ஜானகிராமனின் யாசீன்

‘யாசீன்…அல்-குர்ஆனில் ஹகீம்’ அல்ல, முஹமது யாசீன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மும்தாஜ் யாசீன். 1978ஆம் ஆண்டின் பரிசுக்குரியவராக, தமிழின் பெரும் படைப்பாளியான தி. ஜானகிராமன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ( செம்மலர் /Dec 78ல் கதை வெளியாகியிருக்கிறது. அந்த மாதச் சிறந்த சிறுகதையென தேர்ந்தெடுத்தவர் திரு.இனியவன்) . பூமணி போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்ற தொகுப்பிலிருந்து யாசீன்-ஐ தான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக ஜானகிராமன் இப்படிச் சொல்கிறார் :

‘சொந்த, ஆனால் நான் புதிதாக கண்டுபிடித்து விடாத , தரங்களை வைத்துக் கொண்டு பார்க்கையில் (இந்தப் பன்னிரண்டு கதைகளில்) எனக்கு மிகப் பிடித்த கதை மும்தாஜ் யாசீன் எழுதிய ‘பசி’ என்னும் கதை. மற்ற கதைகளும் எனக்கு உவப்பாக இருந்தாலும் மும்தாஜ் யாசீனின் கதை மிகவும் என்னை கவர்ந்ததற்குக் காரணம் அவர் தன் அனுபவத்தை சுயானுபவ உணர்வுடன் எனக்கும் ஏற்படுத்தியதுதான். அடக்கம், தொனி, தெளிவு, சூசனை ஆகிய பல அம்சங்களில் , மூளிப்படாமல், வெற்றியாக உருவான கதை. தேவர் கண்களிலும் கடைசியில் நீர் வராமல் இல்லை. ஆனால் அதையும் அவர் சமாளித்திருக்கிறார். அதாவது மும்தாஜ் யாசீன் சமாளித்திருக்கிறார். எல்லா கதைகளையும் நான் மனசாரப் பாராட்டுகிறேன். ஆனால் என்னுடைய விசேஷப் பாராட்டுக்குரியவர் மும்தாஜ் யாசீன்’

‘1978ஆம் வருடம் முஸ்லீம்களுக்கு பிரச்சனையில்லா வருடம் போலும்’ என்று, மும்தாஜ் யாசினின் கதைக்களன் குறித்து எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும் , ‘சொல்லாட்சியில் ஒரு நயம், நடை ஒட்டம் – எதைப் பார்த்தாலும் தேர்ந்த கையாகத் தெரிகிறது’ என்று ஜானகிராமனே தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு என் வாயைப் பொத்திக்கொள்வதல்லவா முறை?

‘பன்னிரண்டு கதைகளும் நானும்’ என்ற தன் முன்னுரையில் தி.ஜானகிராமன் எழுதியவற்றிலிருந்து சுவாரஸ்யமான சில பகுதிகளை இங்கே பதிகிறேன் (‘பசி’ சிறுகதை கடைசியில் இருக்கிறது). ஜானகிராமனுக்கு தன் அடக்கம் கூட நையாண்டிக்குரியதுதான்!

ஜானகிராமன்:

‘Judge not , that ye be not judged’. எனக்குப் பயம். பிறர் என்னை ஜட்ஜ் பண்ணுவார்களே என்று இல்லை. அவர்கள் என்னை ஜட்ஜ் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. படைப்பு எழுத்தாளர்களை தரம் பிரிப்பது, எடைபோடுவது – இது எனக்கு சிரமமான வேலை. நான் அடிக்கடி சொல்லி எனக்கே அலுத்துப்போன ஒரு செய்தியை மீண்டும் இங்கு சொல்கிறேன். சிருஷ்டியின் ரகசியமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டிருப்பதுதான். ஒரு முகம் போல ஒரு முகம் இல்லை. ஒரு குரல் போல ஒரு குரல் இல்லை. ஒரு இலை போல ஒரு இலை இல்லை. வெகு சூட்சுமமாக, மிக மிக நுண்ணியதாக ஒரு இலை இன்னொரு இலையிலிருந்து வேறுபட்டுத்தானிருக்கும். அப்படி வேறுபடுவது அதன் உரிமை. அதன் தனித்துவம். இயந்திரங்கள் உற்பத்தி சாமான்களைப் பற்றிக்கூட எனக்கு இப்படி ஒரு சந்தேகம் உண்டு (நல்லவேளையாக அது சந்தேக நிலையில்தான் இருக்கிறது).

விமர்சனக் கட்டுரை எழுதுவது எனக்குப் பாடாக இருக்கிறது. நான் விமர்சகன் இல்லை. விமர்சனக்கலை மிகப்பெரிய விஞ்ஞானக் கலை. ஆராய்ச்சிக் கலை. நிறைய படிப்பு வேண்டும். ஆழ்ந்து அலசும் கூர்மை வேண்டும்; தெளிவு வேண்டும். 5, 10 ஆண்டுகளில் கூட இலக்கியம் வளர்கிற வளர்ச்சி தெரிய வேண்டும். இலக்கிய வரலாறு, உளவியல், இலக்கணம் – எல்லாம் தெரிய வேண்டும். ஒரு நாவலில் எத்தனை செட்டியார்கள் வருகிறார்கள், எத்தனை ஐய்யர்கள், எத்தனை சேர்வைகள், தேவர்கள், அம்பலக்காரர்கள் வருகிறார்கள், எத்தனை ஷானாக்கல், ஜானாக்கள் என்றெல்லாம் எண்ணி, கட்டம், பத்திகள் போட்டு வகைப்படுத்துவது முதல் கதை மாந்தர்கள், எந்த சமுதாய-பொருளாதார- கொள்கை வாதங்களை அறிந்தோ அறியாமலோ சேர்ந்திருக்கிறார்கள் என்று கணிப்பதுவரை பல திறமைகள் வேண்டும். ரொம்ப சிரமசாத்தியமான வேலை. எனக்கு இயல்பாகவும் பயிற்சியாலும் இந்தத் திறமை ஏதும் இல்லை. இருக்கிற ஒரே தகுதி கண்ணும் காதும் கொண்டிருப்பதுதான். இலக்கிய சிருஷ்டிகளை ஒரு ரசிகன் என்ற முறையில்தான் படிக்கிறேன். இசை நிகழ்ச்சிகளையும் அப்படியேதான் கேட்கிறேன். ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்குக்கூட பயமாக இருக்கிறது. உதாரணமாக பாபநாசன் சிவன் போன்ற இசை அறிஞர்கள் வனவாசம் போன பிறகு கடந்த 15, 20 வருடங்களாக, தமிழ் சினிமாவில் ஒரு புதிய சங்கீதம் பிறந்து வளர்ந்திருக்கிறது. எல்லா ராகங்களும் ஒரே ராகம் போலவும், மேடைப் பேச்சுகளையே தட்டிக் கொட்டி பாட்டாக நீட்டியது போலவும் என் காதுக்கு ஒலிக்கிறது. இதைப் பலகோடி மக்கள் ரசிக்கிறார்கள். பாடம் பண்ணி முணுமுணுக்கிறார்கள். மக்கள் கலையாக வளர்ந்துள்ள இந்தக் கலையை என்னால் கேட்டு அனுபவிக்கத் திறமை இல்லாததால், என் ரசிகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் காலத்தோடு ஒட்டலிலும் எனக்கே சந்தேகம் வந்திருக்கிறது. வேகமாக முன்னேறும் மக்களோடு ஈடு கொடுத்து நடக்க முடியாத நொண்டியாக , கடைப்படாதவனாக ஆகிவிட்ட பயமும் ஆட்டுகிறது.

…. ….

நான் கதையில் காணத் துடிக்கிற அம்சம் Timelessness. கதை ஒரு குறிப்பிட்ட இடத்தில், காலத்தில்தான் நடக்கிறது. ஒரு சூழ்நிலையில், ஒரு சரித்திர கட்டத்தில்தான் நடக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட காலத்திலிருந்தும் குறிப்பிட்ட இடம், சூழ்நிலையிலிருந்தும் விடுபட்டும் நிற்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக சலித்துப்போன உவமை வேண்டுமானால் தாமரை இலைத் தண்ணீர் என்று சொல்லலாம். பலாப்பழத்தை கை நிறைய சதும்ப எண்ணெய் தடவிக்கொண்டுதான் நறுக்கி சுளை எடுக்க வேண்டும். கதையின் காலமும் இடமும் பிசுக்பிசுக்கென்று அளவுமீறி நினைவில் ஒட்டிக் கொண்டிருப்பதால் எண்ணெய் இல்லாத கை நினைவுக்கு வருகிறது. நானே இப்படிப் பல பிசுக்குக்கதைகள் எழுதியிருப்பதால் ஒரு அனுபவ ஞானத்தால் இதைச் சொல்கிறேன்.

நான் சங்கீதக் கச்சேரிகள் நிறைய கேட்பதுண்டு. இதில் பல அனுபவங்கள். ஒரு அனுபவம் ஒரு இரக்க உணர்ச்சி. சில பேர் ராகம் பாடுவார்கள். விஸ்தாரமாக பாடிக்கொண்டே மேலே மேலே போவார்கள். கடைசியில் ரொம்பவும் பறந்து போய் எங்கே எப்படி இறங்குவது என்று தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து, கடைசியில் எங்கோ போய் காயம் பாடுவது போல் விழுந்து விடுவார்கள். சிலபேர் ஆரம்பத்திலேயே ஏதாவது செய்வார்கள். ராமேச்வரம் போக சென்ட்ரல் ஸ்டேசனுக்குப் போய் , பிறகு ஓகோ என்று நினைவு வந்து எழும்பூருக்கு வந்து ரயில் பிடிப்பதுபோல இன்னொரு அனுபவம்; முடிக்கும்போது ஒரு ஸ்வரப் பிரஸ்தாரத்தை தாளக்கட்டோடு தயார் செய்துகொண்டு , கரீஸநித, ரீஸாநிதப, ஸநீதபம, கமாபதப, மபாதநித என்று ஆர்ப்பாட்டம் அமளிகள் செய்தெல்லாம் முடிப்பார்கள். சிறுகதையிலும் இந்த அமளி, கண்ணீர்கள், குறியீடுகள் முதலியவற்றால் ஏற்படுவதுண்டு. இந்த ரகளையில்லாமல் சற்றுமுன்பே அமைதியாக முடித்திருக்கலாமே என்று சில சமயம் தோன்றுவதுண்டு. நானே இப்படிப் பல அமளிகள் செய்திருப்பதால் சொந்த அனுபவத்தில் இதைச் சொன்னேன்.

எதுவும் Contrived ஆகத் தோன்றும்போது திறமை தென்படலாம். சாதனை தென்படலாம். சுயானுபூதியின் நிர்மயமான உணர்வு ஒன்று உண்மையாக இருப்பதன் ஒலி காதில் விழுவதில்லை. நைந்த பழமைகளைச் சாடினாலும், தனிப்பட்ட முறையிலோ, சமூக அளவிலோ இயங்கும் வஞ்சம் பொய்மைகளையும், மௌட்யங்களையும் உதறினாலும், புதிய நெறிகளை, தைர்யங்களை வரவேற்றாலும் எதைச் செய்தாலும் உண்மையின், சுயானுபூதியின் ஆதாரமான சுருதியை விட்டு விலகாமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் முக்கியத் தேவை. நிர்ப்பந்தம் என்று சொல்லக் காரணம் சில குரல்கள் இயல்பாகவே சுருதியில் இழைகின்றன. பல குரல்கள் சாதகத்தால் அதைச் சாதிக்க வேண்டியிருக்கிறது. வலது, இடது, மையம், ஓரம் என்றெல்லாம் சொல்லி இந்த நிர்ப்பந்தத்திலிருந்து தப்புவதற்கில்லை. உத்தியிலோ, சொல்வளத்தாலோ, நடையிலோ, விஷயங்களிலோ எந்தப் புதுமை செய்தாலும், எந்தத் திறமைகளைச் செய்தாலும் இந்த சுயானுபூதியின், எதையும் தன்னுடைய அனுபவமாக ஆக்கிக் கொண்ட சாதனையின் ஒலி கேட்காதபோது, அந்தத் திறமைகள் செயற்கையாகக் கேட்கின்றன. ஒட்ட வைத்த கைகால்களாகத் தோன்றுகின்றன.’

– தி. ஜானகிராமன்/ புதுடெல்லி

***

பசி
செம்மலர் – டிசம்பர் – 1978
மும்தாஜ் யாசீன்

அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம் இருக்கிறதோ தெரியவில்லை. மனுஷனின் ‘மணீஸ் கபே’யின் அப்படி ஒரு ருசி. வாரி அணைத்துக் கொள்கிற மாதிரி , வாசனை கடைக்குச் சற்று எட்டத்திலிருந்தே மூக்கை அரிக்கும்.

ஆறுமுகத்தேவர் தினமும் அந்தப் பக்கமாகத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். மடியில் கனமிருக்கும் சில சமயங்களில் முந்தைய ருசியின் எச்சங்களாக ஆசை துளிர்ப்பதுண்டு. தோசையின் இதமான முறுகலுடன் நெய்யின் வாசனையும் நாக்கில் புருபுருக்கும். அவருக்குப் பிடித்தமான ‘அயிட்டம்’ அது. ஆனால் அடுத்த கணமே விரட்டியடித்து விடுவார். நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகளைப் பெற்று , அதுகள் தெருப்பலகாரத்திற்கே ஏங்கிக் கிடக்கும்போது தின்று கழித்த தனக்குத் தோன்றும் ‘சின்னப் புத்தியை’ மானசீகமாகச் செருப்பால் அடித்துக் கொள்வார்.

‘ஒரு நாளைக்கு அதுகளை அழைச்சு வந்து திங்க வைக்கனும்’

அந்த ஒருநாள் இன்னும் வரவில்லை. இங்குதான் பத்து வருமானம் வருவதற்குள் பதினைந்து செலவுகள் எதிர் நிற்கிறதே! அதுவும் முன்பு போல அவர் என்ன வியாபாரமா செய்கிறார்? மாட்டுத் தரகு, குலத்தின் எவனோ, எப்பொழுதோ செய்த தொழில்; இப்பொழுது ஆறுமுகத் தேவரே என் புரவலன் என்று ஒட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது. தரித்திரம், மாட்டின் பல்லைப் பிரித்து, சுழியைக் காட்டி, வயசைச் சொல்லி, கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் நடையாக நடந்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ ‘நொள்ளைப் பணம்’தான். அதில் வயிற்றைக் கழுவுவதா? குதிர் போல நிற்கும் பெண்களை நினைப்பதா?

ஆயிற்று, மூத்தவள் ‘உட்கார்ந்து’ நான்கு வருஷம். ஒற்றைக்கல் மூக்குத்திக்கூட இன்னும் வழியில்லை. அதற்குள் சின்னவள்.

‘ம்ம்..மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்?’

பாரத்தை இறக்கிவைத்து சிறிது இளைப்பாறிக் கொண்டாலும் மீண்டும் சுமக்க நேரிடும்போது…

‘யோவ் தேவரே… உம்மைத்தான்… நில்லுமய்யா…’

ஹோட்டலிலிருந்து படியிறங்கிய வடிவேலு ஆசாரி, அவரை அழைத்தவாறு ஓடிவந்தார். பூசினாற் போன்ற உடம்பு, சிறு ஓட்டத்தில் குலுங்கியது.

‘என்னய்யா ரெண்டு நாளில் தர்றேன்னு சொன்னீரு, இப்ப பாக்காத மாதிரி போறீரு..’

‘கெடைக்க வேண்டிய எடத்தில கொஞ்சம் தடங்கல். வேற ஒண்ணும் இல்லை. நானே இதைச் சொல்ல வரணும்னு..’

‘ஆமா..நல்லா வந்தீரு..உம்மை மாதிரி நாலு பேருக்குக் கொடுத்தா அப்புறம் நானும் ஓடு எடுக்க வேண்டியதுதான். முடியலைன்னா சொல்லும், விட்டுடறேன். எத்தனையோ செலவிலே இது ஒண்ணு. என்னை ஏன் அலைய வைக்கிறீர்?’

பிசாசுக்குட்டி குரல்வளையில் வாய் வைத்து, வலுவுடன் இழுத்து நாராகக் கிழிக்கிற மாதிரி இருந்தது தேவருக்கு. ‘கேவலம் இருநூறு ரூபாய்க் காசுக்கு என்ன பேச்சுப் பேசுகிறான்? புதுக்காசுத் திமிர்! மாற்று ஜாதிக்காரனிடம் , அதுவும் இந்த ‘சின்னப் பயலிடம்’ கடன்பட்டது எவ்வளவு தப்பாகி விட்டது? நடுத்தெருவில் இப்படி அம்மணமாய்..’

இதயம் புழுவாகத் துடித்தது.

வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவுடன் அவருக்காகவே காத்திருந்ததைப் போல விசாலம் ஆரம்பித்தாள்.

‘பார்த்தீங்களா… இந்த பிரபுக் கடன்காரனை? சாம்பார் நல்லா இல்லேன்னு சொல்லி தட்டை விசிறி எறிஞ்சுட்டுப் போறான்’

விழிகளை நெருப்பாக்கி உருட்டிப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல், தேவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவருடைய வயிற்றெரிச்சல் அவருக்கு.

விசாலமும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

‘வரவர அவனது அட்டகாசம் அதிகாப் போச்சு. ஏண்டா இப்படிச் செய்யறேன்னு ஒரு நாளாச்சும் கேட்கறீங்களா?’

வருஷத்திற்கு ஒன்றாகப் பெத்து அலுத்துப் போன அவளுக்கு எதையாவது மென்றுகொண்டிருக்க வேண்டும். சுமக்க முடியாத பாரத்தை, தானே தூக்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற மாதிரி, சதா சர்வமும் ஒரு அலுப்பு. அதற்கு தேவரா காரணம்? இல்லை அவர் பெற்றதுகளா?

இரண்டும்தான். முதல் இரண்டும் ‘பெட்டை’யாயிற்றே என்று மூன்றாவதுக்குக் கொடுத்த செல்லம், இப்பொழுது அவனை ‘தறுதலையாக்கி’ திரிய விட்டிருக்கிறது.படிப்பும் இல்லை. எங்கோ வேலை செய்து, பேருக்கு ஏதோ அம்மாவிடம் கொடுத்து, தின்று, வீட்டில் ரகளை செய்து, பின் கொஞ்ச நாட்களுக்கு வராமலிருந்து போகும் அவனை – தான் பெற்றவைகளில் ஒன்றில்லை என்று தேவர் நினைக்க ஆரம்பித்து சில மாதங்களாகி விட்டன.

திரும்பத் திரும்ப அவனைப் பற்றியே பேசினால்…?

முகம் அலம்பிக்கொண்டிருந்த ஆறுமுகத் தேவர் ‘தூ’வென்று துப்பினார்.

‘அவன்தான் உன் மூஞ்சி மாதிரி இருக்கானே, நான் ஏண்டி கேக்கப் போறேன்?’

‘தேவர் மகன் தேவருக்கு இப்பவாச்சும் இந்த மூஞ்சியைப் பத்தி தெரிஞ்சுதே… அதைச் சொல்லனும்’

‘இப்பவாச்சும் என்றால்?..இத்தனை ராத்திரிகளுக்குப் பிறகு என்று அர்த்தம்! தேவரின் தன்மானம் அவரைச் சுட்டது.

‘ஆமாம்; பேரழகிங்கிற நெனைப்புலதான் தினமும்..’ என்று ஆரம்பித்தவர், எதிரே மூத்த பெண் நிற்பதைக் கண்டதும் ‘சும்மாயிருடி..அப்புறம் வாய்ல ஏதாவது வந்துடப் போவுது’ என்று சொல்லிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

இரண்டே அறைகளுள்ள அந்த வீட்டில், சமையலறையில் சும்மா உட்கார்ந்திருந்தால், அப்பாவை அங்கு சாப்பிடச் செய்தால் இருவருக்கும் இடையே மேலும் வாக்குவாதம் வலுக்கும் என்று நினைத்த மூத்த பெண் விஜயா, அவர் இருந்த அறையிலேயே சாப்பாட்டுத் தட்டை கொண்டு வந்து வைத்தாள். மட்ட ரகமான அரிசி சாதத்தின் வாசனையும், பருப்போடு ஒட்டாத கத்தரிக்காய் சாம்பாரின் நெடியும் முகத்தில் அடித்தன. அப்போது இந்த வாசனையைப் பார்த்துத்தான் மகன் தட்டை வீசிவிட்டுப் போயிருப்பானோ என்று தேவர் நினைத்தார். ‘ம்ம்…நாக்கு தடிக்கும் வயசு, அவனைச் சொல்லியும் குத்தமில்லே…’

‘எல்லாம் என் தலையெழுத்து. அப்பன் கிட்டேயும், புள்ளெகிட்டேயும் மாரடிக்கணும்னு எழுதியிருக்கு’. கண்களில் நிறைந்த நீர் கீழே விழுவதற்கு சகுனம் பார்க்க விசாலம் பின்னும் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள்.

தேவருக்கு தலை உச்சி எரிந்தது.

அந்த வெறியில் தன்னை நோக்கி ஓடிவந்த கடைசிப் பையனுக்கு ஒரு காரணமும் இல்லாமல் முதுகில் ஒரு அடி கொடுத்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட அது, பாதையை மாற்றிக்கொண்டு அம்மாவிடம் ஓடியது. அழுதபடி ஓடிவரும் பிள்ளையைக் கண்டதும் ‘இடையில் இது என்ன சனியன்’ என்று இழுத்து வைத்து அவளும் ‘சாத்த’ ஆரம்பித்தாள்.

தேவருக்கு என்னமோ தன்னைப் பாவித்தபடியே அவள் குழந்தையை அடிக்கிறமாதிரி தோன்றியது. சாப்பிடுவதை நிறுத்தி, ‘உனக்கு அந்த அளவுக்குக் கொழுத்துப் போச்சாடி’ என்று சத்தமாகக் கேட்டார்.

‘ஆமாம்..நீங்க கொண்டுவந்து கொட்டும் பட்சணங்களைத் தின்னு கொழுத்துத்தான் போச்சு..’ விசும்பலுக்கிடையே அவருக்கு இணையான சத்ததுதுடன் விசாலம் பதில் கூறியபோது, கையை உதறிக்கொண்டு தேவர் அவள் மேல் முரட்டுப் பாய்ச்சலாகப் பாய்ந்தார். அவளது தலைமயிரை கையில் சுருட்டிக்கொண்டு ஓங்கி ஓங்கி அடித்தார். ‘விடுங்கப்பா..விடுங்கப்பா..’ என்று மூத்த பெண்கள் இரண்டும் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சின. ‘சின்னதுகள்’ மூன்றும் ஒன்றையொன்று நெருங்கியபடி சற்று எட்டத்திலிருந்துகொண்டு அழத் தொடங்கின. அம்மாவை அடிக்கிறார் என்பதற்காகவா? அல்லது தங்கள் பக்கம் அவர் கவனம் திரும்பினால் என்ன செய்வது என்ற பயமா? தெரியவில்லை.

ஒவ்வொரு அடிக்கும் விசாலத்தின் சுருதி ஏறியதே தவிர குறையவில்லை. அடிபட்டுச் சாவது என்று தீர்மானம் செய்துவிட்டவளைப் போல பிடிவாதமாக எதிர்த்துப் பேசினாள்.

கடைசியில் அவரே பணிந்து போகவேண்டியதாயிற்று.

‘இந்த வீட்டில் என்றைக்குத்தான் எழவு விழுமோ? முதலில் நான் சாகனும். அப்பத்தெரியும் சங்கதி…’

சட்டையைப் போட்டுக்கொண்டு, அதே கோபத்துடன் தேவர் வெளியே புறப்பட்டார்.

ரோட்டில் வெயில் பொசுக்கியது.

செருப்பில்லாத காலில் அதன் உக்கிரம் பாய்வதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து வந்து, வண்டிப்பேட்டையில் வழக்கமாக தான் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய தொழில் கேந்திரம் அது. அங்கு தெரிந்த முகங்களும் அதிகம்.

மனம் இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.

‘என்ன தேவரே சாப்பிட்டாச்சா?’ புண்ணாக்கு மூட்டை ஏற்றிய வண்டிக்காரன் – தெரிந்தவன் – கேட்டான்.

‘ம்..ஆச்சு.’ ஆறுமுகத்தேவர் சுரத்தில்லாமல் பதில் சொன்னார்.

‘அப்ப சரி..வண்டியைக் கொஞ்சம் பாத்துக்குங்க, சாயாக் குடிச்சுட்டு வந்திடுறேன்’

தேவர் அதற்கு ஒத்துகொண்டதும் , வண்டிக்காரன் டீக்கடைப்பக்கம் போனான்.

ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் வந்தார். புதிய முகத்தைக் கண்டு மாடு சீறிற்று. கழுத்து மணியின் ‘க்ளிங்’ சத்தம். தேவர் வண்டியிலேறி உட்கார்ந்து கொண்டார். நரைத்துப் பீடிப் புகையால் பழுப்பேறிய மீசையை கைகள் வருடின.

நடுரோட்டில் தன்னை நிற்கவைத்துக் கடன் பாக்கியைக் கேட்ட ‘சின்னப் பயலையும்’ , வீட்டில் தன்னை அவமானப் படுத்துகிற மாதிரி நடந்துகொண்ட ‘சிறுக்கி’யையும் நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. தன்னுடைய அப்பன் – பாட்டன் இருந்த இருப்பென்ன, தன் நிலை இப்படி ஆயிற்றே என்று ஒருகணம் கலங்கினார். பின்பு அதை ஈடுகட்டுகிற மாதிரி தன்னுடைய வசந்த காலங்களையும் நினைத்துக் கொண்டார்.

இத்தனை வருடமாக வாழ்ந்த வாழ்க்கை, இன்றைய ஒருநாளில் அஸ்தமித்துப்போன மாதிரி இருந்தது அவருக்கு. ‘பெண்டாட்டியென்ன? பிள்ளைகளென்ன? என்று அவர்கள் மீதுள்ள ஆதிக்கத்தை உதறிவிட்டு எங்காவது ஓடிப்போனால் என்ன என்று தோன்றிற்று.

‘நன்றியில்லாத ஜன்மங்கள்..என்ன உழைச்சும் பயன்?’

சில தினங்களுக்காவது தான் வீட்டிற்குப் போகாமலிருந்தால்தான் தன்னுடைய அருமை அவளுக்குப் புரியும் என்று நினைத்துக் கொண்டார்.

கொஞ்சநேரத்தில் வண்டிக்காரனும் சாப்பிட்டுவிட்டு வந்தான். மாட்டுக் கயிற்றை அவனிடம் கொடுத்துவிட்டு, தேவர் வண்டியிலிருந்து இறங்கினார். இறங்கும்போது வயிற்றை இழுத்துப் பிடித்தது பசி.

‘தேவர் கிட்டெ சொல்லித்தான் நல்ல மாடா ஒண்ணு வாங்கனும்’

‘ம்.. அதுக்கென்ன? வாங்கிட்டாப் போச்சு’

சிறிதுநேரம் வண்டியைப் பார்த்துக்கொண்டிருந்ததற்காக அவன் நன்றி கூறும் விதத்தில் சொல்லிப் போகும் ஆசை வார்த்தைகளும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக தான் செய்யும் பாவனையும் வெறும் வேஷங்கள் என்று தேவருக்குத் தோன்றியது. உலகத்தில் எல்லாமே இதுபோன்ற வேஷங்கள்தானா? வயிறும் மனமும் நிறைகிற மாதிரி அமைந்துவிடுகிற நாளின் இரவுகளின் பக்கத்தில் படுத்துக்கொள்ளும் மனைவி, வாய்க்கு ருசியாக வாங்கிக்கொண்டு போனால் சுற்றிவரும் குழந்தைகள் – அத்தனையும் வேஷம் கட்டி ஆடுபவைதானா?

பசியேப்பம் திரட்சியாக வந்து வாயை அடைத்தது. நெஞ்சுக்குக் கீழே தீ மூட்டி வைத்திருப்பதைப் போலிருந்தது.

மடியைப் பிரித்துப் பார்த்தார். இரண்டு ரூபாயும் சில்லறையும் இருந்தன. இன்று காலை வருமானம் அவ்வளவுதான். மதியம் சண்டையால் விசாலத்திடம் கொடுக்கவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. ‘அதுவும் நல்லதிற்குத்தான். இன்னிக்கு ஒரு ராத்திரியாச்சும் பட்டினி கெடந்தாத்தான் புத்தி வரும்.’

மடியிலிருக்கும் பணத்தை முடித்து வைத்துவிட்டு தன்னால் பசியோடு இருக்கமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அதனால் மறுயோசனையே செய்யாமல், மணீஸ் கபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாப்பாட்டு நேரம் கடந்திருந்ததால் ஓட்டலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. போனவுடன் இலையை விரித்து வைத்தார்கள்.

வெங்காய சாம்பாரின் வாசனை, நெய்யுடன் சேர்ந்து தொண்டையில் பாகாக இறங்கியது. இதுபோல சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று!

அடுத்து ஒரு கவளம்; பின்னும் ஒன்று.

தண்ணீர் குடிக்க அண்ணாந்தபோது நெஞ்சை இருளக்கிவிட்டு ‘பளிச்’ சென்று என்னவோ மின்னியது. அதன் வெளிச்சமும் வேகமும்…

சாப்பாட்டிலிருந்து கையை உதறி வாசலுக்கு ஓடிவந்து பார்த்தார்.

அங்கே அவளுடைய மூத்த பெண் விஜயா , கையில் டிபன்கேரியருடன் நின்று கொண்டிருந்தாள். துணைக்கு மூன்றாவது தங்கை.

‘சாப்பாடு கொடுத்துட்டு, அப்படியே ராத்திரிக்கு அரிசி வாங்க பணம் கேக்கச்சொல்லி அம்மா அனுப்பிச்சது’

தேவர், அவளது கரங்களில் அழுக்குப் பையின் உள்ளே இருக்கும் நசுங்கிய அலுமினிய டிபன் தூக்கைப் பார்த்தார். குஷ்டரோகி மஞ்சள் தேய்த்துக் குளித்த மாதிரி , சாம்பாரின் உப்புக் கரைசலில் மங்கிய பாத்திரம்.

‘இங்கே ஏன் வந்தீங்க?’ எனக் கேட்பாரோ என்று நினைத்து விஜயா சொன்னாள். ‘பேட்டைக்குத்தான் போய்க்கிட்டிருந்தோம். நீங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இங்கேயே நின்னுட்டோம்..’

முகத்திலடித்தாற்போலிருந்தது தேவருக்கு. குழந்தைகளின் பெருந்தன்மையைக் கண்டதும் மனத்துள், தன்னுடைய வைராக்கியமெல்லாம் எங்கோ பறப்பதை உணர்ந்தார். அதற்கு ஏற்றமாதிரி ‘நீங்க போய் சாப்பிடுங்கப்பா’ என்று மகள் சொன்னதும் , அதுகளுக்கு முன், தான் குற்றவாளியாக பிடிபட்டிருப்பதைப் போன்று உள்ளம் குறுகியது. என்னதான் உதறினாலும் பிடித்த பிடியை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்கும் ஜீவன்கள். ‘நீங்க என்ன சாப்பிட்டாலும் சரி; எங்களுக்கு வெந்த கஞ்சிக்காவது வழி பண்ணிடுங்கோ’ என்று கெஞ்சும் பார்வை.

பாதையில் போன இளைஞன் ஒருத்தன் , விஜயாவையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு சென்றான். அவனுடைய பசி அது.

மடியில் எட்டணாவும் சில்லறையும் இருந்தன.

பிரித்த மடியை மடிக்காமலும், மகளிடம் ‘இப்போது பணமில்லை’ என்று சொல்ல முடியாமலும் சில நொடிகள் வீணாயின. சிறிது நேரம் கழித்து ‘சரி..நீ போம்மா. சாயங்காலம் நானே அரிசி வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரேன்’ என்றார்.

பதில் எதுவும் பேசாமல் விஜயா புறப்பட்டாள். கடைக்கு முன்பு வீசிய பலகார வாசனையை கடைசியில் ஒருமுறை நன்றாக இழுத்து வயிற்றில் இறக்கிக்கொண்டு சின்னதும் அவளுக்குப் பின்னால் நடந்தது.

உள்ளே கடையில் சுத்தம் செய்பவன், மற்றைவைகளோடு அவரது இலையையும் எடுத்துப் போட்டு , வெளியே இருந்த எச்சில் தொட்டியில் கொண்டு வந்து கொட்டினான்

எங்கிருந்தோ நாய்கள் ஓடிவந்து, தொட்டியை நெருங்கி சண்டையிட்டன. ஒன்றின் மேல் ஒன்று உறுமலுடன் பாய்ந்து கடித்துக் குதறிக் கொண்டன. அப்போது அவற்றுள் வலிமை மிக்க நாயொன்று தொட்டியின் விளிம்பில் தாவி ஏறிக்கொண்டு மற்றதுகளை விரட்டியது. அந்நாயின் மடி தொங்கி, மார்புக் காம்பு தரையில் மோதியது. அது விரட்டியடிக்கும் நாய்களுள் சில அதனுடைய குட்டிகளாகவும் இருக்கக்கூடும். பிடுங்கித் தின்னும் பசிவெறியில் இதையெல்லாமா பார்க்க முடியும்?

தேவரின் கண்களில் நீர் நிறைந்தது. தானும் அப்படியொரு பிராணிதானோ? மனம் தன்னைப் பழிப்பதைத் தவிர்ப்பதற்காக, எப்போதோ செத்துப்போன தன் பாட்டன் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தார் அவர்.

***

நன்றி : மும்தாஜ் யாசீன், இலக்கியச் சிந்தனை (1978) , வானதி பதிப்பகம்.

குறிப்பு : மும்தாஜ் யாசீனின் தற்போதைய முகவரி தெரிந்ததும் தெரியப்படுத்துகிறேன். அதுவரை , அவருடைய 1978 -ஆம் வருட முகவரி (அப்போது அவர் வயது 27) !.

மும்தாஜ் யாசீன்
இளநிலை உதவியாளர்
தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம்
விழுப்புரம் – 605602

***

தொடர்புடைய சுட்டிகள் :

நினைவு – மும்தாஜ் யாசீன் சிறுகதை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=100071612&format=html

பத்துசெட்டி – தி. ஜானகிராமன் சிறுகதை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10105191&format=html

தி. ஜானகிராமன் / அழியா நினைவுகள் – தாஜ் கட்டுரை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60705311&edition_id=20070531&format=html

குறிப்பு : ‘ஏன் எழுதுகிறேன்’ என்று (‘எழுத்து’ சிற்றிதழில்) ஜானகிராமன் எழுதிய அற்புதமான கட்டுரையை ‘திண்ணை’யில் தேடி வாசித்துக் கொள்க!. நான் தேடினால் , ‘நீயெல்லாம் ஏன் எழுதுறே?’ என்று ஜானகிராமன் கேட்கிறார் 🙂

வானவில் கூட்டம் : பாலு மகேந்திரா முன்னுரை

எனது ‘உயிர்த்தலம்’ சிறுகதை இடம்பெற்ற ‘வானவில் கூட்டம் – உலகத் தமிழர் கதைகள்’ தொகுப்பிற்கு (நண்பர் ஷங்கரநாராயணன் முயற்சியோடு உதயகண்ணன் தொகுத்தது)  இயக்குநர் பாலு மகேந்திரா அளித்த முன்னுரையை பதிகிறேன். நன்றி : tamil.sify.com . யாராவது சுட்டி அனுப்பினால்தான் தொகுப்பு வந்த செய்தியே நமக்குத் தெரிகிறது!

தொகுப்பில் இடம் பெற்ற மற்ற எழுத்தாளர்கள் : சித்தார்த்தன் , இரா. இராமையா , என். கணேசன் , பாரதிராமன் , ரமேஷ் வைத்யா , உதயசங்கர், ரெ. கார்த்திகேசு, சூர்யராஜன் , நாஞ்சில்நாடன் , குரல்செல்வன் , காசிகணேசன் ரங்கநாதன் , நாகூர் ரூமி , ஜெயமோகன் , சுரேஷ்குமார் இந்திரஜித் , நரசய்யா, பத்ரிநாத் , தமிழ்மகன் , சாந்தன் , அப்துல் ரஜாக் , பாளை. கோ. மாணிக்கம் , அ. முத்துலிங்கம், இளைய அப்துல்லாஹ் , ஜெயந்தி சங்கர் ,  போப்பு , எஸ். ஷங்கரநாராயணன் , ம.வே. சிவகுமார் , கே.ஆர். மணி. ஐஷ்வர்யன், பாலா , ம.ந. ராமசாமி, மீரான் மைதீன்.

அற்புதமாக எழுதும் சகோதரர் மீரான் மைதீனின் ‘மஜ்னூன்‘ கதையை வெகுவாக சிலாகித்திருக்கிறார் பாலு மகேந்திரா. (மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா‘ கதையை தட்டச்சு செய்தது நான்தான் என்று தன்னடக்கத்தோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்!)

 – ஆபிதீன் –

***

balumahendra.jpg

ஆகாயம் வாடகைக்கு…
 
பாலு மகேந்திரா
 
சன் தொலைக்காட்சிக்காக ‘கதை நேரம்’ என வாரம் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து குறும்படமாக்கும் மும்முரத்தில் தமிழின் முக்கிய சிறுகதைகளை மனம் நிறைய ஒருசேர மறுவாசிப்பு நிகழ்த்த நேர்ந்தது. அதற்கு முன்பேகூட, தமிழ்ச் சிறுகதை உலகத் தரத்துக்கு எப்போதோ வளர்ந்துவிட்டது என்கிற கருத்து எனக்கு உண்டு. உலகின் சிறந்த கதைகளின் வரிசை என்று, தோன்றிய கணத்தில் கடகடவென்று தமிழ்க் கதைகளை நினைவுகூர்ந்து எடுத்துக்கூற முடியும். நிஜத்தில் தொலைக்காட்சிக்கான அந்தச் சிறுகதைத் தொடரை நான் இயக்க ஆர்வப்பட்டதே இப்படித்தான் என்று சொல்லலாம்.

இடைப்பட்டு பல்வேறு அலுவல்கள், திரைப்படக் கல்லூரி தொடங்கும் யோசனை, தற்போது ‘அனல் காற்று’ திரைப்பட வேலைகள்… என்று காலம் என்னை சுவிகரித்துக் கொண்டபோதும், படிக்கிற வழக்கம் விட்டுவிடவில்லை. அது பசி போன்றதொரு தினவு. தானாக அடங்காது, தீரும்வரை விடாது. வாசிப்பதால் வாழ்க்கையில் இன்னும் உற்சாகம் மீதமிருப்பதாய்த் தோன்றுகிறது. முக்கிய படைப்புகளை, அவை வெளியான சூட்டோ டு படித்துவிடுவதில் தளராத ஆர்வம் எனக்கு உண்டு.

இப்போது ஒரு மாறுதலான அனுபவம். வெளியான சூட்டோடு கூட அல்ல, வெளியாகுமுன்னாலேயே – தரமான சிறுகதைகளை ஒருசேரத் தொகுத்து என் முன் வைத்திருக்கிறார் உதயகண்ணன். ‘உலகத் தமிழர் கதைகள்’ என்கிறார். உலகெலாம் தமிழ்ப்புகழ் பரப்பும் நம் மக்கள் தங்கள் பாடுகளை, அனுபவங்களை இலக்கியத்தில் கொட்டித் தந்த கதைகள். இப்படி உலக வளாகத்தைத் தமிழ்க் கண்ணுடன் வளைய வருகிறது தனியான வாசக அனுபவம்தான். முன்னுரை தரவேண்டும், என்று உதயகண்ணன் கேட்டுக்கொண்ட போது மகிழ்ச்சியடைந்தேன்.
 
**

உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிப் போகிற அளவு, காலத்தின் வீச்சும் வளர்ச்சியும் அபரிமிதமாய் இருக்கிறது. தமிழர்கள் நாடுகடந்து சாதனை படைக்கத் தொடங்கி விட்டார்கள். கணினி கண்டுபிடிக்கப்பட்டதுமே இந்தியனை உலகமே இரு கரம் நீட்டி அரவணைத்து வரவேற்கும் அளவு நிலைமை உருவாகிவிட்டது. உலகெலாம் இந்தியத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் பரந்து படர்ந்து, வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக நிலைகொண்டு பவனி வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் கதைகளைப் பங்களித்திருக்கிறார்கள். உலகத் தமிழர் ஒன்றுகூடிய இலக்கியத் திருவிழா கோலாகலத்தை இந்த நூலில் காணமுடிகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால், வேலை நிமித்தம் பெற்றார் உற்றாரை விட்டு, மனைவி குழந்தைகளை விட்டு, ஊரை விட்டுப் பிரிந்து போனவர்கள், முன்தலைமுறையினர் போய், அங்கேயே பிறந்த, பின்தலைமுறை மக்கள், தாய்நாட்டில் வாழ்க்கை நெருக்கடி வரவும், ஏக்கத்துடன் தாய்மண்ணைப் பிரிந்து வெளியேறி, இன்னும் தாய்மண்ணை மறவாத நெகிழ்ந்த நெஞ்சுக்காரர்கள்…. இப்படி எல்லா மனிதர்களின் பண்புகளும், சிந்தனைத் தெறிப்புகளும் கதை வடிவம் கண்டிருக்கின்றன. எல்லைகளை விரித்துப் பறக்கும் பறவைகள் இவர்கள். காலச் சிமிழ் இவர்களைப் பூதமாய் அடக்கிவிட அனுமதிக்காதவர்கள்.

உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற அவர்கள் தவிப்புப் பதிவு கண்ட கதைகள் இவற்றில் உள்ளன. கலாச்சார ரீதியான முரண்களும், ஒத்திசைவுகளும், மாற்றங்களும் ஊடாடுகின்றன. என்னதான் வெளிநாட்டுக்குப் போனாலும் தாய்நாடு என்கிற பாதுகாப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என உள்ளூற கவலைப்படுகிறார்கள் சிலர். அச்சூழலில் அவர்களுக்கு நிகழும் ஆபத்துகள், எளிய சுருக்கு வழியில் பணம் சம்பாதித்து கீழ்மைப் பட்டுப் போகிற நெருக்கடிகள். சிலர் அதைத் தாண்டி வருகிறார்கள். சிலர் அதில் வீழ்ந்து வலைப்படுகிறார்கள். வயிற்றின் சவாலில் தோற்றுப் போனவர்கள் ஒருபுறம். மனசின் சிடுக்குகளை அவிழ்க்க இயலாதவர்கள் இன்னொரு புறம். வேற்றூரில், வெளிநாட்டில், எதிர்பாராமல் கேட்ட தமிழ்க் குரல் என்று சிரிப்புடன் கிட்ட வருகிற நபர் அவசியம் போல ஜாதியை விசாரிக்கிறார்
**
இப்படிக் கதைகளில் கிடைக்கிற நிகழ்காலத்தின் சாயம் அல்லது சாயல் முக்கியமான பதிவுகளாக நம்மைப் பாதிக்கின்றன. எல்லாவற்றையும் ஒருசேர வாசிக்கிறதே ஒரு பேரனுபவம்… பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு, சொந்த நாட்டுக்குத் திரும்பக்கூட முடியாது தத்தளிக்கிறவர்களை நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. ஊர் திரும்ப முடியாமல் கடிதம் என்று எழுதி மனதைப் பிழியும் ‘மஜ்னூன்‘ கதையின் நாயகனும் (மஜ்னூன் என்றால் அரபி மொழியில் பைத்தியம் என்கிறார்), அப்பாவின் இளைய தாரத்தின் மூலம் பிறந்த தன் தங்கைகளின் கல்யாணத்துக்கு ராப்பகலாக உழைத்துப் பணம் சேர்க்கும் அந்த ‘பெயர் உதிர் காலம்’ நாயகனும் மறக்க முடியாதவர்கள். கதைக் களத்தின், நிஜத்தின் உக்கிரம் அத்தகையது.

சொல் புதிது, களம் புதிது, அனுபவம் புதிது, சேதி புதிது என இந்தக் கதைகள் தத்தம் அளவில் ஒவ்வொன்றும் தனி முத்திரை பெற்று விளங்குகின்றன. கதை நிகழும் சூழல் (habitat) அதுவே கதைக்கு ரொம்ப சுவாரஸ்யம் அளிக்கிறது. முத்துலிங்கம் போன்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர்கள். தமிழ்ச் சூழலோடு பொருத்தியே வேடிக்கை போல விவரங்களைத் தருகிற சமர்த்து, கதைக்கு அபார சுவையும் வலுவும் சேர்க்கிறது. பாகிஸ்தானிய இஸ்லாமியச் சூழல், நம்ம ஊர் ஸ்ரீதேவி அங்கே தேர்தலில் நின்றால் ஜெயிப்பார் என்கிறார், சமீபத்திய தேர்தலில் அந்த வாய்ப்பை அவர் விட்டுவிட்டாரே என்றிருந்தது. ஓர் அழகான பொறுமைசாலியான இசுலாமியப் பெண் அவருக்கு மிகுந்த நட்புடன் பூங்கொத்து தரும் கதை.

நான் முன்பே வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்கள், இவர்களுடன் ரெ.கார்த்திகேசு, ஆபிதீன் போன்றவர்களின் கதைகளும் இதில் இடம் பிடித்துள்ளன.

தமிழ்நாடு அல்லாது வெளி மாநில வேற்றுமொழிப் பிரதேச இந்தியக் கதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கல்கத்தா பூர்விகவாசி மும்பையில் வசிக்கிற (மொகித்தே), மும்பையின் பிரதான பிரச்சினையை அலசும் (கழிப்பறைக் காதல்), தில்லி சூழலில் (மிட்டாதார்), கேரளச் சூழலில் (திருமுகப்பில்) – என்று இருப்பினும், தமிழ்நாட்டுச் சூழலுக்கு களம் தந்த கதைகள் தனி முத்திரை கொண்டவையாக விளங்குகின்றன. புதிய வாசக அனுபவத்தைத் தரும் சிறப்பும் செறிவும் கொண்ட கதைகள். விடிவிளக்கு வெளிச்சத்தில், தூளியில் உறங்கும் குழந்தையைப் பார்க்க ஏங்கும் இருள் பற்றிய கதை. சின்னப் பிள்ளைகளை விவேகானந்தர் என்கிற பெரிய தத்துவதரிசினியைப் பற்றிப் பேசச் சொல்வதில் உள்ள அபத்தத்தை விளக்கும் கதை, ஊரிலேயே பெரிய விபத்து நடக்கிறபோது, தன் குடும்பக் கவலையாய் அங்கே நிற்கிற போலிஸ்காரன் கதை… என ஒவ்வொன்றும் நினைத்து நினைத்து அசைபோடத் தக்கவையாக இருக்கின்றன.

எதிர்காலத்தைக் கற்பனை செய்து சுஜாதா தந்திருக்கிற ‘திமலா’ ஒரு பக்கம் என்றால், ஆதிவாசிகள் ரோஜாவை முட்செடி என்று அழித்து ஒதுக்கியிருப்பார்களே, எப்படியோ அது காதல் சின்னமாக உருவாகி விட்டதே என ஆச்சர்யம் காட்டும் தமிழ்மகனின் படைப்பு இன்னொரு சுவை. ரமேஷ் வைத்யாவின் கதையில் சங்க காலப் புலவன் மீண்டும் பிறந்து குடிகாரக் கவிஞனாகிறான். குடியரசு அல்லவா இந்தியா.

கற்பனைக்கு வானமே எல்லை.

கௌதம புத்தனின் சங்கம் பற்றிய கதை (எழுதியவரே சித்தார்த்தன் தான்), அதன் முதல் பிக்குணி அவன் மனைவி என்கிறது. இது ஒருவிதம் என்றால், கணிகையிடம் தத்துவம் பரிமாறும் ஒரு பிற்காலச் சாமியையும் வாசிக்கலாம். சுவாமிஜியாகித் திரிந்து போகிறவர்களிடையே, இவர் திரியாமல் சுவாமியானவர். படிப்பறிவில்லாத பாமரர் முதல் கற்றறிந்து பெருவாழ்வு வாழ்கிறவர் வரை பல்வேறு கதாபாத்திரங்கள் காணக் கிடைக்கின்றன. திருடனும் உண்டு, போலிஸ்காரனின் கதையும் உண்டு. கிரிக்கெட் வீரர் காளிசரண் பற்றி ஜெயமோகன் கதை வரைகிறார்.
கதைகள் அணிவகுத்துள்ளன.
**
நமக்கு அரிய செய்திகளைப் பரிமாறும் இசுலாமியக் கதைகள் இதில் கிடைக்கின்றன. ஆபிதினின் ‘உயிர்த்தலம்‘ சுன்னத் பற்றியது – ‘சீவிய பென்சில்தான் எழுதும்’ – புராணப் பாங்கில் ஐயடிகள் காடவர்கோன், அன்னம் தானம் கதைகளும் வாசிக்கலாம். லைப்ரரி கதையில் எல்லாருக்குமே தமது இளமைப் பருவம், படித்து முடித்தபின் வேலைக்கு அமருமுன்னான பருவம், நினைவு வரும். எழுதியவர் சூர்யராஜன், அவரே ஒரு திரைப்பட இயக்குநர்தான்.

கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத்தக்கவை. இவைகளில் பலவற்றை நான் முன்பே வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். சில புதிய பெயர்களும், மனதில் பதியும்படியான கதைகளோடு காணக் கிடைக்கின்றன. சுஜாதா, நாஞ்சில் நாடன், ஷங்கரநாராயணன் முதலிய சிலரின் கதைகளைக் குறும்படங்களாக ஏற்கெனவே நான் தந்திருக்கிறேன். இத்தொகுப்பு அந்நாட்களை மீண்டும் நினைவில் கொண்டு வந்துவிட்டது. விரைவில் மேலும் புதிய சிறுகதைப் படங்கள் தரும் ஆவலைக் கிளர்த்துவதாக இத்தொகுதி அமைந்திருக்கிறது.

காலம் கைகூட வேண்டும்.

நல்வாழ்த்துகளுடன்,
தங்கள் அன்பன்,
பாலுமகேந்திரா

**

தொடர்புடைய சுட்டி :

அவரோகணம் – நாகூர் ரூமி சிறுகதை

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு – எஸ் ஷங்கர நாராயணன்

உயிர்த்தலம் – முன்னுரை

 

uyirththalam_anyindian_small.jpg 

 உயிர்த்தலம் (சிறுகதைகள் தொகுப்பு) – ஹரன் பிரசன்னாவின் அறிவிப்பும் கோ.ராஜாராமின் பதிப்புரையும் 

Published by AnyIndian Pathippagam 

***

முன்னுரை

அப்படியொன்றும் சில இணைய தளங்கள் சொல்வது போல பெரிதாக நான் நையாண்டி செய்பவன் அல்ல – வாசகர்களை விட.

ஒரு கதையில் , என் ஊரின் பெருமைகளை ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டே வரும் நான், ‘தினமும் புதிதாக ஒரு பைத்தியம் கடைசி டிரெயினில் ஊருக்கு வருவது…’ என்று பத்தியை முடித்திருந்தேன். படித்த நொடியில் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார் : ‘ஆமாம், டிக்கெட்டை பத்திரமாக இன்னும் வைத்திருக்கிறீர்கள்தானே?’

உண்மைகளையெல்லாம் போட்டு உடைத்து விட முடியுமா? ஆனால், உண்மைகள்தான் எப்போதுமே சிரிப்புக்குரியவை. இன்னாரின் மார்க்கம் மட்டுமே உலகை உய்விக்க வந்ததெனும் உண்மை, பேரழிவு ஆயுதங்களை இன்னும் கண்டுபிடிக்கிற பெரியண்ணன்களின் உண்மை, தன் எழுத்து மட்டுமே காலாகாலத்துக்கும் நிற்பதென்று நம் தமிழ் எழுத்தாளன் சொல்லும் உண்மை…

பேருண்மையையும் சொல்லி விடுகிறேன்: எனக்கு எழுத வராது. அதாவது, என் சமூகத்தைத் தவிர வேறெதையும் எழுத வராது.

தெரியாத்தனமாக , அல்லாஹ¤த்தஆலா அற்புதமான ஊரில் என்னைப் பிறக்க வைத்தது வசதியாகிப் போனது.

இடறி விழுந்தால் எழுத்தாளர்களின் தலையில் கால் வைக்க வேண்டிய ஊர் மட்டுமல்ல, இடக்கு மடக்காக இளஞ் சிறுவர்களைக் கூட பேச வைக்கும் நாகூர். பேசத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு தன் கலகலப்பூட்டும் நகைச்சுவையால் கற்றுக் கொடுக்க இருக்கவே இருக்கிறார் எங்கள் தமிழய்யா , புலவர் சீனி சண்முகம்.

‘மம்ஹசன் வூடு வரைக்கிம் போவனும் தம்பி’ என்று வழி கேட்டிருக்கிறார் அவர்.

‘மம்ஹசன் வூட்டுக்கே போயிடுங்களேன் சார்’ – சிறுவன்.

இவனுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை.

இவனைப் போன்றவர்கள் – சரியாகப் படித்து முடிவதற்குள் –  ‘ச·பர்’ என்ற பெரும் பேயிடம் 108வது தலைமுறையாக மாட்டிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப் போவதையும்,  தங்களின் அறிவார்ந்த மவுலவிகளால் மூளைச் சலவைக்குள்ளாகி, எதிர் சிந்தனை வைப்பவர்களையெல்லாம் ஊர்விலக்கம் செய்து உதைப்பதையும் பார்த்து எழுதாமல் இருக்க முடியவில்லை. பெரியார் சொன்னது போல, முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்தால் நிலைமை மாறலாம்.

குர்ஆன், ஹதீஸ்கள் மட்டும் கொஞ்சம் தெரிந்த – சகோதர சமயங்களை சற்றும் மதிக்காத – ஒரு ஆலிம்ஷா, ஊரிலுள்ள ஓராயிரம் ஜனங்களை மேலுலகம் காட்டி பயமுறுத்துவதும், இறைமறை தெளிவாக இருந்தும் காட்சிக்கு முன் கொமஞ்சான் புகையைப் போட்டு விடுவதும் அவர் பிழைப்பை எளிதாக நடத்த என்பதை அவன் உணர வேண்டும். அண்ணன் தம்பிகளாய் இஸ்லாமியர்களும் இந்துப் பெருமக்களும் பழகிய கொஞ்சநஞ்ச ஊர்களையும் இன்று ‘குஜராத்’தாக மாற்றும் சகல ஷைத்தான்களையும் (பெரிய ஷைத்தானுக்குப் பெயர் : அரசாங்கம்) அவன் இனம் காண வேண்டும். என் பிரார்த்தனை அது.

ஊரின் பெரியகடைத்தெரு மதக் கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்த மறுநாள்,  நல்லிணக்கம் பேசும் நானா ஒருவர் , எங்கள் தெருவில் ஏதும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தன் ‘திறமை’யைக் காட்டிவிட்டு ஓடினார். பையன்கள் உடனே ‘ஆர்.எஸ்.எஸ் ஒழிக’ என்று பயங்கரமாக கூச்சல் போட ஆரம்பித்து விட்டார்கள்.

சேத்தமரைக்கார் மாமா தன் பையனைப் பிடித்து ,’டேய்…ஆர்.எஸ்.எஸ்ண்டா என்னடா?’ என்று அதட்டிக் கேட்டார்.

‘தெரியாது வாப்பா’ – வேகமாகச் சொல்லிவிட்டு , அவன் தொடர்ந்தான் : ‘ஹே…ஆர் எஸ் எஸ் ஒழிக’

விட்டார் ஒரு அறை.

தெரிந்திருந்தால் தன்னையே பலமுறை அறைந்து கொண்டிருப்பார் என்பது வேறு விஷயம், ஆனால் என்னிடம் சொன்னார் :’ பாருங்க தம்பி, எப்படி மனசை கெடுக்குறானுங்க..’

நான்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே…

நம்மை நாம் உற்றுப் பார்ப்போம் (கைலியோடுதான்!).

அறிஞர் அபுதாலிப் மக்கி சொன்னாராம் : ‘என்னிடமுள்ள குறைபாடுகளில் ஒன்றை எனக்கு எடுத்துக் கூறுங்கள்; என் தோல்பையில் வைத்திருக்கிற பொற்காசுகளில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன்’ . இதிலிருந்து இந்த மக்கு தெரிந்து கொண்டது , அபுதாலிபிடம் ஒரு தோல் பை இருந்தது என்பது மட்டுமல்ல நம்மை நோக்கி நாம் சிரிக்க வேண்டும் என்பதும் கூடத்தான்.

குறைகளைக் களைய அதுதான் வழி என்று படுகிறது.

இதில் நீங்களும் சிரிக்கிறீர்களா? நல்லது, உங்களுக்கு சிரிக்க வரும். ‘பிறர் சிரிப்பதற்காக எழுதுவதும் பேசுவதும் சுத்த அயோக்கியத்தனம்’ என்ற ஹஜ்ரத் (மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்) என்னையும் உங்களையும் மன்னிப்பார்களாக, ஆமீன்.

அழுகையும் வலியும்தான் அங்கதமாக வெளிப்படுமென்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

வெளிப்படுவதைக் கண்டு சொல்பவர்களுக்கு  என் ஜோப்பிலிருந்து அலுமினியக் காசு ஒன்றைத் தருவேன் அன்பளிப்பாக.

தீர்ந்து போனால் , ‘அரபுமொழி கலந்தவண்ணம் அருந்தமிழ் உரைக்கும்’  ஊரின் பிரத்யேக மொழிச் சுரங்கத்திலிருந்து சிறந்த ஒரு சொல்லும் தருவேன்.

(பழைய) தஞ்சை மாவட்ட தமிழ் முஸ்லீம்கள் உபயோகப்படுத்தும் – இந்தத் தொகுப்பில் வரும் – அந்த வழக்குச் சொற்கள் , விளக்கக் குறிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரச் சொல்லுக்கான அர்த்தம் ஊர்களைப் பொறுத்து மாறுபடவும் செய்யும் – ‘குப்பி’ மாதிரி. மிகுந்த ஒற்றுமையுடன் தவறாக உபயோகப்படுத்தும் சொல்லும் உண்டு. உதாரணமாக , ‘பலா’ (bhalaa) என்ற உருது சொல்லுக்கு ‘நன்மை’ என்றுதான் அர்த்தம். ஆனால் ‘தீமை’ என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள். ‘பலா’ தங்களை விட்டுப் போக ‘துஆ’வும் செய்வார்கள். இந்தக் கூத்துக்களையெல்லாம் ஊர் பாஷையில் சொல்லும் – அரபு நாட்டு சபராளியான – என் நோக்கம் , வாசகர்களை ஓட வைப்பது.

ஒடுவீர்களாக – நன்மையை நோக்கி!

‘நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்’ எனும் குர்-ஆனின் 2 : 148 வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

நான் அவரது விசிறி என்பதை அறியாமல், ‘இடம் குறுநாவல் படித்ததிலிருந்து Unshakable Fan என்று தன்னைப் பாசாங்கின்றி தெரிவித்துக்கொண்டு , பல கதைகள் எழுதத் தூண்டிய மறைந்த கவிதாயினி சதாரா மாலதிக்கு , நான் குறிப்பிடும் குர்-ஆன் ஆயத்துகள் , ஹதீஸ்கள் , என் ஊர்ச் சொற்கள் அத்தனையும் மனப்பாடம்.

‘வெடுக் வெடுக்’ என்று பேசும் அஸ்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

‘நகைச்சுவை என்பது பொய் கலக்காத நடைமுறைத் துயரம். சூழலின் கேவலங்களை ஆற்றாமையோடு வேடிக்கைப் பார்த்து அதன் கெட்ட தன்மைகளால் பாதிக் கப்படாமல் நம் தார்மீக பலத்தால் அதை எதிர் கொள்வதுதான் எடுத்துச் சொல்லும்போது நகைச் சுவையாகி விடுகிறது. முக்கியம் எதுவென்றால், கேவலங்களில் மூழ்கிவிடாமல் நம்மை நாமே இழந்து விடாமல் இருப்பது’ என்று சொல்லிச் சென்ற மாலதி…

‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்’ஐ அவர் தூண்டித்தான் எழுதினேன். வேதனை, கடைசியாக அவர் படித்துச் சிரித்த கதை , அரபுகளின் ஒற்றுமையைச் சொல்லியவாறு மறுமைநாளை நிறுக்கும் ‘மீஜான்’. நாம் இப்போது வாழ்வதே மறுமைநாளில்தான் என்ற மயக்கத்தோடு (?) எழுதிய கதை.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘குழந்தை‘ மாதிரி இப்போது ஏன் நீங்கள் எழுதுவதில்லை என்று கேட்கும் சிலரைப்போல் மாலதி கேட்பதில்லை. குழந்தைகள் வளரவேண்டும் என்று அவருக்குத் தெரியும். அல்லது, சந்தனக்கூடோ கோயில் தேரோ நிறுத்தும் கொட்டகையிலிருந்து மிகப்பெரிய வெள்ளைப் பசு ஒன்று இறக்கைகளுடன் மிதந்தபடி பறந்து சென்ற அந்த எனது வினோதக் கனவு , அது கண்ட அடுத்த நாளிலிருந்து மீண்டும் எழுத வந்த என் எழுத்து நடை மாறியது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.

பல பெரிய எழுத்தாளர்கள் பாராட்டிய ‘ஹே ஷைத்தான்’ மட்டும் மாலதிக்கு ‘சுமார்’ ரகம்.

இப்போது , யார் சொல்வது சரி?

‘ஹே ஷைத்தான்’ பற்றி இங்கே ஒன்று சொல்ல வேண்டும். விமர்சிக்கப்பட்ட அந்த சேனல், ‘எல்லா மனிதர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் ஷைத்தானுக்கு வேலையே இல்லையே..’ என்று மறைமுகமாக சொன்ன நல்ல பதிலை விட , கதையால் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் ‘டே மடையா!’ என்று உடனே தன் தளத்தில் பதிவு போட்டதுதான் என்னை யோசிக்க வைத்தது. இரண்டு நாள் தீவிரமாக யோசித்தேன். அவர் சொன்னது சரிதான். ஏமாளிதான் நான்.

முன் – பின் – சைடு நவீனத்துவங்கள் தெரியாமல் , அவ்வப்போது மனசுக்கு தோன்றும் வகையில் எழுதுகிறேன். ‘இது கதையா , கட்டுரையா?’ – சிரித்துக்கொண்டே கேட்கிறார் ஒரு நண்பர். ‘வாட் ஈஸ் த டி·பரன்ஸ் பிட்வீன் இரட்டைக் கிளவி அண்டு அடுக்குத்தொடர்?’ என்று தமிழய்யா கேட்பது போல் இருக்கிறது. அட, வித்தியாசம் தெரிந்தால்தான் பதில் சொல்லி விடுவேனே..

பெருமதிப்பிற்குரிய இஜட். ஜ·பருல்லா நானாவின் ஆன்மிக கருத்துக்களையும், ஊர்ச் சொற்களுக்கு ஆருயிர் நண்பர் அப்துல் கையும் கொடுத்த வேடிக்கையான ஆங்கில விளக்கங்களையும், நான் மிகவும் ரசிக்கும் மலையாள திரைக்கதாசிரியன் ஸ்ரீனிவாசனின் பஷீர்த்தனமான பரிகாசங்களையும் (அடுத்தவன் கதையைத் திருடி உயர்பவனாக இவர் நடித்த ‘உதயனானு தாரம்’ சினிமாவில், கடைசியாக மன்னிப்பு கேட்டுக் கொள்வது மட்டும் அநியாய கற்பனை!), பிடித்த எழுத்தாளர்களின் ஓரிரு வரிகளையும் சில கதைகளில் உரிமையோடு பயன்படுத்தியிருக்கிறேன்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, என் கவிதையொன்றைக் கூட ஒரு கதையில் சேர்த்து விட்டேன்.

நான் வளர்ந்திருக்கிறேனா என்பதை இனி வாசகர்கள்தான் சொல்லவேண்டும் – டிரெயின் டிக்கெட்டைப் பார்த்து.

காசுகளோடு காத்திருக்கிறேன்.

எனது இந்த இரண்டாவது கதைத் தொகுப்பு வெளிவர பெரிதும் காரணமான பிரியத்திற்குரிய சகோதரர் பி.கே சிவகுமார் , ‘Go Ahead’ சொன்ன கோ. ராஜாராம், கதைகளை விரும்பிக் கேட்ட தமிழகத்தின் சில வீரதீரப் பத்திரிக்கைகள் – ‘ஆபாசம்’ , ‘பிரச்னைக்குரியது’ என்று – தயங்கித் திருப்பி அனுப்பும்போதெல்லாம் உள்ளடக்கம் உணர்ந்து அவைகளை ஒரு வார்த்தை கூட வெட்டாமல் சர்வ சுதந்திரத்துடன் பிரசுரித்த ‘திண்ணை‘ ஆசிரியர் குழு – ‘பதிவுகள்’ ஆசிரியர் நட்புமிகு வ.ந. கிரிதரன் , கணையாழி – புது எழுத்து – படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்கள் , விளக்கக் குறிப்புகளுக்கு உதவிய ஹமீது ஜாஃபர் நானா, மெய்ப்பு பார்த்து நல்ல ஆலோசனைகளையும் வழங்கிய நண்பர் ஹரன் பிரசன்னா, மற்றும் சிறப்பாக வெளியிடும் ‘எனி இந்தியன்’ பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.

– ஆபிதீன்
அக்டோபர் 12 ,  2007
துபாய்

abedheen@yahoo.com