மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும்

இந்தப் பதிவு முஸ்லிம்களுக்கு மட்டும். ஆமாம், அவர்களுக்கு மட்டும்தான். படிக்கும் சகோதர சமயத்து நண்பர்கள் குழம்பிவிடுவார்கள் என்பதால் அவர்களை மீராஜ்-ஏ-கஜல்  கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குலாம்அலியும் ஆஷாபான்ஷ்லேயும் இணைந்து பாடியது. அப்படியாவது இந்தியாவும் பாகிஸ்தானும் இணையட்டுமே.  உண்மையில் , இம்மாதிரி ’ப்யூர்’ இஸ்லாமிய கட்டுரைகளை நான் பதிவிட விரும்பவில்லை. இது இலக்கியத்திற்கான பக்கம். ஜாஃபர்நானாவின் வற்புறுத்தல் காரணமாக பதிவிடுகிறேன். கதைசொல்லி கி.ரா ஐயா சொல்வதுபோல ‘தட்ட முடியாமல் தாட்சண்யம் கருதித்தான் ஒப்புக் கொள்கிறது’. தவிர,  நானா அவ்வப்போது வில்லங்கமான ஹஜ்ரத் கதைகளும் எழுதுபவராயிற்றே. தினம் ஆறுபேர் ஆவலோடு படிக்கும் ஆபிதீன் பக்கங்களில் பதிவிடவேண்டியதுதான். இந்தப் பதிவு சம்பந்தமான வினாக்களை எழுப்புவோர் அவரது மின்னஞ்சலை ( manjaijaffer@gmail.com ) தொடர்புகொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள். நான் பெரிய சோதா. சோதனையாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன் :

இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கலவரம் வெடித்தபோது அதிதீவிரத்தோடு இயங்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இளைஞர்களைக் கைது செய்த போலீஸ் , அடுத்த பிரிவினரை (இதுக்கும் பெயர் வேண்டாம்) அப்படியே விட்டுவிட்டதாம். காரணம் கேட்டதற்கு, ‘பாவம்ங்க அவங்க. பூமிலெ உள்ளதெயே பேசமாட்டாங்க ; ஏன் , நெனைக்ககூட மாட்டாங்க..எல்லாம் வானத்துக்கு மேலேதான்’ என்று பரிதாபப்பட்டதாம்! நண்பர் தாஜ் சொன்ன உண்மை சம்பவம் இது. சிந்திப்பவர்களுக்கு இதில் சில செய்திகள் இருக்கின்றன.  மேலும் செய்திகள் வேண்டுவோர் புனித ’மெஹ்ராஜ்’ பற்றி தம்பி இஸ்மாயில் எழுதிய பதிவை வாசிக்கவும். அதிலிருக்கும் – எங்கள் ஹஜ்ரத் சொல்லும்-  செய்தியும் ஜாஃபர்நானா அனுப்பியதுதான். இங்கே,  ஹஜ்ரத்தின் பிரதான சீடரான ஜபருல்லா பேசியதை அனுப்பியிருக்கிறார். பாவம், நானா ரொம்பவும் மெனக்கெடுகிறார். இறைவன் அவருடைய பிழைகளைப் பொறுப்பானாக, ஆமீன்.

ஜாஃபர்நானா தொகுத்த ஜபருல்லாநானாவின் உரையைத் தொடர்வதற்கு முன் , எனது மதிப்பிற்குரிய , நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்மாமா அவர்கள் தனது சீடர் இசைமணி யூசுப் அவர்களுடன் இணைந்து பாடிய அருமையான பாடலைக் கேளுங்கள்.  அசனாமரைக்கார் அனுப்பினார் , மெஹ்ராஜ் ஸ்பெஷல் என்று. நன்றி! – ஆபிதீன்

Download: இறைவன் அழைத்தான் திருநபிஐய்…
 

***

ஹமீது ஜாஃபர்ஹமீது ஜாஃபர்  : நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு. Bukari Vol 1. no 345  &   Bukari Vol 4. no 429  ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப்  படிக்கிறவர்கள் கண்களில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் மிஃராஜ்  பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம், படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனேயொழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள்.

நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்தத் தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநள்ளாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியது. அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் அந்த ஊர் நாட்டாண்மை, விஷயம் தெரிந்தவர் ; மார்க்கப் பற்று அதிகம் உள்ளவர், நானா மீது தனி பிரியம் வைத்திருந்தார். இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் ஒன்று நானா மற்றொன்று c.v. அபுபக்கர் ஷா பாக்கவி, இவர் கோயம்புத்தூர் இம்தாதுல் உலமா மதரஸா பிரின்சிபால். ஹஜ்ரத் அவர்கள், மிக விஷேசமானவர்கள் தமிழ் நாட்டில் மதிக்கப்படுபவர்கள். மிகச் சிறந்த பேச்சாளர். அவர்கள் எந்த கூட்டத்திற்கு பேசப்போனாலும் ஜஃபருல்லாஹ்வும் கண்டிப்பாகப் பேசியாகவேண்டும். இது அவர்கள் இடும் நிபந்தனை. அந்த அளவுக்கு நானாமீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர்கள். அன்றைய தினம் நடந்த அந்த கூட்டத்தில் முதல் சிறப்பு சொற்பொழிவாற்ற நானா தொடங்கியவுடன் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, ”வெட்டுவேன், குத்துவேன்” என்றெல்லாம் அமளிதுமளியாகியது. அதே மாதிரி நீங்களும் ஆகாமல் ஜபருல்லாநானாவின் பேச்சைக் கேளுங்கள்.

***

“அல் இஸ்ரா வல் மிஃராஜ்”

தொகுப்பு: ஹமீது ஜாஃபர்

***

ஜபருல்லா ஆரம்பித்தார் :

அஸ்ஸலாமு அலைக்கும், எனக்கு தெரிஞ்சு ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…!

(“ஆய்…….. ஊய்ய்………., அடக்கு….., நிறுத்து… எறங்கு….., ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..உய்ய்ய்ய்ய்ய்ய்…”  –  கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் கத்த ஆரம்பித்துவிட்டனர்.)

சத்தம்போடாதீங்க, நான் உண்மையெ தான் சொல்றேன். ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகலை!

(”உட்காருயா, பேசாதே, காஃபிரு” –  மீண்டும் கத்திக்கொண்டு மேடையை நோக்கி வந்தனர் சிலர்.)

உடனே கூட்டத்தின் தலைவர் எழுந்து, ‘உட்காருங்கப்பா, ஒரு வார்த்தைக்கு எந்திரிச்சிட்டீங்க, உட்காரு, அவர் ஒரு சேதி சொல்லுவாரு உங்க கோவம் அடங்கிடும்; கடைசியிலெ பாரு; ரசூலுல்லா சொன்னாஹ என் பின்னாலெ வாங்கன்னு, எங்கே போறேன்னு சொன்னாஹலா? அந்த மாதிரி சொல்லிருக்காஹ, உட்காருங்க  …’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹஜ்ரத் c.v. அபுபக்கர் ஷா பாக்கவி எழுந்து ‘ஜஃபருல்லாஹ் அருமையான சிந்தனைவாதி அதுமாத்திரமல்ல அந்த சிந்தனை சரியானத் தடத்திலெ போகுதாங்கிறதை சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான குருவை வச்சிருக்கிறவங்க, அவர்கள் இப்படி சொல்வதென்றால் அருமையான ஒரு செய்தியை உங்களுக்கு கொடுப்பதற்காக. உங்களுடைய உள்ளங்களெல்லாம் கோபத்தாலெ இருந்தாலும் சரிதான் பாசத்தாலெ இருந்தாலும் சரிதான், உங்களுடைய மனத்தைத் திறக்கவேண்டும். திடீரென்று சொன்னால்தான் மனம் திறக்கும் உட்காருங்க’ என்று சொன்னதும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.

ஜபருல்லா தொடர்ந்தார் :

இதைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, ’என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்’டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல; அதுக்குப் ’இஸ்ரா’ன்னு பேரு. அங்கேர்ந்து ரசூலுல்லாஹ் மேலே போனாங்கன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு பேரு ’மெஹ்ராஜு’. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து ’இஸ்ரா’ போனாஹ, ’மெஹ்ராஜு’க்குப் போனாஹாங்குறதுலெ நமக்கு என்ன முன்மாதிரி இருக்கு? நாம போக முடியாதே !

என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ, கடுகடுன்னு பேசும்போதுகூட ’யா முஜம்மில்’ அப்டீன்னு அழைக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; ’சிராஜுல் முனீர்’ அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து…. அது மாத்திரமல்ல , ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.

நாம் ’அவாம்’. ரசூலுல்லாஹ் யாரு ?  நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ்,  என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய ’அப்தை’ (அப்து – அடிமை) என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ’ரசூல்’ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய ’அப்து’ என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும்  சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ’ஹக்’ வேறே ’ஹல்க்’ வேறே ; அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே  நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும்  ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத , அல்லாவை மட்டும் தெரிஞ்ச , அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டான். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.

அடுத்தது ’திர்மிதி’யிலெ இருந்தது ’புஹாரி’லெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாங்க,  அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாங்க, இருபதா கொறச்சாங்க,  மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாங்க, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாங்க அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ  உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை! இஹலுக்கு (ரசூலுக்கு)  சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால்? அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை, நுபுவத்தை முடிச்சுட்டான், குர்ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார்  என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ ஹதீஸிலெ. இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ , ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.

நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா….? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாங்க. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ’ஷட்டிங்’ பஸ்ஸா – போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தான் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாங்க, அலுப்பு பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னாருண்டு!

(சிரிப்பொலி)

இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நம்ம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இது இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அவங்க இப்படி பேசினாங்க, இவங்க இப்படி பேசினாங்க அப்டீன்னு.. ’இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்’ என்று மூசா(அலை) துஆ செஞ்சாங்க. அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களா?ன்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல? ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன்  சொல்லலை, காரணம் என்ன? ’சிந்தியுங்கள்’ என்கிறான் அல்லாஹ்.

நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை (இது) . ஹஜ்ஜுலே நடக்கிறது பூரா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம் ‘அலை’ஹிஸ்ஸலாத்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்… அங்கே நடக்கிறது பூரா…அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம்! அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ்.  சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான்?’ என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது , முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தா பண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ ’சஜ்தா’ என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.

இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன…? சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம் / பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா ? இல்லை ,  அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும்?  மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப்  பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா? தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or  for him?  அதைச் சொல்லுங்க. அல்லாவைத் தொழுவுறீங்களா, அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்… ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு – அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு – அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் – உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; ’லாயிலாஹ இல்லல்லாஹ்’ / கலிமா – உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான். இல்லாட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு..? தொழுகை.  அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வந்தா அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்?

இந்த செய்தி  பூரா அல்லாடதான்னு நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்க முடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.

அதனாலெ ’ஆதம்’ என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது..

**

’ஹும்….. இதுக்கு மேலே நான் பேசணுமா? பாருங்க, ஒரு அருமையான தத்துவத்தை கொடுத்திருக்கிறார். அல்லாஹ் சொல்றான் . சிந்தியுங்கள் என்று.  யோசனை பண்ணிப் பாருங்கப்பா ‘ –   (முடிவுரையில்) c v அபுபக்கர் பாக்கவி.

**

 நன்றி : இஜட். ஜபருல்லா, ஹமீது ஜாஃபர்

***

அருஞ்சொற்கள்:

இஸ்ரா –  வேகமாகப் பயணித்தல்
மெஹ்ராஜ்  – தூல உலகத்திலிருந்து சூக்கும உலகத்துக்கு உயருதல்
சிதரத்துல் முந்தஹா – சுவனத்தில் ஓர் இடம்
ஃபர்ளு  –  கட்டாயம் செய்யவேண்டிய கடமை
ஹதீஸ்  – நபிகளாரின் சொல், செயல்
நிய்யத்து  – செயலுக்குமுன் உண்டாகும் எண்ணம்
கபுரு  – அடக்கஸ்தலம்
காஃபிர்  – இறைவனை நிராகாரிப்பவன்
சஜ்தா  – அடிபணிதல், சிரம் தாழ்த்துதல்
வக்து  – நேரம்
ஷைத்தான் – இறைவனுக்கு எதிரானவன்
ஆலிம்  – (மார்க்க)அறிஞர்

சில மௌலவிகளின் உளறாட்டியம் – ஹமீது ஜாஃபர்

தக்கலை ஞானி பீர்முஹம்மதுஅப்பா பற்றிய நல்லதொரு பதிவை தன் வலைப்பக்கத்தில் பதிந்துவிட்டு, அடுத்தநொடியில் இந்த ‘உளறாட்டியத்தை’ எழுதி இங்கு பதியச் சொன்ன அண்ணன் ஹமீதுஜாஃபருக்கு நன்றிகள். ஆலிம்சாக்கள் ‘கவனிக்க’ வேண்டிய அவருடைய மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com . இது ‘ப்யூர்’ இஸ்லாம். பழக்கமில்லாதவர்கள் வேறெங்காவது பாய்ந்துவிடுவது உசிதம்.

**

ஹமீது ஜாஃபர்

சில மௌலவிகளின் உளறாட்டியம்

ஹமீது ஜாஃபர்

என்னுடைய கையடக்க ஹார்மோனியப் பொட்டியைத் திறந்து ஃபேவரைட்டில் போட்டுவைத்திருந்த ஆபிதீன் பக்கங்களைத் திறந்ததும் வினோதமான தலைப்பில் ஒரு கட்டுரை! ஏன், ஆபிதீனே ஒரு வினோதமானவர்தான். அவர் தலைப்பில் வினோதம் இருப்பதில் ஆச்சரியமில்லை. தலைப்பு இதுதான் : ‘ஏழாம் வானத்தில் கவிக்கோ’ . கவிக்கோ ஏழாம் வானம் போனதை விட அங்கு பேசப்படும் மொழி தமிழ் என்று கண்டுபிடித்ததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இதை கல்வத்து நாயகம் சொன்னார்களா இல்லையா என்பதைவிட அதை கவிக்கோ ஏற்றுக்கொண்டது பேராச்சரியம்!!

அந்தக்காலத்தில் ‘மறுமலர்ச்சி’ பத்திரிக்கையில் வலங்கைமான் அப்துல்லாவும் மஹதியும் எழுதும் கட்டுரைகளை என் அப்பாவுக்கு (பாட்டனார்) படித்துக் காண்பிப்பேன். அந்த மஹதியின் மகனார்தான் கவிக்கோ. அவருடைய பாட்டனார் சிறந்த கவிஞர், ஃபார்சியிலும் உருதுவிலும் கவி இயற்றும் வல்லமைப் படைத்தவர் என்று ஒரு டி.வி. நிகழ்ச்சியில் அவரே சொல்லியதைக் கேட்டேன். தமிழ் பழமைவாய்ந்த மொழிதான், எனக்கும் பற்று இருக்கிறது, ஆனால் ஏழாம் வானத்து மொழி என்று சொல்வதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே கல்வத்து நாயகத்தின் வளர்ப்பு மகனார் ஷிப்ளி பாவா அவர்கள் நம்  தமிழை ‘கொக்கரக்கோ பாஷை’ என்பார்கள்.

சரிசரி , இதோடு நிறுத்திக்கிட்டு உளறாட்டியத்துக்கு வர்ரேன். எல்லாம் பழைய ஞாபகம், ஆலிம்சாக்கள் ஒளறிக் கொட்டியது…

உளறாட்டியம் 1

அப்போது எனக்கு பன்னெண்டு பதிமூனு வயசிருக்கும் எட்டாவதோ ஒன்பதாவதோ படிச்சிக்கிட்டுருக்கேன். எங்கவூர் பள்ளிவாசல்லெ மெஹ்ராஜ் கூட்டம் நடந்துச்சு. மெயின் பேச்சாளர் ஒரு மௌலவி. நல்ல பேச்சாளர். நல்ல குரல் வளம் மிக்கவர். ‘நாம நெனச்சிக்கிட்டு இருக்கிறமாதிரி ஒரே ராத்திரியிலே மெஹ்ராஜ் போய்ட்டு வந்துடலே ரசூல் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்; அஹ போனது ஒரு ராத்திரிதான், ஆனா திரும்பிவரும்போது மூஸா (அலை) கேட்டாஹா , ‘அல்லா என்ன கொடுத்தான்?’னு. ‘அம்பது வக்து (நேரம்) தொழுகையெ கொடுத்தான்’னு ரசூலுல்லா சொன்னாஹ. ‘உங்க ஜனங்க தாங்க மாட்டாங்க; போய் கொறச்சிக்கிட்டு வாங்க’ன்னு மூஸா(அலை) சொன்னாஹா; ரசூலுல்லா போய் கொறச்சிக்கிட்டு வந்தாஹ; ‘எத்தினெ கொறச்சான் அல்லா?’ண்டு கேட்டதுக்கு ‘ஒரு வக்து கொறச்சான் அல்லா’ண்டு பதில் சொன்னாஹ; ‘இது பத்தாது , போங்க’ன்னு திருப்பி அனுப்பினாஹ; மறுபடியும் போய் ஒரு வக்து கொறச்சிக்கிட்டு வந்தாஹ, இப்படியா நாப்பத்தஞ்சு தடவை போய் கொறச்சிக்கிட்டு வந்தாஹா; ‘இதுவும் பத்தாது, போங்க’ன்னு சொன்னப்ப ‘எனக்கு வெக்கமா இருக்கு நான் போமாட்டேன்’னு அஞ்சு வக்தோடு வந்துட்டாஹ; ஆக , அஹலுக்கு வயசு 62 அல்ல 100. பாக்கி 38 வருசமும் மெஹ்ராஜ்லெ போய்ட்டு போய்ட்டு வந்ததுலெ ஆயிடுச்சு. நம்மலெ 38 வருஷம் தூங்கவச்சுட்டான் அல்லா.’ அப்டீன்னு ஒரு போடு போட்டார்! ஜனங்க வாயெ பொளந்துக்குட்டு கேட்டுக்கிட்டு இருந்தாங்க எனக்கோ தலைசுத்து வந்துடுச்சி. அப்பொ இன்னொரு பக்கத்திலெ பகலா இருந்திருக்குமே , அவங்கெல்லாம் முப்பெத்தெட்டு வருஷம் முளிச்சுக்கிட்டா இருந்தாங்கன்னு கேட்கத் தோணுச்சு, எதாச்சும் கேட்டா ‘இவ்ளோண்டு பய , என்னா பேச்சு பேசுறான்’டு அடிக்க வந்துடுவாங்கங்கிற பயத்துலெ சும்மா இருந்துட்டேன்.

உளறாட்டியம் 2

இது நடந்து பல வருசத்துக்குப் பிறகு , ஒரு இளம் வயசு ஆலிம்சா வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு முன் ஒரு பிரசங்கம் பண்ணினார் அதே மெஹ்ராஜைப் பற்றி பேசினார், ‘ரசூலுல்லா முதல் வானத்துக்குப் போகும்போது சிலர் கூப்புடுற சத்தம் கேட்டது, அருகிலிருந்த ஜிப்ரீல்(அலை) , ‘திரும்பிப் பார்க்காதீங்க’ என்றார்கள். திரும்பிப் பார்க்காமல் இரண்டாம் வானத்திற்குப் போனார்கள், அங்கேயும் கூப்பிடுகிற சத்தம் கேட்டது, அப்போதும் ஜிப்ரீல்(அலை) , ‘திரும்பிப் பார்க்காதீர்கள்’ என்று மீண்டும் சொன்னார்கள். இப்படியாக ஏழு வானங்களையும் கடந்து ‘அர்ஷ்’-இல் அல்லாவை ரசூலல்லா அவர்கள் சந்தித்தார்கள்.’ என்று இலக்கியத் தமிழில் இடையிடையே நல்ல கவிதைகளையும் இணைத்து சுமார் நாற்பது நிமிடங்கள் பேசினார். முடிவில் தாழ்ந்த குரலில் என் வயதான தாயாருக்கு வைத்தியம் செய்யவேண்டியுள்ளது என்று தொடங்கி தனது ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தொழுகை முடிந்து அவருக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்தேன். சிலரிடம் உதவிகள் பெற்றுக்கொண்டு வெளியே வந்ததும், ஆலிம்சா இங்கெ வாங்கன்னு கூப்பிட்டு கொஞ்சம் பணத்தை கொடுத்துட்டு, உதவி வேணும்னா கேளுங்க; ஆனா அதுக்காக மார்க்கத்தை வளைக்காதீங்க’ என்றேன்.

“ஏன், என்ன தப்பா பேசினேன்?”

“நீங்க பேசினது பூரா தப்பு. கவிதையெல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா , போனாங்க – வந்தாங்க – திரும்பி பாக்காதீங்கண்டு ஜிப்ரீல் அலை சொன்னாங்கண்டா என்ன அர்த்தம்? ரசூலுல்லா உங்களையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷர்ண்டு நெனச்சுக்கிட்டீங்களா?”

“ஆதாரத்தோடுதானெ பேசினேன்.”

“உங்களெ மாதிரி ஆலிம்சா எழுதின ஆதரமாக இருக்கலாம், ‘மெஹ்ராஜ்’ன்னா என்ன அர்த்தம்?”

“மேலே ஏறுதல்ன்னு அர்த்தம்.”

“நானும்தான் ஏறுவேன், இந்த மினாரா மேலே ஏறுன்னா ஏறுவேன். அதுவா அர்த்தம்?”

‘என்னை உட்டுத்தொலை’ என்கிறமாதிரி என்னை ஒரு மாதிரியாப் பார்த்தார். புரிந்து கொண்டேன். “சரிசரி விடுங்க , சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டதற்கு , “இல்லை , வேண்டாம் ; நான் அடுத்த ஊர் போகனும்” என்று ஆளைவிட்டா போதுமென்று போய் விட்டார்.

உளறாட்டியம் 3

சில வருஷத்துக்கு முந்தி என் ரூமில் தங்கிருந்தவர் ஒரு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார். தினமும் எடுத்துப் பார்த்துவிட்டு அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வைத்துக்கொள்வார். எதாவது சஸ்பென்ஸாக இருந்தா அதை பார்க்கத் தோணுவது இயல்புதானே,  அது என்னை சும்மா விடுமா? அதை வாங்கிப் பார்த்தேன். மெஹ்ராஜைப் பற்றியது ஆசிரியர் நாகூர் கமலப் பித்தன், ஒஷோ மாதிரி அவர் ஈஷோ. உள்ளே நல்லாத்தான் இருந்துச்சு ஆனா ஒரு பெரிய டர்னிங்க் பாயிண்ட் : ‘விண்வெளியில் ஒரு குதிரை போற அளவுக்கு ஒரு துளை இருக்கு. அந்த வழியாகத்தான் எல்லா ராக்கெட்டும் போவுது, அதுதான் ரசுலுல்லாஹ் ‘புராக்’கில் போன பாதை’ என்று ஒரு போடு போட்டிருந்தார்.

அதோடு புத்தகத்தை மூடிவச்சுட்டேன். நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரேயொரு தொளை! அதுக்குள்ளே போனது எதுவுமே திரும்பினதாக சரித்திரம் கிடையாது, போனது போனதுதான். வேறு ஒன்ணுமில்லெ… ‘ப்ளாக் ஹோல்.’!

இப்படி ஆளுக்காள் அவங்கவுங்க இஷ்டத்துக்கு எதையாவது சொல்லிட்டுப் போனா நாங்க எங்கேபோய் முட்டிக்கிறது?
எங்க ஹஜ்ரத்திடம் மிஃராஜைப் பத்தி கேட்டேன், விளக்கம் சொன்னாங்க:  “இறைவணக்கத்தின் வளர்ச்சியில் சில  படித்தரங்களை அடைய வேண்டியிருந்தது அப்போது மிஃராஜ் நடந்தது. ஏழு வானங்களைக் கடந்து அருஷில் அல்லாஹ்வை சந்தித்ததாக ஷரீஅத்தில் சொல்லப்படுகிறது. மனித நிலைக்கும் ஆண்டவனுடைய நிலைக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது.  ஒரு குயவனுக்கும் பானைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது. குயவன் எங்கோ இருக்கிறான் , பானை நம் வீட்டில் இருக்கிறது. ஆனால் இதிலுள்ள பெரிய நுணுக்கம் என்ன வென்றால் எவன் படைத்தானோ அவனுடைய ஒரு வித்து இவனிடம் இருக்கிறது என்று சூஃபியாக்கள் சொல்கிறார்கள்.

அந்த வித்து தன்னை தூய்மைப் படுத்த நாடுகிறது; எங்கிருந்து வந்ததோ அந்த நிலைக்கு உயர விரும்புகிறது. மேலே இருந்து கீழே வந்தவுடன் தூல உலகத்தில் கட்டுப்பட்டுப் போய்விட்டது. எனவே இங்கு பயிற்சி பண்ணுகிறது. பயிற்சி பண்ணப் பண்ண அந்த வித்து தூய்மைப் பெற்று , மூடியிருக்கும் குப்பைகளெல்லாம் நீங்கி மேலே போக ஆரம்பிக்கிறது. மேலே போகும்போது முதலில் ஒரு திரை வரும் அப்புறம் வேறொரு திரை வரும் இப்படி பல திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை, மறு திரை அறிவுத்திரை. அடுத்தது நினைப்பு/கர்வம் என்ற திரை. இப்படி ஒவ்வொரு திரையாக கிழித்தெரியப்படும்போது தான் யார் என்பது தெரியும். எந்த வினாடியில் அது தன்னைப் புரிந்துக்கொண்டதோ அந்த வினாடியில் அது ஆண்டவனை சந்தித்தது என்று அர்த்தம்.

நுபுவத் – நபித்துவம் பெற்ற பிறகு நபியாக வந்து பிரச்சாரம் பண்ணுகிற காலத்தில் எல்லைகளைக் தாண்டி, பல திரைகளைக் கடந்து போகும்போது தெய்வசக்தியை தனக்குத்தானாக சந்திக்கிறார்கள்; ஆண்டவனை நேராக சந்திக்கிறார்கள். இதுதான் மிஃராஜின் தத்துவம்.

மிஃராஜ் என்ற வார்த்தைக்கு ஏணி என்று அர்த்தம், ஏறிப்போகுதல் என்று பொருள். ஏறுதல் என்றால் சட உலகத்தில் ஒவ்வொரு படியாக கால்வைத்து ஏறுதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகுதல்; கீழ்த்தரமான மனிதக் கட்டுப்பாடு நிறைந்த சட உலகத்திலிருந்து சடமற்ற சூட்சம நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனைத் தடைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்பார்கள். ‘புராக்’ என்பது வாகனமல்ல. புராக் என்ற வார்த்தை பர்க் என்ற சொல்லின் மறுவு, பர்க் என்றால் மின்னல் என்று பொருள். இந்நிகழ்வு மின்னல் வேகத்தில் நடந்தது.

இதையெல்லாம் விட்டுபுட்டு மூசா அலைஹிசலாத்தைப் பார்த்தாஹா,  வாங்க புறாட்டா திண்ணுங்க  தேத்தண்ண்ணி குடிங்கன்னு சொன்னாஹான்னு சொல்றதெல்லாம் இந்த தாடிக்காரனுவ இறக்கிவிடுவது. அல்லாவும் மூசா(அலை)வும் ரசூலுல்லாவை வச்சுக்கிட்டு கண்ணாமூச்சியா வெளையாண்டாங்க? எவ்வளவு தத்துவார்த்தமுள்ள நிகழ்ச்சியை எப்படி அசிங்கப்படுத்துறாங்க? இதெ நீங்க சொன்னா காஃபிர்ன்னு முத்திரை குத்துவாங்க. என்னிடம் வரமாட்டாங்க, வந்தா மொத்திவிடுவேன்னு தெரியும்.”

சரி, ஆலிம்சாக்கள் ஆதாரம் காண்பிக்கும் ஹதீஸைத் தேடிப்பார்த்தபோது அதைவிட பெரிய ஆச்சரியம் காத்திருந்தது! ஒரு புத்தகம்.  Al-Lu’lu’wal-Marjan vol -1;  Compiled by: Fuwad Abdul Baqi;  Translated by: Dr. Muhammad Muhsin Khan, Islamic University, Al Madina Munawara; Published by Dar-us-Salam Publication – Riyadh KSA  pp95 to100 பக்கங்களில் மிஃராஜைப் பற்றி இரண்டு ஹதீஸ்களை எழுதியிருந்தார்கள். முதல் ஹதீஸில் (Bukari Vol 1. no345) . தொழுகையை பாதிப் பாதியாக அல்லாஹ் குறைத்தான் என்றும் இரண்டாவது ஹதீஸில் (Bukari Vol 4. no 429)  பத்துப் பத்தாகக் குறைத்தான் என்றும் எழுதியிருந்தது. இந்த இரண்டு ஹதீஸும் இரு வேறு கருத்துக்களைத் தருகிறது. ரசூல்(சல்) ஆளுக்கொரு மாதிரியாக சொல்லியிருக்கமாட்டார்கள். எங்கள் ஹஜ்ரத் , ஒரு முறை சொன்னார்கள். “ரசூலுல்லாஹ் பேசினார்கள் என்றால் ‘அது’ ‘இது’ ‘அப்படியல்ல’ ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று பேசவே மாட்டார்கள். அல்வாவைத் துண்டுபோடுவதுபோல் ‘கிரிஸ்டல் க்ளியராக’ இருக்கும். வார்த்தை சுத்தமாக ஆழ்ந்த இலக்கிய நயத்துடன் அழகாகப் பேசுவார்கள்.”

அப்போ எங்க ஜஃபருல்லாஹ் நானா சொன்னதும் சரியா இருக்கு: “நாப்பது நாப்பதஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு மீலாது கூட்டத்திலெ சொன்னேன், மிஹஃராஜில் மூசா(அலை)வை பார்த்தது உண்மை, ஈஸா(அலை)வைப் பார்த்தது உண்மை, ஆனல் திரும்பத்திரும்பப் போய் தொழுகையைக் குறைத்துக்கொண்டு வந்தார்கள் என்பது பொய். அல்லா குர்ஆன்லெ என்ன சொல்றான்? தொழுகை முடிஞ்சவுடன் உங்க வியாபாரத்தை நோக்கிச் செல்லுங்கள் என்று. மேலும் உங்கள் சக்திக்கு மீறியதை உங்கள்மீது சுமத்தமாட்டேன் என்கிறான் அப்படி இருக்கும்போது எப்படி ஐம்பது வக்து வரும்?

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திலெ நமக்கு கொடுக்கப்பட்ட நேரம், அதாவது ரிலாக்ஸான நேரம் எவ்வளவு? எட்டு மணி நேரம். அதாவது தூங்குகிற நேரம். இந்த நேரத்திலெ தொழுகை கிடையாது. பாக்கியுள்ள 16 மணி நேரம் உழைக்கிற நேரம். இதில்தான் தொழுகை இருக்கிறது. ஐம்பது வக்து தொழுகை வச்சா  நாள் பூராவும் அல்லாஹு அக்பராத்தான் இருக்கும். அப்புறம் வியாபாரத்தை எப்படி கவனிக்கிறது? விவசாயத்தை எப்படி பார்க்கிறது? குர்ஆன் வசனம் பொய்யாயிடுமே!

இரண்டாவது, மூசா(அலை) தூர்சினாமலைக்குப் போய்ட்டு வர்ரதுக்குள்ளெ அவனுவ காளைமாட்டைத் தூக்கிட்டானுவ; அவருக்கு அவருடைய உம்மத்தைப் பற்றி தெரியலெ; அடுத்து , “முஹம்மதே உங்கள் உம்மத்து தாங்கமாட்டார்கள்” என்று முஹம்மதிடமே சொன்னால் ரசூலுல்லாவுக்கு அவங்களுடைய உம்மத்தின் capacity, capabilityயைப் பற்றி தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

“இறைவா! என்னையும் முஹம்மதின் உம்மத்தில் ஒருவனாக சேர்த்துவை” என்று துஆ கேட்டிருக்காங்க. அப்படி இருக்கும்போது ரசுலுல்லாவின் உம்மத்தை அவங்களுக்கு எப்படிங்க தெரியும்? என்ன கதைன்னா, ரசூலுல்லா மெஹ்ராஜ் போய்ட்டு வந்தது உண்மையாயிடுச்சு. நபித்துவமும் முடிஞ்சிடுச்சு; குர்ஆனும் பூரணமாயிடுச்சு. பின்னால்தானே ஹதீஸ் எழுதப்பட்டது. எப்போ எழுதினாங்க? இமாம் புகாரி(ரஹ்) காலத்திலெ பி’ரில்லியண்ட்’டான யஹூதிகள் இருந்திருப்பாங்கல்ல – இப்பொ இருக்கிறமாதிரி. அவங்க மூசா நபியை முன்னாள் கொண்டுவரனும்னு ஒரு சூழ்ச்சி பண்ணியிருப்பானுவ. எங்க நபி இருந்ததுனாலெத்தான் அஞ்சு வக்து தொழுகை கிடைச்சது இல்லேன்னா அம்பதாயிருக்கும்னு கதையைக் கட்டிவிட்டுட்டாங்க. அதாவது , மூசா நபியைப் பார்த்தார்கள் என்ற உண்மையின் மேல் ஒரு பொய்யை வைத்திருக்கிறார்கள்.  இதை நம்ம ஆலிம்சாக்கள் தூக்கிவச்சுக்கிட்டு சொல்லிக்கிட்டு இருக்காங்க.”

ஆக மொத்தத்தில் ஆழமான செய்திகள் உள்ள மிஃராஜை சாதாரண செய்தியாக்கி  இடைச்செருகல்களைக் கொண்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள். என்ன செய்வது? நம் தலையெழுத்து! யாரால் மாற்றமுடியும்? 

**

நன்றி : ஹமீது ஜாஃபர்