தமிழகத்தின் முதல் முஸ்லிம் மன்னர் : மறைக்கப்பட்ட வரலாறு

அந்த மன்னர் ஆட்சி செய்த பகுதி , இப்போதைய ‘வை.கோ’வின் ஏரியா. உலக சரித்திரமெல்லாம் ‘எடுத்துவிடும்’ அந்த ஆள் தன் மண்ணில் வாழ்ந்த முஸ்லிம் மன்னரைப் பற்றி ஏன் எதுவுமே பேசுவதில்லை – மற்ற ‘ஆய்வாளர்கள்’ போல? என்ற என் கேள்வியையும் முன் வையுங்கள்’ என்று சொல்லியே இந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தார் நண்பர் தாஜ்.  அவர் ஏன் பேசவில்லையென்று ‘அம்மா’விடமா கேட்க இயலும்? ஆய்வார்களையும் நான் அறியேன் தாஜ். அந்த வலியுல்லாஹ்வின் ‘இறைப்பணி’ மட்டும்தான் தெரியும் . ‘ஓய்,  முஸ்லிம் எழுத்தாளரே.. உமக்குத்தான்!’ என்று நீங்கள் அனுப்பியிருக்கும் செய்தி எனக்கும் புதிதுதான். படிச்சாத்தானே?!

*

தாஜ் குறிப்புகள் :

ஆபிதீன் பக்கத்திற்கு
நான் அனுப்பித் தரும் தகவல் கட்டுரைகளின்
முக்கியத்துவம் குறித்து நான் யோசித்ததில்லை.
ஆனால், இப்போது அனுப்பும்
இந்தக் கட்டுரையை
முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

‘குர்ஆனின் குரல்’ என்கிற
இஸ்லாமிய மாத இதழில் (ஆகஸ்ட் 1997) வெளிவந்த கட்டுரையிது.
இக்கட்டுரையை… ஓர் தேவை கருதி
இத்தனைக் காலமும்
பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தேன்.

*

கி.ரா.வால் எழுதப்பட்ட
‘கோபல்ல கிராமம்’
நான் விரும்பி வாசித்த நாவல்களில் ஒன்று.
இலக்கியப் படைப்புகளை தேடிப் பிடித்துப் படிக்கும் ஆவலை
அந்த நாவல் வாசிப்புதான் தொடங்கி வைத்தது.

தெலுங்கானாவை ஆட்சி புரிந்த
நவாபுகளுக்கு அஞ்சி
அந்த மண்ணில் இருந்து
நாயுடுகளும், நாயக்கர்களும் இடம் பெயர்ந்து
விந்திய மலைக்கு தெற்கே
விவசாய மண் கண்ட இடங்களில்
குடியமர்கிறார்கள்.

அப்படி அவர்கள் குடியமர்ந்த ஊர்களில் ஒன்று
கோபல்ல கிராமம்!
அந்த ஸ்தலத்தில் அவர்கள் விஸ்தீரணம் கொள்ளும்
காலக்கட்டத்தை, அதையெட்டிய நிகழ்வுகளை
அந்த மக்களின் வாழ்க்கை முறைகளை
சுவைக்கச் சுவைக்க விவரிப்பார் கி.ரா!
‘கோபல்ல கிராமம்’ இன்னும் கண்களில்.
 
*

தமிழகத்தில் இஸ்லாம்….
எவர் முயற்சியில் வித்திடப்பட்டது?
முதன் முதலில் எங்கே… எப்படி… துளிர் விட்டது?
எங்கனம் அது தழைக்கத் துவங்கியது?
அதனூடான செய்திகள் என்ன? என்பவெல்லாம் குறித்து
கோபல்ல கிராமம் மாதிரி
சரித்திரம் கலந்த நாவல் ஒன்றை எழுதணும் என்று
ரொம்ப காலமாகவே ஆசையொன்று
என்னுள் இருந்து வந்தது.

எனக்கு கிடைத்த
இந்தக் ‘குர் ஆனின் குரல்’ கட்டுரை
பெரிய உதவிகரமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில்
இதனை பத்திரப்படுத்தி வந்தேன்.

*

இன்றைக்கு…
கண்கொண்டு காண்கிற காலத்திலேயே
இஸ்லாமியர்கள்
பத்தாய், நூறாய் குழுக்குழுவாகப் பிரிந்து
பதவிக்காகவும், பணத்திற்காகவும், புகழுக்காகவும்
சிதைந்து கொண்டிருப்பதைக் காண்கிறபோது
இவர்களின் முன்னோடிகள் குறித்து
பெரிய தேடல்களும் சிரமமும் கொண்டு எழுதணுமா…?
என்றோர் எண்ணம்.
அவ்வளவுதான்,
என் ஆசை விழுந்துவிட்டது.

அதற்கு பெரிதாக நான் முயற்சிக்கவில்லை
என்பதை யோசிக்கிற போது
இப்படியான, கனமான, மதம் சார்ந்த முயற்சிக்கு
நான் போதாதென்று
என் சிந்தை எனக்கு
ரகசியமாக உணர்த்தியிருக்க வேண்டும்.
என்னை தடுத்திருக்கவும் வேண்டும்.

என்றாலும்…
இந்தக் கட்டுரையின் சம்பவ அடுக்குகளை
மனதில் கொண்டு
‘ஆண்டவன் காடு’ என்றதோர்
குறு நாவலை எழுதினேன்.
நன்றாக வளர்ந்த அது…
பாதியில் நிற்கிறது.

*

நவீன இலக்கியத்தின் எல்லா திறப்புகளையும்
தீர்க்கமற திறந்து காட்டி – என்னை
உடன் அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்…
சில நேரம்
சுமையென்றும் பாராது கட்டியிழுத்துக் கொண்டிருக்கும்
ஆபிதீன், நாகூர் ரூமி மாதிரியான
மதிநுட்பம் கொண்ட
சொல்லேர் உழவர்கள்
மேற்கூறிய ஆக்கத்தை எழுதுவார்களேயானால் – அது
‘அழியா இலக்கியமாக’ இருக்கும் என்பதை
திண்ணமாய் அறிவேன்.
எல்லாம் வல்ல இயற்கைதான்
கருணை புரிய வேண்டும்.
ஆமீன்!

தாஜ்

*

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்

பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D.

பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது.

தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணம், பௌத்திர மாணிக்கப் பட்டணம், காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன.

தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சி குத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப் பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.

சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.

இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினர்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.

பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப் பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.

இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.

இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.

ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். அவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார். ‘அன்னாரது அரசாட்சி பற்றிய வரலாறில்லாமல் பாண்டியன் வரலாறு இருளாகவே உள்ளது. என்று ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) வருந்துவது நியாயமன்றோ? இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவார்களாக.

References:

1.ஷேக் ஜியாவுதீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் (அரபி)
2.ஹுஸைனி S.A.Q. The History of the Pandiyan country
3.சுல்தான் சையது இப்ராஹிம் வெளியிட்ட நாணயங்கள்.
4.காதிர் உசேன்கான், South India Musalmans. Madras:1910
5.வண்ணக் களஞ்சிய புலவர், ‘தீன் விளக்கம்’ காப்பியம்.
6.தாரா சந்து, Influence of Islam on Indian culture. Allahabad:1936

*

நன்றி: குர்ஆனின் குரல் (ஆகஸ்ட், 1997)
தட்டச்சு & வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com
3:42 PM 26/11/2010

தேசத் துரோகம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்தநாள் வெளியான தினமணியின் தலையங்கம் இது. ‘மதச்சார்பற்ற நாடு’ என்ற தனிச் சிறப்புடன் தலைநிமிர்ந்து நின்ற இந்தியாவை தலைகுனிய வைத்த தினம் ‘டிசம்பர் 6′. அன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் மிருக வெறியும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமுமே அதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டும் தலையங்கம்’ என்கிறது தினமணி. தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து..

***

தேசத் துரோகம்

தினமணி ( (7/12/1992)

ஞாயிறன்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கவுரத்துக்கே இழுக்காகும். ஒரு மதத் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக்கூடிய, தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஆளுங்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாத்தனத்தை செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில்மேல் பூனையாக நடந்து கொள்ளுதல், நாச வேலை இவற்றின் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பியிராவிட்டால் கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக உருப்பெற்றிருக்காது. ஞாயிறன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கனவே வகுப்புவாத, தீவிரவாதப் போக்கால், நலிந்த நிலையில் உள்ள நமது சகோதரத்துவ உணர்வு இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை.

அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்கள் கையை விரிக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கடைசி நாள்களில் நடந்த சம்பவங்களும் உறுதிசெய்கின்றன. தங்களது சிந்தனையைக் கட்டுப் படுத்தும் பொறுப்பை தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் உறுதிசெய்கின்றன.

உச்ச நீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது. அதற்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர கல்யாண் சிங்கிற்கு வேறு வழியில்லை. சங்கிலித் தொடர்போல் நடந்த சம்பவங்கள் அவர்கள் கையைமீறி நடந்ததாக கூறும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களை தாக்கல் செய்துவிட்டு இத்தைகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால் அதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால் இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் ஆணவப்போக்கும்தான்.

ஞாயிறன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் அறிவுக் கூர்மைக்கு பெரும் பாராட்டு என எடுத்துக் கொள்ளமுடியாது. முடிவு எடுக்காமல் இழுத்துப் போகும் போக்கை அவர் புதிய நிர்வாக கலாசாரமாக உயர்த்தியிருக்கிறார். ஆனால், தேசத்துக்கு ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் ஒருவர் உறுதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு பெரும் பளுவைத் தந்திருக்கிறது.

அரசியல் லாபத்திற்காக ஆசைப்படுகிறவர்கள் கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழிநடத்தப்படுகிற தலைவர்கள் ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தைகையவர்களை சரித்திரம் மன்னிக்காது. நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை ‘புதிய கரசேவை’ – ஆக்கபூர்வமான கரசேவை ஒன்றினால்தான் சாதிக்க முடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத் தலைவர் தலைமை தாங்க வேண்டும். தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசிய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும் , கல்யாண் சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

**

நன்றி : தினமணி, தாஜ்

**

பார்க்க : பாபர் மசூதி – விக்கிபீடியா &  ஒரு 9324 வருஷத்துக் கதை! – பா. ராகவன்

மீரா – தான்சேன் சந்திப்பு

அசோகமித்திரனின் இந்தக் கதைக்கும் எங்கள் நாகூருக்கும் தொடர்பு உண்டு. தர்ஹா குளுந்தமண்டபத்தில் உட்கார்ந்து கதை எழுதினாரா அ.மி? அல்ல. அதை பதிவின் முடிவில் சொல்கிறேன். ’18வது அட்சக்கோடு’ நாவல் பற்றி  நண்பர் தாஜூக்கு கடுமையான அபிப்ராயம். இருந்தாலும் இந்தக் கதையை மட்டும் ‘outstanding’  என்று தனியே எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியாமல் கதையை எடுத்து, தட்டச்சு செய்து, பதிவிடுகிறேன் – பரிகாசம் ஒரு கத்தி போன்றது என்று காட்ட. நாகூருக்காக எதையும் செய்வேனாக்கும்! என்ன, ஹஜ்ஜுப் பெருநாளுக்கு எதாவது எழுத வேண்டுமா? அதற்கு நீங்கள் இங்கே ஓடுங்க. கவிஞர் ஜஃபருல்லா குழப்பியது அங்கேதான் இருக்கிறது. இது சுட்ட இறைச்சிக்கான இடம். தெரியும்தானே?

‘குர்பானி’க்கு எதை கொடுக்குறீங்க, ஆடா, மாடா? என்று ஒரு நண்பர் கேட்டதற்கு துபாய் ஹமீதுஜாஃபர் சொன்னார்: ‘என்னெயே கொடுத்துக்கிட்டிருக்கேனே..!’ என்று. பெருநாள் வாழ்த்துக்கள்!

***

மீரா – தான்சேன் சந்திப்பு
அசோகமித்திரன்
இந்தியா டுடே . செப்டம்பர் 2, 1998

*

நான்கு மாதங்கள் முன்பு என் அக்கா இறந்து போனாள். கடைசி வரை அவளறிந்த பாட்டுகளைப் பாடிக் கொண்டு, ஒன்றிரண்டு புதுப் பாடல்களைக் கற்றுக்கொண்டு, உடல் நிலையும் குடும்ப நிலையும் அனுமதித்த நாட்களில் அருகில் ஏதாவது சங்கீதக் கச்சேரி நடந்தால் அதைக் கேட்டு விட்டு, கடைசியாக மார்பில் நீர் கோத்துக்கொண்டு நியூமோனியா சுரம் கண்டு இறந்து போனாள். என் இசைப் பயணம் அவ்வளவு தொடர்ச்சியாக நடைபெறவில்லை. சிறுவர்களாக இருந்தபோது நாங்கள் வெளியே எங்கு போனாலும் சேர்ந்தே போவோம். எந்த வீட்டுக்குப் போனாலும் எங்களைப் பாடச் சொல்வார்கள். இன்னொரு முறை சொல்லத் தேவையில்லாமல் உடனே ஏதாவது பாட்டுப் பாடுவோம். அப்போதெல்லாம் சினிமாப் பாட்டுக்கள் அதிகம் இல்லை. அநேக பாடகர்கள் தனிப் பாடல்களாக இசைத் தட்டுகளில் பாடியிருப்பார்கள். இப்படி எம்.எஸ். சுப்புலெட்சுமி இசைத்தட்டு ஒன்று வெளிவந்தால் அடுத்த வாரம் என்.சி. வசந்த கோகிலத்தின் இசைத்தட்டு வரும். அதையடுத்து டி.கே.பட்டம்மாள், குமாரி சூடாமணி.. சில நேரங்களில் ஒரே பாட்டையே இருவர் தனித்தனியாகப் பாடியிருப்பார்கள். யார் பாடியது மிகச் சிறப்பானது என்று விவாதம் நடக்கும். இது தவிர , முழு நாடகங்களே ஐந்தாறு இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு விற்கப்படும். எங்கள் வீட்டு கிராமபோனுக்கு ஓய்ச்சல் ஒழிவே கிடையாது.

“ராஜ புத்திர ராணியான நீ எப்படி ஒரு முகலாயனிடமிருந்து ரத்தின மாலை வாங்கி கொண்டாய்?”

“அவர்கள் சாதுக்கள்.  என் கிரிதர கோபாலனுக்கென கொடுத்தார்கள்”

“சாதுக்களா? அது டில்லி பாதுஷா அக்பரும் அவருடைய அரசவைப் பாடகன் தான்சேன் என்றும் உனக்குத் தெரியதா?”

“அவர்கள் எல்லா பக்தர்கள் போலத்தான் இருந்தார்கள்..”

“குலத் துரோகி! உன்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட வேண்டும். இனியும் நீ இங்கிருக்கக் கூடாது. போ இந்த நாட்டை விட்டே!”

எங்கள் வீட்டுக்குக் கடைசியாக வந்திருந்த இசைத்தட்டு நாடகமான ‘மீரா’வின் இப் பகுதி எனக்கும் என் அக்காவுக்கும் தாங்கமுடியாத துக்கத்தைக் கொடுத்தது. வசுந்தரா தேவிதான் மீராவாக நடித்திருந்தாள். எங்களுக்கு அது நிஜ மீராவின் குரலைக் கேட்பது போலவே இருந்தது. அந்த ராஜபுத்திர ராணியைக் கஷ்டத்தில் சிக்க வைத்த அக்பர் மீதும் தான்சேன் மீதும் மிகுந்த கோபம் கொண்டோம்.

இன்னும் சிறிது காலம் கழித்து ‘மீரா’ என்றொரு தமிழ் சினிமாப் படம் பார்த்தோம். அதில் மீராவாக நடித்த நடிகையின் பெயர் வசுந்தரா என்று போட்டிருந்தாலும் கிராமபோன் நாடக வசுந்தரா அளவுக்கு  உருக்கமாக நடிக்க முடியவில்லை. இந்தப் படத்திலும் அக்பர், தான்சேன் வந்தார்கள். இதைத் தவிர என் அக்காவின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அக்பரின் படம் இருந்தது. அக்பரின் மீசை எங்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. ‘மீரா’ திரைப்படத்தில் இருந்த தான்சேன் நல்லவன் போலத் தோன்றியது. ஹைதராபாத்தில் ‘தான்சேன்’ என்ற பெயரிலேயே ஒரு இந்தி சினிமா வந்த போது அவ்வளவு தூரம் போய்ப் பார்க்க எங்களுக்கு ஆசைதான். ஆனால் பஸ் கட்டணமே இருவருக்கும் முக்கால் ரூபாய்க்கு மேலாகிவிடும். ஹைதராபாத்துக்கு வரும் இந்திப் படங்கள் ஆறு மாத காலம் அங்கு ஓடிவிட்டு எங்களுக்கு வரும். அங்கு ஓகோவென்று ஓடிய படங்கள் இங்கு அனாதையாகக் காட்சியளிக்கும். படம் முழுக்க மழை பெய்வது போலிருக்கும். ஐந்தாறு இடங்களிலாவது காட்சிகள் தத்தித் தத்தி ஓடும். பாடல் காட்சிகள் வரும்போது எல்லாப் பாட்டுக்களுமே சமையல் அறையில் கடுகு தாளிக்கும்போது பதிவு செய்யப்பட்டது போலிருக்கும். எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றியிருக்காது. எல்லாக் குறைகளையும் கற்பனையால் இட்டு நிரப்பிக் கொள்ளும் வயது.

வெள்ளி, ஞாயிறு எங்கள் பள்ளி வாராந்தர விடுமுறை நாட்கள். கடைசியாக எங்களுக்கு வந்து சேர்ந்த ‘தான்சேன்’ படத்தைப் பார்க்க ஒரு வெள்ளிக்கிழமை அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒன்பதணா வாங்கிக் கொண்டு பார்க்கச் சென்றோம்.

‘தான்சேன்’ ஓடிய மனோகர் டாக்கீஸ் எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர். நாங்கள் அதைப் போய்ச் சேர்ந்தடைந்த போது மணி இரண்டு. இரண்டரை மணி ஆட்டத்துக்கு முப்பது நிமிடமாவது முன்னால் போக வேண்டாமா? ஆனால் கொட்டகை நிசப்தமாக இருந்தது. பகல் ஆட்டத்திற்கான அறிகுறி ஏதும் இல்லை.

அந்தக் கொட்டகைக்கு ஒரு காவல்காரன் கூடக் கிடையாது. அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையில் விசாரித்தோம். அந்தப் படத்துக்கு அது நான்காவது நாள். கூட்டமே இல்லை. அநேகமாக அன்றோ, அடுத்த நாளோ தூக்கி விடுவார்கள். “படம் நன்றாகவே இல்லை” என்று சொன்னான்.

“சைகல் நடித்திருக்கிறாரே?”

“இருந்தால் என்ன? அதனாலேயே படம் மோசம்”

ஆனால் படத்தைப் பார்த்து விட்டுப் போவதில் உறுதியாயிருந்தோம். எங்கள் ஊரில் தினசரி இரு காட்சிகள்தான். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் மூன்று காட்சிகள். நாங்கள் வந்ததாலோ என்னவோ வெள்ளியும் இரண்டு காட்சியாகி விட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தோம். வீட்டுக்குப் போய் மீண்டும் ஆறு மணி ஆட்டத்துக்கு வர நேரம் இருந்தது. ஆனால் வீட்டுக்குப் போய் விட்டால் மறுபடியும் அனுமதி கிடைப்பது உறுதியில்லை. ஆதாலால் அங்கேயே காத்திருந்து மாலை ஆட்டத்தைப் பார்த்து விட்டுப் போவதென்று தீர்மானித்துக் கொண்டோம். தான்சேன் பற்றி நானும் என் அக்காவும் தெரிந்து கொள்ள அப்படம் தவிர வேறு வழியில்லை.

மனோகர் டாக்கீஸ் பக்கத்தில் ஒரு சிறு சந்து இருந்தது. அங்கு சினிமாக் கொட்டகையின் விளம்பரத் தள்ளு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு தள்ளு வண்டிக்கருகில் நான் உட்கார்ந்தேன். இன்னொன்றுக்கு அருகில் என் அக்கா உட்கார்ந்தாள். நான்கு மணி நேரம் அப்படியே உட்கார்ந்தோம். மாலை ஆட்டத்திற்குக் கூடப் பெரிய கூட்டம் இல்லை. வந்திருந்த சிலரும் வழி தவறி வந்தவர்கள் போலிருந்தார்கள். அந்த சினிமாவுக்கு அந்த நாளில் நான்கு மணி நேரம் காத்திருந்து பார்த்தவர்கள் நாங்கள் இருவர் மட்டுமாகத்தான் இருக்கும்.

சினிமா தொடங்கியபோது எங்கள் வயிறும் அசாத்தியமாகக் கிள்ளத் தொடங்கியது. பகல் ஒருமணிக்கு சிறுது மோர் சாதம் அவசரமாகச் சாப்பிட்டது. அந்தப் படத்தை அவ்வளவு பசியுடன் பார்த்தவர்களும் நாங்கள் இருவராகத்தான் இருக்க வேண்டும்.

சினிமா எங்களுக்கு நன்றாகவே இருந்தது. சைகல்தான் தான்சேன். ஆகவே தான்சேன் சின்ன வயதிலிருந்து கடைசிவரை ஒரு ஐம்பது வயது மனிதரைப் போலவே இருந்தான். எல்லா இந்தி சினிமாக்களில் உள்ளது போலவே இதிலும் நிறையப் பேச்சும் பாட்டும். தான்சேன் பாடும்போது மட்டும் மான்கள் ஓடி வரும். மயில்கள் தோகை விரித்துச் சிலிர்த்துக் கொள்ளும். விளக்குத் திரிகள் தானாகப் பற்றிக் கொள்ளும். ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கும் சதுரக் கல் கரைய ஆரம்பித்து விடும். தான்சேன் அக்பரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு பாட்டுப் பாட, அந்தப் பாட்டின் ராகத்தில் தீவிரத் தன்மையால் அவனுக்கு கடுமையான வெப்ப நோய் கண்டு விடுகிறது. எந்த மருந்தும் பயன் தருவதில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக அவன் பிறந்த கிராமத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறான். அங்கு அவனுடைய இளம்பிராயத்துத் தோழி ஒரு பாட்டுப் பாடுகிறாள். அது மேக மல்ஹார் ராகம். வானம் பொத்துக்கொண்டு மழை பொழிகிறது. தான்சேன் நோய் தீர்ந்து விடுகிறது. இப்போது அவனும் அவளும் சேர்ந்து பாடுகிறார்கள். படம் முடிகிறது. ஆனால் மீரா எங்கே?

எனக்கும் என் அக்காவுக்கும் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பசி. வீட்டுக்குப் போனவுடன் அப்பா அம்மா இருவரிடம் இருந்தும் நிறைய வசவு கிடைக்கும். அடி கூட விழலாம். ஆனால் இவ்வளவு அபாயங்களுக்கிடையில் இந்தத் ‘தான்சேன்’ படம் பார்க்க வந்த காரணம் நிறைவேறவில்லை. படத்தில் மீரா பற்றிப் பேச்சு மூச்சு இல்லை. ஒருவேளை இதே படம் தமிழ் மொழியில் இருந்தால் அதில் மீரா வருவாளோ? ஏன் ‘மீரா’ இசைத்தட்டு நாடகத்திலும் ‘மீரா’ தமிழ்ப் படத்திலும்  மீராவின் பூஜைக்கு வரும் அக்பரும் தான்சேனும் ‘தான்சேன்’ படத்தில் அப்படிச் செய்வதில்லை?

எங்களுக்கு மீராவும் தான்சேனும் சந்திப்பது தவறாகத் தோன்றவில்லை. மீராவும் எடுத்ததெற்கெல்லாம் பாடுவாள். தான்சேனும் அப்படித்தான் போலிருந்தது. மீரா பாடுவது எங்களுக்குப் புரிகிற மாதிரி இருந்தது. தான்சேன் நீட்டி முழக்கிப் பாடியதில் ஒரு சொல்லையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. என் இந்த இந்தி சினிமாவில் தான்சேன் மீராவைப் பார்க்கப் போகவில்லை?

மீரா பாடுவது நாடெல்லாம் பிரசித்தமாகி அக்பரும் தான்சேனும் மாறுவேடத்தில் அவள் பாட்டைக் கேட்க வந்ததாக இன்னொரு தமிழ்க் கதைப் புத்தகத்திலும் கண்டிருந்தது. நானும் என் அக்காவும் அதுதான் உண்மை என்று நிச்சயமாக இருந்தோம். ராஜபுத்திரர்களும் முகலாயர்களும் விரோதிகள். அக்பரும் தான்சேனும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இசை என்னும்போது , அது கிருஷ்ணமூர்த்தி இசையாயிருந்தால் கூட, அவர்களுக்கு பேதமெல்லாம் அகன்று விடுகிறது. நானும் என் அக்காவும் ஐந்தாறு மீரா பஜன்களைக் கற்றுக் கொண்டோம்.

அந்தப் பாட்டுக்கள் எல்லாமே கூட்டமாகச் சேர்ந்து பாடுவதற்காகவே இயற்றப்பட்டவை என்றால் அந்த நாளில் எல்லாருமே எம்.எஸ் சுப்புலெட்சுமி போலப் பாடினார்களா? மீரா எந்தப் பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும் அக்பரும் தான்சேனும் மாறுவேடத்தில் அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்? நாங்கள் பெரியவர்களாகி  வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்த நாட்களில் கூட நாங்கள் மீராவைப் பார்ப்பதற்காகத் ‘தான்சேன்’ சினிமாவைப் பலமணி நேரம் பசியோடு காத்திருந்து பார்த்தது நினைவுக்கு வரும். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ மீராவின் பாட்டு யாரால் பாடப்பட்டாலும் நான் அப்படியே நின்று விடுவேன். என்னை விட என் அக்காவுக்கு லயிப்பு அதிகம். ஒரு முறை ஒரு கச்சேரியில் ஒருவர் ஆர்தாஸின் ‘ஹே கோவிந்த ஹே கோபால’ பாட்டுப் பாடியபோது அவளுடைய கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. மீரா பாட்டின் போதும் அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட அம்பது வருடங்களுக்கு எங்களுக்கு மீரா- தான்சேன் – அக்பர் பற்றி ஒரே மாதிரிக் கற்பனைத் தோற்றம் இருந்தது. அத்துடனேயேதான் என் அக்கா இறந்திருப்பாள்.

தற்செயலாகச் சில நாட்கள் முன்பு அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் இலக்கிய வெளியீடு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இந்தியாவின் பக்திப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தார்கள்.

மீராவின் பாடல்களும்தான். எல்லாக் கவிஞர்கள் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பு தரப்பட்டிருந்தது. மீரா பற்றியும் இருந்தது. ஏனோ எனக்கு அது சரியாகப் படவில்லை. மீராவைப் பற்றிய ஆதார பூர்வமான வரலாற்றுக்காகத் தேடி அலைந்தேன். வரலாறும் வாய் வழிக் கதைகளும் இவ்வளவு மாறுபட முடியுமா என்று வியக்க வேண்டியிருந்தது. மீரா – தான்சேன் பற்றிக் கர்ண பரம்பரைக் கதை ஆழ்ந்த அர்த்தங்களும் உயர்ந்த நோக்கங்களும் உணர்த்துவதாக இருந்தாலும் அது நிஜமல்ல. பதிமூன்று வயதில் பட்டத்துக்கு அக்பர் வந்த ஆண்டு கி.பி. 1556. அதன் பின் குறைந்தது பதினைந்து இருபது ஆண்டுகள் கழித்துத்தான் தான்சேன் அவருடைய சபையில் சேர்ந்திருக்க முடியும். அதன் பிறகு இருவரும் மாறுவேடம் பூண்டு யார் பாடுவதைக் கேட்கப் போவதாய் இருந்தாலும் அது 1580க்குப் பிறகுதான் இருக்க வேண்டும்.

மீரா இறந்த ஆண்டு கி.பி. 1547.

(END)
*

நன்றி : அசோகமித்திரன், இந்தியா டுடே, தாஜ்

*

தொடர்பு இதுதான். ‘பாடிக்கலந்த பக்த மீரா‘வின்  கிருஷ்ணன் வேறு யாருமல்ல , நாகூர் ஆண்டவர்தான் என்று ‘வரலாறு’ எழுதியிருக்கிறார் எம்.ஏ. ஹைதர் அலி! நூல் : காருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம். நன்னூலகம் வெளியீடு. ‘சாஹே மீரா..’ என்று ஈயம் ஹனிஃபா பாடியதில் குழப்பமா? ‘நாகூர் ஆண்டவர்’ என்று மரியாதையாக எளியோர்களால் அழைக்கப்படும் எங்கள் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் பிறந்தது 1504-ம் ஆண்டு (ஹிஜ்ரி 910) . அதனாலோ? விட்டால் , பக்கத்து வீட்டு மீரான் மொய்தீன் கூட பக்த மீராவுக்கு உறவுதான் என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது! நந்த நந்தன…

***

எண்கள் – அசோகமித்திரன் சிறுகதை

அசோகமித்திரன் நேர்காணல் : அம்ருதா (பாலுசத்யா)

ஆசியாநெட்டில் குஞ்சாலி மரைக்கார்

நேற்று ஆசியாநெட்+ல் ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா‘ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். பார்ப்பது எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. கம்யூட்டரில் சேமித்து வைத்திருக்கும் படம் வேறு. சம்யுக்தா வர்மாவுக்காக தாரளமாக சேமிக்கலாம். சத்யன் அந்திக்காடின் இந்தப் படத்தின் கதை வசனம் சீனிவாசன். எனக்குப் பிடித்த சீனிவாசன். இதிலும் அடுத்தவன் பொருளை அபகரித்துக்கொண்டு விழிக்கிறார். இங்கே நிலம். கடைசியில் வழக்கம்போல திருந்தியும் விடுகிறார். அரிய குணம். ஆனால் கதை நாயகன் அவரல்ல, அதுபோகட்டும், விளம்பர பூதங்கள் வந்தபோது அடுத்த சானல் என்று ஆசியாநெட்டுக்கு போனபோதுதான் அந்த விளம்பரம். குஞ்சாலி மரைக்கார்! விரைவில் அந்தத் தொடர் வர இருக்கிறது. பார்க்க ஆவலாக இருக்கிறேன். குஞ்சாலி மரைக்காரைச் சொன்னால் குஞ்சாலி மரைக்கார் தெருவில் பிறந்து வளர்ந்த எனக்கு ஆர்வம் இருக்காதா என்ன? நண்பன் ரஃபி (ரூமி) க்கு எங்கள் தெருப்பெயரைக் கேலி செய்வதென்றால் அவ்வளவு இஷ்டம். குஞ்சைப் பிடிக்காதவர் யார்? ரூமியின் நகைச்சுவைதான் தெரிந்ததாயிற்றே. சகோதரர் யாழன்ஆதி , ‘‘அய்யா எப்படிங்கய்யா தொடர்ந்து எழுதறது?’ என்று எதேச்சையாக ரூமியிடம் கேட்டாராம். அவர் மிகவும் சாதரணமாக ஒரு ரொட்டியைக் கிழித்து மீன் மசாலாவில் தொட்டுவிட்டு வாயில் போட்டுக்கொண்டே சொல்லியிருக்கிறார்:  ‘உக்கார்ந்து எழுதவேண்டும்’ . எழுத்தாளக் குஞ்சு!

***

marakkar_stamp_2000b
நாகூரின் வரலாற்றில் குஞ்சாலி மரைக்காயரின் பங்கு மகத்தானது. ‘கேரளத்துடன் நாகூருக்குண்டான தொடர்பு இன்று நேற்று உண்டானதல்ல. அந்த தெரு தாங்கியிருக்கும் குஞ்சாலி மரைக்கார் என்ற பெயரே மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரரின் பெயரன்றோ? முஸ்லீம்களுக்கு எதிராக அக்கிரமம் செய்த போர்ச்சுக்கீசியரை எதிர்த்து போர் செய்யுமாறு நாகூர் ஆண்டகை அவர்கள் குஞ்சாலி மரைக்காயரைத் தூண்டினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது’ என்பார் நண்பர் அப்துல் கையும். முனைவர் அஜ்மல்கானின் கட்டுரையிலிருந்தும், சத்யமார்க்கம் வலைத்தளத்திலிருந்தும் சில பத்திகளை கீழே தந்திருக்கிறேன். தமிழ் முஸ்லீம்கள் சொல்லும் அந்த ‘வரலாறு’ , சான்றோடு அந்த மலையாளத் தொடரில் சொல்லப்படுமா, 1966ல் வந்த மலையாள சினிமாவான (இப்போதுதான் கூகிள் உதவியால் அறிந்தேன்) ‘குஞ்சாலி மரைக்காயர்’-லும் சொல்லப்பட்டிருக்கிறதா? தெரியவில்லை. எழுத்தாளர் சக்கரியா கூட குஞ்சாலிமரைக்கார் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக ஜபருல்லா நானா நேற்று ஃபோனில் சொன்னார். இங்கே, அலுவலகத்திலுள்ள மலையாள நண்பரைக் கேட்டால் ‘யார் சக்கரியா?’ என்கிறார்!

அந்த கடற்படைத் தளபதியின் குடும்பத்தைச் சேர்ந்த, ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்ட, ஒரு குஞ்சாலி மரைக்காயர்தான் நாகூர் வந்து என் தெருவிலும் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. சுஹைப்ஆலிம்சா அவர்கள் வெளியிட்ட அந்தப் பெரிய பச்சை புத்தகத்தில்கூட  (தலைப்பு ஞாபகம் இல்லை, பிறகு சொல்கிறேன்) இப்போதும் குஞ்சாலி மரைக்காயரின் குடும்பத்தினர் நாகூரில் – குஞ்சாலி மரைக்காயர் தெருவில்- வாழ்ந்து வருகின்றனர் என்று ஒரு வரி வரும். பார்க்காமலேயே யாரும் எழுதலாம். எனக்குத் தெரிந்து யாரும் அப்படி இல்லை. எல்லாமே எங்கள் சொந்தம்தானே, தெரியாமல் போகுமா? எந்தக் குடும்பமோ , அந்த வீரத் தளபதியின் ரத்தம் என் குடும்பத்தில் ஓடவில்லை என்பது மட்டும் நிஜம். உதாரணம்? நான்தான் ! ஆர்.எஸ்.எஸ் கலவரம் என்றால் அறந்தாக்கிக்கு ஓடிவிடுவேன். அங்கேயும் அடிதடி என்றால் அண்டார்டிக்காவிற்கு ஒடி விடுவேன். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு ‘குஞ்சாலி’மாமாதான் என் தெருவில் இப்போது இருப்பது. வீரத்திற்கு இலக்கணம். பாத்ரூமில் இதுவரை கால்தடுக்கி விழுந்த எண்ணிக்கை : நாற்பத்தி இரண்டு! அல்லது , என் ஊர் சபராளிகள் அனைவரையும் ‘குஞ்சாலி மரைக்காயர்கள்’ என்று சொல்லலாமா?

வீரத்தை மீட்டெடுக்க சில செய்திகள், இணைப்புகள் :

kunja

அருட் பணியும், அறப் போரும்
Dr. P.M. அஜ்மல்கான்

தமிழக முஸ்லீம்களைக் காக்க கள்ளிக்கோட்டை ஜாமரின் அரசரின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரைக்காயர் முன் வந்தார். மாயதுன்னே என்னும் இலங்கை இளவரசர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். அதையெல்லம் விட முக்கியமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.

அதுதான் நாகூர் பாதுஷா நாயகம் சுல்தான் செய்யிது அப்துல் காதிறு ஷாஹூல் ஹமீது வலியுல்லா அவர்கள் தங்களது துணைவர்களான 404 ·பகீர்களுடன் சேர்ந்து குஞ்சாலி மரைக்காயருடனும் இதர தமிழகக் கரையோர மரைக்காயர்களுடனும் போர்த்துக்கீசியக் கொள்ளையருக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகும். அவர்களோடு அப்போது சேர்ந்திருந்தவர்களில் காயல்பட்டினம் ஷெய்கு சதக்கு மரைக்காயர் அவர்களும் ஒருவர் ஆவார்கள்.
பாதுஷா நாயகம் அவர்களுடைய வரலாற்று நூல்களில் ‘ஆண்டகை அவர்களின் சத்துருக்களான குடகு தேசத்து அரசனின் படையினர்’ ஆண்டகையவர்களைத் தாக்க வந்ததும் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து பட்டதும் கூறப்படுகிறது. போர்த்துக்கீசியர்களின் இந்தியத் தலை நகரான கோவா ,குடகு தேசப் பகுதியே என்பதும் பாதுஷா நாயகம் அவர்களின் காலத்தில் அப்பகுதி போர்துக்கீசியர்களின் வசமே இருந்தது என்பதும் இச்செய்தியை உறுதிப் படுத்துவதாகும்.
அவ்வாறு நடந்த போர் ஒன்றிலே மானுவேல் டிசூஸா என்னும் போர்துக்கீசியக் கடர்படைத் தலைவன் , பாதுஷா நாயகம் அவர்களின் வழிகாட்டலில் நின்று போரிட்ட முஸ்லீம் வீரர்களால் கொல்லப்பட்டான் என்று தெரிகிறது. நாகையில் வீற்று இன்றும் நல்லருள் புரிந்து கொண்டிருக்கும் வலி நாயகர் அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கான போரிலும் பங்கு கொண்டு வெற்றி கொண்டார்கள் எனும் செய்தி எண்ணியெண்ணி போற்றத் தக்கதாகும்.

வரிசையாக நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள் கடற்படைத் தலைவர்களாக விளங்கினர். அவர்களின் நினைவை நிலை நாட்டும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பெரும் பங்கை நினைவு கூறும் வகையில் இந்திய அரசாங்கம் தனது கடற்படைத் தளம் ஒன்றிற்கு ‘குஞ்சாலி மரைக்கார்’ என்று பெயர் சூட்டியுள்ளது இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தக் குடும்பத்தில் பலருக்கும் குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயர் விளங்கி வந்தது. கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயரோடு நாகூர் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட தோழமையின் விளைவாக அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குஞ்சாலி மரைக்காயர் ,வலியுல்லா அவர்களின் கூடவே நாகூருக்கு வந்து விட்டார். அவர் வாழ்ந்த தெருவே தர்காவின் அருகே இன்றும் உள்ள ‘குஞ்சாலி மரைக்காயர்’ தெரு ஆகும்.

 
குஞ்சாலி மரைக்காயருக்கும் போர்த்துக்கீசியருக்கும் இடையே நடைபெற்ற கடற் போர்கள் பல. அவற்றுள் சில போர்கள் கீழக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள வேதாளை கடற்கரையில் நடந்தவையே. அவ்வாறு நடந்த ஒரு கடற்போரில் குஞ்சாலி மரைக்காயருக்குத் தோல்வி ஏற்படவே அவரை ஜாமரின் அரசர் கள்ளிக்கோட்டைக்குத் திரும்ப அழைத்துக் கொண்டார். வேதாளையில் இன்றுமந்த ஷஹிதாக்களீன் (வீரத் தியாகிகளின்) சமாதிகள் பல நூற்றுக் கணக்கில் காணப்படுகின்றன. மீஜான் கற்கள் மணலில் புதையுண்டு கிடக்கின்றன. ஆய்வாளருக்கு. சிறப்பாக புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய இடம் அது. அத்தகையோரின் கவனத்தை அது இதுவரை கவர்ந்ததாகத் தெரியவில்லை…
……. ……… ……….
முன்பு சொன்னபடி தமிழகத்தில் கேரளத்துக் குஞ்சாலி மரைக்காயரும் பாதுஷா நாயகம் ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்களும், காயல் பட்டினம் ஷெய்கு ஸதக்கு மரைக்காயர் அவர்களும் போர்த்துக்கீசியர்களுக்கு அவ்வளவு பலத்த அடி கொடுத்திருக்கவில்லை யென்றால் தென் தமிழகமும் மற்றொரு ‘கோவா’ ஆகி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தின் ஆபத்தான நிலைமையை உணர்ந்த பாதுஷா நாயகமவர்களின் குரு நாதரான முஹம்மது கெளது குவாலியர் (வலி) அவர்கள் , தம் சீடரான ஷாஹூல் ஹமீது (வலி) அவர்களைத் தமிழகத்திலேயே தங்கி இஸ்லாமியப் பணி புரியப் பணித்தார்கள். அவர்கள் ஆன்மீகத்தைப் பரப்பும் பணியோடு தம் சேவையை நிறுத்திக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியுள்ள பரங்கிப் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து மக்களை விடுவிப்பதையும், தம்முடைய கடமையாக உணர்ந்தார்கள். எனவே அன்னிய ஆதிக்கத்தைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் எச்சரித்தார்கள். குஞ்சாலி மரைக்காயர் போன்ற படை வீரர்கள் மத்தியில் வீரத்தை ஊட்டி உபதேசித்தார்கள். மட்டுமின்றி சேதுபதி அரசர், தஞ்சை அரசர், அப்போதைய இலங்கை மன்னர் ஆகியோரிடம் சென்றும் அன்னிய ஆட்சியால் விளையும் தீமைகளை விளக்கி அவர்களை பரங்கியரோடு பொருதச் செய்தனர்.

***

சத்யமார்க்கம் வலைத்தளத்திலிருந்து :

‘இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2 ‘

இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதிப்போம்.
 
 வாஸ்கோடகாமா
 
 கி.பி 1492ல் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்படுகிறது.
 
 வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூறி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.
 
 வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.
 
 குஞ்சாலி மரைக்காயர்
 
 கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது.
 
 இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.
 
 கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
 
 கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
 
 முதல் வெற்றி
 
 கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.
 
 கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.
 
 கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.
 
 கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.
 
 இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். 1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.
 
 இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
 
 இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.
 
 1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு!
 
 1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.
 
 ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா?
 
 ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், “கப்பலோட்டிய தமிழன்” பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.

***
from http://www.keralawindow.net/imp_k.htm

KUNHALI MARAKKAR

 Marakkar means navigator. In Tamil the ship is known as Marakkala. It is believed that the word Marakkar was derived from this word. Kunhali is the honorific title awarded to the Marakkar family by the Zamorin. Kunhali Marakkars were the admirals of Zamorins naval force. They were great patriots who fought for their motherland till their last breath. It was the stubborn resistance of Marakkars that compelled the Portuguese to shift their establishments to Kochi and to Goa. Kozhikode was one of the famous trade centres of oriental region and Arabs maintained monopoly over the trade with Kozhikode. The attempts of Portuguese to win over the Arabs did not fructified as the Zamorin was in favour of the latter. This led to confrontation between the Portuguese and Arabs. The first Kunhali Marakkar was a victim of the atrocities of Portuguese and suffered heavy loss. He concluded a treaty with the Zamorin and fought against the Portuguese. Zamorin pleased and appointed him as the admiral of naval force and conferred honorific title Kunjali. Kunhali Marakkar I, Kunhali Marakkar II, Kumhali Marakkar III alias Pada Marakkar, Kunhali Marakkar IV alias Muhammed Kunhali Marakkar were the great valors and masters of maritime warfare. In the battle held during 1599, Kunhali Marakkar was defeated and caught as a prisoner. Later he was sentenced to death. 

***

ஒரு சுட்டி :
குஞ்சாலி மரைக்கார் –  விக்கிபீடியா

« Older entries