ஆபிதீன் காக்கா : வறுமை தின்ற புலவன்

எத்தனையோ புலவர்கள் , எழுத்தாளர்கள் நாகூரில் இருந்தாலும் ஆபிதீன் காக்கா மேல் தனிப்பட்ட பிரியம் எனக்கிருக்கிறது. பெயர் ஒற்றுமையா, என்னைப் போலவே ஒவியனாகவும் இருந்ததாலா, நாடு நாடாக சுற்றியும் தன் வறுமை தீராது ஆனால் அதையும்கூட ‘வறுமை என் முன் தோற்றது’ என்று எள்ளி நகையாடியதாலா… சொல்லத் தெரியவில்லை. ஜே.எம்.சாலி அவர்கள் எழுதிய கட்டுரையின் முடிவில் புலவரின் பாடல் ஒன்றையும்  சேர்த்திருக்கிறேன்.

‘தேன்கூடு’ மற்றும் ‘அழகின் முன் அறிவு’ பாடல்களை (ஜபருல்லாஹ் நானா கொடுத்தார்) விரைவில் பதிகிறேன், இன்ஷா அல்லாஹ்; இல்லை , நிச்சயம் பதிகிறேன்!

– ஆபிதீன் / துபாய் –

***

செம்மொழிச் செல்வர் புலவர் ஆபிதீன் – ஜே.எம்.சாலி

(இலக்கிய இதழியல் முன்னோடிகள் தொடரிலிருந்து../ சமநிலைச் சமுதாயம் ஜூன் 2006)

‘சிறந்த கற்பனை என்பது, விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் போற்றி மகிழ வேண்டும் என்ற நன்னோக்கத்தால் . கவிஞர்கள் அந்தக் கற்பனைகளுக்கு அழகிய வடிவம் தந்து பாட்டுகளாக வாழச் செய்கின்றனர். விழுமிய உணர்ச்சிகளும் அத்தகையனவே. நில்லாமல் மாறிச் செல்லும் அவற்றிற்குப் பாட்டுக்கள் நிலையான வடிவம் தந்து நெடுங்காலம் பலருக்கும் பயன்படுமாறு செய்கின்றன. இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர்  ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுத்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கின்றோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்க வல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும் நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைத்து வாடும் ஏழைப்பெண் பற்றிய பாட்டு, நாட்டில் உள்ள வறுமையை எடுத்துக் காட்டுவது.’

– டாக்டர் மு.வ. அவர்கள் 1960 ஆம் ஆண்டில் புலவர் ஆபிதீனின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியே இந்த வரிகள்.

‘அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்பு  ஒரு ரூபாய் விலையில் அந்த ஆண்டில் வெளிவந்தது.

‘புலவர் ஆபிதீன் அவர்கள் நாடு அறிந்த நல்ல புலவர். அவரின் இசைப் பாட்டுக்கள் தமிழ் நாட்டின் பட்டிதொட்டிகளையும் எட்டியிருக்கின்றன’ என்று அணிந்துரையில் எழுதினார் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல , தமிழ்கூறும் நல்லுலகெங்கும் செம்மொழிப் பாவலராகத் தடம் பதித்த இலக்கிய இதழியல் முன்னோடி , நாகூர் தந்த ஆபிதீன்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்  சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.

புலவர்கோட்டையெனும் புகழ் பெற்ற நாகூரைச் சேர்ந்த ஆபிதீன் நாடு சுற்றிய படைப்பாளர். இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் எழுதிக் குவித்தவர்.

கவிஞர், பாடலாசிரியர், நாடகக் கலைஞர், ஓவியர், பத்திரிக்கையாளர், பன்மொழி அறிந்தவர், சொற்பொழிவாளர், வணிகர் என் பன்முனைச் சிறப்புக்குரியவர்.
நூல்கள் :

‘அழகின் முன் அறிவு’ கவிதைத் தொகுப்புக்கு முன் ஒன்பது நூல்களை வெளியிட்டதாக புலவர் ஆபிதீன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மூன்று படைப்புகள் அச்சேறாமல் பெட்டியில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் சில நூல்கள் மட்டுமே கிடைப்பதாக நாகூர் இலக்கிய ஆய்வாளர் மு. ஜாபர் முஹியித்தீன் குறிப்பிட்டுள்ளார்.

நவநீதகீதம் அவற்றுள் ஒன்று. 10 பாடல்களைக் கொண்ட நூல் இது. நபிகள் பெருமானார், நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை ஆகியோர் மீது பாடப்பட்ட பாடல்களே நவநீத கீதம்.

இந்த நூல் 1934 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் லெஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது.

திருநபி வாழ்த்துப்பா  எனும் பதிப்பு 1935ம் ஆண்டில் ரங்கூன் நகரில் வெளியிடப்பட்டது.

பர்மியத் தலைநகரில் நடைபெற்ற மீலாத் விழாவை முன்னிட்டு அந்நகரிலேயே இப்பதிப்பு வெளியிடப்பட்டது. கவிஞரின் பெயர் மு. ஜெய்னுல் ஆபிதீன், மு.ஜெ.ஆபிதீன்  என அந்நாளில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தேன்கூடு’ புலவர் ஆபிதீனின் மற்றொரு படைப்பு. இலங்கைத் தலைநகர் கொழும்பில்  1949-ஆம் ஆண்டில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.

முஸ்லிம் லீக் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் ஆகியவை 1961-ல்  வெளியிடப்பட்ட நூல்கள். மற்ற நூல்கள் கிடைக்கவில்லை.

யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1961-இல் வெளியிட்ட ‘அழகின் முன் அறிவு’  பல்சுவைப் பாடல்களின் இனிய தொகுப்பு.

இதில் பொதுஅறிவுப் பாக்களே அதிகம். இஸ்லாமியப் பண்பாடு பேசும் பாக்கள் மிகமிகக் குறைவு. காரணம் முஸ்லீம்கள் மட்டுமின்றித் தமிழ்ப் பெருங்குடி மக்களும் படிக்க வேண்டுமென்பது என் பேரவா’ என் முன்னுரையில் குறிப்ப்பிட்டிருக்கிறார் புலவர் ஆபிதீன்.

அந்நாளில் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கிய சங்கு மார்க் நிறுவன முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் அவர்.

இசைப் பாடல்கள் :

இசைப்பாடல்களை எழுதி, புகழ் குவித்த முன்னோடி தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆபிதீன்.

இளமையிலேயே அந்தத் திறனை வளர்த்துக் கொண்டதால் எடுத்த எடுப்பில் யார் கேட்டாலும் இசைப்பாடல்களை எழுதித் தந்தார். ஒரு கோப்பை தேநீருக்காவும் அவர் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 என்று கூறியதாக நாகூர் மு. ஜாபர் முஹியித்தீன் தெரிவிக்கிறார்.

ஆண்டாண்டு காலமாக ஒலித்து வருகின்றன அவருடைய பாடல்கள்.

‘மண்ணிலே பிறந்ததேனோ
எங்கள் பெருமானே
மாநிலத்தைத் தாங்கிடவோ
எங்கள் பெருமானே!’

இந்த அரிய பாடலை மறக்க முடியுமா?

இன்னொன்று

‘ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்’

இசைத்தட்டில் அன்றும் இன்றும் ஒலித்து வரும் பாடல்கள் பல.

முஸ்லிம் லீக், நீதிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்குக் கொள்கை விளக்கப் பாடல்களையும் புலவர் ஆபிதீன் எழுதினார்.

நாகூர் தர்ஹா ஆஸ்தான இசைக்கலைஞர் எஸ்.எம்.ஏ. காதர்,  இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், ஹெச்.எம். ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவுது, திருச்சி கலிபுல்லா, மதுரை ஹூசைன் தீன்,  இலங்கை மொய்தீன் பேக் முதலானோர்  புலவர் ஆபிதீனின் பாடல்களை இசையமைத்துப் பாடி வசப்படுத்தியுள்ளனர்.

இதழாசிரியர் :

நாகூரில் பிறந்து வளர்ந்த புலவர் ஆபிதீன் ஓவியராகவும் பத்திரிக்கையாளராகவும் சிலகாலம் பணிபுரிந்தார்.

மும்பை நகரில் தங்கியிருந்த காலத்தில் வணிகத்துடன் நடிக்க வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

இலங்கையில் இருந்தபோது பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபட்டார்.

பர்மாவிலும் அவருடைய இலக்கியப் பணி தொடர்ந்தது.

அன்றைய மலாயா நாட்டில் ஆபிதீன் ஓவியப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஓவியக் கூடம் ஒன்றையும் நடத்தினார்.

சிங்கப்பூரில் இயங்கிவந்த ‘மலாயா நண்பன்’ இதழின் ஆசிரியராக (1947) அவர் பணியாற்றினார்.

காயிதே மில்லத் முதலான அரசியல் தலைவர்களின் அன்பைப் பெற்ற அவர், அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தார்.

‘அண்ணா பேச்சு; ஆட்சியாளர் அதிர்ச்சி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அரசியல் விமர்சனத்தின் சில வரிகள் :

‘ஒரு வீட்டில் பிச்சைக்காரியொருத்தி யாசகம் கேட்டாள்.அந்த வீட்டு மருமகள் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.  அந்த பிச்சைக்காரி வயிற்றெரிச்சலுடன், போகும்போது மாமியார் வந்து கூவியழைத்தாள். பிச்சைக்காரி மகிழ்ச்சியோடு திரும்பி வந்தாள்.

‘எவள் உனக்கு இல்லையென்று சொன்னவள்? இந்த வீட்டுக்கு நான் எஜமானத்தி. உண்டு என்றாலும் இல்லையென்றாலும் அதை நான் தான் சொல்ல வேண்டும். இப்போழுது நான் சொல்கிறேன்: ‘இல்லை, போ’ என்றாளாம் மாமி. பாவம், பிச்சைக்காரியின் நிலையைப் பேசவேண்டுமா?

இந்த மாமியாருடைய நிலையில்தான் காங்கிரஸ் கண்ணோட்டம் இருக்கிறது’ என்று தமது பார்வையில் அந்த நாள் அரசியலை எழுதுகிறார் பத்திரிக்கையாளர் ஆபிதீன்.(மலாயா நண்பன் இதழ்). அண்ணா, காயிதே மில்லத், அனந்த நாயகி, அன்றைய பிரதமர் நேரு ஆகியோரை அந்த விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.

புலவர் ஆபிதீனை பலரும் பார்த்ததில்லை.அவரைப் பார்த்தவர்களும் இவர்தான் ஆபிதீன் என்று அடையாளம் கண்டு கொண்டதில்லை. அந்த அனுபவங்களைப் பாடலாக்கியிருக்கிறார் அவர்.

காரில்தான் போவார், கண்டால் பேச
மாட்டார் என்று நினைப்பவர்களெல்லாம்
நேரில் என்னைக் கண்டுவிட்டால் ‘பூ’
இவர்தானா என்று போய்விடுவார்கள்

என எழுதியுள்ளார். எளிமையும் வறுமையும் காரணம்

சென்னை நடைபாதையில் காய்கறிகளைப் பரப்பி கடை விரித்த அனுபவமும் அவருக்கு உண்டு. அந்த காட்சியைக் கண்ணால் கண்ட எழுத்தாளரும் நூலாசிரியருமான ஆர்.பி.எம். கனி பி.ஏ.பி.எல் அவர்கள் உடனடியாக அவருக்கு வேலை வாங்கித் தந்தார். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் இயங்கிய ஓர் அச்சகத்தில் பிழைதிருத்தும் பணியில் சேர்ந்தார் புலவர். (வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் அவரை மண்ணடியில் (1960) பார்த்த அனுபவம் என் நினைவில் பதிந்திருக்கிறது).

சமுதாயக் கவிஞர் :

‘இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை’

என்று சங்கநாதம் செய்து உரிமைக்குரல் எழுப்பி இன முழக்கம் புரிந்த கவிஞரின் புதுப்புது பாடல்களை இனி நாம் பெற முடியாது.

சென்று முடிந்த செப்டம்ப மாதத்தில் தமிழக முஸ்லீம்கள் இரு சமுக ஊழியர்களை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது. முஸ்லிம் முரசு ஆசிரியர் எஸ். அப்துல் ரஹீம் அவர்களின் மறைவுக்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக சமுதாயக் கவிஞர் ஆபிதீன் அவர்கள் தமது சொந்த ஊரான நாகூருக்குச் சென்றிருந்தபோது அங்கேயே (23.09.1966) காலமானார்.

‘புலவர் ஆபிதீன் அவர்களின் தீந்தமிழ்ப் பாடல்களைச் செவியுறாத தமிழ் முஸ்லிம் எவரும் இருக்க முடியாது. கேட்டவுடன் அவைகளின் ஓசை நயத்தாலும் கருத்தாழத்தினாலும் கவரப்பட்டு அவற்றை திரும்பப் பாடிப் பார்க்காத நாவும் இருக்க இயலாது. நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்ல பயத்தக்க நல்ல கருத்துக்கள் பலவற்றை அவ்வப்போது இயற்றிக் கொண்டு வந்தார் அவர். இஸ்லாமிய இசைச் செல்வர்கள் அவற்றைப் பாடிப்பாடி பரப்பி வந்தார்கள். சமுதாயம் பெரும் பயன் பெற்றது. ஆனால், அவற்றை அளித்த கவிஞரோ காலமெல்லாம் வறுமையில் உழன்றார்’.

‘வறுமை என்னிடம் தோற்றது’ என்று பெருங்கவிஞர்களுக்கே உரிய பாணியில் அவர் எள்ளி நகையாடும் அளவுக்கு வறுமை அதன் கைவரிசையை காட்டியது. நோயும் அதற்கு துணை நின்று பார்த்தது. அத்தகையதொரு லட்சியக் கவிஞரின் மரணத்தினால் இன்று தமில் முஸ்லிம் சமுதாயம் ஏழ்மைப்பட்டுள்ளது.’

முஸ்லிம் முரசு அக்டோபர் 1966 இதழில் சமுதாயக் கவிஞர் மறைவு எனும் இரங்கல் கட்டுரையில் சில பகுதிகள் இவை.

நினைவுச் சின்னமாக அவர் படைத்து விட்டுச் சென்ற பாட்டுச் செல்வம் நிலைத்து நிற்க சமுதாயம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

ஐம்பது வயதுக்குள் அவர் ஆற்றிய இலக்கிய சாதனைகள் அதிகம். அவர் நினைவாக நாகூரில் ஆபிதீன் அரங்கம் இருக்கிறது.

நாற்பது ஆண்டுகள் விரைந்துவிட்டன. செம்மொழிப் புலவர் ஆபிதீனின் படைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா?

***

நன்றி : ஜே.எம். சாலி அவர்கள் / சமநிலைச் சமுதாயம்

***

‘புலவர் ஆபிதீன் அவர்கள் வாழ்வில் பெருந்துயர் அடைந்திருக்கிறார். அது அவரைப் பண்படுத்தி விட்டது. எனவே அவரின் பாக்களில் அடைவின் நிறைவை, அறிவின் செறிவைப் பரக்கக் காணலாம்’ – M.R.M. அப்துற் றஹீம் –

***

பணம் பேசுகிறது!

புலவர் ஆபிதீன்
கடவுளால் ஆகாத காரியம் – கூடக்
கனிவுடன் செய்திங்குக் காட்டுவேன்!
மடையனை நான்மட்டும் நாடினால் – தேச
மனிதரில் மேதையாய் மாற்றுவேன்!

கல்விமான் என்றாலும் என்னவோய் – இரு
கைகளைக் கூப்பிடப் பண்ணுவேன்
வல்விதி யாயினும் சத்தியம் – தனி
வல்லமை யாலதை வெல்லுவேன்!

வானத்துச் சூரியன் வேண்டுமா? – அதை
வருவித்துப் பந்தயம் கட்டுவேன்!
சீனத்து வித்தையி தல்லடா! – என்னைச்
சீமையில் கேட்டாலும் சொல்லுவார்!

அரசனை ஆண்டியாய் ஆக்கவா? – நல்ல
அறிவுக்குத் திரையிட்டு மூடவா?
நரகத்துக் கதவினைப் பூட்டவா? – சக்தி
நிறையவே எனக்குண்டு நம்புவாய்.

உச்சியில் வைத்துனைப் போற்றவா – முழு
உண்மையைப் பொய்யாக்கிக் காட்டவா?
கச்சிதம் சேரிளம் பெண்களா? – அவர்
கற்பையே காசுக்கு வாங்கவா?

பணமாக்கும் என்பெயர் தெரியுமா? – வீண்
பரிகாசம் பண்ணுதல் மடமையே
பிணங்கூட ‘ஆ’வெனத் திறக்குமே – வாய்
பிடிவாதம் செல்லாது அறிகுவாய்.

***

– ‘அழகின் முன் அறிவு’ தொகுதி (1960) –

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

**

பின்னூட்டமொன்றை இடுக