எல்லோருக்கும் காந்திஜியின் எச்சரிக்கை

5.11.1946ல் வெளியான செய்தி – தினமணி வைரவிழா மலர் 1994லிருந்து..

எல்லோருக்கும் காந்திஜியின் எச்சரிக்கை
தினமணி

கல்கத்தா, நவ. 4 (1946)

இன்று காந்திஜி மௌன விரத தினம். ஆகவே பிரார்த்தனை கூட்டத்துக்கு ஒரு செய்தி எழுதி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் மகாத்மா காந்தி கூறியிருப்பதாவது :

நேற்று நான் உங்களுக்கு பிரசங்கம் செய்தபோது பீகாரிலிருந்து வந்த செய்தியொன்றை பிரஸ்தாபித்தேன். அந்தச் செய்தி என்னை ரொம்பவும் துடிக்க வைத்துவிட்டது. ஆகவே வங்கப் பிரதம மந்திரி ஸ்ரீ சுக்ரவர்த்தி மூலம் கீழ்க்கண்ட தந்தியை அனுப்பினேன்:

முஸ்லிம் பிரயாணிகளை ஹிந்துக்கள் படுகொலை செய்ததாக ‘மார்னிங் நியூஸ்’ பத்திரிக்கை கூறுகிறது. முஸ்லிம்கள் வீடுகளை விட்டு ஓடுவதாகவும் பிரதம மந்திரி சும்மா பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இப்பத்திரிக்கை தகவல் கூறுகிறது. விவரங்களளை தந்தி மூலம் தெரிவிக்கவும்.

இந்த தந்திக்கு பண்டித ஜவாஹர்லால் நேரு கீழ்க்கண்ட பதிலை அனுப்பியுள்ளார். “மார்னிங் நியூஸ்” பத்திரிக்கையில் பிரசுரமான தகவல் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகும். தெளிவாகவும் இல்லை. இங்கு சர்க்கார் தங்களால் முடிந்ததையெல்லாம் செய்து வருகின்றனர். ஆயினும் நிலைமை பரபரப்பாகவும் சில இடங்களில் நெருக்கடியாகவும்தான் இருக்கிறது. நான் இங்கே ஸ்ரீ நிஷ்டாருடன் தங்கியுள்ளேன். லியாகத் அலியும், வல்லபாயும் டில்லிக்குப் போகின்றனர்.”

ஆகவே, பத்திரிக்கை தகவல் ரொம்ப மிகைப்படுத்தப்பட்ட செய்தியென்பதும் ஆயினும் பீகாரில் நிலைமை ளாறுதானென்றும் கடுமையாகத்தான் இருக்கிறதென்பதும் இந்தப் பதிவிலிருந்து தெரியவரும். பீகார் மீது எனக்குப் பிரியம் உண்டு. கலக நோய் இதர மாகாணங்களுக்கு பரவக் கூடாதென்ற கவலையும் உண்டு. இதனால் மேற்படி நிலைமையை என்னால் சகிக்க முடியவில்லை.

பொதுமக்களுக்கு சொந்தமானது காங்கிரஸ். நம் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு சொந்தமானது முஸ்லிம் லீக். காங்கிரஸ் மந்திரி சபைகள் உள்ள இடங்களில் முஸ்லிம்களைக் காக்க காங்கிரஸ் தவறினால் காங்கிரஸ் பிரதம மந்திரி என்று ஒருவர் இருந்தென்ன பிரயோசனம்? இம்மாதிரியாக லீகர்கள் மந்திரிசபை இருக்குமிடத்தில் ஹிந்துக்களை லீக் பிரதம மந்திரியால் பாதுகாக்க முடியவில்லையானால் லீகர் ஒருவர் பிரதம மந்திரியாக இருப்பானேன்? தங்கள் மாகாணங்களில் உள்ள ஹிந்து அல்லது முஸ்லிம் மைனாரிட்டிகளைக் காப்பதற்காக இவர்கள் ராணுவத்தின் உதவியை நாடினால் பொதுமக்களிடையே இவர்களுக்கு ஆதிக்கம் இல்லையென்றுதானே அர்த்தம். நெருக்கடி ஒன்று எழுமானால் பொதுமக்களிடம் இவர்களுக்கு செல்வாக்கு இல்லையென்றால் இந்த தேசத்தை நீயே ஆண்டு கொண்டிரு என்று நாமெல்லோரும் பிரிட்டனை அழைப்பதாகத்தானே இதற்கு அர்த்தமாகும். இந்த விஷயத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

பீகாரில் நேருஜியும் நிஷ்டார் சாஹிபும் என்ன செய்ய முடிகிறதென்று நாம் பொறுத்துப் பார்ப்போம். பீகாரில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் பித்துக்கொள்ளித்தனத்தைக் கை விடுவார்களா இல்லையா என்று கவனிப்போம்,

நாளை ஈத் பண்டிகை தினமாகும். இது நாம் சண்டை போடவேண்டிய தினமல்ல. சஹீத் சாயர் (ஸ்ரீசுகரவர்த்தி) என்ன செய்கிறாரென்றும் நாம் பொறுத்துப் பார்ப்போம். நாளையிலிருந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவில் உள்ள இதர மதத்தினரும் ஒருவரோடொருவர் அன்புடன் பழகி நண்பர்களாக வாழ ஆரம்பித்தால் அது எவ்வளவு அழகாக இருக்கும். ராணுவத்துக்கும் போலீஸூக்கும் வேலையின்றிப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

எல்லாம் காலிகளால் வந்தது என்று எப்போதும் நாம் பழி சுமத்துகிறோம். இந்தக் காலிகள் சிருஷ்டியாவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் பொறுப்பு நாம்தான். ஆகவே இதெல்லாம் காலிகள் வேலையென்று சொல்வது சரியாகாது.

காந்திஜியின் இந்தச் செய்தியை ஸ்ரீ சதீஷ் சந்திரதாஸ் படித்தார்.

**

நன்றி : தினமணி, தாஜ்