‘மஸ்னவி’ கதைகள் – ஜலாலுத்தீன் ரூமி

rumi.jpg 

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி

தமிழில் : நாகூர் ரூமி | முன்னுரை

கதை 01 – அலீ தந்த ஒளி

அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன். நபிகள் நாயகத்தின் மகளார் ·பாத்திமா(ரலி)யின் கணவராவார். இஸ்லாமியக் குடியரசின் நான்காவது கலீ·பா (ஆட்சித்தலைவர்) ஆவார். முதன்முதலில் முஸ்லிமான சிறுவர் என்ற புகழும் இவருக்கு உண்டு. அலீக்கு இரண்டு சிறப்புகளுண்டு. ஒன்று வீரம். அலீ என்றால் வீரம். வீரம் என்றால் அலீ என்று சொல்கின்ற அளவுக்கு அவருடைய வீரம் இருந்தது. உலக ஹெவிவெய்ட் சாம்பியன் காஸியஸ் கிளேகூட முஸ்லிமான பிறகு தனது பெயரை முஹம்மது அலீ என்று வைத்துக்கொண்டதை நாமறிவோம். வெற்றி வேண்டும் என்று விரும்புகின்ற வீரர்கள் “யா அலீ” என்று களமிறங்குவது வழக்கம்.

அலீயின் இன்னொரு சிறப்பு ஆன்மீகம். “நான் ஞானத்தின் கோட்டையென்றால் அலீ அதன் தலைவாசல்” என்பது நபிமொழி. இன்று உலகிலுள்ள ஆன்மீகப்பாதைகள் அனைத்தும் அலீயிடமிருந்து துவங்குகிறது என்பதுதான் அனேக வரலாற்று அறிஞர்களின் கருத்து. இது உண்மையா இல்லையா அல்லது எந்த அளவுக்கு உண்மை என்பது இப்போது முக்கியமல்ல. ஞானக்கோட்டையின் தலைவாசலாக இருந்த அலீயிடம் இருந்த ஆன்மீகப்பரிமாணம் பரிபூரணமானது என்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்துகொள்ள முடியும்.

அவருடைய பொன்மொழிகளை சிந்திப்பவர்களுக்கு இந்த உண்மை பளிச்செனப் புரியும். சாதாரணமான வார்த்தைகளில்கூட ஒரு ஆழமிருக்கும். “உனக்குத் தெரியாத எதையும் பேசாதே. தெரிந்ததையெல்லாமும் பேசிவிடாதே” என்பது அவற்றில் ஒன்று!

இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பல போர்களின் அவர் பங்கெடுத்துக்கொண்டார். அதில் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான் ரூமி சொல்லும் பின்வரும் கதை :

ஒரு முறை வீரர் அலீ ஒரு போரில் நெருப்பை வணங்கும் ஒருவனை நோக்கித் தன் வாளை ஓங்கினார்கள். அப்போதுதான் அவன் யாருமே எதிர்பாராத அதிர்ச்சிதரக்கூடிய அந்தக்காரியத்தைச் செய்தான்.

அலீயின் முகத்தில் காரி உமிழ்ந்தான் !

எந்த முகத்துக்கு நிலவு தன் தலைதாழ்த்தி மரியாதை செலுத்தியதோ அந்த முகத்தில். எந்த முகம் எல்லா தீர்க்கதரிசிகள் மற்றும் இறைநேசர்களின் பெருமையாக விளங்கியதோ அந்த முகத்தில்.

உடனே அலீ அவனைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, ஓங்கிய வாளைத்தாழ்த்தி, தன்னைத் தளர்த்திக் கொண்டார்கள்.

இந்த செயல் எதிரிக்கு வியப்பளித்தது. இப்படிப்பட்ட நேரத்தில் கருணையும் மன்னிப்புமா? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்னோடு சண்டை போடுவதைவிட சிறந்ததாக எதைக்கண்டீர்கள்? உங்கள் கோபம் மாயமாய் மறைந்துவிட்டதே! என்னதான் அப்படிக்கண்டீர்கள்? நீங்கள் கண்டதன் பிரதிபலிப்பு என் இதயத்திலும் ஆன்மாவிலும் ஓர் ஜுவாலையைத் தூண்டிவிட்டதே!

“இருப்பையும் வெளியையும் உயிரையும்விட மேலாக எதைக்கண்டீர்கள்? எனக்கு உயிர் கொடுத்துவிட்டீர்களே! வீரத்தில் நீங்கள் ஆண்டவனின் அரிமா! தாராளத்தில்? யாரறிவார் !”

பாலவனத்தில் தோன்றிய மூஸாவின்(மோஸஸ்) மேகத்தைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். அது அவரின் மக்களுக்கு தன் கருணையின் சிறகுகளை விரித்தது. சமைத்த உணவை நாற்பது ஆண்டுகளுக்கு மழையைப்போல பெய்தது. தங்கள் சிறுமையின் பொருட்டு அம்மக்கள் பலவகையான உணவுவகைகளைக் கேட்காதவரை.

ஆனால் முஹம்மதின் மக்களாகிய உங்களுக்கு தீர்ப்புநாள்வரை உணவு வந்துகொண்டிருக்கும். ‘என்னுடைய நாயனோடு நான் என் இரவைக் கழிக்கிறேன். உண்ணவும் குடிக்கவும் எனக்கு அவனே தருகிறான்’ என்று முஹம்மது நபி மொழிந்தது விளக்கங்கள் தேவைப்படும் அர்த்தத்தில் அல்ல.

விளக்கம் என்பது அன்பளிப்பை மறுப்பது. உங்கள் புரிந்துகொள்ளலில் உள்ள பலஹீனத்தில் உண்டாவதுதான் உங்கள் விளக்கமெல்லாம். நம்முடைய அறிவென்பது மேல்தோல். உள்ளிருப்பதுதான் இறைவனுடையது. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஹதீதுகளை(நபிமொழியை) மாற்றாதீர்கள். உங்கள் மகத்தான மூளையைக் குறை கூறிக்கொள்ளுங்கள். ரோஜாத்தோட்டத்தை (புரிந்துகொள்ளாத உண்மைகளை) அல்ல.

“அலீயே நீங்கள் கண்டது என்ன என்று கொஞ்சமாவது கூறுங்கள். உங்கள் பொறுமையின் வாள் என் ஆத்மாவைக் கிழித்துவிட்டது. உங்கள் ஞானத்தின் நீரோ எனது நிலத்தைத் தூய்மைப்படுத்திவிட்டது.

“சொல்லிவிடுங்கள். எனக்குத் தெரியும். இது இறைவனின் மர்மங்களில் ஒன்றுதான். ஏனெனில் வாளின்றிக் கொல்ல அவனால்தான் முடியும். கருவிகளும் கைகளும் இல்லாமல் காரியங்கள் முடிப்பவன் அவன்தான். அருகில் நிற்பவர் விழிகளெல்லாம் முத்திரையிடப் பட்டிருக்கும்போது உங்கள் கண்கள் மட்டும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாததை புரிந்துகொண்டு விட்டன.

“ஒரு மனிதன் நிலவை தெளிவாகக் காண்கிறான். இன்னொருவனுக்கோ இந்த பிரபஞ்சமே இருள் மயமாக உள்ளது. இன்னொருவனோ மூன்று நிலவுகளை காண்கிறான். தனது போதையில்.

“ஆனால் இந்த மூவருமே ஒரே இடத்தில் அமர்ந்துதான் இந்த மூன்று விதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.

“இதென்ன கண்கட்டுவித்தையா? மறைமுகமான அருளா? உங்கள்மீது ஒநாயின் தோற்றமும் என் மீது யூசு·பின் அழகும் மிளிர்கின்றதே?

“ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலீயே! ரகசியம் என்னவென சொல்லுங்கள். உங்கள் ஞானத்தில் நீங்கள்கண்டதைச் சொல்கிறீர்களா? அல்லது என்னிடமிருந்து வெளிப்படுவதை நான் காட்டட்டுமா?

“உங்களிடமிருந்து ஒளிர்ந்து என்மீது பட்டதுதான் அது. அதை நீங்கள் எப்படி மறைக்க முடியும்? வார்த்தைகள் ஏதுமின்றி ஒளிக்கதிர்களை என்னை நோக்கி நீங்கள் பாய்ச்சிக்கொண்டிருக்கிறீர்கள். நிலவைப்போல. கருணை சூரியனே! ஞானக்கோட்டையின் தலைவாசலே! திறவுங்கள் உங்கள் கதவுகளை, இந்த தட்டுபவனுக்காக.

“அஜாக்கிரதையான ஒரு மனிதன் திடீரென ஒரு நாள் இடிபாடுகளுக்குக் கீழே பொக்கிஷம் ஒன்றைக் கண்டான். அன்றிலிருந்து அவன் இடிபாடு ஒவ்வொன்றையும் ஆராய ஆரம்பித்தான்.

“நம்பிக்கையாளர்களின் தலைவரே! பேசுங்கள். கருவறையினுள் உள்ள உயிரைப்போல என் உடம்புக்குள் என் ஆத்மா அசையட்டும். நட்சத்திரங்களின் ளுகைக்கு உட்பட்டிருக்கையில் அது எப்படி அசையும்? சூரியனை (இறைவனை) நோக்கியே அது திரும்புகிறது. சூரியனின் பொருட்டே அதற்குள் உயிர் ஊதப்படுகிறது.

“கருவறையினுள் உள்ள உயிருக்கும் சூரியனுக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது? நமது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட மர்மமான முறையில் விண்ணில் உள்ள சூரியனுக்கு வழிகள் ஆயிரம் உண்டு.

“கரி எப்படி வைரமாகிறது? பவழம் எப்படி சிவப்பாகிறது? குதிரை லாடத்திற்கு மின்னல் ஒளி எப்படி வருகிறது? பழம் எப்படிப் பழுக்கிறது? பயந்தவனுக்கு தைரியம் எப்படிப் பிறக்கிறது? அப்படித்தான். கூறுங்கள் அலீயே” என்று வேண்டினான் காரி உமிழ்ந்த அவநம்பிக்கையாளன்.

அலீ சொன்னார்கள் :

“நான் இறைவனுக்காகத்தான் எனது வாளை உயர்த்துகிறேன். நான் இறைவனின் வேலைக்காரன். என் உடம்பின் கட்டளைகளுக்கு நான் அடிபணிவதில்லை.

“நான் இறைவனின் சிங்கம். உணர்ச்சிகளின் சிங்கமல்ல. நான் செய்கின்ற காரியங்கள் யாவும் என் மார்க்கத்திற்கு சாட்சி பகர்வனவாக உள்ளன.

“நீ எறியும்போது உண்மையில் நீ எறியவில்லை என்ற இறைவசனத்தின் விளக்கமாகத்தான் எனது போர்கள் அமைகின்றன. நான் ஒரு வாள் மட்டுமே. என்னை வீசுவது இறைவனே.

“நான் எனும் சுமை மூட்டையை இறக்கிவைத்துவிட்டேன் நான். அல்லாஹ் அல்லாததையெல்லாம் இல்லாததாக நான் அறிகிறேன்.

“நான் ஒரு நிழல். இறைவனே எனது நிஜம். அவனை மறைக்கும் திரையல்ல நான். இணைப்பாகிய முத்துக்குள் கோர்க்கப்பட்ட போர்வாள்போல் நான் உள்ளேன். போரில் நான் மனிதர்களைக் கொல்லுவதில்லை. மாறாக, வாழ வைக்கிறேன். எனது வாளின் உறைமீது ரத்தக்கறை படிவதில்லை.

“எனது மேகங்களைக் காற்று எப்படிக் கலைக்கமுடியும்? நான் வைக்கோலல்ல. பொறுமையிலும் நீதியிலும் நான் மலை. காற்றால் மலையைப் பெயர்க்க முடியுமா? முடியுமெனில் அது குப்பைதான்.

“காற்றிலும் பலவகை உண்டு. கோபக்காற்று. காமக்காற்று. பேராசைக்காற்று என. நான் வைக்கோல் எனில் அடிக்கும் காற்று இறைவனாக இருக்கும். அவன்மீது நான் கொண்டுள்ள அன்புதான் என்னைச் செலுத்தும் மாலுமி.

“சினம் எனக்கு அடிமை. நான் அதற்குக் கடிவாளம் போட்டுவிட்டேன். எனது சுய கட்டுப்பாட்டின் வாள் எனது கோபத்தின் கழுத்தைத் துண்டித்துவிட்டது.

“இறைவனின் கோபம் என்மீது கருணையைப்போல இறங்கிவிட்டது. எனது கூரை வீழ்ந்துவிட்டாலும் நான் ஒளியில் மூழ்குகிறேன்.

“இறைவன் அல்லாத ஒன்றைப்பற்றிய சிந்தனை எனக்குள் புகுந்ததனால் நான் வாளை உறைக்குள் போடவேண்டியதாகிவிட்டது.

“இறைவனுக்காகவே விரும்புகிறார் என்பது என் பெயராகட்டும். இறைவனுக்காகவே வெறுக்கிறார் என்பது என் ஆசையாகட்டும். இறைவனுக்காகவே கொடுக்கிறார் என்பது என் வள்ளல்தன்மையாகட்டும். இறைவனுக்காகவே கொடுப்பதில்லை என்பது என் இருப்பாகட்டும்.

“என் கஞ்சத்தனமும் ஹாதிம்தாய்த்தனமும் இறைவனுக்காகவே. நான் முற்றிலும் அவனுடையவனாகவே உள்ளேன். என் எல்லாச் செயல்களும் அவனுக்காகவும் (அவன் தரும் உதிப்பாகிய) இல்ஹாமுக்காகவும்தான். முயற்சியிலிருந்தும் தேடுவதிலிருந்தும் நான் விடுதலை பெற்றுவிட்டேன். எனது சட்டையை அல்லாஹ்வுடையதோடு சேர்த்து நான் கட்டிவிட்டேன்.

“எதை நோக்கிப் பறக்கிறேன், எதைச் சுற்றிச் சுழல்கிறேன், என் சுமையை எங்கே இழுத்துக்கொண்டு போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் நிலவு. எனக்கு எதிரில் வழிகாட்டச் சூரியன் உண்டு.

“இதற்குமேல் மக்களுக்குப் புரியும்படி என்னால் சொல்ல இயலாது. ஆற்றுக்குள்ளே கடலைப் புகுத்த முடியாது. கேட்பவரின் தகுதிக்கேற்ப நான் கீழிறங்கிப் போகிறேன். இதில் தவறில்லை. இது பெருமானாரின் வழிமுறையுமாகும்.

“இறைவனின் கருணையானது அவனது கோபத்தை மிகைப்பதாகும். ‘யாஹ¥’ என்ற தோட்டத்தில் ரோஜாவாக மலர வா நண்பனே! நான்தான் நீ. நீதான் நான். அலீயே எப்படி அலீயைக் கொல்லமுடியும்?

“நீ செய்த ஒரு பாவகாரியம் பல புண்ணிய காரியங்களைவிட சிறப்பானதாகிவிட்டது. முள்ளிலிலிருந்து ரோஜா மலர்வதில்லையா? உமர் செய்யத்துணிந்த பாவம்தானே அவரை நம்பிக்கையின் பக்கம் இழுத்து வந்தது !

“வா, என் முகத்தில் நீ காறித்துப்பினாய். நான் என் கதவுகளை உனக்காகத் திறக்கிறேன். உனக்கொரு பரிசு தருகிறேன். நான் தரும் பொக்கிஷங்களும் ராஜ்ஜியங்களும் நிரந்தரமானவை. கெட்டதை நல்லதாக்கும் வல்லமை இறைவனுடையதே. என்னைக்கொல்ல நினைத்தவன்மீதுகூட எனது அன்பின் தேன் விஷமாகவில்லை. என்னிடம் வேலைபார்த்த அவனே ஒரு நாள் என்னைக்கொல்வான் என அவன் காதில் பெருமானார் சொன்னார்கள்.

“என் முடிவு அவன் கையால் இருக்கும் என்ற இறைச்செய்தியைத்தான் அவர்கள் அறிவித்தார்கள். என்னை கொன்றுவிடுங்கள். அலீயைக் கொன்ற பாவம் என்மீது விழவேண்டாம் என்று அவன் கெஞ்சினான்.

“என் மரணம் உன்மூலம் வரவேண்டும் என்ற இறைவிதியை நான் எப்படி மீறுவது? இறைவனின் பேனா உலர்ந்துவிட்டது. நான் உன்னை வெறுக்கவில்லை. இது நீ செய்யப்போகும் காரியம் என்று நான் நினைக்கவில்லை. நீ ஒரு கருவிதான். இறைவனுடைய கைதான் என்னைக் கொல்லும் என்றேன் நான்.

“ஆனால் பதிலுக்கு பதில் கொடுக்கலாம் என்று இறைவனே தந்த சட்டம் உள்ளதே என்றான் அவன்.

“அதுவும் இறைவனின் மர்மங்களில் ஒன்றுதான். அவனுடைய கருவியை அவனே உடைப்பான். அவனே பழுதுபார்ப்பான். சட்டம் தருவான். அதைத் தூக்கியும் எறிவான். வைக்கோல் தருவான். பிறகு அதைப்பிடுங்கிக் கொண்டான் எனில், அதற்குப் பதில் ரோஜாக்களைத் தருவான்.

“பகலை இல்லாமலாக்குகிறது இரவு. மறுபடியும் பகலின் ஒளி இரவை விரட்டுகிறது. பெருமானார் புரிந்த போர்களெல்லாம் அமைதியை விதைக்கவில்லையா? அனுபவசாலி, தனது தோட்டத்தின் நன்மைக்காக அவ்வப்போது களையெடுத்துக்கொண்டே இருப்பான்.

“மருத்துவன் பல் பிடுங்கும்போது வலிக்கத்தான் செய்யும். ஆனால் அந்த வலிதான் ரோக்கிய வாழ்வுக்கு வழி. குறைகளில் எத்தனையோ நிறைகள் உண்டு. தியாகிகளுக்கு மரணம் நித்திய வாழ்வு தருகிறது.

“அனுமதிக்கப்பட்ட மிருகத்தின் கழுத்தை சட்டப்படி அறுத்து உணவாக்கும்போது அது உண்பவனின் கழுத்துக்கு நன்மை செய்கிறது. அப்படியெனில், ஒரு தியாகியின் கழுத்து அறுபடும்போது என்ன நடக்கும்? இன்னொரு கழுத்து உண்டாகும். அதை இறைவனின் ஷர்பத்தும் ஒளியும் கவனித்துக்கொள்ளும்.

“நண்பரே ! உடைக்கவும், உடைத்ததை ஒட்டவும், கிழிக்கவும், கிழித்ததைத் தைக்கவும் அவனுக்குத் தெரியும். ஒரு தலையைக் கொய்தால் பதிலாக யிரம் தலைகளை அவன் தருவான். கொல்பவரெல்லாம் இறைவிதிப்படியே கொல்கிறார். யாருடைய கண்களை இறைவன் திறந்துவிட்டானோ அவர்களுக்கு இது புரியும்.

“இறப்பென்பது இறவாமைக்குள் நுழைவது. மேலே சாவாகவும் அடியில் வாழ்வாகவும் உள்ளது அது. எனது சாவே எனது வாழ்வு. இறைவா, எவ்வளவு காலம்தான் எனது வீட்டைப் பிரிந்திருப்பது? இறைவனை விட்டு நாம் பிரிந்திருக்கிறோம் என்பது பொய் எனில், நிச்சயமாக நாம் அவனளவில் திரும்பிச் செல்பவராக இருக்கிறோம் என்ற இறைவசனம் ஏன்?

“நீ என் முகத்தில் துப்பியபோது என் உணர்ச்சிகள் தூண்டப்பட்டன. என் மனம் கெட்டது. நான் வாளை ஓங்கியபோது அது பாதி இறைவனுக்காகவும் பாதி எனக்காகவும் அமைந்து போனது. இறைவனுடைய அலுவல்களில் பங்காளிகள் பாகத்தாளிகள் ஏது?

“எனவே காதலி வீட்டு ஜன்னலில் கல்லெறிவதானாலும் அது அவள் கொடுத்த கல்லாக இருக்கட்டும்.”

அலீயின் இந்த பதிலைக்கேட்டதும் எச்சில் உமிழ்ந்தவனின் இதயத்தில் ஏகத்துவத்தின் ஒளி பிறந்தது. தனது பழைய மார்க்கச் சடங்கான இடுப்புநூலை அறுத்து எறிந்தான். தீயை வணங்கியவன் தீனுக்கு வந்தான்.

மனம் வருந்தி, திருந்தி, அப்போதே முஸ்லிமானான். அவனோடு சேர்ந்து ஐம்பது பேருக்குமேல் அவன் உறவினர்களும் ஏகத்துவத்தில் இணைந்தனர்.

அலீயின் கருணையின் வாள் இரும்பு வாளைவிடக் கூர்மையானதாக இருந்தது. நாம் விரும்புவதைக் கொண்டுவருவது பொறுமைதான். அவசரமல்ல. பொறுமையாக இருங்கள். எது சரி என்பதை இறைவன் அறிவான்.

விளக்கக் குறிப்புகள் :பெருமானார் — நபிகள் நாயகம்
மூஸா — மோஸஸ்
தீன் — மார்க்கம், இஸ்லாம்
யூசு·ப் — தீர்க்கதரிசிகளிலேயே மிக அழகானவர்
யாஹ¥ — அரபியில் “ஓ அவனே” என்று பொருள். இறைவனைக் குறிக்கும்
உமர் — நபிகள் நாயகத்தின் உற்ற தோழரும், மாமனாரும், இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீ·பாவுமான உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தார்கள். நபிகள் நாயகத்தை வெட்டுவதற்காக வாளேந்திச் சென்ற அவர்கள் திருக்குர்னை தனது சகோதரி ஓதிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு அதன்பின்பு இஸ்லாத்தில் இணைந்த வரலாறு சுவையானது.
இல்ஹாம் — இறையுதிப்பு
***

கதை — 02 நோயுற்ற சிரியர்

ஒரு பள்ளியில் ஓதிக்கொண்டிருந்த மாணவர்கள் ஆசிரியரின் கண்டிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடின உழைப்பும் அதன் விளைவான களைப்பும் அவர்களை விடுதலையை நோக்கிச் சிந்திக்க வைத்தது. தங்கள் ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வு கொடுப்பது எப்படி என்று யோசித்தனர்.

“ஆசிரியருக்கு எந்த வியாதியும் வரவில்லையே…, வந்தாலாவது சில நாட்களுக்கு ஓய்வெடுப்பார். அப்படி எடுத்தால் அந்த சில நாட்களுக்காவது இந்தப்பள்ளி விடுமுறை பெறலாம். பாறையைப் போலல்லவா ஆசிரியர் அசையாது உள்ளார்!” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“ஹஜ்ரத், ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? உங்கள் நிறம்கூட வெளுத்துள்ளதே! உடம்பு சரியில்லையா? காய்ச்சல் மாதிரி உள்ளதே!” என்று கேட்க வேண்டும். தனக்கு உடம்பு சரியில்லை என்ற எண்ணம் ஆசிரியருக்கு லேசாகத் தோன்றும். நீங்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனித்தனியாகச் சந்தித்து இதேபோல் கேட்கவேண்டும். அப்போதுதான் நோய் பற்றிய அவருடைய கற்பனை வலுவடையும். கற்பனையானது எத்தனைக்கூட பித்தனாக்கிவிடும். நீங்கள் இப்படிச் செய்தால் விடுமுறை கிடைக்கலாம். உதவுங்கள்” என்று ஒரு மாணவன் சக மாணவர்களிடம் தன் திட்டத்தை எடுத்துரைத்தான். ஆட்டைக் கழுதையாக்கும் அந்தத் திட்டத்திற்கு தாங்களும் தங்கள் பங்களிப்பைச் செய்வதாக அவர்களும் வாக்களித்தனர்.

மறுநாள் மாணவர்கள் தங்கள் திட்டப்படி பள்ளிக்கு வந்தனர். தங்கள் தலைவன் முதலில் உள்ளே போகட்டும் என்று காத்திருந்தனர். தலைதானே காலுக்கு இமாம்?

இமாம் — தலைவர், தொழுகையை முன்னின்று நடத்துபவர்.

தலைவன் உள்ளே சென்றான்.

“அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். உங்கள் முகம் மஞ்சளாக உள்ளதே? உடம்புக்கு ஏதாவது?” என்று இழுத்தான்.

“என் உடம்புக்கு ஒன்றுமில்லை. உளறாமல் போய் உன்னிடத்தில் உட்கார்” என்றார் ஆசிரியர்.

அடுத்தவன் வந்தான். அதேபோல் விசாரித்தான். ஆசிரியருக்கு லேசான சந்தேகம் வந்தது. ஒவ்வொருவராக வந்து விசாரிக்க ஆரம்பித்ததும் அவரது சந்தேகம் பழுத்தது.

·பிர்அவ்ன் கூட இப்படிப்பட்ட கற்பனையால்தான் மன ஆரோக்கியத்தை இழந்தான். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் அவன் காலில் விழுந்து, “அரசனே! எங்களை ரட்சிப்பவனே!” என்றெல்லாம் சொன்னதும் தன்னை உண்மையிலேயே ஆண்டவன் என்று எண்ணிக்கொண்டான். இப்படிப்பட்ட கற்பனையின் பிறப்பிடம் இருளாகும்.

அரையடிதான் அகலமுள்ளது என்றாலும் பாதை தரையில் இருந்தால் அதில் நீங்கள் நடந்துபோக தயங்கமாட்டீர்கள். ஆனால் அதே பாதை உயரமான ஒரு சுவற்றின் மேலே ஆறடிக்கு அமைந்திருந்தாலும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் உங்கள் கால்கள் தடுமாறும். பயம் என்பது கற்பனையின் குழந்தை.

கற்பனையாலும் அதன் குழந்தையாலும் ஆசிரியர் கலக்கமுற்றார். வீட்டுக்கு வந்து மனைவியைத் திட்டினார்.

“பள்ளியைவிட்டு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்களே?” என்றாள் மனைவி.

“உனக்கென்ன கண் பொட்டையா? என் நிறம் மாறியிருப்பதுகூடத் தெரியவில்லையா? ஆமாம், அன்பும் அக்கறையும் இருந்தால்தானே தெரியும்?”

“உங்கள் உடம்புக்கு ஒன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்கிறீர்கள். வீணாக எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்”

“என்னோடு வாதம் பண்ணுகிறாயா? என் நிலை உனக்குத் தெரியவில்லயா? நீ குருடாகவும் செவிடாகவும் ஆகிவிட்டாய், நான் என்ன செய்ய?”

“நான் வேண்டுமானால் கண்ணாடி கொண்டு வருகிறேன். நான் பொய்சொல்லவில்லை என்பது அதைப்பார்த்தால் புரியும்” என்றாள்.

“இங்கிருந்து தொலைந்து போ. நீயும் உன் கண்ணாடியும். படுக்கையைப்போடு. தலைவலிக்கிறது. கொஞ்சம் சாய வேண்டும்” என்று உத்தரவிட்டார் ஆசிரியர்.

தயக்கத்தோடு, திட்டு வாங்கிக்கொண்டே, அவர் சொன்னதைச் செய்தாள் மனைவி. ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்த மாணவர்கள் அங்கேயே அமர்ந்து தங்கள் பாடங்களை உரத்த குரலில் படிக்களாயினர். அவர்களுடைய சப்தம் தனது தலைவலியை அதிகமாக்கி விட்டதாகக் கூறி அவர்களை வீட்டுக்குப் போகச்சொனார் ஆசிரியர். தங்கள் திட்டம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் பறந்தனர் மாணவர்.

தங்கள் பிள்ளைகள் சொன்னதை நம்பாத தாய்மார்கள் தாங்களே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.

“ஆமாம் நானே கவனிக்கவில்லை. சொல்லித் தருவதிலேயே என் முழு கவனமும் இருந்ததால் எனக்கே தெரியவில்லை. மாணவர்கள்தான் கவனித்துச் சொன்னார்கள்” என்றார் ஆசிரியர்.

ஒரு மனிதனின் மனசு முழுவதும் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கும்போது தன் உடம்பில் ஏற்படும் வலியை அவன் உணர்வதில்லை. அதனால்தான் யூசு·ப் நபியின் அழகைக் கண்டு மயங்கிய பெண்கள் தங்கள் விரல்களை வெட்டிக்கொண்டபோது வலியை உடனே உணரவில்லை.

உடம்பு என்பது ஆடையைப் போன்றது. ஆடையை விட்டுவிட்டு அதை அணிந்ததிருப்பவனைத் தேடு. இதற்காகத்தான் இந்த கதையைச் சொன்னேன்.

***

ஞான குரு – கதை — 03

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு ஞானகுருவின் அருமைபெருமைகளைப் பற்றி பின்வருமாறு உபதேசித்தார்கள்.

“அலீயே ! நீங்கள் அல்லாஹ்வின் அரிமா! துணிச்சலான வீரர். ஆனால் அதற்காக உங்கள் சிங்க மனத்தை நம்பியிருக்க வேண்டாம். நம்பிக்கை எனும் ஈச்சமர நிழலில் ஒதுங்கிவிடுங்கள். ஞானகுருவின் நிழலெனும் பாதுகாப்புக்குள் வந்துவிடுங்கள். அதன் பின் நேரான பாதையில் செல்வதிலிருந்து உங்களை யாரும் தடுக்க முடியாது.

“ஞானகுருவின் குணாம்சங்களைப் பற்றி நான் பேசவேண்டுமெனில், இறுதித் தீர்ப்பு நாள் வந்தாலும் முடிக்க முடியாது. தெய்வீகச் சூரியன் தன்னை மனிதனிலே மறைத்துக்கொண்டான். இந்த மர்மத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எது சரி எது தவறு என்பதைப் பொறுத்த மட்டில் இறைவனே போதுமானவன்.

“அலீயே ! பக்தியான செயல்பாடுகள் ஆயிரமாயிரம் உண்டு. ஆனால் அவற்றில் இறைவனின் அடிமைச் சேவகனாகிய ஞானகுருவின் நிழலை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

“ஏதாகிலும் ஒரு பக்தியான செயல்பாட்டில் ஈடுபட்டு மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். நீங்கள் குருவின் நிழலில் அடைக்கலம் தேடுங்கள். அப்போதுதான் உங்களுக்கே தெரியாத உங்களின் ரகசிய எதிரிகளிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

“குருவானவர் உங்களை ஏற்றுக்கொண்டபின், அவரிடம் முழுமையாக உங்களை ஒப்படைத்துவிடுங்கள். ஹில்ர் அவர்களிடம் மூஸா தன்னை ஒப்படைத்ததுபோல. ஹில்ர் சொல்வதையெல்லாம், செய்வதையெல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் கோபப்பட்டு, “போதும், இதுவே நமது பிரிவு” என்று சொல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

“அவர் படகைக் கவிழ்த்தாலும் சரி, குழந்தையைக் கொன்றாலும் சரி, ஒரு வார்த்தையும் பேசவேண்டாம். அவர்களுடைய கைக்கு மேலே இருப்பது தனதுகைதான் என்று இறைவன் சொன்னான். ஞானகுருவின் கையானது தனது கைதான் என்றும் அவன் அறிவித்துள்ளான்.

“இறைவனுடைய கை குழந்தையைக் கொன்றால், மறுபடியும் அதற்கு உயிர் கொடுக்கும் அது. உயிர் என்பது என்றைக்குமே அழியாத ஒன்றுதானே?

“குருவின்றி, யாராவதொருவர், அரிதாக, சரியான பாதையில் பயணம் செய்வாராகில், அதற்கும் பல ஞானகுருக்களின் இதயங்களின் கருணைதான் காரணம். சிஷ்யர்களாக இல்லாதவருக்கே ஞானகுரு இவ்வளவு கண்ணியம் செய்வாராகில், நேரடியான மாணாக்கர்களைப் பற்றி நான் என்ன சொல்ல? தங்கள் மாணாக்கர் குழுவில் இல்லாதவர்களுக்கும் ஞானகுருவானவர் ஆன்மீக உணவளிக்கையில், இருக்கும் சிஷ்யர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன?

“குரு தரும் ஒவ்வொரு வேதனையும் தங்கத்தைப் புடம் போடுவதைப் போன்றதாகும். கண்ணாடியைத் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்துவதைப் போல. இல்லையெனில் உங்களிடம் எப்படித் தெளிவு வரும்?”

இவ்வாறாக ஞானக்கோட்டையின் தலைவாசலாகிய அலீ அவர்களுக்கு ஞானக்கோட்டையாகிய பெருமானார் குருவின் அவசியத்தையும் சிறப்புக்களையும் பற்றி எடுத்துரைத்தார்கள்.

கஸ்வின் என்ற ஊர் மக்களிடையே ஒரு பழக்கமிருந்தது. தங்கள் உடம்பு முழுவதிலும், குறிப்பாக கைகளிலும் தோள்களிலும், நீல நிறத்தில் அவர்கள் பச்சை குத்திக்கொள்வார்கள். வேறு காயங்களின் வேதனை தாக்காமலிருக்க!

ஒரு நாள் அந்த ஊர்க்காரன் ஒருவன் பச்சை குத்திக்கொள்ளச் சென்றான்.

“அழகாக கலை நுணுக்கத்தோடு எனக்கு பச்சை குத்திவிடு” என்றான்.

“வீரனே, எந்த உருவத்தை நான் உன்மீது பச்சை குத்த வேண்டும்?” என்று பச்சை குத்துபவன் கேட்டான்.

“ஆக்ரோஷமான சிங்கம் ஒன்றை உருவாக்கு. எனது ராசியும் சிம்மம்தான். நீல நிறம் நன்கு தூக்கலாக இருக்கட்டும்” என்றான் வீரன்.

“எந்த இடத்தில் குத்த வேண்டும்?”

“தோளின்மீது சிங்கத்தின் கம்பீரத்தை எழுப்பு”

பச்சை குத்தத் தொடங்கிய உடனேயே, ஊசிகள் குத்தியதால் உண்டான வேதனை வீரனின் தோளில் இறங்க ஆரம்பித்தது. வீரன் முனங்கினான்.

“ஐயோ, வேதனை என்னைக் கொல்லுகிறது. என்ன உருவம் போடுகிறாய்?”

“ஏன் வீரனே, சிங்கம்தானே போடச்சொன்னாய்?”

“சிங்கத்தின் எந்தப் பாகத்தில் தொடங்கினாய்?”

“வால் போட ஆரம்பித்துள்ளேன் வீரனே”

“நண்பனே வால் வேண்டாம்! வலி பொறுக்க முடியவில்லை. வால் இல்லாத சிங்கம் போதும். உன் சிங்கத்தின் வால் என் மூச்சுக்குழலை நசுக்குகிறது.”

உடனே பச்சை குத்துபவன், கருணையோ கடுமையோ எதுவும் இன்றி, கருமமே கண்ணாயினனாய் தோளின் வேறோர் இடத்தில் பச்சை குத்தத் தொடங்கினான்.

“இது எந்தப்பகுதியப்பா?”

“இது சிங்கத்தின் காது வீரனே”

“ஐயோ காதுகளே வேண்டாம், சிங்கத்தை சுருக்கமாக முடி”

வேறோர் இடத்தில் குத்தத் தொடங்கினான். மறுபடியும் வீரன் வலியில் விறைத்தான்.

“இது எந்தப் பகுதியப்பா?”

“இது சிங்கத்தின் வயிறு வீரனே”

“சிங்கத்துக்கு வயிறே வேண்டாம்”, வேண்டினான் வீரன்.

பல கணங்கள் யோசித்துவிட்டு தனது உப கரணங்களை தூக்கி எறிந்தான் பச்சை குத்துபவன்.

“இந்த உலகில் எங்காவது இப்படிக் கண்டதுண்டா? வாலும் காதும் வயிறும் இல்லாத சிங்கத்தை? இறைவனே இப்படி ஒரு சிங்கத்தை உருவாக்க வில்லை” என்றான்.

சகோதரனே, ஊசிமுனையின் வேதனையை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் உன் நப்ஸ¤டைய விஷத்திலிருந்து நீ தப்பிக்க முடியும். இப்படித் தப்பித்தவர்களுக்கு சூரியன், சந்திரன் மற்றும் விண்ணகமனைத்தும் மரியாதை செய்கின்றது. அவர்களுடைய கட்டளைக்கு அடிபணிகிறது. தன்னை இழந்து இறைவனின் இணைந்த அவர்களுக்கு முள்கூட ரோஜாவினும் மென்மையாகிறது.

இறைவனை நாம் எப்படிப் புகழமுடியும்? உன்னை ஒரு தூசியைவிடக் கேவலமாக எண்ணுவதுதான் வழி. தவ்ஹீதின் ஞானத்தை எப்படிப் பெறுவது? அந்த ஒன்றின் முன் உன்னை நீ இல்லாமல் எரித்துக்கொள்வதன் மூலமாகத்தான்.

பகலைப்போல நீங்கள் ஒளிவிட வேண்டுமெனில் இரவைப் போன்ற உங்கள் நப்ஸை பொசுக்குங்கள். அதில் ஏற்படும் வேதனைகளை சகித்துக்கொண்டுதான் கவேண்டும். ஞானகுரு கொடுக்கும் வேதனைகள் உனக்கு சாதனைகள் தரும். னால் நீ அந்தப் பச்சை குத்தச் சென்ற கஸ்வின் நகரத்தானைப்போல இருக்கலாகாது!

அருஞ்சொற்பொருள்:ஹில்ர் — மூஸா என்ற இறைத்தூதருக்கு சில விஷயங்களில் தெளிவை ஏற்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவர். ஹில்ர் என்பவர் மறைவாக இருக்கின்ற, தேவைப்படும்போதெல்லாம் தோன்றுகின்ற ஒரு இறைத்தூதர் என்றும் நம்பப்படுகிறது. எந்தக் கேள்வியும் கேட்காமல் வருவதானால் தன்னோடு வரலாம் என்ற நிபந்தனையின் பேரில் ஹில்ர் மூஸாவை தன்னோடு அழைத்துச் செல்வார்.வழியில் ஒரு படகைக் கவிழ்ப்பது, ஒரு சிறுவனைக் கொல்வது போன்ற காரியங்களைச் செய்வார். பொறுக்கமுடியாமல் மூஸா அவற்றுக்கு விளக்கம் கேட்பார். ஹில்ர் கடைசியில் விளக்கம் சொன்னவுடன்தான் ஹில்ரைவிட ஞானத்தில் தான் எவ்வளவு கீழே உள்ளோம் என்று மூஸா புரிந்துகொள்வார். அவருடைய ‘நான்’ என்ற உணர்வை அழிக்கும்விதமாக ஹில்ரின் காரியங்கள் இறைவிருப்பப்படி அமைந்திருக்கும்.இங்கே ஹில்ர் ஒரு குருவின் குறியீடு.நப்ஸ் — கீழான சைகள்
தவ்ஹீத் — இருமையை மறுத்து, எல்லாவற்றிலும் இறைவனின் ஒருமையைச் சொல்லும் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

***

யூசு·பும் கண்ணாடியும் – கதை — 04

யூசு·ப் நபி வரலாறு — ஒரு அறிமுகம்

நபி யூசுப் (அலை) அவர்கள் நபிமார்களிலேயே மிகவும் அழகானவர்கள். அதேசமயம் மிகவும் ஒழுக்கமானவர்கள்.

யூசு·ப் நபியவர்கள் ய·கூப் நபியின் பன்னிரண்டு மகன்களில் ஒருவர். புன்யாமின் (பெஞ்சமின்) என்ற தம்பி மட்டும் கூடப்பிறந்தவர். மற்றவர்கள் அனைவரும் மாற்றாந்தாய்மார்களின் மக்கள். ஒரு நாள் யூசு·ப் தன் தந்தையாரிடம் வந்து, சூரியனும் சந்திரனும், பதினோறு நட்சத்திரங்களும் தன்னை வணங்குவதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். அதைப்பற்றி மற்ற சகோதர்களிடம் சொல்லவேண்டாம் என்று தந்தை அறிவுறுத்துகிறார்.

யூசு·ப் மீது தந்தையார் வைத்த பிரியத்தைப் பார்த்து யூசு·பை வெறுத்த அவரது சகோதரர்கள், சிறுவரை ஒருநாள் தண்ணீரற்ற ஒரு பாழுங்கிணற்றில் போட்டு, பின் அந்தவழியாக வந்த யாத்ரீகர்களிடம் சொற்பக்காசுக்கு அடிமை என்று சொல்லி விற்றுவிடுகின்றனர். ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்த ரத்தம் தடவப்பட்ட யூசு·புடைய சட்டையை தந்தையிடம் காட்டி, யூசு·பை ஓநாய் விழுங்கிவிட்டது என்று சொல்லிவிடுகின்றனர். உண்மையைப் புரிந்துகொண்ட தந்தை, இறைவனின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு பொறுமை காக்கிறார்.

யூசு·பை வாங்கியவர்கள் அவரை எகிப்துக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு அதிகாரியிடம் விற்றுவிடுகின்றனர். அந்த அதிகாரியின் வீட்டிலேயே ஊழியம் செய்து வளர்ந்து இளைஞராகிரார் யூசு·ப்.

அந்த அதிகாரியின் மனைவி யூசு·பின் அழகில் மயங்கி அவரைப்பார்த்து சைப்பட்டு ஒரு நாள் அழைக்கிறாள். ஒழுக்கம் மிகுந்த யூசு·ப் அதற்கு மறுக்கிறார். இந்த விஷயத்தின் தொடர்ச்சியாக அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் அதற்குமுன் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

யூசு·ப் உடனே சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் மெல்ல இந்த விஷயம் ஊரில் பரவ, பெண்கள் அந்த அதிகாரியின் மனைவியைப் பழித்துரைக்கின்றனர். அவளோ, அவர்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்து அதில் யூசு·புக்கு நல்ல ஆடைகளை அணிவித்துக் காட்டுகிறாள். அவர் அழகைப் பார்த்து, அவர் ஒரு மானிடனே அல்ல, “இவர் ஒரு மலக்கேயன்றி வேறில்லை”, என்று வியந்த அப்பெண்கள், பழத்தை அறுப்பதற்கு பதிலாக தங்களை மறந்தவர்களாய் தம் விரல்களை அறுத்துக்கொள்கின்றனர்.

அதைப்பார்த்த அந்த எஜமானி, “முதல்முறை யூசு·ப் தப்பித்துக்கொண்டார். மறுபடியும் தான் சொல்வதை அவர் செய்யாவிட்டால் அவரை சிறையிலடைத்து சிறுமைப்படுத்துவேன்” என்று கூறவும் யூசு·ப்,

“என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் இத்தீய காரியத்தைவிடச் சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது” ( திருமறை 12 : 33) என்று கூறுகிறார்.

அதற்குப்பிறகுதான், இனிமேலும் யூசு·பை அங்கு விட்டுவைப்பது நல்லதல்ல என்று, செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையிலடைக்கப்படுகிறார். யூசு·பின் அழகுக்கும் இறையச்சத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி திருமறையின் வசனங்கள் 30லிருந்து 35வரை இதுபற்றிப் பேசுகின்றன.

சிறையில் அவரோடு எகிப்திய மன்னனிடம் ஊழியம் செய்த இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் கண்ட கனவை யூசு·ப் விளக்குகிறார். அவர் விளக்கியபடியே, ஒருவனுக்கு மன்னனிடம் திரும்பவும் ஊழியம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்னொருவன் சிலுவையில் அறையப்படுகிறான்.

சில ஆண்டுகள் கழித்து, ஏழு கொழுத்த பசுக்களை ஏழு நலிந்த பசுக்கள் சாப்பிடுவதாக மன்னனுக்கு ஒரு கனவு வருகிறது. அதற்கு யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை.

ஏழு ஆண்டுகள் நல்ல விளைச்சலிருக்கும் ; அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கடுமையான பஞ்சம் வரும். கவே, முதல் ஏழாண்டுகளில் விளைவதிலிருந்து சேமித்துவைத்து, பஞ்சகாலத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யூசு·ப் அதற்கு விளக்கம் சொல்ல, மன்னன் யூசு·பையே தானியக்களஞ்சிய அதிகாரியாக நியமிக்கிறான்.

அதிகாரமும் செல்வமும் பெற்ற யூசு·ப், எகிப்தின் அதிகாரியாக இருக்கிறார். பஞ்சகாலத்தில் கனானிலிருந்து அவருடைய சகோதரர்கள் தானியம் வாங்க எகிப்துக்கு வருகின்றனர். புன்யாமீன் மட்டும் பார்வையிழந்த தந்தையோடு இருக்கிறார். சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட யூசு·ப், அவர்களுக்கு உண்மையை எடுத்துரைத்து அவர்களோடும் தன் பெற்றோரோடும் சேர்வதுதான் வரலாறு.

யூசு·ப் நபியைப் பொறுத்தவரை நான்கு விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது : 1. அவருடைய அழகு, 2. அவருடை ஒழுக்கம், 3. அவருடைய இறை நம்பிக்கையும் பக்தியும், 4. இறைவனால் அருளப்பட்ட, கனவுக்கு விளக்கம் சொல்லும் சக்தி.

புனித பைபிளிலும் இந்த வரலாறு சொல்லப்பட்டுள்ளது. திருமறையைப் படிக்கும்போது அந்த வரலாற்றின் காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன. அவர்கள் பேசிய ஒழுக்கமும் பக்தி சிந்தும் வார்த்தைகளும் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கின்றன.

— மொழிபெயர்ப்பாளன்

யூசு·ப் (அலை) அவர்களைக்காண பால்யகால நண்பர் ஒருவர் வந்தார். யூசு·பின் சகோதரர்கள் இழைத்த துரோகம் பற்றியும் அவர்களின் பொறுமையைப் பற்றியும் அவர் பேசினார்.

“அது ஒரு சங்கிலி போலவும் நானொரு சிங்கம் போலவும் இருந்தேன். சிங்கத்தின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலி எதுவும் சிங்கத்தை அவமதிக்க முடியாது. அல்லாஹ்வின் விதியை எதிர்த்து எதுவும் நான் கூறமாட்டேன். கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டிருந்தாலும் சங்கிலி செய்பவர்களையெல்லாம்விட சிங்கமே உயர்ந்தது (கம்பீரமானது) இல்லையா?” என்றார்கள் யூசு·ப்.

“கிணற்றுக்குள்ளும் சிறைக்குள்ளும் உங்கள் அனுபவம் எப்படி?” கேட்டார் நண்பர்.

“தேய்பிறையைப்போல இருந்தேன்” — யூசு·ப்

பிறையாகவும் பாதியாகவும் உள்ள நிலா பௌர்ணமியின்போது முழுமையடைவதில்லையா? பூமிக்குள்ளே விதைக்கப்படும் மணி பூமியின் மேலே பயிராக வளர்கிறது. அந்த கோதுமையை ஆலையில் வைத்து அரைத்தாலும் அது கோதுமையைவிட மதிப்புள்ள, சத்துள்ள ரொட்டியாகிறது. அந்த ரொட்டியையும் பற்களிடையில் வைத்து அரைத்து மனிதர்கள் கஷ்டப்படுத்துகிறார்கள். அப்போதும் அந்த ரொட்டி மனிதனின் மனதாகவும் அறிவாகவும் உடலாகவும் மாறுகிறது.

“சரி நண்பரே, பயணம் வந்துள்ள நீர் எனக்கு என்ன பரிசு கொண்டுவந்துள்ளீர்கள்?” என்றார்கள் யூசு·ப்

வெறுங்கையோடு நண்பரின் வீட்டுக்குப் போவது கோதுமையின்றி ஆலைக்குப் போவது மாதிரி. இறுதித் தீர்ப்புநாளில் கூடியிருக்கும் மக்களிடம் இறைவன் கேட்பான், “உயிர்த்து எழும் இந்த நாளுக்கான பரிசு எங்கே மக்களே? நாம் உங்களை எப்படி அனுப்பினோமோ அப்படியே சும்மா திரும்பி வந்துள்ளீர்களா? வீட்டுக்குத் திரும்பி வரும்போது வெறுங்கையோடு வரலாமா? ஒருவேளை திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையே இல்லையா? இன்று என்னை வந்து சந்திப்பேன் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று? அதெல்லாம் மறந்துவிட்டதா? ஒன்றுமிருக்காது என்று தோன்றியதா?” என்று.

வாசகர்களே! இறைவனின் விருந்தாளியாகத் திரும்பி வருவீர்கள் என்ற வாக்குறுதியில் உங்களுக்கும் நம்பிக்கையில்லையா? உள்ளதெனில், நண்பனாகிய இறைவனின் சன்னிதானத்துக்கு வெறுங்கையுடன் புறப்படுவீர்களா?

உறக்கத்தையும் உணவையும் சற்று குறைத்துக்கொள்ளுங்கள். இறைவனை சந்திக்கும்போது பரிசு கொண்டுபோக அது வழிவகுக்கும்.

கொஞ்சமாக அசையுங்கள். கருப்பையினுள் உள்ள சிசுவைப்போல. அப்போதுதான் பேரொளியைப் பார்ப்பதற்கான புலன்களைப் பெறுவீர்கள்.

இறைநேசர்கள் உயர்த்தப்படும் நிலையை அறிய உதவும் சுவையென்று உறக்கத்தை உணருங்கள். இறைநேசர்கள் ‘அஸ்ஹாபுல் கஹ்·ப்’ எனப்படும் குகைத்தோழர்களைப் போன்றவர்கள். அசைவிலும் விழிப்பிலும் அவர்கள் உறக்கத்தில்தான் உள்ளார்கள். அதாவது இறைவனே அவர்களை அசைக்கிறான். அவர்களே அறியாமல் அவர்கள் மூலமாக அவனே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான். அவர்களை இடமும் வலமுமாக திருப்புகிறான்.

வலது என்பது என்ன? நல்ல செயல்கள். இடது என்பது என்ன? உடம்பின் ஆசைகளும் அதை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படும் செயல்பாடுகளும்தான்.

இந்த வலது இடது செயல்பாடுகள் இறைநேசர்களிடமிருந்து புறப்பட்டாலும் அவர்கள் இரண்டையுமே அறியாதவர்களாக உறக்கத்தில் உள்ளார்கள். எதிரொலிக்கும் மலையைப் போல. தான் எதிரொலிக்கும் வார்த்தை நல்லதா கெட்டதா என்பதை மலை அறியுமா என்ன?

“சரி, உம் பரிசைக் காட்டும்” என்றார்கள் யூசு·ப்.

“எத்தனையோ பரிசுப்பொருள்களைப் பார்த்துவிட்டேன். எதுவுமே தங்களுக்கு உகந்ததாக இல்லை. தங்கச்சுரங்கத்துக்கு தங்கமணியை எப்படிப் பரிசாகக் கொண்டுவருவேன்? கடலுக்கு பரிசாக ஒரு துளி நீரா? உங்கள் பண்டக சாலையில் இல்லாத பயிர்களும் விதைகளும் ஏது? உங்கள் அழகோ ஈடு இணையற்றது.”:

“எனவே, உள்ளளியைப் போன்ற கண்ணாடியைப் பரிசளிப்பதே சிறந்தது என முடிவு செய்தேன். ஓ சொர்க்கத்தின் விளக்கே! அதில் உங்கள் அழகுத் திருமுகத்தைக் காணும்போதெல்லாம் உங்களுக்கு என் நினைவு வரும்” என்று வெட்கத்தோடு கூறிய நண்பர், தான் கொண்டுவந்திருந்த கண்ணாடியைக் காண்பித்தார்.

அழகானவர்களின் வேலையெல்லாம் கண்ணாடியோடுதானே! இருப்பின் கண்ணாடி எது? இல்லாமைதானே!

நீங்கள் முட்டாளாக இல்லாத பட்சம், இல்லாமை எனும் கண்ணாடியைப் பரிசாகக் கொண்டுவருவீர்கள். ஏனெனில் இல்லாமையில்தான் இருப்பு தெரியும். ஏழைகளுக்குத்தான் பணக்காரர்கள் கொடுப்பார்கள். உணவின் தெளிவான கண்ணாடி பசிகொண்ட மனிதனே. ஆரோக்கியமான மனிதர்களுக்கு மத்தியில் மருந்துக்கு என்ன வேலை?

நிறையின் கண்ணாடி குறையே! தன் குறையை எவன் அறிந்து கொண்டானோ அவனே முழுமையை நோக்கி விரையும் மனிதனாவான். நாயனை நோக்கி மனிதன் பறந்து செல்லாததன் காரணம் தன்னை அவன் குறைகளற்றவனாக நினைத்துக்கொள்வதுதான்.

உங்களை நிறைகுடம் என்று நினைத்துக்கொள்வதைத் தவிர மோசமான நோய் ஒன்றுமில்லை. பெருமை பிடித்தவர்களே! இப்லீஸ் செய்த தப்பெல்லாம் தாமை விட தான் உயர்ந்தவன் என்று நினைத்ததுதானே! அந்த நோய் ஒவ்வொரு இதயத்தையும் பீடித்துள்ளது.

நீங்கள் பார்ப்பதற்குதான் தெளிந்த நீர். அடியில் சேறும் சாணமும் உள்ளது. ஷைத்தான் உங்களை கலக்கியவுடனேயே சேறும் சாணமுமாக நீர் நிறம் மாறும். உங்கள் சேற்றையும் சாணத்தையும் வடிகட்டி சுத்தமான நீராக உங்களை வெளியேற்றத் தேவை ஞானகுருவாகிய ஷெய்கு.

உங்கள் காயத்தை குணப்படுத்த அந்த அறுவைசிகிச்சை நிபுணரிடம் செல்லுங்கள். காயத்தை ஈக்கள் மொய்க்கும்போது அந்த அசிங்கங்கள் வெளியில் தெரியாது. உங்கள் தீய எண்ணங்களும் தீய சைகளும்தான் அந்த ஈக்கள். உங்கள் குறையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகிய வலியுல்லாஹ்விடம், குருவிடம் உங்களை ஒப்படைத்துவிடுங்கள். அவரின் ஒளிக்கதிரின் பொருட்டுதான் உங்கள் காயங்கள் குணமடைந்து மறையும்.
***

எஜமானும் அடிமையும் – கதை 05

லுக்மான் அவர்கள் சுயநலமற்ற ஒரு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள். அல்லும் பகலும் தனது எஜமானுக்காக அயராது உழைத்தார்கள். எஜமானுக்கு லுக்மானை மிகவும் பிடித்திருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. லுக்மான் கறுப்பாக இருந்தாலும் அவர்களது அறிவும் உள்ளமும் எப்போதும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

ஒரு முறை லுக்மானின் மீது பொறாமை கொண்ட மற்ற அடிமைகள் பழங்களையெல்லாம் சாப்பிட்டுவிட்டு லுக்மான் சாப்பிட்டுவிட்டதாக எஜமானிடம் வந்து பொய்கூறினர். விசாரிக்கப்பட்டபோது லுக்மான் சொன்னார்கள்.

“எங்கள் அனைவருக்கும் சுடுதண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள். பின்னர் இந்தப் பாலைவனத்தில் வெகுதூரம் ஓடவிடுங்கள். நீங்கள் எங்கள் பின்னால் சவாரி செய்து வந்து பாருங்கள். உண்மை தெரியும்.”

அதன்படியே செய்யப்பட்டது.

ஓடிய அனைவரையும் சுடுதண்ணீர் வாந்தி எடுக்கவைத்தது. விழுங்கிய பழங்களும் வாந்தியுடன் வெளியே வந்தன. லுக்மானின் வயிற்றிலிருந்து வெளியானதோ சுத்தமான சுடுநீர்!

இப்படிப்பட்ட ஞானவானாகிய லுக்மான், தான்பெற்ற மக்களைவிட அதிகமாக அந்த எஜமானை நேசித்ததில் ச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் லுக்மான் அடிமையாகப் பிறந்திருந்தாலும் தனக்குத் தானே எஜமானாக இருந்தார்கள். மேலும் உலக இச்சைகளின் பிடியிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றிருந்தார்கள்.

“என்னிடம் எதையாவது கேளுங்கள், தருகிறேன்” என்று ஒரு நாள் அரசன் ஒருவன் தன் குருவிடம் சொன்னானாம்.

“அரசனே! என்னிடம் இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? இங்கேவா, இரண்டு கீழ்த்தரமான அடிமைகள் என் வசம் உள்ளனர். னால் அந்த அடிமைகள் இருவரும் உனக்கு எஜமானர்களாக உள்ளனர்” என்றாராம் குரு.

“என்ன, எனக்கு எஜமானர்களா?! இருக்க முடியாது. நீங்கள் சொல்வது தவறு. உண்மையெனில் யார் அவர்கள்?” என்று கேட்டானாம் அரசன்.

“ஒருவன் கோபம், இன்னொருவன் காமம்” என்று பதிலடி கொடுத்தாராம் குரு.

ராஜ்ஜியங்களை யார் கருத்தில் கொள்ளவில்லையோ அவனே உண்மையான ராஜா. அவனுடைய ஒளி சந்திரனிலிருந்தும் சூரியனிலிருந்தும் வருவதல்ல.

லுக்மானுடைய எஜமான் உண்மையில் லுக்மானின் அடிமையாகத்தான் இருந்தார். இந்த தலைகீழான உலகத்தில் இப்படி நிறையவே உண்டு. (இப்படிப்பட்ட இந்த உலகத்தில்) மக்கள் வைக்கோலைவிட கேவலமாக முத்தை மதிப்பிடுவார்கள்.

னால் ‘ஹ¤’வின் (படைத்தவனாகிய இறைவனின்) ரகசியங்களைத் தெரிந்து கொண்டவனுக்கு படைப்பினங்களின் ரகசியங்கள் எம்மாத்திரம்? அண்ட சராசரங்களின்மீது உலாத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகின்மீது நடப்பது பெரிய காரியமா? தாவூதின் கைகளில் மெழுகைப்போல உருகியது இரும்பு. அப்படியானால் மெழுகு என்னவாகும்?! சிந்தித்தாயா பலகீனமான மனிதனே?

பார்வைக்கு அடிமையாகவும் உண்மையில் எஜமானாகவும் இருந்தார் லுக்மான். புதிய இடங்களுக்குச் செல்லும்போது தனது உடைகளை லுக்மானுக்கு அணிவித்து, லுக்மானின் உடைகளைத் தான்அணிந்துகொண்டு செல்வது லுக்மானின் எஜமானுக்கு வழக்கமாக இருந்தது.

“அடிமையே! நீ எனக்குரிய இடத்தில் அமர்ந்து, எனக்குரிய மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவாயாக. நான் உனது அடிமையைப்போல உனது காலணிகளைச் சுமந்து வருவேன். என்னை நீ ஒரு அடிமையைப் போலவே நடத்து. கடிந்து கொள். எனக்கு எந்தவிதமான மரியாதையையும் காட்டாதே” என்பார் லுக்மானின் எஜமான்.

எத்தனையோ எஜமானர்கள் இவ்விதம் அடிமைகளின் பாத்திரத்தை உவந்து ஏற்றுள்ளார்கள். ராஜ்ஜியச் சுவையை கடைசிவரை அனுபவித்தது போதும் என்று விட்டவர்கள் அவர்கள். திருப்தியில் திளைத்தவர்கள் அவர்கள். ஆனால் ஆசைகளின் அடிமைகளோ, ஞானத்துக்கும் ஆத்மாவுக்கும் அதிகாரிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

லுக்மானின் உண்மையான அந்தஸ்து என்ன என்பதை அந்த எஜமான் அறிந்து வைத்திருந்தார். அந்த உயர்ந்த நிலையின் அடையாளங்களை அவர் பல முறை பார்த்திருக்கிறார்.

தனது ரகசியம் வெளியில் தெரியாதிருக்கும் பொருட்டு, தான் ஒரு அடிமையாகவே தோன்ற விரும்பினார்கள் லுக்மான். அதையறிந்துகொண்ட எஜமானும் லுக்மானை தனது அடிமைத்தளையிலிருந்து விடுவிக்காமல் இருந்தார்.

கெட்டவர்களிடமிருந்து தனது ரகசியத்தை ஒருவன் மறைக்க விரும்பினால், அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் உன்னிடமிருந்தே உனது ரகசியங்களை நீ மறைக்க வேண்டும். உனது பார்வையில் இருந்தே உனது காரியங்களை நீ மறைத்துவிட்டால் (பிறர்) கண்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

காயப்பட்டவனின் உடம்பில் குத்திய ஈட்டி அல்லது அம்பின் முனையை வலி தெரியாமல் வெளியே எடுக்க அவனுக்கு போதையூட்டுவார்களாம். (அதைப்போல) உங்கள் மனதை (கவனத்தை) ஏதாவதொன்றில் வைக்கும்போது வேறு ஏதாவதொன்று உங்களிடமிருந்து ரகசியமாகத் திருடப்படும்.

எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் நீங்கள் பாதுகாப்பு என்று கருதும் பகுதியின் வழியாகத் திருடன் நுழைந்துவிடுவான். எனவே உயர்ந்தவற்றின் பக்கம் உங்கள் முழு கவனத்தையும் வையுங்கள். உங்களில் எது கீழ்த்தரமானதோ அதை வேண்டுமானால் திருடன் எடுத்துக்கொண்டு போகட்டும்.

எந்த உணவை யார் தனக்குக் கொண்டுவந்தாலும் முதலில் லுக்மானுக்கு அதை அனுப்பி சாப்பிடச் செய்வார் லுக்மானின் எஜமான். லுக்மான் சுவைத்த மீதியைத்தான் அவர் உண்பார். லுக்மான் சுவைக்காத எந்த உணவையும் எஜமான் சாப்பிடமாட்டார். எறிந்துவிடுவார்.

ஒருநாள் முலாம்பழம் ஒன்று பரிசாக வந்தது. வழக்கம்போல லுக்மானை அழைத்து ஒரு துண்டை அறுத்துக் கொடுத்தார் எஜமான். சர்க்கரையையோ தேனையோ சுவைப்பதுபோல லுக்மான் அதை விரும்பிச் சாப்பிட்டார்.

அதைக்கண்ட எஜமான் மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்தார். பதினேழு துண்டுகளை இவ்விதமாக லுக்மான் சுவைத்துவிட்டார்கள். ஒரேயொரு துண்டு மிச்சமிருந்தது.

“இதை நான் சாப்பிடுகிறேன், எவ்வளவு இனிப்பு பார்க்கலாம்” என்று அந்த துண்டை வாயில் வைத்தார் எஜமான்.

உடனே அவர் நாக்கு கொப்பளித்தது. தொண்டை எரிந்தது. அவ்வளவு கசப்பு. கசப்பின் நெருப்பு.

“ஓ லுக்மான் ! இந்தக் கசப்பையா முகம் சுளிக்காமல் உண்டீர்கள்?! எப்படி இந்த விஷத்தை விஷ முறிவாக்கினீர்கள்? இந்தக் கொடுமையை எப்படிக் கனிவாக்கினீர்கள்? என்ன மகத்தான பொறுமை இது! ஏதாவது சாக்குச் சொல்லி என்னை சாப்பிட வைத்திருக்கலாமே” என்று அங்கலாய்த்தார் எஜமான்.

“உங்கள் தாராள கைகளினால் நான் எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறேன். உங்கள் வள்ளல் தன்மையின் முன்னால் நான் கூனிக்குறுகி நிற்கிறேன். ஞானவானே! கசப்பான துண்டொன்று வந்துவிட்டது என்பதற்காக நான் தங்கள் கரங்களை அவமதிக்க முடியுமா? என் உடம்பின் உப்பு ஒவ்வொன்றும் தங்கள் தாராளத்தினால் வளர்ந்ததுதானே? ஒரேயொரு கசப்பான பொருளுக்காக நான் முறையிட்டால் அது முறையாகுமா? பழம் கசப்பானதாக இருந்தாலும் கொடுத்த கை இனிப்பானதாயிற்றே!” என்றார்கள் லுக்மான்.

கசப்பானவற்றையெல்லாம் இனிப்பாக்குகிறது அன்பு. செம்பை தங்கமாக மாற்றுகிறது. வலிகள் நிவாரணமடைகின்றன. இறந்தவை உயிர் பெறுகின்றன. அரசனும் அடிமையாகிறான் அன்பினால்.

கடலலை நுரையின்மீது குதிரைச் சவாரி செய்ய நினைப்பதும், மின்னல் ஒளியில் கடிதம் படிக்க நினைப்பதும் நோக்கம் நிறைவேற்றும் பாதையல்ல. மின்னல் ஒளி தற்காலிகமானது. தன்மீது நம்பிக்கை வைப்பவர்களைப் பார்த்து அது நகைக்கிறது. உடம்பு தற்காலிகமானது. அது முடிவையோ முடிவானதையோ அறியாது. நம்பிக்கை இறையச்சம் கிய இரண்டு சிறகுகளின் மூலம்தான் பறக்க முடியும்.

சுவர்க்கத்தையும் அதன் அரண்மனைகளையும் நெருப்பில் காணவேண்டுமெனில் அதற்கு இப்ராஹீமுடைய மனது வேண்டும்.

***

தாவூது(டேவிட்) — ஒரு இறைத்தூதர். இரும்பை உருக்கும் கலையை அவருக்குக் கற்றுக்கொடுத்திருந்தான் இறைவன்.இப்ராஹீம் (ப்ரஹாம்) — ஒரு இறைத்தூதர். இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற உண்மை சொன்னதற்காக அவரை நெருப்புக் குண்டத்தினுள் எறிந்தான் நிம்ரூது என்ற அரசன். “யா நாரு, கூனி பர்தன்” (ஓ நெருப்பே, குளிர்வாயாக!) என்று இறைவன் இட்ட கட்டளைக்கு இணங்க அக்கினி குளிர்ந்தது. நெருப்புக் குண்டம் அவருக்கு சுவர்க்கப் பூங்காவானது.

***
வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும் – கதை 06

வஹீ எனும் இறைவெளிப்பாடு வரும்போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லும் வசனங்களையெல்லாம் கவனமாக எழுதும் ஒரு தோழர் இருந்தார். பெருமானார் மீது பெய்த அந்த இறையொளியின் கிரணங்கள் அவ்வப்போது அவர்மீதும் பட்டுத் தெறித்தன. அதன் காரணமாக, தனக்கும் ஞானம் பொங்கக் கண்டார் அவர்.

சமயங்களில் பேரிறையின் பேச்சு பெருமானார் வாய்வழி வெளியாகி, அவர்களதை முடிக்கும் முன்பே அந்த வசனங்களை அத்தோழர் சொல்வதுண்டு. இதன் காரணமாக அவர் வழிகெட்டுப் போனார். பெருமானார் பகரும் பேருண்மை தனக்குள்ளிருந்தும் வெளிப்படுவதாக அவர் நம்பினார்.

அவரின் இந்த (தவறான) எண்ணத்தின் கீற்றைப் பெருமானார் புரிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் கோபம் உடனே அத்தோழரின் ஆத்மாவுக்குள் இறங்கியது.

“பிடிவாதமாகத் தவறிழைக்கும் தோழரே! அந்த ஒளி உங்களுக்குள்ளே இருந்து வருவதாயின் ஏன் நீங்கள் (பாவத்தின் பொருட்டு) கருப்பாகி விட்டீர்கள்?”

“வஹீ வெளிவரும் ஊற்றுக்கண்ணாக நீங்கள் இருப்பீரேயானால், எப்படி உங்களிடமிருந்து இவ்வளவு கறுப்பான நீர் வருகிறது?” என்றார்கள் பெருமானார்.

பின்னாளில், அய்யஹோ என அவர் அரற்றினாலும் வாளின் கூர்மைக்குத் தன் தலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

தனக்கும் வஹீ வருவதாக பெருமையடித்த அந்த தோழருக்கு (அவரைப்போன்றவர்களுக்கு) தடைகளெல்லாம் திறந்த வெளியாகத் தோன்றும். அது அல்லாஹ் விதிப்படி என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

புகழும் பெருமையும்தான் எத்தனையோ அவநம்பிக்கையாளர்களை ஓரிறையின்மீதான நம்பிக்கையின் பக்கம் வருவதிலிருந்து தடுக்கின்றன. அவையே அவர்களின் விலங்குச் சங்கிலி.

இரும்புச் சங்கிலியைவிட மோசமான அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ளது. ஞானத்தின் பிரதிபலிப்பில் ஒரு துளி அந்த பரிதாபத்துக்குரியவரை வழிகெடுத்தது. பெருமை வேண்டாம். அது உங்களை மண்ணாக்கிவிடும்.

உங்கள்மீது வழிந்தோடுகின்ற ஞானமெல்லாம் இறைநேசர்களிடமிருந்து வருவதுதான். உங்களைப் பொறுத்தமட்டில் அது கடன் வாங்கப்பட்ட ஒன்று. உங்கள் இதயவீட்டில் ஒளி வீசினாலும் அது பக்கத்து வீட்டுக்காரர் ஏற்றியதே. அதற்காக நன்றி செலுத்துங்கள்.

இரும்புத் துண்டு சிவப்பாகிவிட்டிருந்தாலும் சிவப்பு நிறமானது இரும்பின் இயற்கை அல்ல. நெருப்பில் கிடந்ததன் விளைவே அது.

உங்கள் ஜன்னல்களும் வீடுகளும் வெளிச்சமாயிருந்தால் அதன் காரணம் சூரியனே அன்றி வேறெதுவுமில்லை.

“நானே ஒளி” என்று ஒவ்வொரு கதவும் சுவரும் சொல்கிறது.

“நான் அஸ்தமிக்கும்போது, உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடும்” என சூரியன் சொல்லும்.

“நாங்கள் பச்சை நிறமானவர்கள்” என்கின்றன தாவரங்கள்.

“நான் போனபிறகு பாருங்கள்” என்கிறது கோடைக்காலம்.

தன் அழகைப் பிரஸ்தாபிக்கிறது, பீற்றிக்கொள்கிறது இந்த உடம்பு.

“அடக்கழிவே! யார் நீ? என் கிரணங்களின் பொருட்டே நீ ஓரிரு நாட்களுக்கு உயிருடன் ஒளிர்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரியும்போது பார். உன்னைப் பிரியமாக நேசித்தவர்களே உனக்கு குழியை வெட்டுவார்கள். உன்னை எறும்புகளுக்கும் பூச்சிகளுக்கும் உணவாக்குவார்கள்.”

“உனக்காக உயிரை விடுவேன் என்று சொன்னவர்களெல்லாம் உன் துர்நாற்றம் பொறுக்காமல் நாசிகளைப் பொத்திக் கொள்வார்கள்” என்கிறது உயிர்.

உடலின்மீது உயிரின் கதிர்கள் படுவதுபோல, எனது ஆத்மாவின் மீதும் இறை நேசர்களின் ஒளி படுகிறது. அதற்கு அத்தாட்சியாக, என் தலையை நான் பணிவுடன் இந்த மண்ணில் வைக்கிறேன். தீர்ப்பு நாளில் அது சாட்சி சொல்லட்டும். நீர், நிலம் இவற்றின் பேச்சையெல்லாம் இறைநேசர்களின் இதயங்களை ஒத்த மனம் கொண்டவர்களே உணர்ந்து கொள்வார்கள். அன்றி, தத்துவவாதிகளோ தர்க்கவாதிகளோ அல்ல.

தத்துவவாதி என்பவர் யார்? யாருடைய உள்ளத்தில் சந்தேகமும் குழப்பமும் உள்ளதோ அவரே தத்துவவாதியாவார். அவரது தத்துவமே அவரது முகத்தை ஒரு நாள் கறுப்பாக்கும்.

நம்பிக்கையாளர்களே, ஜாக்கிரதை! உங்களிடத்தும் தத்துவவாதியின் நரம்புண்டு. உங்களுக்குள்ளே எண்ணற்ற உலகங்களுண்டு. எழுபத்திரண்டு வகையான (வழிகெட்ட) குழுக்களும் உண்டு. அவைகளின் கை ஓங்குமானால் உங்களுக்கு நாசம்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சபிக்கப்பட்ட இப்லீஸானவன் நம்பிக்கையாளர்களின் தலைவனாகவும் ஞானியாகவும்தான் இருந்தான். ஆனால் எப்போது பெருமையின் பொருட்டு ஆதத்தோடு மோத ஆரம்பித்தானோ அப்போதே அவமானப்பட்டுப் போனான்.

ஒரு செவிடன் தன் அண்டை வீட்டிலிருந்த நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஒருவனைப் பார்க்க அனுப்பப் பட்டான்.

“நான் டமாரச் செவிடாயிற்றே! அந்த நோயாளி சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நோயின் பொருட்டு அவன் குரலும் பலவீனமாக இருக்கும். என்ன செய்வது, வேறு வழியில்லை, போய்த்தான் ஆகவேண்டும்.”

“அவன் வாயசைவுகளை வைத்து நான் வார்த்தைகளை அனுமானித்துக்கொள்வேன்.”

“எப்படி இருக்கிறீர்கள் நண்பரே இப்போது?” என்று கேட்பேன்.

“நன்றாக உள்ளது அல்லது பரவாயில்லை” என்று அவன் சொல்வான்.

“அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும். என்ன குடித்தீர்கள்?” என்று கேட்பேன்.

“ஏதாகிலும் ஷர்பத்” என்று அவன் சொல்வான்.

“உங்கள் ரோக்கியம் வாழட்டும். உங்கள் மருத்துவர் யார்?” என்று கேட்பேன். பேரைச்சொல்வான்.

“ஓ அவரா? ரொம்ப ராசியானவராயிற்றே! அவர் பார்த்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும்” என்பேன்.

இவ்வாறாக எண்ணிச் சென்றான் செவிடன்.

அவர்கள் எப்படிப் பேசிக்கொண்டார்கள் தெரியுமா? கேளுங்கள்.

“எப்படியிருக்கிறீர்கள்?” — செவிடன்.

“நான் இறப்பின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன்” — நோயாளி.

“அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்” — செவிடன்.

இதைக்கேட்டவுடன் வெகுண்ட நோயாளி, “நன்றி சொல்வதற்கு இதில் என்ன உள்ளது? அல்லாஹ் எனக்கு எதிரியாகிவிட்டான்” என்றான்.

ஏதோ தவறு நடந்துவிட்டது என்று புரிந்துகொண்ட செவிடன், “என்ன சாப்பிட்டீர்கள்?” என்றான்.

“விஷம்” — நோயாளி.

“உங்களுக்கு அது நல்லது செய்து ஆரோக்கியம் தரட்டும்” என்றான் செவிடன்.

நோயாளியின் கோபம் அதிகரித்தது.

“எந்த மருத்துவர் உங்களைப் பார்க்கிறார்?”

“இஸ்ராயீல் (உயிர் வாங்கும் பொறுப்பு தரப்பட்ட வானவர்) வருகிறார். நீ போய்த்தொலை” என்றான் நோயாளி.

“ஓ அவரா? அவர் காலடி வைத்துவிட்டாலே போதுமே! இனிமேல் நீங்கள் சந்தோஷமுடன் இருங்கள். நீங்கள் குறிப்பிட்ட மருத்துவர் வருவது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம். இறைவனுக்கு அதற்காக நன்றி செலுத்துகிறேன். வருகிறேன்” என்றான் செவிடன்.

“இவன் என் ஜென்மப் பகைவன். இவ்வளவு மோசமானவன் என்று இத்தனை நாள் தெரியாமல் போனதே!” என்று புலம்பினான் நோயாளி.

கெட்டுப்போன உணவை சாப்பிட்டவனுக்கு வாந்தி வரும். கோபத்தை அடக்குவதும் இப்படிப் பட்டதே. கோபத்தை வாந்தி எடுக்கவேண்டாம். அப்போதுதான் அதற்கு பதிலாக இனிமையான வார்த்தைகள் கிடைக்கும்.

எத்தனையோ பேர் பக்தியான செயல்பாடுகளில் ஈடுபட்டு (இருப்பதாக எண்ணிக்கொண்டு) அவற்றின் பலன்களை எதிர் நோக்கியவண்ணம் உள்ளார்கள். செவிடனின் விசாரிப்பைப் போல. அவர்களுடைய புண்ணியம் பாவமாகவும் அமுதம் விஷமாகவும் உள்ளதை அவர்கள் அறியவில்லை.

நான் என் மரியாதையைச் செலுத்திவிட்டேன். என் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நான் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்று எண்ணிக்கொண்டான் செவிடன்.

ஆனால் அவன் தனக்கெதிரான ஒரு நெருப்பைத்தான் தூண்டிவிட்டான் என்பதை உணரவில்லை.

“தொழுங்கள், தோழர்களே! ஏனெனில் நீங்கள் (சரியாக) தொழவில்லை” என்று பெருமானார் பாலவனத்து அரபியரிடம் சொன்னார்கள். இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றத்தான், “எங்களுக்கு வழிகாட்டுவாயாக” என்ற வேண்டுகோள் ஒவ்வொரு தொழுகையிலும் வருகிறது. “இறைவா! தவறு செய்பவர்கள் மற்றும் நயவஞ்சகர்களுடைய தொழுகையோடு எங்களுடையதை சேர்த்துவிடாதே” என்ற பொருளில்.

ஒப்பிட்டுப் பார்த்ததனால் ஒரு பத்து வருட நட்பையே செவிடன் அவனுக்கே தெரியாமல் முறித்துக்கொண்டான். குறிப்பாக, உங்களுடைய (கீழான) புலன்களின் தூண்டுதலின் பேரில் எல்லையற்ற வஹீயை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வஹீயின் வார்த்தைகளை விளங்கிக்கொள்ளும் செவியானது அதன் அர்த்தங்களைப் பொறுத்தவரை செவிடுதான். விளங்கிக்கொள்ளுங்கள்.

இப்படி ஒப்பிட்டுத்தான் இப்லீஸ் கெட்டான். தான் நெருப்பென்றான். தம் வெறும் மண்ணென்றான். மண்ணைவிட நெருப்பே உயர்ந்தது என்றும் வாதித்தான். தான் ஒளியென்றும் தம் இருளென்றும் கூறினான். அல்லாஹ்வின் தராசு பற்றி அவன் அறியவில்லை.

அபூஜஹ்லின் மகன் நம்பிக்கைகொண்டு முஸ்லிமானான். நூஹ¤ நபியின் மகனோ நம்பிக்கை கொள்ளாமல் வழிகெட்டான்.

மேகமூட்டமுள்ள இருண்ட நாட்களில் கிப்லாவின் திசையறிய அறிவைப் பயன்படுத்தலாம். தலைக்கு மேலே சூரியனும் கண்ணுக்கெதிரே கஅபாவும் இருக்கும்போது ஒப்பிடத் தேவையில்லை. செய்பவன் குருடன்.

வஹீ எழுதிக்கொண்டிருந்தவன் இறைவனின் பறவை பாடும் பாட்டு தன்னிடமிருந்தும் வருகிறது என்று எண்ணினான். பறவை தன் சிறகால் அடித்ததும் குருடாகிப் போனான். இருளில் மூழ்கினான்.

‘ரோ’ என்ற எழுத்திலிருந்தும் ‘ஜா’ என்ற எழுத்திலிருந்தும் ரோஜாவைப் பறிக்க முடியுமா என்ன?

***

இசைக்கலைஞனின் கதை – கதை 07

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தபோது ஒரு இசைக்கலைஞன் இருந்தான். பாடுவதிலும் யாழ் மீட்டுவதிலும் இணையற்று விளங்கினான் அவன். அவனுடைய குரலின் இனிமை குயிலை மயக்கமடைய வைப்பதாக இருந்தது. எந்த சபைக்கும் அவனது குரல் ஒரு ஆபரணமாக விளங்கியது. அவன் குரலைக் கேட்டால் யானைக்கும் சிறகு முளைக்கும். இறந்தவர் உயிர் பெறுவர். (மறுமை நாளில் உயிரெழுப்பும் வானவரான) இஸ்ரா·பீலின் குரலைக் கேட்டதுபோல.

இறைத்தூதர்கள் அனைவருக்குள்ளும் ஒரு (ஆன்மீக) இசையிருந்தது. இறைவனைத் தேடியவர்களுக்கு அது உயிர் கொடுத்தது. நம் புறச்செவிகளுக்கு அது கேட்பதில்லை. பரியின் இசை மனிதர்களுக்குக் கேட்கிறதா என்ன? அவர்களின் ரகசியங்கள் மனிதர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் பரியின் இசைகூட இந்த உலகத்திற்காகத்தான்.

இதயங்களின் இசையே எல்லா இசையையும்விட சிறந்ததாகும். ஏனெனில், வானவரும் சரி மனிதரும் சரி, இருவருமே தங்கள் அறியாமையின் சிறையில் அகப்பட்டுக்கொண்டவர்கள்தான்.

இறைநேசர்களின் அந்தரங்க இசை என்ன சொல்கிறது? “ஓ! ‘லா’வின் துகள்களே! முதல் ‘லா’ — இல்லையெனும் மறுப்பு — விலிருந்து உங்கள் தலையைத் தூக்குங்கள். கற்பனையிலிருந்து எழுங்கள்” என்கிறது.

இறைநேசர்களின் அந்தரங்க இசையிலிருந்து நான் கொஞ்சம் எடுத்துக் காட்டினால்கூடப் போதும். கல்லறையிலிருந்து ஆத்மாக்கள் தலைதூக்கும். கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அந்த இசை வெகுதொலைவில் உள்ளதல்ல. எனினும் அதைப்பற்றி எடுத்தியம்ப எனக்கு அனுமதியில்லை.

கேளுங்கள். இறைநேசர்கள் என்பவர்கள் யார்? நிகழ்காலத்தின் இஸ்ரா·பீல்கள் அவர்கள். அவர்களின் பொருட்டுத்தான் இறந்தவர்கள் உயிர் பெறுகிறார்கள். அவர்களின் குரல் கேட்டதும் இறந்தவர்களின் ஆத்மாக்கள் க·பன் துணிகளுக்குள்ளிருந்து தலைகள உயர்த்துகின்றன.

இந்தக்குரல் மற்ற குரல்களைப் போன்றதல்ல. மரித்தவரை உயிர்ப்பிக்கும் இறைவனின் குரலல்லவா அது? இந்த உண்மையை அவைகள் புரிந்து கொள்ளும்.

அன்னை மரியமுக்கு தனது இதயத்திலிருந்து இறைவன் எதைக்கொடுத்தானோ அதைத்தான் அவனது குரல் அழைப்பு நமக்குக் கொடுக்கிறது. மறைமுகமாகவோ நேரடியாகவோ.

தோலுக்குக்கீழே மக்கி மண்ணாகிப் போனவர்களே! நண்பனாகிய இறை நேசர்களின் குரல் கேட்டு உயிர் பெறுங்கள். இருப்புக்கு வாருங்கள். ஏனெனில் அந்தக்குரல் இறைநேசரின் தொண்டையிலிருந்து புறப்பட்டாலும், அது அரசனிடமிருந்து (இறைவனிடமிருந்து) வருவதுதான்.

இறைநேசர்களை நோக்கி இறைவன் சொன்னான் : “நானே உனது நாக்கு, கண், புலன்கள், இன்பம், கோபம் (எல்லாமே). நீ என்னாலேயே பார்க்கிறாய், கேட்கிறாய். சமயங்களில் நான், அது நீ என்றும், (வேறுசில) சமயங்களில் அது நான் என்றும் சொல்வேன். எது சொன்னாலும் அனைத்தையும் ஒளிர்விக்கும் சூரியன் நானே.”

மதுவை நீ ஜாடியிலிருந்து குடித்தால் என்ன, கோப்பையிலிருந்து குடித்தால் என்ன? என்னைப் பார்த்தவர்களுக்கும், என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும் சுபசோபனம் என்று பெருமானார்(ஸல்) ஏன் சொன்னார்கள்?

ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஆயிரம் விளக்குகளை ஏற்றினாலும் சரி, கடைசி விளக்கைப் பார்க்கும்போது, ஒவ்வொருவனும் முதல் விளக்கையே பார்க்கின்றான். ஏனெனில் ஒளி ஒன்றுதான். கடைசி விளக்கிலிருந்து பார்த்தாலும் சரி, முந்தியவற்றிலிருந்து பார்த்தாலும் சரி. புரிந்து கொள்ளுங்கள்.

முள்ளைச் சுவைக்கும் ஒட்டகங்களே! உங்கள் முதுகின்மீது அமர்ந்திருப்பது முஸ்த·பாவாகும். ஒரு ரோஜா மூட்டையை முதுகிலேயே வைத்துக்கொண்டு முட்புதர்களை நாடி நீங்கள் ஏன் விரைகின்றீர்கள்?

இறைநேசர்களின் உடல்களும் அவர்களுடைய உயிரைப் போலவே தூய்மையானது. அவர்களுடைய பேச்சும் மூச்சும் அப்படியே. மற்றவர்களுடையதைப்போல அவர்களின் புனித உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதில்லை.

தோழர்களே ஜாக்கிரதை ! வசந்தகாலக் குளிரிலிருந்து உங்கள் உடலைப் போர்த்தாதீர்கள். வசந்தகாலம் மரங்களுக்கு என்ன தருகிறதோ, அதையொத்ததை இந்தக்குளிர் உங்கள் ஆன்மாக்களுக்குத் தரும். ஆனால் இலையுதிர்காலக் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றார்கள் பெருமானார்.

இந்த ஹதீதின் ஜீவனை, விளக்கம் தரும் பலர் புரிந்துகொள்ளவில்லை. மலையைக் கண்டவர் அதன் உள்ளே இருக்கும் தங்கச் சுரங்கத்தைக் காணவில்லை.

இறைவனுடைய பார்வையில் இலையுதிர்காலம் என்பது கீழான ஆசையான ந·ப்ஸைக் குறிக்கும். ஞானமும் உயிரும் நிரந்தரமான வாழ்வின் தாரங்களான வசந்தகாலமாகும். எனவே இறைநேசர்கள் எதைச் சொன்னார்களோ அது குளிராக (மென்மையாக) இருந்தாலும் சரி, சூடாக (கடுமையாக) இருந்தாலும் சரி, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே உங்கள் மார்க்கத்தின் உறுதுணையாகும். உங்கள் உடம்பை அவற்றிலிருந்து மறைக்கவேண்டாம் என்பதே அந்த ஹதீதின் சரியான விளக்கமாகும்.

சரி, கதைக்கு வருவோம். அந்த இசைக்கலைஞனின் பாடலைக்கேட்டு ஆன்மா எனும் பறைவை சிறகடிக்கும். னால் காலம் செல்லச் செல்ல அவன் வயோதிகனானன். பலகீனத்தால் அவனுடைய ஆன்மா எனும் கழுகு, பூச்சிகளைப் பிடித்துத் தின்ன ரம்பித்தது. ஆத்மாவை உயிர்ப்பிக்கும் அவனது குரல் அவல நிலையடைந்தது. கழுதையின் கத்தலைவிட மோசமாகியது. அசிங்கமாகாத அழகு எது? கடைசியில் தரையாகாத கூரை எது? ஒரு சின்ன ரொட்டித் துண்டுக்குக்கூட கடனாளியாகும் நிலைக்கு வந்தான் அந்தக் கலைஞன்.

“இ¨றைவா எனக்கு நீண்ட யுளைக் கொடுத்தாய். எவ்வளவோ உதவிகள் செய்தாய். உனது கருணை அளப்பரியது. எழுபது வருடங்களாக நான் (உனை மறந்த) பாபத்தைச் செய்துவிட்டேன். எனினும் உனது கருணையை நீ குறைக்கவில்லை. இப்போது நான் சம்பாதிப்பது ஒன்றுமில்லை. இன்று நான் உன் விருந்தாளி. எனது யாழை இன்று நான் உனக்காக மீட்டுவேன்” என்று சொல்லி தனது யாழை எடுத்துக்கொண்டு இறைவனை நாடி மதினா நகரின் அடக்க ஸ்தலமொன்றிற்குச் சென்றான் அந்தக் கலைஞன்.

அழுதுகொண்டே அங்கே வெகு நேரம் வாசித்தான். பின் தனது யாழை தலையணையாக வைத்து கல்லறை ஒன்றின்மீது தலை சாய்த்தான். உறக்கம் வந்தது.

அவனுடைய ஆன்மா எனும் பறவை உடல் கூட்டைவிட்டுப் பறந்தது.

தலையும் காலும் இன்றி நான் பயணம் செய்வேன்.
வாயும் பல்லும் இன்றி நான் புசிப்பேன்.
நினைவாற்றலும் எண்ணமும் இன்றி நான் சொர்க்கத்தில் உள்ளவர்களோடு அளவளாவுவேன்.
மூடிய கண்களுடன் இந்த உலகம் முழுவதையும் பார்ப்பேன்.
கைகளின்றி நான் ரோஜா மலர்களைப் பறிப்பேன்.
எந்த ஓடை நீரின் பொருட்டால் அய்யூப் அவர்கள் தூய்மை அடைந்தார்களோ, அந்த ஓடையில், அந்தத் தேனாற்றில் குளிப்பேன், குடிப்பேன்
என்று பாடிக்கொண்டே பறந்தது.

விண்ணளவு பெரியதாக இந்த மஸ்னவி இருந்தாலும், ஆன்மீக உலகின் பெருமைகளை பாதிகூட என்னால் சொல்லமுடியாது. சரி, இப்படியாக அந்த இசைக்கலைஞனின் ஆன்மா சஞ்சரித்திருக்க, கலீ·பா உமர் அவர்களுக்கு இறைவன் உறக்கத்தை அனுப்பினான். நேரங்கெட்ட நேரத்தில் வந்த அந்த உறக்கம் இறைவன் அனுப்பியதுதான் என்று உமரும் புரிந்து கொண்டார்கள்.

உறக்கத்தில் வந்த கனவில் இறைவனிடமிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டார்கள். எல்லாக் குரல்களும் எந்தக் குரலில் இருந்து வருகிறதோ அந்தக்குரலை. உண்மையில் அது ஒன்றுதான் குரலாகும். மற்ற யாவும் எதிரொலிகள்தான்.

செவிகளும் இதழ்களும் இன்றி, துருக்கியரும், குர்தும், ·பார்சிகளும், அரபிகளும் அந்தக் குரலைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் என்ன? மரங்களும் கற்களும்கூட அந்தக் குரலைப் புரிந்துகொண்டன. “நான் உங்கள் நாயன் அல்லவா?!” என்ற அந்தக்குரல் ஒவ்வொரு கணமும் கேட்டுக்கொண்டுதான் உள்ளது.

ஒருமுறை பெருமானாரிடம் ஒரு மரத்தூண் முறையிட்டது. “யா ரஸ¥லுல்லாஹ்! எப்போதும் என் மீது சாய்ந்திருப்பீர்களே, இப்போதெல்லாம் மிம்பர் (மேடை) நோக்கிப் போய்விடுகிறீர்கள். உங்களை விட்டுப் பிரிந்ததால் என் ஆன்மா ரத்தம் சிந்துகிறது” என்றது.

“ஓ தூணே! உனக்கு என்ன வேண்டும்? நீ என்னவாக விரும்புகிறாய்? ஈச்ச மரமாக விருப்பமா? அல்லது அந்த உலகில் சைப்ரஸ் மரமாக விருப்பமா?” என்று கேட்டார்கள்.

“நிரந்தரமான ஒரு வாழ்வையே பெற விரும்புகிறேன்” என்றது அது.

கவனியுங்கள். தற்காலிமானதை நாடும் மரமண்டைகளே! அந்த மரத்தூண் நிரந்தரமானதைக் கேட்கிறது!

பெருமானார் அந்த தூணை பூமியுனுள் புதைத்தார்கள். உயிர்த்தெழும் நாளில் மனிதர்களைப்போல அதுவும் உயிர்த்தெழட்டும் என்று.

ஆன்மீக ரகசியங்களை அறியாதவர்களால் ஜடப்பொருள்களின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியுமா? அறிவை நம்பியிருக்கும் தர்க்கவாதிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சந்தேகத்தின் நிழல் பட்டதால் எத்தனையோ தர்க்கவாதிகள் அதளபாதாளத்தில் விழுந்துள்ளார்கள். அவர்கள் நிற்கும் கால்கள் மரத்தால் னது. மரக்கால் உறுதியானதல்ல.

நிற்பதற்கும் நடப்பதற்கும் குருடனுக்குத்தான் கழி தேவை. தர்க்கம், அறிவு போன்ற கழிகளைக் கொடுத்ததே இறைவன் தானே! நீங்கள் அதைக்கொண்டு, இறைவனைச் சேருகின்ற வழியைத் தேடாமல், அந்தக் கழிகளை சண்டைபோடும் கருவிகளாக மாற்றிவிட்டீர்கள். குருடர்களே! கம்பைத் தூக்கி எறிந்துவிட்டு, கம்பைக் கொடுத்தவனின் சட்டையைப் (பற்றிப்) பிடித்துக் கொள்ளுங்கள்.

மூஸாவின் கம்பு பாம்பான அற்புதத்தையும், பெருமானாரின் தூண் பேசிய அற்புதத்தையும் சிந்தியுங்கள்.

ஒரு தடவை அபூஜஹ்ல் சில கூழாங்கற்களை எடுத்து தன் கைகளுக்குள் மறைத்துக்கொண்டான். பெருமானாரைப் பார்த்து, “அஹ்மதே! நீர் உண்மையிலேயே இறைவனின் தூதர் என்றால், என் கைகளுக்குள் உள்ளது என்ன என்று சொல்லும்” என்றான்.

“உம் கைகளுக்குள்ளே உள்ளது என்ன என்று சொல்லவா அல்லது அவைகளை நான் யாரென்று சொல்ல வைக்கவா?” என்றார்கள் இறுதிநபி.

“இரண்டாவது” என்றான் அபூஜஹ்ல்.

“சரி, அல்லாஹ் அதைவிட சக்தி மிக்கவன்” என்றார்கள் எம்பெருமானார்.

அவ்வளவுதான். உடனே அபூஜஹ்லின் கைகளுக்குள்ளிருந்த கற்கள் எல்லாம் “லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸ¥லுல்லாஹ்” என்று முழங்க ஆரம்பித்தன. சினத்தில் கற்களைத் தரையில் வீசினான் அபூஜஹ்ல். கல்லும், மண்ணும், மரமும் எப்படிப் பேசும் என்று புரிந்ததா? சரி கதைக்கு வருவோம்.

“உமரே! எனது அடியானின் தேவையை நிறைவேற்றும். எமது மரியாதைக்குரிய அடிமை அவர். அவரைத்தேடி இடுகாட்டுக்கு நடந்து செல்லும். கஜானாவில் இருந்து எழு நூறு தீனார்கள் எடுத்துச் செல்லும்”

“இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவரே! இந்தக் குறைவான பணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதைக்கொண்டு பட்டு நூல் வாங்கிக்கொள்ளுங்கள். தீர்ந்தவுடன் மறுபடியும் வாருங்கள் என்று கூறும்”.

குரலைக் கேட்டு உமர் அதிர்ச்சியுற்று எழுந்தார்கள். சொன்னபடி சென்ற உமர், இறைவன் குறிப்பிட்ட அந்த உயர்ந்த அடியானை அங்கு தேடினார்கள். அங்கே அந்த வயசான இசைக்கலைஞனைத் தவிர வேறுயாரும் இல்லை.

இவரா என்று சந்தேகமுற்று, மறுபடியும் தேட ரம்பித்தார்கள். பாலவனத்தில் வேட்டைக்குச் சென்ற சிங்கத்தைப்போல அலைந்துவிட்டு, வேறு யாரும் இல்லாததைக் கண்ட உமர், “எத்தனையோ ஒளியூட்டப்பட்ட இதயங்கள் இருட்டில் அகப்படுகின்றன” என்றார்கள்.

அந்த இசைக்கலைஞனின் அருகில் வந்து, மரியாதையாக அமர்ந்தார்கள். தும்மல் வந்தது. தும்மலில் விழிப்படைந்த இசைக்கலைஞன் உமரைக் கண்டு வியப்பும் பயமும் அடைந்தான். அங்கிருந்து போகத்தலைப்பட்டான்.

“பயப்படாதீர்கள். என்னைக்கண்டு ஓட வேண்டாம். இறைவனிடமிருந்து தங்களுக்கு நல்ல செய்தி கொண்டுவந்துள்ளேன். இறைவனே உங்களைப் புகழ்ந்தான். உங்கள் முகத்தை நாடி வரும்படிச் செய்தான்” என்று றுதல் சொல்லி பணத்தைக் கொடுத்தார்கள்.

அவமானத்தால் அந்த இசைக்கலைஞன் உருகினான். “ஈடு இணையற்ற இறைவா!” என்று புலம்பினான். வெகுநேரம் அழுது அரற்றினான். பின் தனது யாழைத் தரையில் மோதி சுக்கு நூறாக உடைத்தான்.

“ஓ யாழே ! எனக்கும் இறைவனுக்கு இடையில் நீ திரையாக இருந்தாய். எழுபது ஆண்டுகளாய் என் ரத்தத்தைக் குடித்தாய். இறைவனின் முன்னே உன்னால் என் முகம் கருப்பாகிவிட்டது.”

“இறைவன் எனக்கு உயிரையும் இந்த வாழ்வையும் கொடுத்தான். ஒவ்வொரு நாளின் மதிப்பையும் அருமையையும் அறிவார் எவர்? என் வாழ்வை நான் மூச்சுவிட்டே செலவழித்துவிட்டேன் இசையாக. இசையில் கவனம் வைத்த நான் இந்த உலகை விட்டுப் பிரியும் நாளை மறந்து போனேன். என்னைவிட எனக்கு நெருக்கமாக உள்ள இறைவா! உன்னைத் தவிர எனக்கு நீதி வழங்குபவர் எவருமில்லை” என்று புலம்பினான்.

“கடந்துபோனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கடந்த காலமும் எதிர்காலமும்தான் இறைவனிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற திரையாகும். இரண்டையும் நெருப்பிலிடுங்கள்.”

“உங்களுடைய அறிவு இறைவனிடமிருந்து வரவில்லையெனில், நீங்கள் தேடும் பாப மன்னிப்புக்கூட பாபமாகிவிடும். கடந்துபோனதற்காக வருந்துபவர்களே! இப்படி வருந்துவதற்காக எப்போது வருந்தப்போகிறீர்கள்?” என்றார்கள் கலீ·பா உமர்.

ரகசியங்களை கலீ·பா எடுத்தியம்பியதும் வயோதிகனின் உள்ளம் விழித்துக்கொண்டது. (அழுகையும் சிரிப்புமற்ற) ஆன்மாவைப் போலானான் அவன். பின் இறைவனின் பேரொளியில் மூழ்கிப்போனான் அவன்.

அருஞ்சொற்பொருள்இஸ்ரா·பீல் — தீர்ப்பு நாளில் சூர் எனும் கருவியை ஊதி மறு உயிர் தரும் வானவர்
மரியம் — இறைத்தூதர் ஈஸா அவர்களின் அன்னை. புனித பைபிள் இவரை மேரி என்கிறது
க·பன் — இறந்த உடலை போர்த்தியிருக்கும் தையலில்லாத வெள்ளைத் துணி
ந·ப்ஸ் — கீழான சைகள்
பெருமானார், முஸ்த·பா, அஹ்மது — முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
மூஸா — ஒரு நபி. அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த அற்புதம் ஒரு கழி. அது இரவில் விளக்காகும். எதிரிகளுக்குப் பாம்பாகும். அதைக்கொண்டுதான் அவர்கள் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்கள். மூஸா புனித பைபிளில் மோசஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
அபூஜஹ்ல் — பெருமானாரின் தலையாய எதிரிகளில் ஒருவன்

***
கீரை வியாபாரியும் கிளியும் – கதை – 08

இனிமை கொஞ்சப் பேசும் பச்சைக்கிளியொன்றை வளர்த்து வந்தான் ஒரு கீரை வியாபாரி. எஜமான் இல்லாத நேரத்தில் மேஜையில் அமர்ந்து அது கடையைக் கவனித்துக்கொள்ளும். கடைக்கு வருபவர்களிடம் கனிவாகப் பேசும். வாடிக்கையாளர்களிடம் வாய் இனிக்கப் பேசும். மனிதர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறு பேசிய அந்தக்கிளி, பறவைகளின் பாடல்களிலும் பரிச்சயம் கொண்டிருந்தது.

ஒரு நாள் அது மேஜையிலிருந்து பறந்தது. பறந்த வேகத்தில் மேஜையிலிருந்த ரோஜா எண்ணெய் பாட்டில்களைக் கவிழ்த்துவிட்டது.

வீட்டிலிருந்து வந்த எஜமான் வழக்கம்போல மேஜையில் அமர்ந்தான். மேஜை பூரா பரவியிருந்த எண்ணெயால் அவனுடைய டை முழுவதும் அசிங்கப்பட்டுப் போனது.

தலைதூக்கியது கோபம். கிளியில் தலையில் ஓங்கி அடித்தான். அடியின் உக்கிரத்தில் வழுக்கையாகிப் போனது வாஞ்சைக்கிளியின் வழுவழு தலை.

சில நாட்களில் கிளியை விட்டு எங்கோ பறந்து போனது அதன் பேச்சு. கிளியின் மௌனத்தைத் தாங்க முடியாத கீரை வியாபாரியோ வருத்தப் பெருமூச்சுக்கள் விட்டுக்கொண்டிருந்தான்.

தாடியைப் பிய்த்துக் கொள்வான். “ஐயகோ, என் செல்வங்களின் சூரியன் மேகங்களுக்கு அடியில் புதையுண்டு போனதே” என்று புலம்புவான்.

கிளிக்கு மறுபடியும் பேச்சு வரவேண்டும் என்பதற்காக, கண்ணில் பட்ட தர்வேஷ் (துறவி) களுக்கெல்லாம் தாராளம் செய்துகொண்டிருந்தான். அன்பளிப்புகள், காணிக்கைகள் வழங்கினான்.

மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் இவ்விதம் கழிந்தபின், கனக்கும் மனதுடன் ஒரு நாள் மேஜையின்மீது அமர்ந்தான் கீரை வியாபாரி. மறுபடியும் பேசிவிடும் என்ற நம்பிக்கையில் கிளிக்கு ஏதேதோ தின்பதற்குக் கொடுத்துப் பார்த்தான்.

அப்போது அந்தப்பக்கமாக ஒரு சூ·பி வந்தார். அவருடைய தலை பிச்சைப் பாத்திரத்தின் வெளிப்பக்கத்தைப்போல வழுக்கையாக இருந்தது.

அவரைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்து கிளி பேசத்தொடங்கியது.

“அட, தர்வேஷே! எப்படி உம் தலை இப்படி வழுக்கையானது?! என்னைப் போல நீரும் பாட்டிலில் இருந்த எண்ணெயைக் கொட்டிவிட்டீரா?”

கிளியின் அனுமானத்தை எண்ணி, நின்று கொண்டிருந்தவர்கள் நகைத்தார்கள்.

(இதுதான் கதை. இதைவைத்து மௌலானா அவர்கள் தருகின்ற விளக்கம் அற்புதமானது. குறிப்பாக, தாங்கள் சொல்வதுதான் சரி என்று பிடிவாதமாக மேம்புல் மேய்கிற முஸ்லிம் ‘அறிஞர்க’ளுக்கு பாடம் புகட்டக் கூடியது. கேளுங்கள்.)

மனிதப் புனிதர்களான இறைநேசர்களின் செயல்பாடுகளை உங்களுடையதை வைத்து எடை போட்டுவிடாதீர்கள். ஷேர் (சிங்கம்) என்பதும் ஷீர் (பால்) என்பதும் எழுதும்போது ஒன்றுபோலத்தான் தெரியும் !

இந்த விஷயத்தில் இந்த உலகம் முழுவதும் தவறாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆண்டவனுடைய அடியார்களை சரியாகப் புரிந்துகொள்பவர்கள் அரிது. இறைநேசர்களும், இறைத்தூதர்களும் தங்களைப் போன்றவர்கள்தான் என்று (புரியாத) மக்கள் கூறுகிறார்கள்.

“பாருங்கள், நாங்களும் மனிதர்கள், அவர்களும் மனிதர்கள்! தூக்கத்திற்கும் உணவுக்கும் எங்களைப் போலவே அவர்களும் அடிமைகள்தான்” என்கிறார்கள்.

அவர்களுக்கும் இறைநேசர்களுக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசமிருப்பதை தங்களுடைய குருட்டுத்தனத்தினால் அவர்களால் பார்க்க முடியவில்லை.

இரண்டு வகையான ‘ஜன்பூர்’ பூச்சிகளும் ஒரே இடத்திலிருந்து சாப்பிட்டாலும், குடித்தாலும் — ஒன்றிலிருந்து வருவது கொட்டும் குளவி. மற்றொன்றிலிருந்தோ தேன்சொட்டும் தேனீ!

இரண்டு வகையான மான் இனங்களும் புல்லைத் தின்று நீரைக்குடித்து வாழ்ந்தாலும், ஒன்றிலிருந்து கிடைப்பது சாணம். மற்றொன்றிலிருந்தோ தூய கஸ்தூரி !

(இரண்டும்) பார்வைக்கு ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் உப்பு நீரும் குடிநீரும் பார்ப்பதற்கு தெளிவாகத்தான் தெரியும். (ஆன்மீகச்) சுவை அறிந்தவர்களைத் தவிர வேறு எவரால் இதைப் பிரித்து அறியமுடியும்?

இறைத்தூதர்கள் செய்த அற்புதங்கள், மந்திரவாதிகள் செய்து காட்டிய தந்திரங்கள் இரண்டுமே ஏமாற்று வேலை என அறியாதவர்கள் எண்ணினார்கள்.

இறைத்தூதர் மூஸாவிடம் இருந்ததைப் போலவே, அக்கால மந்திரவாதிகளும் கையில் ஒரு கோல் வைத்திருந்தார்கள். ஆனால் மூஸாவின் கோல் ஆண்டவனின் அருளைக் கொண்டு உயர்த்தப்பட்டது. மந்திரவாதிகளின் கோல்களோ சர்வவல்லமை படைத்தவனின் சாபத்தைக் கொண்டு தூக்கப்பட்டது.

இறைநேசர்களும் இறைத்தூதர்களும் தங்களைப் போன்றவர்கள்தான் என்று நினைக்கிற நம்பிக்கையற்றவர்கள் மனிதக் குரங்கைப் போன்றவர்கள். மனிதன் செய்வது மாதிரியெல்லாம் ‘காப்பி’யடித்து செய்துவிட்டு, நானும் மனிதனும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொள்கிறது அது.

தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் (போன்ற) கடமைகளை நிறைவேற்றும்போது, உண்மையான நம்பிக்கையாளர்களும் நயவஞ்சகர்களான முனா·பிக்குகளும் ஒன்றுபோலத்தான் தோன்றுவார்கள். ஆனால் ஒருவருக்கு அதனால் வெற்றியும் மற்றவருக்கு அதனால் தோல்வியும் உண்டாகிறது!

உரைகல் இல்லாமல் சுத்தமான தங்கத்தை எப்படிப் பிரித்தறிவாய்? அந்த உரைகல் உனது அறிவல்ல. யாருடைய இதயத்தில் அல்லாஹ் அந்த உரைகல்லை வைக்கிறானோ, அவர்களுக்குத்தான் நிச்சயமற்றதையும், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதையும் பிரித்தறியக்கூடிய தகுதி வரும்.

உலக அறிவென்பது உலகில் முன்னேற ஏணி. மார்க்க ஞானமென்பது சொர்க்கத்தின் ஏணி!

உடல் ரோக்கியத்தை மருத்துவனிடம் தேடு. உள்ள ஆரோக்கியத்திற்கு அல்லாஹ்.

ஆன்மீக வழி, உடல் ஆரோக்கியத்தை முதலில் அழிக்கும். பின்பு முன்னதைவிட ஆரோக்கியமானதாக அமைக்கும். கீழே உள்ள தங்கப் புதையலுக்காக வீட்டை இடித்துவிட்டு, பின்பு அந்தப் புதையலைக் கொண்டே வீட்டை மறுபடியும் முன்னைவிட அழகாக, உறுதியாகக் கட்டுவது மாதிரி.

ஆற்று நீரைக் காலி செய்துவிட்டு, மறுபடி அதில் குடிநீரை மட்டும் ஓடவிடுவது மாதிரி.

தோலைக்கிழித்து, உள்ளே தைத்த துருப்பிடித்த அம்பின் முனையை வெளியே எடுத்த பிறகு, மறுபடியும் புதியதோல் காயத்தின் மீது வளர்வது மாதிரி.

இறைவனில் மூழ்கிய இறைநேசர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் உன்னுடய உண்மையான முகத்தைக் கண்டுகொள்.

தமுடைய முகத்தோடு எத்தனையோ பேய்கள் உலாவுகின்றன. ஜாக்கிரதை!

இறைநேசர்களுடைய மொழியில் பேசி, பாமரர்களை அயோக்கியர்கள் ஏமாற்றுவார்கள் ஜாக்கிரதை!

***
சிங்கமும் முயலும் – கதை  09

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது மற்ற மிருகங்களையெல்லாம் கொன்று தின்று கொண்டிருந்தது. அஞ்சி, மிஞ்சியிருந்த மிருகங்களெல்லாம் ஒன்றுகூடின. தாங்களே ஒரு நாளைக்கு ஒரு மிருகம் என, சிங்கத்துக்கு உணவாக அனுப்பிவிடுகிறோம், மற்ற மிருகங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களுடைய அழிவு அவ்வளவு விரைவில் வரவேண்டாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இறப்பைத் தள்ளிப் போட்டு, றுதலைந்து கொள்கிறோம் — என சிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தன. கருணையோடு சிங்கமும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அவ்வாறே தினம் ஒரு விலங்கு என பலியாகிக்கொண்டிருந்தது. முயலின் முறை வந்தது.

அறிவான அந்த முயலோ, வேண்டுமென்றே தாமதமாகச் சென்று, காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதாகப் பொய்சொல்லி, இந்த சிங்கத்தை ஒரு கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க வைத்தது. கிணற்றின் உள்ளே தெரிந்த தனது பிம்பத்தை தனது எதிரி என்று நினைத்து முட்டாள் சிங்கம், கிணற்றினுள்ளே பாய்ந்து உயிரை விட்டது. எல்லா மிருகங்களும் முயலைப் பாராட்டின.

இது நம் அனைவருக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்த கதை. னால் இந்தக் கதையில் நமக்குத் தெரியாதது பல உண்டு. இக்கதையின் ஆன்மீகப் பரிமாணங்களை நாம் அறியமாட்டோம். இது வெறும் சிங்கத்தையும் முயலையும் பற்றிய கதை என்றுதான் நாம் இன்றுவரை எண்ணி ஏமாந்துகொண்டிருக்கிறோம். இது நம் ஒவ்வொருத்தரையும் பற்றிய கதையே. நமக்குள்ளேயே இருக்கின்ற சிங்கத்தையும் முயலையும் மௌலானா ரூமி தெளிவாக அடையாளம் காட்டுகிறார்கள். இறைத்தூதர் மூஸாவின் கையிலிருந்த சாதாரண கோல் எப்படி இருளில் ஒளியாகவும், பகைவர் முன்னே பாம்பாகவும், செங்கடலை இரண்டாகக்கிழிக்கும் சக்தியாகவும் மாறியதோ அதுபோல, மௌலானாவுக்கு இந்த கதை பயன்படுகிறது. சிங்கமும் மற்ற மிருகங்களும் என்ன பேசின என்று தெரியுமா? நீங்களே கேளுங்கள்.

சிங்கம் : மிருகங்களே! உங்கள் வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றுவீர்களேயானால், நான் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறேன். மனிதப் பாம்புகள், தேள்களிடத்தில் நான் பலமுறை கடிபட்டுள்ளேன். அவர்களைப்போல நீங்கள் அயோக்கியத்தனம் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மிருகங்கள் : ஓ எல்லாம் அறிந்த ஞானியே ! இறைவனை நம்புங்கள். அவனின் விதையை மீறி எதுவும் நடக்காது.

சிங்கம் : உண்மைதான். எனினும், முயற்சியை செய்வதும் பெருமானாரின் வழிமுறைதான். அல்லாஹ்வை நம்புங்கள். அதே சமயம், உங்கள் ஒட்டகத்தின் கால்களைக் கட்டிவையுங்கள் என்று உரத்த குரலில் பெருமானா நவின்றுள்ளார்கள்.

மிருகங்கள் : இறைவன்மீது நம்பிக்கை வைப்பதைவிட சிறந்த ஒரு முயற்சி இந்த உலகில் இருக்க முடியாது. எல்லாவற்றையுமே அவன் பொறுப்பில் விட்டுவிடுகின்ற நிலையைவிட அல்லாஹ்வுக்கு உகந்தது வேறெது?

மனிதன் (தன் முயற்சியின் பலனாக) பாம்பிடமிருந்து தப்பித்து (இறைவிதிப்படி) ராட்சத மிருகத்தின் வாயில் அகப்பட்டுக்கொள்கிறான்.

மனிதன் தன் முயற்சி, அறிவின் செயல்பாடுகளின் விளைவால் தனக்கே வலைவிரித்துக்கொள்கிறான். எதை உயிர் என்று அவன் நினைத்தானோ, அதுவே அவன் உயிரைக் குடிப்பது என்பதை அவன் அறியவில்லை.

கதவுகளைப் பூட்டிய அவன், பகைவன் தனது வீட்டுக்கு உள்ளேயே இருந்ததை அறியவில்லை. பழிவாங்கத் துடித்த் ·பிர் அவ்னின் கதை தெரியாதா? யிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளைஅவன் கொன்று குவித்தான். னால் எந்த ஒரு குறிப்பிட்ட குழந்தையைக் கொல்ல நினைத்து அவன் அந்தக்காரியம் செய்தானோ, அந்தக் குழந்தை, பாதுகாப்பாக, ராஜ மரியாதையோடு, அவனது அந்தப் புரத்திலேயே வளர்ந்து வந்தது.

நமது பார்வையில் எண்ணற்ற குறைகள் உள்ளதால், நண்பனான அல்லாஹ்வின் பார்வையில் நம்முடைய பார்வையை அழித்து இல்லாமலாக்கிவிடுங்கள். பிறகு உங்கள் பார்வையெனபது அல்லாஹ்வுடையை பார்வையாகிவிடும். உங்கள் தேவைகளை முழுமையாக அடையமுடியும்.

எந்த இறைவன் வானத்திலிருந்து மழையைத் தருகிறானோ, அந்த இறைவன் நிச்சயமாக உங்களுக்கு தினசரி உணவையும் தருவான். நம்புங்கள்.

சிங்கம் : உண்மைதான். னால் இறைவன் நமக்கு முன்னே ஒரு ஏணியைப் போட்டுள்ளான். அதில் உள்ள படிகளில் கால்வைத்து, படிப்படியாக நாம்தான் முன்னேற வேண்டும்.

கை கால்களை வைத்துக்கொண்டு, நாம் ஏன் முடவர்களைப் போல வாழவேண்டும்? எதற்காக எஜமானன் தனது அடிமையின் கையில் மண் வெட்டியைக் கொடுக்கிறான் என்று அடிமை புரிந்துகொள்ள மாட்டானா?

நீங்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்ற சக்தியை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளான். அதற்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களேயானால் அந்த சக்தி அதிகமாகும்.

நடுவீதியில் படுத்து உறங்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். வீடு வரும்வரை உறங்கலாகாது (பயணம் செய்ய வேண்டும்) என்று நான் சொல்கிறேன். பழுத்த மரத்தின் அடியில் வேண்டுமானால் படுத்து உறங்குங்கள். உங்கள் பயணக் களைப்பும் பசியும் தீர. காற்றடிக்கும்போதெல்லாம் அது கனிவகைகளைக் கொட்டும். அது உங்கள் பயணம் தொடர உதவும். இதைப்புரிந்துகொள்ளாத தலையெல்லாம் தலையல்ல, வால்தான்.

இறைவன்மீது நம்பிக்கை வைப்பதென்றால், அவன் தந்த வேலையின் மீது நம்பிக்கை வைப்பதுதான். விதையை நீங்கள்தான் விதைக்க வேண்டும். அறுவடையைப் பற்றிய கவலையை அல்லாஹ்விடம் விடுங்கள்.

மிருகங்கள் : பேராசை கொண்டு பல விதைகளை விதைத்த மனிதர்கள் எத்தனையோபேர் உண்டு. அவர்களில் எத்தனைபேர் வாழ்ந்தார்கள்? னால் அவர்களுக்கென்று எதை இறைவன் விதித்தானோ அதற்குமேல் ஒரு குண்டுமணிகூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுடைய திறமைகளும் திட்டங்களும் என்னாயிற்று?

ஒரு நாள் பகல் ஒரு மனிதன் சுலைமான் நபியவர்களின் சபைக்கு வந்தான். எனக்கு பயமாக உள்ளது. உயிரை வாங்கும் வானவராகிய இஸ்ராயீல் என்னை கோபமாக முறைத்துப் பார்த்தார். தயவுசெய்து காற்றுக்குக் கட்டளையிடுங்கள். என்னை இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள இந்திய நாட்டில் கொண்டுபோய் சேர்க்கச் சொல்லுங்கள். அங்கே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று வேண்டினான்.

வறுமையைக் கண்டு பயந்து ஓடுவதும் அந்த மனிதனின் பயத்தைப் போன்றதுதான். பேராசையும் அதற்கான முயற்சியும் இந்தக்கதையில் வரும் இந்தியாவைப் போன்றது. அறிந்து கொள்ளுங்கள்.

அந்த மனிதனின் வேண்டுகோளை சுலைமான் நபியவர்களும் நிறைவேற்றினார்கள். மறு நாள் இஸ்ராயீலிடம், ” நேற்று அந்த மனிதரை முறைத்தீர்களா?” என்று கேட்டார்கள்.

“இல்லையே! நேற்று நான் அவரை ஆச்சரியத்தோடல்லவா பார்த்தேன்? அவரின் உயிரை இந்தியாவில் வைத்து இன்று வாங்கவேண்டுமென்று இறைவன் என்னைப் பணித்திருந்தான். ஆயிரம் சிறகுகள் கொண்டு அவர் பறந்தாலும் இந்தியா வெகு தூரமாயிற்றே… எப்படி அவர் அங்கு போய்ச்சேருவார் என்று வியப்பில் அல்லவா பார்த்தேன்” என்றார் இஸ்ராயீல்!

இந்த உலகத்தின் எல்லா விஷயங்களையும் இந்த ரீதியில் அணுகுங்கள். கண்ணைத் திறந்து பாருங்கள். யாரிடமிருந்து நாம் தப்பித்து ஓட முடியும்? நம்மிடமிருந்தேவா? இறைவனிடமிருந்தா?

சிங்கம் : சரிதான். எனினும் இறைத்தூதர்களும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்களும் எடுத்த முயற்சிகளை எண்ணிப் பாருங்கள். அவைகள் யாவும் அற்புதமானவை. அவர்கள் வைத்த கண்ணியில் சுவனத்துப் பறவைகளே சிக்கின. முயற்சி என்பது விதியை எதிர்ப்பதல்ல. ஏனெனில் முயற்சி என்பதே நமக்கு விதிக்கப்பட்டதுதான். னால் இந்த உலக தாயங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் யாவும் பயனற்றவை. இந்த உலகைத் துறப்பதற்கான முயற்சிகள் யாவும் இறைவனால் தூண்டப்பெறுபவை.

சிறையில் அகப்பட்ட கைதி, அதில் குழி ஒன்றைத் தோண்டி, அதன் வழியே தப்பிக்க முயன்றால் அது சரியான முயற்சியாகும். குழியை அடைக்க முயல்வது முட்டாளதனமாகும்.

இந்த உலகம் என்பது ஒரு சிறை. நாமனைவரும் கைதிகள். குழி தோண்டி சீக்கிரமே தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த உலகம் என்பது என்ன? இறைவனை மறந்திருக்கும் ஒரு இடம்.

படகினுள் நீரிருந்தால் அது படகின் அழிவு. படகுக்குக் கீழே இருந்தால் அது படகுக்கு தரவு. சாலைகளெல்லாம் தங்கத்தால் செய்யப்பட்ட ராஜ்ஜியத்தை ண்ட நபி சுலைமான் தன்னை ஒரு ஏழை என்றே அழைத்துக் கொண்டார்கள். இந்த உலக ஆசைகளைத் துறந்ததன் பொருட்டு.

காற்று நிரம்பிய வாயடைக்கப்பட்ட பாட்டில் நீரின் மேலே மிதக்கும். வறுமையின் காற்று நிரம்பியவர்களெல்லாம் இந்த உலகம் என்ற தண்ணீரின் மேல்மட்டத்தில்தான் மிதப்பார்கள். எனவே, உங்கள் இதயத்தின் வாயை அடையுங்கள். உள்ளேயுள்ள காற்றுப்புழைகொண்டு அதை நிரப்புங்கள். முயற்சி என்பது நிஜம். நோய்களையும் மருந்துகளையும் போல. முயற்சி தேவையில்லை என்று வாதிடுவதும் ஒரு முயற்சியே.

சிங்கத்தோடு வாதட முடியாத மிருகங்கள் தவறாமல் தினசரி உணவை சிங்கத்துக்கு அனுப்பி விடுவதாக உறுதியளித்தன. குலுக்கல் முறையில் யார் பெயர் வருகிறதோ அந்த மிருகமே சிங்கத்தின் அன்றைய உணவு என்ற அடிப்படையில் முயலின் முறை வந்தது.

முயல் : எவ்வளவு காலம்தான் நாம் இந்த அநியாயத்தை சகிப்பது? நான் என் உபாயத்தின் மூலம் உங்களையெல்லாம் தப்பிக்க வைப்பேன். அது நம் சந்ததிகளுக்கும் நல்வழி வகுக்கும்.

மிருகங்கள் : உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் நாம் இதுவரை நம் உயிர்களைத் தியாகம் செய்து வருகிறோம். இப்போது நீ கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டாம்.

முயல் : நண்பர்களே! எனக்கு விதிவிலக்கு அளியுங்கள். என் பேச்சைக் கேளுங்கள். நாம் அனைவரும் காப்பாற்றப்படுவோம். ஒவ்வொரு இறைத்தூதரும் தம்முடைய மக்களை இப்படித்தான் காப்பாற்றினார்.

மிருகங்கள் : முயலே, பிடித்த முயலுக்கு மூனு கால் என்று வாதிடாதே. முட்டாளே! உன்னைவிட பெரியவர்களுக்குத் தோன்றாதது உனக்கு எப்படித் தோன்றமுடியும்?

முயல் : சகோதரர்களே! இறைவன் தான் எனக்கு இந்த உதிப்பைக் கொடுத்தான். இந்த பலவீனமாவனுக்கு எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து வந்த பலமான அறிவுரை! இந்த சின்னவனுக்கு அந்த பெரியவனிடமிருந்து வந்த பேருரை!

தேனீக்களுக்கு இறைவன் எதைக்கற்றுக் கொடுத்தானோ, அதை சிங்கமோ காட்டுக் கழுதையோ அறியுமா என்ன? தேன் நிரம்பிய வீட்டை தேனீ கட்டுகிறதென்றால், அந்த அறிவின் கதவுகளை அதற்கு திறந்து வைத்தான். பட்டுப்புழுவுக்கு இறைவன் கற்றுக்கொடுத்த அறிவு எந்த யானைக்காவது தெரியுமா?

மண்ணால் படைக்கப்பட்ட தம் (நேரடியாக) இறைவனிடமிருந்தே அறிவு பெற்றார்கள். அந்த அறிவின் கதிர்கள் ஏழு வாங்களையும் ஏழு உலகங்களையும் சென்றடைந்தன.

உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள். உயிர் இன்றி உருவத்தில் ஒன்றுமில்லை. உருவத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் அஹ்மதும் அபூஜஹ்லும் மனிதர்களே. எனவே, எல்லாம் ஞானத்தைப் பொறுத்ததே. உண்மையான அறிவென்பது இறைத்தூதர் சுலைமானுடைய ராஜ்ஜிய முத்திரை. இந்த உலகம் முழுவதும் உடலானால் அறிவே அதன் உயிராகும்.

மனிதனுக்குள்ள சிறப்பெல்லாம் அறிவை வைத்துத்தான். அதன் பொருட்டுத்தான், நீர், நிலம் வாழ் பிராணிகள் யாவும் அவனுக்கு அடங்கிப் போகின்றன. சிங்கமும் சிறுத்தையும் அவனுக்கு பயப்படுகின்றன. பரியும் பேயும் அவனைக் கண்டு ஓடுகின்றன. னால் மனிதனுக்கு ரகசியமான எதிரிகள் நிறைய உண்டு. ஆற்றின் ஆழத்தில் உள்ள முள் பாதத்தில் குத்தி காயப்படுத்தும்போதுதான் அது இருப்பதே தெரியும்.

எனவே, உங்கள் புறப்புலன்களை மீறிய அறிவை அடையும் காலம்வரை காத்திருங்கள். அப்போதுதான் மறைந்திருப்பவற்றையெல்லாம் நீங்கள் காணமுடியும். பிரச்சனைகள் தீரும். அப்போதுதான், யாருடைய வார்த்தையை நீங்கள் நிராகரிக்கிறீர்கள், யாரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பது விளங்கும்.

மிருகங்கள் : அப்படியானால், உன் மனதில் உள்ள திட்டம்தான் என்ன என்று சொல்லேன்.

முயல் : எல்லா ரகசியங்களையும் ஒருவர் சொல்லிவிடக் கூடாது. சமயங்களில் ஒற்றைப்படை எண்கள் ரெட்டைப்படையாகவும், ரெட்டைப்படை ஒற்றைப்படையாகவும் மாறிவிடும்.

உங்கள் ஏமாளித்தனத்தில், கண்ணாடிமுன் நின்று நீங்கள் பேசினாலும் சரி, உங்கள் வார்த்தைகளின் காற்றால் கண்ணாடி மங்கிவிடும். நீங்கள் போகின்ற இடம், உங்கள் செல்வம், உங்கள் நம்பிக்கை இவை மூன்றையும் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. ஏனெனில், இந்த மூன்றிற்கும் பல எதிரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

காசிம் நபிகூட குறிப்புகளில்தான் பேசுவார்கள். அவர்களுடைய வார்த்தையின் உண்மையான பொருளை புரிந்துகொள்ளாமலேயே, தோழர்கள் பதிலளிப்பார்கள். பெருமானார் தனது கருத்தை ஒரு கதைக்குள் சுற்றிச் சொல்லுவார்கள். கேட்கும் பகைவருக்கோ, தலையும் புரியாது, வாலும் புரியாது. தனது உட்கருத்தின் வாசனையை பகைவர் முகர்ந்து பார்க்கும் முன்பே, அவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பதிலை, அவர்களுக்கே தெரியாமல் பெற்றுவிடுவார்கள் பெருமானார் !

இவ்வாறு பேசிய முயல், பின் வேண்டுமென்றே தாமதமாக சிங்கத்திடம் சென்றது.

சிங்கம் : கீழ்த்தரமானவர்கள் தந்த வாக்குறுதியும் கீழ்த்தரமானதாகத்தான் இருக்கும். அவர்களின் தேன் ஒழுகும் வார்த்தைகள் என்னை ஏமாற்றிவிட்டன. நேரம் என்று ஒன்று உள்ளதே, அது எவ்வளவு நேரம்தான் என்னை ஏமாற்றும்?

பாதை மிருதுவாகத்தான் உள்ளது. ஆனால் அதில் படுகுழிகள்! வார்த்தைகளும் பெயர்களும் படுகுழிகள்! உயிர் என்ற நீரை உறிஞ்சும் மண். நீரூற்றைப் பீறிட விடுகிற மண் ரொம்ப அரிது. போ, அதைத் தேடு.

ஞானத்தைத் தேடி அலைபவனும் ஞானத்தின் ஊற்றுக் கண்ணாகிறான். அவனுடைய உள்ளமோ இறைவனின் விதி வசப்பட்டே செயல்படுகிறது.

அப்படிப் பட்டவனது அறிவானது, ஆத்மாவைக் கொண்டு உருவாகிறது. சாதாரண மனிதனின் அறிவு, அவனுக்கு ஆசானாகிறது. ஞானியின் அறிவோ அவனுக்கு மாணவனாகிறது.

ஓ அஹ்மதே! இதற்குமேல் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. வைத்தால் நான் பொசுங்கிப் போவேன். சுத்தமான ஆத்மாவின் சுல்தானே! இனி என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் (இறைவனைக் காண) செல்லுங்கள் என்று (மி·ராஜ் என்ற விண்பயணத்தின்போது பெருமானாரை ஏற்றிச் சென்ற) ஜிப்ரீல் சொன்னது போல, ஞானியிடம் அறிவு சொல்லும்.

சாதாரண மனிதன் அரசனிடமிருந்து (இறைவனிடமிருந்து) கட்டளைகளைப் பெற்றுக் கொள்கிறான். இறை நேசரோ அரசனின் கட்டளைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

சாதாரணனை நட்சத்திரங்கள் ளுகின்றன. ஞானியோ நட்சத்திரங்களை ள்வார். உங்கள் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளால் அல்ல.

திருக்குர்னின் வசனங்களுக்கு நீங்கள் தவறாக விளக்கம் தந்தீர்கள். உங்களை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவனின் பேச்சை பிறகு விளக்கலாம்.

கழுதை பெய்த மூத்திரக் குட்டையில் அமர்ந்துள்ள ஈ, அந்த மூத்திரக் குட்டைதான் கடல் என்று எண்ணிக்கொள்ளும். ஏனெனில் தன்னை வைத்துப் பார்க்கும்போது, எல்லையற்ற பரந்து விரிந்த கடலாக மூத்திரத்தை அது காண்கிறது. நீங்கள் கொடுக்கும் விளக்கங்களும் இதுபோலத்தான். மூத்திரத்தை மூத்திரமாகவே காட்டும் அறிவு எங்கே?

நான் ஏமாந்தேனே! என் எதிரி என் செவிகளின் வழியாக என் விழிகளைக் கட்டிவிட்டானே! அவர்களின் மரவாள் என்னைக் காயப்படுத்திவிட்டதே!

வார்த்தைகள் என்பது தோல். அர்த்தம் என்பதோ உள்ளிருக்கும் பழம். பழத்தின் சொத்தையை தோல் மறைக்கும். நல்ல பழங்களின் ரகசியத்தையும் அது பொறாமையினால் மறைக்கும்.

காற்றினால் எழுதுகோலும், நீரினால் எழுது தாளும் செய்தால் நிற்கவா போகிறது?

காற்றென்பது மனித ஆசை. ஆசையைத் துறந்தால் இறைவனிடமிருந்து செய்தி வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

படைத்தவனின் செய்தி இனிமையானது. ஏனெனில் அது முற்றிலிம் நிரந்தரமானது. என்றைக்கும் மாறாதது. அரசர்களுக்காக நிகழ்த்தப்படுகின்ற பேருரைகளெல்லாம் அந்த அரசர்களின் ராஜ்ஜியங்களைப் போலவே மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இறைத்தூதர்களின் ராஜ்ஜியங்களும் அவர்களின் முத்திரைகளும் மாறாதவை.

திர்ஹம்களின் முகத்திலிருந்த ராஜாக்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. ஆனால் முஹம்மதின் பெயர் நிரந்தரமாக அவற்றின்மீது பதிக்கப்படுகின்றன.

அஹ்மது என்ற பெயரில் எல்லா இறைத்தூதர்களின் பெயரும் அடங்கும். நூறு என்று சொன்னால் தொன்னூறும் அதில் அடங்குவது போல.

உயிரைப் பார்க்க முடியாது. ஏனெனில் நமக்கு அவ்வளவு நெருக்கமாக உள்ளது. வயிறு நிறைய நீரிருந்தும் வாய் ஏன் உலர்ந்துள்ளது?

சிவப்பு, பச்சை என்ற நிறங்களை எப்படி அறிவாய்? நீ ஒளியை இதற்குமுன் அறிந்திராவிட்டால்?!

நிறங்களில் உன்னை நீ இழந்த காரணத்தினால், நிறங்களுக் காரணமாக ஒளியை அறிய அவை திரை போட்டன. இரவு வரும்போதுதான் தெரியும், நிறம் என்பதெல்லாம் ஒளியில் இருந்து வருவதென.

புறஒளி சூரியனிடமிருந்தும் நட்சத்திரங்களிடமிருந்தும் வருகிறது. உள்ளளியோ இறைவனிடமிருந்து.

எந்த ஒளி உன் கண்ணுக்கு ஒளி தருகிறதோ, அதுதான் உள்ளத்தின் உண்மையான ஒளி! கண்ணின் ஒளி என்பது உள்ளத்து ஒளியின் விளைவு.

இரவில் நிறம் தெரியாது போவதால், ஒளி என்பதை அதன் நேர் எதிரான இருளை வைத்து விளங்கிக்கொண்டாய்.

இதைப்போலத்தான் துன்பத்தையும் வேதனையையும் இறைவன் ஆக்கியுள்ளான். அவற்றை வைத்து நீ இன்பத்தை அறிந்து கொள்ள!

மறைவான விஷயங்கள் வெளிப்படையான விஷயங்களை வைத்து அறியப்படுகின்றன.

எதிர்மறையான பொருட்கள், அதற்கு எதிர்மறையான பொருட்களை வெளிப்படுத்துகின்றன, விளக்குகின்றன.

ஆனால் இறைவனின் ஒளிக்கு எதிர்மறையான பொருள் ஒன்றும் கிடையாது.

எனவே, நமது கண்களால் அவனைப் பார்க்க முடியாது. அவன்தான் நம்மைப் பார்ப்பான்.

மூஸாதான் மலையைப் பார்ப்பார். மலையால் மூஸாவைப் பார்க்க முடியாது.

உருவமற்ற ஒன்றிலிருந்து உருவம் பிறக்கிறது. எண்ணத்திலிருந்து குரலும் பேச்சும் வருவது போல.

நிச்சயமாக நாம் அவனிடத்திலே திரும்பிச் செல்வோம் என்ற திருவசனத்தின்படி, எல்லா வடிவங்களும் உருவமற்ற ஒன்றாகிய இறைவனிடத்திலேயே மீளும்.

நமது எண்ணமென்பது ஹ¤வாகிய அவனிடத்திலிருந்து ஹவாவாகிய காற்றில் விடப்பட்ட அம்பு.

அம்பு திரும்பி எய்தவனிடமே செல்லும்.

ஒவ்வொரு கணமும் இந்த உலகம் புதுப்பிக்கப் பட்டுக்கொண்டே உள்ளது. ஆனால் நாம்தான் அதை அறிவதில்லை. நமது உயிரும் இப்படித்தான். ஓடை நீரைப்போல மாறிக்கொண்டே உள்ளது. பார்ப்பதற்கு அது ஒரே ஆறு போலத்தான் தோன்றும்.

ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி, அதை வேகமாக (இருளில்) ஆட்டினால், (பார்ப்பவருக்கு) அது ஒரு நீலமான நெருப்புக் கோடாகத் தெரியும். காலமும் நேரமும் இறைவனின் கையில் அந்த ஊதுபத்தியைப் போலத்தான்.

இவ்வாறு, நேரம் போவதைப் பற்றி சிங்கம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தாமதமாக வந்த முயல், இன்னொரு சிங்கம் தன்னை மிரட்டியதாகவும், தன் நண்பனைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் பொய்கூறி, சிங்கத்தை ஏமாற்றி, பாழடைந்த கிணறான தனது இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது.

ஒரு குழந்தையின் (இறைத்தூதர் மூஸா) பொருட்டு, ·பிரவ்ன் தன் படை பலத்தோடு நைல் நதிக்குள் இழுக்கப்பட்டதுபோல.

இறைவனின் விதி நிகழவிருக்கும்போது, பகைவன் யார் நண்பன் யார் என்று தெரிவதில்லை. எங்களைப் படைத்த நாயனே! மறைவானவற்றையும் நீ அறிவாய். நெருப்பை நீராகவும், நீரை நெருப்பாகவும் காட்டாதே இறைவா என்று இறைஞ்சுங்கள்!

இறைத்தூதர் சுலைமான் கூடாரம் அடித்தபோது, பறவைகளெல்லாம் தங்களின் மரியாதையைத் தெரிவிக்க வந்திருந்தன. தங்களது பாஷையிலேயே (தங்களிடம்) இறைத்தூதர் பேசியதை எண்ணி, ஆனந்தமும் ஆச்சரியமும் அடைந்தன.

ஒரே மொழியைப் பேசுவதால் (இருவருக்கிடையே) உறவு ஏற்படுகிறது. ஆனால் மொழி ஒன்றாக இருப்பதைவிட, மனசு ஒன்றாக இருப்பதே சிறந்தது. பார்வைகள் ஒன்றும்போது, பாஷைகள் தேவையில்லை. நெஞ்சோடு நெஞ்சு இணைந்துவிட்டால், மொழியோ, வார்த்தைகளோ, சப்தங்களோ, குறிப்போ, எழுத்தோ எதுவும் தேவையில்லை. ஆயிராமாயிரம் விளக்கங்கள் ஆத்மார்த்தமாக எழுந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பறவையும் தனது பிரத்தியேகமான திறமையைப் பற்றி, இறைத்தூதர் சுலைமான் முன்னிலையில் விவரித்தது. பெருமையினால் அல்ல. வேலைக்குச் சேர இருக்கும் அடிமை, தன் திறமைகளை எஜமானனுக்கு நிரூபணம் செய்து காட்டும் விதத்தில்.

தான் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தாலும், கீழே உள்ள நீர் நிலைகளையும், அதன் ஆழம், அகலம், அது மண்ணில் இருந்து வருகிறதா, அல்லது பாறையிலிருந்து பீறிடுகிறதா என்று அறிய முடியும் என்று சொன்னது கழுகு.

நீரற்ற இடங்களில் நாங்கள் பயணிக்கும்போது, எங்களுக்கு நீ உற்ற நண்பனாக இருப்பாய் என்றார்கள் இறைத்தூதர் சுலைமான்.

பொறாமை கொண்ட காகம், கழுகின் கூற்றை மறுத்தது. அவ்வளவு கூர்மையான பார்வை இருக்குமானால், பூமியில் வைத்த கண்ணி மட்டும் ஏன் கண்ணில் படுவதில்லை, ஏன் மாட்டிக்கொள்கிறது? என்று கேட்டது அது.

அரசே! பகைவனின் பேச்சை நம்பவேண்டாம். இறைவனின் விதியை நம்பாத இந்த காகம் ஒரு அவ நம்பிக்கையாளனாகும். கண்ணியும் என் கண்களுக்குத் தெரியும். இறைவனின் விதி என் கண்களை மறைக்காமல் இருந்தால். இறை விதி வரும்போது அறிவு தூங்கிவிடும். நிலவு கறுப்பாகும். சூரியன் ஒளிராது. நம்பிக்கையில்லாதவர்கள், அப்படி இருப்பதற்குக் காரணமும் விதியேயாகும் என்று பதிலளித்தது.

இறைத்தூதர் தமின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். (உலகில் உள்ள எல்லாப் பொருட்களின்) பெயர்களையெல்லாம் ஆண்டவனே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான்.

ஆயிரக்கணக்கான விஞ்ஞான அறிவுகள் ஆதமின் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு பொருள் (அதன் உண்மையான தன்மையோடு) அதன் இறுதிவரை எப்படி இருக்கும் என்பதை முதலிலேயே அறிந்திருந்தார்கள் தம். அவர்களால் சுறுசுறுப்பு என்று பெயரிடப்பட்டது சோம்பேறியானதில்லை. சோம்பேறி என்று சொல்லப்பட்டது சுறுசுறுப்படைந்ததில்லை.

யார் இறுதிவரை நம்பிக்கை கொள்வார்கள், யார் இறுதியில் நம்பிக்கை இழப்பார்கள் என்று தம் அவர்கள் முதலிலேயே அறிந்திருந்தார்கள்.

மனிதனைப் பொறுத்தவரை, ஒரு பொருளின் வெளிப்புறத் தோற்றம்தான் அதன் பெயராக உள்ளது. ஆனால் படைத்தவனைப் பொறுத்தவரை, ஒரு பொருளின் உண்மையான தன்மை எதுவோ, அதுவே அதன் பெயராக உள்ளது.

மூஸாவுக்கு தன் கையில் இருந்தது வெறும் கோல். இறைவனுக்குத் தெரியும் அது பாம்பென்று. சுருக்கமாகச் சொன்னால், இறுதியில் நாம் எதுவாக இருப்போமோ அதுவே நமது பெயராக இறைவனிடம் உள்ளது.

இறைவனின் ஒளி கொண்டு, தம் பார்த்ததனால், பார்க்கும் பொருளின் உண்மையும் பெயரும் அவர்களுக்கு விளங்கியது. அவர்களின் புகழை இறுதித் தீர்ப்பு நாள்வரை சொல்லிக்கொண்டிருந்தாலும் முடியாது.

எனினும், அப்படிப்பட்ட தம் விலக்கப்பட்ட கனி விஷயத்தில் ஏன் தவறு செய்தார்கள்? அது விலக்கப்பட்டதுதானா, அல்லது விளக்கம் தேவைப்படுவதுதானா? என்ற குழப்பம் ஏன் ஏற்பட்டது?

அது இறை விதியே ஆகும்.

தோட்டக்காரனின் காலில் முள் குத்தியபோது, தோட்டத்தையே கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டான் திருடன். இறைவனின் விதி வரும்போது, மேகங்கள் சூரியனை மறைக்கின்றன. சிங்கங்களும் சிறுத்தைகளும் சிற்றெலிகளாகின்றன.

கிணற்றில் தெரிந்த தனது பிம்பத்தை தனது எதிரி என்று எண்ணி, கிணற்றின் ஆழத்தில் பாய்ந்து செத்தது சிங்கம்.

அ நியாயக்கார சிங்கம் விட்டெறிந்த அ நீதி, அதன் தலைக்கே திரும்பி வந்தது. மனிதன் எந்த அளவுக்கு நியாயம் தவறுகிறானோ, அந்த அளவுக்கு பயங்கரமானதாக அவனது கிணறு (முடிவு) இருக்கும். அடுத்தவனுக்கு குழி தோண்டுபவர்கள் தங்கள் அ நியாயத்தால் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக்கொள்கிறார்கள்.

பலகீனமானவர்களுக்கு உதவி இல்லை என்று எண்ண வேண்டாம். நீங்கள் யானைகளாக இருந்தால், உங்கள் அழிவு (அபாபீல் என்னும்) சின்னப் பறவைகள் மூலம் வரும். சிங்கம் கிணற்றினுள் பார்த்தது தன்னைத்தான். தனது சினத்தின் காரணத்தினால் தன்னையே எதிரியாக எண்ணிவிட்டது சிங்கம்.

வாசகர்களே! அடுத்தவரிடம் நீங்கள் காணும் அ நியாயமெல்லாம் உங்கள் பிரதிபலிப்புத்தான். உங்கள் பித்தலாட்டத்தைத் தான் அவர்களிடம் காண்கிறீர்கள். நீங்கள் அடித்துக் கொல்வதும், சபித்துக்கொள்வதும் உங்களையேதான். அந்த சிங்கத்தைப் போல.

உங்களின் ழத்தில் குதித்து நீங்கள் பார்த்தால், அந்த அ நியாயமும் அயோக்கியத்தனமும் உங்களிடமிருந்து வந்தவைதான் என்பது புரியும். அடுத்தவரிடத்தில் நீங்கள் காணும் கெட்ட குணங்கள் யாவும் உங்களுடயவைதான். இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் கண்ணாடியாக உள்ளார்கள் என்பது நபிமொழி. நீங்கள் நீல நிறக்கண்ணாடி போட்டு இந்த உலகைப் பார்க்கிறீர்கள். இந்த உலகமே நீல நிறமாக உள்ளது, அவ்வளவுதான்.

இந்த நீலம் உங்களிடமிருந்து வருவதுதான் என்பதை நீங்கள் குருடர்களாக இல்லாத பட்சம், உணர்ந்து கொள்வீர்கள்.

அடுத்த மனிதனை குறை சொல்லும் யோக்கியதை உங்களுக்கு இல்லை.

உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ளுங்கள். ஏன் எப்படி என்ற கேள்விகளின் கிணற்றின் அடிபாகத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். சின்ன ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதுக்கு வந்திருக்கிறோம் என்று பெருமானார் ஏன் சொன்னார்கள்? வெளியில் உள்ள, கண்ணுக்குத் தெரிகிற, எதிரிகளை நாம் வென்று விடலாம். னால் நமக்கு உள்ளேயே நப்ஸ் எனும் (கீழான எண்ணங்களாகிய) பகைவன் உள்ளான். அவனை வெல்வது எளிதல்ல. ஒரு சின்ன குண்டுசியை வைத்து ஒரு மலையைப் பெயர்க்கின்ற முயற்சியாகும் அது.

நமக்கு உள்ளே உள்ள சிங்கத்தை முயல்களால் வெல்ல முடியாது. தன்னைத் தானே யார் வெற்றி கொள்வானோ, அவனே உண்மையான சிங்கம்.

அருஞ்சொற்பொருள்மி·ராஜ் — முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்ற நிகழ்ச்சிஜிப்ரீல் — வானவர் தலைவர்திர்ஹம் — வெள்ளிக் காசு

அஹ்மது — முஹம்மது நபி

ஹ¤ — அவன்(இறைவன்)

ஹவா — காற்று
மூஸா — மோஸஸ் என்று அறியப்பட்ட இறைத்தூதர்
·பிரவ்ன் — மூஸாவை ஒழிக்கத் திட்டமிட்டு, ஒழிந்துபோன எகிப்திய அரசன் (இரண்டான் ரமீசஸ்)
சுலைமான் — சாலமன் என்று அறியப்படும் இறைத்தூதர். காற்றின் மீது அதிகாரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பறவைகள், விலங்கினங்கினங்களின் மொழியும் அவருக்குத் தெரியும்.
அபாபீல் — அப்ரஹா என்ற மன்னன் புனித லயமான க·பதுல்லாஹ்வை அழிக்க வந்தபோது, இறைக்கட்டளைப்படி, அபாபீல் என்ற சின்ன சின்ன பறவைகள் போட்ட கற்களினால் அப்ரஹாவும் அவனது யானைப்படையும் அழிந்து போன வரலாறு திருக்குர்னில் கூறப்படுகிறது.
ஜிஹாது — புனிதப்போர், உணர்ச்சிகளுடனான போராட்டம்.

**

அறிவான அரபியும் ஆசை மனைவியும் – கதை 10

ஒரு நாள் இரவு, அரபி ஒருவனின் மனைவி தன் கணவனிடம் எல்லை மீறி உரையாடினாள்.

“இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக உள்ளது. நாம்தான் சந்தோஷமாக இல்லை. நமக்கு உண்பதற்கு உணவில்லை. வேதனையும் பொறாமையும்தான் நாம் தொட்டுக்கொள்ள கறி. நாம் குடிக்க கண்ணீரே உள்ளது. பகலில் வெயிலை உடுத்திக்கொள்கிறோம். இரவில் நமது படுக்கையும் போர்வையும் நிலவொளிதான்.”

“வட்ட வடிவமான ரொட்டித் துண்டைப் போல நிலவு உள்ளதால், அதை நோக்கி நாம் கைகளை ஏந்துகிறோம். பரம ஏழைகள்கூட நம்மைப் பார்க்க நேரிடுவதை எண்ணி அவமானப்படுகிறார்கள். உணவு பற்றிய நமது கவலை, பகலை இரவாக்குகிறது. உற்றாரும் அன்னியரும் நம்மைக் கண்டு ஓடுகிறார்கள். யாரிடமாவது ரொட்டித் துண்டை நான் யாசித்தால், போ சனியனே என்று விரட்டுகிறார்கள்.”

“கொடுப்பதிலும் கொள்வதிலும், தாராளம் காட்டுவதிலும் தகராறு செய்வதிலும் அரபியர்களுக்கு தனிப்பெருமை உண்டு. ஆனால் நீங்களோ, அரபிகள் மத்தியில் ஒரு எழுத்துப்பிழை போல இருக்கிறீர்கள்.”

“நாம் என்ன சண்டை போட முடியும்? போர் எதுவும் செய்யாமலே நாம் செத்துக்கொண்டிருக்கிறோம்.”

“தேவைகளின் வாள் நம்மை மயங்கி விழ வைக்கிறது. காற்றில் பறக்கும் பூச்சிகளையெல்லாம் கொன்று தின்றுகொண்டிருக்கும் நாம், என்ன கொடுக்க முடியும்?”

கணவன் சொன்னான், “எவ்வளவு காலத்துக்கு பணத்தையும் உணவையும் தேடிக்கொண்டிருப்பாய்? நம் வாழ்வில் எஞ்சியிருப்பது கொஞ்ச காலமே.”

“அறிவுள்ள மனிதன், கூடுவதையும் குறைவதையும் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் இரண்டுமே வெள்ளம்போல வந்து போய்விடும். வாழ்க்கை சுத்தமான நீரோடைபோல தெளிந்து ஓடினாலும் சரி, காற்றாட்டு வெள்ளம் போல கலக்கினாலும் சரி, அதைப்பற்றி பேசாதே. ஏனெனில் இரண்டுமே நிரந்தரமானதல்ல. ஒரு கணம்தான்.”

“எத்தனையோ மிருகங்கள் கவலைகளற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன. தன் இரவுக்கான உணவு இன்னும் தயாராகாவிட்டாலும், மரத்தின் கிளையில் அமர்ந்துள்ள புறா, இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுள்ளது.”

“(நம் வாழ்முறையின்) காற்றும் தூசியும்தான் நம் மனதில் எழும் ஆயிரமாயிரம் சோகங்களுக்கெல்லாம் காரணம். இது இதனால்தான், அது அதனால்தான் என்ற நினைப்பெல்லாம் ஷைத்தானின் வேலைதான்.”

“ஒவ்வொரு வேதனையும் மரணத்தின் துண்டாகும். அந்த துண்டை உன்னிடமிருந்து தூக்கிப்போட முடியவில்லையெனில், மரணம் உன்னைத் தழுவும். மரணத்தின் அந்தப் பகுதியை நீ இனிமையானதாக ஆக்கிக்கொண்டால், இறப்பும் இனிமையாகும். வேதனைகள் என்பவர்கள், மரணத்திடமிருந்து செய்தி கொண்டுவருபவர்கள். அவர்களிடமிருந்து உன் முகத்தை மறைக்க விரும்பி ஓடாதே.”

“இனிப்பாக வாழ விரும்புவோரின் முடிவெல்லாம் கசப்பாகவே இருக்கும். உடலுக்கு சேவை செய்பவர்களால் ஆத்மாவைக் காப்பாற்ற முடியாது. நன்றாக கொழுத்த ஆடுதான் முதலில் வெட்டப்படும்.”

“ஒரு காலத்தில் பொன்னாக மின்னிய நீ, இப்போது பொன்னையும் பொருளையும் பற்றிப் பேசுகிறாய். ஒரு காலத்தில் நல்ல பழமாக இருந்த நீ இப்போது ஏன் கெட்டுப்போனாய்? பழம் பழுக்க பழுக்க இனிமை கூடவேண்டுமே தவிர, அழுகிப் போகக்கூடாது.”

“நீ என் மனைவி. நீயும் நானும் ஒரே (மனத்)தரத்தில் இருக்க வேண்டும். ஒரு ஜோடி காலணிகளைப் பார். ஒன்றைவிட ஒன்று பெரிதாகவோ, சிறிதாகவோ இருந்தால் அணிய முடியுமா? ஓநாய் சிங்கத்தோடு இணைய முடியுமா?”

மனைவி சொன்னாள்,”மார்க்கத்தை உங்கள் புகழாக துணையாக மாற்றுகிறவரை, உங்கள் வார்த்தைகளில் நான் ஏமாற மாட்டேன். பெருமையும் திமிரும் நமக்குத் தேவை இல்லை. பெருமை அசிங்கமானது. அதிலும் (நம்மைப் போன்ற) பிச்சைக்காரர்களிடத்தில் அது மகா அசிங்கமானது. பனி கொட்டும் குளிர் காலத்தில், நன்கு நனைந்த டையை அணிவது போலாகும் அது.”

“உங்கள் வீடு சிலந்தி வலையைப் போல பலகீனமானது. எப்போது உங்கள் ஆத்மா திருப்தி கண்டது? திருப்தி என்ற பெயர் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். திருப்தி என்பது ஒரு பொக்கிஷம் என்று பெருமானார் (ஸல்) கூறினார்கள். நஷ்டத்திலிருந்து நற்பேறுகளை பிரித்தறியும் அறிவு உங்களுக்கு இல்லை.”

“உள்ளத்தின் திருப்தி என்பது ஆத்மாவின் பொக்கிஷம். அதைப் பெற்றிருப்பதாக வீண் பெருமை அடிக்கவேண்டாம். என் உயிரின் வேதனையே நீங்கள்தான்.”

“என்னை உங்கள் மனைவி என்று கூறவேண்டாம். நான் நீதியின் துணைவி. அநீதியின் துணைவியல்ல. காற்றில் பறக்கும் பூச்சிகளை உணவுக்காக கொல்லும் நீங்கள் எப்படி ராஜாக்களுடன் ராஜ நடை போடமுடியும்? நாய்களோடு எலும்புத் துண்டுகளுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். ஓநாயைப் போல என்மீது பாயவேண்டாம். நீங்கள் மறைக்கும் உங்கள் தவறுகளையெல்லாம் சொல்ல நேரிடும்.”

“உங்கள் அறிவு, மனித குலத்துக்கு சங்கிலி. அது அறிவல்ல, பாம்பும் தேளுமாகும். உங்கள் அநீதிக்கு இறைவனின் தரவு கிடையாது. நீங்களே பாம்பாகவும் பாம்பாட்டியாகவும் இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி என்னை ஏமாற்றுகிறீர்கள். அல்லாஹ்வின் பெயர்தான் என்னை பரவசமூட்டுகிறது. உங்கள் ஏமாற்று வேலையல்ல.”

“என் பொருட்டு இறைவனின் பெயர் உங்களை பழிவாங்கும். நீங்கள் நாசமாகப் போக.”

“நீ பெண்ணா அல்லது வேதனைகளின் தாயா? ஏழ்மைதான் எனது பெருமை. செல்வமும் பொன்னும் தொப்பியைப் போன்றது. வழுக்கைத் தலையன்தான் தலையைத் தொப்பிக்குள் மறைப்பதில் மகிழ்வான். சுருள் முடிக்காரனின் சந்தோஷம் தொப்பி தொலையும்போதுதான்.”

“(ஆன்மீக) வறுமை உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதனை வெறுப்போடு அணுகாதே. சூ·பிகள் எல்லாம் வறுமை, செல்வம் இரண்டிற்கும் அப்பால் சென்றவர்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்கள் அபரிமிதமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.”

“இறைவன் நியாயவான். பலகீனமான ஏழைகளிடம் எப்படி அவன் அராஜகமாக நடந்துகொள்வான்? ஒருவருக்கு செழிப்பையும் இன்னொருவருக்கு நெருப்பையும் எப்படிக் கொடுப்பான்?”

“இரண்டு உலகங்களையும் படைத்த நாயனை நாம் தவறாகப் புரிந்துகொள்ளும்போதுதான் நெருப்பில் வேகிறோம். வறுமையில் பல்லாயிரம் பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. நீ என்னப் பாம்பாட்டி என்றாய். நான் பாம்பைப் பிடித்தால் அதன் விஷப் பற்களைப் பிடுங்கிவிடுகிறேன். அதன் பொருட்டு அது அடிபட்டு சாகாதிருக்கும். பாம்பின் விஷப்பற்கள்தான் அதன் பகைவன். நான் பகைவனை என் திறமையினால் நண்பனாக்குகிறேன்.”

“அல்லாஹ் காப்பற்றட்டும். படைக்கப்பட்ட பொருட்களின்மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. திருப்தியின் பொருட்டு, என் மனதினுள் ஒரு உலகமே உள்ளது. நீ மயக்கத்தில் இருக்கிறாய். வீடு சுற்றுவதில்லை. உனது மயக்க நிலையில் வீடு சுற்றுவதுபோல் தெரிகிறது. உண்மையில் சுற்றுவது நீதான்.”

அபூஜஹில் பெருமானாரைப் பார்த்து சொன்னான்.

“ஹாஷிம் குலத்தில் இவ்வளவு அசிங்கமான ஒருவரை நான் கண்டதில்லை.”

“நீர் உண்மையைத்தான் சொன்னீர்” என்றார்கள் பெருமானார்.

“கிழக்கிலும் மேற்கிலும் இல்லாத சூரியனே, ஒளிவிட்டு இன்னும் அழகுடன் பிரகாசியுங்கள்” என்று சொன்னார்கள் அபூபக்கர் சித்தீக்.

“இனிய நண்பரே, நீங்கள் உண்மையைத்தான் சொன்னீர்கள்” என்றார்கள் பெருமானார்.

இருவருமே உண்மை பேசியதாக சொன்னது எப்படி? முரண்பாடாக உள்ளதே என்று கேட்டதற்கு,

“அல்லாஹ்வின் கையால் மெருகூட்டப்பட்ட கண்ணாடி நான். என்னைப் பார்ப்பவர்கள், என்னில் தங்களையே பார்த்துக்கொள்கிறார்கள்” என்றார்கள் பெருமானார்.

“மனைவியே, வறுமையில் பொறுமையாக இரு, வெறுப்பை விடு. வறுமையில்தான் இறைவனின் ஒளி உள்ளது. ஓரிரு நாட்களுக்கேனும் வறுமையைப் பழகு. அப்போதுதான் அதில் உள்ள செல்வங்கள் என்ன என்பது புரியும்.”

“நான் பேசுவது ஆத்மாவின் காம்புகளில் சுரக்கும் பால் போன்றது. சப்பிக் குடிப்பவர்கள் இருந்தால்தான் பால் சுரக்கும். கேட்பவர் தாகம் உடையவராக இருந்தால்தான், சொல்பவரிடமிருந்து சுவை மிகுந்த பேச்சு பீறிடும். ஊமைக்கும் ஆயிரம் நாக்குகள் முளைக்கும்.”

“அன்னிய ஆண்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் தங்களை திரையிட்டு மறைத்துக்கொள்வார்கள். ஆனால் முறையுள்ளவர்கள் வரும்போது முகத்திரைகளை அகற்றுவார்கள்.”

“பார்க்கும் தகுதியுள்ள கண்களுக்காகத்தான் இந்த உலகில் உள்ள எல்லா அழகான விஷயங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. செவிடனால் எப்படி இசையை ரசிக்க முடியும்? நோய் பிடித்த நாசி கொண்டவனுக்காக இறைவன் கஸ்தூரியை வாசனைப் பொருளாக படைக்கவில்லை.”

“தாழ்ந்தவனாகிய மனிதன் எல்லா உயர்ந்த விஷயங்களுக்கும் எதிரியாகிறான். பெண்ணே, என்றாவது குருடனுக்காக உன்னை நீ அலங்கரித்துக்கொள்வாயா? உன் சண்டை போடுதலுக்கு விடைகொடு. அமைதியாக இரு. இல்லாவிட்டால், நான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும்.”

கணவனின் கோபம் கண்டு மனைவி அழுதாள். உண்மையில் கண்ணீர்தான் பெண்கள் வீசும் வலையாக உள்ளது. அவள் சொன்னாள், “எனது வேதனைகளுக்கு நீங்கள் மருந்தாக இருந்தீர்கள். நீங்கள் பிச்சைக்காரனாக இருப்பதை நான் விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள். நான் சிலை போல அழகாக இருந்த காலம் நினைவுக்கு வருகிறதா? ஒரு சிலை வணங்கியைப்போல, நீங்களும் என் மீது அன்பு வைத்திருந்தீர்கள். என் உயிரும் உங்கள் உயிரும் ஒன்றே.”

“உங்கள் முன் வாளையும் க·பன் துணியையும் வைத்துவிட்டேன். என் கழுத்தையும் நீட்டிவிட்டேன். தயவு செய்து என்னைப் பிரிந்து செல்வதைப் பற்றிமட்டும் பேசவேண்டாம்.”

இவ்வாறாக சமாதானம் சொன்னாள்.

பெண்ணும் அவைளையொத்த சந்தோஷங்களும் இறைவனால் ஆணுக்காக ஏற்படுத்தப் பட்டது. அவனுடைய ஏற்பாட்டிலிருந்து எப்படித் தப்பிக்க முடியும்?

தமுக்காக ஹவ்வாவை ஏற்படுத்திய பின், அவர்கள் பிரிவது எங்ஙனம்? ஹம்சாவைவிட வீரத்தில் சிறந்தவராக கணவன் இருந்தாலும், மனைவிக்கு அடங்கித்தானே போக வேண்டும்?

நெருப்புக்கும் நீருக்கும் இடையில் பாத்திரம் வரும்போது நீரை நெருப்பு வியாக்குக்கிறது. (இதைப்போல) வெளிப்பார்வைக்கு நீங்கள் உங்கள் மனவிமார்களை அடக்கியாண்டாலும், உள்ளுக்குள் அவளது அன்புக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கிறீர்கள். அன்பைத் தேடுவதும் கொடுப்பதும் மனித குணம்.

அறிவான, நாகரீகமான ண்களைப் பெண்கள் அடக்கியாள்கிறார்கள், நாகரீகமற்ற ண்கள் பெண்களை அடக்கியாள்கிறார்கள் என்பது ஹதீது. காரணம், நாகரீகமற்ற ஆணிடத்தில் மிருகத்தன்மை மேலோங்கியிருக்கும். அன்பும் மென்மையும் மனித குணங்கள். கோபமும் காமமும் மிருக குணங்கள். பெண் என்பவள் ஆண்டவனின் ஓர் ஒளிக்கதிராவாள். அவள் படைக்கின்றவள். ஆண்டவனைப் போல. படைக்கப்பட்டவைகளில் சேராதவள் என்றுகூட பெண்ணைச் சொல்லலாம்.

மனைவியே மன்னித்துவிடு. இதுவரை நான் அவநம்பிக்கையாளனாக இருந்தேன். இப்போது நான் முஸ்லிமாகிவிட்டேன். மன்னிப்புக் கோரும்போது, நம்பிக்கையில்லாதவனும் நம்பிக்கை கொண்டவனாகிவிடுகிறான்.

இருப்பதும் இல்லாததும், அவநம்பிக்கையும், நம்பிக்கையும் எல்லாமே இறைவனை நேசித்த வண்ணம் உள்ளன. சண்டையும் சமாதானமும் வெறும் தோற்றமே. இறைவனின் விதிப்படியே எல்லாம் நடந்தேறுகின்றன.

மூஸாவும் சரி, ·பிர்அவ்னும் சரி, உண்மையின் அடிமைகளாகவே இருந்தனர். மூஸா பகிரங்கமாக பிரார்த்தனை செய்தார். ·பிர்அவ்னோ, வல்ல இறைவனை அந்தரங்கத்தில் வணங்கினான். கோடரியை எதிர்க்கும் சக்தி எந்த கிளைக்காவது உண்டா?

இறைவன் நாடும்போது ஒன்றை உறுதியாக பூமியில் விதைக்கிறான். இன்னொன்றை சிதைக்கிறான். நிறங்களற்ற உண்மையை நீங்கள் அடையும்போது, மூஸாவும் ·பிர்அவ்னும் முரண்பாடுகளற்ற அமைதியில் நட்புறவுடன் இருப்பதைக் காணலாம்.  நீரிலிருந்து எண்ணெயையும், முள்ளில் இருந்து ரோஜாவையும், ரோஜாவிலிருந்து முள்ளையும் படைத்தது இறைவன். அவைகள் ஒன்றுக்கு ஒன்று எதிர்போலத் தோன்றினாலும் அவைகளுக்கிடையில் உண்மையில் யாதொரு பகையும் இல்லை.

அரபியாகிய அறிவுக்கும், மனைவியாகிய ஆசைக்கும் இந்த உலக வீட்டில் எப்போதுமே தகராறுதான். அடங்குவதும் ஆள்வதுமாக மனைவி இருப்பாள். ஏன் அடங்குகிறாள், ஏன் அடக்குகிறாள் என்ற உண்மையை அறியாதவனாக கணவன் இருப்பான். நம் வெளிச்செயல்பாடுகள் யாவும் உள்ளத்தில் உள்ளதை உணர்த்த அல்லது மறைக்கத்தானே?

“இனி நான் உன்னை வெறுக்க மாட்டேன். என்னால் இயன்றதைச் செய்கிறேன்” என்றான் அரபி.

ஜாடி என்பது நமது உடலே. நமது ஐம்புலன்கள்தான் அதில் உள்ள தண்ணீர். இறைவா இந்த ஜாடியை ஏற்றுக்கொள்வாயாக. அதில் உள்ள நீரை மாசு படாமல் தூய்மைப் படுத்தி காத்தருள்வாயாக. இந்த ஜாடியிலிருந்து கடலுக்கு ஒரு வழி ஏற்படட்டும். கடலின் தன்மை ஜாடிக்கும் உண்டாகட்டும். எனவே நீ இந்த ஜாடியை, அரசர்களின் அரசனிடம் கொண்டு செல்லும்போது, அது சுத்தமானதாக இருக்கட்டும். அப்போதுதான் அரசன் அதை வாங்கிக் கொள்வான்.

பாக்தாது முழுவதும் இனிப்பான குடி நீர், தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டிருப்பதை அறியாத அரபி, தான் கொண்டு செல்ல இருக்கும் பரிசை எண்ணி மிகவும் பெருமைப் பட்டான்.

“ஜாடியின் மூடியை கவனமாக மூடித் தைத்துவிடு. இந்த அரிய பரிசைக் கொண்டு கலீ·பா நோன்பு திறக்கட்டும். அகில உலகிலும் இதைப் போன்ற தூய்மையான நீர் கிடையாது.”

பயபக்தியுடன் ஜாடி நீரை பாக்தாதுக்கு கொண்டு சென்றான். தொழுகைப்பாயை விரித்து அதில் இறைவனை வேண்டினாள் மனைவி. இறைவா, எங்கள் நீரை பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக! பாதுகாப்பாக அந்த முத்து, கடலைச் சென்று சேரட்டும். இந்த ம¨ழைத் துளியில் இருந்துதானே முத்து உண்டாகிறது? இது சாதாரண நீரல்ல. (சொர்க்கத்து ஓடையான) கவ்தரின் நீர்.

ஜாடி நீருடன் கலீ·பாவின் சபைக்கு வந்தான் அரபி. தேவையுள்ளவர்களெல்லாம் தங்கள் வலைகளுடன் அங்கே காத்திருப்பதைக் கண்டான் அவன். கணத்திற்குக் கணம் யாராவதொருவர் தனது தேவைகள் நிறைவேற்றப் பட்டவராக கண்ணியப் படுத்தப்பட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நல்லவனோ கெட்டவனோ, நம்பிக்கை உள்ளவனோ இல்லாதவனோ, அனைவருக்குமான வெயிலையும் மழையையும் போல, கலீ·பாவின் சபை திகழ்ந்தது. சொர்க்கத்தைப் போல! சூர் ஊதப்பட்டவுடன் உயிர் பெற்றவரைப் போல அங்கே அனைவரும் நின்று கொண்டிருந்தனர். சுலைமானிலிருந்து எறும்பு வரை. உருவங்களைப் பார்த்தவர்கள் முத்துக்களைக் கண்டார்கள். உண்மையைப் பார்த்தவர்கள் கடலிடம் சேர்ந்திருந்தார்கள்.

பிச்சைக்காரர்கள் செல்வத்தை நாடுவதுபோலவே, இறையருளாகிய செல்வம் பிச்சைக்காரர்களைத் தேடுகிறது. அழகானவர்கள் தெளிவான கண்ணாடியைத் தேடுவது போல, அழகின் முகம் கண்ணாடியில் தெரிவது போல, இறை தாராளமாகிய அருளின் முகத்தை பிச்சைக்காரன் பிரதிபலிக்கிறான்.

“ஓ, முஹம்மதே! பிச்சைக்காரர்களை விரட்டவேண்டாம்” என்று ‘சூரா வள்ளுஹா’வில் வருவதைக் கவனியுங்கள்.

இறையருளின் கண்ணாடியாக பிச்சைக்காரர்கள் இருப்பதனால் ஜாக்கிரதை! உங்கள் மூச்சுகூட கண்ணாடியை காயப்படுத்தும்.

கொடுப்பவன் கொடுப்பதனால்தான் பிச்சைக்காரன் பிச்சைக்காரனாக இருப்பது தெரிகிறது. இன்னொரு வகை பிச்சைக்காரர்கள் உண்டு. அவர்களின் தேவைகளுக்கு மேல் அதிகமாக, கேட்காமலேயே கொடுக்கப் படுகிறது.

எனவே எல்லா பிச்சைக்காரர்களும் இறையருளின் கண்ணாடியாக உள்ளார்கள். இறைவனோடு ஒன்றிய இன்னொரு வகையினர் இறையருளோடும் இணைந்தவர்கள்.

இந்த இரண்டு வகையான பிச்சைக்காரர்களைத் தவிர, மற்ற அனைவரும் இறந்தவரே!

இறை சன்னிதானத்தின் வாசலில் நிற்பவர்கள் அல்ல அவர்கள். திரைச்சீலையில் பாவு போடப்பட்ட (உயிரற்ற) உருவங்களை ஒத்தவர்கள் மற்றவர்கள்.

இறைவனைத் தவிர மற்றதைத் தேடுபவர்கள் ஒரு ஞானியின் உருவப் படத்தை ஒத்தவர்கள். இறையருளாகிய உணவுக்கு தகுதியற்றவர்கள். நாயின் உருவப்படம் மீது ரொட்டித் துண்டை எறிய வேண்டாம். உணவை (மட்டும்) யாசிக்கும் ஞானியோ நிலத்து மீனைப் போன்றவர். மீனின் வடிவம் மட்டும்தான் உள்ளது. ஆனால் கடலை விட்டு ஓடி வந்த மீன் அது.

நான் சொல்வதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. அத்தி மரத்திலிருந்து தனக்கான உணவையெல்லாம் எல்லாப் பறவைகளும் எடுத்துக்கொள்ள முடியாது. வரை படத்து மீனுக்கு நிலத்திற்கும் நீருக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன?

சோகமான ஓவியம் சோகத்தை உணருமா என்ன?! தோற்றத்தில் அது சோகமாக திகழ்ந்தாலும் சோகத்திலிருந்து விடுதலை பெற்றது ஓவியம். இதைப்போலவே இவ்வுலக இன்பதுன்பங்கள் யாவும் ஆன்மீக உலக இன்ப துன்பங்களுக்கு மத்தியில் ஒன்றுமில்லை. உயிரைப் பற்றி உடல் ஒன்றும் அறியாது. உடலைப் பற்றி டை அறியாதது போல.

அரண்மனைக்கு வந்த அரபியை கலீ·பாவின் அதிகாரிகள் வரவேற்றார்கள்.அவன் மீது கஸ்தூரி கலந்த நறுமண நீர் தெளித்தார்கள். (அவன் எதுவும்) பேசாமலே அவன் தேவையை அறிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். கேட்குமுன்னே கொடுப்பது அவர்கள் பழக்கமாயிருந்தது.

“அரபிகளின் தலைவரே! எங்கிருந்து வருகிறீர்கள்? பிரயாணமெல்லாம் எப்படி?”
என்று விசாரித்தனர்.

“நான் ஒரு அந்நியன். பாலைவனத்தில் இருந்து பஞ்சம் போக்க சுல்தானின் தயவை நாடி பாக்தாது வந்துள்ளேன். சுல்தானின் தாராள குணத்தின் வாசம் பாலைவனம் முழுவதும், அதன் மணல் துகள்களில்கூட ஊடுறுவிப் பரந்துள்ளது. தீனார்களுக்காகத்தான் நான் இந்த தொலைதூரப் பயணம் மேற்கொண்டேன். னால் இங்கு வந்தவுடன் என் கண்கள் திறந்துவிட்டன”

கிணற்றிலிருந்து நீர் எடுக்கும்போது ஜீவ நீராகிய ஹவ்லுல் கவ்தரை யூசு·ப் நபியின் முகத்தில் இருந்து பருகியதைப் போல, விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனித குலத்திற்கே தம் வித்திட்டதுபோல, பழி வாங்குவதற்காக போர்க்களம் வந்த அப்பாஸ், முஹம்மதையும் அவர் மார்க்கத்தையும் மறுமைவரை காப்பவராக மாறிவிட்டதைப் போல, அப்பா தரப்போகும் இனிப்புக்காக பள்ளி சென்ற குழந்தை, முடிவில் அறிவைப் பெறுவது போல.”

“செல்வத்தை நாடித்தான் இந்த ஏழை இச்சபைக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு, உண்மையிலேயே (ஆன்மீகத்தில்) அரபிகளின் தலைவனாகிவிட்டேன்.”

“ரொட்டியை நாடி தண்ணீர் கொண்டு வந்தேன். னால் இங்கு எனக்கு ஒரு சொர்க்கமே கிடைத்துள்ளது. சொர்க்கத்திலிருந்து உணவுதான் தமை வெளியே தள்ளியது. எனக்கு உணவுதான் சொர்க்கமளித்துள்ளது. மலக்குகளைப் போல எனக்கு உணவும் நீரும் தேவையில்லாமல் கிவிட்டது. எந்த நோக்கமும் இன்றி சுழலும் கிரகத்தைப் போல நான் இந்த அரண்மனையை வலம் வருகிறேன்”
என்றான் அரபி.

ஜாடியில் இருந்து மழை நீரை கலீ·பாவுக்கு பரிசாக வழங்கினான் அரபி. ஜாடி நீரானது பலவகையான அறிவுகளைக் குறிக்கும். கலீ·பாகவோ இறை ஞானமெனும் டைக்ரிஸ் நதியைப் போன்றவர். நாம் நம்முடைய மடமையினால் டைக்ரிஸ் நதிக்கு ஜாடி நீரைப் பரிசளிக்கிறோம். காட்டரபியாவது மன்னிப்புக்குரியவனே, ஏனெனில், அவன் டைக்ரிஸ் நதியை அறியாதவன். அறிந்திருந்தால் ஜாடியை உடைத்துப் போட்டிருப்பான்.

பரிசைப் பெற்றுக்கொண்ட கலீ·பா, ஜாடி நிறைய பொன்னையும் பொருளையும் நிரப்பி அந்த அரபியை கண்ணியப்படுத்தினார். போகும்போது, பாக்தாதின் வளம் மிக்க ஜீவ நதியான டைக்ரிஸ் நதியின் வழியாக அவனைக் கொண்டுவிடச் சொன்னார்

டைக்ரிஸ் நதிப்பயணம் அரபியின் கண்களைத் திறந்தது. தன் முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்ட அரபி, வெட்கப்பட்டு தலை குனிந்தான். அரசரின் பெருந்தன்மையை எண்ணி வியந்தான், வியர்த்தான்.

தெரிந்து கொள் மகனே! இந்த பிரபஞ்சமும் முழுவதுமே ஞானமும் அழகும் நிறைந்த ஒரு ஜாடிதான். இறைவனின் அழகாகிய டைக்ரிஸ் நதியின் ஒரு துளிதான் இந்த பிரபஞ்சம். பொறாமையினால் ஜாடியின்மீது கல்லெறிந்து உடைப்பவர்களே! தெரிந்து கொள்ளுங்கள். சிதறச் சிதற ஜாடி மேலும் பரிபூரணமடையும். ஜாடி உடைந்தாலும் தண்ணீர் சிந்தாது.

உடைந்த ஜாடியின் ஒவ்வொரு துண்டும் னந்தக் கூத்தாடும். முழுமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது முட்டாள்தனமாகத்தான் தோன்றும். பரிபூரண பேரானந்தத்தில் ஜாடியுமில்லை, நீருமில்லை!

நீ உண்மையில் கதவைத் தட்டும்போது அது திறக்கும். ஆனால் உனது எண்ணத்தில் சேறு படிந்துள்ளது. பசிக்கும்போது நாயைப் போலவும், வயிறு நிரம்பியதும் பிணத்தைப் போலவும் நீ ஆகிவிடுகிறாய். சிங்கங்களின் (அவ்லியாக்களின்) பாதையில் நீ எப்படி நடைபோடமுடியும்?

அரிப்புக்கு மருந்து சொரிவதல்ல. சொரிவதனால் அரிப்பு தீவிரமாகத்தான் ஆகும். சும்மா இருப்பதுதான் மருந்தின் தத்துவம். அப்போதுதான் ஆத்மாவின் பலம் புரியும். நோயோடு சண்டை போட வேண்டாம். முழுமையைப் பகுதிகளாகப் பார்ப்பவர்கள்தான் சண்டை போடுபவர்கள். அரபியையும் அவர் மனைவியையும் போல.

ரோஜாவின் மணம் அதன் பகுதிதான். ஆனால் ரோஜாவின் அழகு அதைச் சுற்றியுள்ள எல்லா பச்சைத்தாவரங்களின் அழகின் பகுதியாக அதைச் சார்ந்துள்ளது. புறாவின் குரல் வானம்பாடியின் பகுதியாக உள்ளது. இப்படிப் புரிந்துகொள்ள முடியாத குருடர்கள்தான் வறுமை என்றும் செழுமை என்றும் பிரித்துப் பார்ப்பார்கள். அரபியின் மனைவியைப் போல.

அந்த அரபியும் நாம்தான். அவன் மனைவியும் நாம்தான். ஜாடியும் நாம்தான். கலீ·பாவும் நாமே. இந்த கதை தலையும் காலும் இல்லாதது போலத் தோன்றுகிறது. மழைத்துளியைப் போல. மழைத்துளியின் தலையும் காலும் மழைத்துளிதான்!

அருஞ்சொற்பொருள்சூர் — உலகமுடிவு நாளில் இறந்த அனைவரையும் எழுப்ப ஊதப்படும் ஒரு கருவி / அக்கருவியினால் எழுப்பப்படும் சப்தம்
‘சூரா வள்ளுஹா’ — திருமறை அத்தியாயம்
ஹவ்லுல் கவ்தர் — சொர்க்கத்து ஓடை

***

அல்வாவும் அழுகையும் – கதை  11

ஷெய்கு (ஆன்மீக குரு) ஒருவர் தனது தாராள தன்மையின் பொருட்டு எப்போதும் கடனாளியாகவே இருந்தார். பணக்காரர்களிடம் வாங்கி வாங்கி, துறவிகளாகவும் ஏழைகளாகவும் இருந்த ஆன்மீகவாதிகளான தர்வேஷ்களிடம் கொடுத்த வண்ணம் இருந்தார். அவர்கள் திக்ர் எனும் இறைதியானம் செய்வதற்காக ஒரு கட்டிடத்தையும் கடன் வாங்கியே கட்டிக் கொடுத்தார். தன்னுடைய பணம், பொருள், உயிர் அனைத்தையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தார்.

எல்லாத் திசைகளில் இருந்தும் இறைவன் அவர் கடனை அடைத்துக்கொண்டிருந்தான். தன்னுடைய நண்பராகிய இப்ராஹீமுக்காக மண்ணிலிருந்து மாவை அவன் தரவில்லையா? இறைவா, ஊதாரிக்கும் கஞ்சனுக்கும் கொடுத்துகொண்டே இரு என்று ஒவ்வொரு சந்தையிலும் இரண்டு மலக்குகள் (வானவர்கள்) சொல்லிக்கொண்டே இருப்பதாகச் சொன்னார்கள் பெருமானார் (ஸல்).

இஸ்மாயீலைப் போல, இறைவனுக்காக கழுத்தை நீட்டும்போது, அந்தக் கழுத்தை அறுக்கும் சக்தி எந்தக் கத்திக்கும் வருவதில்லை. இதன் காரணமாகத்தான், இறைவனுடைய பாதையில் ஷஹீது (உயிர்த்தியாகம்) செய்தவர்களெல்லாம் இன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈமான் (நம்பிக்கை) இல்லாதவர்களைப் போல, உடம்பை மட்டும் பார்க்காதீர்கள். ஏனெனில் அந்த உடம்புக்குள்ளே, நித்தியமான உயிரைக் கொடுத்துள்ளான் உயர்ந்தவன். வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுதலை பெற்றது அது.

ஒரு உணவு விடுதியின் சேவகனைப்போல, கடன் வாங்கிப் பெறுவதும், பெற்றதை உடனே தானமாகத் தருவதுமாக தன் வாழ்நாளைச் செலவழித்தார் அந்த ஷெய்கு. அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது, மரணத்தின் அறிகுறிகளை தனது உடம்பில் கண்டார் அவர். கடன் கொடுத்தவர்களெல்லாம் கசப்பான முகங்களோடு அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒரு மெழுகுவர்த்தியைப் போல மெல்ல உருகி முடிந்து கொண்டிருந்தார் ஷெய்கு.

இவர்களது முகங்கள் ஏன் இவ்வளவு கறுப்பாக உள்ளன? நானூறு தீனார்களை (தங்க நாணயங்களை) தரமாட்டானா தாராள நாயன் என்று நினைத்தார்.

அப்போது வாசலில் “ஹல்வா, ஹல்வா” என்று கூறி விற்றுக்கொண்டு சென்றான் ஒரு சிறுவன். தலையை அசைத்து, தன் சேவகர்களை அனுப்பி, எல்லா ஹல்வாவையும் வாங்கிவரச் சொன்னார் ஷெய்கு. ஹல்வாவைச் சாப்பிடும்போதாவது இந்தக் கடன்காரர்கள் கசப்பைக் காட்டாமல் இருக்க மாட்டார்களா என்று எண்ணினார்.

அரை தீனாருக்கு அவ்வளவு ஹல்வாவையும் விலை பேசிக்கொண்டு வந்தான் சேவகன். ஷெய்கின் முன்னே மரியாதையாக ஹல்வா தட்டு வைக்கப்பட்டது.

“சாப்பிடுங்கள், இது எனது பரிசு. உங்களுக்கு இது (அனுமதிக்கப்பட்ட) ஹலாலான உணவு” என்றார் ஷெய்கு.

தட்டு காலியானவுடன் ஹல்வாவுக்கான தீனாரைக் கேட்டான் சிறுவன்.

“பணத்திற்கு நான் எங்கே போவேன்? நானே கடனில் இருக்கிறேன். என், உயிரும் கழிந்து கொண்டிருக்கிறது” என்றார் ஷெய்கு.

துக்கம் தாளாமல் தட்டைத் தரையில் வீசினான் சிறுவன். அரற்றினான். புலம்பினான். அழுதான். இந்த ஹல்வா முழுங்கி சூ·பிகள், பூனைகளைப் போல தங்கள் முகங்களைக் கழுவினாலும் நாய்களைப் போன்ற ஆசை கொண்டவர்களாக இருக்கின்றனரே என்று ஓலமிட்டான். அவன் புலம்பியதைக் கேட்டு ஒரு கூட்டம் கூடியது.

“இவ்வளவு கொடூரமானவராக இருக்கிறீர்களே, நான் வெறுங்கையோடு சென்றால் என் எஜமான் என்னைக் கொன்று விடுவான். நான் சாகவா?” என்று ஷெய்கை அச்சிறுவன் கேட்டான்.

“இது என்ன விளையாட்டு? எங்களுடைய சொத்தையும் விழுங்கி விட்டீர்கள். நீங்களும் செத்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் இந்த சிறுவனுக்கும் இப்படி ஒரு அநீதி இழைக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள் கடன்காரர்கள்.

ஷெய்கு எதுவும் பேசவில்லை. லுஹர் (பகல்) தொழுகைக்கான நேரம் வரை அழுது கொண்டிருந்தான் சிறுவன். ஷெய்கு தனது கண்களை மூடி தியானத்தில் இருந்தார். நித்தியத்தில் நிலைத்தவராக, இறப்பில் இன்புற்றவராக, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் மீறியவராக, நிலவைப் போல பொழிந்து இலங்கும் முகத்துடன், வசவையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதவராக அமர்ந்திருந்தார்.

நாய்கள் குரைத்தால் நிலவுக்கென்ன? நாய் அதன் வேலையைச் செய்கிறது. நிலவும் தனது அழகிய முகத்திலிருந்து ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். நாணல் நுழைகிறது என்பதற்காக ஓடும் நீர் அசுத்தம் அடைவதில்லை.

(முஹம்மது நபியை வெறுத்த முக்கிய எதிரிகளில் ஒருவனாகிய) அபூலஹ்ப் தனது பேச்சால் வெறுப்பை கொட்டிக் கொண்டிருப்பான். ஆனால் முஹம்மதோ நள்ளிரவில் நிலவை இரண்டாகப் பிளப்பார். இறந்தவர்களை எழுப்புவார் இறைத்தூதர் ஈஸா. கோபத்தில் தங்களது மீசைகளை முறுக்குவார்கள் யூதர்கள்.

எந்த நாயின் குரைப்பாவது நிலவின் காதுகளை எட்டியதுண்டா? அதுவும் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நிலவுக்கு?! இசையை ரசித்துக்கொண்டே ற்றுப் படுகையின் பக்கம் போதையில் திளைக்கும் மன்னன், தவளையின் சப்தம் பற்றி கவலை கொள்வதில்லை.

லுஹர் தொழுகைக்கான நேரம் வந்தபோது, ஹாத்தீமைப் போன்ற வள்ளல் ஒருவரிடமிருந்து தட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு ஷெய்கிடம் வந்தான் ஒரு சேவகன். ஷெய்கிற்குப் பரிசு அளித்திருந்தார் அந்தப் பணக்காரர்.

தட்டைத் திறந்து பார்த்தார் ஷெய்கு. அதில் நானூறு தீனார்கள் தனியாகவும், அரை தீனார் தனியாகவும் இருந்தது.

அந்த அற்புதத்தைக் கண்ட கடன்காரர்கள் உடனே ஷெய்கிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.

“நாங்கள் அறியாமல் பேசிவிட்டோம். (இறை வழிகாட்டியாகவும் குருவாகவும் செயல்பட்ட) ஹிள்ர் அவர்க¨ளை புரிந்துகொள்ளாத (இறைத்தூதர்) மூஸாவைப் போல, நாங்கள் அவமானப் பட்டுவிட்டோம். குருடர்களைப் போல எங்கள் கழிகளை கண்டபடி வீசி விளக்குகளை உடைத்துவிட்டோம். எங்களை மன்னியுங்கள்” என்று வேண்டினர்.

“மன்னிக்கிறேன். நீங்கள் பேசியதும் சட்டப்படி நியாயமானதே. நீங்கள் கண்ட அற்புதத்தின் ரகசியம் என்னவெனில், நான் அல்லாஹ்வை நாடினேன். அதன் விளைவாக அவன் எனக்கு சரியான வழியைக் காட்டினான். அரை தீனார்தான் என்றாலும் அந்தச் சிறுவன் அழுதிராவிட்டால் அந்தப் பணம் கிடைத்திருக்காது. அவன் மட்டும் அழுதிராவிட்டால் என் கருணையின் கடல் பொங்கியிருக்காது. இந்தச் சிறுவன் உங்கள் கண்ணின் கண் மணியைப் போன்றவன்.”

“தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய வேதனையான கண்ணீரின் பொருட்டுத்தான் உங்கள் சைகள் நிறைவேறுகின்றன (ஏசுவதனாலும் எதிர்ப்பதனாலும் அல்ல). ஒவ்வொரு சையும் நிறைவேற, அதற்குரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. விலையென்பது உங்கள் உடம்பின்மீது நீங்கள் சிந்தும் கண்ணீராக உள்ளது. அழும் பிள்ளைக்குத்தான் அம்மா பால் தருவாள். தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் ஷெய்கு.
***

சூ·பியும் கழுதையும் கதை 12

சூ·பி ஒருவர் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவர் சூ·பிகளுக்கான மடம் ஒன்றில் தங்கினார். தனது கழுதையை லாயத்தில் கட்டினார். நண்பர்களுடன் உரையாட, (மேடைமீது ஏறி) உயரத்தில் அமர்ந்து கொண்டார். பின் அனைவரும் இறைதியானத்தில் ஈடுபட்டனர்.

சூ·பிகள் அல்லாஹ்வின் நண்பர்கள். அவர்களை ஞான நூல் என்று சொன்னால் அது ரொம்ப குறைவு. எனினும் சூ·பி என்ற புத்தகம் மையாலும் எழுத்தாலும் ஆனதல்ல. பனி போன்ற வெண்மையான இதயமே அது. எழுதுகோல் குறிப்புகளைக் கொண்டு அறிஞர்கள் அறியப்படுகிறார்கள். இறைவனின் நண்பர்களான அவ்லியாக்களோ காலடிச் சுவடுகளால் அறியப்படுகிறார்கள்.

சாதாரண மனிதர்களுக்கு எது சுவராக இருக்கிறதோ, அதுவே சூ·பிகளுக்கு கதவாக மாறுகிறது. நமக்கு கூழாங்கல்லாக இருப்பது அவர்களுக்கு விலைமதிப்பற்ற முத்தாக உள்ளது. நாம் கண்ணாடியில் காண்பதைவிட அதிகமாக அவர்கள் வெறும் கண்ணாலேயே காண்பார்கள். காலடிச் சுவடுகளைப் பின்பற்றி வேட்டைக்காரர்கள் கஸ்தூரி மானை பிடிக்க முயல்வார்கள். இந்த ஆன்மீக வேட்டைக்காரர்களோ கஸ்தூரி வாசத்தை உணர்ந்து பின்பற்றுவார்கள்.

சூ·பிகளுடைய உயிர்கள் தெய்வீக அருட்கடலிலே இருந்தன. விதைக்கும் முன்பே அறுவடை செய்பவர்கள் அவர்கள். கடலைப் படைக்கும் முன்பே முத்தைக் கண்டவர்கள் அவர்கள். மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன் சொன்னபோது வானவர்கள் அதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி கைகொட்டிச் சிரித்தவர்கள் சூ·பிகள். படையும் இன்றி, போரும் இன்றி வெற்றியடைந்தவர்கள் அவர்கள்.

சிந்தனை என்பது அவர்களைப் பொருத்தமட்டில் (இல்ஹாம் எனப்படும்) இறையுதிப்பாக உள்ளது. சிந்தனை என்பது என்ன? கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய எண்ண ஓட்டம்தானே? காலத்திலிருந்து எண்ணத்தைப் பிரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

திராட்சையின் இதயத்தில் மது இருப்பதை உயிர் அறியும். இல்லாததில் இருப்பதைக் கண்டுகொள்வதும் அதுவே. சூடான ஜூலையில் டிசம்பர் குளிரையும், வெயிலில் நிழலையும் சூ·பிகள் அறிவார்கள். முழுமையான அர்ப்பணத்தில் தங்கள் தேவைகள் நிறைவேறியவர்களாக அவர்கள் உள்ளார்கள்.

எண்ணற்ற அலைகளுக்கு காரணம் காற்றே. கடல் ஒன்றுதான் (உண்மை). சூரியனைப்போன்ற வடிவங்களுக்கு கட்டுப்பட்ட பார்வையில்தான் சந்தேகம் முளைக்கிறது. பிரிவினையையும் பன்மையையும் பார்ப்பது மிருக புத்தி. மூலம் ஒன்றுதான் என்று புரிந்துகொள்வது மனிதமே.

இறைவனின் ஒளியானது என்றுமே பிரிவுக்கு உட்பட்டதில்லை என்பதைத்தான், “அவர்கள் (மனிதகுலம்) மீது இறைவன் ஒளியைத் தெளித்தான்” என்ற இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

நண்பரே, உங்கள் களைப்பை ஒரு கணம் அலட்சியப்படுத்திவிட்டு, நான் சொல்ல வருவதைக் கேளுங்கள். அப்போதுதான் நான் இறைவன் என்ற பேரழகின் ஒரு மச்சத்தை(யாவது) விவரிக்க முடியும். அந்த அழகை முழுமையாக விவரிக்கத்தான் முடியுமா? இந்த அநித்திய உலகமும், நித்தியமான ஆன்மீக உலகமும் அவனது மச்சத்தின் பிரதிபலிப்புத்தானே! தானியக் கிடங்கிலிருந்து தன்னைவிட பெரிய சுமையை இழுத்துக்கொண்டு செல்லும் எறும்பைப் போல நான் இருக்கிறேன்.

நண்பரே, வெளியில் தெரிகின்ற உருவம்தான் சூ·பி என்று எண்ணிவிடாதீர். சரி, கதைக்கு வருவோம். ஆனால் கதையில் அரிசி எது, உமி எது? நீங்களே பிரித்து அறிந்து கொள்ளுங்கள்.

சூ·பிகளின் வட்டவடிவ இறைத்தியானம் முடிந்தபின், சாப்பாடு வந்தது. சூ·பிக்கு தன் கழுதையின் நினைவு வந்தது. சேவகனைக் கூப்பிட்டார்.

“லாயத்திற்குச் சென்று வைக்கோலும் பார்லியும் எனது கழுதைக்கு வை” என்றார்.

“லா ஹவ்ல் (இறைவனைத் தவிர வேறு ற்றலில்லை). நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் உண்டு” என்றான் சேவகன்.

“முதலில் பார்லியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள். கழுதை கொஞ்சம் வயசானது. அதோடு அதன் பற்களும் பலகீனமானவை”

“லா ஹவ்ல், எனக்குத் தெரியும்”

“சேணத்தை அகற்றிவிட்டு, காயப்பட்ட அதன் முதுகில் மம்பல் (எனும் வலி நிவாரணி மருந்தை) தடவி விடு”

“லா ஹவ்ல், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான விருந்தாளிகளை நான் கவனித்திருக்கிறேன். அனைவருமே எனது சேவையில் திருப்தியுற்றவர்களாகத்தான் திரும்பியுள்ளார்கள்”

“குடிப்பதற்கு தண்ணீர் கொடு. ஆனால் அது ரொம்ப சூடாகவும் வேண்டாம், ரொம்ப குளிர்ச்சியாகவும் வேண்டாம்”

“லா ஹவ்ல், நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கே வெட்கமாக உள்ளது”

“பார்லியில் கொஞ்சம் வைக்கோல் கலந்து வை”

“போதும் ஐயா, வேலை தெரிந்தவனிடம் நீங்கள் வேலையை விளக்க வேண்டியதில்லை”

பொறுமை இழந்த சேவகன், பார்லியும் வைக்கோலும் எடுத்து வருவதாக சொல்லிச் சென்றான். சென்றவன் சென்றவன்தான். சூ·பியின் உத்தரவுகளையும் கழுதையையும் மறந்தான். தன் சகாக்களோடு சேர்ந்து அரட்டையடித்தும், கழுதை மீது சூ·பி கொண்ட அக்கறையை கிண்டல் செய்தும் பொழுதைக் கழித்தான்.

பிரயாணத்தால் களைப்புற்றிருந்த சூ·பி, கட்டளைகளைக் கொடுத்துவிட்டு கண்ணுறங்கச் சென்றார். (கண்களைத் திறந்தே தூங்கும் முயலின்) தூக்கத்தை விழிப்பென்று எண்ணியபடி.

தன் கழுதையை ஓநாயொன்று முதுகிலும் தொடையிலும் கடித்துக் குதறுவதாகவும், சாலையிலும் கிணற்றுக்குள்ளும் அது விழுந்துவிடுவதாகவும் கனவு கண்டு விழித்தார். (இறைவசனங்களான) சூரா ·பாத்திஹாவையும் சூரா காரியாவையும் ஓதிக்கொண்டார்.

கதவுகளை வெளிப்பக்கமாக தாழ் போட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்டார்களே! என்ன செய்வது? யாரிடம் உதவி கேட்பது? வேலைக்காரன் எங்கு சென்றான்? எங்களோடுதானே உணவையும் உப்பையும் பங்கிட்டுக் கொண்டான்? நான் அவனிடம் அன்புதானே காட்டினேன்? அவன் ஏன் வெறுப்பு காட்டுகிறான்? பகைமை உணர்வு ஒவ்வொன்றுக்கும் காரணம் வேண்டுமல்லவா?

ம்ஹ¤ம். அன்பின் வடிவமான (முதல் மனிதர்) தம் இப்லீஸ¤க்கு என்ன தீங்கு செய்தார்கள்? அவன் அவர்களுக்கு தீங்கு செய்யவில்லையா? தேளுக்கும் பாம்புக்கும் மனிதன் என்ன செய்கிறான்? அவை அவனைக் கடித்து, வேதனையையும் விடுதலையையும் தரவில்லையா?

கடித்துக் குதறுவது ஓநாயின் குணம். இந்தப் பொறாமை மனிதனிடத்திலே மிகவும் வெளிப்படையாகவே உள்ளது.

ம்ஹ¤ம். இப்படி எண்ணுவது தவறு. என் சகோதரனுக்கு எதிராக நான் ஏன் சிந்திக்கிறேன்?

இவ்வாறாக சூ·பி சிந்தித்துக் கொண்டிருக்கையில், லாயத்தில் அவர் கழுதை நிந்தித்துக் கொண்டிருந்தது.

இறைவா, பார்லி வேண்டாம், ஒரு கைப்பிடியளவு வைக்கோலாவது தரக்கூடாதா? ஓ, குருமார்களே! அந்த மரியாதை தெரியாத, பக்குவமற்ற அயோக்கிய சேவகனின் பொருட்டு என் மீது கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்று தனது ஊமை நாவன்மையால் முறையிட்டுக் கொண்டிருந்தது.

விடிந்ததும் வந்தான் வேலைக்காரன். கழுதைக்கு சேணம் பூட்டினான். வழக்கப்படி இரண்டு மூன்று அடிகளும் கொடுத்தான். வலி பொறுக்க முடியாமல் துள்ளிக் குதித்தது கழுதை.

சூ·பி அதன் மீதி ஏறி தன் பிரயாணத்தைத் தொடர முயன்றபோது, பலமுறை அது குப்புற விழுந்து மண்ணைக் கவ்வியது. உடம்பு சரியில்லை என்றெண்ணி, சக பயணிகள் அதை ஒவ்வொரு முறையும் தூக்கிவிட்டார்கள். சிலர் அதன் காதுகளைத் திருகினார்கள். சிலர் அதன் குளம்பில் கல் குத்தியுள்ளதா என்று கவனித்தார்கள்.

“குருவே, என்ன யிற்று உங்கள் கழுதைக்கு? எனக்கு இறைவன் ரோக்கியமான கழுதையைக் கொடுத்துள்ளான் என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்தீர்களே” என்று கேட்டனர்.

“ராத்திரி பூரா ‘லா ஹவ்’லைத் தின்ற கழுதை இப்படித்தானிருக்கும். இரவில் இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறது” என்றார் சூ·பி.

ஷைத்தானுடைய வாயிலிருந்து வரும் ‘லா ஹவ்ல்’ என்பதை விழுங்கும் எவனும் இந்தக் கழுதையைப் போல குப்புற விழ வேண்டியதுதான். இஸ்லாத்தின் பாதையிலும் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீது போகும்போது, இந்தக் கழுதையைப் போல மயங்கி விழத்தான் வேண்டும்.

நயவஞ்சகர்களுடைய வார்த்தைகளின்மீது எச்சரிக்கையாய் இருங்கள். விரிக்கப்படும் வலையை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த உலகின்மீது பாதுகாப்பாகத்தான் நடக்கிறோம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.

எத்தனையோ ஷைத்தான்கள் ‘லா ஹவ்ல்’ என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர். தமே, பாம்பின் உள்ளே இப்லீஸ் இருக்கிறான். பணிந்து கொள்ளுங்கள் எனது அன்பே, ஆத்மாவே என்றெல்லாம் ஆசை காட்டுவான். ஒரு கசாப்புக் கடைக்காரனைப் போல தோலை உரிப்பதற்குத்தான் அதெல்லாம்.

உங்களுக்கான உணவை நீங்கள் தேடுங்கள். சிங்கத்தைப் போல. அந்நியனோ, அந் நியோன்னியமான உறவுக்காரனோ, எவராக இருந்தாலும் சரி, கீழ்த்தரமானவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். அவை அந்த சேவகனின் அக்கறையைப் போன்றதுதான். ஒன்றுமில்லாதவர்களுடைய புகழ் மொழிகளுக்கு செவி சாய்ப்பதைவிட, நண்பர் ஒருவரும் இல்லாதவராக இருப்பதே மேல். அடுத்தவனுடைய நிலத்தில் உங்கள் வீடுகளைக் கட்ட வேண்டாம்.

அந்நியன் என்பது யார்? உங்கள் உடம்புதான். அதைக்கொண்டுதான் உங்களுக்கு எல்லாத் துயரமும். உங்கள் உடம்புக்கு மட்டும் சத்தான உணவு வகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில், உங்கள் ஆத்ம சாரத்தில் கொழுப்பு இருக்காது. கஸ்தூரியிலேயே உங்கள் உடம்பைக் கிடத்தியிருந்தாலும், அதன் துர் நாற்றம் இறப்பின்போது பிறந்துவிடும். கஸ்தூரியை உங்கள் உடம்பில் பூச வேண்டாம். இதயத்தில் தேயுங்கள். கஸ்தூரி என்பது என்ன? இறைவனுடைய புனிதமான பெயர்தான் அது.

நயவஞ்சகர்கள்தான் கஸ்தூரியை உடம்பில் போட்டுக்கொள்கிறார்கள். அவர்களுடைய உதடுகள் இறைவனுடைய திருப்பெயரை உச்சரிக்கும். அவர்களுடைய உள்ளங்களில் இருந்து அவநம்பிக்கையின் துர்நாற்றம் அடிக்கும். அவர்களைப் பொறுத்தவரை, இறைப்புகழ்ச்சி என்பது, கழிவு மலை மீது வளரும் ரோஜாக்களையும் லில்லி மலர்களையும் ஒத்தது.

நல்ல பெண்கள் நல்ல ஆண்களிடத்திலே சேருகிறார்கள். அதே போல, கெட்ட ஆண்களுக்கு கெட்ட பெண்கள் என்றும் இறைவசனம் உள்ளது. தெரிந்து கொள்ளுங்கள். கெட்ட எண்ணம் வேண்டாம். அதன் தோற்றம் நரகம் கும். அது உங்கள் மார்க்கத்தின் பகைவனுமாகும். நீங்கள் நரகத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு பகுதியும் அதன் முழுமையை நோக்கியே பிரயாணப்படுகிறது. ஜாக்கிரதை.

சகோதரனே, நீ உன் எண்ணங்களின் கூட்டுத் தொகையன்றி வேறென்ன? மற்றதெல்லாம் வெறும் எலும்பும் தோலும்தான். உனது எண்ணம் ரோஜா என்றால் நீ ஒரு ரோஜாத்தோட்டம். முள் என்றால் அடுப்புக்கு விறகாகும் முட்புதர் நீ. நீ பன்னீரென்றால், தலைகள் மீதும் நெஞ்சங்களிலும் தெளிக்கப்படுவாய். சிறுநீரைப் போல நீ துர்நாற்றமடித்தால் வெளியேற்றப்படுவாய்.

பிரிந்தும் கலந்தும் சிதறுண்டு போன மக்களை ஒன்றுபடுத்துவதற்காகத்தான் இறைவன் தூதர்களை வேத நூலுடன் அனுப்பினான். அவர்களின் வருகைக்கு முன் நாமனைவரும் ஒரே சமுதாயமாகத்தான் இருந்தோம். நல்லவர்களாகவா, கெட்டவர்களாகவா என்று யாருக்கும் தெரியாது.

நல்ல காசும் செல்லாக் காசும் ஒன்றாகக் கலந்திருந்தன. இருட்டாக இருந்ததனாலும், மக்களனைவரும் இரவுப் பயணிகளாக இருந்ததனாலும் ஒன்றும் தெரியவில்லை. இறைத்தூதர்களின் சூரியன் உதித்தபோது, செல்லாக் காசுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

ஒளியானது நல்லதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. அல்லதை அதன் தன்மையில் காட்டுகிறது. இதனால்தான் இறைவன் கியாமத்தை (மறு உயிர்ப்பு செய்யும்) நாள் என்று குறிப்பிட்டான். உண்மையில் நாள் அல்லது பகல் என்பது அவ்லியாக்களின் அந்தரங்க பிரக்ஞையாக உள்ளது. அவர்களுடைய மர்மத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது.

காலையின் மீது ணையாக என்று (காலை என) இறைவன் குறிப்பிடுவதெல்லாம் (இறுதித் தூதர்) முஸ்தபாவின் மன ஒளியைத்தான். இல்லையெனில், நிலையற்ற ஒன்றைக் குறிப்பிட்டு, அதன் மீது ஆணையாக என்று சொல்வது தவறாகிவிடுமல்லவா? தற்காலிகமானவற்றைச் சிலாகிப்பது இறைவனுடைய பேச்சுக்கு உகந்ததாகுமா?

அஸ்தமிப்பவைகளை நான் நேசிக்கவில்லை என்று இறைவனின் நண்பராகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் சொன்னதை சிந்தித்துப் பாருங்கள். இரவின் மீது ஆணையாக என்பதும் இதையொத்ததுதான். இரவு என்பது உடம்பையும் குறிக்கும்.

நானே அல்லாஹ் என்று ·பிரவ்ன் சொன்னது பொய்யாகும். னால் மன்சூர் அல்ஹல்லாஜ் வாய்வழி வெளிப்பட்டபோது அது உண்மையின் ஒளியாக இருந்தது. (இறைத்தூதர்) மூஸாவின் கையிலிருந்த கழி, உண்மைக்கு சாட்சி பகர்ந்தது. மந்திரவாதிகளின் கைகளிலோ அது பயனற்றதாக இருந்தது. களிமண்ணின் மீது ஓங்கி அடித்தாலும் நெருப்புப் பொறி பறக்குமா?

கையும் கருவியும் கல்லையும் இரும்பையும் போன்றது. எப்போதுமே ஒரு ஜோடிதான் பிறப்பிற்கு தாரம். ஜோடியும் கருவியும் இல்லாத ஒருவன் இறைவன் மட்டுமே. எண்களில் சந்தேகம் வரலாம். அனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது இறை என்ற அந்த ஒன்று. இரண்டு மூன்று என்று சொல்பவர்கள்கூட ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வார்கள். ஒன்றரைக்கண் போடாமல் ஒழுங்காகப் பார்த்தால் இரண்டு, இருபதெல்லாம் ஒன்றாகிவிடும்.

குருட்டு இதயங்களில் புனித வார்த்தைகள் தங்குவதில்லை. எந்த ஒளியினின்று வந்தனவோ, அங்கேயே அவை மீள்கின்றன. மனப்பாடம் செய்தாலும் சரி, தகுதியற்றவர்களிடம் தங்குவதில்லை ஞானம். நீங்கள் எழுதி வைத்தாலும் சரி, எடுத்தியம்பினாலும் சரி, தனது முகத்தை அது உங்களிடமிருந்து விலக்கிக் கொள்ளும்.

ஆனால் நீங்கள் அன்பு வைத்துவிட்டால், உங்களுக்கு அடங்கிய பறவையாய் உங்கள் கைகளில் தவழும். எந்த விவசாயியின் வீட்டிலும் தங்குவதில்லை (ஞானமாகிய) மயில்.

அருஞ்சொற்பொருள்:சிராத்துல் முஸ்தகீம் — நேரான வழி மற்றும் மறுமை நாளில் நம்பிக்கை கொண்டோர் கடக்க சொர்க்கத்து இட்டுச் செல்லும் ஒரு பாலம். நம்பிக்கையற்றோர் தவறி நரகத்தில் விழுவர் என்றும் ஐதீகம்.
***
இப்லீஸ¤ம் முவியாவும் கதை 13

ஒரு ஹதீஸில் பின் வரும் நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நாள் அரண்மனையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமீர் முவியா. அரண்மனையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தன. ஏனெனில், ஏகப்பட்ட குடிமக்களைச் சந்தித்து, அமீர் மிகவும் களைப்புற்றிருந்தார்.திடீரென யாரோ ஒருவன் அமீரை எழுப்பினான். அமீர் கண்விழித்ததும் எழுப்பியவன் மாயமாய் மறைந்து போனான்.

அரண்மனைக்குள் யாரும் நுழைய முடியாது. எனினும் அவ்வளவு துணிச்சலாகவும் மரியாதை கெட்டத்தனமாகவும் யார் நுழைந்திருக்க முடியும்? தனக்குள் கேட்டுக்கொண்டார் முவியா.

பார்வையிலிருந்து மறைந்து நிற்கும் அந்த மாயவனை அரண்மனை முழுக்க தேடினார் அமீர். கடைசியில் ஒரு கதவின் பின்புறமாக, திரைச்சீலையில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு நின்ற அந்த துர்பாக்கியசாலியைக் கண்டார்.

“யார் நீ? உன் பெயரென்ன?” என்று கேட்டார் அதட்டலாக.

“சபிக்கப்பட்ட ஷைத்தான் எனது பெயர்” பதிலும் அலட்சியமாக வந்தது.

“என்னை ஏன் எழுப்பினாய்? உனது நோக்கமென்ன?”

“தொழுகைக்கான நேரம் முடியப்போகிறது. பள்ளிவாசலுக்கு நீங்கள் விரைய வேண்டும். நேரம் முடிவதற்குள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று முஸ்த·பா கூறியுள்ளார்கள்” என்றான் இப்லீஸ்.

“ம்ஹ¤ம். நல்லவற்றை நோக்கி (என்னை) செலுத்தும் வழிகாட்டி நீயல்ல. என் வீட்டுக்குள் ஒரு திருடன் புகுந்து நான் காவல் காக்க வந்தேன் என்று சொன்னால் நான் நம்ப வேண்டுமா? நல்லவற்றுக்கான நன்மைகளைப் பற்றி திருடனுக்கென்ன தெரியும்?” என்றார் முவியா.

“நானும் முதலில் ஒரு மலக்காகத்தான் இருந்தேன். அல்லாஹ்வுடைய பாதையில் பணிவுடன் எனது ஆத்மா வெகுதூரம் பயணித்திருந்தது. பக்திப் பாதையில் செல்பவர்களைப் பற்றி நான் திட்டவட்டமாக அறிந்திருந்தேன். அல்லாஹ்வில் அர்ஷின் பக்கத்தில் வாழ்பவர்களையும் நான் நன்கறிவேன்.”

“முதல் காதல் மனதை விட்டுப்போகுமா? முதல் அழைப்பை ஒருவன் மறக்க முடியுமா? நீங்கள் அந்தோனியாவுக்கும் கூத்தானுக்கும் பயணம் செய்தாலும் உங்கள் தாய் நாட்டை மறந்துவிடுவீர்களா என்ன?”

“இறை மதுவை உண்டு போதையுற்றவர்களில் ஒருவனாகத்தான் நானுமிருந்தேன். இறைவனின் சபையில் நானும் ஒரு காதலன். இறைக்காதல் என்பது பிறவியிலேயே என்னுள் விதைக்கப்பட்டது.”

“நான் நல்ல நாட்களைக் கண்டிருக்கிறேன். என் வசந்த காலத்தில் அவனுடைய தெய்வீகக் கருணை (எனும்) நீரை அருந்தியுள்ளேன். என்னை விதைத்தது அவனது வள்ளல் கரமல்லவா? இல்லாமையிலிருந்து எனக்கு என் இருப்பைக் கொடுத்தது அவனல்லவா? அவனது அளவற்ற அன்பெனும் ரோஜாத் தோட்டத்தில் நான் பலமுறை உலா வந்துள்ளேன்.”

“என் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பால் கொடுத்தது யார்? அன்பு, கருணை, வள்ளல் தன்மை, இவைதான் இறை (வன் என்ற) நாணயத்தை உருவாக்கிய அடிப்படை உலோகங்கள். கோபம் என்பது அந்த நாணயத்தின்மீது படிந்த தூசிதான். அவனிடமிருந்து நான் பிரிந்திருப்பது அவனோடு இணைவதன் மதிப்பை உணர்ந்து கொள்ளத்தான். பிரிவு அனைத்தும் உறவின் அருமையை உணரத்தான்.”

“”எனது படைப்பின் நோக்கம் நன்மை செய்வதுதான். எனது தேனானது எனது படைப்புகள் தங்கள் கைகளில் தடவிக்கொள்ளத்தான்; அவர்களிடமிருந்து நன்மையை நான் பெறுவதற்காக அல்ல” என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் ஒரு ஹதீஸ் குத்ஸியிலே சொல்லுகிறார்கள்.”

“நான் இறைவனை விட்டுப் பிரிந்திருக்கும் இந்த குறுகிய காலத்திலும் எனது கண்கள் அவனது அழகிய முகத்தின்மீதே லயித்துள்ளன. இவ்வளவு அழகான முகத்தில் எப்படி இவ்வளவு கோபம் என்றுதான் நான் வியக்கிறேன்.”

“இறைக்கோபம் தற்காலிகமானது. தற்காலிகமானது தற்காலிகமானதைத்தான் உருவாக்கும். நான் நிரந்தரமானதையே நோக்குகிறேன். இறைவனின் கருணை நிரந்தரமானது.”

“எனது பொறாமையினால்தான் நான் தமுக்கு பணியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த பொறாமை இறைவன்மீது நான் கொண்ட அன்பினால் எழுந்ததுதான். அவன் கட்டளைக்கு அடிபணியாமையினால் எழுந்தது அல்ல.”

“எல்லாப் பொறாமையும் காதலின் விளைவுதான். நம்மையல்லாத வேரொருவர் இறையன்புக்கு பாத்திரமாகிவிடுகிறாரே என்ற பொறாமைதான். தும்மலைத் தொடர்ந்து அல்ஹம்துலில்லாஹ் வருவதுபோல, அன்பின் பின் (விளைவாக) பொறாமை வருகிறது.”

“துன்பத்திலும் அவனது இன்பங்களையே நாடுகிறேன்” என்றான் இப்லீஸ்.

“நீ சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் அதில் உன் பங்கு என்று நீ பகர்ந்தது மட்டும் பொய். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களை நீ வழிகெடுத்திருக்கிறாய். ஒரு சின்ன ஓட்டை போட்டு அதன் வழியாக கஜானாவுக்குள்ளேயே நீ நுழைந்துவிடுவாய். உன் கைகளால் கிழிபடாத கூடாரம் உண்டா? நீ நெருப்பு. எதையாவது எரித்துக்கொண்டே இருப்பதுதான் உனது இயற்கை. இது உன்மீது இறைவனிட்ட சாபம். அவனே உன்னை எரிப்பவனாகவும் திருடர்களின் தலைவனாகவும் ஆக்கினான்.”

“நீ இறைவனோடே நேருக்கு நேர் உரையாடியுள்ளாய். உன்னுடைய ஏமாற்று வேலைக்கு முன்னால் என் போன்ற எளியோர் என்ன செய்ய முடியும் பகைவனே?”

“உன் அறிவெல்லாம் கழுகு பிடிப்பவன் எழுப்பும் ஒலியைப் போன்றது. அது பறவையின் சப்தத்தை ஒத்திருக்கும் என்றாலும் அது பறவையின் ஒலியல்ல. பறவைக்கான கண்ணி அது. எத்தனையோ அப்பாவிப் பறவைகள் உனது வாயின் வலையில் விழுந்துள்ளன. உனது குரலை நண்பனின் அழைப்பு என்று நம்பி வந்தவை அவை. விண்ணில் உனது குரல் கேட்டு மண்ணில் இறங்கி மாட்டிக்கொண்ட அப்பாவிகள் அவை.”

“நீ ஏமாற்றியதால் (இறைத்தூதர்) நூஹின் (நம்பிக்கை கொள்ளாத) மக்கள் புலம்பிக்கொண்டுள்ளார்கள். தமின் மக்களை அழிவுக்காற்றுக்கு அர்ப்பணித்தது நீ. (இறைத்தூதர்) லூதின் மக்கள்மீது கல்லெறியப்பட்டதும் உன்னால்தான். கறுப்பு மழைநீரினுள் அவர்கள் அமிழ்த்தப்பட்டதும் உன்னால்தான். (இறைத்தூதர் இப்ராஹீமை எதிர்த்து) நம்ரூதின் மூளை சிதறியதும் உன்னால்தான். எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தியிருக்கிறாய்!”

“(இறைத்தூதர் மூஸாவை எதிர்த்த) ·பிர்அவ்னுடைய அறிவு உன்னால் மழுங்கியது. (ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட) அபுல்ஹகம் உன்னால் (ஜுவாலையின் தந்தை என்று) அபுலஹப் கி யோக்கியதை இழந்தான்.”

“உன் சதுரங்க விளையாட்டில் எத்தனையோ பண்டிதர்களுக்கு ‘செக்’ வைத்திருக்கிறாய். எண்ணற்ற இதயங்களை எரித்துள்ளாய். உன் இதயமும் கறுப்பாக்கப்பட்டது. எத்தனையோ படைகள் உன்னால் சிதறுண்டு போயுள்ளன” என்றார் முவியா.

“இந்த முடிச்சை அவிழுங்கள். செல்லாக் காசுக்கும் நல்ல காசுக்கும் இடையில் நானே உரைகல்லாக உள்ளேன். நல்லதையும் கெட்டதையும், சிங்கத்தையும் அசிங்கத்தையும் (கீழான மிருகத்தையும்), பிரித்தறிய (உங்களுக்கு உதவ) இறைவன் என்னைப் படைத்துள்ளான். செல்லாக் காசின் முகத்தை கறுப்பாக்கியது நானல்ல. நான் ஒரு பண வியாபாரி. எது செல்லாக்காசு, அதன் மதிப்பு (இன்மை) எவ்வளவு என்று நான் காட்டுகிறேன், அவ்வளவுதான்.”

“நல்லவற்றுக்கு நான் வழிகாட்டி. உலர்ந்துபோன கிளைகளை நான் உரித்துக்காடுகிறேன். புரிந்து கொள்ளட்டும் என்று மக்கள் முன் அவற்றை நான் வைக்கிறேன். ஓநாய் பெற்றெடுத்த மான் குட்டிக்கு ஓநாய் குணமா அல்லது மானின் குணமா என்று அறிய வேண்டுமா? புல்லையும் எலும்புத் துண்டுகளையும் அதன் முன் போடுங்கள். எந்தப் பக்கம் அது தாவுகிறது என்று பாருங்கள். எலும்பின் பக்கமெனில் அது ஓநாய். புல்லின் பக்கமெனில் அது மான்.”

“கருணை கோபம் இந்த இரண்டின் பிணைப்பில் பிறந்ததுதான் நல்லது கெட்டதுகளின் உலகம். புல்லையும் போடுங்கள், எலும்பையும் போடுங்கள். உடலுக்கான உணவையும் கொடுங்கள், உயிருக்கான உணவையும் கொடுங்கள். முன்னதை நாடுபவன் வீணன். பின்னதை நாடுபவன் ஆன்மீகத் தலைவன். உடலுக்கு சேவை செய்பவன் கழுதை. ஆன்மாவின் கடலுக்குள் நுழைபவனே முத்துக்களைக் காண்பான்.”

“நல்லது கெட்டது என்ற இந்த இரட்டையர்கள் வெவ்வேறானவர்கள்தான் என்றாலும் இருவருமே ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இறைத்தூதர்கள் பக்தியை முன்வைக்கிறார்கள். இறைவனின் பகைவர்களோ இச்சையை முன் வைக்கிறார்கள்.”

“நல்லவனை நான் எப்படி கெட்டவனாக்க முடியும்? நான் என்ன ஆண்டவனா? அசிங்கமானதற்கும் அழகானதற்கும் இடையில் நான் ஒரு கண்ணாடிதானே தவிர வேறொன்றுமில்லை.”

“இந்த கண்ணாடி மனிதனை அசிங்கமாகக் காட்டுகிறது என்று அவநம்பிக்கையாளன் கூறுகிறான். இறைவன் என்னை ஒரு தகவல் தருபவனாகவும் உண்மை விளம்பியாகவும்தான் படைத்துள்ளான். அசிங்கமானதை அசிங்கமானதாகவும் அழகானதை அழகானதாகவும் நான் காட்டுகிறேன், அவ்வளவுதான்.”

“நான் ஒரு சாட்சி. சாட்சிக்கு சரியான இடம் சிறையா? எனது வெள்ளை மனதுக்கு இறைவனே சாட்சி. பழம்தரும் மரம் விதை எனில், நான் அதை ஒரு தாதியைப் போல கவனித்து வளர்க்கிறேன். கசப்பான (கனிகொண்ட) காய்ந்த மரம் எனில், அதை வெட்டிச் சாய்க்கிறேன். அப்போதுதான் கழிவு எது, கஸ்தூரி எது என்று தெரியும்” என்றான் இப்லீஸ்.

“திருட்டுப் பயலே, வாதம் செய்யாதே. எனக்குள் நுழைய உனக்கு வழியே கிடையாது. திருடனான உன்னிடம் நான் என்ன வியாபாரம் செய்வது? நீ ஒரு அவநம்பிக்கையாளன். என் இடத்தைச் சுற்றி அலையாதே. இறைவா, இந்தப் பகைவனிடமிருந்து என்னை நீ காப்பாயாக! மேற்கொண்டு இவன் ஒரு வார்த்தை பேசினாலும் எனது நம்பிக்கை எனும் போர்வையைத் திருடிக்கொள்வான்.”

“இறைவா, இவனுடைய பேச்சு புகையைப் போல எனது ஆடையைக் கறுப்பாக்கிவிடும். இப்லீஸிடம் வாதிட்டு என்னால் வெல்ல முடியாது. உயர்ந்தவரானாலும் சரி, தாழ்ந்தவரானாலும் சரி, தன் வசப்படுத்திவிடுவான் அவன்.”

“ஆதம் அவர்களாலேயே இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேற இவனே காரணம். பூமியின் முகத்தில் அவர்களைக் குப்புற விழச்செய்தவன் இவன். ‘சிமாக்’ (என்ற உயர்ந்த நிலை) யிலிருந்து தனது வலைக்குள் ஒரு மீனைப்போல அவர்களை விழவைத்தான்.”

“இவனுடைய ஒவ்வொரு சொல்லிலும் விஷமத்தனம் உள்ளது. ஆண் பெண் மனங்களில் அனாவசியமான ஆசைகளை இவன் தூண்டுகிறான்.”

“மக்களை மயக்கி விழுங்கும் இப்லீஸே, எதற்காக என்னை எழுப்பினாய் சொல்” என்றார் முவியா.

“கெடுதி செய்யும் எந்த மனிதனும் ஆயிரம் அடையாளக் குறிப்புகள் (உண்மையையும் நன்மையையும் நோக்கி) காட்டினாலும் திருந்தப் போவதில்லை. சந்தேகப்படும் மனதின் முன் தாரங்கள் காட்டினாலும் சந்தேகம்தான் அதிகமாகும். புனிதப் போர்வாளானாலும் திருடனின் கையில் அது (திருட்டுக்கான) கருவியாகிவிடுகிறது.”

“இப்படிப்பட்டவர்களுக்கு பதில் அமைதியும் ஓய்வும்தான். முட்டாளோடு வாதிடுவது பைத்தியக்காரத்தனம். என்னைப் பற்றி இறைவனிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? கெட்டவர்களின் கெட்ட குணம் பற்றி முறையிடுங்கள்.”

“நீங்கள் ஹல்வா சாப்பிட்டால் அளவுக்கு மீறி கொப்புளமும் காய்ச்சலும் வரத்தான் செய்யும். ஏன் என்னைச் சபிக்கிறீர்கள்? உங்கள் ஏமாற்றுத்தனம் உங்களிடமிருந்துதான் புறப்படுகிறது.”

“செம்மறியாட்டின் கொழுத்த வாலை நோக்கி ஓநாயைப் போல ஓடும் நீங்கள்தான் குற்றவாளி, இப்லீஸ் அல்ல. இந்த உலக ஆசைகள் உங்களை (ஆன்மீக) குருடராகவும் செவிடராகவும் க்குகிறது. உங்கள் ந·ப்ஸ் (கீழான இச்சை) தான் குற்றவாளி. அடுத்தவர்களோடு சண்டை போடவேண்டாம். தலைகீழாகப் பார்க்க வேண்டாம். கெடுதியும் பேராசையும் பகைமையும் நான் வெறுப்பவை.”

“ஒரேயொரு கெட்ட காரியம் செய்தேன். அதற்காக இன்றுவரை வருந்திக்கொண்டிருக்கிறேன். எனது இரவு எப்போது பகலாகும் என காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“மனிதர்கள் என்னையே சந்தேகிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் தாங்கள் செய்யும் பாவங்களையெல்லாம் எனது வாசலில் வைத்துவிட்டுப் போகிறார்கள். பசி கொண்ட ஓநாய் பலகீனத்தால் நகர முடியாமல் கிடந்தால்கூட வயிறு புடைக்க உண்டதால் நகர முடியவில்லை என்றுதான் காண்பவர் கூறுகிறார்கள்” என்றான் இப்லீஸ்.

“உண்மையைச் சொன்னால் தப்பிக்கலாம். உண்மையைச் சொல்ல நீதி உன்னை அழைக்கிறது. ஏமாற்ற எண்ணினால் உன்னை விடமாட்டேன்” என்றார் முவியா.

“எது உண்மை, எது பொய், எது நல்லது எது கெட்டது என்று எப்படி அறிவீர்கள்?”

“அதை அறிவதற்கான ஒரு தெளிவான வழியை பெருமானார் காட்டியுள்ளார்கள். நல்ல காசையும் செல்லாக் காசையும் பிரித்தறிய உதவும் உரை கல்லைக் கொடுத்திருக்கிறார்கள்.”

“மனிதனுடைய மன அமைதியை எதுவெல்லாம் குலைக்கிறதோ அதுவெல்லாம் உண்மைக்கும் நன்மைக்கும் புறம்பானதாகும். உண்மையும் நன்மையும் இன்பமான அமைதிக்கு காரணமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அமைதியிழந்த மனம் பொய்யான வார்த்தைகளினால் திருப்தியுறுவதில்லை. தண்ணீரும் எண்ணெயும் (சேர்ந்து) ஒளியைத் தராது.”

“வேதனையிலிருந்தும் வியாதியிலிருந்தும் விடுதலை பெற்ற முழுமையைப் புரிந்துகொண்ட மனதுக்குத்தான் உண்மையின் சுவையும் பொய்யின் சுவையும் தெரியும்.”

“விலக்கப்பட்ட கனியை தம் விழைந்தபோது, அவர்களுடைய மன நலம் கெட்டது. உன் வசீகரப் பொய்களுக்கு செவிகொடுத்தார்கள். (உன்) விஷத்தைக் குடித்தார்கள். அந்த நேரத்தில் (உலகின் எல்லா உயிர்களின் பெயர்களையும் அறிந்த) அவர்களுக்கு கஸ்தும் (தேன்) எது, கந்தும் (கோதுமை) எது என்று பிரித்தறிய முடியவில்லை. ஆசை எனும் மதுவை உண்டவர்களைவிட்டு அறிவு பறந்துவிடுகிறது.”

“என்னை ஏன் எழுப்பினாய்? நீ விழிப்பு நிலைக்கு எதிரியல்லவா? என்னை ஏமாற்ற முடியாது. கல்லிடம் நான் கடவுளைக் காண்பதில்லை. கழிவிடம் நான் கஸ்தூரியை முகர நினைப்பதில்லை. ஆற்றுக்குள் நான் உலர்ந்த கற்களைத் தேடுவதில்லை. நல்ல எண்ணத்தோடு ஷைத்தானாகிய நீ என்னை எழுப்பிவிட்டாய் என்று நம்பிவிடுவேனா?” என்றார் முவியா.

அமீரின் அசைக்க முடியாத உறுதியின் முன் இப்லீஸின் ஏமாற்று வேலைகள் எடுபடவில்லை. கடைசியில் கனக்கும் மனசோசு இப்லீஸ் ஒத்துக்கொண்டான்.

“பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றும் வகையில், கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வீர்கள் என்றுதான் எழுப்பினேன். தொழுகை நேரம் தவறியிருந்தால் இந்த உலகமே உங்களுக்கு இருண்டு போயிருக்கும். வேதனையில் நீங்கள் அழுவீர்கள். ஏனெனில் இறைவணக்கத்தில் இன்பம் காண்பவர்களால் கொஞ்ச நேரம்கூட அதைவிட்டு இருக்க முடியாது. அந்த ஏமாற்றமும் கண்ணீரும் ஆயிரம் தொழுகைகளுக்கு ஈடாகி இருக்கும்.”

“பெருமானார் தொழுகையை (முன் நின்று) நடத்தி முடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்ட ஒருவன், தவறவிட்டுவிட்டோமே என்று வேதனைப் பெருமூச்சு விட்டானாம். அந்தப் பெருமூச்சில் அவன் இதயத்தின் ரத்தவாடை இருந்தது. பதிலுக்கு நான் என் தொழுகையைத் தருகிறேன் என்றாராம் தொழுத ஒருவர். ஏற்றுக்கொள்கிறேன் என்றானாம் அவன். அந்தப் பெருமூச்சின் பொருட்டு எல்லோருடைய தொழுகைகளும் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டன என்று அவர் தூங்கும்போது ஒரு அசரீரி கேட்டதாம்.”

“எனவே, உயர்வான அமீர் அவர்களே! நான் இப்போது உண்மையைச் சொல்கிறேன். தொழுகையை நீங்கள் விட்டிருந்தால், அழுது புலம்பியிருப்பீர்கள். அந்த அழுகையும் புலம்பலும் தொழுததால் கிடைக்கும் நன்மையைவிட இரு நூறு மடங்கு அதிகமான நன்மைகளை உங்களுக்குக் கொடுத்திருக்கும்.”

“அப்படிப்பட்ட ஒரு பயனை நீங்கள் அடைந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு பெருமூச்சை நீங்கள் விட்டுவிடக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை நீங்கள் அனுபவிக்கக் கூடாது. அதனால்தான் உங்களை எழுப்பினேன்.”

“நான் பொறாமை பிடித்தவன். பொறாமையினால்தான் அப்படி நடந்து கொண்டேன். நான் பகைவன். எனக்குரிய வேலை ஏமாற்றுவதும் கெடுப்பதும்தான்” என்று ஒத்துக்கொண்டான் இப்லீஸ்.

“அப்படி வா வழிக்கு, இப்போதுதான் நீ உண்மை பேசியிருக்கிறாய். பொய்தான் உனது உண்மை. நீ ஒரு சிலந்தி. ஈக்களைக் குறிவைத்து உன் வலையைப் பின்னு. நானோ வெண் கழுகு. என்னை வேட்டையாட அரசனால்(ஆண்டவனால்)தான் முடியும். கழுகைப் பிடிக்க சிலந்தி வலை பின்ன முடியுமா என்ன? நீ எழுப்பியது தூக்கத்தைத்தான். நீ காட்டியது கப்பலல்ல, (கப்பல் போன்ற தோற்றம் கொண்ட) சூறாவளி. நன்மை கருதி நீ என்னை எழுப்பவில்லை. தொழுவதைவிட அதிகமான நன்மை வந்துவிடக் கூடாது என்பதனாலேயே எழுப்பினாய். போ போ, போய் ஈக்களைப் பிடி” என்று பதிலளித்தார் அமீர் முவியா.

அருஞ்சொற்பொருள்முவியா (ரலி) — இஸ்லாமிய ஆட்சியின் முதல் நான்கு கலீ·பாக்களான அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலீ(ரலி) இவர்களுக்குப் பிறகு, கலீ·பாவாக அங்கீகரிக்கப்பட்டவர். அலீயின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ஆளுனராக இருந்தாலும், அலீயின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தவர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட தோழர்களில் ஒருவர்.இப்லீஸ் — ஷைத்தான் என்றும் இவன் அழைக்கப்படுகிறான். ஆரம்பத்தில் இறையருள் பெற்ற ஒரு வானவராக (மலக்கு) இருந்தவன். முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்ட பிறகு, இறைவன் எல்லா மலக்குகளையும் ஆதமுக்கு மரியாதை செலுத்தச் சொன்னான். எல்லாரும் செய்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் செய்யவில்லை. ஒளியால் படைக்கப்பட்ட ஒரு வானவன், மண்ணால் படைக்கப்பட்ட மனிதனைவிட உயர்ந்தவர் என்பது அவனது வாதம். அதன் பொருட்டு அவன் இறைவனின் கோபத்துக்கு ஆளானவனாக, மனிதர்களுக்கு எதிரியாக ஆகிறான்.அபூலஹப் — இஸ்லாத்தின் கடுமையான விரோதிகளில் ஒருவர். பெருமானார் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதர்களில் ஒருவர். திருமறையில் அபூலஹபின் கரங்கள் அழிந்துபோகட்டும் என்று சொல்கின்ற அளவுக்கு இறைவனின் கோபத்துக்கு ஆளான ஒருவர். ஆரம்பத்தில் ஞானத்தின் தந்தை என்ற ஒரு பட்டப்பெயர் அவருக்கு இருந்தது. பிறகு நெருப்பின் தந்தை (அபூலஹப்) என்று ஆனது.

தும்மல் — யாராவது தும்மினால் கேட்பவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது இஸ்லாமிய வாழ்முறை அம்சம்.

 

*** 

நன்றி : நாகூர் ரூமி