திகட்டவே திகட்டாத தி. ஜானகிராமன்

1921ல் பிறந்த நம் தி. ஜானகிராமன் தன் 27 வயதில் – தமிழின் சாதனை நாவலான ‘மோகமுள்’ளை எழுதியதாகச் சொல்கிறார்கள். அந்த காலத்தில் குரு ரங்கண்ணா யார்?  சிஷ்யர் பாலூர் ராமு யார்? விச்வாம்பர் காணே யார்? இப்போதையை வித்வான்களில் அந்த பாத்திரங்கள் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்விகள் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என்னுள் குறுகுறுக்கும். எத்தனை முறை படித்திருப்பேன் இந்தப் பகுதியை!

பிடியுங்கள் தீபாவளி ஸ்வீட் , வாழ்த்துக்களுடன்! அப்படியே நண்பர் தாஜ் எழுதிய ‘தி.ஜானகிராமன் – அழியா நினைவுகள்’ கட்டுரையையும் வாசித்துவிடுங்கள். நன்றி.

***

‘மோகமுள்’ நாவலிலிருந்து…

… ரங்கண்ணா வீட்டிற்குள் பாபு நுழையும் முன்பே தம்புராவின் நாதம் சுருதி சுத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே போனதும் யார் யாரோ வந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான் அவன்.

ரங்கண்ணா உட்கார்ந்திருந்தார். சாம்பன் இருந்தான். ஷண்முகம் இருந்தான். எதிரே நாலுபேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாரும் சாணக்கலரில் கோட்டு அணிந்திருந்தனர். எல்லாத் தலைகளிலும் குல்லாய். எல்லாருக்கும் மீசை. கறுப்பாக இருந்தார்கள். உட்கார்ந்திருக்கும்போதே எல்லாருக்கும் பஞ்சகச்சம் கட்டியிருந்தது போலிருந்தது. தென் தேசத்தவர்களே இல்லை. நால்வரில் ஒருவனின் வயது ஐம்பதிருக்கும். தம்புராவை மீட்டிக் கொண்டிருந்தான். தஞ்சாவூர் தம்புரா இல்லை. தந்தத்தில் கமலவேலைகள் ஒன்றும் இல்லாத மொட்டையாக ஒரு தம்புரா மீரஜ் சுரைக் குடத்துடன், நாட்டுப்புறத்துப் பெண்ணைப்போல, காத்திரமாக அவன் தோளில் சாய்ந்து பெரிய நாதமாக எழுப்பிற்று. இவ்வளவு பெரிய நாதம் எதற்கு என்று பாபுவுக்குப் புரியவில்லை.

‘பாபுவா வா, வா’ என்றார் ரங்கண்ணா. ‘நல்ல வேளையா வந்தியே! நல்ல சமயத்துக்கு வந்தே உட்கார்’ என்றார். பாபு உட்கார்ந்து கொண்டான்.

அவர்கள் அணிந்திருந்த கோட்டுகள் புதிதாகவும் இல்லை. சாணி  நிறத்தில் கசங்கலும் அழுக்கும் ஏறியிருந்தன. இடுப்பு வேட்டிகளில் பழுப்பு.

தம்புராவை மீட்டிக் கொண்டிருந்தவன் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களிடம் திரும்பி அவர்கள் பாஷையில் இரண்டு நிமிஷம் பேசினான். மராத்தி பாஷை மாதிரி இருந்தது.

சுருதி மூன்றரைக்கட்டை இருக்கும். ரங்கண்ணாவின் தம்புராவின் நாதத்தைப்போல இல்லை. பெரிய நாதமாக, கனநாதமாக எழுந்து, கூடம் முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தது.

கண்ணை மூடிக் கொண்டிருந்தான் மீட்டிக் கொண்டிருந்தவன். ஒரு நிமிஷம் கழித்து வாயைத் திறந்து சுருதி சேர்த்தான்.

எல்லோர் முகத்திலும் அந்தக் குரலைக் கேட்டு ஒரு மலர்ச்சியும் பிரமிப்பும் ஒளிர்ந்தன. சாரீரத்தில் ஒரு கனம், ஒரு கம்மல். பெரிய தூணைப்போன்ற சாரீரம். அவ்வளவு கனத்திற்குக் இவ்வளவு இனிமை கொடுத்தது அந்தக் கம்மல்தான். ‘ஆ..’ என்று நீண்டு கார்வை கொடுத்து, சுருதியோடு நின்று கொண்டிருந்தான் அவன். அவனோடு பக்கத்திலிருந்த இன்னொருவன் – இருபத்திரண்டு வயதிருக்கும் அந்தப் பையனும் சேர்ந்து கார்வை கொடுத்தான். பெரியவர் குரலில் இருந்த அழுத்தம் இதில் இல்லை. ஆனால், இனிமைக்குக் குறைவில்லை.

இது என்ன சாரீரம்! இவ்வளவு சுத்தமாகவா மனிதக் குரல் இருக்க முடியும்! இந்தக் குரலுக்குத்தான் எவ்வளவு பலம். ஆ..ம் என்று அலட்சியமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றது பாபுவுக்குக் கவலையாகத்தானிருந்தது, இவ்வளவு மொத்தமாக சாரீரம் மேலே போய் எப்படி எட்டப் போகிறது என்று. ஆனால், மந்தரத்தில் நாலு நிமிஷம் நின்று பிரமிக்க அடித்துவிட்டு , அவன் படிப்படியாக ஏறி, மேல் ஷட்ஜமத்தில் ஏறி கம்பீரமாகக் கார்வை கொடுத்து நின்றபோது, அவன் உடல் அதிர்ந்தது. புல்லரித்தது. புல்லரித்ததோடு கண்ணில் நீர் மல்கிற்று. என்ன குரல்!

ரங்கண்ணா கண்ணை மூடி, புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார். ஆகா ஆகா என்று ஆகாகாரம் செய்தார். மகுடிமுன் நாகம்போல அவர் உடல் ஆடிக்கொண்டிருந்தது. அந்த சாரீரம் கார்வையோடு நிற்கவில்லை. பிரமாதமான புரளல்களுடன் புரண்டபோது, அவர் வினாடிக்கு வினாடி ஆகாகாரம் செய்துகொண்டிருந்தார். கடலைத் தாண்டுமுன் அனுமான் தன் பலத்தை அறிந்துகொள்ள மரங்களையும் மலைகளையும் தட்டிவிட்டு, அங்குமிங்கும் அலைந்து விர்ரென்று மேலே கிளம்பியது போல, கீழே நின்றுகொண்டிருந்த சாரீரம் மேலே ஏறி சஞ்சரித்ததைக் கேட்கும்போது பாபுவின் உள்ளத்தில் என்னென்னமோ உருவங்கள் எழுந்தன. கடைசியில் உருவங்கள் அழிந்து, குரலிலேயே லயித்து விட்டான்.

‘ஆகா.. ஆகா… கந்தர்வா சாரீரம்டா இது. மனுஷ்ய சாரீரம் இல்லை’ என்று ரங்கண்ணா கண்ணை மூடிக்கொண்டே சொல்லிக்கொண்டேயிருந்தார்.

அவர்கள் இருவரும் வேறு நினைவில்லாமல் பாடிக்கொண்டிருந்தார்கள். இடைகழி நிலையில் தெருவில் போகிறவர்களின் கூட்டம் வந்து மொய்த்துக்கொண்டிருந்தது.

மூன்று மணி நேரத்திற்கு மேல் பாடினார்கள். பெரிய மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. ஆண்மையும் சக்தியும் நிறைந்த இந்தக் குரல்களுக்குப் பிறகு, பேசின பேச்செல்லாம், எலி முணுமுணுப்பதைப் போலிருந்தது.

‘பாபு, என்ன சாரீரம் பாத்தியாடா?’ என்றார் ரங்கண்ணா. பாபுவுக்கு பதில் பேசத் தெரியவில்லை. அவர்களைக் குழந்தை மாதிரிப் பார்த்தான்.

‘மகாராஷ்டிர தேசமாம். யாத்திரை போறாளாம் ராமேச்வரத்துக்கு. இப்படி ஷேத்ரங்களிலெல்லாம் இறங்கி இறங்கிப் பார்த்துண்டு போறாளாம். இவர் பிள்ளையாம் இந்தப் பையன்.’

பெரியவர் புன்சிரிப்பு பூத்துக்கொண்டிருந்தார்.

‘நேத்திக்கி கும்பேச்வரன் கோயில்லெ பாடிண்டிருந்தாராம். ஷண்முகம் திருவையாற்றிலிருந்து வந்தவன் அங்கே போய் கேட்டுண்டு நின்னானாம். இருக்கிற ஜனங்களெல்லாம் பிச்சைக்காரங்கன்னு நெனச்சிண்டு, நாலணா எட்டணான்னு காசு போட்டதாம். எல்லாத்தையும் வாங்கி உண்டியிலே போட்டுவிட்டாளாம் இவா’

பாபு சங்கு சொல்லிக்கொடுத்த அரைகுறை ஹிந்தியை மறந்துபோன ஹிந்தியை ஞாபகப்படுத்திக்கொண்டு என்னென்னமோ கேட்டுப் பார்த்தான். அவர்கள் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. அவர் சொன்னதற்கு மேல் அதிகமாக ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. கூடவே செருப்புச் சப்தம் கேட்டது. இரண்டு மூன்று பேர் வந்தார்கள்.

‘ராமு வந்திருக்கார்’ என்று எழுந்து பார்த்த பாபு, ரங்கண்ணாவிடம் தெரிவித்தான். சாம்பனும் ஷண்முகமும் எழுந்து கொண்டார்கள்.

பாலூர் ராமு ‘நமஷ்காரம் அண்ணா’ என்று வடகத்தியர்களைப் புரியாமல் ஒரு தடவை பார்த்துவிட்டு , ரங்கண்ணாவை விழுந்து நமஸ்காரம் செய்தார்.

‘எப்ப வந்தே?’

‘இன்னிக்கித்தாண்ணா’ என்று எழுந்து அவர் காலைத்தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் பாலூர் ராமு.

பாபுவுக்கு உடனே ஞாபகம் வந்தது. ‘திருட்டுப் பயடா இந்த ராமு’ என்று ரங்கண்ணா சொல்வதை நினைத்து, அவன் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

‘அண்ணா அண்ணான்னு விழுந்து விழுந்து காலைப் பிடிப்பன். கையைக் கட்டிண்டு அடிமை மாதிரி நிப்பன். காசுன்னா விழுந்து மூர்ச்சை போட்டுடுவன்; இல்லாட்டி இதோ வந்துட்டேன்னு நழுவுப்பிடுவன்’ என்று ரங்கண்ணா சொல்கிற பாலூர் ராமு இவர்தான்.

பாலூர் ராமு ரங்கண்ணாவிடம் குருகுலவாசம் செய்தவர். அவர் இப்போது சென்னையோடு போய்விட்டார். கதர்வேஷ்டி, கதர் பஞ்சகச்சம் என்று தேசபக்தியையும்  அரசியல்வாதிகளிடமும் பத்திரிக்கைக்காரர்களிடமும் குருகுலவாசம் செய்ததுபோலப் பெற்றுக்கொண்டு விட்டார். இரண்டு வருஷத்திற்கு முன்னால் பார்த்ததைவிட நாலு சுற்று உடல் பெருத்திருந்தது. பெரிய வக்கீல்கள், நீதிபதிகள், ராஜ்ய நிர்வாகிகள், மந்திரிகள் எல்லாரும் அவருக்கு சம அந்தஸ்து கொடுத்து விட்டார்கள் இப்போது. எட்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சாம்பு நடத்துகிற உற்சவத்தில் அவர் ஒல்லியாக முகத்தைப் பழிப்புக் காட்டிக்கொண்டு பாடிய காட்சி நன்றாக ஞாபகம் இருக்கிறது. மறுநாள் காலையில் ‘அண்ணா ,இந்த  பனியன் நன்னாயிருக்கே’ என்று சாம்புவின் ஜவுளிக்கடையில் வந்து அவர் கெஞ்சியதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இந்த இறைஞ்சும் இளிப்புக்குப் பதிலாக, இப்போது ஒரு அலட்சியப் புன்னகை வந்திருக்கிறது. அந்த அலட்சியம்தான் கோட்டுப் போட்டுக்கொண்டிருந்த வடக்கத்தியர்களைப் பார்த்து ‘அண்ணாவுக்கு என்ன வேலை? இந்தமாதிரி தெருவிலே போறவனையெல்லாம் கூட்டி வச்சிண்டு கூத்தடிப்பர்’ என்று புன்னைகை சிரிப்பது போலிருந்தது. ராமுவோடு இன்னும் இரண்டுபேர் வந்திருந்தார்கள். பெரிய மனிதர்கள் தனியாகப் போகமுடியாது என்பதையும் ராமு கற்றுக்கொண்டுவிட்டார்.

‘சௌக்யம்தானே?’

‘இருக்கேண்ணா.?’

‘மெட்ராஸ் எல்லாம் எப்படி இருக்கு?’

‘சௌக்யமா இருக்கு, அண்ணா அனுக்ரகத்திலே’

உடனே வடக்கத்தியர்களைக் காட்டி அவர்கள் சாரீரத்தைப்பற்றி ஒரு அத்தியாயம் ஆரம்பித்தார் ரங்கண்ணா. ‘அப்படியா? பேஷ் அப்படியா?’ என்று மனதோடு ஒட்டாத ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார் ராமு.

‘படே வித்வான்’ என்று திடீரென்று ஒரு சிரிப்புடன் ஒரே வார்த்தையில் , ராமுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு , மறுபடியும் அவர்களைப் பாடச் சொன்னார் ரங்கண்ணா.

‘படே வித்வான்.. இவர் கேட்கட்டும்’ என்று காதில் கைவைத்து ஜாடை காட்டி, ரங்கண்ணா ராமுவை மறுபடியும் அறிமுகப்படுத்தினார். ‘என்னடா சிரிக்கிறே பாபு, நான் பேசற பாஷை சரியாயில்லியா?’

வடக்கத்திப் பாடகன் மறுபடியும் ராமுவுக்கு  ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் பாட ஆரம்பித்தான். மந்த்ர பஞ்சமத்தில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டு, கீழே இறங்கி மந்த்ர ஷட்ஜமத்திலும் ஒரு நிமிஷம் நின்று ராகச் சாயைக் காண்பித்ததைக் கேட்டதும் ராமுவின் அலட்சியப் புன்சிரிப்பு உதட்டுக்குள் ஒளிந்து கொண்டது.

‘இது என்னடா சாரீரம்! அதள பாதாளங்களுக்கெல்லாம் போறது! மேலே போனா, சத்யலோகம் எல்லாம் போறது! த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப்பிரம்மாதிகளாலே. இவன் போய் எட்டிப்பிடுவான் போலிருக்கே!’ என்று கண் அகல வியந்தார் ரங்கண்ணா.

பதினைந்து நிமிஷம் மீண்டும் பாடி நிறுத்தினான் அவன்.

‘சாரீரம் எப்படியிருக்கு பாத்தியா ராமு?

‘அவாள்ளாம் கொடுத்துவச்சவா அண்ணா’ என்று பதில்கொடுத்தார் ராமு.

‘கொடுத்துவக்யவாவது? அப்படிப் பாடுபட்டிருக்கான், பட்ட பாட்டுக்குப் பலன் கிடைச்சிருக்கு.’

ராமுவுக்கு முக்கால் கட்டைக்கு மேல் சாரீரம் எழும்பாது. சற்று அசைப்பில் கேட்டால் காக்காய்கள் ஒன்றின் மூக்கில் இன்னொன்று மூக்கைவிட்டுக் குழறும்போது கேட்கும் தொனி மாதிரி இருக்கும். ஆனால் அதை ஒரு தினுசாகப் பக்குவப்படுத்தி, தன் ஞானபலத்தினால் ஒப்பேற்றி, ஜனங்களில் காதுக்கும் அதை பழக்கப்படுத்திப் பேரானந்தமடைந்தவர் அவர். பத்திரிக்காரர்களையும் பலவாறாக அண்டி, இதுதான் உயர்ந்த சங்கீதம் என்று அவர்களில் சிலர் எழுதி, ஜனங்கள் அதை ஏற்று ஒரு மாதிரியாக உச்ச ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டவர்.

‘எழுபது வருஷமா நான் சங்கீதம் கேட்கிறேன். சங்கீதத்தைப் பற்றி தியானம் பண்றேன், சிந்தனை பண்றேன். ஏதோ பகவான் கிருபையினாலெ அந்த சமுத்திரத்திலே கொஞ்சம் காலையும் நனைச்சிண்டு நிக்கிறேன். ஆனா இந்த மாதிரி சாரீரத்தை நான் கேட்டதில்லை ராமு. இது பரம ஆச்சரியமான சாரீரம்’

அவர்கள் யாத்திரைக்கு வந்ததைப்பற்றியும் கோயில் கண்ட இடங்களில் உள்ளே சென்று அவர்கள் பாடுவதையும்  ஷண்முகத்தினிடம் தெரிந்து கொண்டதையும் மீண்டும் சொன்னார் ரங்கண்ணா.

அதைத் தவிர மேலே ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் பேசுகிற பாஷை புரியவில்லை.

‘ஆளைப் பார்த்தா காக்கா புடிக்கி மாதிரி இருக்கான். கந்தர்வனாப் பொழியிறானே..ம்!’ என்று அவனையே பார்த்தார் ரங்கண்ணா.

‘உங்க குரு யார்?’ என்று ஜாடை செய்து கேட்டார் ராமு.

‘விச்வாம்பர் காணே’

‘காணேயா..? கேள்விப்பட்டதில்லியே.. அப்படி பெரிய இடத்து சிஷ்யன் இல்லே போலிருக்குண்ணா’ என்றார் ராமு.

‘எதாயிருந்தா என்னா? சாரீரம் மர்மாவை எல்லாம் சிலிர்க்க அடிக்கிறது. கேக்கறபோதே மயிர்க்கூச்செறியறது. அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப்பிடறான். எந்த இடத்து சிஷ்யனாயிருந்தா என்ன? பெரிய இடத்து சிஷ்யாளுக்கெல்லாம் சாரீரம் வாய்ச்சிட்டுதா என்ன? பெரிய இடம்னா நாலு பேர் தூக்கிவச்சா பெரிய இடம்’ என்றார் ரங்கண்ணா.

ராமு புன்சிரிப்பு பூத்தார். சற்றுக் கழித்து, ‘இவ்வளவு சாரீரம் இருக்கே, ஆனா அவா சங்கீதம் என்ன இருந்தாலும் நம்ம சங்கீதம் மாதிரி வருமா அண்ணா?’ என்றார்.

‘அதை கேட்டுப் பழகினா அது நன்னாயிருக்கும். கழுதையைப் போய்க் கேட்டா, கழுதை கத்தறதுதான் ரசம்னு சொல்லும். வெள்ளைக்காரனுக்கு நம்ம சங்கீதம் புரியுமோ? அதுமாதிரி இது. நமக்கு என்னவோ போலிருக்கு. அதிலே ஊடாடினாத்தான் அதிலே இருக்கற அழகு தெரியும். நமக்கு நம்ம சங்கீதம்தானே தெரியும்’

*

நன்றி : மீனாட்சி புத்தக நிலையத்தார்.

*

இப்போதைக்கு இது போதும். இந்த லெட்சணத்தில், அந்த வடக்கத்தி கந்தர்வர்கள் சாதாரணப் பாடகர்களாம், முதல் கிளாஸ் கூட இல்லையாம், ரண்டாவது கிளாஸ் பாடகர்களாம்! யமுனா மூலமாக இப்படிச் சொல்வார் ஜானகிராமன். நம்மூர் வித்வான்கள் சிலரைப் பற்றி – அந்த கந்தர்வர்கள் சொல்வதாக – வேறொரு கிண்டல் வரும். எல்லாம் வழியோடு போனால்தான் உண்டு…!

‘நன்றாகப் பாடுகிறார்கள். ரொம்பவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் பாடவே இல்லையே. எப்படியாவது தப்பித்துக்கொண்டு ஓடிவிட ஆசைப்படுவது போலிருக்கிறது குரலைக் கேட்டால்’

‘தப்பிச்சிண்டு ஓடுறது யாரு?’ – பாபு

‘குரல்!’

7 பின்னூட்டங்கள்

  1. மஜீத் said,

    04/11/2010 இல் 12:31

    நன்றி, நன்றி, நன்றி.
    ஹாப்பி ‘தீவாலி’!!!

  2. Maharajapuram Balakrishnan said,

    05/11/2010 இல் 01:48

    திஜா’வை அனுபவித்துப் படித்து, பகிர்ந்தமைக்கு நன்றி.

    இது போல மேலும் உங்கள் அனுபவங்களை, பதிவுகளை எதிர்பார்க்கும்,
    -பாலா

  3. தாஜ் said,

    05/11/2010 இல் 17:36

    தி.ஜா.வின் வரிகள் மனதைப் பிசைய வைக்கிறது.
    படிக்க என்னென்னத்தையே கற்றுத்தந்துவிட்டு
    இன்றைய மூளிகளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டாரே!
    இன்றையப் படைப்பாளிகள் உச்சம் தொடுவதற்குப் பதிலாக
    அகலத்தில் விரிகிறார்கள்.
    அவர்கள் சம்பாரிக்க
    நாம் கண்டதையும்
    வாசிக்க வேண்டியிருக்கிறது.
    – தாஜ்

    • மஜீத் said,

      05/11/2010 இல் 20:36

      //ராமுவுக்கு முக்கால் கட்டைக்கு மேல் சாரீரம் எழும்பாது. சற்று அசைப்பில் கேட்டால் காக்காய்கள் ஒன்றின் மூக்கில் இன்னொன்று மூக்கைவிட்டுக் குழறும்போது கேட்கும் தொனி மாதிரி இருக்கும். ஆனால் அதை ஒரு தினுசாகப் பக்குவப்படுத்தி, தன் ஞானபலத்தினால் ஒப்பேற்றி, ஜனங்களில் காதுக்கும் அதை பழக்கப்படுத்திப் பேரானந்தமடைந்தவர் அவர்//

      நீங்க சொன்ன மூளிகளைத்தானே அவர் பாலூர் ராமுன்னார்?

  4. 06/11/2010 இல் 22:06

    கொஞ்சலான கொலுசு சத்தம் போல ஓர் அழகு நடை தி.ஜா.வுக்கு அவரை ஆழ்ந்து வாசித்தவர்கள் எழுத்தில் அந்த கொலுசின் ஓசை பிரதிபலிக்காமல் இருக்காது. அவரின் வசீகரத்தில் அதிகம் பாதித்த எழுத்தாளர் பாலகுமாரன். தி.ஜா.வின் டயலூட்டட் வெர்சன் அவர்.

  5. Kannan said,

    12/11/2010 இல் 15:38

    நல்ல தேர்வு. ஒரு கட்டத்தில், சொற்கள் மறைந்து சங்கீதத்தில் லயிக்கச் செய்தன.

  6. abedheen said,

    15/01/2013 இல் 13:15

    மோகப் பெருமயக்கு – சுகுமாரன்
    http://www.kalachuvadu.com/issue-157/page86.asp


பின்னூட்டமொன்றை இடுக