எச்சில் படாத நோன்பு (சிறுகதை) – நாகூர் ரூமி

ஆமீன்!

This powerful Ramadan commercial, featuring world leaders including Donald Trump, carries an important message and is going VIRAL!!!

Thanks to : Zain  & Syed Mubarak

மகபூப் பாய் – ஆசாத் பாய்

முகநூலில் நண்பர் ஆசாத் பகிர்ந்த நெகிழ்ச்சியான (பழைய) பதிவு. ரமலான் ஸ்பெஷலாக மீள்பதிவிடுகிறேன், நன்றியுடன்..

*

azad01

மகபூப் பாய் – அபுல் கலாம் ஆசாத்

சென்ற இரண்டரை வருடங்களாக மகபூப்பாயை எனக்குத் தெரியும். மனைவியையும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு அனுப்பியாயிற்று. பெரியவீடு இனிமேல் தேவையில்லை. ஒருபடுக்கையறை உள்ள சிறிய வீடாக இருந்தால் போதுமென்று வீடு தேடி அலைந்துகொண்டிருந்தபோதுதான் மகபூப்பாயைப் பார்த்தேன்
.
ரியல் எஸ்டேட் கம்பெனியில் அவர் ஆஃபீஸ் பாய். செய்யும் தொழில்தான் ஆஃபீஸ் ‘பாய்’, வயதில் அவர் எனக்கு அண்ணன். பூப்போட்ட லினன் சட்டையில் மேல் பட்டன் போட்டு அவரை நான் இதுவரை பார்ட்ததில்லை. முன் வழுக்கை, அம்மை வடுப்போட்ட முகம், ஏழ்மையான தோற்றம் எல்லாம் சேர்ந்து அவரைப் பார்த்ததும் நம்மை “பாவம் பாய்” எனச் சொல்லவைத்துவிடும்.

“இங்க மகபூப் பாய் யாருங்க”

“நாந்தான். என்ன வேணும்”

“வீடு இருக்குன்னு ஜாஃபர் சொன்னாரு. எனக்கு அரபி பேசத் தெரியாது. முதீர் கிட்ட கொஞ்சம் வந்து தர்ஜுமாப் பண்ணீங்கன்னா…”

“ஆமா, ஜாபர் சொன்னாரு. பேமுலி வாராங்களோ, வீடு பாக்றிய”

“இல்ல. ஃபேமிலி ஊருக்குப் போய்ட்டாங்க, அதனாலதான் சின்னதா சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் எதாவது பாக்கலாமுன்னு”

“அல்லால்லா. இங்க பேமுலிக்காரவொளுக்குத்தான வீடு தாரது”

“இக்காமால இன்னும் ஃபேமிலி ஸ்டேட்டஸ் இருக்குங்க. குரூஜுல அவங்க போகல”

“சரி சரி. அத்தயெல்லாம் முதீர் கிட்ட சொல்லாதியொ”

இப்படித்தான் அவருடன் எனக்குப் பழக்கம் துவங்கியது.

இங்கு நான் அட்வான்ஸ் தந்தவுடனே கார் துடைக்கும் வேலையை தனக்குத்தான் தரவேண்டும் எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். சென்னை போரூரிலிருந்து சின்மயா நகர் போவதற்கு ஷேர் ஆட்டோ பிடித்து பதினொரு மணி வெயிலில் கோயம்பேடு செல்லும் ஆயாக்களோடு இடுக்கி அமர்ந்து கொண்டு போகத் தயங்கியதில்லை, ஆனால், சவூதியில் நம் காரை நாமே துடைத்துக்கொள்வதா. ‘கெவ்ரதி’ என்ன ஆவது. அந்த வேலைக்காக மகபூப் பாயுடன் ஒப்பந்தம் போட்டாகிவிட்டது.

பாய் நல்ல உழைப்பாளி. நெல்லையில் ஒருஊர்தான் பூர்வீகம். பெரிய குடும்பமாம், கூடுதல் வருமானத்திற்காக இந்த கார் துடைக்கும் வேலை. கேட்பதற்கென்னவோ சாதாரணமாகத் தோன்றும் வேலைதான். ஆனால், செய்தால் ‘பெண்டு’ கழண்டுவிடும்.

சமயத்தில் அதிகாலையில் சர்க்கரைக்காக நடப்பதாக நினைத்துக் கொண்டு பெயருக்காக கட்டடத்தைச் சுற்றி ஒரு நடை போகின்ற சமயத்தில் வியர்க்கவியர்க்க மகபூப் பாய் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்ப்பேன்.

ப்ளாஸ்டிக் வாளி நிறைய சோப்புத் தண்ணீர். பெரிய ப்ளாஸ்டிக் பரஷ். டர்க்கி டவல் இரண்டு மூன்று இவைதான் அதிகாலையில் மகபூப் பாயின் தளவாடங்கள்.

முதலில் தூசியைத் தட்டிவிட்டு சோப்புத் தண்ணீரைக் காரின் மேல் ப்ரஷ்ஷால் தெளித்து, பிறகு அப்படியே அதை முகத்தில் க்ரீம் பூசுவதைப் போன்று பரஷ்ஷால் விஷுக் விஷுகெனப் பரப்புவார். ஈரமான டர்க்கி டவலால் அழுத்தித் தேய்த்து விட்டு இன்னொரு டவலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வழித்தெடுக்க கார் குளித்து முடித்துத் தலை சிலுப்பும். அதன் பிறகு அடுத்த டவலால் மீண்டும் வழித்தெடுத்துக் கடைசியில் காய்ந்த டவல் ஒன்றை உதறி விரித்துப் போட்டு முழுவதுமாகத் துடைத்து விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த காரை நோக்கிச் செல்வார்.

வேலை முடிந்த சந்தோஷத்தில் வரும் பெருமூச்சா இல்லை நாம் என்று கார் வாங்கப் போகிறோம் என்ற பெருமூச்சா என்பதை அவர் மட்டுமே அறிவார்.

சென்ற வருடத்தில் ஒரு நாள்,

“ஒரு சின்ன ஒதவி. ரூம்புக்கு வாரன”

“வாங்க. வந்துதான் சொல்லணுமா, இங்கயே சொல்லலாமா” லிஃப்டின் கதவைப் பாதியில் வைத்தபடி நான் கேட்டேன்.

“நீங்க போங்க. பித்தள்ள வாரன்” எனச் சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் அறைக்கு வந்தார்.

“ஒண்ணுமில்ல சார். ட்ராப்ட்டு அனுப்புறன். அட்ரசு எழுதித் தந்தியள்னா” என ஆரம்பித்தவர் செக் புத்தகத்தை எடுத்து அதிலும் தொகையை எழுதி யாருக்கு அனுப்புகிறார் என்ற விவரங்களைச் சொல்லி எல்லாவற்றையும் எழுதித் தரச் சொன்னார்.

இவ்வளவு நாட்களாக யாரிடம் சென்று இதையெல்லாம் எழுதினீர்கள் என்று கேட்டதற்கு, குறிப்பாக ஒரே ஆளிடம் செல்வதில்லையென்றும் பணம் அனுப்பும் நேரத்தில் யார் கண்ணில்படுகிறார்களோ அவர்களிடம் சென்று உதவி கேட்டுக்கொள்வதாகவும் சொன்னார்.

அன்று நான் எழுதிக் கொடுத்ததற்குப் பிறகு பாய் வேறு யாரிடமும் சென்று ‘செக்’ எழுதச் சொல்லி உதவி கேட்கவில்லை. ஒவ்வொரு மாதமும் என்னிடம் வர ஆரம்பித்துவிட்டார். என்னிடம் என்ன பிடித்ததோ அல்லது என்னிடம் என்ன பரக்கத்தைக் கண்டாரோ மாதாமாதம் வருவார். இத்தனைக்கு ட்ராஃப்ட் இத்தனை சேமிப்பு என்று மனம்விட்டுப் பேசுகையில் நெருங்குவது போலத் தோன்றினாலும் அதற்கு மேல் மற்ற விவரங்கள் பேசியதில்லை. சில சமயம் வங்கியிலிருந்து வரும் கடிதத்தைக் காட்டுவார்.

தொகையை ஆயிரத்தில்தான் அவருக்குச் சொல்லத் தெரியும். “பதினெட்டாயிரத்திச் சொச்சம்” “ஆறாயிரத்திச் சொச்சம்”. துல்லியமான கணக்கு வழக்கெல்லாம் அவரிடம் கிடையாது.

“ஆயிரத்துக்குப் பன்னண்டாயிரத்துச் சொச்சம்” என்பது அவரது இன்றைய எக்ஸ்சேஞ்ச் ரேட்.

ஆயிரத்துக்கு மூணாயிரத்திச் சொச்சம் இருக்கும்போது சவூதி வந்தவர்.

வளைகுடா நாட்டில் இருந்தாலும் கார் துடைத்து ‘ஓவர்டைம்’ செய்தாலும் செலவுக்கென்று அனுப்பியது போக சுமாரான சேமிப்புதான் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது அல்லது வழங்கப்பட்டிருக்கிறது.

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கச் சொல்வேன். ம் ம் என்ற ஓசையைத் தவிர வேறெதுவும் அவர் பதிலாகச் சொன்னதில்லை. ‘பாவம்’ என நினைத்துக்கொள்வேன்.

இரண்டு நாட்களுக்கு முன் இஃப்தார் விருந்திற்காக அவசரமாகப் புறப்படுக் கொண்டிருந்தபோது வந்தார்.

“சார், செக்கும் அட்ரசும் எளுதித் தரியளா”

“நோம்பு தொறக்கக் கூப்டிருக்காங்க அவசரமாப் போறேனே”

“ஆறு மணிக்கு ஆள் போவுது. நைட் ப்ளைட்டு. எளுதித்தந்தியள்னா இன்னிக்கே தந்தனுப்சிருவன்ல”

தட்ட முடியவில்லை. எழுத உட்கார்ந்தேன். தொகை வழக்கத்தை விடக் குறைவாக இருந்தது. பெயரும் வழக்கமாக எழுதும் பெயராக இல்லாமல் வேறு பெயரைச் சொன்னார். ட்ராஃப்ட், அட்ரஸ், இவற்றை மீறி வேறு எதுவும் சொந்த விவகாரங்களைக் கேட்பது மரியாதை அல்ல என நினைத்துக்கொண்டிருந்தபோதே வாய் தவறிக் கேட்டுவிட்டேன்,

“மகபூப்பாய், என்ன பணம் கம்மியா அனுப்றீங்க. பேரும் வேற யார் பேரோ சொல்றீங்க” அடடா கேட்டுவிட்டோமே என்று நாக்கைக் கடிப்பதற்கு முன் பதில் வந்தது.

“ஜக்காத்துப் பணம் சார்”

சட்டென்று ஒரு வினாடிக்குள் எனக்குள் ஏகப்பட்ட மின்னல்கள். எதிரில் நிற்பது கார் துடைக்கும் மகபூப் பாயா வேறு யாராவதா என்று சந்தேகம் தோன்றி மறைந்தது. என் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கவனித்தாரோ என்னவோ அவரே தொடர்ந்தார்.

“நூத்துக்கு ரண்டரை மேனிக்கு உள்ளதக் கணக்குப் போட்டு பெருநாளுக்கு முன்ன ஊருக்குக் கெடைக்றமாதிரி தந்துருவன்ல. நம்மள்ட்ட உள்ளது லெச்சத்துலயா. எதோ உள்ளதுக்குக் கணக்கு. ஆயிரம் ரெண்டாயிரமா தாரன். நூத்துலதான சார்”

அவர் பேசிக்கொண்டே போக எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. தன்னிறைவான வாழ்க்கையை அனுபவிப்பவன் இன்னும் ஜக்காத் பணத்தை முழுவதுமாகக் கணக்கிட்டுத் தரவில்லை. சொற்ப சேமிப்பை வைத்திருக்கும் அவர் தந்துவிட்டார். மகபூப் பாய்க்கு சரியாக ‘அட்ரஸ்’ எழுதத் தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை.

*****
முதீர் = மேலாளர்
தர்ஜுமா = மொழிமாற்றம்
இக்காமா = குடியிருப்பு அனுமதிப்புத்தகம்
குரூஜ் = வெளியே (final exit)
பரக்கத் = செழிப்பு
இஃப்தார் = நோன்பை முடித்து உணவருந்துவது
ஜக்காத் = ஏழைகளுக்குச் செய்யவேண்டிய கட்டாய தர்மம்

*

நன்றி : அபுல் கலாம் ஆசாத்

ரம்ஜான் – சாமி கை விடல சின்னதாதாவின் சிறுகதை

இந்தச் சிறுகதையினை வாசித்து முடித்த இக்கணம், என்னால் எதையும் பேசமுடியாத நிலை. உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். சம்பவம் உண்மையைச் சார்ந்ததா.. அல்லது ஃபிக்ஸனா என்று நிச்சயமாக உணர முடியாவிட்டாலும்…, கதையின் மனித நேயம் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. வாழ்த்துக்கள் சின்னதாதா… வாழ்த்துக்கள். – தாஜ்

*

//அவரே தொடர்ந்தார், “சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்”

அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.
// இந்த வரிகளை கடந்து போவது அவ்வளவு எளிதானதில்லை. இங்கே வயிற்றை கட்டி வாயை கட்டி ஊரில புள்ள அது கேட்டான் அத வாங்கணும்னா இதெல்லாம் கொஞ்சம் கொறச்சாதான் முடியும் என்ற தகப்பன்சாமிகளை சவூதி வாழ்வில் நிறைய சந்தித்திருக்கிறேன்..நிஜ வாழ்வின் என் அண்ணனிடமிருந்தும்.. – ஷேக் முஹம்மத்

*

நெகிழ வைக்கும் கதை. கண்களில் கண்ணீர் கட்டி நிற்கிறது என்பதை எழுத வெட்கமில்லை. சின்ன தாதா… நீங்கள் வாழ்க, உங்கள் குடும்பம் வாழ்க. அய்யனார் வாழ்க. – ஷாஜஹான்

*

மதங்களைக் கடந்த மனித நேயம்,முகங்களைப் பார்க்காமல் உண்டாகும் அன்பு,மனிதம் இன்னும் இருக்கிறது என உணர்த்தும் நிகழ்வு,…….. மேலே ஒன்றும் எழுத இயலாமல் பார்வையை மறைக்கிறது கண்ணீர்…..தகுந்த நேரத்தில் தகுந்த பதிவு.அய்யனாரை வாழ்த்த வயதில்லை.நன்றிகள் கோடி அய்யா. வாழ்க நீ எம்மான்…. – அஹ்மது சிராஜுதீன்

*

கண்களில் கண்ணீர் – ஆதிகா அஷ்ரீன்

*

சமீபத்தில் வாசித்ததில் மிகப்பிடித்தமான எழுத்து… கண் கலங்க வைத்தது…. – சென்ஷி

*

மாஷா அல்லாஹ்!! இந்த இணக்கமும் புரிதலும்தான் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானது. – ஆசிப் மீரான்

*

ஆபிதீன் எழுதாமலிருந்தால் பாராட்டுகிறார்கள். இவர் எழுதினால் பாராட்டுகிறார்கள்! – ஆபிதீன்

*

ramadan-mubarak-

ரம்ஜான் – சாமி கை விடல

சின்னதாதா

அபு தாபியின் அரசு நிறுவனங்களில் ஒன்றான Abu Dhabi Gas and Oil Corporation (ADGOC) -ல் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் அன்று இரவு இஃப்தார் பார்ட்டிக்காக Emirates Palace Hotel சென்றிருந்தேன்.

எங்களுடைய Operation Head ஷெரிஃப் ஒக்பா, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

“He is Mansoor Hameed… New project manger for our onshore building division. He has more than 12 years of experience. Andddd….He has done his Bachelor of Mechanical Engineering and he is a charted engineer” என்று சுருக்கமாக அறிமுகம் செய்த பிறகு என்னை ஏதாவது பேசச் சொன்னார்.

என்னைப் பற்றி அல்லாது, பொதுவான விஷயம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசச் சொன்னார்.

நானும் ரம்ஜான் நோம்பினைப் பற்றி பேசினேன். அதனால் ஏற்படும் நன்மைகளையும், நோம்பு துறக்கும்பொழுது எப்படிப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும் என்பது பற்றியும் அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் பேசினேன்.

அதற்குப் பிறகு, அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது. ஒருவர் NPOC (National Petrolium and Oil Company)- யில் General Manager ஆக இருப்பதாக சொன்னார்.

இருபது வருடங்களுக்கு முன்பு வாப்பா வேலை செய்த கம்பனி. அது ஒரு Semi Government Organization. வாப்பா அங்கு staff ஆக வேலைப் பார்த்திருந்தார். உயிரோடு இருந்திருந்தால் இன்று அவரும் ஒரு General Manager அல்லது அதைவிட பெரிய பதவியில் இருந்திருப்பார்.

வாப்பாவின் நெருங்கிய தோழர் அய்யனார் மாமாவைப் பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்தேன். ஆனால் விசாரிக்கவில்லை

அடுத்த நாள், டிரைவரை அழைத்துக் கொண்டு அந்த கம்பெனிக்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

யார் இந்த அய்யனார் மாமா?

நான் எட்டாவது படிக்கும்பொழுது வாப்பா ஊருக்கு வந்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். என் இரட்டை தங்கைகளுக்கு அப்பொழுது ஒன்றேகால் வயது. அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்கிறார்.

இரண்டு மாதம் லீவ் முடிந்து திரும்ப போவதற்கு முதல் நாள் ராத்திரி திடீரென்று அவருக்கு ஏதோ ஞாபகம் வர என்னிடம், ‘நாளைக்கு காலைல முதல் வேலையாப் போய் நாலு பாக்கெட் திருநீர் வாங்கிட்டு வா’ என்றார்.

நானும் வாப்பா எழுவதற்கு முன்னே மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கடையில் போய் திருநீர் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த வாப்பா சிரித்தார்.

“ஏன் வாப்பா சிரிக்கிறீங்க” என்றேன்

“இந்தப் பேரப் பாத்தியா?”

“அய்யனார் திருநீர்”

“அய்யனார் மாமா திருநீர் வாங்கிட்டு வரச் சொன்னான். நான் மறந்துருவேன்னேன். அதுக்கு அவன் அய்யனார் சாமி உனக்கு ஞாபகப் படுத்திருவார் போ என்றான். பாத்தியா, அவன் சாமி அவனை கை விடல”

“சாமி நம்பிக்கை நமக்கு இல்லையே வாப்பா?”

“அல்லானா என்னன்னு தெரியுமா?”

“இறைவன்”

“சாமின்னா”

“ஹ்ம்ம்ம்.. இறைவன்” என்றேன் வாப்பா என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொண்டு.

அதற்கு மேல் வாப்பா ஒன்றும் சொல்லவில்லை.

*****
டிரைவர் என்னிடம் “சார், முஸ்ஸஃபா பிரிட்ஜ் வழியா போலாமா இல்லன்னா மக்தாப் பிரிட்ஜ் வழியா போலாமா?” என்றார்.

“எனக்கு தெரியாதுப்பா, எது ஈஸியோ அந்த வழில போ”
*****
நான் பத்தாவது படிக்கும்பொழுது, வாப்பாவின் வருகைக்காக காத்திருந்த வேளையில் வாப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அவரது உடல் இன்று வரும் நாளை வரும் என்று ஒரு மாதம் காத்திருந்தோம். கடைசியில் அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அடுத்த தந்தி வந்தது.

உறவினர்கள் எல்லோரும் சென்று விட்டார்கள். உம்மா மட்டும் அழுகையை நிறுத்தவில்லை, எங்களுக்கு சாப்பாடு பக்கத்துவீட்டு ரஹீம் மாமா வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டுவந்து கொடுப்பார்கள்.

அன்று உம்மா என்னருகில் வந்து, “மன்சூர், நம்ம அல்லாட்ட போயிரலாமா” என்றார்.

உம்மா சொல்வதைப் புரிந்து கொண்டு சரி என்பதுபோல் தலையை ஆட்டினேன்.

உம்மா அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன், போஸ்ட் மேன் வீட்டிற்கு வெளியிலிருந்து அழைப்பது கேட்டது.

ஒரு Airmail கவரில் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது. யாரோ கிருஷ்ணதாஸ் என்பவர் கேரளாவிலிருந்து அனுப்பியிருந்தார்.

பிரித்து சத்தமாக படித்தேன்..

அன்புள்ள தங்கைக்கு,

அண்ணன் அய்யனார் எழுதுவது. குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். மன்சூர் ஸ்கூலுக்கு போகிறானா?.ஹமீது இறந்ததை எண்ணி எப்பொழுதும் அழுதுகொண்டிருக்காதீர்கள். ஹமீது இறந்த கேஸ் இதுவரை முடியவில்லை. ஆகையால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க இரண்டாண்டுகள் வரை ஆகலாம்.

என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு கடிதம் அனுப்புங்கள். இத்துடன் ஐயாயிரம் ரூபாய்க்கான டிடி அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,
அன்புடன்
சொ. அய்யனார்

இதைக் கேட்டவுடன் உம்மா, “அல்லா நாம சாகக் கூடாதுன்னு நெனைக்கறார். நீ நாளைக்கே ஸ்கூலுக்கு போ” என்றார்.

“வேண்டாம் உம்மா, நான் அண்ணாச்சி துணிக்கடைல வேலைக்குப் போறேன்”

“இல்ல, நீ படி. நான் வேலைக்குப் போறேன்”

“முடியாது உம்மா, அடுத்த வருஷம் தங்கச்சிகளையும் ஸ்கூலில் சேக்கணும். நீங்க வேலை செஞ்சாப் பத்தாது நான் போறேன்”

ஒருவழியாக அதற்கு உம்மா சம்மதித்தார்.

அடுத்தநாள் உம்மாவை அழைத்துக் கொண்டு நேரத்திலேயே அண்ணாச்சி வீட்டிற்கு சென்றோம்.

அண்ணாச்சி எல்லாம் கேட்டுவிட்டு, “ஏலே, ஸ்கூல்ல போய் டீசி வாங்கிட்டு வந்திடுலே. பின்னால சோலிக்காகும்” என்றார்.

அங்கிருந்து நேராக செயின்ட் ஜோசப் ஸ்கூலிற்கு சென்றோம். அதன் தாளாளர் ஃபாதர் செபாஸ்டியன் சரியான சிடுமூஞ்சி. ஃபீஸ் அடைக்க ஒருநாள் லேட் ஆனாக்கூட வீட்டிற்கு அனுப்பிவிடுவார். ஃபீஸ் கட்டாம டீசி தரமாட்டார் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் சென்றோம்.

உம்மா, அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பிறகும் அவரது கண்களில் இறக்கம் என்பது துளிகூட வந்ததாக தெரியவில்லை.

“உன் கிளாஸ் டீச்சர் யார்” என்றார்

“ரெபேக்கா மிஸ்”

ப்யூனை, அவரை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ் வந்தவுடன் வெளியில் சென்று அவரிடம் என்னவோ பேசினார்.

பிறகு உம்மாவிடம் “உங்க பையன் பிளஸ் டூ வரை இங்கயே படிக்கட்டும். ஃபீஸ் ஒன்னும் கட்டவேண்டாம். உங்களுக்கு இங்க ஆயாவா வேலை தர்றோம். மாசம் ஐநூறு ரூபாய் சம்பளம்” என்றார்.

இதைக்கேட்டவுடன் உம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் காலில் விழுந்து அவர் காலைப் பிடித்து கண்ணீர்விட்டார்.

அண்ணாச்சியிடம் விஷயத்தை சொல்ல சென்றோம்.

“தெரியும்லே, அதான் அவரப் போய் பாக்கச் சொன்னேன்” என்றார்
அண்ணாச்சி சிரித்துக்கொண்டே

****

ஒருவழியாக NPOC வந்து சேர்ந்தோம்.

டிரைவர், செக்யூரிட்டியிடம் எதோ அரபியில் சொல்ல அவர் எங்களை உள்ளே அனுமதித்தார். நாங்கள் சென்றபொழுது மணி இரண்டு இருக்கும். ரம்ஜான் என்பதால் பெரும்பாலானோர் வேலை முடிந்து அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு நாங்களும் நடந்தோம்.தமிழில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தோம்.

“அய்யனார் என்ற பெயருள்ள staff யாராவது இங்க இருக்காங்களா?”

“இல்ல சார், அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலியே”

“மேனேஜர்?”

“இல்ல சார்.. அப்படி யாரும் இல்லியே”

“ஒரு 65 வயசு இருக்கும் அவருக்கு”

“இல்ல சார்.. அப்படி யாரும் இல்ல. இங்க அறுபது வயசுக்கு மேல விசா ரினியூ பண்ணமாட்டங்க சார்”

அதற்குள் வேறு ஒருவர் அங்கு செல்வதைப் பார்த்த அதில் ஒருவர், “சார், தா போறாரே. மாரிமுத்து சார் அவருக்கு ஒருவேளை தெரியலாம்” என்றார்.

அவரே, “மாரிமுத்து சார், உங்களுக்கு அய்யனார்னு அறுபத்தஞ்சு வயசுள்ள யாரையாவது தெரியுமா சார்” என்றார் சத்தமாக
திரும்பிப் பார்த்த மாரிமுத்து, “ஆமா. நம்ம பெருசு” என்றார்.

“சார், இவங்கள கொஞ்சம் அவரு ரூம்ல விட்டுருங்க”

அவருடன் எங்களை வரச் சொல்வதுபோல் சைகை செய்தார். நான் டிரைவரிடம், “நான் போய் பாத்துக்கறேன். நீ போய் வண்டில இருந்துக்கோ” என்றேன்.

நான் மாரிமுத்துவுடன் சென்றேன்.

அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

ஒரு பழைய பில்டிங்கிற்கு அழைத்து சென்றார். மாரிமுத்து first floor என்பதால் என்னிடம், “நேராப் போங்க.G18 அவர் ரூம்” என்றார்.

கதவை தட்டினேன்.
“ஆவ்.. தர்வாஸா குல்லா ஹே” என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது.

கதைவை திறந்தேன். சிறிய அறை. அதில் நான்கு கட்டில்கள் இரண்டு அடுக்காக (bunk bed) இடப்பட்டிருந்தன. ஒரு கொடிக் கயிறு கட்டப் பட்டிருந்தது, அதில் அங்குமிங்குமாக அழுக்குத் துணிகள் கிடந்தன.

கீழே உள்ள கட்டிலில் சுவற்றைப் பார்த்து படுத்திருந்த அந்த முதியவரை ‘அய்யா’ என்று அழைத்தேன்.

அவரது லுங்கியை சரி செய்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார்.

“யார் சார் நீங்க?”

அவர் முகத்தில் இருந்த பெரிய மீசை, அது அய்யனார் மாமாவேதான் என்று உறுதிப்படுத்தியது.

“மாமா, நான் மன்சூர். ஹமீது வாப்பா …” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

கட்டிப்பிடித்தவாறே, “உங்க அப்பன மாதிரியே நல்ல ஒசரமா இருக்கியேயா” என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை.

என்னை விட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “அம்மா எப்படி இருக்காக, தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆயிருச்சா” என்றார்.

“நல்லா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் நிக்காஹ் ஆயி கொழந்தைகள் இருக்கு”

“ஹ்ம்… உங்க அப்பனும் நானும் இதே ரூம்ல தான் இருந்தோம். அப்ப மூணு அடுக்கு இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மேலதான் படுப்போம். எள வயசு. இப்ப மேல ஏற முடியாது”

“ஏன் மாமா வாப்பா staff-ஆ இருக்கேன்னு பொய் சொன்னார்”

“உனக்கும், உங்க அம்மாவுக்காவும் தான். நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படுவீக. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்யா அப்படி சொன்னான்”

அவரே தொடர்ந்தார், “சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்”

அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.

நான் ஒன்றும் பேசமுடியாமல் கட்டிலில் அமர்ந்தேன்.

“ரம்ஜான் மாசம் வந்துச்சுனா மட்டும் டெய்லி காலைலயும் நைட்டும் நல்ல சாப்பாடு பக்கத்துல ஒரு மசூதில இலவசமா கெடைக்கும். அப்ப, உங்கப்பன் சொல்லுவான்; அய்யனாரே அல்லா இந்த ரம்ஜான் மாசம் நம்மள மாதிரி ஏழைகளுக்காக வெச்சிருக்கார்”

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு தொண்டை அடைத்துவிட்டது. அது சரியாக சிறுது நேரம் ஆனது.

“மாமா, நீங்க ஏன் இந்த வயசுலயும் கஷ்டப்படுறீங்க?”

“மூணும் பசங்க. கடைசிப் பையனுக்கு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணுனோம். மூணு பேரும் அவங்ககூட வந்து இருக்க சொல்றாங்க. உங்க அத்தைக்கு ஒரு மாசம் கூட அவங்க யார் வீட்லயும் இருக்க முடியறதில்ல. அவ மேல தப்பில்ல. அவங்க சிலநேரங்களில் அவங்களை அறியாமல் எங்களைப் பாரமா பாக்கறாங்க. அதுதான்… கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடச்சுட்டு. கெடைக்கற செட்டில்மண்ட் பணத்த வெச்சு சின்னதா ஒரு கட வெச்சு பொழைக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

“எவ்வளவு கடன்”

“நாலு லட்சம் இருக்கும்யா”

“மாமா இன்னும் ஒரு மாசத்துல நீங்க இங்க இருந்து இந்தியாவுக்கு போறீங்க. நான் உங்க கடனை அடைக்கறேன். உங்களுக்கு ஒரு கடையும் வெச்சு தர்றேன்”

“ஐயோ, அதெல்லாம் வேண்டாம்யா. நீ சொன்னதே பெருசுயா”

“இல்ல மாமா, நான் ஒத்துக்கமாட்டேன். உங்களாலதான் நாங்க இன்னைக்கு உயிரோடு இருக்கோம்”

‘இல்லயா வேண்டாம். அது சரியில்ல.. நான் ஒருநாளும் அது வாங்க ,மாட்டேன். உன் அன்பு மட்டுமே போதும்’

‘முடியாது மாமா, ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும் கொடுக்கிறேன். இந்த வருஷம் அதை உங்களுக்கு குடுக்கப் போறேன்”

“உங்க அப்பனும், அதை கரெக்ட்டா கணக்குப் போட்டு ஏழைகளுக்கு குடுப்பான்யா. எனக்கு வேண்டாம்யா”

“இல்ல மாமா, நீங்க வாங்கித்தான் ஆகணும். பெரிய பணக்காரங்க திருப்பதி உண்டியல்ல பணம் போடறது இல்லியா. அது மாதிரி நான் அய்யனார் சாமி கோவில் உண்டியல்ல போடறேன்”

அந்த அறையிலிருந்த ஒரு சின்ன ஷெல்ஃபில் அய்யனார் சாமி படம் வைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவாறே, “பாரு ஹமீது உன் பையனும் உன்னைய மாதிரியே இருக்கான். ஒரு உதவி செஞ்சா பத்து உதவி திரும்ப செய்யற உன் குணம் அப்படியே இருக்கு” என்றார்.

ஃபிரேம் செஞ்சிருந்த அய்யனார் படத்தை உத்துப் பார்த்தேன். வாப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ அந்த ஃபிரேமின் ஒரு மூலையில் சொருகிவைக்கபட்டிருந்தது.
———
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது

***

நன்றி : சின்னதாதா, தாஜ்

« Older entries