இமைக்கும் நேரத்தில்… (சிறுகதை) – மௌலானா அபுல் கலாம் ஆஸாத்

1958-ஆம் வருட ‘கல்கி’ இதழிலிலிருந்து, நன்றியுடன்

asad - story - imaikkum nerathile

இமைக்கும் நேரத்தில்…- மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(தமிழாக்கம் : ரா. வீ)

பாக்தாத் நகரத்திலே, ஹஜரத் ஷேக் ஜுனைத் பாக்தாதி’யின் பெருமையும் எளிமையும் எவ்வளவுக் கெவ்வளவு பிரசித்தமோ, அவ்வளவுக் கவ்வளவு இப்னு-சாபாத்’தின் திருட்டும் துஷ்டத்தனமும் பெயர் போனவை.

கடந்த பத்து ஆண்டுகளாக ‘மதாயன்’ சிறையில் இப்னு-சாபாத் அடைபட்டிருத்தான், மக்கள் அவனது பயங்கரக் கிடுக்கித் தாக்குதலிலிருந்து தப்பித் தைரியமாக வாழ்ந்து வந்தனர். ஆயினும் அவனது அச்சமின்மை, ஆணவச் செயல் சம்பந்தமான கதைகள் அவர்களுக்கு மறக்கவில்லை. எப்பொழுதாவது, ஏதாவது துணிகரத் திருட்டைக் கேள்விப்பட நேர்ந்தால், ‘இதென்ன, இன்னொரு இப்னு-சாபாத் பிறந்துவிட்டானா, என்ன ?’ என்றே பேசிக் கொள்வார்கள். இப்னு-சாபாத்’தின் குடும்ப விவரங்கள் முழுவதும் யாருக்கும் சரிவரத் தெரியாது. ஆம், அவன் முதன் முதலாகத் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, தச்சர் தெருவில் பிடிக்கப்பட்டபொழுது. போலீஸ் ஸ்டேஷனில் அவனைப் பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவன் பாக்தாத் நகரத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பது வெளியாகியது. அவன் தாய் தந்தையர் ‘தூஸ்’ என்னும் இடத்திலிருந்து ஒரு வியாபாரிகள் கூட்டத்துடன் வந்து கொண்டிருந்தார்கள் என்றும், வழியிலே நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டார்கள் என்றும் தெரிய வந்தன. வியாபாரிகள் கூட்டம் அவன்மீது இரக்கம் கொண்டு, பாக்தாத் நகரத்திலே கொண்டு வந்து சேர்த்ததாம். இது அவன் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி.

அந்த இரண்டு ஆண்டுகளையும் அவன் எப்படி எங்கே கழித்தான் என்பது யாருக்கும். தெரியாது. கைது செய்யப்பட்டபொழுது அவனுக்கு வயது பதினைந்து. போலீஸ் ஸ்டேஷன் திண்ணையில் அவனைப் படுக்க வைத்துக் கசையடி கொடுத்தார்கள்; அப்பொழுதே விடுதலையும் செய்து விட்டார்கள்.

முதல் தண்டனை அவனிடம் அதிசயமான மாறுதல் ஒன்றை நிகழச் செய்தது. இதுவரை அவன் பயங்கொள்ளிப் பையனாக இருந்தான்; அடக்க ஒடுக்கமுள்ளவனாக இருந்தான். ஆனால் கசையடி வாங்கியபின் அச்சந் தவிர்த்த குற்றவாளியின் ஆன்மா அவன் உள்ளத்திலே குடி கொண்டு விட்டது. சிறிது காலத்துக்குள்ளேயே அவன் மிகுந்த துணிச்சல்காரனாகவும், தேர்ந்த திருடனாகவும் மாறி விட்டான்.

இப்பொழுது அவன் சிறுசிறு திருட்டுக்களை விட்டொழித்தான். முதன் முதலில் அவன் திருட முற்பட்டபொழுது இரண்டு நாட்கள் பட்டினி, அவனை ரொட்டிக் கிடங்குக்கு இழுத்துச் சென்றது. ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் பசியால் வாடி வயிற்றுத் தீயை அணைப்பதற்காகத் திருடப் போவதில்லை. திருட்டுத் தொழிலிலே ஒரு ஆர்வம் பிறந்து, அந்த ஆர்வத்துக்கு அடிபணிந்தவனாகித் திருடப் போனான். அதனால் அவன் கண் இப்பொழுது ரொட்டிக் கிடங்குகளைச் சல்லடை போட்டுச் சலிப்பதில்லை; நகைக் கடைகளின் இரும்புப் பெட்டிகளையும், பெரிய வியாபாரிகளின் கிடங்குகளையும் சூறையாடத் திட்டம் போட்டது.

அவன் உள்ளத்தை வெற்றியின் வெறி, படைத் தலைவனின் உறுதி, போர்வீரனின் ஆண்மை, அறிவாளியின் ஆற்றல் ஆகியவை ஆட்கொண்டிருந்தன.

ஆயினும் உலகம் அவனைப் பாக்தாத் நகரத் திருடனாகவே வைத்துப் பார்க்கத்தான் விரும்பியது. அதனால், இந்தக் கலையில் அவனது இயல்பான அத்தனை குணங்களும் பரிமளிக்கத் தொடங்கின; பட்டை தீட்டப் பெற்ற வைரத்தின் மெருகுடன் பளீரென்று பிரகாசிக்கத் தொடங்கின.

சில நாட்களில், இப்னு-சாபாத்’தின் கொடுஞ் செயல்கள் அவன் விஷயத்தில் ஆட்சி பீடம் அதிக அக்கறை செலுத்தும்படியான அளவுக்கு எல்லைமீறி அதிகரித்தன.

கடைசியில் ஒரு நாள் அவன் கைது செய்யப் பட்டான். நியாய ஸ்தலத்தின் தீர்ப்புப்படி கொலையாளியின் கொடுவாள் அவனது ஒரு கையைப் பதம் பார்த்து அகற்றியே விட்டது. இப்னு-சாபாத்’தின் கை துண்டிக்கப் பட்டதே, உண்மையில் அது துண்டிக்கப் பட்டதா? சூரபதுமனின் தலைபோல, ஒரு கை போகப் பல கைகள் முளைத்துவிட்டன. ஒரு கைக்குப் பலம் கொடுக்க பல கைகள் தோன்றி, இப்னு-சாபாத்’தின் வெட்டுண்ட கைக்குப் பெருமையளித்தன. அவன் ஈராக் கில் உள்ள எல்லாத் திருடர்களையும் துஷ்டர்களையும் ஒன்று சேர்த்துவைத்து ஒரு நல்ல குழு அமைத்துக் கொண்டான். ராணுவத் தளவாடங்களுடன் கொள்ளையடிக்கக் கூட முற்பட்டு விட்டான். கொஞ்ச காலத்துக்குள்ளேயே அவன் ஈராக் முழுவதையும் ஆட்டிப்படைத்து அயர அடித்துவிட்டான்.

ஆனால் ஒரு தடவை அவன் தோழர்கள் அனைவரும் வெளியே போலிருந்த பொழுது, அவனும் ஓடத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது, ஆட்சியினர் வந்து விட்டனர்; அவனைக் கைது செய்து விலங்கும் மாட்டி விட்டனர்.

இந்தத் தடவை அவன் ஒரு கொள்ளைக்காரன் என்ற முறையில் சிறைப்பட்டிருந்தான், அதற்கான தண்டனை மரணம் ஒன்றே. தனக்கு மரண தண்டனை அளிக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்தால், தனது தோழர்கள் அனைவரையும் பிடித்துத் தந்து விடுவதாக அவன் கோர்ட்டார் அவர்களிடம் கூறினான்,

இவ்விதமாக அவன் தப்பிவிட்டான். ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட அவனது தோழர்கள் மரண தண்டனைக்கு உள்ளாயினர். அப்படியும் அவனுக்கு ஆயுள் முழுவதும் சிறையில் செக்குமாடாக உழைத்து வாடி மடியும்படியான தண்டனை அளிக்கப்பட்டது.

கோடைகாலம். நள்ளிரவு கழிந்திருந்தது, கறுப்புப் போர்வையில் தன்னை மூடி மறைத்துக் கொண்டு ஒருவன் மௌனமாக மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அவன் ஒரு சந்து திரும்பி இன்னொரு சந்தில் நுழைந்ததும் ஒரு வீட்டை ஓட்டினாற் போலிருந்த ஆளோடிக்கு அடியில் போய் நின்று கொண்டான், அப்புறம் நீண்ட நெடிய மூச்சு விட்டான், எத்தனையோ நேரமாக அடங்கிக் கிடந்த மூச்சுக்குச் சுகந்திரமாக வெளிவர இடம் கிடைத்தது போலிருந்தது.அவன் மூச்சு விட்ட விதம். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான் :

”மூன்றாம் யாமமும் கழிந்து விட்டது. இன்றைக்கென்று என்ன சோதனை? எங்கு போனாலும் நமது காரியம் இன்று நிறைவேறுவதாகக் காணோமே!”

இவன் யார் என்று சொல்லவும் வேண்டுமா? இப்னு-சாபாத் தான், பத்து ஆண்டுகள் சிறையிலே அடைபட்டுக் கிடந்தவன், எப்படியோ சிறையை விட்டு வெளியேறி ஓடி வந்திருந்தான்; வந்ததும் வராததுமாகத் தன் தொழிலைத் தொடங்க மறுபடியும் முற்பட்டிருந்தான்.

இது அவன், புதிய திருட்டு வாழ்க்கையின் முதல் இரவு. அதனால் தன் நேரம் வீணாவதைக் கண்டு அவன் மனம் பொருமலாயிற்று. அவன் பூமியிலே காது வைத்து ஒவ்வொரு பக்கத்து ஓசையையும், தூர தூரத்து ஓசையையும் கவனமாகக் கேட்டான். பிறகு தைரியமாக முன்னேறினான். ஆளோடியை ஒட்டிச் சென்ற சுவர் மிக நீண்டு சென்று கொண்டிருந்தது. அதன் நடுவே ஒரு பெரிய வாசற்படியிருந்தது.

’கரக்’ என்னும் இந்தப் பகுதியில் பெரும்பாலும் செல்வந்தர்களின் தோட்டம், துரவுகள் இருந்தன; அல்லது வியாபாரிகளின் கிடங்குகள் இருந்தன.

இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு கட்டினான். அவன் அந்த வாசற்படியை அடைந்து கதவின் மேல் கை வைத்தான். அது உடனே திறந்து கொண் டது. அடுத்த விநாடி இப்னு-சாபாத்’தின் கால்கள் கட்டடத்தின் முற்றத்துக்குள்ளே அடி எடுத்து வைத்து விட்டன. முற்றத்தை மையமாகக் கொண்டு நாற்புறமும் பற்பல சிறிய அறைகள் இருந்தன. நடுவிலே சற்றுப் பெரியதாக ஒரு கட்டடம் இருந்தது.

அவன் நடுவிலே இருந்த அந்தக் கட்டடத்தை நோக்கி நடந்தான். ஆனால் அதிசயம் என்ன வென்றால், அந்தக் கட்டடத்தின் கதவு உள்பக்கமாகத் தாளிடப்படவில்லை. உள்ளே நுழைந்த இப்னு-சாபாத் அது பெரும் ஹாலாக இருப்பதைக் கண்டான். ஆனால் அந்த அறை பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கவும் இல்லை : அதிலே விலையுயர்ந்த பொருள் இருப்பதற்கான அறிகுறியும் தோன்றவில்லை. ஒரு பக்கம் பேரீச்சை ஓலையினால் முடையப்பட்ட பாய் மட்டும் விரித்திருந்தது. அதன் ஒருபுறத்தில், தோலாலான தலையணை ஒன்று போடப்பட்டிருந்தது.

ஒரு மூலையில் மட்டும் கனத்த கம்பளித் துணிகள், அவசரத்தில் தூக்கியெறியப்பட்டவை போலச் சிதறிக் கிடந்தன. அவற்றுக்கு அருகிலேயே தோல் தொப்பிகள் கிடந்தன.

பத்து ஆண்டுகளுக்குப் பின் இன்றுதான் தன் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யும் வாய்ப்பு மீண்டும் இப்னு-சாபாத்’துக்குக் கிடைத்திருந்தது. இந்தக் கட்டடத்தில் தனக்குத் தேவையானது ஒன்றும் கிடைக்கவில்லை என்பதைக் கண்டபொழுது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

கம்பளித் துண்டுகள் இருந்தன. அவற்றுக்கு உகந்த விலையும் கிடைக்கக் கூடுத்தான் ஆயினும் என்ன பயன்? அதோடு இப்னு-சாபாத்’தோ ஒன்றிக் கட்டை ; அவனுக்குக் கையும் ஒன்றே, ‘இந்தக் ‘கரக்’கும் இந்தக் ‘கரக்’கில் வசிப்பவர்களும் நாசமாய்ப் போக!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அத்தனை பெரிய வீட்டிலே கழுதை கூடப் போர்த்திக் கொள்ளக் கூசும் மோட்டா கம்பளித் துணிகளை அடுக்கி வைத்திருக்கும் வியாபாரிக்கு லட்சார்ச்சனை செய்தான்.

இரவோ ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்றலோ, அதற்குப் பொழுதில்லை. எனவே அவன், ஒரு கம்பளியை எடுத்துக் கீழே விரித்தான். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கம்பளிகளை எடுத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டான். கம்பளித் துண்டுகளோ மிகக் கனமாகவும் மோட்டாவாகவும் இருந்தன. அவற்றைச் சுருட்டிக் கட்டி முடிச்சுப் போடுவது என்பது எளிய காரியமாக இல்லை. இரண்டு கைகள் உள்ளவர்கள் செய்வதே சிரமம். இப்னு-சாபாத்’ ஒரு கையை வைத்துக் கொண்டு என்ன செய்வான், பாவம்! அவன் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டபின் பற்களை உபயோகித்தான், வெட்டுண்ட கையின் முழங்கையை உபயோகித்து ஒரு முனையை அழுத்திப் பிடித்தான். ஆனால் என்ன முயன்றும் அவனால் முடிச்சுப் போட முடியவில்லை. அவன் அந்த முயற்சியில் அலுத்துச் சலித்துக் களைத்துப் போய்விட்டான்.

இச்சமயத்தில்தான் திடீரென்று அவன் துணுக்குறும்படியான ஒரு காரியம் நடந்தது. அவனது கூரிய செவிகள் தூரத்தில் யாரோ மெதுவாக அடியெடுத்து நடந்து வரும் ஓலி யைக் கேட்டன.

ஒரு வினாடி மெளனம் நிலவியது. பிறகு வாசற்படியில் யாரோ நிற்பதுபோன்ற ஒரு தோற்றம். இப்னு-சாபாத் பதற்றமுற்று எழுத்து நின்றான். ஆனால் நகருவதற்கு முன் கதவு திறந்தது. ஒருவன் கையிலே விளக்கேந்தியவாறு அவன் எதிரே வந்து நின்றான். அவன் உடலைப் பழுப்பு நிறமுள்ள ஒரு நீண்ட சட்டை அலங்கரித்தது. அதைச் சுற்றி இடுப்பிலே பட்டை கட்டியிருந்தது. தலையிலே ஒரு கூரான தளர்வான தொப்பி: அது புருவத்தை மூடி மறைத்தவாறு காட்சியளித்தது. உடல் மிகவும் பலவீனமுற்றுத் தோற்றம் அளித்தது. உயரமான உருவம் காரணமாக இடுப்பு கொஞ்சம் வளைந்திருந்தது. ஆனால் அவன் முகத்திலே உடல் பலவீனத்தினால் உண்டாகும் உணர்ச்சி நெகிழ்வு பிரதிபலிக்கவில்லை. நீண்ட எலும்புக் கூட்டிலே, கம்பீரமான அழகிய முகம் வைத்தது போன்றிருந்தது. கன்னம் சதைப்பற்று அற்றிருந்தது. ஆயினும் முகத்திலே வீசிய காந்தி, பார்ப்பவர்களைப் பிரமிக்க வைத்தது, பக்தி பூணச் செய்யும் சக்தி பெற்றிருந்தது; உடல்பலம் இல்லாவிட்டாலும் உள்ள பலம் உரம் பாய்ந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. ஒளிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் இரு விழிகளைப் பார்க்கும்பொழுது, உலகத்தின் அமைதியும் ஆனந்தமும் இவ்விரு ஆழங் காண இயலாத கண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றனவோ என்று சொல்லும்படியாக இருந்தன.

சில நிமிஷங்கள் அவன் விளக்கைச் சற்று உயரத் தூக்கிப் பிடித்து, இப்னு-சாபாத்’தைப் பார்த்தவாறு தின்றான். பிறகு, புரிந்து கொள்ள வேண்டியதைப் புரிந்து கொண்டு விட்டவன்போல் முன்னேறினான்.

விளக்கை ஒரு புறமாக வைத்துவிட்டு, முறுவலித்தவாறே அவன் சொன்னான்: ”நண்பா! ஆண்டவன் உனக்கு அருள் புரிவாராக, நீ செய்ய நினைக்கும் வேலை வெளிச்சமும், தோழனும் இன்றிச் செய்ய முடியாது. இதோ விளக்கு இருக்கிறது. தோழன் ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். விளக்கு வெளிச்சத்தில் நாம் இருவரும் தைரியமாக இந்த வேலையைச் செய்து முடிப்போம்!”

அவன் சிறிது நேரம் நின்று ஏதோ யோசனை செய்தான். பிறகு, இப்னு-சாபாத்’தைப் பார்த்து, “நீ மிகவும் களைப்புற்றுக் காணப் படுகிறாய். நெற்றி முழுவதும் வியர்வையினால் நனைந்திருக்கிறது. அப்பப்பா.. அறை மூடிக் கிடக்கிறது. அதனால்தான் இத்தனை புழுக்கம்! என்ன கஷ்டம் பார்! மனிதன் வயிற்றுப் பாட்டுக்காக எத்தனை பெரிய ஆபத்துக்களையெல்லாம் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டி வருகிறது! அதோ பாய் விரித்திருக்கிறது. தலையணையும் பக்கத்தில் இருக்கிறது. கொஞ்ச நேரம் இளைப்பாறு. அதற்குள் நீ அரைகுறையாகச் செய்திருக்கும் இந்த வேலையைச்செய்து முடித்து விடுகிறேன் !”” என்றான்.

இதைச் சொல்லி முடித்ததும், அவன் இப்னு-சாபாத்’தை உட்காருமாறு ஜாடை காட்டினான். தன் கைக்குட்டையை எடுத்து அவனது நெற்றி வியர்வையைத் துடைத்தான். அதுமட்டும் அல்ல : உட்காராமல் நின்று கொண்டிருந்தவனைத் தோள்பட்டையில் கை வைத்து அழுத்திப் பாயில் உட்காரவும் வைத்து விட்டான்,

இச் சம்பவங்களெல்லாம் வெகு விரைவில் நடந்தன. இப்னு-சாபாத்’தின் மூளை வேலை செய்து என்ன ஏது என்று அறிய வாய்ப்பே அளிக்கவில்லை. தன் நினைவு இழந்த மனிதனைப் போல் அந்த வேற்று மனிதன் சொன்னபடி யெல்லாம் ஆடி. இப்னு-சாபாத் பாயில் படுத்து விட்டான்.

அப்புறம்தான் அந்தப் புதிய மனிதன், தான் சொன்னபடி வேலையைத் துவங்கி விட்டான் என்பதை அவன் கண்டான்.

அந்த மனிதன், இப்னு-சாபாத் கட்டி மூடிச்சு போட முயன்ற மூட்டையில் இன்னும் இரண்டு கம்பளித் துண்டுகளை எடுத்து வைத்தான். அதை இரண்டாக்கி இரண்டு மூட்டையாக-ஒன்று சிறியது. ஒன்று பெரியது – கட்டினான், பிறகு திடீரென்று ஏதோ நினைவு வந்தவன் போல், தனது போர்வையையும் எடுத்து அந்த மூட்டையில் வைத்துக் கட்டினான். பிறகு இப்னு-சாபாத்’தினிடம் சென்று, “நண்பா! உள் வாடிய முகம் நீ மிகவும் பசித்திருக்கிறாய் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. அதனால் நீ புறப்படுவதற்கு முன்பாகக் கொஞ்சம் பால் அருந்தினால் நன்றாக இருக்கும்” என்றான். இப்னு-சாபாத் வாய் திறந்து ஒன்று சொல்வதற்கு முன்பாகவே, அவன் அங்கிருந்து வெளியே போய் விட்டான்.

இப்பொழுது இப்னு-சாபாத் தனியனாகி விட்டான்.

அந்தப் புது மனிதனின் தோற்றமும் அவன் நடந்து கொண்ட முறையும், அவன் அங்கிருந்த வரையில், இப்னு-சாபாத்’தை ஒன்றுமே யோசிக்க விடவில்லை. அவன் மட்டும்தான் அந்த அறையில் என்று ஆகி விட்ட பொழுது, அவன் மூளை மீண்டும் சிறுகச் சிறுகத் தன் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. நிகழ்ந்த நிகழ்ச்சியை, அவன், தான் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன முறையிலேயே சிந்தித்தான். அவன் தன் மனத்துள் நினைத்தான்: ‘இவனும் நமது சகதொழிலாளியாகத் தான் இருக்க வேண்டும். இங்கேயே எங்கேயாவது பக்கத்தில் இருப்பான் போலிருக்கிறது. இவனுக்கு இந்த வீட்டில் ஆள் நட மாட்டம் கிடையாது என்பது தெரிந்திருக்கும். அதனால்தான் தைரியமாக வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நான் அவனுக்கு முன்னதாகவே இங்கே வந்திருக்கிறேன் என்பதைக் கண்ட பொழுது, எனக்கு ஒத்தாசை செய்து பங்கு பெறலாம் என்ற ஆசையிலேயே இப்படிக் காரியத்தில் முனைந்திருக்கிறான்.’

இப்படி இப்னு-சாபாத் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அந்தப் புதிய மனிதன் மரக் கோப்பை ஒன்றில் பால் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து விட்டான். “இந்தா! உனக்காகப் பால் கொண்டு வந்திருக்கிறேன். பருகிப் பசியையும் தாகத்தையும் தணித்துக் கொள் !'” என்றான்.

இப்னு-சாபாத் ஒரேமூச்சில் கோப்பையைக் காலி செய்து விட்டான். உடல் ஒரு நிலைக்கு வந்ததும், அவனை காரிய கவலை பற்றிக் கொண்டது. “இதோ, பார்! நான் உனக்கு முன்னால் வந்து விட்டேன். காரியத்தையும் துவங்கி விட்டேன். அதனால் சட்டப்படி பார்க்கப் போனால் இதில் உனக்கு ஒரு பங்கும் கிடையாது; உரிமையும் கிடையாது. இருந்தாலும் உன் கெட்டிக்காரத்தனத்தையும் சாமர்த்தியத்தையும் கண்டு, உன்னையும் என்னுடைய கொள்ளையில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்வதில் எனக்குத் தடையில்லை உனக்கு விருப்பம் இருக்குமானால் எப்பொழுதுக்குமே உன்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூட நான் தயார். ஆனால் இன்றைப் பொருளில் உனக்குச் சம பங்கு தர முடியாது. இப்பொழுதே சொல்லி விட்டேன். பின்னால் தகராறு கிகராறு செய்யக் கூடாது. ஏனென்றால் இன்றைய வேலை…” அவன் வார்த்தையை முடிப்பதற்கு முன்பாகவே, அந்தப் புது மனிதன் பேசலுற்றான் : “நண்பா! எதற்காக உன் மனத்தைப் போட்டு உளைத்து கொள்கிறாய்! முதலில் வேலையை முடிப்போம். இரண்டு மூட்டைகளாகக் கட்டியிருக்கிறேன். பெரியதை நான் எடுத்துக் கொள்கிறேன். சிறிய மூட்டையை நீ எடுத்க் கொள், என் பங்கு உன் பங்கு என்ற பேச்சு அப்புறம் ஆகட்டும். இடபொழுதே இதைத் தீர்த்து கொள்வானேன்? நீ என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராயிருப்பதாக நீதான் சொன்னாயே எனக்கும் சம்மதம் தான். நீ நிரத்தரமாக ஒப்பந்தம் ஏதாவது செய்து கொள்ள விரும்பினால், நானும் கட்டுப்பட்டு நடக்கத் தயாராயிருக்கிறேன்!”

“ரொம்ப சரி ! நான் யார் என்று உனக்கு இன்னும் தெரியாது. தெரித்தால், அப்புறம் சந்தோஷப்படுவாய். நாடு முழுவதிலும் தேடினாலும் கூட என்னைப் போன்ற தலைவன் உனக்குக் கிடைக்க மாட்டான்”

இவ்விதம் கூறியவாறே இப்னு-சாபாத் தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டான். அது மிகவும் இலேசாக இருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். முன்பே புது மனிதனின் முதுகு கூனியிருந்தது. சுமையைத் தூக்கிக் கொண்டதும், இன்னும் வளைந்துவிட்டது. இருட்டில் நடப்பது இயல்பாகவே சிரமம். அதோடு சுமையுடன் நடப்பதென்றல் கேட்க வேண்டுமா?

இப்னு-சாபாத்’தின் சுமையோ இலேசாக இருந்தது. அதனால் அவன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி அந்தப் புது மனிதனைத் திரும்பிப் பார்த்து, வேகமாக நடக்கும்படி கட்டளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அத்தனை பெரும் சுமையைத் தூக்கிக் கொண்டு நடப்பது அந்த மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. அதனால் அவன் அடிக்கடி தடுமாறினான். தடுக்கிக் கீழே விழுந்து விடுவான் போலிருந்தது.

இருட்டில் கல் தடுக்கிக் கால் சதையைப் பெயர்க்க வேறு செய்தது. ஒரு தடவை நல்ல அடி பட்டுக் கிறங்கினான். ஆயினும் அவன் நிற்கவோ இளைப்பாறவோ முயலவில்லை. இப்ன-சாபாத்’துடன் நடந்து செல்லவே முயன்றான்.

ஆனால் இப்ன-சாபாத் அதனாலெல்லாம் திருப்தி அடையவில்லை. கட்டளை பிறப்பித்தவன் கடைசியில் பலமான வசவிலேயே இறங்கி விட்டான்.

இதற்குள் ஆற்றுப் பாலம் வந்து விட்டது. அது கொஞ்சம் மேல், பலவீனமான உடல்; நடந்து வந்த களைப்பு: சுமையோ அழுத்தியது. புது மனிதனால் சமாளிக்க முடிய விலலை. இந்தத் தடவை தன்னையும் மீறிக் கீழே விழவே விழுந்து விட்டான்.

உடனே அவன் எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அதற்குள்ளாக இப்னு-சாபாத் அவனைக் காலால் ஒரு உதை கொடுத்துத் திட்டி, “இத்தனை சுமையைத் தூக்க முடியாது என்று தோன்றினால் எதற்காகக் கொண்டு வந்தாய்?” என்று சீறி விழுந்தான். மூச்சுத் திணறியவாறே அம்மனிதன் எழுந்தான். அவன் முகத்திலே வலியோ சிரமமோ தோன்றுவதற்குப் பதிலாக வெட்கம் தோன்றியது. அவன் உடனே மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

நகரத்தின் அதிக ஜன சந்தடியற்ற இடம் ஒன்றை அடைந்ததும் இருவரும் நின்றனர். அங்கே பாழடைந்த கட்டடத்தின் முற்றம் இருந்தது. அந்த முற்றத்தை அடைந்ததும் இப்னு-சாபாத் நின்று விட்டான். அந்தப் புது மனிதனைக் கூப்பிட்டு மூட்டையைக் கீழே இறக்குமாறு பணித்தான், பிற ஒரே தாண்டலாகத் தாண்டி வீட்டினுள் நுழைந்தான். அப்புது மனிதன் அந்த இரண்டு மூட்டைகளையும் தூக்கி உள்ளே விட்டெறிந்தான். பிறகு அவனும் தாவி அந்தக் கட்டத்துக்குள் சென்றான்.

அந்தக் கட்டடத்தில் ஒரு கீழ் அறை இருந்தது. அதில்தான் இப்னு-சாபாத் சிறைச் சாலையிலிருந்து தப்பி ஓடி வந்தபின் ஒளிந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் அந்தக் கீழ் அறைக்குள் போகவில்லை ஏனென்றால் அந்தப் புது மனிதனுக்கு அவன் தன் ரகஸிய அறையைக் காட்ட விரும்பவில்லை.

ஒரு பக்கத்தில் கிடந்த கருங்கற்களில் ஒன்றைத் தேடி இப்னு-சாபாத் உட்கார்ந்து கொண்டான் அந்தப் புது மனிதன் ஒருபுறம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வானான், திடீரென்று அந்த வேற்று மனிதன் ‘இப்னு-சாபாத்`தின் அருகில் வந்து. “நண்பா! நான் என் பணியை முடித்து விட்டேன், போய் வருகிறேன், இந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது என்னிடத்திலே தோன்றிய பலவீனத்தையும், சோம்பலையும், அவற்றின் காரணமாக உனக்கு உண்டான சிரமத்தையும் கண்டு மிகவும் வெட்கமுறுகிறேன்; அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். கடவுள் செயலும் நம் செயலும் ஒன்றாக இருக்கக் கூடிய செயல் இந்த உலகத்தில் ஒன்றே ஒன்றுதான். அது ஒருவரை யொருவர் மன்னிப்பது என்பதாகும். ஆனால் விடை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நீ நினைக்கும் ஆள் நாள் அல்ல. இன்று நீ என்னைப் பார்த்தாயே, அந்த வீட்டில்தான் நான் இருக்கிறேன். நீ இருட்டில் உட்கார்ந்து சிரமப்படுவதைப் பார்த்தேன். நீ என் வீட்டுக்கு வந்த பின் என் விருந்தினனாகி விட்டாய். விருந்தினனுக்கு உதவ வேண்டியது வீட்டானாகிய என் கடமை. ஆனால் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றல், நான் உனக்குப் போதுமான மட்டு மரியாதைகள் செய்ய முடியவில்லை; கௌரவிக்க முடிய வில்லை. நீதான் என் வீட்டைப் பார்த்து விட்டாய். உனக்கு ஏதாவது எப்பொழுதாவது தேவையிருக்குமானால், சங்கோசமின்றி நீ வரலாம். ஆண்டவனின் அருளும் .ஆசியும் உனக்குப் பரிபூரணமாய் எப்பொழுதும் கிடைத்த வண்ணம் இருக்கட்டும்.”

இதைச் சொன்னதும் அவன் இப்னு-சாபாத்’தின் கையைத் தன் கையில் ஏந்தி வணக்கம் தெரிவித்தான். அடுத்த கணமே அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டான்.

வேற்று மனிதன் வெளியேறி விட்டான். ஆனல் இப்னு-சாபாத்’தை வேறு உலகத்தில் வீட்டுச் சென்று விட்டான்.

*

(முக்கியமான கடைசிப்பகுதி இமேஜில். க்ளிக், கண்ணெரிய நான் டெக்ஸ்ட்-ஆக மாற்றியது உங்களுக்குப் புரியணும். காப்பி செய்வதானால் வலைப்பக்கத்திற்கு கிரெடிட் கொடுங்க. நன்றி!- ஆபி)

asad story page 6 end

’நவநீத்’திலிருந்து..

3 பின்னூட்டங்கள்

  1. ABDULKHADER M said,

    26/06/2024 இல் 13:33

    இதற்கு பின்னூட்டமெல்லாம் இட முடியாது. என்னை fb’ல் friend லிஸ்டில் இருந்து
    நீக்கியதற்காக… கடுமையான கண்டனங்கள் 🤔

  2. அனாமதேய said,

    26/06/2024 இல் 13:46

    மிக அருமை

    கம்பளி துண்டஙகள். துண்டுகள் என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    நாசமற்றுப்போக நாசமாய்ப்போக இதில் எது சரி?

    வெடக்கம் வெட்கமாக மாறவேண்டும்.


பின்னூட்டமொன்றை இடுக