுகோளின்படி,

மாணிக்க நகரமெனும் வடகடலி னுதித்தாங்கு
சேணிக்கை நாகூராம் தென்கடலின் மறைய வெழூஉப்
பாணிக்க எவர்அகனும் அற்புதமாம் கதிர்பரப்பி
யாணிக்கை பெறும் ஷாகுல்கமீதென்னும் ஆதித்தன்

அவர்களின் நிர்யாணத்திற்குப்பின் நிகழ்வுற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி ‘நாகூர்ப்புராணம்’ என்னும் நூலை 1350 விருத்தப்பாக்களில் ஆக்கினார். அதில் மலடு தீர்த்த படலத்தில் பற்பல சித்திரக்கவிகளையும் இயற்றித் தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார்.

நாவலனார் செய்ததிரு நாகூர்ப் புராணத்தின்
பாவலனார் சித்திரகவிப் பாக்கட்கு-மாவலனார்
பிச்சையிபு றாகீம் பெரும்புலவன் செய்திட்டான்
உச்சிமேல் வைக்கும் உரை.

அந்நூலின் இறுதியில் அந் நூலின் கொடை நாயகராம் சிக்கந்தர் ராவுத்தர் மீது நாவலர் ஒரு வாழ்த்துப் பதிகமும் பாடினார். அதைக் கண்டு பெரிதும் மகிழ்வுற்ற சிக்கந்தர் ராவுத்தர் அவருக்கு ஆயிரம் ரூபாய் பொன்முடிப்பு வழங்கி அவரை மகிழ்வித்தார்.

இவற்றைத் தவிர நாவலர் நாகூர் தர்கா ஆதீனஸ்தருள் ஒருவரான காஸிம் சையிது முகம்மது பாகிறு சாகிபு அவர்களின் வேண்டுதலின் பேரில் நாகூர் ஆண்டகையின் காரணச் சரித்திரத்தை ‘கன்ஜூல் கறாமத்து’ என்ற பெயருடன் செம்பாக வசன நடையில் சிறப்புடன் எழுதி முடித்தார். அவர் அதில் கையாண்டிருக்கும் வசனநடை வசனநடைகளுக்கோர் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது. அந்தச் சரித்திரக் கோவை முடிவுற்றதும் நாகூர் சாஹிபுமார்கள் அதனை ‘காதர் பக்ஸ்’ என்னும் தர்கா யானையின் மீது வைத்தும் நாவலரை சோடிக் குதிரைகள் பூட்டிய வண்டியில் ஏற்றியும் பவனி வந்தனர். அது மட்டுமல்லாது அவரை நாகூர் தர்கா மகா வித்துவானாகவும் ஆக்கி, ‘ஷமஏ ஜஹான்’ (உலக திபம்) எனும் சிறப்புப் பெயரும் அவருக்குச் சூட்டி ஆண்டுதோறும் நூற்றுப்பதினொன்றே கால் ரூபாயும் ஒரு மூட்டை நெல்லும் ஆண்டகை சமாதியின் சால்வையும் பிரார்த்தனைப் பண்டங்களும் நல்கிக் கௌரவித்தனர்.

இவற்றையன்றி நாவலர் திருமக்காத் திரிபந்தாதி, மதினாக்கலம்பகம், பகுதாதுக் கலம்பகம், பஹனஷா வசன காவியம், ஆரிபுநாயக வசன காவியம் ஆகியவற்றையும் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் என்னும் அன்பர் பேரில், ‘சமுத்திர மாலை’ என்னும் ஒரு கவிதை நூலையும் இயற்றினார். அது சிலேடை மயமாகக் காட்சி வழங்குகிறது. மேலும் ஷாஹ¤ல்ஹமீது ஆண்டகையின் ஞானாசிரியர் குவாலீர் முகம்மது கவுது வலியுல்லாஹ் பேரில் ‘குவாலீர்க் கலம்பகம்’ என்னும் பிரபந்தமும் ஆக்கினார்.

அவர்தம் பாடிய சச்சிதானந்தப் பதிகத்தில் இறைகாவல் வேண்டி இறைஞ்சும் பா எவர் மனத்தையும் உருக்கவல்லதாக உள்ளது.

வானென்னை ? பூமென்னை ? எல்லாம் உனது வலிமை
என்றே
யானென்னை யுமுன்னைப் போற்றிநிற் கின்றன
ஐயஅடி
யேனென்னைக் காப்பது நீ யேயல்லா(து) இல்லைஇப்
பொழுது
நானென்னை செய்வலடா ? சச்சி தானந்த நாயகனே !

மேலும் அவர் தம் பாடிய ‘தசரத்தினமாலை’யில் கௌதுல் அ·லம் அவர்களிடம் குறை இரந்து பாடும் கவிதை நயம் நிறைந்தது. அது இதோ உள்ளது. நீங்களும் படியுங்கள்!

நாரையானது தூங்கிய கான
நாகையா(ள்) அப்துல் காதி றெலிக்கணி
சீரை யானமூ தாதை யெனவரூஉம்
செய்யி தேநுமப் பையலைக் காப்பது
நீரை யாவல்ல தித்தரு ணத்திலே
நேயம் வைத்தருள் செய்வதெனக்கினி
யாரை யாவுளர் ? மாபகு தாதுவாழ்
அப்துல் காதிறு கௌதுல் லகுலமே.

இவையன்றி தம் தந்தையாரின் நண்பரான சரவணப் பெருமாளையர் என்னும் வழக்கறிஞரிடம் ஆங்கிலத்தைக் கற்று பிரபல ஆங்கில நாவலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பார் எழுதிய ‘உமறு’ என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ‘உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்’ என்ற பெயருடன் நான்கு பாகங்களில் வெளியிட்டார்.

அவர் தமிழில் மட்டும் பெரும் புலவராக விளங்கவில்லை. அன்று நாகூரில் ‘சூபி ரஹ்மத்துலாஹ்’ என்னும் சிறப்புப் பெயருடன் விளங்கிய நூருத்தீன்சாகிபு காமிலிடம் கைகொடுத்துத் தீட்சை பெற்றார். ‘தறீக்குல் ஜன்னா’ எழுதிய முகியித்தீன் பக்கீர் சாகிபு காமிலிடம் அரபு நூல்கள் பல கற்றுத் தேறினார். மேற்கண்ட ‘தறீக்குல் ஜன்னா’ என்ற நூலுக்கு நாவலர் ஷரீஅத் சட்டம் விலகாமல் உரை எழுதினார்.

அதிவீரராமன் பட்டினம் அண்ணாவியார் குலதிலகராகிய காதிறு முகியித்தீன் அன்ணாவியார் இயற்றிய ‘பிக்ஹூமாலை’க்கு இஸ்லாம் மார்க்க வரம்பு கெடாமல் யாவரும் எளிதில் படித்தறியுமாறு உரை செய்தார். அரபி திரிச்சொற் பிரயோகங்களுக்கு எளிதில் தமிழில் பொருள் விளங்குமாறு ‘அரபு-தமிழ்-அகராதி’ ஒன்றும் எழுதினார்.

இவையன்றி திருநெல்வேலிப் பேட்டை காசிம் முகியித்தீன் ராவுத்தர் அவர்களின் வேண்டுதலின்பேரில் சீறாப்புராண வசன காவியமும், திட்டச்சேரி முஸ்லிம்கள் வேண்டிக் கொண்டதன்பேரில் ஆரிபு நாயக வசனமும் எழுதினார். சீறாப் புராணம், நபி அவதாரப் படலத்திற்கு உரையும் எழுதினார். அவர் எழுதிய உரையினைக் குறைகூறிக் கண்டித்து முகம்மது பந்தர் காதிரசனா மரைக்காயர் ‘நபி அவதாரப் படல உரை கடிலகம்’ என்று வேறு உரை ஒன்று வெளியிட்டார்.

அதில் அவர் குலாம் காதிறு நாவலர் ஒவ்வொரு செய்யுளுக்கும் கூறிய உரையை மறுத்து வேறு உரை பகர்ந்துள்ளார். உதாரணமாக சீறாப் புராணத்தில் நபி அவதாரப் படலத்திலுள்ள

முடங்க லங்கைதை
முள்ளெயிற்று வெண்பனிப்
படங்க ளாயிரத்தினும்
பரித்த பாரெலாம்
இடங்கொள் பூதரப்
புயத்திருத்தி ஏதிலார்
மடங்க லேறெனும்
மனவலியின் மாட்சியார்

என்ற செய்யுளில் வரும் ‘பாரெல்லாம் இடங்கொள் பூதரப் புயத்திருத்தி’ என்பதற்கு அரசனை வியந்து கூறுமிடத்து பூமியைப் புயத்தில் சுமந்தானென முன் நுல்களில் கூறியிருப்பதற்கேற்ப பூமி முழுவதையும் தம் புயத்தில் தாங்கியவர் என்று பொருள் விரித்துள்ளார் நாவலர். இதனை காதிரசனா மரைக்காயர் தம் உரைகடிலத்தில் மறுத்து இதன் பொருள் ‘பூவுலகம் எங்கணும் தம் புயத்தின் வலியை இருத்தினவர்’ என்றும் எழுதினார்.

உடனே நாவலர் தாம் எழுதியது சரிதான் என நிலைநாட்டி ‘உரைகடிலக நிராகரணம்’ என்ற பெயருடன் நூல் வெளியிட்டார்.

அதில் அவர் பூமியைத் தன் புயத்தில் சுமந்தோன் என்று அரசனைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடியிருப்பதை மேற்கோள் காட்டியதுடன் புலவர் நாயகம் சேகனாப் புலவரும் கூடத் தம்முடைய புத்துருஷ்ஷாம் காப்பியத்தில்,

‘மறக்கோல் வளைய உலக பொறை
மறாத்தோள் சுமந்து பலன் பயவா
கிறக்கில்’

என்று பாடி இருப்பதையும் எடுத்துக் காட்டி ‘பாரெலாம் என்பதற்கு பார் எங்கணும் என்று காதிரசனா மரைக்காயர் கூறி இருப்பது எப்படி சரியாகும் ? புயத்திலிருத்தி என்பது ஏழாம் வேற்றுமைத் தொகையாய்ப் புயத்திருத்தி என நிற்க அதில் வலிமை என்ற சொல்லைப் புகுத்தி பொருளை வலிந்து கூறுவது எவ்வாறு பொருந்தும் ? வலிமை என்ற சொல்லை உமறுப் புலவர் இதில் மறைத்து வைத்திருப்பதை இவர் எவ்வாறு கண்டு பிடித்தாரோ?’ என்று எழுதினார்.

மேலும் தம்முடைய உரையை எதிர்த்து காதிரசனா மரைக்காயர் கூறிய பல்வேறு கூற்றுக்களை மறுத்து தம் கொள்கையை நிலைநாட்ட சிலப்பதிகாரம், கந்தபுராணம், கூர்மபுராணம் முதலிய இலக்கிய நூல்களிலிருந்தும் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், வீர சோழியம், நன்னூல், தண்டியலங்காரம் முதலிய இலக்கிய நூல்களிலிருந்தும் ஷரகு ஹம்ஸிய்யா, மவாஹிபுல் லதுன்னியா, சீரத்துத் தஹ்லான், ரத்துல்முக்தார், ரூஹூல்பயான் ஆகிய அரபி நூல்களிலிருந்தும் அதில் ஆதாரம் காட்டினார் நாவலர். ஆனால் அதைக் கண்டு காதிரசனா மரைக்காயர் ‘உரைகடில நிராகரணச் சூறாவளி’ என்ற பெயருடன் மறுநூல்- மறுப்பு நூல்- ஒன்று வெளியிட்டார்.

இவ்வாறு இருவருக்கும் பெரும் பகைமூண்டு கட்சி திரண்டதைக் கண்ட நாவலரின் ஞானாசிரியரும் காதிரசனா மரைக்காயரின் ஞானாசிரியருமான நூருத்தீன் சாகிபு காமில் அவர்கள் காதிரசனா மரைக்காயருடன் நட்புச் செய்து வைத்தனர். அந்த நட்பு பின்பு நீண்ட நாள் நீடித்திருந்தது. நாவலர் இயற்றிய ஆரிபு நாயகப் புராணத்திற்கும் நாவலரின் வேண்டுகோளின் பேரில் காதிரசனா மரைக்காயர் பெருந்தன்மையுடன் சாற்றுக்கவி அருளினார்.

நாவலர் எழுதிய சீறா வசன காவியத்தில் பாத்திமா நாயகியின் திருமணப் படலத்திற்கு உரை எழுதும்பொழுது நாவலர் சிறிது தவறி ‘மஹர்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘கடிதடக் கிரயம்’ என்று பொருள் எழுதிவிட்டார். உடனே அவருடைய எதிரிகள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர் மீது வசைமாரி பொழிந்தார்கள். ‘இவர் தன்னை இலக்கண வித்வானென்றுஞ் சொல்லிக் கொள்கின்றாரே. இலக்கணம் கற்றிருப்பாராயின் மறைத்த சொல்லை வெளிப்படையாய்க் கூறுதல் தகுதியல்ல, வேறோர் குறிப்பால் கூறல் தகுதியென்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கென்றும், நன்னூலில் இடக்கரடக்கல் என்றும், தொல்காப்பியத்தில் அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் என்றும், இழிந்தோர் சொல்லுதல் இழிந்த சொல்லாதலால் அதனைக் குலமக்களிடத்து மறைத்துக் கூறல் வேண்டும் என்றும் இன்னும் இலக்கணங்களெல்லாம் மறைவாகிய சொல்லை மறைவாகவே கூறவேண்டும் என்று சொல்லியிருக்க , தமது புல்லறிவாண்மை மடமையினாலோ கல்வியும் செல்வமும் அற்பருக் கற்பமுண்டாயின் இறுமாப்பர் என்றதற்கடையாளமாகவோ கற்பிப்பாரில்லாத மதிமயக்கத்தினாலேயோ, பெரியாரோடு சேர்மானமில்லையாலேயோ, உயர்ந்த கல்வி கேள்வி இன்மையினாலேயோ, அடங்காமையினாலேயோ, பாத்திமா றலியலாஹூ அன்ஹா அவர்கள் விஷயத்தில் மஹர் என்பதற்குக் கடிதடக் கிரயம் என்றெழுதத் துணிந்த துணிபு.

இ·தன்றி மஹரென்பது கடிதடக் கிரயத்திற்கு மாத்திரம் ஆகும் பட்சத்தில் பெண்சாதியோடு புருஷன் செய்யும் சரசம் முதலான நடக்கைகளில் மற்ற உறுப்புகளுக்கு கிரயம் இல்லை போலும்’ என்று தாக்கி எழுதினர். மேலும் சீரியர் என்னும் செவத்த மரைக்காயர் நாவலர் எழுதிய திருமணிமாலை வசனத்தில் குறைகண்டு ‘திருமணிமாலை வசனம் பார்க்க விசனம்’ என்ற ஒரு சிறு நூலும் வெளியிட்டார், அதற்குச் சின்னவாப்பு மரைக்காயர் அளித்த சாற்றுக் கவியில்

பெரியார் கருத்தறியாப் பேதை குலாம்காதிர்
தெரியா துழலும் சீர்கேட்டைத்-தரியாது
தெற்றத் தெளியத் திருத்தினான் பன்னூலும்
கற்றச் செவத்த மரைக்கான்

என்று பாராட்டினார். மேலும் ‘சீரியசூரியன்’ என்னும் ஒரு செய்தித்தாளை துவக்கி நாவலரைத் தாக்குவதையே தம்முடைய தலையாய கடமையாகக் கொண்டார் சீரியர். அதைக் கண்டு பெரிதும் மனம் வருந்திய நாவலர் சீரியர் பாடியுள்ள ‘மக்காக் கோவை’யில் ‘தஞ்சவாணங்கோவை’யிலிருந்து பற்பல சொற்றொடர்களைக் களவாடிக் கையாண்டிருப்பதாகக் ‘காரை முகம்மது ஸமதானி’ பத்திரிகையில் எழுதி ‘ஓ! சீரியனே!! மக்காக் கோவையில் நீர் ஏன் கொக்குப் பிடித்தீர்?’ என்று குற்றத்தைக் கிளரிக் குறையுரைத்தார்.

சீரிய அகப்பொருளின் செய்பிசகோ கைப்பிசகோ
நேரிய அச்சுப்பிசகோ நேர்ந்தனவால்-பாரில்
வளநாகை வாழும் செவத்த மரைக்காயர்
விளம்பும்மக் காக்கோவை மீது

என்று குறை கூறினார். உடனே சீரியரின் நண்பர்கள்

‘கச்சுப்பிசகுங்குயத்தார்க்கு நாண் முதல் காண்
குணங்கள்
வச்சுப் படைத்தனன் வல்லோனென் பாரவ் வழக்
கிழுக்கப்
பிச்சுக் கிடக்கின்ற நாவல கோவைப் பெரும் பொருளில்
அச்சுப் பிசகன்று கைப் பிசகன்றுன் னகப் பிசகே’

என்றும்

கற்றோர் பலர்மகிழ்ந்து கண்டிருக்கக் கொண்டிருக்க
மற்றோர் தலைவலிநோய் வந்துனக்கேன் – உற்றவாறு
என்னோ நபிபெருமாற்கு ஏற்கும் திருக்கோவை
தன்னோ டிகல லென்றான்

என்றும் மறுப்பு விடுத்தார்கள். மேலும் நாவலரையும், அவரின் நண்பர்களான பக்கீர்முகிய்யிதீன் புலவரையும் கூனசெவத்த மரைக்காயரையும், தாரூக்காக்கா மீசா புலவரையும் கிண்டல் பண்ணி சீரியர் ஒரு பாட்டுப் பாடி, தெருப் பையன்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அதனைத் தெருத் தெருவாகப் பாடிக் கொண்டு திரியுமாறு செய்தார். அப்பாட்டின் ஒரு சில அடிகள் பின்வருமாறு:

பல்லவி

நாவலன தீவிலே ஓடுது கப்பல்

அனுபல்லவி

பாவிரித் தென்றுமே பக்கீரெனுங் கப்பல்
வாவிய நங்கூரக் கூனனைத் தூக்கியே
மேவிய தாரூக்காப் பாய்மரம் நாட்டியே
ஆயுந் தமிழ்க் கடல் அந்தம் தெரிந்திட-ஓடுது
கப்பல்

இச்சமயத்தில் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியின் தமிழ்ப் புலவராய் விளங்கிய பிச்சை இபுறாகீம் புலவர் நாகூருக்கு வந்தார்; சீரியரைக் கண்டார்; நாவலரின் மேதையை அவருக்கு நன்கு எடுத்துரைத்து அவரை நாவலர் பால் அழைத்துவந்து உறவு கொள்ளச் செய்தார். அன்று முதல் நாகூரில் நாவலர் மாட்டுக் கிளப்பிய வசைப்புயல் ஓய்ந்தது. இதன்பின் சிலகாலம் சென்று சீரியர் காலம் சென்றதும் நாவலர் அவரின் அடக்கவிடத்திற்க்குச் சென்று ‘அந்தோ ! என்னருங்கையே! வெறுங்கையாய் எனை விடுத்து விரைந்தாய் என்னே! சிந்தாத என் கலைக்குப் புகழ்கொடுத்த சீரியனே! போயிற்றாயோ!’ என்று பிரலாபித்து அழுது துக்கித்தார்.

‘இலக்கணக் கோடாரி’ என்னும் புகழ்ப்பெயர் பெற்றிருந்த பிச்சை இபுறாகிம் புலவருக்கும், நாவவலருக்கும் முதன் முதலில் நட்பு ஏற்பட்ட விதம் மிகவும் விநோதமானது. நாவலரின் பேரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்ட பிச்சை இபுறாகிம் புலவர் நாவலரைக் காண நாகூர் வந்தார். நாவலரின் இல்லம் சென்று நாவலரையும் கண்டார். நாவலரோ வந்த புலவரை யாரோ எனவெண்ணித் தாம் வழக்கமாகப் பேசும் நாட்டு வழக்கத் தமிழிலேயே அவருடன் உரையாடினார். புலவர் பிச்சை இபுறாகிம், நாவலரின் நாட்டு வழக்க மொழியைக் கண்டு சிரித்துவிட்டு ‘நாவலீர்! தங்களைத் ‘தமிழ்த் தெய்வமாய குலாம்காதிறு நவலரேறே’ என்று சாற்றுக் கவிகள் கூறுகின்றனவே. இன்று உங்கள் மொழிச் செல்வத்தைக் கண்டால், நாவலரும் பாவலரும் அல்லாத பாமரர் போன்றல்லவா தோன்றுகின்றது!’ என்று கூறினார். இதைக் கேட்ட நாவலர் சிரித்த வண்ணம் ‘புலவீர்! உங்கள் திரிசிரபுரத்துச் சீரங்க உலக்கையல்லவே நஞ்செந்தமிழ்! நீர் என் முதுகிலே சாத்தும் வெண்டமிழ் மொழியினைக் கண்டார் என்னையுமோர் தண்டமிழன் என மதிக்காரோ?’ என்று கூறினார். அதன்பின் அவ்விருவரிடையே உரையாடல் நிகழ்ந்தது. நாவலரின் மேதையை ஒரு நொடியில் விளங்கிக் கொண்ட பிச்சை இபுறாகிம் புலவர் நாவலரிடமே மாணவராய் அமர்ந்து, இலக்கணப் பொருளதிகார உள்ளுரைப் பொருளமைதிகளைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் தாம் எங்குச் சென்றபோதினும் , நாவலரைத் தம் ஆசான் என்று பகிரங்கமாக எடுத்துரைத்து நாவலரின் பெருமையைப் பறை முழக்கினார். எனினும் அடக்கமே உருவாயமைந்த நாவலர், ஒருதடவையேனும் பிச்சை இபுறாகிம் புலவரைத் தம் மாணவர் என்று யாரிடமும் கூறவில்லை.

இதனையே பிச்சை இபுறாகீம் புலவர் நாவலர் மீது பாடிய சரமகவி ஒன்றில்,

என்னாசான் இடைப் பயின்ற பயிற்சியெலாம்
அறிந்தனை
நின் இருங்கால் மாட்டு
முன்னாகி அகப்பொருளை ஆய்வுழி என் மதியளவு
மொழிந்த நின்னைப்
பன்னாளும் ஆசான் என்றுரைத்தனன் நீ உரையாய்
மன் பார்க்கில் ஆசான்
தன்னாவில் கூறாது மாணவகன் மொழிவதுதான்
தகுதி யன்றோ

என்று கூறுகின்றார்.

முன்னர் ‘நன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கணநூலை இராமநாதபுரத்து ஆறுமுகத் தேவரின் வேண்டுதலின்பேரில் செய்த நாவலர் ‘பொருத்த விளக்கம்’ என்னும் இலக்கண நூலை பிச்சை இபுறாஹிம் புலவரின் வேண்டுதலின் பேரில் செய்தார். அதுபற்றிய மதிப்புரை ‘சுதேசமித்திரன்’ தினத்தாளில் வெகுசிறப்புடன் வெளிவந்தது. பாவலனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவரின் கவனத்தை ஈர்த்தது. 1901ஆம் ஆண்டு அவரும், பாற்கர சேதுபதி மன்னரும் நாகூர் வந்தபொழுது நாவலரை சந்தித்தனர். அப்பொழுது பாற்கர சேதுபதி நாவலரை நோக்கி ‘அருந்தமிழ்ப் புலவீர்! நுமக்கு யாது வேண்டும்? கூறுமின்!’ என்று வினவினார். அதற்கு நாவலர் ,’நாடு செகிற்கொண்டு பீடுகெழு குடிதழீஇ, முற்றக்காக்கும் கொற்றக்குடையோய்! தமிழ்வளர்த் தருண்மின்!’ என்றார். அவருடைய அவ்வேண்டுகோளை ஏற்று பாற்கர சேதுபதி மன்னரும், பாண்டித்துரைத் தேவரும் அவ்வாண்டிலேயே மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கத்தை நிறுவி, நாவலரை அதன் முதற்பெரும் உறுப்பினராக ஏற்றுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளின் பேரில் ‘மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராற்றுப்படை’யை இயற்றி,அங்குச் சென்று அதனை அரங்கேற்றினார் நாவலர். அதில் அவர் ஒரு புலவரை நோக்கி, ‘மதுரைக்கு நடந்து சென்றால் நாள் பல செல்லும். ஆதலின் புகைவண்டியில் செல்லின் விரைவில் செல்லலாம்’ என்று கூறிப் புகைவண்டியை வர்ணிக்கும் விதம் வியத்தற்குரியதாய் அமைந்துள்ளது. அதில் அவர் புகைவண்டித் தொடரை மரவட்டைக்கு நிகராக கூறுகின்றார். அதனைக் கீழே தருகிறேன். படிப்பீர்களாக. படித்து அது புகைவண்டி ஓடும் ஒலியில் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கினையும், புதுமையையும் கண்டுகளிப்பீர்களாக !

காலிற் செல்லி னாளிற் செல்லு
முருமுறுமோ டுற லொழியி
னிருபுறனு மிருப் புருளை
நான்குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
னொலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல் கொள்ள
மரவட்டைச் செல வொப்பச்
செல்பாண்டில் பல் கோத்த
நெடுந்தொடரி னிறை நீண்டு
கடுங்காலிற் கழி விசையின்
எந்திரவூர்தி யிவர்ந்தனிர் படர்மின்
அந்தமில காட்சி அணிபல காண்பிர்.

அவர் இவ்வாறு புலவராற்றுப்படை இயற்றி அரங்கேற்றி வரும்பொழுது அதன் தனிச் சிறப்பியல்களையும், சொற் செறிவையும், பொருள் நிறைவையும் கண்டு பரவசமுற்ற புலவர் பெருமக்கள் திருமுருகாற்றுப்படையினைச் செய்த நக்கீரரையொப்ப அவர் ஆற்றுப்படை இயற்றி இருந்தமையின் அவருக்கு ‘நான்காவது சங்க நக்கீரர்’ என்னும் புகழ்ப் பெயரை நல்கிக் கௌரவித்தனர். மேலும் தமிழ்ச்சங்க மான்மியத்தில் மகாமகோபாத்தியாய உ.வே,சாமிநாதையரை ‘தமிழரசியின் முதல்சேய்’ என்று குறிப்பிட்டு,

தொல்லைவளம் படைத்ததிரி சிரபுரத்துத்
தோன்று புகழ் மீனாட்சி சுந்தரப் பேர்
வல்ல பெரும் தகை மாட்டுப் பன்னூலாய்ந்து
வளர் சங்க நூல்கள் பல வனைந்தஞ் சேற்றி
எல்லவரும் கொண்டாடும் வண்ணம் மேனாட்டு
இறைவர் மகாமகோபாத்தியாயப்பட்டம்
ஒல்லைதரத் தமிழரசி முதற்சேயாகி
ஒளிர் சாமிநாதப் பேருறுமேலோனை

என்று புகழ்ந்துள்ள அக் காப்பியப் புலவர் குலாம்காதிறு நாவலரைப் பற்றிக் கூறும்பொழுது

தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபுராணம்
தகைய பலபிரபந்தம் வசனநூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பத் தந்திட்(டு)
எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிறல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை

என்று பாடி அவரை ‘தண்டமிழின் தாய்’ என்று போற்றினார்.

இவ்வாறு தமிழின் தாயாக விளங்கி தம் காலத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனும்படி தமிழுலகில் தனிப்பெரும் செங்கோல் நடாத்திய நாவலர் வித்துவ ஜனசேவகராய் விளங்கி பல மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களைப் பெரும் புலவர்களாக ஆக்கினார். பிறகாலத்தில் மறைமலை அடிகள் என்று பெயருடன் சுவாமி வேதாசலமும் அவரிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரேயாவார்.

தாம் பாடிய நூற்களுக்குச் சாற்றுக்கவி பெறவும் அவரின் வாழ்த்துதலைப் பெறவும் நாடோறும் புலவர் பெருமக்கள் அவரிடம் வந்தவண்ணமே இருப்பர். அவர்களுடனெல்லாம் இன்முகத்துடன் நன்மொழிப் பேசி அவர்களின் பாக்களில் குற்றம் காணின் இதமாகக் கூறித் திருத்தம் செய்து சாற்றுக்கவி வழங்குவார் நாவலர்.

செவ்வல் மாநகராம் நைனாமுகம்மதுப் பாவலர் எழுதிய குத்புநாயகத்தின் புகழாரத்திற்கு அவர் கொடுத்த சாற்றுக் கவி இதோ வருமாறு:

தனிக்குமுயர் ஒலிபெருமான் கழற்கணியும் பொருட்டரிய
தமிழின்பம்
பனிக்குமென செவ்வல்நகர் நெயினான் முகம்மதென்னும்
பாவல்லான் சொற்
குனிக்கும் அணிப்பாவினத்தால் கோத்த புகழாரம் இது
கூறுங்காலை
இனிக்கும் அமுதெங்கோ, முக்கனி எங்கோ,
தேனெங்கோ
என்னென் பேனே

இவ்வாறு தம்மினும் சிறிய புலவர்களுக்கேலாம் சிறப்பு மிகு சாற்றுக்கவி நல்கிக் கௌரவித்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த நாவலர் எளிமையின் திருவுருமாகவே விளங்கினார். புலவர் நாயகம் செய்கப்துல்காதிறு நெயினார் லெப்பை ஆலிம் புலவர் அவர்களைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும்பொழுது, ‘இவர்க்கும் கல்விதாம் எம்மிடம் கிஞ்சமும் இலெஇயே’ என்று கூறியுள்ளார்.

உடையிலும் அவர் அப்படித்தான். போனகிரி என்னும் ஒருவகை நாட்டுக் கைலியை உடுத்தி, மூடுகழுத்துப் கோட்டும் குஞ்சமில்லாத துருக்கித் தொப்பியும் அணிவார். கோட்டுப்பையில் கடிகாரமும் பேனாவும் மூக்குக் கண்ணாடியும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். கைவிரலில் புஷ்பராகக் கல் பதித்த வெள்ளி மோதிரம் ஒன்று மட்டும் அணிந்திருப்பார்.

அவர் அருந்தும் உணவும் மிகவும் எளிமையானதாயிருந்தது. அவர் காலையில் அருந்துவது நீராகரம். மாலையில் அருந்துவது சீரகத் தன்ணீர். காலை உணவு பசும்பாலும் மாக்கழியும் வாழைப்பழமும்தான். இரவு உணவு பழமும் பாலும் சிற்றுண்டிப் பலகாரங்களும்தான்.

காலையிலும் மாலையிலும் கடற்கரை சென்று உலவிவரும் நாவலர் இரவு ஏழரை மணி முதல் ஒன்பது மணிவரை நூல்கள் படிப்பார். காலை ஆறுமணி முதல் ஏழரை மணிவரை கவி இயற்றுவார்.

அவர் புலவராற்றுப்படையில் புலவர்களுக்கு வாரி வழங்கித் தம் பெயரை நிலைநாட்டிச் சென்ற கடையெழுவள்ளல்கள் இப்பொழுதில்லையே என்று வருந்தி,

கற்றுணர் மக்கள் அருமை இற்றென
அளந்(து) அரின்(து) அதனை உளத்தகம் நெளிந்து
முன்னாள் பொன்னும் மணியும் சிதறி
தம்பெயர் விட்டனர் இம்பரின் மாய்ந்த
பாரியும் காரியும் ஆயும் ஓரியும்
பேகனும் நள்ளியும் அதிகனும் மல்கி
வரையாது கொடுத்தோர் வாழ்நாள் ஈதன்று

என்று பாடியிருந்தபோதினும் அவருடைய வாழ்வு பிறர் தயவை நாடாது தன்னிறைவு பெற்றிருந்தது.

அவருடைய வாழ்க்கை வளவாழ்வு என்று கூறப்பட இயலாதபோதினும் வறுமையைவிட்டும் அப்பாற்பட்டிருந்தது. அவர் யாருக்கும் உதவி வேண்டி சீட்டுக் கவி எழுதி அனுப்பவமில்லை. யாரிடமும் நேரில் சென்று உதவி வேண்டியதுமில்லை.

அவருடைய முதல் மனைவியார் மக்தூம்கனி அம்மாளுக்குப் பிள்ளை உண்டாகாதலின் அவரின் உத்திரவுக் கிணங்கி நாவலர் ஆமினா என்னும் மங்கையை மணம் செய்து கொண்டார். அம் மங்கையார் மூலமாகவே நாவலருக்குத் தம்முடைய 74-வது வயதில் ஆரிபு என்னும் அருமந்த மகவு ஒன்று பிறந்தது. அவரே ஆரிபு நாவலர் என்ற பெயருடன் தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் தர்கா வித்வானாகவும் நாகூரில் வாழ்ந்து வந்தார். அம்மகவு பிறந்த பத்தாம் நாள் தாயார் ஆமினா விண்ணுலகம் எய்திவிட்டார். ஆமினா இறந்த ஓராண்டில் அதாவது 1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் நாள் புதன்கிழமை நாவலரும் இம்மன்ணுலகை எள்ளி இகழ்ந்து பொன்னுலகை அடைந்து விட்டார். இதனையே அவருடைய அருமந்த மைந்தர் ஆரிபுநாவலர் பின்னர் தாம் பாடிய கையறு நிலையில்,

முன்னாளில் உன்றன் மனையாம் எம் அன்னை
முதல்வன் கொடுத்து வரம்போல்
பன்னாள் தவத்துப் பலனாக எம்மைப்
படியார ஈன்ற பதுநாள்
தன்னாளில் ஆவி கழிகொள்ள நீயும்
தகுமோ இதென்ன தனியாய்
இன்னாளில் விட்டே ஓராண்டு போக்கி
இறந்தாயோ எந்தன் அப்பா!

என்று அலறித் துடிக்கின்றார். அவருடைய இறப்புச் செய்தி கேட்டுத் தமிழகமே துக்கக் கடலில் மூழ்கியது. அவரின் மாணவரான மறைமலை அடிகளோ தமது ‘ஞான சாகரம்’ இதழில்

வாடுகின்ற வையத்தின்
வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ
குலாம் காதிர் பெரும்புலவோய் !
நீடுவளப் புத்தேளிர்
நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ ?
இனியெங்குற் றுணர்வேனோ’

என்று பாடி ஏங்கித் தவித்தார். காரை ‘முகம்மது சமதானி’ என்னும் பத்திரிக்கை,

தென்னாகை வாழ்ந்த குலாங்காதிர்
நாவல தேசிகர்மாய்
பொன்னோட்டின் வாழ்வைப் பெரிதுன்னிப்
போயினர் போயினமற்
றென்னாட்டி னும்மிவர் மெய்க்கீர்த்தி
எங்க ளிருதயத்தின்
மன்னோகை மற்றிழிந் தந்தோ !
அவலங் குடிவந்ததே

என்று புலம்பிற்று.

சுதேசமித்திரன் செய்தித்தாள், ‘மதுரைத் தமிழ்ச் சங்க அங்கமொன்று போயிற்று. தென்னிந்தியாவில் ஜொலித்த விண்மீன் விழுந்தது. தமிழுலகின் தனம் அழிந்தது.’ என்று அலறியது. அவருடைய மாணவர் பிச்சை இபுறாகிம் புலவர் ,’என்னுயிரே என்றுரைத்த நின்னுயிர்தான் பிரிந்த விதமென்னே அந்தோ’ என்று அழுது கண்ணீர் வடித்தார்.

இலங்கை முஸ்லீம் நேசன்,

‘ஏ மண்ணகமே! சற்றேனும் மறைவுற்ற நாவலரின்
உடலைக் கண்டு
உண்ணாதே! அவன் நாவை உண்ணாதே!’

என்று அலறித் துடித்தது.

எனினும் ‘மண்ணிலிருந்தே படைக்கப்பட்டீர்கள். மண்ணுக்கே திரும்புவீர்கள்’ என்ற மாமொழிக்கு நாவலரும் இலக்கானார். அவருடைய பூதவுடல் மண்ணில் புதையுண்டபோதினும் அவருடைய புகழுடல் மண்மீது பவனி வந்து கொண்டுள்ளது. ‘நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம்காண் நாவலர்’ என்று அன்று மும்முறை நாவலர் கோட்டத்தில் வைத்துப் பொன்னம்பலம் பிள்ளை மொழிந்த சொற்கள் இன்றும் தமிழகத்தின் எண் கோணங்களிலும் எதிரொலி செய்து நாவலரின் இசையைப் பரப்பிக் கொண்டுள்ளன

– ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ – அப்துற் றஹீம் –

2 பின்னூட்டங்கள்

  1. வானதி said,

    07/09/2022 இல் 11:32

    தோண்டுங்கால் சுரக்கும் வற்றாக்கேணி நம்தமிழ்
    ம மகள் என்று விம்முகிறேன்


பின்னூட்டமொன்றை இடுக