யு.ஆர். அனந்தமூர்த்தி நேர்காணல் – (சுபமங்களா – Sep’1993)

Thanks to : Subamangala
*

குறிப்பு : யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘அவஸ்தை’ நாவலில்  இணைக்கப்பட்டிருந்த இந்தப் பேட்டியின் முக்கியமான பகுதியை நண்பர் சாதிக் அனுப்பிவைத்திருந்தார் – சுபமங்களாவின் இணையதளத்திலிருந்து முழுப் பேட்டியையும் எடுத்து இங்கே பகிருங்கள் நாநா என்ற வேண்டுகோளுடன். அதை Google Drive’s OCR உதவியுடன் மல்லுக்கட்டி (இமேஜ் அப்படி) செய்திருக்கிறேன். பேட்டி கண்டவர் மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள்தான் என்று நினைக்கிறேன். ’சுபமங்களா’வே ஒரு உருவமாகப் போயிருப்பதற்கும் வாய்ப்புண்டு! – AB

*

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மிகப் பெரிய வளாகத்திற்குள் உள்ள விருந்தினர் விடுதியில் அமர்ந்திருக்கிறோம். அருகில் தமிழவனும், சாகித்ய அகாடமியின் பிராந்தியச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தியும் இருக்கின்றனர். வசீகரமான முகத்துடனும் (உங்களுக்கு படத்தில் நடிக்க ஏதும் அழைப்பு வரவில்லையா?) அதற்கு மேலும் அழகு செய்யும் தாடியுடனும் எதிரே அமர்ந்திருப்பவர் கன்னட நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பாளி – டாக்டர். யூ. ஆர். அனந்தமூர்த்தி. பல்கலைக்கழகப் பேராசிரியர். கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர். தொடர்ந்து கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தபோது சிறுபான்மையினருக்காகப் பரிந்து பேசியவர் ‘கன்னடம் கட்டாயப் பாடம்’ என்ற கோகக் தீர்மானம் வந்தபோது அதை எதிர்த்து அவரவர் தாய் மொழியில்தான் கல்வி இருக்க வேண்டும் என்று போராடியவர். பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க எதிர்ப்பு வந்தபோது சிலை வைக்க ஆதரவு தெரிவித்தவர், சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதிபுரா என்ற முக்கியமான நாவல்களை எழுதியவர், அவர் நாவல் சம்ஸ்காரா படமாக்கப்பட்டு பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதுபோன்றே அவர் எழுதிய கடஸ்ரத்தாவும். அரசியலிலும் தீவிரமாக  ஈடுபட்டவர், லோகியாவின் சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டு என்கிறார். ‘இந்தியாவின் மையம் டெல்லி இல்லை, ஒவ்வொரு மாநிலமும்தான்’ என்று அழுத்தமாகக் கூறுகிறவர். சமீபத்தில் சாகித்யஅகாடமி யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவரை சாகித்ய அகாடமி பரிசைப் பெறாதவர்.

கன்னட இலக்கியம், அரசியல், சமூகம் பற்றி தன் தெளிவான கருத்துக்களை அழகான ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்தார். இரண்டு மணி நேரம் நீண்ட இந்த நேர்காணலில் சலிப்புறாமல் அவர் அளித்த பதில்களைப் படியுங்கள்.

***

* வழக்கமான முன்னுரையாக உங்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி உங்கள் இளமைக் காலம் பற்றிதான்.

* மெலிகே என்ற சின்ன, கர்நாடக மலை நாட்டுப் பின் ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா கேரளத்தில் வாழ்ந்தவர். ஒரு புரோகிதர். அங்கிருந்து இங்கு குடியேறியவர் என் தந்தை. சுயமாகவே கல்வி கற்றவர். அவருக்கு வான நூல், சோதிடம் எல்லாம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியவர். மிக வைதிகமான பிராமணக் குடும்பத்தில் அவர் பிறந்தவராக இருந்தாலும் திறந்த மனமுடையவராகவும்  நவீன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் இருந்தார். என் சாதியை விட்டு நான் செய்து கொண்ட கலப்புத் திருமணத்தையும் (என் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்) பின்னால் மனசார ஏற்றுக்கொண்டவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு மாற காலகட்டத்தில் அவருடைய கூட்டும் எனக்கு பெரும் அஸ்திவாரமாக இருந்தது. நான் படித்தது அருகில் உள்ள தீர்த்த ஹள்ளி, அது ஒரு சிறு நகரம். ஒரு நாள் அந்த நகரில் பொழுதைக் கழித்தால் பல நாற்றாண்டுகளைக் கடந்த உணர்வை அடையலாம். பழமையும் புதுமையும் நிறைந்த ஊர். ‘பகவத்கீதை என்கிற அவ்வளவு நீளமான விரிவுரை நெருக்கடியான போர்க்களத்தில் எப்படி நிகழ்ந்திருக்க முடியும். அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்” என்று கேட்கும் ஆசிரியர் பள்ளியில் உண்டு. சீனிவாச ஜோயி என்ற நண்பர் – அந்தக் காலத்திலேயே டைனமோ வைத்து  பி.பி.சி. கேட்டு ஆங்கில மொழியில் பாண்டித்யம் பெற்றவர் – அவர். பெர்னாட்ஷா நாடகங்களைப் பற்றியும், இங்கர் சாலைப் பற்றியும் சொல்வார். அதே நேரம், அங்கு பழமைக்கொள்கைகளும் இருந்தன. என் தந்தை அப்போது ஒரு மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு ஆரிய சமாஜத்துக்காரர் – மடத்திற்கு வந்து அங்குள்ள சம்ஸ்கிருத பண்டிதர்களிடம் சவால் விடுவார். எல்லா இரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று அவர் கூறுவதை சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மறுப்பார்கள். உடனே எனக்கு கலிலியோவின் காலத்தில் வாழ்வதாக உணர்வு வரும். அந்தக் கால கிட்டத்தில்தான் நிலப் பிரபுத்துவம் தோற்றுப் போய் சோஷலிசக் கருத்துக்கள் விதையூன்றுவதையும் என்னால் உணர முடிந்தது.

* உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி -ஆரம்பமாகிறது?

* ஆரம்பத்தில் தாங்கள் எல்லாம் காந்தியத்தினால் ஈர்க்கப்பட்டோம். பின்னர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகள் எங்களைக் கவர்ந்தன.தீர்த்தஹள்ளியிலிருந்து ஷிமோகாவிற்கு வந்தபோது அங்கே ராயிஸ்டுகள் (எம். என். ராயைப் பின்பற்றுபவர்கள்), கம்யூனிஸ்டுகள் எல்லாருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் விவாதங்களை காது கொடுத்துக் கேட்பேன், ஷிமோகாவில் இலக்கியத்திற்கும் அரசியலாக்கும் ஒரு இணைப்பு உண்டு. அரசியல் என்பது அன்றாட கட்சி அரசியல் அல்ல. தத்துவம் சார்ந்த அரசியல். ‘இந்தியா இப்படி எல்லாம் இருக்க வேண்டும்’ என்று கனவு கான்கிற அரசியல். அவர்களுடன் சேர்ந்து நானும் ’கனவுகள்’ கண்டேன். பின்னர் தான் இங்கிலாந்து சென்று படித்தேன்.

* சாதாரண குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு இங்கிலாந்து சென்று எப்படிப் படிக்க முடிந்தது?

* என் தாத்தாவின் கொள்கைப்படித்தான். “சமூகத்திற்காகத் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டவனுக்கு , சமுதாயத்திலிருந்து உயிர் வாழ உதவி கேட்க உரிமை இருக்கிறது. பிராமணனுடைய தத்துவமே ‘பிச்சையிடுங்கள்’ (பவதி பிக்ஷாம் தேவி) என்பதுதான்” என்று கூறுவார். (சிரிப்புடன்) அந்தத் தத்துவத்தை நான் கடைபிடித்தேன். பலர் உதவியாலும், ஸ்காலர்ஷிப் உதவியாலும் படிக்க முடிந்தது.

* இப்போது உங்களை நீங்கள் ‘லோஹியாயைட்’ என்று கூறிக் கொள்வீர்களா?

* இப்போது என்னால் அப்படிக் கூற முடியாது. பல விஷயங்களில் நான் கருத்து மாறுபட்டிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் நான் ஒரு ஜனநாயக சோஷலிசவாதி என்று கூறிக் கொள்வேன். ஆனால் லோகியா ஒரு மகத்தான சிந்தனையாளர். சுயமான, உண்மையான சிந்தனையாளர் என்று இந்தியாவில் காந்தியடிகளைத்தான் கூற முடியும். நேரு கூட அல்ல. காந்தியின் அடுத்தகட்ட விரிவாக்க சிந்தனையாளர் என்று நான் லோகியாவைக் கூறுவேன், ஆனால் அவர் தோல்வியடைந்தவர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

* ஆனால் நாத்திகரான லோகியா எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பே ராமாயண மாநாடுகளை நடத்தினார்? மதத்தைப் பற்றிய அவர் கருத்து என்ன?

* மதத்திற்கு நான்கு செயற்பாடுகள் இருக்கின்றன என அவர் நினைத்தார். ஒன்று, ஒரு தேசத்திற்கு அன்னியர்களால் படையெடுப்பு பயம் ஏற்படும்போது, எதிரிகளைத் தாக்க மக்களைத் திரட்ட மதம் அவசியமாகிறது. ரஷ்யாவை ஹிட்லர் தாக்கியவுடன் ஸ்டாலின் ரஷ்ய வைதிகத் திருச்சபையை பயன்படுத்தினார். இரண்டு, பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க மதம் பயன்படுத்தப்படுகிறது. மூன்று, சமூக ஒழுக்கக் கோட்பாடுகளையும், மதிப்புகளையும் பரவலாக்க மதம் பயன்படுகிறது. நான்கு, யோகமுறைகள், மற்றும் மனமுனைப்பு பயிற்சிகளால் வாழ்க்கைபற்றியும், மரணத்தைப்பற்றியும் உள்ளார்ந்து சிந்திக்க மதம் வழிவகுக்கிறது. மதத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல் விமரிசனபூர்வமாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பது அவர் கருத்து, சங்கரர் கூறியதை ராமானுஜர் ஏற்கவில்லை , ராமானுஜர் கூறியதை ஆனந்ததீர்த்தர் ஏற்கவில்லை. வேதத்தின் சில விளக்கங்களை வீரசைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து மதத்தை மறுத்துத் தோன்றியதே பெளத்தமும், ஜைனமும். ஆனால் இன்றைக்கு உள்ள கேடு என்னவென்றால், அந்த விமரிசனப் பார்வையும், விவாதங்களும் மறைந்துபோய், மதம் ‘வழிபாட்டுப் பொருள்’ ஆகிவிட்டது என்பதுதான்.

* இப்போது ஓங்கியுள்ள இந்துத்துவக் குரல் பற்றி – உங்கள் எண்ணம் என்ன?

* மதத்தின் உயர்ந்த வடிவமே ஆன்மிகம். ஆன்மிகம் தன்வயப்பட்டது. ரமணரும், ராமகிருஷ்ணரும் மதவாதிகள் அல்ல, ஆன்மிக முனிவர்கள், இந்துத்துவம் என்பதற்கும் இந்த ஆன்மிகத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஆழமாக மதத்தில் ஈடுபட்டவன் மதவாதியாக இருக்க மாட்டான். அத்வானி போன்றவர்களின் எண்ணமெல்லாம் இந்தியாவை இஸ்ரேல் ஆக்குவதுதான். இஸ்ரேல் நமக்கு முன்னுதாரணம் அல்ல.

• உங்களுடைய இலக்கிய வாழ்க்கை எப்போது தொடங்குகிறது?

* தொடக்கம் என்பதே இல்லை. எப்போதுமே அந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். முதலில் கவிதைகள்தான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் சிறுகதைகள் எழுதினேன்.. நான் ஹானர்ஸ் படிக்கும்போதே ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டேன். அந்த தொகுப்பே நவ்யா’ இயக்கத்தின் குரலாக இருந்தது என்று பாராட்டப்பட்டது. பின்னர் தோன்றிய நவீன இயக்கத்திலும் (Modernist) பங்கு கொண்டேன்.

* ஆங்கில இலக்கிய ஆசிரியர் யாரேனும் உங்கள் எழுத்தில் செல்வாக்கு செலுத்தியதுண்டா?

* பல ஆசிரியர்கள். ஷெல்லி, கீட்ஸ், வொர்ட்ஸ்வொர்த் போன்ற ரொமான்டிக் கவிஞர்கள். டி ஹெச். லாரன்ஸ் போன்ற நாவலாசிரியர்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்கள் எனக்குள் செல்வாக்கு இழந்து போக, வேறு ஒரு ஆசிரியரைத் தேடிப் போவேன், இதுவே பக்குவமடைவதற்கான வழிமுறை என்றும் நினைக்கிறேன்.

* உங்களுடைய பிரசித்தபெற்ற நாவலான ‘சம்ஸ்காரா’ எப்படி உருவானது?

* உண்மையைச் சொன்னால், அந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டது ஆங்கிலத்தில்தான். எங்கள் அக்ரஹாரத்தில் ‘தரங்கிணி’ என்ற கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம். அதில் கன்னடம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் விஷயங்கள் வரும். இங்க்மார் பெர்க்மாலுடைய Seventh Seal அப்போதுதான் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதன் அடிப்படையில் நம் நாட்டைப் பற்றி நினைக்கும்போது இது பல நூற்றாண்டுகளின், பண்பாடுகளின், தத்துவங்களின் கலவை என்பது புலனாயிற்று. எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குப் பல கேள்விகள் எழுப்பின. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசி போட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போகமாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று. இந்த நிகழ்ச்சிக்குக் கிராமத்துப் பெரியவர்கள், ‘மகாத்மாகாந்தி – அவர்களை ஆலயத்திற்குள் போகர் சொன்னதால்தான் அவர்களுக்கு இந்தக் கொடுமை ஏற்பட்டது’ என்று விளக்கம் கூறிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றிய வம்பு பேசுவார்கள். வம்பு பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட “தொடுதல்’ என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வை தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் பிளேக் நோயால் இறந்து கொண்டிருந்தபோது, அவள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலியல் – உணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையை கொடுத்ததாக நான் நினைத்தேன். இதை அடிப்படையாக வைத்து ‘தரங்கிணி’யில் எமுதிய கதைதான் பின்னர் ‘சம்ஸ்காரா’ நாவலாக விரிவடைந்தது.

* அது பிரசுரிக்கப்பட்டபோது எப்படி வரவேற்பு இருந்தது?

* நாவல் வெளிவந்தபோது வைதிகம் பெரும் கோபம் கொண்டது. அது படமாக வந்தவுடன் அந்தக் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அதை தடைசெய்ய முயன்றார்கள். தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர்தான் அது தடைசெய்யப்படக் கூடாது என்று பாராளுமன்றத்தில் பேசினார். எனது கிராமத்தில் அது சில தனிப்பட்ட அக்ரஹாரத்து மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷிமோகாவில் அது மாத்வ பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெங்களூரின் அது பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று கருதப்பட்டது. வி.எஸ். நைபால் அதைப்  படித்தவுடன் அது இந்துமதத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தார். எரிக்சன் போன்ற தத்துவ ஆசிரியர்கள் அதை படித்தபோது, அது நடுத்தர வயது நெருக்கடியைப் பற்றிக் கூறுகிறது என்று சொன்னார். அது மிகவும் யதார்த்தமான. அதேநேரம் மிகவும் பூடகமான நாவல் என்றே கூறலாம்.

• பொதுவாக கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றமும் பாதிப்பும் எப்படி இருந்திருக்கிறது?

* தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றியபோதே அது கர்நாடகத்திலும் தோன்றியது. ஆனால் அது வேலை வாய்ப்புக்கான இயக்கமாகவே இருந்தது. இங்கு கர்நாடக பிராமணர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்காக முதலில் போராடினார்கள். எல்லா வேலை வாய்ப்புக்களையும் தமிழ்நாட்டு பிராமணர்கள் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள் என்று அதற்கு எதிராக கர்நாடக பிராமணர்கள் கிளர்ச்சி செய்தனர். சமஸ்தானத்தில் திவானாக இருந்து ஆட்சி செய்ததெல்லாம் சேஷாத்ரி அய்யர் போன்ற திறமைமிக்க தமிழ்நாட்டு பிராமணர்கள். அதனால் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலெல்லாம் தமிழ்நாட்டு பிராமணர்களே இருந்தனர். கர்நாடக பிராமணர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டபோது, பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றி தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டனர். அவர்கள் ஹரிஜனங்களுக்குப் பதவி அளிப்பதை மறுத்தபோது, ஹரிஜனங்கள் இடஒதுக்கீடு கோரி கிளர்ச்சி செய்தனர். இது தொடர்ந்து வருகிற போராட்டம். இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதனால்தான் எல்லோருக்குமே சமவேலை வாய்ப்புக் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

• வேலை வாய்ப்புகள் என்பது தவிர, பிராமணிய மதிப்பீடுகளுக்கு எதிரான இயக்கமாக  அது மாறவில்லையா?

* அப்படிக் கூறமுடியாது. பிராமண மதிப்பீடுகள் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மதிப்பீடுகள் இல்லை . முழு இந்து இனமும் அதில் பங்கு கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில்) கல்வி பரவப்பரவ பிராமணரல்லாதாரும் தங்கள் வாழ்க்கை நிலையை பிராமணியமாக மாற்றிக் கொள்கின்றனர். இதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு அங்கு தோன்றவில்லை, வேலை வாய்ப்புகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடத்து கொண்டிருந்தாலும் கூட, பிராமணிய மதிப்புகளுக்கு மாறான வாழ்க்கைமுறை அங்கு தோன்றவில்லை.

* அப்படி ஒரு மாற்று வாழ்க்கை எங்கிருந்து தோன்றமுடியும் என்று நினைக்கிறீர்கள்.

* அது தோன்றுவதென்றால், தலித்துகளிடமிருந்துதான் தோன்ற வேண்டும். ஏனென்றால் பிராமணரல்லாதாரும் கூட இந்த -அமைப்பு முறையின் பங்குதாரர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் தலித்துகளோ இந்த அமைப்புமுறையின் பங்காளிகளாக எப்போதும் இருந்ததில்லை , .

* தலித் இலக்கியம் கர்நாடகத்தில் எப்படி இருக்கிறது?

* மிகச் சிறந்ததாக இருக்கிறது. புதிதாக இருக்கிறது. பரவலாக இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் சமுதாயத்தைப் பற்றி வேறு ஒரு பார்வையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

* தலித் இலக்கியம் தலித்துக்களால்தான் படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கர்நாடக தலித் இலக்கியத்தில் மேலோங்கி இருக்கிறதா?

* நான் மிகக் கடமையுணர்வுடன் தலித்துக்கள் பற்றி எழுதலாம். ஆனால் சில விஷயங்களை வெறும் கற்பனையால் மட்டுமே நெருங்க முடியாது, வாழ்ந்து பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்களை கற்பனையால் தொட முடியுமா? ஆனால் கொள்கை அளவில் பார்க்கப் போனால் கற்பனை என்பது ஒரு பரகாய பிரவேசம்தான். (பிறர் உடலில் நுழைந்து கொள்ளுதல்) அந்த அடிப்படையில் தலித் எழுத்துக்களை தலித்துக்களே எழுத வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது. அப்படிப் பார்க்கும்போது மிகச் சிறந்த தலித் இலக்கியம் சிவராம் காரந்திடமிருந்துதான் வந்திருக்கிறது. சோமன துடி என்ற நாவல்,

* சிவராம் காரந்த் எழுதும்போது அது தலித் இலக்கியம் என்று எழுதப்பட்டதா?

* அப்போது அந்த வார்த்தை இல்லை. இன்றைக்குசிறு -அது தலித் இலக்கியமாகத்தான் பார்க்கப்படுகிறது. நான் பள்ளிப் பையனாக இருந்தபோது சோமனதுடியைப் படித்தபோதுதான் தலித்திற்கு அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று எனக்குத் தெரிய வந்தது.  இன்றைய தலித் எழுத்துக்களுக்கெல்லாம் பின்னணி அந்த நாவல்தான் என்று சொல்ல வேண்டும்.

* நீங்கள் உங்களை ஒரு மாடர்னிஸ்ட் (நவீனத்துவவாதி) என்று கூறுகிறீர்கள். இன்றைய இலக்கியத்தில் நவீனத்துவம் எது என்று குறிப்பிடுவீர்களா?

* விடுதலை இயக்க காலத்தில் சில படைப்பாளர்கள் -அன்றைக்கு நிலவிய இருண்மையை அபார சொல் ஆட்சியுடன் படைக்க முற்பட்டனர். அப்போது அது கன்னடத்தில் நவீனத்துவம் என்று பெயர் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் தேசிய அபிலாஷைகளில் இருந்த அளவுக்கதிகமான ஈடுபாடும் எதிர்பார்ப்புகளும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்தியபோது இந்த இருண்மை (disillusionument) வலுப்பட்டது. சொல் அலங்காரத்தின் ஆளுமையில் சந்தேகம் கொண்ட கோபாலகிருஷ்ண அடிகா, ஏ.கே. ராமானுஜன் போன்றவர்கள் அலங்காரத்தைக் கைவிட்டு உண்மையை எழுதத் துணிந்தனர். இதன் மூலம் புதிய நடைக்கு வழிகோலப்பட்டது. உள்ளடக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டது, இந்தியத் தலைமையிலும், இந்திய இலக்கியங்களிலும் சொல் அலங்காரங்களிலும் மக்கள் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தபோது, ‘இவைகளெல்லாம் போற்றுதற்குரிய பெரிய விஷயமல்ல’ என்ற யதார்த்தத்தை நவீனத்வம் முன்வைத்தது. புத்தரும் வயிற்றுப் போக்கினால் காலமானார். பெரும் யோகிகளும் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்ளத்தான் வேண்டும்’ என்பன போன்ற சின்னச்சின்ன உண்மைகள் அந்த இயக்கத்தின் பெரும் சக்தியாக இருந்தது. ’புனிதத்தன்மையை விலக்குதல்’ என்பதுதான் அதன் அடிச்சரமாக இருந்தது. இதைத்தான் ‘நவ்யா இயக்கம் என்று கர்நாடகத்தில் அழைக்கிறோம்.

* பண்டாயா என்பது என்ன?

* பண்டாயா என்பது முற்போக்கு எண்ணங்களை மீட்டுருவாக்கம் செய்யவந்த இயக்கம். கன்னடத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய வசனக்கார இலக்கியம் கீழ்ச்சாதி என்று கருதப்பட்டவர்களாலேயே படைக்கப்பட்டது. வசனக்கார் இலக்கியம் என்பது உரைநடை இலக்கியமல்ல. ஒரு கவிதை வடிவம். வீரசைவ சித்தர்கள் படைத்தது. தமிழில் தேவாரம் போல், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் இலக்கியம் உயர்ஜாதியினர் கையில் போயிற்று. குவெம்பு (கே.வி. புட்டப்பா) என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் பிராமணரல்லாதார் வட்டத்திலிருந்து தோன்றியவுடன் பெரும் எழுச்சியே ஏற்பட்டது. எல்லா பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களும் புதுப்புது அனுபவங்களைப் பற்றி புதிய நடையில், புதிய மொழியில் எழுதத் துவங்கினர். இந்த எழுச்சியின் முகிழ்ந்த காலமே பண்டாயா இயக்கத்தின் காலம்,

* ஆனால் இப்படித் தோன்றிய படைப்புகளின் இலக்கிய மதிப்புகளும் தரமும் எப்படி இருந்தன?

* அதிர்ஷ்டவசமாக கர்நாடகத்தில் எந்த இலக்கிய இயக்கமும் இலக்கிய மதிப்புகளையும், தரத்தையும் இழந்துவிடவில்லை. பண்டாயா படைப்புகளும் இலக்கியத்தரத்தை இழந்து வெறும் பிரச்சாரமாகப் போய்விடவில்லை. தலித் எழுத்தாளர் தேவலூர் மகாதேவ தனது கோபங்களை பரிவு உணர்வுகளாக மாற்றிக் கொண்டார். அந்தப் பரிவு உணர்வுகளே அவர் எழுத்தில் சிறந்த இலக்கியமாகப் பரிணமித்தது. பல பரிசோதனை முயற்சிகளும் நடத்தப்பட்டன. இன்னொன்று. இவை எப்போதும் அரசியல் ஆக்கப்படவில்லை . அதாவது அரசியல் கட்சிகளின் பின்னாலோ, தலைவர்களின் பின்னாலோ செல்லவில்லை.

* கர்நாடகப் பல்கலைக் கழகங்கள் கன்னட இலக்கியத்தின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பினை கூறுங்கள். இதனைக் கூறும்போது தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று கர்நாடகத்திற்குக் கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன்.

* கன்னட இலக்கிய மறுமலர்ச்சி ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடமிருந்துதான் வந்தது என்று நான் கூறுவேன், பி.எம்.ஸ்ரீ என்றழைக்கப்பட்ட ஸ்ரீகண்டையா ஆங்கில ரொமான்டிக் கவிதைகளை கன்னடத்தில் ‘இங்கிலீஷ் கீதகளு’ என்ற பெயரில் வெளியிட்டார். அது மிக முக்கியமானதொரு மைல் கல்லாக இருந்தது. அவருடைய கவிதை நயம், லயம் எல்லாமே புதுப்புது எழுத்தாளர்களை உனக்குவித்தது. அதை ஒட்டி பல ஆங்கிலப் பேராசிரியர்கள் கன்னடத்தில் எழுத ஆரம்பித்தனர். -அதோடு பண்டைய கன்னட பண்டிட்களுக்கும், புதிய கன்னட ஆசிரியர்களுக்கும் ஒரு சண்டை . இருந்தது. இந்த இருவரையும் எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் புதிய கன்னட மொழிக்காகப் பரிந்து பேசினார்கள். இந்த மூன்று வித போக்குகளும் நிலவ புதிய போக்குகளுக்கு கர்நாடக பல்கலைக்கழகங்கள் முக்கிய தளமாக அமைந்தன. கோவிந்த பை என்ற கவிஞர் எதுகை மோனைகளை விட்டு கவிதைகள் எழுதியவுடன். ‘எதுகை மோனையையே விட்டுவிட்ட இவர்கள் வாழ்க்கையில் எதைத்தான் விடமாட்டார்கள்’ என்று கோபமாகப் பேசினார்கள்.

• Free Verse என்பது அங்கு பிரதானப் போக்காக இருக்கிறதா?’

* மூன்றுவித கவிதைகள் பிரதானப் போக்கை வகிக்கின்றன, பாடுவதற்கான கவிதைகள், படிப்பதற்கான கவிதைகள், Poety for Chanting – (உச்சாடனம் செய்ய) கம்பார் போன்றவர்களின் கவிதைகள் Chanting வகையைச் சார்ந்தன. இந்த Chanting முறையில் கவிதை ஒரு Magical Quality-ஐ அடைகிறது. பாரம்பரியக் கவிதைகள் முற்றிலும் இல்லாமல் இல்லை.

* புரியாமல் பூடகமாக கவிதைகள் – எழுதப்படுகின்றன. ‘புரிதல் தன்மை இல்லாமல் இருக்கிறது. ஆனால் இவையே கவிதையின் சிறப்பு என்று கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

* அது சரியான கருத்து இல்லை . ஆரம்பத்தில் கவிதையைப் படிக்கும் போது புரிவதற்கு சில தடைகள் இருக்கலாம். ஆனால் அந்த தடைகளைக் கடந்த பிறகு அந்த கவிதை உங்கள் அறிவிற்குப் புலப்பட வேண்டும், குழந்தைப் பேற்றிற்கு ஒரு செவிலித்தாயின் துணை தேவை என்பது போல, புரிந்துகொள்ள சில பயிற்சிகளும், கருவிகளும் தேவைப்படுகின்றன. ஆனால் அதன் பிறகும் அது புரியவில்லை என்றால் அது பலமற்றது. பொதுவாக கவிஞரின் உள்ள வெளிப்பாடு உடனடியாக வாசகனின் உள்ளத்தோடு இணைந்து விட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அப்படி இல்லையென்றால் புரியாமல் எழுதுவது என்பதே ஒரு ‘சமய வழிபாட்டுத் தன்மையாக (Cult) மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

• Cult என்றவுடன் இதையும் கேட்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஏன், ஆந்திரத்திலும் கூட சில நடிகர்களை ஏற்றி வணங்கும் வழிபாடும், அவர்கள் வழியாகவே உலகைப் பார்ப்பதுமான ஒரு Cult இருக்கிறறே. இதற்கு சமூகதளத்தில் உள்ள ஆதாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

* மக்களிடம் கற்பனையைத் தேடும் பெரும் பசி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தன் அன்றாட வருமானத்தில் பாதியை வரிசையில் நின்று திரைப்படக் கற்பனைகளுக்குக் கொடுக்க சாதாரண இந்தியன் தயாராக இருக்கிறான். அதைப் போலவே மதத்தை நோக்கியும் பெரும்பசி இருக்கிறது. – சினிமாவைப் போலவே பயனில்லாத பாபாக்களின் பின்னால் போகவும் அவன் தயாராக இருக்கிறான். கற்பனைகளுக்கான இந்த தேடலையும், பசியையும் தான் பெரிதும் வரவேற்கிறேன். ஆனால் அது எந்தவிதத்தில் நிறைவேற்றப்படுகிறது என்பதில்தான் எனக்கு உடன்பாடில்லை. அதே போலத்தான்  தலைவர்கள் மீது நம் மக்கள் வைத்துள்ள பேரன்பு.  மக்களிடம் உள்ள இந்த அபரிமிதமான ஆற்றல் தேசத்தைக் கட்டும் பணிக்கு பலனளிக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். இவைகளை நாம் விமரிசனம் செய்யும்போதே மக்களுக்குள்ள இந்த அபரிமிதமான ‘பசி’யைக் குறைகூறவே கூடாது. உணவை விட இந்த ‘கற்பனையை பெரிதாக நேசிக்கும் பல கோடி இந்திய மக்களுக்கு நீங்களும் நானும் என்ன செய்து விட்டோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படித்தான் இந்த விஷயத்தை நான் பார்க்கிறேன்.

* பொருளாதார கலாச்சார ரீதியாக பலவித நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய சமுதாயத்திலிருந்து மாபெரும் இலக்கியங்கள் தோன்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

* சிறந்த கலைப்படைப்புகளும், இலக்கியங்களும் பொருளாதார ரீதியில் பின்னடைந்ததாகவும் பண்பாட்டில் செழுமையாகவும் உள்ள ஒரு சமுதாயத்திலிருந்துதான் வரமுடியும். உதாரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யா. அப்படிப்பட்ட சமூகம் தான் டால்ஸ்டாயையும், தாஸ்தாயெவெஸ்கியையும் படைக்க முடியும். லத்தீன் அமெரிக்க தேசங்கள் இன்றைய உதாரணங்கள், நம்மைப் போலவே அவர்களும் பொருளாதார பின்னடைவும், பண்பாட்டுச் செழுமையும் உள்ளவர்கள். உலக அளவில் வைத்து எண்ணக்கூடிய தரமான மாபெரும் இலக்கியம் தம்மாலும் படைக்க முடியும். ஆனால் தாம் தவறவிடுகிறோம்.

* டி வி போன்ற ஊடகங்களி லும், மற்றும் பல துறைகளிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தும்போது, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்பது பொருள் உள்ள சொல் என்று நினைக்கிறீர்களா?

* மையத்திலிருந்து ஆட்சி மாநிலங்களுக்குப் பிரித்துவிடப்படவில்லையென்றால் நாடு துண்டாடப்படும். மையம் (Centre) என்பது நம் அரசியல் சட்டத்திலேயே இல்லை. இந்தியாவின் மையம் எல்லா மாநிலங்களுமே.. டெல்லி அல்ல, நமது நாட்டின் சிறப்பே அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. இந்தப் பன்முகத்தன்மையைக் கைவிட்டுவிட்டால், நாம் ஒன்றாக இருக்க முடியாது. மற்றவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழ் என்ற மொழி இருப்பதும், மணிபுரி என்ற மொழி இருப்பதும் எவ்வளவு அற்புதமான விஷயங்கள். ’துளு மொழியைப் பொறுத்தவரை நாம் ஒருவித ஆதிக்கத்தைக் கொண்டுள்ளோம்’ என கன்னட மக்களிடம் நான் சொல்லுவேன். அதேபோல மராத்திய மொழியின் ஆதிபத்தியமும், கொங்கணி மொழியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. எல்லா மொழிகளும் எல்லாப் பண்பாடுகளும் இங்கு தங்கு தடையின்றி வளர வேண்டும், இந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒரு பண்பாடாக நான் நினைக்கிறேன். அத்வானி போன்றவர்கள் அதை குறுக்கி ஒரு குழுவாக ஆக்க நினைப்பதை நாம் எதிர்க்கிறோம். பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இந்து மதத்தை வெறும் அரசியலாக மட்டுமே குறுக்குவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுப்பதும், இந்தி மொழிமீதோ, அதன் இலக்கியங்கள்மீதோ நமக்கு வெறுப்பில்லை. ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை நகர்த்தி விட்டு அந்த இடத்தில் ஆதிக்கம் செய்ய நினைப்பது மிகத் தவறு

• அப்படியிருக்க சாகித்ய அகாடமி போன்ற அரங்கங்களில் நடத்தப்படும் விவாதங்களில் கூட தமிழில் பேசினால் மறுக்கப்படுவதும் இந்தியில் பேச வற்புறுத்துவதும் தடை பெறுகிறதே!

* அம்மாதிரி கருத்தரங்கங்களில் ஆங்கிலத்தில் பேசலாம். இந்தி சரளமாகத் தெரியும் என்றால் இந்தியில் பேசலாம். இரண்டு மொழிகளும் தெரியாது என்றால் என் தாய் மொழியிலேயே பேச எனக்கு உரிமை வேண்டும். மற்றவர்களுக்கு அதை மொழிபெயர்க்க தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும், நாம் உத்திரப் பிரதேசத்திற்குப் போனால் புழக்கத்துக்குத் தேவையான இந்தி கற்றுக்கொண்டு விடுகிறோம். கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் புழக்கத்திற்குத் தேவையான தமிழ் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இது எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நடைமுறையில் நடக்கிறது. இந்த நடைமுறைதான் கைக்கொள்ளப்பட வேண்டும். இன்னொரு விஷயம்: பாரிஸ் போன்ற நகரங்களில் இலக்கிய அரங்கங்களில் ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றி அயர்லாந்துக்காரர்கள் பேசுவதை விட அதிகாரபூர்வமாகப் பேசக்கூடிய ஃபிரெஞ்சு பேராசிரியர்கள் இருப்பார்கள். இங்கு பாரதியைப் பற்றி அதிகாரதொனியுடன் பேசக்கூடிய தமிழ் மொழி அல்லாத பிறமொழி பேராசிரியர்கள் யாராவது இருக்கிறார்களா? காரணம் நாம் இந்திய இலக்கியங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. இரண்டாந்தர மூன்றாந்தர ஐரோப்பிய இலக்கிய ஆசிரியர்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதில் நிபுணர்களாக இருக்கிறோம். மற்ற இந்திய மொழியிலுள்ள முதல்தர இலக்கிய ஆசிரியர்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

* இப்படி பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய இலக்கியம், அல்லது தேசிய நாடகம், அல்லது தேசிய சினிமா என்பதன் பொருள் என்ன? அப்படி ஒன்று இருக்கமுடியுமா?

* கன்னடக் கவிஞர் பேந்த்ரேயின் கவிதைகளைப் படிக்கும்போது அவர் ஐந்தாறு மைல் சுற்றளவுள்ள பிரதேசத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும்தான் பாடியிருக்கிறார் என்று தெரிகிறது. வில்லியம் ஃபாக்னரின் நாவலை எடுத்துக் கொண்டால், அமெரிக்கத் தென்பகுதி மட்டுமே அவைகளில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் பேந்த்ரேயும், ஃபாக்னரும் உலகத்தைப் பற்றித்தான் எழுதினார்கள். ஒரு தமிழ் கிராமத்தைப் பற்றி எழுதும்போதே இந்தியாவைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் எழுதியதாக ஆகிவிட முடியும். ‘பதேர் பாஞ்சாலி’ என்ற நாவல் ஒரு சின்ன வங்காள கிராமத்தில் நடைபெறலாம். ஆனால் அது உலகில் எந்த மூலையிலும், வறுமை சூழ்நிலையில் வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவனைப் பற்றிய கதைதான். கலாச்சார ரீதியில் நமக்கு ஒரு தனித்துவம் இல்லையென்றால், நாம் உலகளாவிய படைப்பைத் தரமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

* சில நேரங்களில், குறிப்பாகத் தமிழ் மொழியில் மூன்றாந்தர நாலாந்தர எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஏதேனும் நிர்ப்பந்தம் இருக்கிறதா?

* எனக்குத் தெரியாது. நான் சமீபத்தில்தான் சாகித்ய அகாடமியின் தலைவராக ஆகியிருக்கிறேன்.

* உங்கள் காலத்தில் இப்படி நிர்பந்தங்கள் ஏற்படுமேயானால் நீங்கள் அதை எப்படித் தவிர்க்கப் போகிறீர்கள்?

* நான் மட்டுமே இதைத் தவிர்க்க வேண்டுமென்பதல்ல. எல்லா உறுப்பினர்களுமே இதைத் தவிர்த்தாக வேண்டும். ஒன்று நிச்சயம் சொல்வேன். ‘இந்த நூலுக்குத்தான் பரிசு கொடுக்க வேண்டும்’ என்று என் மூலம் எந்த நிர்பந்தமும் இருக்காது. என்னை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. கேரளத்தில் எந்த அரசியல்வாதியின் நிர்பந்தங்களுக்கும் ஆளாகாமல், ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நான்கு ஆண்டுகள் இருந்தேன். ஆனால் சட்டதிட்டங்களுக்குள்ளும் சில குறைகள் இருக்கின்றன. முதலாவதாக – ஒரு பரிசளிப்பு என்பது சலுகையாகக் கருதப்படக் கூடாது. இரண்டாவது – தொடர்ந்து யாரும் ஐந்தாண்டுகளுக்குப் பதவியில் இருக்கவும் கூடாது. அதனால்தான் ஒரு நடுவர் குழு அமைப்பது என்று தீர்மானித்துள்ளோம். செயற்குழு உறுப்பினர் ஒரு அமைப்பாளர் மட்டுமே. அவர் ஓட்டளிக்க முடியாது. இந்த மூன்று நடுவர்கள்தான் நூலைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்களைத்தான் நீங்கள் சாடவேண்டும்.

* இந்த மூன்று நடுவர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பீர்களா?

* நிச்சயமாக அறிவிப்போம். அதுமட்டுமல்ல. புத்தகங்களின் இறுதிப்பட்டியலும் (Short List) அறிவிக்கப்படும். ஆனால் நல்ல புத்தகங்கள் இரண்டில் ஒன்றிற்கு பரிசு கொடுக்கப்பட்டால், இதைவிட அது நல்ல புத்தகம் என்றோ , இதுதான் நல்ல புத்தகம் என்றோ விமரிசனங்கள் வரலாம். அது தவிர்க்க முடியாது. எது மிக நல்ல புத்தகம், எது சுமாரான நல்ல புத்தகம் என்பதற்கு சாகித்ய அகாடமியும் எந்த தற்சான்றும் கொடுக்க முடியாது. ஆனால் மோசமான புத்தகத்துக்கு இந்த பரிசு போகாது என்று உறுதி அளிக்க முடியும்.

• இந்த மூன்று தடுவர்களையும் சரியான நபர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமே!

* இலக்கிய ரீதியாகவும், நேர்மையான விமரிசன நோக்கமுள்ளவர்களையே தேர்ந்தெடுப்போம் என்ற உறுதியும் எங்களால் தரமுடியும். அதுமட்டுமல்ல. எழுத்தாளர்கள் இது குறித்து விவாதித்து எங்களுக்கு யோசனைகள் சொன்னால் அதையும் நாங்கள் கவனிக்கிறோம்.

* அண்மையில் காலமான ஏ. கே. ராமானுஜனுடன் உங்களுக்குள்ள தொடர்பு என்ன?

* அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர், என் ‘சம்ஸ்காரா’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதால் மட்டுமல்ல, மனிதனாகவும், எழுத்தாளனாகவும், தமிழ் இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவராகவும் பங்கு வகிக்கிறார். ‘மாபெரும் பாரம்பரியங்கள்’ என்பதை விடுத்து, சின்னச் சின்ன மரபுகளின் எச்சங்களைப் பற்றி சிந்தித்த முதல் பெரிய சிந்தனையாளர். நாட்டுப்புற வாய்மொழி மரபுகளை நன்றாக அறிந்தவர். இந்தியக் கலைகளை மேனாட்டுக்கு தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசாமி. ஆனால் ஆனந்த குமாரசாமி அறிமுகப்படுத்தியது சம்ஸ்கிருத மரபுகள். சம்ஸ்மிருதமில்லாத மற்ற மரபுகளை வெளியுலகிற்கு யாராவது அறிமுகப்படுத்தினார்கள் என்றால், அவர் ஏ.கே. ராமானுஜனாகத்தான் இருக்க முடியும். மானிடவியல் பயன்பாடுகளுக்காக மட்டுமே தமிழைப் படித்த மேலைநாட்டு அறிஞர்களை இலக்கியப் பயன்பாடுகளுக்காகவும், தமிழ் படிக்க வைத்தவர் ஏ.கே. ராமானுஜன்.

* உங்கள் அறுபதாண்டு கால அளவில் வாழ்க்கையில் நீங்கள் கற்ற பாடம் என்ன?

* ‘நான் நினைப்பதே சரியானது’ என்று நினைக்காமலிருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ‘எதையும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை’ என்பதையும் நான் கற்றுக் கொண்டேன். எனக்குள்ள புகழ், மரியாதை அனைத்துமே என் தகுதிக்கு மீறியது என்பதையும் நான் அறிந்துகொள்கிறேன்.

*
நிழற் படங்கள்: ரவி சங்கரன்
*
நன்றி : சுபமங்களா , சீர்காழி சாதிக்

சலிப்பைப் போக்கும் சந்திரபாபு பேட்டி

‘தென்றல்திரை’யில் 15.11.1955 அன்று வெளிவந்தது. தமிழ் திரைப்பட ஆய்விதழான ‘காட்சிப்பிழை’யின் ( ஜுன்2013) பரணிலிருந்து , நன்றியுடன் பதிவிடுகிறேன்.

இதே ‘காட்சிப்பிழை’யில்  கலாப்ரியா ஐயா ‘வழிந்தும் வழியாமலும்’ சுவாரஸ்யான சுவரொட்டி ஒட்டியிருக்கிறார். நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து ‘திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன?‘*1 என்றெல்லாம் பாடிய ‘இஸ்லாமியப்பாடகி’ ராணிதான்  தேவதாஸ் படத்தில் வரும் ‘எனது வாழ்வின் புனித ஜோதி எங்கே சென்றாயோ?’வை பாடியவராம். வியந்தேன். ராணி, எங்கே சென்றாயோ? ‘தமிழகத்தின் மர்லின் மன்றோ’வான டி.ஆர்.ராஜகுமாரி பற்றிய விரிவான கட்டுரையும் இருக்கு. எழுதிய பா.ஜீவசுந்தரி, ‘ஒரு கண்ணைச் சுருக்கி சதிவலை கோர்த்துப் பின் பல்வரிசை தெரியச் சிரித்து தன் எதிரே இருக்கும் நாயகனையோ அல்லது மற்றவரையோ கவிழ்க்கும் வேலையில் ஈடுபடும் வேளையில் ரசிக மனங்களையும் ஒரு சேரக் கவிழ்த்துச் சென்றவர் ராஜகுமாரி’ என்று எழுதும்போது என் அஸ்மாவைக் குறிப்பிடுகிறாரோ என்று குழம்பி விட்டேன்! எங்கோ போகிறேனே, சந்திரபாபுவைப் பேட்டி எடுத்த தோழர் சியெனஸ் சொல்வதை முதலில் பார்ப்போம்:

தென்னாட்டுத் திரைப்பட ‘காமெடியன்’களில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளவர் தோழர் சந்திர பாபு ஆவார். அவரை ‘தென்றல் திரைக்கு பேட்டி காண ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். ‘வரவேற்பு என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்பதெல்லாம் அவர் வீட்டிற்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தெரிந்துகொள்ளலாம். அவரிடம் பேசிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் எத்தைகைய அறிவுத்திறன் படைத்தவர் என்பதையும் அவர் எத்தகைய வெள்ளையுள்ளம் கொண்டவர் என்பதையும் புரிந்து கொண்டேன், நானும் எத்தனையோ பேட்டிகளுக்குப் போயிருக்கிறேன். தோழர் சந்திரபாபு அவர்களின் பேட்டியில் அலுப்பு சலிப்பு இல்லாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. பேட்டி முடியும்வரையில் ஒரே ஆனந்தம்தான்! அவருடைய குதூகலமான போக்குக்கு இப்பேட்டியே சான்று ஆகும்.

***
chandrababu2

சாப்ளிளை விரும்பும்  சந்திரபாபு இதோ…

உங்கள் சொந்த ஊர்?

என் சொந்த ஊர் தூத்துக்குடி

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்திருக்கிறேன்.

நடிக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி உண்டாயிற்று?

மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ, என்னைப் பொருத்தமட்டில் பதில் சொல்ல முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மனிதனுக்குள் அந்த உணர்ச்சி (நடிப்புணர்ச்சி) எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி மனதிற்குள் புகுந்துவிடுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியது. இதுபற்றி வேண்டுமானால் திரையில் ஒரு கட்டுரையே எழுத முயற்சிக்கிறேன்.

நடிகனுக்கு அரசியல் தேவையா?

நடிகனும் மனிதன்தானே! ஆனால் கலைஞன் ஒரு நாட்டின் பொதுச் சொத்து. அவன் நாட்டுக்குடையவன். நாட்டிலே பற்பல கட்சிகள் இருக்கும். கலைஞன் அவனுக்குப் பிடித்த கட்சியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தான் கலைமேடையில் தோன்றும்போது தன் கட்சிக் கருத்துக்களை அவன் வெளிக்காட்டக் கூடாது. ஏன் என்றால் அரசியல் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது கலை. இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதக்கூடாது என்பது என்
கருத்து.

உங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனாவது தொடர்பு உண்டா?

நாட்டிற்கு எந்த ஒரு கட்சி உண்மையான தொண்டுபுரிகிறதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றத் தயாராக இருக்கிறேன். இன்னும் சேரவில்லை. கட்சியைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

தென்னாட்டுத் திரைப்பட உலகத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அமெரிக்காவுக்கு அடுத்தபடி – ஏன் அமெரிக்காவை விட முன்னேறிவிட முடியும். முன்னேற வசதிகள் இருக்கின்றன. அது வளர்ந்து கொண்டும் வருகிறது. ஆனால் நம் நாட்டு மக்களை ஏதோ சாதாரண கை பொம்மைகளாக நினைக்கும் ஒரு சில முட்டாள் ப்ரொடியூசர்கள் (இதைச் சொல்ல நான் சற்றும் அஞ்சவில்லை. இது என் சக நடிகர்களுக்கு) இந்த சினிமா உலகத்தை விட்டு ஒழிந்தால்தான் தென்னாட்டுத் திரைப்படங்கள் பிரசித்தியடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

உங்களுடன் நடிக்கத் தகுந்த நடிகை யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்வி சிரிப்பைத்தான் உண்டாக்குகிறது. என்னுடன் நடிக்கத் தகுந்த நடிகையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

உங்களுக்கு நகைச்சுவைக் கட்டங்களில் மட்டும்தான் நடிக்க வருமா?

நீங்கள் என்னை ஒரு நகைச்சுவை நடிகன்  என்ற முறையில் பேட்டி காண வந்திருக்கிறீர்களா? அல்லது ஒரு நடிகன் என்ற முறையில் காண வந்திருக்கிறீர்களா?

(நடிகர் என்ற முறையில்தான் காண வந்தேன்)

ஒரு நடிகன் தனக்கு எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை செம்மையாகவும், அழகாகவும் நடித்து அதைப் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்துபவன்தான் உண்மையான நடிகன். ஆனால் எனக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படாததால் மேற்கூறியவற்றை நிரூபிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போது செய்தே தீருவேன்.

உங்களுக்குப் பிடித்த ஆங்கில நடிகர் யார்?

மேல்நாட்டில் நம் நாடு மாதிரி ‘இவனை விட்டால் அவன், அவனை விட்டால் இவன்’ என்கின்ற மாதிரியில் நடிகர்கள் இல்லை. அங்கு ஆயிரக்கணக்கில் நடிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இப்போது வயது 27 ஆகிறது. 14 ஊமைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ‘ஜூடா ஆ·ப் வாலன் டினே’விலிருந்து அடால்ஃப் மஞ்சு,  டக்லஸ் பயர்பாங்க்ஸ் சீனியர் ,  பாக்தாத் திருடன் (The Thief of Bagad) என்ற படங்களிலிருந்து போன மாதம் இளம் வயதிலேயே இறந்துபோன ஜேம்ஸ்டீன் வரைக்கும் எனக்குப் பிடித்த நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் குறிப்பிட முடியாமல் போனாலும் எவ்வளவோ பேரைப் பற்றிச் சொல்ல முடியும். இவர்கள் எல்லோரிலும் சார்லி சாப்ளினுக்கு  என் உள்ளத்தில் தனிப்பட்ட ஒரு இடமுண்டு. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த அறிவாளி .  நானும் அப்படி ஆக எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னால் அப்படி ஆக முடியுமா? உங்களுக்குத்தான் வெளிச்சம்.

நடிப்பிற்கு இலக்கணம்  கூறமுடியுமா?

ஒரு துளி தண்ணீரை வைத்துக்கொண்டு ஆழ் கடலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது? நான் துளி நீருக்குச் சமமானவன். மன்னிக்கவும். நடிப்பிற்கு இலக்கணம் கூறமுடியாத நிலையில் உள்ளவன்.

தமிழ்ப்பட உலகில் குறைகள் என்ன?

குறைகள் என்ன இருக்கிறது! பட முதலாளிகள் தங்களுடைய சக்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். டைரக்டர்கள் நடிக, நடிகைகள் தங்கள் தங்கள் சக்திகளைத் தெரிந்து கொண்டால் போதும். மேலும் சக்தியை மறந்து ‘சப்பாத்தி தின்கிற’ பசங்களுக்கு அதிகமாகக் கொடுக்காமல் இருந்தால் போதும். காரணம், சமீபத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருந்தில் அவர்கள் நடந்துகாண்ட விதம் மிக மோசமானது. நான் அங்கு செல்லவில்லை. நான் சென்றிருந்தால் நிலைமை என்ன ஆகி இருக்குமோ எனக்குத் தெரியாது. ஏன் என்றால், நான் அப்படிப்பட்டவன். அவமரியாதையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவன். இந்தச் சம்பவம் பற்றியும் ஒரு கட்டுரை திரையிலேயே எழுதுகிறேன்.

ரௌடி வேஷங்களில் நன்றாக சோபிக்கிறீர்களே ஏன்?

‘களவும் கற்று மற’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவுதான் பெரிய மனிதன் ஆனாலும் சரி, என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், இப்போது தத்துவம் படித்துக்கொண்டிருக்கிறேன். மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி சாக வேண்டும் என்று கூட என்னால் எழுதமுடியும். இவ்வளவு இருந்தும் அந்தப் பழைய ‘பொறுக்கி புத்தி’ போகமாட்டேன் என்கிறது. காரணம் என் வாழ்க்கை ஜிம்கானா பால்ரும் டான்ஸ் போன்ற ஆடம்பர வாழ்க்கை முதல் சாதாரணப் பொறுக்கி உணர்ச்சி வரை ‘தண்ணி’ப்பாடமாகி விட்டது.  நான் உண்மையுள்ளவன் என்ற காரணத்தால்தான் நான் நடிக்கும் ஒரு சில பாத்திரங்கள் ‘பொறுக்கிகளே’ பார்த்து அலறும்படியாக அமைந்து விடுகிறது.

உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் படமெது?

ஊம்! ஒன்றுமில்லை.

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படமெது?

எதுவும் இல்லை!

உங்களுக்கு ஏதாவது லட்சியம் உண்டா?

கலைஞனாக வாழ்ந்து கலைஞனாகச் சாகவேண்டும் என்பது என் லட்சியம்.

திரையுலகில் நுழைவதற்கு உங்களுக்கு வழிகாட்டியவர் யார்?

அதுவா, (அலுத்துக்கொண்டே) அது ஒரு பெரிய கதை; ஆதியும் அந்தமுமாகச் சொல்ல முடியாது. எப்படி ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை, சோகம் , உச்சநிலைகள் (Climax) இருக்கின்றனவோ அதுபோன்றுதான் என் வாழ்க்கை. யார் கூட்டிக்கொண்டு போனார்கள் என்பதெல்லாம் பெரிய கதை. முதலில் என்னை அழைத்துச் சென்றவர் பி.எஸ்.ராமய்யா அவர்கள். அதன் பிறகு நாலரை வருஷங்கள் யாருமே சட்டை செய்யவில்லை. காரணம் நான் ஒரு லூஸ், கிராக் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் நம் கோஷ்டியாகிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை…. வணக்கம்.

***

நன்றி : காட்சிப்பிழை

***

*1 : கவிஞர் சலீம் இயற்றிய பாடல்

***

தொடர்புடையவை :

1-3-64-இல் வெளி வந்த இன்னொரு பேட்டி. நன்றி, விகடன்  (நன்றி : அவார்டா கொடுக்கறாங்க?)

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும் – எஸ்.ராவின் பதிவு

***

கடைசியாக – துபாயில் ஆபிதீன் விரும்பிக் கேட்கும் – ஒரு ‘காமெடி’ பாட்டு…

Thanks to : MegaSeLvA86

ஒசாமாவை பேட்டி கண்டேன்

பேட்டி கண்டது நண்பர் தாஜ் அல்ல. தைஸீர் அலோனி (تيسير علوني).  அவர் (தாஜ்) அனுப்பிய ‘த சன்டே இந்தியன்’ கட்டுரையைப் பதிவிடுகிறேன்.’கவர் ஸ்டோரி’யின் இரு இமேஜ்கள் இங்கே இருக்கின்றன. ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கவும்.  இதையே – சில பின்குறிப்புகளுடன் – கவிஞரும் தட்டச்சு செய்து அனுப்பியிருந்தார். அதுவும் அடியில் உண்டு. பாருங்கள். நன்றி.

‘நாம் அனைவரும் அமைதிக்குத் தரவேண்டிய விலைதான் போரா?’

***

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்ததற்கு ஒரு மாதம் கழித்து, அப்போது உலகம் முழுவதும் தேடப்பட்ட ஒரு நபரை பத்திரிகையாளர் டைசீர் அலோனி பிரத்யேக நேர்காணல் செய்தார். அந்த நபர் ஒசாமா பின்லேடன். காபூலில் சி.என்.என். மற்றும் அல்ஜெசிராவின் செய்தியாளராக இருந்த இவர், சிரியாவில் பிறந்து ஸ்பெயினில் வாழ்பவர். அல்காயிதா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு, மேட்ரிட் நீதிமன்றம் இவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை அளித்தது. எண்ணற்ற மனுக்களுக்குப் பிறகு 51 வயதான டைசீர், கொடும் சிறையான அல்காலா மெகாவிலிருந்து ஸ்பெயினில் கிரானடாவில் உள்ள தன் வீட்டுக்கு மாற்றப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போதும் வீட்டுக்காவலில் இருக்கும் டைசிர் அலோனி, த.ச.இ.க்கு (த சன்டே இந்தியன்-க்கு) அரபியில் தனது நேர்காணலை எழுதி அளித்திருக்கிறார். இதில் அவர் இஸ்லாம், மேற்குலகம், சமாதானத்திற்கான தடைகள் குறித்துப் பேசுகிறார் –  இந்திரா

***

வீட்டுச்சிறை

பிப்ரவரி 2012 வரை நான் வீட்டுக் காவலில்தான் இருக்கவேண்டும். காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நான் வெளியே சென்றுவரலாம். ஆனால் கிரானடாவுக்கு வெளியே நான் செல்லமுடியாது. இதனால் பத்திரிகையாளராக பணிபுரிய இயலாது. அதற்கு நான் ஸ்பெயின் நாடு முழுவதுமாவது பயணிக்க இயலவேண்டுமே….

ஒசாமாவுடன் நேர்காணல்

நான் ஒரு பத்திரிகையாளராக அவரை பேட்டி கண்டேன். இதற்காக ஒருபோதும் வருத்தப்படமாட்டேன். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை எழுந்தாலும், அந்த வேலையைச் செய்வதற்கு தயங்கமாட்டேன். பின்லேடன் , குரானுக்கு அவருக்கே உரியதான அர்த்தப்படுத்தலைச் செய்தார். அவரது கருத்துடன் அனைத்து முஸ்லிம்களும் உடன்பட வேண்டியதில்லை. ஒரு யூதராகவோ, கிறிஸ்துவராகவோ இருப்பதற்காக அவர்களுடன் முகமது நபி சண்டையிடவில்லை. ஆனால் நீங்கள் எப்படி அவர்கள் மீதான போரை நியாயப்படுத்துகிறீர்கள் என்றும் கேட்டேன். அவர் 1998 ஆம் ஆண்டில், தான் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததாலேயே யூதர்கள் மற்றும் சிலுவைப் போராளிகள் மீது போரை அறிவித்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு முரணாக 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ், தனக்கு கடவுளிடமிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்ததாகவும் ‘சிலுவைப் போரை’ தொடங்கியதாகவும் தெரிவித்தார். இது ஒசாமாவுக்கும் பொருந்துவதுதான் சோகமயமானது.

மேட்ரிட் குண்டுவெடிப்புகள்

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ரிட் குண்டுவெடிப்புகள் பற்றி நான் செய்தி எழுதினேன். குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் மீதானவிசாரணையின் தகவல் அது. அவர்கள் வடக்கு ஸ்பெயினில் உள்ள சில சுரங்க உரிமையாளர்களிடம் வெடிமருந்துகளை வாங்கினார்கள். ஆனால் விற்றது வாங்கியதைத் தவிர அங்கு வேறு எதுவும் நடக்கவில்லை. சுரங்க உரிமையாளர்களுக்கு வெடிமருந்து எதற்காக வாங்கப்படுகிறது என்பது தெரியாது.

வேறு வழி உண்டா?

அல் காயிதா மற்றும் பிற அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் சேர காரணம், உலகின் பல இடங்களில் முஸ்லிம்கள் சந்திக்கும் அநீதிதான். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குநாடுகளும் தங்கள்மீது இலக்கு வைத்துள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அப்பாவிகள் கொல்லப்படுவதுதான் பயங்கரவாதம் என வைத்துக்கொள்வோம். அப்படிதான் பின்லேடன் பயங்கரவாதி ஆகிறான். ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது. இந்தக் கொலையில் இங்கிலாந்தும் பங்குபெற்றது. இந்தச் செயலை நாம் எப்படி பெயரிடப்போகிறோம்? பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. போராட்டங்களின்போது காஷ்மீரிகளை இந்தியா கொல்கிறது. இதை என்ன பெயரிட்டு அழைப்பது? 60 ஆண்டுகள் ஆகியும் பாலஸ்தீனிய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவேயில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனியர்கள் கடும் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் உதவி செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலுக்கு எதிராக எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அதை ரத்து செய்ய முயலும். மூன்றாம் உலகநாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக மேற்குநாடுகள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் மிகப் பாதகமானதாகவே தோன்றுகிறது.

அகிம்சை ஓரளவுக்கு உதவும்

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் வெற்றிக்கரமான பலன்களைத் தந்தன. ஆனால் தற்போதைய நிலைமை வித்தியாசமானது. காந்தி ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகவும் மண்டலா நிறவெறி பாகுபாட்டிற்கு எதிராகவும் போராடினார். தற்போது நாம் அரசியல்ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம். உதாரணத்துக்கு பாலஸ்தீனத்தில் ஆக்ரமிப்பை எதிர்க்கும் எந்த வன்செயலும் பயங்கரவாத நடவடிக்கையாக இனம் காணப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் குற்றங்களை பாதுகாப்பு என்ற பெயரில் மேற்குநாடுகள் நியாயப்படுத்துகின்றன.

இஸ்லாம் – மறு கண்டுபிடிப்பு

அரசியல் லாபத்திற்காக இன்று இஸ்லாம் தாக்கப்படுகிறது. இஸ்லாம்தான் பயங்கரவாதத்தின் அச்சாக நமக்கு தொடர்ந்து கூறப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறை சர்வதேச சமூகத்தில் இல்லை. இஸ்லாமுக்கு வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை. அதற்குச் சொந்தமாக கோட்பாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த அவசியமும் இஸ்லாமுக்கு இல்லை. இஸ்லாம் அமைதியின் மதம். முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகவே அம்மதம் ஜிகாத்தை வரவேற்கிறது. இச்செயலை எதிரிகள் தீவிரவாதம் என்று சொல்வார்கள் எனில், அது அவர்களுடைய பிரச்சனை. ஏனெனில் அவர்கள் இஸ்லாமை வெறுக்கிறார்கள். இரட்டை அளவுகோல்களையும், போலித்தனத்தையும் முடிவுக்குக்கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியம்.

***

நன்றி: த சன்டே இந்தியன்/ 04-17,Oct 2010

***

பின் குறிப்பு:

மேற்கண்ட தேதியிட்ட இதழில்,
‘போரும் சமாதானமும்’ என்கிற தலைப்பின் கீழ்…
‘நாம் அனைவரும் அமைதிக்குத்
தரவேண்டிய விலைதான் போரா?
தோட்டா நிரம்பிய துப்பாக்கி இல்லாத வேறொரு வழி இருக்கிறதா?
வாய்ப்புகளை அலசுகிறது த சண்டே இந்தியன்.’
என்கிற முழக்கத்தை முன் வைத்து…..
உலகம் தழுவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுரைகள் 12 -ஐ
மாறுபட்ட எழுத்தாளர்களின் பார்வையில்
வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒன்றுதான் இது!

*

தட்டச்சு & வடிவம்: தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
8:52 PM 10/25/2010

***

நன்றி : கநாசு. தாஜ்

***

மேலும் பார்க்க : A Discussion on the New Crusader Wars
Tayseer Allouni with Usamah bin Laden
  

‘படிமக் கவிஞர்’ அபி

சமரசம் – ஜனவரி 2000 இதழில் வந்த நேர்காணல். அதே வருடம் ‘திண்ணை‘யில் பிரசுரமாயிற்று. 2007 ஆரம்பத்தில் நண்பர் யெஸ். பாலபாரதி மீள்பதிவிட்டிருந்தார்.  இப்போது நான். சுட்டியை மட்டும் கொடுத்துவிட்டுப் போக மனமில்லை.

***

abi_photobw01

நேர்காணல்:- “கவிஞர் அபி”
சமரசம் – ஜனவரி 2000 இதழிலிருந்து


‘அபி ‘ என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே மாதம் 2000- இல் ஓய்வு பெறுகிறார்). லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, ‘டாக்டர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதிவரும் அபியின் கவிதைகள் மூண்று தொகுதிகளாய் வெளிவந்துள்ளன.
1. மெளனத்தின் நாவுகள். (1974)
2. அந்தர நடை (1978)
3. என்ற ஒன்று (1987)

இலக்கியச் சிற்றிதழான ‘படிகள் ‘, அந்தர நடை பற்றி ‘ஆன்மீகத்தடத்திலிருந்து ஒரு புதிய குரல் ‘ எனக் குறிப்பிட்டது. சொல், பொருள் விவாதம், விளக்கம், கால-இட-வெளி- இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனை, ஒரு சூஃபியின் மனக்கண்ணுடன் தனது கவிதைகளில் தேடியவாறே இருக்கிறார் அபி. உள்மன வாழ்வை, பல உட்பரிமாணங்களுடன் ஆழமான தளத்தில் தீண்டுபவை அபியின் கவிதைகள். மிகக் குறைவான சொற்களில், பல சமயங்களில் சொற்கள் துறந்து, லேசாய் கோடி-காட்டுவதுடன் நின்று விடுகின்றன இவரின் கவிதைகள். வாசகன்தான் கவிதையின் முழு உலகையும் தன்னுள் எழுப்பி கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆழமான படைப்பும் ஒரு தீவிர வாசகனிடம் வேண்டி நிற்கும் குறைந்தபட்சத் தகுதிதான் இது. ஒரு கவிதை (அசல் கவிதை), அது கவிதை ஆக, கவிஞன் மேற்கொண்ட மன ஓர்மை, உழைப்பு, கற்பனைவீச்சு, பாய்ச்சல், அறிவு நுட்பம், உணர்வாழம், காட்சியாய் காணல்- இவற்றை வாசகனிடம் வேண்டி நிற்கிறது. அபியின் கவிதைகள், இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, ‘நீ எழுதுவது எனக்குப் புரியவில்லை. யாருக்கு நீ எழுதுகிறாய் ? ‘ என வெடுக்கெனத் தீர்ப்பை வீசி எறிந்துவிடும் நமது வழக்கமான மனப்பான்மையை உதறிவிட்டு, நிதானமாய், அமைதியாய் அபியின் கவிதைகளை அணுக வேண்டியது அவசியமாகிறது. பட்டிமன்றங்களில் சொல் ஜால வித்தைகளையோ, இசை இரைச்சல்களில் நசுங்கித் திணறும் சினிமாப்பாடல்களில் சொல் உருட்டல்களையோ அபியின் கவிதைகளில் காணமுடியாது. தேடினால் வாசகன் ஏமாந்து போவான். மேடைகளில், பத்திரிக்கைகளில், டிவி-யில் வாய்ப்புக் கிடைக்காதா கிடைக்காதாவென தேடி அலைந்து, வாய்ப்புகளை உருவாக்கி, ‘என்னைப் பார்… என் கவிதை பார் ‘ என மார்க்கட் பண்ணும் கவிஞர்கள் மத்தியில், ‘ எழுதுவதுடன் என்வேலை முடிந்துவிட்டது. இனி கவிதைகள் பேசிக் கொள்ளட்டும் ‘ என விட்டேற்றியாக இருக்கிறார் அபி. இது துறவு மனமா ? அல்லது ஓர் கலைஞனின் சிருஷ்டி கர்வமா ? ‘

சமரசத்திற்காக அபியைச் சந்தித்தபோது….

 
எழுதுவதற்கெனக் குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?

தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வதில்லை. மனதில் நிற்காதவைகளை விட்டுவிடுவது எனக்குப் பழக்கம். இரவு-சப்தமின்மை மிக மங்கலான வெளிச்சம். அறைத்தனிமை எழுத எனக்கு உகந்த சூழல். கவிதையை முழுதாக எழுதிவிடுவதும் உண்டு. அரை குறையாக நின்று பின் எப்போதோ நிரப்புவதும் உண்டு நள்ளிரவு விழிப்பு நேரங்கள் தூண்டுதலானவை. தலையணைக் கருகில் இருக்கும் டைரியில் பென்சிலால் இருளிலேயே எழுதி வைப்பதும் உண்டு.

 
‘அபி ‘ என்பது தங்களின் புனைப் பெயரா ? இதனைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா ?

இது புனைபெயரில்லை. அர்த்தம் ‘பொதிந்த ‘ புனைப்பெயர்களில் எனக்கு ஆர்வமில்லை பள்ளி, கல்லூரி நாட்களில் என் நண்பர்கள் அபிபுல்லா என்ற பெயரை ‘அபி ‘ என்று சுருக்கி அழைத்தார்கள். கவிதை வெளிவந்த போது அதிகம் யோசிக்காமல் அந்தப் பெயரையே இருக்கவிட்டு விட்டேன்.

 
தங்களின் முதல் கவிதையை எப்போது எழுதினீர்கள் ? அது எதுபற்றிப் பேசிற்று ?

‘கவிதை ‘ என என் ஆமோதிப்பைப் பெற்றவைகளுக்குள் ‘மெளனத்தின் நாவுகள் ‘ தொகுப்பில் உள்ள ‘இன்னொரு நான் ‘ என்பதுதான் என் முதல் கவிதை. ஆண்டு 1967 என்று நினைக்கிறேன். என்னுள் நெரிந்து குவிந்துகொண்டேயிருக்கும் என் சாயைகளில், அப்போதைய பக்குவத்தில் எனக்குப் பிடிபட்ட ஒரு சாயையைச் சொல்வது அந்த கவிதை.

சாயை ?

கணந்தோறும் இடந்தோறும் வாழ்வு அனுபவத் தொடுதல் ஒவ்வொன்றிலும் உருவாகி, உருமாறி ஒன்றுடன் ஒன்று பின்னி நமக்குள் நிறைந்து கிடக்கும் நம் பிம்பங்களைச் சாயைகள் என்கிறேன். தோற்றங்களிலிருந்து உண்மையை நோக்கிச் செல்லும் பாதையில் இவை இயங்கிக் கொண்டிருக்கும், நம் கட்டுப்பாட்டில் இல்லா இவைகளைப் பிரித்து விலக்கி பார்த்து சிலவற்றை ‘உண்மை ‘ எனக்கொண்டு நிறைவு காண்பதும், ‘இல்லை ‘ என ஏமாற்றம் கொள்வதும் அவரவர் தாகத்தின் தன்மையைப் பொறுத்தது. இவை அத்தனையையும் வெளியேற்றிவிட்டு, ‘நான் ‘ என்பது ஒரு பாவனை எனக்கண்டு, அதனையும் தாண்டி. ‘நான் என்பது ஒன்றுமில்லை ‘ என்ற ‘பனா ‘ நிலைக்கும் போகலாம். ஆனால் என் கவிதை எட்ட முடிந்த எல்லையில் சாயைகளை இனம்பிரித்தும் ப்ரிக்காமலும் தொட்டுத் தடவி பேசி ஊடுருவி உணர்ந்தது எனக்கு அனுபவம். இவைகளைத் தாண்டிப் போகிற சிறுசிறு விடுவிப்புகளில் நான் உணர்ந்த மெளனம் என் கவிதைகளில் படிந்திருக்கிறது.

அப்படியானால், இப்போதைய உங்களின் abstract கவிதைதளத்திற்கு உங்களைக் கொண்டு வந்து சேர்த்தவை உங்கள் ஆரம்பகாலக் கவிதைகள்தான் என்று கொள்ளலாமா ? பரிணாம வளர்ச்சியாக, உங்கள் கவிதைகளுக்கிடையே ஒரு தொடர் கோட்டினை இழுக்க முடியுமா ? அல்லது ஒரு திடார் அகநிகழ்வு இந்தத் தளத்திற்கு உங்களைத் தள்ளிற்றா ?

ஒரு வாசகப் பார்வையில், என் மூண்று கவிதைத் தொகுப்புகளிடையே தொடர்பு எதுவும் இல்லை என்று தோன்றக்கூடும். வெளியீட்டு பாங்கில் இருக்கும் வளர்ச்சி முக்கியமான ஒரு காரணம். ஆரம்பகாலக் கவிதைகளில் பேச்சும் பேசும்விதமும் என்று இரண்டு கூறுகள் தெளிவாக இருந்திருப்பதைப் பார்க்கிறேன். அடுத்து வந்த கவிதைகள் பேச்சும் பேசும் விதமும் வேறுபடுத்திக் காணமுடியாத ஒன்றிப்பில் பிறந்திருக்கின்றன. அதன் பின்னர், என் கவிதைகள் முடிந்தவரை, பேசாமலும் தங்களின் ‘விதம் ‘ இன்னதென்று அறியாமலும் பிறந்திருக்கின்றன. இரண்டாவது காரணம், விஷயத்தைப் பார்க்கும் பார்வையில் வளர்ச்சி வாழ்வு அனுபவம் உருக்கி உருக்கி விஷயங்களை வேறு வேறு மாதிரியாக காட்டுகிறது. பக்குவ முதிர்ச்சி இந்தத் தோற்றங்களை ஏற்றும் மறுத்தும் புதுவிதமான பார்வைகளைப் படரவிடுகிறது இந்த நிலையில் இவையெல்லாம் பழையதின் வெளிச்சமான தொடர்ச்சியா என்று கேட்டால் ‘ஆம் ‘ என்றும் ‘இல்லை ‘ என்றும் சொல்லலாம். தொடர்கோடு இழுக்க முடியாது, நீந்துகிறவன் தலைவிட்டு விட்டுத்தெரிவது போன்ற ஒரு விதத் தொடர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். என் கவிதைகள் என்னை ஊடுருவும் கூர்மையிலும், ஊடுருவலால் நான் அவற்றினுள் சிதறிக்கொள்ளும் வெடிப்பிலும் இலக்கணச் சுத்தமாக இல்லாத ஒரு பரிணாமம் இருக்கும் என்று தோன்றுகிறது. ‘திடார் அகநிகழ்வு ‘ பற்றிக் கேட்டார்கள். திடார் ‘நிகழ்வு ‘ என ஒன்றும் இருக்கமுடியாது. நிகழ்வுகள், உணர்வுகள், விஷயங்கள் எல்லாம் பிரபஞ்ச இயக்கத்தில் என்றென்றுமாய் இருந்து கொண்டிருக்கின்றன. நாற்புறமும் இருந்து நம்மை ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. நமக்கு உறைக்கும் போதுதான் அவை உருவாயின என்று சொல்லமுடியாது கவித்துவ உணர்வு தவ இறுகலில் இருந்திருக்கும், எடிசன் கண்டு பிடிக்குமுன் பிரபஞ்சத்தில் இருந்த மின்சாரம் போல. Unexpected, Unpredicted, Unpredeterminable என்று நவீனப் படைப்பு பற்றிச் சொல்லப்படுவதை என்மனம் ஏற்க மறுக்கிறது. இல்லாதிருந்து, இருப்பதானது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இல்லாதிருந்ததும் இருந்ததும் ஒன்றே என்று என் கவிதைகள் எனக்கு உணர்த்துகின்றன.இன்னுமொன்று இன்றைய என் கவிதைகளுக்கு என் முந்தைய கவிதைகளைவிடவும் அதிகம் பொறுப்பாளிகளாக இருப்பவை என் இளவயது பிம்பங்கள். என்னுடன் எப்போதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் என் சிற்றிளம் பருவத்துக்குள் நான் நுழையும்போது- அறிவினிடம் ஒன்றிப் போகும்போது – அனுபவங்களிலிருந்து விடுபட்டு அவை அருகிக் கிடந்த, பெயரிடப்படாத வெற்றிடத்தில் நழுவிக் கொள்ளும்போது – தன்மைகளின் பிடிப்பிலிருந்து தன்மையற்ற ஆதியை நோக்கிப் போகும்போது என் கவிதைகள் அருவம் கொள்கின்றன.

 
சிற்றிளம் பருவம் இன்றுவரை உங்களை வளர்த்துக் கொள்டிருப்பதாக்ச் சொல்கிறீர்கள். தங்களின் இளமைக்காலம் பற்றி- பெற்றோர் பற்றிச் சொல்லுங்கள். பெற்றோரின் கண்டிப்புகள்/ நெருக்குதல்களால் இளவயதில் மகிழ்ச்சியை இழந்துபோனவர்களாக நிறையப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். பின்னால் இவர்களின் படைப்புகள் ஆழமானவையாக, அகவுலகு சார்ந்தவையாக அமைந்திருக்கின்றன. இளவயதில் மகிழ்ச்சியை இழந்து போவது, ஆழமான படைப்புகளுக்கு அடிப்படை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. தங்களின் இளமைப் பருவம் எவ்விதம் இருந்தது…

என் இளமைப் பருவம் குடும்பத்தின் இயலாமைகளைப் புரிந்து கொண்டு நிராசைகளை விழுங்கி வைத்திருந்தது. குறைந்த வருமானம், எட்டுக் குழந்தைகள். கண்ணியம் குலையாமல் குடும்பம் நடத்திய என் பெற்றோரின் உளைச்சல்களை-சிம்னி விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுவதும் தொழுது கொண்டிருந்த என் தாயின் பெருமூச்சுகளை கனம் உணரத்தெரியாமல் பார்த்திருக்கிறேன். பற்று, பாசம், அன்பு, அணைப்பு- இந்த மாதிரியான வார்த்தைகளும் இவற்றின் விளம்பரச் சார்பான விளக்கங்களும் அவர்களிடம் இருக்கக் கண்டதில்லை. ஆனால் அவர்களது ‘துவா ‘ எங்களுக்காகவே இருந்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியின் சுற்றுச் சூழல் – அதன் முரட்டுப் பழக்க வழக்கங்கள் காரணமாக நான் வெளியே பிள்ளைகளுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அப்போதே அது சரிதான் என உணர்ந்திருந்தேன். தனிமைக்குழந்தையாக எனக்குள் திரும்பியிருந்தேன். நான் introvert ஆனதற்கு என் இயற்கையுடன் பெற்றோரின் கண்டிப்பும் காரணம்.

 
உங்களுக்குள் திரும்பியிருந்த அனுபவம் எப்படி ? அது அந்தச் சிறுபருவ அனுபவம் சார்ந்ததாகத்தானே இருக்க முடியும் ?

ஆம். அந்த ‘அறியாப்பருவம் ‘ சார்ந்ததுதான். அறியாப்பருவத்தில்தான் சிந்திப்பது என்ற ‘செயல் ‘ இல்லாமல், உணரமுடியும்; உள்ளே உருவற்று வரையறைகளற்று நிகழும் அரையிருள் நடமாட்டங்களைப் புரியாத வண்ணம் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

 
அதுமாதிரியான ‘அறியா ‘ நிலையில் வெளிப்புறம் என்ற ஒன்று இருக்க முடியாது. சரிதானா ?

சரி. குழந்தை, தனக்கு வெளியேயிருப்பது தானல்லாதது என உணராது. அந்த நிலை சிற்றிளம் பருவத்தில் தொடரும்போது சில விசித்திரங்கள் நிகழ்கின்றன. புறவுலகம் புறப்பொருள்கள் பற்றிய அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் போதே சில உணர்வு நிலைகளில் உள்-வெளி பேதங்கள் மறந்து போய்விடும். அது மாதிரியான நேரங்களில் நான் வீட்டு வாசலில் இருந்துக் கொண்டு, மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மலைகளுடன் ஒருவித உறவு கொண்டிருக்கிறேன். ஊரைச் சுற்றியிருந்த காடுகளும் மலைகளும் ஓடைகளும் கடுங்குளிரும் நிசப்த நள்ளிரவு நட்சத்திரங்களும் எனக்கே உரியவை போல நெருக்கம் கொண்டிருந்தேன் அவை எனக்கு உள்ளேதான் இருந்தன. அவையும் சேர்ந்த ‘நான் ‘ அப்போது எனக்கு இருந்தது.

கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார் ?

ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ? என் படிப்பு மிகவும் குறைவு; அதில் எனக்கு மிகுந்த வருத்தமும் கூச்சமும் உண்டு. என் ஆரம்பப் பொழுதில் என்னைப் பாதித்தவர்கள் கவிஞர் வரிசையில் இல்லாத லா.ச.ரா-வும் மெளனியும்; தாகூரும் ஜிப்ரானும் பாதித்திருந்தார்கள். பிறகு இந்தப் பாதிப்புகள் விடுபட்டுப் போய் விட்டன. பின் ஐரோப்பியக் கவிஞர்களின் மீது ஈடுபாடு, வாஸ்கோ போபா, பால்செலான், நெருடா போன்றவர்கள் கவர்ந்தார்கள். நான் ரொம்பவும் விரும்புகிறவர்களுடன் சில அம்சங்களில் ரொம்பவும் வேறுபடுகிறேன். எனக்கு ஆதர்சம் என்று தனித்த ஒருவரைச் சொல்ல முடியவில்லை.

 
சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் ?

பலர். பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, அப்துல் ரகுமான், சுகுமாரன், தேவதேவன்….

 
‘கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ‘ இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிரக்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?

திட்டமிடுதல் என்பது ஒரு வரைபடம் போல நாற்புறஎல்லை, ஒவ்வொன்றின் அளவுகள், முன்பின்கள் எனறு அர்த்தமானால்- எந்தப் படைப்புக்குமே ‘திட்டமிடல் ‘ என்பது இருக்க முடியாது. ஒரு லேசான உசும்பலோடு கவிதை தொடங்க-அந்த உசும்பலே ‘திட்டம் ‘ என்றால் போகிறபோக்கில் கவிதை அந்த அற்ப வரையறையைக் கலைத்துவிட்டுப் போய்விடுகிறதே ‘ விஷயத்திற்கு முதன்மை கொடுத்து இதை இந்த விளைவை நோக்கிக் கொண்டு போக வேண்டும் என்று ‘திட்டமிட்டு ‘ எழுதுபவர்கள்கூட, தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்பவைகளைத் திட்டமிட மாட்டார்கள். விஷயத்தை ஞாபகம் கொண்டிருந்த கவிஞனைத் தன்வழியே இட்டுச் செல்லும் கவிதை சில சந்தர்ப்பங்களில் ‘திட்டம் ‘ தங்களிடமே நின்றுவிட்டதையும் கவிதை தங்களைத் தாண்டிப் போய்விட்டதையும் அவர்கள் (உணர்ந்திருந்தால்) சொல்லக்கூடும்.

 
குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனசில் விஷயமே இருக்காதா ?

இருக்கலாம், இல்லாமலும் போகலாம். முன்பே நான் சொல்லியிருக்கிறேன். மனசைத் தீவிரமாகப் பாதித்து நிறைந்திருக்கும் ஒரு விஷயம், தனக்குச் சாதகம் தரும் உணர்ச்சியைக் கிளர்வித்துக் கவிதையாக வெளிவரலாம். அப்போது அது விஷயமல்ல; கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத் தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று: எந்த விஷயமும் மனசில் இல்லாமல், அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச் சுழற்சியில், அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டு கவிதை வெளிவந்து விடலாம். முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை ‘நேர்வது ‘ என்னாமல் எப்படிச் சொல்வது ? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் ‘உழைப்பு ‘ அல்ல. பிறந்த கன்றை ரொம்பநேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன்.

 
அடிப்படையானது ‘கவித்துவ உணர்ச்சி ‘ என்று சொன்னீர்கள். சரி. கவிதை ஆக்கத்தில் எது உங்களை உடனடியாகப் ‘பக் ‘கெனப் பற்றிக் கொள்கிறது ? சப்தம், சொல், காட்சி, sensation, feeling, கனவு, fantasy இவைகளில் எது ?

நிச்சயமாக சொல்லும் சப்தமும் அல்ல. fantasy, கனவு, உணர்வு என்றெல்லாம் பிரித்துணர முடியாதபடி, உருத்தெளிவற்ற காட்சிகளாக நிகழ்ந்து கொண்டேயிருப்பது, ஏதோ ஒரு கணத்தில் ‘நானா ‘க இருப்பவனை ‘நான ‘ற்று ஆக்கிவிடுகிறது. பிறகு இது கவிதையாக வெளிவரும் வாய்ப்பு நேர்கிறது. சங்கீதத்தில்கூட, நான் அனுபவிக்கும் நாதம் சப்தம் அல்ல; கேட்டுக் கொண்டிருக்கும்போதே சங்கீதம் நம்மை இழுத்துக் கொண்டு மெளனத்தினுள் நுழைந்து விடுகிறது. படைப்பு அனுபவமும் அதுதான்.

 
உங்களின் சங்கீத ஈடுபாடு- உங்கள் கவிதைகளில் சங்கீதத்தை நோக்கிய குறிப்புகள் உள்ளன. சங்கீதப் பயிற்சி பெற்றீர்களா ?

இல்லை. ஓரளவு கேள்வி ஞானம்தான். ஞானம் என்று கூடச் சொல்ல மாட்டேன். அது எனக்குத் தரும் அனுபவம்-அது என்னுள் எழுப்பும் அருவங்கள், அகாலம், அகாதம்- என் மெளனத்தில் அதன் இடையறாத இருப்பு-இவை நான் உணர்வன. என் சொற்களில் என்னையறியாமல் அது கமழ்கிறது. கவிதைகளில் அங்கங்கே தெரியும் சங்கீதம் தொடர்பான குறிப்புகள் சாதாரணமானவையே ஆனால் என் உணர்வுப் போக்கையும், மொழியையும் சங்கீதம் நிர்வாகம் செய்து வருகிறது என்பதுதான் முக்கியம்.

 
இன்றைய கவிதையில் படிமத்தின் செல்வாக்கு பற்றி – உவமை உருவகம் இவையெல்லாம் உபயோகமற்ற கடந்தகாலச் சரக்குகளாய்விட்டனவா ? இவற்றின் இடத்தைப் படிமம் பிடித்துக் கொண்டதா ? வலிந்து திணிக்கப்பட்டு, துருத்தியவாறு கவிதையின் இணக்கத்தை / Unity ஐ குலைத்து விடாதா ? படிமம், உவமை, உருவகம் இவற்றை வாசகர்களுக்காக உதாரணத்துடன் சொல்லுங்கள்.

அன்றாடப் பேச்சிலேயே ஏராளமாய்ப் படிமங்கள் புழங்குகின்றன. எல்லை மீறிப் போகிறான்; கண்டு கொள்ளாதே; விட்டுப் பிடிக்கலாம்; எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது இப்படிப் போகும் பேச்சில் எல்லை, காணுதல், பிடித்தல், கை-எல்லாம் படிமங்கள்தாமே ‘ மொழியே படிம வசப்பட்டிருப்பதுதான். கவிதைப் படிமம் என்பது (poetic image) பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது. நான் முன்பு சொல்லியிருப்பது போல, ‘இரண்டு பொருள்களை அடுத்தடுத்து நிறுத்தி ஒப்புமை காட்டுகிறவை உவமையும் உருவகமும். ஆனால் ஒன்று மற்றொன்றினுள் தடந்தெரியாது கலந்து மறைந்ததன் பின், ஒன்றன் செழிப்பு இன்னொன்றின் வடிவத்திற்குள் தொனித்துத் தோண்றுவது படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது ‘.

 
‘செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே ‘

‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ‘ – இவை உவமைகள்.

சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா செல்வக் களஞ்சியமே ‘ – உருவகம்.

கவிதைப் படிமம் உவம-உருவகச் சார்பானதாகவும் இருக்கலாம்; அவைகளுக்குத் தொடர்பில்லாமலும் இருக்கலாம்.

‘வயிறு வெடிக்கச் சிரிக்கும் பூசணிகள், நடுத்தெருவில் ‘ இது ஓரளவு உவமைச் சார்புள்ள படிமம். இன்றைய கவிதையில் உவமை- உருவகச் சார்பில்லாமல் பல்வேறு விசிறல்களாய் வரும் படிமங்களே அதிகம். பழங்கவிதையிலும் இவை உண்டு. ‘கானம் காரெனக் கூறினும் ‘- காடு இது கார்காலம் என்று பொய் சொல்கிறது என்கிறாள் குறுந்தொகைத் தலைவி.
பல்வேறு விசிறல்களாய்ப் படிமங்கள்- உதாரணம் சொல்லுங்கள்…
‘பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ‘ – பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்புகிறது. ‘ தந்தையைப் பிரிந்து/ கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியில் கிறங்கி / நீடிப்பில் நிலைத்தது கமகம் ‘ இது கமகத்தின் இயக்கத்தைக் காட்சிப் படுத்துகிறது. ‘அவள் செளந்தர்யம் எதில் அடங்கிக் கேட்காது முணுமுணுக்கிறது என்பது தெரியவில்லை ‘ மெளனி கண்ணுக்குரியதைக் காதால் கேட்கச் செய்கிறார் புலன்கள் மாறிப் போவதால் விஷயம் தரும் அனுபவம் புதிய பரிமாணம் ஒன்றைக் கொள்கிறது. ‘சங்கு- அடிபருத்து அவசர்மாய் நுனிகுறுகி ‘ சங்கின் அவசரத்தை ஆர்வத்தை லா.ச.ரா.- கவனித்திருப்பதைப் படிமம் காட்டுகிறது. ‘கூழாங்கற்களின் மெளனம்- கானகத்தின் பாடலை உற்றுக் கேட்பது ‘ – இதுவும் அப்படிப்பட்ட படிமம். கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை.

‘மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் ‘

‘ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது ‘

‘ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது ‘

இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் ‘விநோதம் ‘ என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது ‘ இன்னவகை என்று தீர்மானிக்க முடியாத நுட்பம் – தர்க்கத்தில் அடங்காத உள்தர்க்கம் இந்தப் படிமத்தில் செயல்படுகிறது. ‘ஐந்து பொறிகளும் என்மீது கிறுக்கிக் கொண்டே இருக்கின்றன ‘

‘என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது ‘ – இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையைக் உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது.

 
துருத்திக் கொண்டு நிற்கும் படிமங்கள் பற்றி ? மிகைபற்றி ? தேவையின்மை பற்றி ?

மிகையாகப் படிம அடுக்குகளைக் கையாள்வது இப்போது குறைந்திருக்கிறது. ‘பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து ‘ என்பது போன்ற படிமம் அடுக்குகள் இப்போதைய கவிதைகளில் இல்லை. ஆயினும் நல்ல படிமங்களைக் காண்பதும் அரிதாகி வருகிறது. கவிதையில் ‘படிமத்தை அமைப்பது ‘ என்பது தவறானது. படிமமே கவிதையாக உருவாக விட்டு விடுவது என்பது சரி. இப்படி வரும்போதுதான் விஷயம் படிமத்தினுள் கரைந்து, படிமத்தின் புத்துணர்ச்சி காரணமாக இதுவரை வெளித்தெரியாதிருந்த தன் உள்ளுருவைக் காட்டும் இங்கே படிமம் துருத்தி நிற்காது.

 
படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள்.

‘நான் இல்லாமல் என் வாழ்க்கை ‘ என்ற கவிதை (அருகில் வெளியாகியுள்ளது பார்க்கவும்) எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் – இவை என் நிரந்தர உளச்சல்கள். எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை. இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது. எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன். அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை.

இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது. இந்தக் கவிதையில் தனித்துவிடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன. இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும். நீங்களே படித்து பாருங்கள்.

 
பிரார்த்தனை, வணக்கம், வேண்டுதல், சடங்குகள் போன்ற வெளியரங்கமான இறைவழிபாட்டைத் தாண்டி, இறைவனை சூன்யமாக, மகத்துவமாக, மெளன வெளியாக, எல்லையின்மையாக, தங்களின் கவிதைகள் தீண்டுகின்றன. ஆன்மீகத்தில் இது உயர்ந்த படித்தரம். ஞானிகளும், சித்தர்களும், சித்தீக்குகளும் தேடிய, தாண்ட உன்னிய படித்தரம். தங்களுக்கு இவர்களுடன், இவர்களின் தத்துவத்தில் ஆர்வமுண்டா ?

நிறைய உண்டு. எந்த அளவு உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று உணரத் தெரியவில்லை. என் சிறு வயதில் என் தந்தை குணங்குடியார் பாடல்களை இனிமையான குரலில் ராகத்துடன் பாடியதைக் கேட்டு அப்போதே அவைகளைப் படித்திருக்கிறேன். இன்னதென்று தெரியாமலே இளம் மனது ஈடுபாடு கொண்டது. வளர்ந்தபின் சித்தர்கள், அத்வைதிகள், சூபிஞானிகளின் தத்துவங்கள் எனனை ஈர்த்தன. என் கவிதைகள் அவைகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை; கண்டு கொண்டதையல்ல, காண தவிப்பதை, காண தவறுவதை என் கவிதைகள் உணர்த்துகின்றன எனக்கு தெரிந்தோ தெரியாமலோ கூட அவை சில எல்லைகளைத் தாண்டி எங்கெங்கோ போய்வருகின்றன. என்னுள்ளிருக்கும் படைப்பாளி எனக்குக் கட்டுபடாதவன்; என்னை மீறியவன்; கணத்துக்குக் கணம் தன்னை மீறிக்கொண்டிருப்பவன். அதே நேரம் வெளியரங்க வழிமுறைகளையன்றி வேறறியாத என்னுடன் அவன் முரண்பட்டுக் கொள்வதும் இல்லை. ஆயிரம் பாக்குகளிடையே எனது ஈமான்- அதை உறுதிப் படுத்த என் கவிதைகள் துணை நிற்கின்றன. அவற்றின் கைபிடித்துக் கொண்டு எங்கே போனாலும், அனுபவத்தின் விளிம்புகளைத் தாண்டிய விரிவில் சில கணங்களேனும் சஞ்சரிக்க வாய்த்தாலும் என் கவிதைகள் திருப்தியில்லாமல் இருக்கின்றன எனப்பார்க்கிறேன். நிறைவின்மை என் கவிதைகளின் குணம்; என் குணமும் கூட. இந்த நிலையில்தான் என் தத்துவம் என்னை கனத்த மெளனத்துள் இறுக விடுகிறது; ஒன்றும் புரியாதிருக்கிற மெளனம்.

 
லா.ச.ரா. நாவல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளீர்கள். அவரின் எழுத்துக்களில் தங்களின் ஈடுபாட்டினைப் பற்றிச் சொல்லுங்கள்…

லா.ச.ரா. தம் எழுத்தைத் தவம் என்பவர். தவத்தின் லட்சியம் தவம் அல்ல. மொழியைத் தாண்டின உன்னதத்தை அவர் எழுத்து லட்சியமாகக் கொள்வது. வாழும் யதார்த மனிதனைக் கண்ணெதிரே நிறுத்துவதைவிட, சாகாத மானிட உணர்வுகளை உருவகமாக்கி உலவ விடுவதே அவர் நோக்கம். புறக்காட்சிகளின் வழியாக ஆழ்ந்த அகக்காட்சிகளுக்கு வாசகனை இட்டுச் செல்கிறவர். எழுத்தை மனோதத்துவப் பாதையில் ரொம்பதூரம் கொண்டு சென்று ஆழ்ந்த உள்ளுணர்வு, தரிசன நிலைகளில் திளைக்கச் செய்தவர். நனவோடையில் இந்தியத் தத்துவத்தை அற்புதமாக இணைத்தவர். நம் காலத் தமிழ்நடைக்கும் எழுத்து முறைக்கும் உள்ளடக்கப் புதுமைக்கும் பாரதி, புதுமைப்பித்தன் போல லா.ச.ரா.வும் ஒரு முக்கியப் பொறுப்பாளி. இன்று எழுதும் பலருடைய மொழியில் லா.ச.ரா. தமிழ் ஊடுருவல் செய்திருக்கிறது என்பது உண்மை. முறையான தமிழ் இலக்கியப் பயிற்சியுடன் கல்லூரியிலிருந்து வெளிவந்த நேரத்தில், அது வரை நான் அறியாதிருந்த புதிய தமிழை எனக்கு அறிமுகம் செய்வித்தவர் லா.ச.ரா.தான்.

 

 
‘பாரதிக்குப் பின் பிரமிள் ‘ என்கிற குரல் கேட்கத் துவங்கி விட்டதே… தங்களின் அபிப்பிராயம் என்ன ?

பிரமிளின் கவித்துவ சாதனையை மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஆனால் ஒரு உண்மையைக் கவனிக்க வேண்டும். பாரதிக்கு முன்பு / பாரதி காலத்தில் இல்லாத அளவு வசன் இலக்கிய எழுச்சி பாரதிக்குப்பின் வந்து விட்டது. தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணங்களை வசன இலக்கியம் தந்திருக்கிறது. உலக இலக்கியத் தரத்தை நம் வசனத்தில் காணமுடிகிறது. பாரதிக்குப் பின் என்ற கணக்கீட்டிற்குத் தனியொருவரை நிறுத்த முடியாது. பாரதிதாசன் என்ற கவிஞரையும் புதுமைப்பித்தன், லா.ச.ரா. மெளனி, ஜெயகாந்தன் போன்ற வசன படைப்பாளிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது இந்த வரிசையில் தவறாமல் இடம் பெறும் தகுதி பிரமிளுக்கு உண்டு.

கண்ணதாசனைப் பற்றி எழுதுகையில் ‘தமிழ் அவரிடம் தங்கி இளைப்பாறிற்று ‘ என்கிறார் ஜெயகாந்தன். தங்களின் கணிப்பு என்ன ? கண்ணதாசன் என்றாலே புருவச் சுளிப்புடன் ஒதுக்கித் தள்ளிவிடுகிற மனோபாவம் சரிதானா ?

கண்ணதாசன் potential அளவுக்கு அவர் எழுத்து இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். தன் எழுத்துக்கு மேற்பட்ட ஆற்றல், தகுதி அவருக்கு இருந்தது என்பதை உணர அவர் எழுத்து ஆதாரம். முயற்சியில்லாத அநாயாச வெளியீடு அவரிடம் இருந்தது. திரைப்பட பாடல்களில் அப்படங்களின் தரத்துக்கு பொருந்தாத உயர் தரத்தில் அற்புத வரிகள், த்வனிகள், மின்வெட்டுகள் அமைந்து கிடக்கின்றன. ஆனால் அவரால் முடியாதது selection செயல்திறன். எழுத்து அவரது ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டது; அவர் சூழலின் ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டார். நாவல், கதை என்று அவர் எழுதியவற்றில் தரம் சொல்லும்படியாக இல்லை. எப்படியிருப்பினும் கண்ணதாசன் என்றவுடன் புருவச் சுழிப்பு ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விமர்சனம் நல்லதைக் கண்டுபிடிக்கத் தெரியாததா ? சிறுபத்திக்கைப் புழக்கத்தில் விமர்சனம், ஒழித்துக்கட்டல், இருட்டடிப்பு செய்தல், குழுமனோபாவம், சுயபிரமைகள், கொள்கைகோட்பாடு சார்ந்த பிடிவாதங்கள் நிரம்பியதாகியிருப்பதை அறிவீர்கள்.

 
மரபு கவிதையின் சகாப்தம் முடிந்துவிட்டது எனக் கருதுகிறீர்களா ?

இந்த பிரிவினையை (மரபு-புதியது) நான் ஒப்புக் கொள்வதில்லை. பழங்கவிதையை மரபுக் கவிதை என்ற பெயரில் அடையாளம் காட்டுபவர்கள்தான் பிடிவாதமாக இந்தப் பிரிவினையை வற்புறுத்துகிறார்கள். கவிதை என்றும் ஒன்றே. இன்றைய கவிதை உலகக்கவிதைத் தாக்கங்களுடன், புதிய அறிவுத்துறைகள்-தத்துவத் துறைகளுடன், அழகுணர்ச்சியின் புதிய விளக்கங்களுடன், வாழ்வின் புதிய பார்வைகளுடன் தன் பெரும் செல்வத்தை நம் மர்பில் கலந்து விட்டிருக்கிறது. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்தபின் தமிழ்க்கவிதை என்ற பெயர் மாறி, தமிழில் கவிதை என்ற பெயர் உருவாகும். உலகில் தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, ரஷ்யன், சீனம் என்ற மொழிகளின் பட்டியலில் கவிதை என்பதும் ஒருமொழியாக இடம் பெற்றுக் கொள்ளும். அதனால் பழங்கவிதைப் பாணியை மட்டும், அதன் பழைய உள்ளடக்கத்துடன் மரபுக் கவிதை என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் சொல்கிறேன், ‘உங்கள் மரபுக் கவிதையின் சகாப்தம் முடிந்துதான் போய்விட்டது ‘.

தங்களின் தாய்மொழி எது ? உர்து ? இந்த கேள்வியை deliberate ஆகத்தான் கேட்கிறேன். ஏனெனில் ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கை உலகு முழுவதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவன் காலாகாலமாக தான் வாழும் மண், அதன் மனிதர்கள், அதன் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி இவை சார்ந்த ஆதாரமான கூறுகளிலேயே வேர் கொள்கிறான். ஒரு தமிழ் பேசும் முஸ்லிமுக்கும், ஒரு சவூதி அரேபிய முஸ்லிமுக்கும் கடலளவு வேற்றுமைகள் இருக்கின்றன. இந்த வேற்றுமைகளைத் தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியமானதென நினைக்கிறேன். முஸ்லிம்களை ஒரு Homo genius Community யாகக் கண்டு அவனை முஸ்லிம் என்ற ஒரே ஒரு அடையாளத்தில் மட்டுமே அடைத்து விடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

என் தாய்மொழி தமிழ். உர்துவாக இருந்தால் கூட நான் தமிழனாகத் தானே இருப்பேன் ‘ நீங்கள் சொல்லும் ஆதாரக் கூறுகள் இயல்பானவை; அவரவர் தளத்தில் அவரவரைப் பிணைத்து வைத்திருப்பவை. மொழியும் இனமும் கலாச்சாரமும் மன உள்ளமைப்பை உருவாக்கி நிரவியிருப்பவை. எனினும் எனக்கு ஒரு எண்ணம். மனிதன் என்று பார்க்கும் போது அவன் சக மனிதனுடன் கொள்ளும் உறவில் உருவாகிறான்/ உருமாகிறான். ஆனால் ஒரு முஸ்லிம் என்று பார்க்கும்போது தனக்கும் தன்னைப் படைத்தவனுக்கும் இடையேயுள்ள நிரந்தர உறவில் அடையாளம் கொள்பவன். ஒரு முஸ்லிமுக்கும் மற்றொரு முஸ்லிமுக்கும் இடையே கலாச்சார வேற்றுமை கடலளவு இருந்தாலும் (ஒரு கலாச்சாரத்துக்குள்ளேயே பிணக்குகள் ஏராளம் ‘) வானளவு ஒற்றுமை-தம் இறைவனுடன் உலகமுழுதும் ஒரு மொழியில் நேரடிப் பேச்சுக்குரியவர்கள் என்ற ஒற்றுமை-இருக்கிறதல்லவா ‘ இந்த ஆன்மிகத் தளத்தை அடிப்படையாகக் கொண்டால் முதலில் முஸ்லிம்களுக்கிடையேயாவது ஒற்றுமை வரக்கூடுமே ‘ அப்படி ஆன்ம ஒருமையை உணரும் பட்சத்தில் வேற்று மதத்தவர்களுடன் இணக்கம் காண்பதிலும் சிரமம் இராது என்று நம்புகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது எங்கும் எப்போதும் பொருந்தும் வாழ்வியல் வாசகம்.

 
நான் இல்லாமல் என் வாழ்க்கை
நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

 

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது

 

எதை துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

 

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது

 

கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது

 

பூமியை துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

 

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது

 

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது

 

காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது

 

தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று

 

எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது.
***

நன்றி:- சமரசம், திண்ணையெஸ்.பாலபாரதி , அபியின் புகைப்படம் தந்த மரவண்டு

***

ஒரு சுட்டி :

மெளனத்தின் நாவுகள் [கவிதைத் தொகுப்பு- அபி] – ஸ்ரீமங்கை (சுதாகர்) / மரத்தடி

« Older entries