‘உங்கள் வாழ்க்கையில் தற்செயலாக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளும், அந்த நேரத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளும்தான் உங்களை இப்போதுள்ள இடத்துக்குக் கொண்டு வந்துள்ளன’ என்கிறார் ஜான் பெர்கின்ஸ் , நூலின் முடிவுரையில். நூல் : ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hit Man) – தமிழில் : முருகவேள். வெளியீடு : விடியல் பதிப்பகம் . ஏழாம் பதிப்பிலிருந்து பக்: 78 – 83ஐ [ பாகம் இரண்டு (1971 – 1975 )] பதிவிடுகிறேன். ‘இருந்தாலும் இவ்வளவு மோசமான முடிவு எடுத்திருக்கக் கூடாது பாய்’ என்று சொல்லாமல் வாசியுங்கள். மற்ற முக்கியமான பகுதிகளை பதிவிடலாம்தான். மன்னிக்கவும், முடிவெடுக்கும் முன்பே மூச்சை நிறுத்திவிடும் பகுதியில் இருக்கிறேன். விடியல் பதிப்பகத்தாருக்கு நன்றி. – ஆபிதீன்
***
குற்றவாளிக் கூண்டில் ஒரு நாகரீகம்
‘நான் உங்களை தலாங் நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைத்துப் போகப் போகிறேன்’ ராஸி மலர்ச்சியுடன் சொன்னான். ‘புகழ் பெற்ற இந்தோனேஷிய பொம்மலாட்டக்காரர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?’ இன்று ஒன்று முக்கியமான பொம்மலாட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது’. நான் பாண்டுங்குக்குத் திரும்பி வந்தது ராஸிக்கு மகிச்சியளித்திருக்கும் போலத் தோன்றியது.
…..
கமலாங்கின் மந்திரத்தன்மை வாய்ந்த தன்வயமிழக்க வைக்கும் ஒலியோடு இசை தொடங்கியது. கமலாங் ஆலய மணியைப் போன்ற ஓர் இசைக்கருவி.
இசைக்கருவிகள் அனைத்தையும் “இசைத்துக் கொண்டிருப்பதும், எல்லாப் பொம்மைகளையும் ஆட்டி வைத்து அவரவர் குரல்களில் பேசுவதும் ஒரே ஒருவர்தான். அவர்தான் தலாங். நாங்கள் நிகழ்ச்சியை உங்களுக்கு மொழிபெயர்க்கிறோம்’, ராஸி என் காதருகில் கிசுகிசுத்தான்.
அது இதிகாசங்களைச் சமகால நிகழ்வுகளோடு இயல்பாக இணைத்த ஓர் அற்புதமான நிகழ்ச்சி. ஒரு தவம் போன்ற ஆழ்ந்த மோன நிலையில் இதை நடத்திவந்த தலாங் ஒரு மாயாஜால நிபுணரும் கூட என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு நூறு பொம்மைகளை ஆட்டி வைத்தபடி ஒவ்வொன்றுக்கும் ஒரு வித்தியாசமான குரலில் பேசினார். என்னால் மறக்கவே முடியாத, என் வாழ்க்கை முழுவதையும் பாதித்த இரவு அது.
பழம் காவியங்கள் தொடர்பான விஷயங்களை முடித்தபிறகு தலாங், ரிச்சர்ட் நிக்ஸன் பொம்மையை முன்னிருத்தினார். அது அவரைப் போலவே நீண்ட மூக்கையும், தொங்கிய தாடையையும் கொண்டிருந்தது. பொம்மை ஜனாதிபதி அங்கிள் சாம் போல கோடுகளும், நட்சத்திரங்களும் கொண்ட உடையும், உயரமான தொப்பியும் அணிந்திருந்தார். அவருடன் கோட்சூட் அணிந்த இன்னொரு பொம்மையும் வந்தது. அந்தப் பொம்மையின் ஒரு கையில் டாலர் சின்னம் வரையப்பட்டிருந்தது. ஒரு வாளி இருந்தது. இன்னொரு கை சாமரசம் வீசுவதைப் போல அமெரிக்கக் கொடியை ஜனாதிபதியின் தலைக்கு மேல் வீசிக் கொண்டிருந்தது.
இந்த இருவருக்கும் பின்னால் மத்திய மற்றும் தூரக் கிழக்கின் வரைபடம் இருந்தது. பல்வேறு நாடுகளின் பெயர்கள் அவற்றுக்குரிய இடங்களில் குச்சிகளில் தொங்கிக் கொண்டிருந்தன. நிக்ஸன் விரைந்து வரைபடத்தை நெருங்கி வியட்நாமைக் கொக்கியில் இருந்து எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டார். பின்பு ஏதோ கத்தினார். ‘சே, கசப்பு, குப்பை, இனி இது வேண்டாம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. பின்பு வாளியில் வீசிவிட்டு மற்ற நாடுகளை நெருங்கினார்.
அவர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடுகளைத் தேர்வு செய்யாதது குறித்து நான் வியப்படைந்தேன். பதிலாக அவர் மத்தியக் கிழக்கு நாடுகளையே தேர்வு செய்தார். பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, ஈராக், சிரியா, ஈரான். பின்பு அவர் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் நோக்கித் திரும்பினார். ஒவ்வொரு முறையும் நிக்ஸன் பொம்மை ஏதோ ஒரு பட்டப்பெயரைச் சொல்லி நாட்டை வாளிக்குள் வீசியது. ஒவ்வொரு முறையும் அவர் திட்டப் பயன்படுத்திய சொற்கள் இஸ்லாமுக்கு எதிரானவையாகவே இருந்தன. ‘முஸ்லிம் நாய்கள், முகமதிய அரக்கர்கள், இஸ்லாமியப் பேய்கள்’.
கூட்டம் உணர்ச்சிவசப்பட்டது. வாளியில் ஒவ்வொரு நாடு சேரும்போதும் கொந்தளிப்பு அதிகரித்தது. கூட்டம் வேடிக்கை, அதிர்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடையே அலைக்கழிக்கப்பட்டது போலத் தோன்றியது. சிலநேரங்களில் பொம்மலாட்டக்காரன் பயன்படுத்திய சொற்கள் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. என் உயரம் கூட்டத்தில் என்னைத் தனித்துக் காட்டியது. கூட்டத்தின் சீற்றம் என்மீது திரும்பக்கூடும் என்ற பயம் தோன்றியது. அப்போது தலாங் சொன்ன ஒன்று என்னைத் திடுக்கிடச் செய்தது.
‘இதை உலக வங்கியிடம் கொடுத்துவிடு. இந்தோனேஷியாவிலிருந்து அதனால் ஏதாவது கறக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.’ நிக்ஸன் வரைபடத்திலிருந்து இந்தோனேஷியாவை எடுத்து வாளியில் போடப்போன கணத்தில் இன்னொரு பொம்மை இருளிலிருந்து பாய்ந்து வந்தது. அந்தப் பொம்மை இந்தோனேஷிய ஆடவர்கள் வழக்கமாக அணிவது போன்ற பாட்டிக் சட்டையும், காக்கிக் கால் சட்டையும் அணிந்திருந்தது. பொம்மையின் பெயர் தெளிவாக அதன் உடையில் அச்சிடப்பட்டிருந்தது.
‘அது ஒரு பிரபலமான பாண்டுங் அரசியல்வாதி’ ராஸி விளக்கினான்.
இந்தப் பொம்மை ஏறக்குறையப் பறந்து சென்று நிக்ஸனுக்கும், வாளி வைத்திருந்த பொம்மைக்கும் நடுவே நின்று கையை உயர்த்தி ‘இந்தோனேஷியா ஒரு சுதந்திர நாடு’ என்று முழங்கியது.
கூட்டத்திலிருந்து கைதட்டல் வெடித்துக் கிளம்பியது. வாளி பொம்மை அமெரிக்கக் கொடியை ஈட்டிபோல இந்தோனேஷியன் மேல் பாய்ச்சியது. குத்துப்பட்ட பொம்மை தடுமாறி மிகுந்த நாடகத் தன்மையுடன் விழுந்து மரணமடைந்தது. பார்வையாளர்கள் கூச்சலிட்டார்கள். பற்களைக் கடித்தார்கள். முஷ்டியை உயர்த்தி ஆட்டினார்கள். நிக்ஸன் பொம்மையையும், வாளி பொம்மையையும் எங்களையே நேராகப் பார்த்தபடி நின்றிருந்தன. பின்பு தலைவணங்கிவிட்டு மேடையிலிருந்து வெளியேறின.
‘போய்விடலாமென்று நினைக்கிறேன்’ நான் ராஸியிடன் சொன்னேன்.
ராஸி அமைதிப்படுத்தும் விதமாக என் தோள்மீது கை போட்டுக்கொண்டான்.
ஒன்றும் பிரச்சினையில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கோபமும் இல்லை’ என்றான். அது ஒன்றும் அவ்வளவு நிச்சயமானதாகத் தோன்றவில்லை.
பின்பு நாங்கள் எல்லோரும் ஒரு தேநீர் விடுதிக்குச் சென்றோம். இந்த நிக்ஸன் நாடகம் போடப்பட உள்ளது என்று தங்களுக்கு முன்பே தெரியாது என்று ராஸியும் அவன் நண்பர்களும் உறுதியளித்தார்கள். ‘இந்தப் பொம்மலாட்டக்காரர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று ஊகிக்கவே முடியாது’ என்றான் ஒரு இளைஞன்.
ஒருவேளி இது என்னைக் கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்டதோ என்ற என் சந்தேகத்தை வெளியிட்டேன். யாரோ சிரித்து ‘உங்களுக்கு ரொம்ப தலைக்கனம்’ என்றார்கள். ‘எல்லா அமெரிக்கர்களும் அப்படித்தானே?’ யாரோ ஒருவன் உரிமையுடன் என் தோளில் தட்டினான்.
‘இந்தோனேஷியர்களுக்கு அரசியல் உணர்வு அதிகம்’ என்றான் என் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒருவன். ‘அமெரிக்கர்கள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போக மாட்டார்களா?’
பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகப் படித்துவரும் ஓர் அழகிய பெண் ‘நீங்கள் உலக வங்கிக்காகத்தான் வேலை செய்கிறீர்கள் இல்லையா?’ என்று கேட்டாள்.
ஆசிய வளர்ச்சி வங்கிக்கும், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும்தான் தற்போது பணிபுரிகிறேன்’ என்று நான் பதிலளித்தேன்.
‘உண்மையில் அவைகள் எல்லாம் ஒன்றுதானே?’ அவள் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. ‘இன்றைய நாடகத்தில் நடந்ததுபோலத்தானே உங்கள் அரசாங்கம் இந்தோனேஷியாவையும் மற்ற நாடுகளையும் ஏதோ ஒரு கொத்து..’ அவள் வார்த்தைகளைத் தேடினாள்.
‘திராட்சைகள்’ அவள் நண்பர்களில் ஒருவன் எடுத்துக் கொடுத்தான்.
‘சரியான சொல். திராட்சைக் கொத்துக்களைப் போலத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறது. நினைத்தபோது பறித்துக் கொள்ளலாம். இங்கிலாந்தை வைத்துக் கொள்ளலாம். சீனாவை விழுங்கலாம். இந்தோனேஷியாவை விட்டெறியலாம்.’
‘அதாவது எங்கள் எண்ணெயை எல்லாம் உறிஞ்சி முடித்தபிறகு’ இன்னொரு பெண் குறுக்கிட்டாள்.
நான் என்னை நியாயப்படுத்திக்கொள்ள முயன்றேன். ஆனால் அதை என்னால் திறம்பட செய்ய முடியவில்லை. அமெரிக்கர்கள் யாருவே வர விரும்பாத நகரத்தின் இந்தப்பகுதிக்கு வந்து ஒவ்வொரு அமெரிக்கனின் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாக எண்ணக்கூடிய அமெரிக்கக் எதிர்ப்பு நிகழ்ச்சி முழுவதையும் நின்று பார்த்தவன் நான். பாஷா இந்தோனேஷியாவைக் கற்றுக்கொள்ள அக்கறை காட்டியவனும் எங்கள் குழுவில் நான் ஒரே ஒருவன்தான். என் துணிச்சலையும் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் அங்கீகரிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். ஆனால் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவதைவிட மௌனமாக இருப்பதே புத்திசாலித்தனமாகத் தோன்றியது. பதிலாக திரும்பவும் எனக்குப் புரியாதிருந்த சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தலாங் ஏன் வியட்நாம் தவிர இஸ்லாமிய நாடுகளை மட்டுமே குறிப்பிட்டுக் காட்டினார் என்று கேட்டேன். அந்த ஆங்கிலம் படிக்கும் அழகான மாணவி சிரிப்புடன் பதிலளித்தாள், ‘ஏனென்றால் உங்கள் திட்டமே அதுதான்’.
‘வியட்நாம் ஒரு தொடக்கம் மட்டும்தான்’ ஒரு ஆள் திடீரென்று இடையில் புகுந்தான். ‘நாஜிகளுக்கு ஹாலந்தைப் போல’.
‘உண்மையான குறி இஸ்லாமிய உலகம்தான்’ என்றாள் அந்தப் பெண்.
இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.’அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு விரோதி என்று நீங்கள் சொல்லவே முடியாது’.
‘ஓ இல்லையா? எப்போதிருந்து? உங்கள் வரலாற்றாசிரியர் டோன் பீ (Toyn bee)-யைப் படித்ததில்லையா? அவர் ஓர் ஆங்கிலேயர். அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும் முதலாளித்துவவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்’ என்றார் அவர்.
‘ஆர்னால்டு டோன் பீ இப்படிச் சொல்லியிருக்கிறாரா?’, நான் அதிச்சியுடன் கேட்டேன்.
‘ஆமாம். விசாரணையில் ஒரு நாகரீகம், உலகமும் மேற்கும் (Civilization on trial and The world and the West ) படித்துப் பாருங்கள்!’.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இவ்வளவு முட்டாள்தனமான கேள்வியைக் கூட ஒருவன் கேட்க முடியுமா என்று அவர்கள் ஆச்சரியப்படுவதைப் போலத் தோன்றியது.
‘ஏனென்றால்’ ஏதோ காதுகேளாதவனுக்கோ, அடி முட்டாளுக்கோ சிரமப்பட்டுப் புரியவைப்பதைப் போன்ற தொனியில் அவள் நிதானமாகத் தொடர்ந்தாள், ‘மேற்கு உலகம், குறிப்பாக அதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதி பூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. சோவியத்யூனியன் குறுக்கே நிற்பது உண்மைதான். ஆனால் அதனால் தாக்குப் பிடிக்க முடியாது. டோன்பீயால் அதைப் பார்க்க முடிகிறது. சோவியத்துகளுக்கு மதம் கிடையாது. தத்துவார்த்தப் பின்புலம் கிடையாது. ஆன்மாவிலும், மனிதனுக்கு மேம்பட்ட சக்திகளிலும் நம்பிக்கைக் கொள்வது அவசியம் என்பதை வரலாறு காட்டுகிறது. இஸ்லாமியர்களான எங்களிடம் அந்த ஆன்மபலம் உள்ளது. கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட வேறு எவரையும்விட எங்களிடம்தான் ஆன்மபலம் அதிகம் உள்ளது. நாங்கள் காத்திருக்கிறோம். வலிமை பெறுவோம்’.
‘நேரம் வரும்போது ஒரு பாம்பைப்போல நாங்கள் பாய்ந்து தாக்குவோம்’ சுற்றியிருந்தவர்களில் ஒருவன் கணீரென்ற குரலில் கூறினான்.
‘என்ன ஒரு பயங்கரமான சிந்தனை! ‘என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. ‘இதைத் தவிர்க்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?’
ஆங்கில மாணாவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள். ‘இவ்வளவு பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற வீடுகளையும், பேன்ஸி ஸ்டோர்களையும் தவிர உலகில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மக்கள் உணவின்றிப் பட்டினிக் கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான பெட்ரோலைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரீகப் பாணிகளுக்காக (styles) பேஷன் (fashion) இதழ்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள் ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்கு சொல்ல முயற்சித்தால் உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும் கம்யூனிஸ்ட்கள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப் பதிலாக அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லையென்றால் ஒழிந்தீர்கள்!’.
இது நடந்து பலநாட்களுக்குப் பிறகு பொம்மலாட்டத்தின்போது நிக்ஸனை எதிர்த்து நின்று ஈட்டியால குத்தப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்ட பாண்டுங் அரசியல்வாதி யாரோ அடையாளம் தெரியாத டிரைவரால் வண்டி மோதிக் கொல்லப்பட்டார்.
***
நன்றி : ஜான் பெர்கின்ஸ், விடியல் பதிப்பகம், இரா. முருகவேள்
****
தொடர்புக்கு :
விடியல் பதிப்பகம் , 88, இந்திரா கார்டன் 4-வது வீதி, உப்பிலிப்பாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641 015 , தொலைபேசி : 0422 2576772
***
மேலும் :